
நாத்திகத்தை புகுத்துவதாக, தமிழக சட்டமன்றத்தில் குற்றஞ்சாட்டி பேசிய எதிர்க்கட்சித் தலைவருக்கு (காங்கிரஸ்) அண்ணா கூறியதாவது;
அரசாங்க அலுவலகங்களில் கடவுள் படங்கள் மாற்றப்படுவது குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர், நாங்கள் ஒரே நாத்திகக் கொள்கையை மக்கள் மீது திணிப்பது போல் பேசினார். அது மட்டுமல்ல இரணியனுக்கு ஏற்பட்ட கதிதான் எனக்கும் ஏற்படும் என்று ஒரு கதையைச் சொன்னார்.
இரணியன் பிரகலாதன் கதை அவருக்குத் தெரிந்து இருப்பது போலவே எனக்கும் தெரியும் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் உணர்ந்திருப்பார் என்று கருதுகிறேன். அந்தக் கதை தெரிந்து இருந்தும் அப்படி நான் செய்வேன் என்று எதிர்பார்க்கிறார் என்றால் அவரது நிலைக்காக மிகவும் பரிதாபப்படுகிறேன்.
ஆத்திகம் என்பது சில இடங்களில் சாமியின் படங்களை மாட்டி வைப்பதாலோ, மாற்றுவதாலோ ஏற்படுவதல்ல. அது உள்ளத்திலேயே ஏற்படுகின்ற உணர்வு. ஆகவே அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.
இந்த அரசு ஆத்திக எண்ணம் கொண்டவர்கள் மனம் புண்படும்படியான எந்த ஒரு செயலையும் செய்ததில்லை என்பதை நினைவுப் படுத்துகிறேன். அது மட்டுமல்ல. ஆத்திக எண்ணம் கொண்டவர்கள் கொண்டாடுகின்ற பல்வேறு திருவிழாக்கள் மகாமகம் போன்ற பண்டிகைகளுக்கு - அரசாங்கம் உதவி புரிந்ததை இந்த நாடறியும். நல்லவர்கள் உணர்வார்கள். ஆகவே அரசாங்க அலுவலகங்களில் கடவுள் படங்களை மாட்டுவதால் இரணியன் போல் ஆகி விடுவேன்'' என்று கூறுவது என்பது எப்படியாவது இவன் அழிய மாட்டானா? என்ற அவர்களது ஆசையைத்தான் காட்டுமே தவிர உண்மையில் எங்களை யாரும் தவறாகக் கருத மாட்டார்கள்!
…அறிஞர் அண்ணா..சட்டமன்றத்தில் அண்ணா…ந.முடிகோபதி..மணிவாசகர் பதிப்பகம்…பக்கம் 221-222
No comments:
Post a Comment