Pages

Saturday, 26 December 2009

மரணபயத்தின் எதிர் விளைவுகளே கடவுள் நம்பிக்கைகள்




ஆம் முன்பு பயன்படுத்தி வந்ததை நாம் அப்படியே பின்பற்றி வருவது தான் நம்பிக்கைகள் எல்லாம். தாமாக எவருக்கும் எந்த நம்பிக்கைகளும் வந்துவிடுவதில்லை. முதன் முதலில் தந்தையை யார் அறிமுகப்படுத்துகிறார். தாய். அவர் சொல்லாமல் இவர் தான் தந்தை என்று எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதை போன்றவைதான் மதங்களும், அதை சார்ந்த கடவுள்களும். நீங்கள், இருக்கும் கடவுள்களின் உருவங்கள் (எந்த மதக்கடவுள்களின் உருவங்கள் ஆனாலும்) தான் என்றில்லை,  எந்த ஒரு புதிய உருவத்தையும் காட்டி சிறு குழந்தையை வணங்க சொல்லுங்கள். முதல்ல குழந்தை ஏன்? வணங்க வேண்டும்? (வணங்குதல் என்றாலே தெரியாது) அப்படியென்றால் என்ன? இது என்னது? என்று தான் கேட்கும். ஏன் அதை வணங்கா விட்டால் அடிக்க கூட செய்வோம். அப்போதும் ஆட்டம் காட்டிவிட்டு செல்லத்தான் செய்யும். பிள்ளைகளை வன்முறையில்லாமல் கண்டிக்க பேய் பிசாசுகளை அறிமுகப்படுத்துகின்றோம். இப்படி ஆரம்பிப்பது தான் நம்பிக்கைகள்.

அதைப்போல  ஒரு வீட்டில் தாடியுடன் இருக்கும் பெரியாரையும், விவேகானந்தர் (இன்னும் சில படங்கள்) காட்டி இந்த மாதிரி செய்தால் இவரிடம் சொல்லி விடுவோம், அவர் வந்ததும் உன்னை தண்டிப்பார் என்று அந்த குழந்தையின் சேட்டையைத் வன்மையின்றி தடுக்க தாய், தந்தையர் ஏற்படுத்திய செயலை குழந்தை தவறாக உருவகப்படுத்தி கொண்டு விட்டது.  நடு இரவில் அந்த  உருவத்தை கனவாக கண்டு, அவர் (பெரியார்) என்னை துரத்தி வருகின்றார், நான் எந்த தவறும் செய்யமாட்டேன், அவர் என்னை பார்க்கிறார், அவரை மூடுங்கள் என்று அலர ஆரம்பித்து விட்டது. பின் துணிய மூடிய பிறகுதான் தூங்க ஆரம்பித்தது. (ஒன்றை நினைத்து கொண்டிருக்கையில், அதுவே கனவாக வரும்)

இப்படித்தான் குழந்தைகளுக்கு நம்பிக்கைகள் பலரால் ஊட்டப்பட்டு வளருகின்றன. எந்தக் குழந்தையும் அதுவாக நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்வதில்லை. அப்படித்தான் வேதங்கள், மதநம்பிக்கைகள், உயர்வான எண்ணங்கள், உயர்சாதி, தாழ்ந்த சாதி, மொழிப்பற்று என்ற எண்ணம் எல்லாமே. ஏன் அனைத்து மனித மாச்சர்யங்களும், யாராவது கற்று கொடுத்தால் தான் வரும்.

ஏன்? மரணங்கள் என்றால் என்ன? என்று குழந்தைக்கு தெரியாது? காரிய வீட்டிற்கு செல்லும் குழந்தை எல்லோரும் அழுவதை பார்த்து அதுவும் அழுகின்றது. அதை பார்த்ததும் அனைவரும் அழுவதை நிறுத்திவிட்டு குழந்தையைத்தான் சமாதனப்படுத்துவார்கள். அதேபோன்று அந்த சவத்தை கண்டு அது அஞ்சுவதும் இல்லை, மாறாக அதன் மீதே ஏறி ஆடும், அதை எழுப்பும். ஏன் என்றால் அதற்கு மரணம் என்றால் என்ன என்று தெரியாது.அதைத்தான், அந்த வயதை இளங்கன்று பயமறியாத வயது என்று கூறுகின்றனர். (பெரிய மனிதனுக்கு அந்த சவத்தை பார்த்தாலே பயம், ஆனால். சுடுகாட்டிலேயே பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்த குழந்தைக்கு அது மாதிரி நம்பிக்கைகளை வளர்த்திருக்கமாட்டார்கள் அந்த பெற்றோர்கள்.)

அதே குழந்தைக்கு மரணம் என்பதை அறிந்தவுடன் பயம் என்று ஒன்று வந்து விடுகின்றது. மரணம் எப்படி இருக்கும்?  ஏன் அழுகிறார்கள்? என்று  தாய் தந்தையரை பார்த்து கேட்கும் குழந்தையின் கேள்விக்கு, ""இதுவரை அதை அனுபவிக்கமுடியாது, யாரும் அனுபவித்தது கிடையாது, அதுதான் முடிவு. இயற்கையிலிருந்து தோன்றியவை எல்லாம் இயற்கையை அடைவது வாடிக்கை "",  என்பது தான் பதிலாக இருக்கும். இன்னும் சிலர் ""இறைவனிடம் அடைவது"" என்றும், இன்னும் சிலர் முன்பு மறைந்த உறவினர்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களிடம் சென்றடைவது தான் மரணம்""  என்றும் ஒப்புக்கு சப்பாக ஒன்றை கூறுவார்கள். உடனே அந்த குழந்தைக்கு அங்கிருந்து பயமும், அது குறித்த தேடல்களும் ஆரம்பித்துவிடும். வளர்ந்தவுடன் அந்த கேள்விக்கு விடை தேட அதுவும் முற்படுகின்றது. அவ்வாறு தேடுதலின் படி அவரவர்க்கு கிடைத்தவைகளின் மூலம் நம்பிக்கை ஒன்று ஏற்படுகிறது. அந்தந்த நம்பிக்கைகளின் படிஎழுந்தவைகளே இத்தனை கடவுள்கள்.

இப்படி புறப்பட்டவர் தான் புத்தர் (மரணம்,....இதை பார்த்து தியானம் மேற்கொண்டார்). இப்படி புறப்பட்டவர் தான் இராமலிங்க அடிகளார், விவேகானந்தர் (மிக சமீபமாக). அவர்கள் இருக்கும் பொழுதே ஆரிய இந்து மதம் இருந்தது, ஆரிய வேதமும் இருந்தது. அவருக்கும் இந்த மத நம்பிக்கைகளை அவரின் தாய் தந்தையர் விதைத்திருந்தனர், குருமார்கள் இருந்தனர். அதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் புறப்பட்டவர்கள் தான் இவர்கள். அவர்கள் இதிலிருந்து வேறு பட்டு ஒரு புதிய தத்துவங்களை அறிமுகப்படுத்தினர். அப்போது இவர்களுக்கு கிடைத்த பட்டம் கடவுள் நம்பிக்கையற்றவன் என்பது தான். இன்னும் சிலர் பார்ப்பன துவேசி என்று ஒரு படி அதிகம் போய் விமர்சித்தனர்.

இன்னும் சமீபமாக தந்தை பெரியார் ஆன்மீகவாதியாக புற்ப்பட்டு, இவைகளை ஒதுக்கியப்பின் பகுத்தறிவுவாதியானவர். ஆன்மீகத்தில் கண்டவைகளை கொண்டு அவர் உருவாக்கியது தான் ""கடவுளை மற மனிதனை நினை""........இப்படி நினைத்தாலும் மரணத்தை சந்தித்து தான் ஆகவேண்டும். இப்படி நினைக்காவிட்டாலும் மரணத்தை மனிதன் சந்தித்து தான் ஆக வேண்டும் என்ற கோட்பாடுதான் இது. (மரணம் வரும்போது வரட்டும், அதுவரை ஏதாவது உருப்படியாக இந்த உலகுக்கு செய் என்பது தான்...) இது சிலருக்கு விருப்பமானதாக இருக்கிறது சிலருக்கு விருப்பமானதாக இல்லை. அதாவது விருப்பமில்லாதவர்கள் இன்னும் தேடுகிறார்கள் அவ்வளவு தான்...

கற்பனையாக இது நடந்தால் என்று வைத்து கொண்டால்.......  இரு குழந்தைகளை தேர்ந்தெடுத்து (சற்று நினைவு தெரிந்தவுடன்) ஒன்றை காட்டில் வளருமாறு அனுப்பினோமானால், ஒரு 18 வருடம் கழித்து அந்த காட்டில் வளரும் குழந்தை  மொழி தெரியாமல், எந்த நம்பிக்கைக்கும் ஆட்படாமல் மிகத் தெளிவாக அந்த சூழலுக்கு ஏற்ப வளர்ந்து விடும்.  பேய், பிசாசு, கடவுள் போன்ற எந்த அச்சத்தையும் கொண்டிராமல் இருக்கும். இங்கிருந்து வளர்ந்த குழந்தை எல்லாவித நம்பிக்கைகளுடன், பயங்களுடனும் வளர்ந்திருக்கும்.


இதெல்லாம் அறியாதவர்கள் அல்ல நாம் என்பதை அறியாத ஆன்மீக வாதிகள்,  மதங்களையும், கடவுள்களையும் என்னமோ இவர்களுக்கு மட்டும் கடவுள் என்று ஒன்று வந்து அருள்பாலித்தது போல் தத்துவங்களை பொழிந்து தள்ளுவார்கள். ( கடவுளுக்கே இன்னும் காஸ்டியும் மாற்றாமல் (costume changing) இருக்கின்றோம், என்பதை உணராமால். இதுவே பண்டைய ராஜா காலத்து உடைகள் தான், வேல், கதாயுதம்....நகைகள்..... இப்போது எல்லாம் ஏ கே 47, ஜீன்ஸ், டீ சர்ட்.....) இவர்களும் ஒரு காலத்தில் குழந்தையாக இருந்ததை மறந்து விட்டு. நாம் ஏதாவது கேட்டால் நீங்கள் அந்த நம்பிக்கையில் இருந்து பாருங்கள என்று நமக்கே புத்திமதி சொல்லுவார்கள்.  இந்த அதிமேதாவித்தன ஆன்மீகவாதிகள். மீறி ஏதாவது கேட்டால் இதை உணரமுடியுமா? அதைப் போல் தான் இதையும் உணர்ந்து கொள்ளவேண்டும்? இதனால் என்ன பயன்? ஒன்றும் இல்லை. (உணர்ந்தது போல் நடித்தாலும் மண்டையை போட்டு தான் ஆகவேண்டும். ஒதுக்கினாலும் மண்டையைப் போட்டு தான் ஆகவேண்டும்.)


இப்படி நம்பிக்கைகள், கோட்பாடுகள் அவரவர் கண்டுபிடிப்புகளின் படி உருவாகிக்கொண்டே வருகின்றது. தத்துவங்களும் உருவாகிக்கொண்டே வருகின்றது. இவையெல்லாம் மரணபயத்தை அடிப்படையாக கொண்டே உருவாகின்றது. இந்தியாவை பொறுத்தவரை பெரும்பான்மையானவரின் ஒரே மதம் இந்து மதம் அப்புறம் எப்படி? இத்தனை விதமான தத்துவங்கள். இத்தனை விதமான குருமார்கள். இன்று அவரவர் ஏற்படுத்திய தத்துவங்கள ஒவ்வொன்றும் ஒவ்வொரு மதங்களாகிவிட்டன. அந்த காலத்தில் அவ்வளவுதான் பகுத்தறிவு. அவ்வளவுதான் அவர்களால் சிந்திக்க முடிந்தது, அவ்வளவுதான் முடியும். (இந்த காலத்திலும் டெக்னாலஜியை பயன்படுத்தி கொண்டு ஆரிய பார்ப்பனர்கள் மீண்டும் மீண்டும் அதே வேதங்களை புகுத்துகின்றார்களே, அதை விடவா?).   இப்படி இன்னும் மரண பயத்தை நோக்கி புறப்படுபவர்கள், ஏதாவது சிந்தித்து கொண்டுதான் இருப்பார்கள். இன்னும் புதிய புதிய தத்துவங்கள் வந்து கொண்டுதான் இருக்கும்.

இப்படித் தேடிக்கொண்டிருப்பதற்குள் வேற்று கிரகத்திலிருந்து புறப்பட்டு வரும் மனிதர்கள் வேறொன்றை கொண்டு வந்து புகுத்தி விடுவார்கள். (அவர்கள் மனிதர்களா? ). அவர்கள் இன்னும் 150 வருடங்களுக்குள் வந்து சேருவார்கள் என்பது கேரள விஞ்ஞானியின் இ.எஸ்.பி (Extra Sensational Power). (செய்தி விஜய் டி.வி) ஆனால் ஆராய்ச்சிக்காக வியாழனுக்கு நாம் ராக்கெட்டை அனுப்பிவிட்டோம். அவர்கள் பார்ப்பதற்கே மிக பயங்கரமாக இருக்கின்றனர். (அவர்களுக்கு இங்கிருப்பவர்கள் பயங்கரமாகத் தெரியலாம்) அவர்கள் என்ன மதத்தை கொண்டு வரப்போகின்றனரோ? எந்த என்ன சாதியை கொண்டு வரப்போகின்றார்களோ? எந்த கடவுளை கொண்டு வரப்போகின்றார்களோ? என்ன மொழியை கொண்டு வரப்போகின்றார்களோ? என்ன புத்தகத்தை கொண்டுவரப்போகின்றார்களோ?அல்லது இங்கு வந்து தான் புத்தகம் எழுதப்போகின்றார்களோ?.....இல்லை இங்கிருப்பவர்களோடு போர் புரியப்போகின்றார்களோ?.. எதிர்காலத்தினர் தான்..... பார்க்கப்போகின்றனர்......

Friday, 25 December 2009

பேசும் கலை வளர்ப்போம்- 3









 பேசும் கலை வளர்ப்போம் 
3

  தமிழை, இயல்-இசை-கூத்து என மூன்றாகப் பிரித்துள்ளனர்.
நமது முன்னோர். எண்ணிலடங்கா ஆண்டுகட்கு முன்பு, 
மனிதர்கள் நிர்வாணமாகத் திரிந்து கொண்டிருந்து, 
பின்னர் இலை தழைகளைக் கட்டிக்கொண்டு, 
இடுப்புக்குக் கீழே மட்டும் உறுப்புகளை மறைத்துக் கொண்டிருந்த 
அந்தக் காலத்தில் இயல் என்பது முதலாவதாகவும், 
இசையென்பது இரண்டாவதாகவும், கூத்து என்பது
மூன்றாவதாகவும் அமைந்திருக்க  முடியாது. சொற்களை 
அடிப்படையாகக் கொண்டது இயல்! ஒலியை 
அடிப்படையாகக் கொண்டது இசை! 
அசைவுகளை அடிப்படையாகக் கொண்டது கூத்து!..

     மனிதன், தொடக்க காலத்தில் மொழியறிவே 
இல்லாதவனாகத்தானிருந்தான். கல்லையோ மரத்தையோ, 
மலையையோ, ந்தியையோ கண்டபோது அவற்றுக்கெல்லாம் 
அவன் பெயர் எதுவும் வைக்கவில்லை. அதனால் 
சொற்கள் தோன்றிட வேண்டிய அவசியமே இல்லை. 
சைகைகள் வாயிலாகத்தான் மனிதர்கள் ஒருவருக்கொருவர் 
எதையும் உணர்த்திடத் தலைப்பட்டனர். கைகளை 
அசைத்து, தலைகளை ஆட்டி ஊமைகளைப் போலத்தான் 
அவர்கள் வாழ்க்கையை நடத்தினர். 

     அதன் பிற்கு தொலைவில் இருப்பவரை அழைப்பதற்கு 
ஒருவிதமான ஒலியையும், அருகில் இருப்பவரைத் தம் பக்கம் 
திரும்பச் செய்வதற்கு ஒருவிதமான ஒலியையும் எழுப்பினர். 
''ஏ'' ''ஓ''  ''ஈ'' இப்படி ஒலிக்குறிப்புகள் வாயிலாகவே 
ஒருவரோடொருவர் தொடர்பு கொண்டனர். மூன்றாவது 
கட்டமாகத்தான் மனித சமூதாயம் தான் வாழ்ந்த 
அந்தந்தப் பகுதிகளுக்கேற்ப சொற்களைப் 
பயன்படுத்த தொடங்கியிருக்கிறது!

    இயல், இசை, கூத்து என்பதில் இப்போது ''இயல்'' 
முதல்வரிசையில் இருந்தாலுங்கூட, மனிதன் 
தோன்றி வளர்ந்து பல மாறுதல்களைக் பெற்றிடாத 
தொடக்க காலத்தில் அசைவுகள்-சைகைகள் மூலம் 
வாழ்க்கையை நகர்த்தியதால் கூத்து என்பதுதான் அப்போது 
முதலிடத்தை வகித்திருக்கிறது. ஒலியை அடிப்படையாகக் 
கொண்ட இசை, அப்போதும் சரி-இப்போதும் சரி; 
நடு இடத்திலேயே இருக்கிறது, மூன்றாவது இடத்தில்
இருந்த இயல், சொற்களின் அடிப்படையில் இயங்குவதால்-
அந்தச் சொற்களின் இசைக்கும் தேவைப்பட்டு, 
அதே போல கூத்துக்கும் தேவைப்பட்டு, 
முதல் இடத்தில் வந்து உட்கார்ந்துகொண்டது.

   அந்த சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதன்
மூலமே எழுத்துக்கலையையும், பேச்சுக்கலையையும் 
திறமையாகக் கையாள முடியும். சொற்களைத் 
தேர்ந்தெடுப்பது என்றால் அகராதியை வைத்துக் 
கொண்டு செற்களை மனப்பாடம் செய்து, அவற்றை
நமது பேச்சில் எப்படியெப்படிக் கதிய வைப்பது 
என்று முயற்சி மேற்கொள்வது அல்ல!

  நிறைய நூல்களைப் படிப்பதாலும், நாளேடுகள், 
கிழமை ஏடுகள், திங்கள் ஏடுகளைப் படிப்பதாலும்
புதிய புதிய சொற்கள் நமக்கு ப் புதிய சொற்கள் நமக்கப் 
பழகிப் போய்விடுகின்றன. நாம் பேசும் போது அவைகள், 
தானாகவே வலிய வந்து விழவேண்டும். வாக்கியத்துக்கு
வாக்கியம் பொருத்தமான சொற்களை மேடையில் 
ஏறி நின்றுகொண்டு தேடக்கூடாது. ஓரளவு நாமே ஒரு 
அகராதியாக விளங்கிட வேண்டும். பேரகராதியாக
விளங்க முடியாவிட்டாலும் நிறைய
சொற்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


    சங்க இலக்கிய நூல் ஒன்றுக்கு உரையெழுதக்கூடிய 
அளவுக்குச் சொற்களைப் புரிந்து வைத்துக் கொள்ள 
வேண்டிய அவசியம் பேச்சாளருக்குத் தேவையில்லை! 
அதற்காக அத்தனை சொற்களையும் தெரிந்து வைத்துக் 
கொள்ள வேண்டாமென்று நான் கூறவும் மாட்டேன். 
அவற்றையும் தெரிந்து வைத்துக் கொண்டால் அவர்கள்
மேலும் ஆற்றல் மிக்க பேச்சாளர்காளாக ஒளிவிட முடிய்ம். 
அதுமட்டுமின்றி வளர்ந்து வரும் அறிவுலகத்தில் 
நாள் தோறும் புதிய புதிய சொற்கள் பிறந்து 
கொண்டேயிருக்கின்றன. அவற்றையேல்லாம் அறிந்து 
வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு பேச்சாளனின் கடமையாகும்.  

    முன்பெல்லாம்  அவர்கள் எவ்வளவு பெரிய 
பேச்சாளர்களாக இருந்தாலும், தலைவர்களாக 
இருந்தாலும் மேடையில் ஏறியதும் சில நிமிடங்கள் 
பீடிகை போட்டுவிட்டுத்தான் பேசுவார்கள்.


    ''"அடியேன் பேசப்போகும் விஷயத்தில் குற்றம்
குறைகள் இருக்கலாம். அப்படி இருக்குமேயானால்
சபையோர்களகிய நீங்கள், எப்படிப் பாலையும்,
தண்ணீரையும் கலந்துவைத்தால் அன்னப்பட்சியானது 
பாலை மட்டும் பருகிவிட்டு, தண்ணீரை விட்டு 
விடுகிறதோ அதைப்போல எனது பேச்சில் உள்ள 
நிறைகளை மட்டும் எடுத்துக் கொண்டு குறைகளை
விட்டுவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.""


    இதுபோலத்தான் பழங்காலத்துப் பேச்சுக்கள் 
அமையும். நான் தொடக்கத்தில் மேடையில் 
பேசும்போது, இதே பீடிகையை வேறொரு உவமை 
கூறிப் பேசியிருக்கிறேன்.


   ''"அவையோர்களே! சர்க்கரையையும் மணலையும் 
கலந்து, எப்படி எறும்பானது மணலைவிடுத்துச் 
சர்க்கரையை மட்டும் தின்றிடுமோ அதைப்போலவும்-
இரும்புத் தூளையும் மரத்தூளையும் கலந்து வைத்தால், 
எப்படிக் காந்தமானது இரும்புத்தூளை மட்டும் இழுத்துக் 
கொள்ளுமோ அதைப் போலவும்-என் பேச்சில்
குறைகளைத் தள்ளிவிட்டு, நிறைகளை 
ஏற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.""


 இப்படி அன்னத்தையும் பாலையும் மாற்றி ஏதோ 
புதுமை செய்துவிட்டதாக நான் 
எண்ணிக்கொண்டிருந்த காலம் அது!.


  அப்போதும் கூட இளைஞர்களாக இருக்கும் 
பேச்சாளர்கள் தாங்கள் பேசுவதற்கு மேடையில் 
ஏறியதும் தலைவருக்கும் அவையோருக்கும் வணக்கம் 
தெரிவித்துவிட்டு,
''அறிவிலும் அனுபவித்திலும் 
முதிர்ச்சி அடையாத நான் பேசுவதிலும் குற்றம் 
குறைகள் இருந்தால் மன்னித்துவிட வேண்டுகிறேன்'' 
என்று பேச்சைத் தொடங்கினால், அந்த இளைஞரிடம் 
அவையோருக்கு ஒரு அன்பும் பாசமும் நிச்சயம் ஏற்படும். 


மனப்பாடம் செய்து கொண்டு மேடையேறுகிற பல 
இளைஞர்கள், பாடம் செய்ததைப் பரபரப்புடன்
ஒப்புவிக்கும் போது இடையில் சிறு தடங்கள் 
ஏற்பட்டாலும் திகைத்துப்போய் நின்று, மீண்டும் 
மனப்பாடம் செய்ததைத் தொடக்கத்திலிருந்து கூற 
முனைவார்கள்! அவர்களுடைய மூளையில் 
பெரிய விஷயங்களை ஏற்றாமல்-நாட்டு நடப்பில் 
அவர்களுக்குத் தெரிந்திருக்கிற விஷயங்களை 
மட்டுமே பதிய வைக்க வேண்டும். அப்பொழுதுதான், 
தாங்கள் என்ன பேசுகிறோம் என்பது அவர்களுக்கே புரியும்.


""ஏதென்சு நகரத்து அறிவுக் கிழவன் சாக்ரடீசைப் போல்
-பொதுவுடைமைப் பூங்காவுக்குக் கருத்து விதையிட்ட
காரல் மார்க்சைப்போல்-இருளில் ஒளி கண்ட 
இங்கர்சாலைப் போல்-தன்மானச் சிங்கம் 
தந்தை பெரியார் விளங்கினார்.""


இப்படி எழுதி கொடுத்ததை மனப்பாடம் செய்து
மேடையில் பேசுகிற இளம் பேச்சாளருக்கு, சாக்ரடீஸ்
என்றால் என்றால் யார்? என்று தெரிந்திருக்க 
வேண்டுமல்லாவா? மார்க்ஸ் பற்றியும் இங்கர்சால்
பற்றியும் அந்த இளம் பேச்சாளர் உணர்ந்திருக்க 
வேண்டுமல்லாவா?


அதனால் பெரியார் விழாவில் பேசுகின்ற இளம்
பேச்சாளருக்கு, எதைக் கற்றுத் தந்தால் மனத்தில்
பதியுமோ? அதை மட்டும் 
கற்றுத்தர வேண்டும்.


""பெரியார், சாதிகள் ஒழிய வேண்டுமென்று 
பாடு பட்டவர்! பிர்மாவின் முகத்திலே ஒரு சாதியும்,
தோளிலே ஒரு சாதியும், தொடையிலே ஒரு சாதியும், 
காலிலே ஒரு சாதியுமாக மனிதர்கள் பிறந்தார்கள் ,
என்பதைப் பெரியார் மறுத்து எல்லோரும் 
ஒரே குலம்தான்-மனிதகுலம்தான்"" 
என்று முழங்கினார்.


இப்படி எளிய முறையில் எளிய நடையில் இளம் 
பேச்சாளர் பயிற்சி பெற்றால்தான், அவர் உதடுகள் 
உச்சரிக்கிற வார்த்தைகளுக்கும் அவரது 
உள்ளத்திற்கும் சம்பந்தம் இருக்க முடியும். அப்படித் 
தொடர்பு இருந்தால்தான் உணர்ச்சியோடு அந்தக்
கருத்துக்களைச் சொல்ல முடியும்.


வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் 
என்னை அவரது தொகுதிப் பாராட்டு விழாவுக்கு 
அழைத்துச் சென்றிருந்தார். முதல் நிகழ்ச்சியில் 
பேசும் போது அவர் குறிப்பிட்டார். ...

""தொகுதி மக்களே! 
தேர்தல் நேரத்தில் உங்களுக்கு ஒரு பெரிய வாக்குறுதி!
கொடுத்திருந்தேன்!. அதாவது! என்னை ஜெயிக்க வைத்தால்,
கலைஞரை அழைத்து வருவதாக! இப்போது 
அவரை அழைத்துவந்து வாக்குறுதியை 
நிறைவேற்றி விட்டேன்"" என்று!


அடுத்து நான் பேசும்போது,
""என்னை அழைத்து வருவது என்பதற்காக அளிக்கப்பட்ட
வாக்குறுதி அப்படியொன்றும் பெரிதல்ல! மலிவான 
வாக்குறுதிதான்! நான் எப்போதும் மக்களைச் சந்தித்துக் 
கொண்டே இருப்பவன்"" 
எனக் குறிப்பிட்டேன்.


பிறகு அதே தொகுதியில் இன்னொரு இடத்தில் 
கூட்டம்! அந்தச் சட்டமன்ற உறுப்பினர் அங்கேயும் 
என்னை வரவேற்றுப் பேசினார். என்ன பேசினார், 
தெரியுமா?


""தொகுதி மக்களே! தேர்தல் நேரத்தில் உங்களுக்கு
மலிவான வாக்குறுதி கொடுத்திருந்தன். அதுதான், 
என்னை ஜெயிக்க வைத்தால், கலைஞரை 
அழைத்து வருவேன் என்ற வாக்குறுதி!""


இப்படிச் சொன்னதும் என்னருகே இருந்தவர்கள் 
திடுக்கிட்டனர். நான் சிரித்துக் கொண்டேயிருந்தேன். 
நான் அந்தத் தொகுதியில் முதல் கூட்டத்தில் அடக்க 
உணர்வோடு பயன்படுத்திய அந்தச் சொல்லைத்தான், 
தானும் குறிப்பிடவேண்டுமென்று அந்த உறுப்பினர் 
கருதிக் கொண்டதால் ஏற்பட்ட விளைவு அது!


'மலிவு' என்ற சொல்லுக்குக்கூடப் பொருள் புரியாத நிலை! 
மனத்தில் நினைத்தது வேறு! 
உதட்டில் வெளிப்பட்டது வேறு!


இதிலிருந்து , சொற்களை நிறைய அறிந்திருப்பதும்-
உள்ளத்திற்கும் உச்சரிக்கப்படும் சொற்களுக்கும் 
தொடர்பு இருக்கவேண்டுமென்பதும் பேச்சாளர்களுக்கு 
முக்கியமான தேவைகள் எனபது 
உணரப்படுகிறதல்லவா?


----கலைஞர் மு. கருணாநிதி


இன்னும் வரும்- 4


Thursday, 24 December 2009

தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005





தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 (சட்டம் இல. 22/2005) இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் உள்ள தகவல்களை மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதை ஏதுவாக்க உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும்.
இச்சட்டம் டிசம்பர் மாதம் 2004,ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மே 11, 2005,  மக்களவையிலும், மே 12, 2005,ஆம் ஆண்டு மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
ஜூன் 15 2005 குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. ஜூன் 21, 2005, அரசுப் பதிவியழில் வெளியிடப்பட்டு அக்டோபர் 12,2005 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவின் பிறப் பகுதிகள் அனைத்திற்கும் பொருந்தும். இதன்படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்/மகளும் தகவல் பெறும் உரிமை பெற்றவர்கள்.




நோக்கம்

அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருப்பதும், ஊழலைக் கட்டுப்படுத்தி தவிர்ப்பதும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள், மக்களுக்குத் தேவையானத் தகவல்களைத் தரக் கடமைப்பட்டுள்ளதை உறுதிசெய்வதும் தகவல் பெறும் சட்டத்தின் நோக்கங்களாகும்.

தகவல் கொடுக்கும் கடமை

அரசாங்கம் சார்ந்த அல்லது அரசு உதவிப் பெறும் நிறுவனங்கள், துறைகள், அலுவலகங்கள் அனைத்தும் தங்களைப் பற்றிய தகவல்களைத் தாமாகவே முன்வந்து மக்களுக்கு கொடுக்க வேண்டும். குறிப்பாக தகவல்களை பெறும் நோக்கோடு மக்கள் தங்களிடம் கேட்கும்பொழுது தகவல்களை அளிக்கவேண்டியது அரசு, நிறுவன அலுவலர்களின் கடமை என் இச்சட்டம் கூறுகின்றது.

தகவல்

தகவல் என்றால் பிரிவு 2 (1) இன் படி பதிவேடுகள் ,
ஆவணங்கள், குறிப்பாணைகள், மின்னஞ்சல்கள், கருத்துரைகள், அறிவுரைகள், செய்தி வெளியீடுகள், சுற்றறிக்கைகள், ஆணைகள், நாள்விவரக் குறிப்பேடுகள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், தாள்கள், மாதிரிகள், மாதிரிப் படிவங்கள், மின்னியக்க வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளத் தகவல்கள் மற்றும் நடைமுறையில் உள்ள வேறு சட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் (அதிகாரிகள்) மேற்பார்வையிடும் அதிகார வரம்புக்குள் வரும் எவ்விதமான தனியார் குழுமமாக இருந்தாலும் அவைத் தொடர்பான செய்திகளும், தகவல்களும் இதில் அடங்கும்.



விண்ணப்பம்

தகவல் பெற விரும்பும் நபர் ஆங்கிலம் அல்லது இந்தி அல்லது விண்ணப்பம் செய்யப்படும் நிலப்பகுதியின் அலுவல் மொழியில் எழுத்து வடிவிலோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ தகவலின் விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.



    •  விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட பொது அதிகார அமைப்பின் மத்தியப் பொதுத் தகவல் அலுவலருக்கோ (அதிகாரிக்கோ) அல்லது மாநிலப் பொதுத் தகவல் அலுவலருக்கோ (அதிகாரிக்கோ) அல்லது






    • மத்திய உதவிப் பொதுத் தகவல் அலுவலருக்கோ(அதிகாரிக்கோ) அல்லது மாநில உதவிப் பொதுத் தகவல் அலுவலருக்கோ (அதிகாரிக்கோ) அனுப்பலாம்.




குறிப்பு-; தகவல் கோரும் விண்ணப்பத்தாரர், அத்தகவல் பற்றிய விபரங்களையும் அவரைத் தொடர்புக் கொள்வதற்கான முகவரியையும் தவிர வேறு விவரங்கள் எதையும் கொடுக்க வேண்டியதில்லை.
காலக்கெடு-; விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்வர் பதில் அளிக்கவேண்டும். குறிப்பு-; அவசரத் தகவல்கள் என்றால் 48 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்டவர் பதிலளிக்கவேண்டு



தகவல் பெறக் அ கொடுக்கக் கூடாதவை
இந்திய குடிமக்கள் எவருக்கும் பிரிவு 8 (1) இன் கீழ் பின்வரும் தகவல்களைக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.



    • () இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு நாட்டின் பாதுகாப்பு போர் யுக்திகள், நாட்டின் அறிவியல் மற்றும் பொருளாதார நலன், வெளி நாடுகளின் உறவு இவற்றைப் பாதிக்கும் குற்றம் புரியத் தூண்டுதலாக அமையும் தகவல்கள்,






    • () நீதிமன்றம், தீர்ப்பாயம் இவை வெளிப்படையாகத் தடை செய்துள்ளத் தகவல்கள் அல்லது நீதிமன்ற அவமதிப்பை உண்டாக்கும் தகவல்கள்.






    • () நாடாளுமன்றம் மற்றும் மாநில சிறப்புரிமைகளை மீறுமை செய்யும் தகவல்கள்.






    • () வாணிக நம்பகத் தன்மை, வியாபார இரகசியங்கள், அறிவு சார் சொத்துடைமை இவை வெளிப்படுத்தப்பட்டால் அது மூன்றாம் தரப்பினரின் சந்தைப் போட்டிக்குக் குந்தகம் விளைவிக்கும் தகவல்கள். இத்தகவல்கள் பெரும்பான்மை மக்களுக்கு இன்றியமாயதது என்று தகுத வாய்ந்த அதிகார அமைப்பு மனநிறைவு அடைந்தாலன்றி அத்தகவல்களை வெளியிடக் கூடாது.






    • () ஒருவருடைய பொறுப்புரிமை தொடர்பு உறவால் கிடைத்த தகவலை, பெரும்பான்மை மக்களின் நலனுக்கு இன்றியமையாதது என, தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு மனநிறைவு அடைந்தாலன்றி அத்தகவலை வெளியிடக்கூடாது.






    • () வெளிநாட்டு அரசுகளிடமிருந்து இரகசியமாகப் பெற்றத் தகவல்கள்.






    • () ஒரு நபரின் வாழ்வு அல்லது உடல் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துவதை, தகவலின் மூலத்தை அடையாளப்படுத்துவதை அல்லது சட்டம் நடைமுறைப்படுத்துவதை அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக இரகசியமாக்கஃ கொடுக்கப்பட்ட உதவிக்கு ஆபத்து விளைவிப்பதை ஏற்படுத்தும் தகவல்கள்.






    • () புலனாய்வை அல்லது குற்றவாளிகளைக் கைது செய்வதை அல்லது அவர்கள் மீது குற்ற வழக்குத் தொடர்வதைத் தடை செய்யும் தகவல்கள்.






    • () அமைச்சரவை செயலர்கள் மற்றும் பிற அலுவலர்கள் (அதிகாரிகள்) கலந்தாய்வுகளின் பதிவேடுகள் உள்ளிட்ட அமைச்சரவை ஏடுகள் வெளிப்படுத்தப்படுவதிலிருந்து விலக்குப் பெறுகின்றன.









      • குறிப்பு-; அமைச்சரவை முடிவுகள் எடுத்த பின்னர், அம்முடிவுகள் அவற்றிற்கான காரணங்கள், பின்புலங்கள் இவைகள் தடை செய்யப்பட்ட தகவல்களாக இல்லாதிருந்தால் பொது மக்களுக்குத் தெரிவிக்கலாம்.









    • () பொது செயல்பாட்டிற்கு, பொது நலனிற்கு தொடர்பில்லாத தனி நபரின் அந்தரங்கத்தில், நியாமற்ற முறையில் தலையீடு செய்யும் தனிநபரோடுத் தொடர்புடையத் தகவலைத் தெரிவித்தல் கூடாது.நாடாளுமன்றத்திற்கோ, மாநில சட்டப் பேரவைக்கோ மறுக்கப்படாத ஒரு தகவல் தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது.




அபராதம்

இச்சட்டத்தின்படி தவறு செய்த தகவல் அலுவலர்கள் (அதிகாரி) மீது நடவடிக்கை எடுத்து அபராதம் வழங்கும் அதிகாரம் என்பது மத்தியத் தகவல் ஆணையம் அல்லது மாநிலத் தகவல் ஆணையத்திடம் உள்ளது.

நூல் ஆதாரம்- தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005-செபமாலை ராசா

Wednesday, 23 December 2009

அன்பான கிறிஸ்துமஸ் தாத்தா வந்துவிட்டார்!







பெரிய மால் போன்ற வணிக வளாகத்தில் சான்டா கிளாஸ் எனப்படும் கிருஸ்துமஸ் தாத்தா இருப்பது அனைவருக்கும் தெரியும். அது அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்பு வழங்கி மகிழ்வூட்டுவதும் அனைவருக்கும் தெரியும். கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது ஒரு இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் துவங்கியது தான். 

தற்போதய துருக்கி நாட்டில் பட்டார என்ற கிராமத்தில் 3 ஆம் நூற்றாண்டில் பிறந்த செயின்ட நிக்கோலஸ் காலத்தில் இயேசு பிறந்த நாளான்று பரிசு கொடுக்கவேண்டும் என்ற திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வந்தனர். படிப்படியாக இப்படி வழங்கும் எண்ணம் ஒரு சிறப்பனதொருவரால் வழங்கவேண்டும் என்ற எண்ணம் நிக்கொலஸ் காலத்திற்கு பின் தோன்ற ஆரம்பித்தது.



இதை யார் வழங்குவது என்ற எண்ணம் தோன்றியபோது 19 (1873) ஆம் நூற்றாண்டில் கேலிச்சித்திரம் (caricature) மூலம் உருவானது தான்  இந்த சானடா கிளாஸ்.  இது செயின்ட் நிக்கோலஸ் குழுவால்  உருவாக்கப்பட்து. இதில் ஆண் படம் சான்டா, அதன் பெண் படம் கிளாஸ் (சான்டாவின் மனைவி) என்ற உருவங்களில் உருவாக்கப்பட்டது, பின்பு ஒரே மாதிரி உடை அணிந்து கிறிஸ்துமஸ் தாத்தாவாக அதாவது ஒரே உருவம் கொண்ட சான்டாகிளாஸ் (Santa Claus) என்ற உருவம் உருவானது. 


எப்படி திருவள்ளுவர் ஒரு கற்பனை உருவமோ? அது போன்றதோரு உருவம் தான் இந்த கிருஸ்துமஸ் தாத்தா உருவம். இது ஒரே மாதிரி தோற்றத்துடன் சமத்துவத்தை வலியுறுத்துவற்காக அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக  உடை தாயரிக்கப்பட்டு உருவமைக்கப்பட்டது.  இது குழந்தைகளை மிகக்கவரும் விதத்தில் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. மதச்சார்பற்ற இந்த உருவத்தை மதச்சார்ப்புள்ள கிருஸ்துவர் சிலர் எதிர்க்கவும் செய்கின்றனர். ""ஏசுநாதர் பிறந்த நாள் மதவிழாவை வணிகமாக்குகின்றனர்"". எனப்படுகிற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இதை தடுக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் வன்மையாக முன்வைக்கின்றனர். ஆனால் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் இந்த உருவத்தை விரும்புகிறார்கள் என்பது நிதர்சனம்.


இதுபற்றிய கதைகளும் சுவையயாக கூறப்படுகின்றது. இது குழந்தைகளுக்காக இந்த கதைகள் பின்பற்றப்படுகின்றன. ஐரோப்பா நாடுகளில் உள்ள துருவப்பகுதிகளில் பனிப்பிரேதசத்தில் உள்ள பாறைகளில் மறைந்திருப்பதாகவம், கனடா, அமெரிக்காவில் வடதுருவப்பகுதிகளில் மறைந்திருப்பதாகவும் கதைகள் நிலவுகின்றன. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இவை வெளிவருவதாகவும் கூறப்படுகின்றது.  இதற்காக போட்டிகளும் நடத்தப்படுகின்றது. இந்த போட்டிகளில் பங்கேற்பவர்கள் கடித போக்குவரத்து மேற்கொள்ள  முகவரியாக வடதுருவம், கனடா, அஞ்சல் குறியீட்டு எண்.  ( North pole, Canada, pin-code) போன்றவைகளையும் வெளியிடுகின்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை சான்டா கிளாஸ் வீடுதேடி வந்து வழங்குவார். இந்த போட்டிகளை கண்காணிக்க குழுவும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான விளம்பரங்களும், வருமானமும் வருகின்றது ஆக இதனால் அனைவரும், மதச்சார்பற்ற வழியில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்த முறை பின்பற்றப்படுகின்றது.

2008 இல் போன்ஸ்லியா நாட்டில் கிறிஸ்துமஸ் தாத்தா தடைசெய்யப்பட்டது. கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் யார் வந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்ற தடையுத்தரவுடன் அமல்படுத்தப்பட்டது.  அந்நாட்டில் இசுலாமியர் அதிகம் வாழ்வதாலும், அது தனது மதச்சார்பை வெளிப்படுத்தும் நாடாக இருப்பதால் இந்த தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டது. மதச்சார்பற்ற கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு ஏற்பட்ட தடை என்றே அனைவரும் கருதினர்.

மதம் நிறுவனமாக மாறும்பொழுது, அனைத்து மாச்சர்யங்களும் வந்து விழுந்துவிடுகின்றது.  அதை சுற்றி தீயவைக்கும் அனைவரும் வந்துவிடுகிறார்கள். அன்பை காட்டிலும் சிறந்த மதம் உலகில் இருக்க முடியாது. கிறிஸ்துமஸ் தாத்தாவை அந்த அன்புடன் வரவேற்போம்.



----இன்று ஒரு தகவல்- பேராசிரியர் சுப.வீரபாண்டின்

Tuesday, 22 December 2009

பேசும் கலை வளர்ப்போம் -2


 பேசும் கலை வளர்ப்போம் 

2



அப்போது வயது எனக்கு பதினைந்து! என்னுடன் 
படித்த மாணவ நண்பர்கள் சிலரையும் நான் வசித்த 
தெருவில் உள்ள இளந்தோழர்கள் சிலரையும் சேர்த்துக் 
கொண்டு "சிறுவர் சீர்திருத்த சங்கம்" என்ற ஒரு அமைப்பை 
ஒரு ஒலைக் குடிசையில் தொடங்கினேன். அதில்
காலணா கொடுத்தவர்களே
உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுவார்கள். 
வராந்தோறும் அவரகள் சங்கத்தின் வளர்ச்சிப் பணிகளுக்காக
ஒரு பைசா சந்தாக் கட்டணம் செலுத்திட வேண்டும்.




"நெஞ்சுக்கு நீதி" என்ற எனது வாழ்க்கை 
வரலாற்றுக்கு குறிப்புகளின் முதல் பாகத்தில்
குறிப்பிட்டிருப்பது போல, ஒலைக் குடிசையில்
இருந்த அந்தச் சங்கம், விரைவில்-பழுதுபட்ட 
ஒரு ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு மாற்றப் பட்டது. 
அதற்கு முன்பே அந்த ஒலைக்குடிசையின் ஏழெட்டு 
சிறுவர்களை உட்கார வைத்துக் கொண்டு 
சங்கத்தின் தலைவனான நான் பேசுவேன்.  


சிறுவர்கள் சுகாதாரத்துடனும் ஒழுக்கத்துடனும் 
நடந்து கொள்ள வேண்டும். பீடி சிகரெட் போன்ற 
தீய பழக்கங்களுக்கு ஆளாகக் கூடாது. 
தீமை தரக்கூடிய வார்த்தைகளை யாரும் பேசக்கூடாது. 
இது போன்ற அறிவுரைகளை எடுத்துச் சொல்வேன்.


அந்த ஒலைக் குடிசைக்குப் பக்கத்து வீடுதான் 
மறைந்த இசைமணி டீ.வி. நமசிவாயத்தின் வீடு!
நமசிவாயம் என் இளமைக்கால நண்பர். 
அவரது மாமன்கள் தான் டி.என. இராமன்-
டி.என. லட்சப்பன் என்ற சுயமரியாதை இயக்கத்தின் சுடர்களாக
அப்போது அந்தப் பகுதியிலே விளங்கியவர்கள். 
அறிஞர் அண்ணா அவர்களைக் கொண்டு புரட்சிக் கவிஞர்
பாரதிதாசனுக்குப் பணமுடிப்பு வழங்கிய விழாவுக்கு 
முயற்சி எடுத்துக் கொண்ட டி. எம். பார்த்தசாரதி, 
ஜலகண்டபுரம் கண்ணன் போன்றவர்களுடன் 
முன்னணியில் நின்று பாரதிதாசன் மலர் 
ஒன்றையும் வெளியிட்டவர்தான் டி.என்.இராமன்!


அத்தகைய அரசியல் சமுதாய ஈடுபாடு 
கொண்டவர்களை நண்பர் நமசிவாயம் 
இல்லத்தில் நான் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. 
அதன் காரணமாகப் பல புத்தகங்களையும்
பத்திரிகைகளையும் காண முடிந்தது.


சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். 
இது நமது கிராமங்களில் இன்றும் ஒலிக்கின்ற பழமொழி. 
அதைப்போல பேசுவதற்கும் ஏதாவது விஷயங்களைத் 
தெரிந்து வைத்திருந்தால்தானே பத்து பேர் கூட்டமென்றாலும் 
பேச வரும் பல தலைவர்கள் எழுதியநூல்களைப் படிக்கும்
பழக்கம்-நாளிதழ்கள்-வார-மாத இதழ்களை ஆர்வத்துடன் 
காத்திருந்து வாங்கிப்படிக்கும் பழக்கம்-இவைகள் 
என் உள்ளம் என்ற சட்டியை நிரப்பி வைத்திருந்தன. 
அந்த வயதில் புரிந்து கொள்ளக்கூடிய அரசியல் 
சமுதாயப் பிரச்சினைகளைப் புரிந்து வைத்துக் 
கொண்டிருந்தேன். அதனால் அந்த ஒலைக் 
குடிசைக் கூட்டங்களில் என்னால் நடுக்கமின்றி பேச முடிந்தது.
அந்தத் தயாரிப்பு, நான் பயின்ற உயர்நிலைப்பள்ளியில் 
நடைபெற்ற மேடைப் பேச்சுப் போட்டிக்கு மிகவும் துணையாக இருந்தது.


அவை நடுக்கம்-அதாவது சபைக் கூச்சம்-
அதிலிருந்து ஒருவன் மீண்டுவிட்டால், அவன் நல்ல
பேச்சாளனாக வாய்ப்பு பெற்று விட்டான் 
என்று கூறிவிடலாம். இன்றைக்கு மேடை 
அதிர முழங்குகிற பல பேச்சாளர்கள் தங்களது 
முதல் மேடைப்பேச்சின் போது உடலிலுள்ள
நாடி நரம்புகள் எல்லாம் அதிக வியர்வை வழிந்தோட-
நாக் குழற மேடையில் நின்றிருப்பார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.






அந்த சங்கடம் எனக்கு ஏற்படாமல் 
போனதற்கு இளம் வயது முதலே, சிறு சிறு 
கூட்டங்களில் நானே பேசிப் பழகிகொண்டதுதான். 
அப்படியிருந்தும்கூட பெரிய கூட்டங்களை 
காணும்போது ஆரம்பகாலத்தில் சிறிது 
நேரம் நடுக்கம் ஏற்பட்டதும் உண்டு. உயர்நிலைப்பள்ளியில், 
"நட்பு" என்ற தலைப்பில் எனது முதல் மேடைப்பேச்சை நிகழ்த்தினேன்.


எனது தமிழாசிரியர்களில் ஒருவரும், 
இன்று மகா வித்துவான்களாக விளங்கக் கூடியவருமான, 
தண்டபாணி தேசிகர் அவர்கள் தான் எனது பேச்சுக்குத் 
தேவையான பல குறிப்புகளை எனக்கு வழங்கினார். 
அந்தக் குறிப்புகளைப்பெற, அவரது வீடு தேடி
நாலைந்து முறை நடந்திருக்கிறேன். 
திருவாரூர் குமர கோவில் தெருவில் அப்போது 
அவர் குடியிருந்தார். அவர் தந்துதவிய குறிப்புகளை 
அப்படியே எழுதி, பலமுறை மனப்பாடம்
செய்து கொண்டேன். "நட்பு" என்ற தலைப்பில்
பேசிய எனக்குத்தான் மிகப்பெரும் பாராட்டு கிடைத்தது.


நான் அந்தப் பாராட்டைப் பெறுவதற்கு 
இரண்டு மூன்று நாட்கள், நான் எழுதிய குறிப்புக்
கோவையை உறக்கமின்றி மனப்பாடம் செய்திருக்கிறேன். 
என் வீட்டார் அனைவரையும் தாழ்வாராத்தில் 
உட்கார வைத்து, நான் முற்றத்து மையத்தில் 
நின்று பேசிக் காட்டி ஒத்திகை நடத்தியிருக்கிறேன். 
அதனால்தான் எனது மாணவப் பருவத்து 
முதல் மேடைப்பேச்சு, ஆசிரியர்கள், மாணவர்கள் 
அனைவராலும் பாரட்டப்படுகிற அளவுக்கு அமைந்தது.


சபை நடுக்கத்தால் ஏற்படுகிற வேதனையான 
விளைவுகளுக்கு எத்தனையோ உதாரணங்களைச் 
சொல்லமுடியும்.


""கடவுள்"" என்ற தலைப்பில் எனது பள்ளியில் 
ஒரு பேச்சுப்ப போட்டி! அதில் எனக்கு எதிராகப்
போட்டியில் கலந்துகொண்ட மாணவ நண்பர், 
பேசத் தொடங்கும் போதே நாக்கு தடுமாறிற்று. 
எப்போது பேச்சை முடிப்பது என்பதிலேயே 
கண்ணும் கருத்துமாக இருந்த அந்த நண்பர்
""இத்துடன் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்""  என்று
கூறுவதற்குப் பதிலாக-
""இத்துடன் என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்"" 
என்றாரே பார்க்கலாம்! 'கூட்டம் 'கொல்''லென்று சிரித்து விட்டது.


நடிகர் திலகம் சிவாஜி நடித்த
""கட்டபொம்மன்"" நாடகம் சென்னை அண்ணாமலை 
மன்றத்தில் நடைபெற்றது. அந்த நாடகத்தைப் பார்த்துப் 
பாராட்டும் வாய்ப்பு அறிஞர் அண்ணா அவர்கள்
தலைமையில் எனக்குக் கிட்டியது. 
""தம்பி! நீ எங்கிருந்தாலும் வாழ்க!"" என்று அண்ணா 
சிவாஜிக்குக் கூறிய அன்பு வாழ்த்து- அந்த நிகழ்ச்சியில்தான்!


ஒரு பெரும பட அதிபர், நாடகம் காண வந்திருந்தார், 
திடீரென சிவாஜி அவர்கள் அவரை மேடைக்கு
அழைத்து மாலை அணிவித்து இரண்டு வார்த்தை
வாழ்த்துமாறு கேட்டுக்கொண்டார். அந்தப் பட 
அதிபர் ஒலிபெருக்கியின் முன்னால் நின்றார். 
கை, கால்கள் உதறல் எடுத்தன. எத்தனையோ இயக்குனர்களை, 
நடிகர் நடிகைகளை, திரையுலக நிபுணர்களை 
உருவாக்கிய பெரியவர் அவர்! 
நூற்றுக்கணக்கானவர்கள் அவரது நிறுவனத்தில் 
பணிபுரிகிற அளவுக்கு படத்துறையில் சிறந்த அனுபவம்
பெற்றவர். இந்தி மொழியிலும் கூடப் படங்கள் எடுத்து, 
தமிழகத்துக் கலைத் திறனை வெளிப்படுத்தியவர். 
மலை போன்ற உருக்கொண்டவர். அப்படிப்பட்டவர் 
ஒலிப்பெருக்கியின் முன்னாள் நின்றவுடன் 
வியர்வை கடலில் மிதந்தார். இறுதியாக 
அவர் பேசியது என்ன தெரியுமா?


""நானும் நீங்களும் கண்டு களித்த.... 
இந்த... இந்த...பொம்மன் கட்டன் நாடகமானது...""


அதுவரையில் அவையோர் சும்மா இருப்பார்களா? 
அதிர்வெடிச் சிரிப்பு! இதற்குமேல் அவருக்குத்தான்
பேச வருமா? முடியுமா?


இதிலிருந்து பேசும் கலைக்கு பெருமை சேர்க்க 
வேண்டுமானால், முதலில் கூட்டத்தைக் கண்டு 
ஏற்படுகிற அச்சத்தை மெல்ல மெல்ல 
ஒத்திகை பார்த்தாவது போக்கிக்கொள்ள வேண்டும் 
என்ற உண்மை புரிகிறதல்லவா?


-----கலைஞர் மு.கருணாநிதி



இன்னும் வரும்---3