Pages

Tuesday, 12 January 2010

பேசும் கலை வளர்ப்போம்- 7





  பேசும் கலை வளர்ப்போம்-7



   உருவத்திற்கும் பருவ்த்திற்கும் ஏற்ற வண்ணம் பேச்சு அமைந்திட வேண்டும் என்பது கூட அலட்சியப்படுத்திடக்கூடிய கருத்தல்ல!  சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலும் என்னுடைய முன்னிலையிலும் என்று விளம்பரப்படுத்தப்பட்டு நடைபெற்ற இரண்டு நாடகங்களை இங்கே இரண்டு விஷயங்களுக்காக நான் குறிப்பிட விரும்புகிறேன்.
    வடசென்னைப் பகுதியில் நடைபெற்ற நாடகம், கட்சித்தோழர்கள் தயாரித்து நடத்திய நாடகம். ஏழைகளுக்காகப் பாடுபடக்கூடிய ஒருவன். அவன் ஊர் மடாதிபதியை எதிர்த்துப் போர்க்கொடி தூக்குகிறான்.  ஏழைகள் பின் தொடர அந்த ஏழை பங்காளன் மடத்திற்குள் நுழைந்து தங்க பீடத்தில் அமர்ந்திருக்கும் மடாதிபதியைப் பார்த்துக் கோடையிடியென முழங்குகிறான்.
     ''உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்து கிடக்கும் எங்கள் தொழிலாளர் வர்க்கத்த்தைப் பாரும்; உண்டு ஊதி உப்பிக் கிடக்கும் உம்மைப் போன்ற மடாதிபதிகள் கொழுத்திட எங்கள் வியர்வை ஆறாக ஓடவேண்டுமோ?''
     இப்படி உரை நிகழ்த்துகிறான். உணர்ச்சியுடன் ரசித்துக் கையொலி எழுப்பிட வேண்டிய அந்தக் கட்டத்தில் நாடகம்  பார்த்திட அந்த மண்டபத்தில் குழுமியிருந்தோர் அனைவரும்  ஏகடியமாகச் சிரித்துவிட்டனர். அண்ணாவும் புன்னகை புரிந்தவாறு என்னை நோக்கினார். நான் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியாமல் தவித்தேன்.


     கையொலி பெறவேண்டிய வசனங்கள் கேலிச் சிரிப்புக்கு உள்ளானது ஏன் தெரியுமா?''
     ஏழை பங்காளன் எந்த மடாதிபதியைப் பார்த்து, 'உண்டு-ஊதி-உப்பிக்கிடக்கிறாய்!'' என்று சொன்னாரோ அந்த மடாதிபதி வேடம் போட்டவர் கொத்தவரங்காய் போன்ற உடல் படைத்தவர். கூனிக்குறுகி எலும்பும் தோலுமாய்க் காட்சியளித்தார்.  ''உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்து கிடக்கிறோம்'' என்று முழங்கியவரோ வாட்ட சாட்டமாகவும் தொந்தியும் தொப்பையுமாகவும் சுமார் முந்நூறு பவுண்டு எடையுள்ளவராகத் தோற்றமளித்தார். ஒன்று வசனத்தை மாற்றியிருக்க வேண்டும். அல்லது வேடத்திற்குப் பொருத்தமாக நடிகர்களையாவது மாற்றியிருக்க வேண்டும்.
     இதேபோன்ற தவறு சொற்பொழிவாற்றும் மேடைகளிலும் ஏற்படுவதுண்டு. பருமனாக உள்ள ஒருவர் ஏழைப் பாட்டாளிகளைப் பற்றியப் பேசும்போது, தன்னையும் அவர்கள் பட்டியலிலே இணைத்துக்கொண்டு, ''எங்களின் பஞ்சடைந்த கண்களைப் பாருங்கள். பசித்துக் குமுறி ஒட்டிய வயிறுகளைக் காணுங்கள். உலர்ந்த உதடுகளை நோக்குங்கள்.
    வாடிய மேனியை மேலும் வதைக்கும் வறுமை நீங்க வழி காணுவோம் வாருங்கள்!.''
    என்று பேசினால், கூட்டத்திலிருப்போர் அந்த உரையில் உள்ள உணர்வை மறந்துவிட்டு, உரையாற்றுபவரின் உடலை விமர்சித்துக் கொண்டிருப்பர்.
     ஏழை எளியோருக்காக வக்காலத்து வாங்கிப் பேச வேண்டுமே தவிர, பேசுகிறவர் வசதி படைத்தவராக இல்லாவிட்டாலும் கூட, தன்னையும் பஞ்சடைந்த கண்கள் கொண்டோர் பட்டியலில் சேர்த்துக்கொண்டு பேசுவது உரிய பயனைத்தராது.
    புல் தடுக்கினால் கீழே விழக்கூடிய அளவுக்கு உடல் வலிவு படைத்தவர்களாக இருக்கும் பேச்சாளர்கள் அலெக்சாண்டரின் ஆற்றலை-நெப்போலியனின் அஞ்சா நெஞ்சத்தை-சேர சோழ பாண்டியர்களின் வீர வரலாற்றை விவரித்துச் சொல்வதின் மூலம் கூடியிருக்கும் மக்களைக் கவரலாம். ஆனால், அந்தப் பேச்சாளர்கள் தங்களின் உள்ளத்து உறுதியை வெளிக்காட்டுகிற அளவுக்கு வார்த்தைகளைத் தொடுக்க வேண்டுமேயல்லாமல்-தங்களின் உடல் வலிவை மிகைப்படுத்திப் பேசினால் அதனை மக்கள் ஏகடியமாகக் கொள்வார்களே தவிர, பேச்சாளரின் உணர்வுகளோடு ஒன்றிவிடமாட்டார்கள்.
     உருவ்த்தைப் போலவேதான் பருவமும்! வயதுக்கேற்ற பேச்சாக இருக்க வேண்டும். வயது மீறிய பேச்சுக்களை ஏதோ ஒப்புக்குப் பாராட்டுவார்களேத் தவிர அந்தக் கருத்துக்களுக்கு உரிய மதிப்பை மக்கள் வழங்க மாட்டார்கள்.
    ''ஒளவைப்பாட்டி ஆத்திச்சூடி இயற்றினார். அறஞ்செயவிரும்பு-ஆறுவது சினம் போன்ற ஒளவையாரின் அறிவுரைகளை நாம் இந்த இளமைக் காலத்தில் மட்டுமல்ல; எதிர்காலத்திலும் மறந்துவிடக்கூடாது''-இப்படியொரு சிறுமியோ, சிறுவனோ பேசும்போது இயற்கையாக இருக்கும். அதே சிறுமி அல்லது சிறுவன்;
    ''ஒளவையார் என்ற பெயரில் ஒருவர் மட்டுமல்ல! வேறு சிலரும் இருந்திருக்கிறார்கள். புறநாநூற்றில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பாடியுள்ள ஒளவை வேறு!-ஆத்திச்சூடி பாடிய ஒளவை வேறு. இரண்டு ஒளவையார்களையும் ஒருவரேயென எண்ணிக் குழம்பிக் கொள்வது கூடாது.!
     எனக் கூறிவிட்டு புறநானூற்றிப் பாடல் ஒன்றையும் பாடிக்க காட்டினால், அது இயற்கையாடதாகவோ, அந்தச் சிறுமியோ சிறுவனோ உணர்ந்து பேசுவதாகவோ அமையாது.
     வயது வந்தவர்கள் மட்டுமே பேசக்கூடியதை இளைஞர்கள் பேசுவதும்-வயது வந்தவர்களும், வயது முதிர்ந்தவர்கள் மட்டுமே பேசக்கூடியதைத் தங்களின் வரம்பை மீறிப் பேசுவதும்-சுவைக்கத் தக்கவைகளாக இருந்திடமாட்டா!
   ''கல்யாணம் பண்ணிக்கிறதே முட்டாள்தனம்! ஒரு ஆணும் பெண்ணும் ஒருத்தரையொருத்தர் விரும்பினால் அவுங்க பாட்டுக்கு ஒழுங்கா வாழ்க்கை ந்டத்த வேண்டியதுதான். பிடிக்கலேன்னா ரத்து பண்ணிட்டுப் போக வேண்டியதுதான்.கல்யாணங்கிறதிலே என்ன புனிதம் வந்து கிடக்கு; வெங்காயம்!''
     இப்படி ஆயிரக்காணக்கான மக்களுக்கு மத்தியில்-மேடையில் மணமக்களையும் அவர்களது உற்றார் உறவினர், நண்பர்களையும் வைத்துக்க்கொண்டு தமிழ்நாட்டில் பெரியார் ஒருவரால்தான் பேச முடிந்தது.!
    அவரது வயது-உழைப்பு-தியாகம்-ஓய்வில்லாத தொண்டு-கொள்கைக்கும் அப்பாற்பட்டு அவரிடம் ஆத்திகர்களும் கூடக் கொண்டிருந்த மரியாதை-இவ்வளவும் அவருக்குத்துணை நின்ற காரணத்தால் திருமண வீட்டிலேயே திருமணத்தை எதிர்த்து அவர் பேசியபோது அனைவரும் அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்; வெறுப்பைக் காட்டாமல் மகிழ்ச்சியுடன் ரசித்தனர். பெரியார் போலப் பேசுவதாக எண்ணிக்கொண்டு வேறு யார் அப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற பாணியில் மேடைகளில் உரையாற்றினாலும் எதிரை வீற்றிருப்போர் முகஞ்சுளிக்கவே செய்வர்.
   அழகு தமிழில் அமைப்புக்களோடு சொற்களை வரிசைப் படுத்தி பேசுகிற வழக்கம் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு இல்லை. ஆனால் மக்களின் பிரச்சனைகளை அவரது பேச்சின் மூலம் அணுகும் முறை தனித்தன்மை வாய்ந்தது. தங்களுக்காகப் பேசுகிற ஒரு தலைவர் என்ற நிலையில் மக்கள் அவரது நீண்ட சொற்பொழிவுகளை ஆர்வத்துடன் கேட்பார்கள். அவரது வயது, சொயல்திறன், தியாகம், உழைப்பு, சொல்வாக்கு, இவையனைத்தும் அவரது பேச்சுக்கு அடித்தளமிட்டிருந்தன. எனவே அவரது உரையில் எளிமையே மிகுந்திருந்ததையும் மக்கள் குறையாகக் கருதாமல் -அவர் சொன்ன கருத்துக்களை மனநிறைவோடு ஏற்றுக்கொண்டனர். ''பெருந்தலைவர் காமராஜரைப் போலப் பேசினேன்; மக்கள் ஆர்வத்துடன் கேட்கவில்லையே!'' என்று எந்தப் பேச்சாளராவது ஆதங்கப்பட்டுக் கொள்வார்களேயானால்-அந்தப்பேச்சாளர் காமராஜராக வளரவில்லையே என்பதுதான் நமது பதில்.

-கலைஞர் மு. கருணாநிதி

இன்னும் வரும்-8

Saturday, 9 January 2010

பேசும் கலை வளர்ப்போம்- 6














 பேசும் கலை வளர்ப்போம்-6







முன்பெல்லாம் நான் திருமண விழாக்களில் பேசும் போது வெளிநாட்டுச் சிறுகதையொன்றை எங்காவது ஒரு மணவிழா நிகழ்ச்சியில் சொல்வநுண்டு.அந்தக் கதையை மிக விரிவாக மெருகிட்டு நமது தாய்நாட்டுக்கு ஏற்றவாறு கூறுவேன்.





''ஒரு கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். ஏழ்மை அவர்களைத் தாக்கியது. ஒரு நாள் மனைவி, தன் கணவனைப் பார்த்து வீட்டில் உள்ள காளை மாட்டைக் கொண்டு போய்ச் சந்தையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒரு பெட்டிக்கடை வைத்தால் குடும்பத்தை நகர்த்தலாமே என்று யோசனை கூறினாள். அவனும் உடன்பட்டு மாட்டை ஓட்டிக்கொண்டு சந்தைக்குச் செல்லும் சாலையில் நடந்தான். வழியில் மாடு அங்குமிங்கும் மிரண்டு ஓடியது.




அப்போது ஆடு ஒன்றை ஓட்டிக்கொண்டு வந்த ஒருவன்; அவனைப் பார்த்து; ஏனய்யா அந்த முரட்டுக் காளையுடன் சிரமப்படுகிறாய்! என்னிடம் கொடுத்துவிடு. அதற்குப் பதிலாக என் ஆட்டைத் தருகிறேன் என்றான். அறிவிற்குறைந்த அந்தக் கணவன் மாட்டைக் கொடுத்துவிட்டு ஆட்டை ஓட்டிக் கொண்டு சந்தையை நோக்கிச் சென்றான்.



எதிரேயொருவன் கையில் ஒரு பெட்டைக் கோழியுடன் வந்தான். அவன், அந்தக் கணவனை ஏமாற்றி கோழியென்றால் கையிலேயே தூக்கிக் கொண்டு போய்விடலாம் என்றதும், அதற்கும் அறிவிலிக் கணவன் ஒப்புக்கொண்டு ஆட்டை அவனிடம் கொடுத்துவிட்டுக் கோழியை வாங்கிக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான்.



போகும்போது ஒரு பிரியாணிக் கடை! அந்தக் கடைக்காரன் அந்தக் கோழியை வாங்கி அன்றைக்குச் சமைத்துவிடத் திட்டம் போட்டு அறிவிலிக் கணவனிடம் நயமாகப் பேசி, ஒரு குவளைத் தேநீருக்குக் கோழியை வாங்கிக் கொண்டான்.



அறிவிலிக் கணவன் தேநீரைக் குடிக்கும்போது அவன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரன் அவனைப் பார்த்து, ''அட முட்டாளே! நானும் உன்னைக் கவனித்துக் கொண்டு தான் வருகிறேன். மாட்டைக் கொடுத்து ஆட்டை வாங்கினாய்-ஆட்டைக் கொடுத்து கோழியை வாங்கினாய்-கோழியைக் கொடுத்து தேநீர் வாங்கிச் சாப்பிடுகிறாய்-இதையெல்லாம் உன் மனைவி அறிந்தால் உன்னைவிட்டு ஓடியேவிடுவாள்;அல்லது உன்னை அடித்துத் துரத்துவாள்'' என்றான்.



அறிவிலிக் கணவன், அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என்றான். நடக்கும் என்றான் பக்கத்து வீட்டுக்காரன். நடக்குமா நடக்காதா என்பதற்கு இருவரும் பந்தயம் கட்டிக் கொண்டனர். நடந்தால் அறிவிலிக் கணவன் அவனது வீட்டைப் பக்கத்து வீட்டுக்காரனுக்கு எழுதி வைத்துவிடவேண்டும். நடக்காவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன், அவனது பெட்டிக்கடையை அறிவிலிக் கணவனுக்குத் தந்துவிடவேண்டும். இப்படிப் பந்தயம் கட்டிக்கொண்டு இருவரும் வீட்டிக்குத் திரும்பினர்.



அண்டை வீட்டுக்காரன் அறிவிலியின் மனைவியிடம் அவனது கணவன் செய்த முட்டாள்தனமான காரியங்களையெல்லாம் சொல்லி, கடைசியில் உன் கணவன் மாட்டோடு சென்று ஒரு கோப்பைத் தேநீருடன் திரும்பியிருக்கிறான் என்று கேலி செய்தான். அறிவிலியின் மனைவியோ; தன் கணவனைப் பார்த்து. 'அந்தத் தேநீரையாவது வயிறு நிரம்பச் சாப்பிட்டீர்காளா?'' என்று அனபொழுகக் கேட்டான்.



பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரே அதிர்ச்சி. பந்தயத்தில் தோற்றுப்போய்ப் பெட்டிக் கடையை எழுதிக் கொடுத்துவிட்டான்.



மறுநாள் அந்த அறிவிலிக் கணவனை, அவன் பார்த்து, ''என்னடா. உன் மனைவி உன்னைவிட மூடமாக இருக்கிறான்?' என்று கேட்டான்.''அப்படியொன்றுமில்லை.என்னதான் அவளுக்கு என்மீது வருத்தமோ, கோபமோ இருந்தாலும் அதைப்பிறர் முன்னால்காட்டிக்கொள்ளமாட்டாள். நானும் அப்படித்தான். அந்தத் தைரிய்த்தில்தான் உன்னிடம் பந்தயம் கட்டினேன்'' என்றான் அந்த அறிவிலிக் கணவன்.



தங்கள் குடும்பத்துப் பிரச்சனைகளைப் பிறர் முன்னால் பெரிதுபடுத்தக்கூடாது என்பதற்கு இந்தக் கதை எடுத்துக்காட்டு!''




மணமக்களுக்கு அறிவுரை வழங்குவது போல் நான் இதைச்சில இடங்களில் வாழ்த்துரையில் இனணத்துக்கூறியிருக்கிறேன்.



நாகையில் ஒரு திருமணம். அங்கு வாழ்த்துரைக்கச் சென்ற நன்னிலம் நடராசன் என்ற கழகப் பேச்சாளர் இந்தக் கதையை நகைச்சுவையுடன் கையொலியும் சிரிப்பொலியும் எதிரொலிக்கிற அளவுக்குச் சொல்லிக்யிருக்கிறார்.



அதே மணவிழாவுக்கு இன்னொரு பேச்சாளர் தாமதமாக வந்திருக்கிறார். அவருக்கு நன்னிலம் நடராசன் இந்தக் கதையைச்சொன்னது தெரியாது.அவரை வாழ்த்த அழைத்தபோது அவரும் இதே கதையை மிகவும் அழகுபடவும் சுவையாகவும் நீட்டி முழக்கியும் சொல்லியிருக்கிறார். மக்களிடமிருந்து எந்தவிதமான வரவேற்பும் இல்லை. பலர் எழுந்து போகத் தொடங்கினர். சிலர் கேலியாகப் புன்னகை புரிந்தனர்.



பேசி முடித்ததும் பேச்சாளர் நடராசனைப் பார்த்து. ''என்ன நடராசா!கலைஞர் சொன்ன கதையைச் சொன்னேன். ஒருவரும் ரசிக்கவில்லையே?' என்று வியப்புடன் கேட்டிருக்கிறார். ''அண்ணே, நான் அந்தக் கதையை முதலிலேயே சொல்லிவிட்டேன்'' என்று நடராசன் சிரித்திருக்கிறார்.




ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிற சொற்பொழிவாளர்கள், தங்களுக்கு முதலில் பேசியவர்கள் என்ன பேசினார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். நிகழ்ச்சிக்குத் தாமதமாக வர நேரிட்டால் மேடையில் உள்ளவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் பேசியதையே அடுத்துவரும் அதே நிகழ்ச்சியில் திரும்ப்பப் பேசினால், அப்படிப் பேசுகிறவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.




அதிலும் குறிப்பிட்ட குட்டிக்கதைகள், உவமைகள், உதாரணங்கள் கூறுவதில் தனக்கு முன் பேசியவர் எதுகுறித்துப் பேசினார் என்பதைத் தெரிந்துகொண்டு பேசுவது மிக முக்கியம்.






-கலைஞர் மு. கருணாநிதி






இன்னும் வரும்-7


-

Friday, 8 January 2010

பேசும் கலை வளர்ப்போம்- 5








 பேசும் கலை வளர்ப்போம்-5




கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் 
அவரது குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கோ
அல்லது பெண்களுக்கோ யாரோ ஒருவருக்கு 
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் திருமணம் 
நடத்தி வைப்பார். பெரியார், அண்ணா, ஜீவா 
இவர்கள் எல்லாம் அந்த மணவிழாக்களில் 
தவறாமல் கலந்து கொள்வார்கள்.




ஒரு புலவர் (பெயரைக் குறிப்பிட்ட விரும்பவில்லை.) 
மணமக்களை வாழ்த்துவோர் வரிசையில் 
ஒவ்வொரு முறையும் இடம் பெறுவார். 
முற்போக்குக் கருத்துக் கொண்டவர் என்று 
அவர் தன்னைச்சொல்லிக் கொண்ட போதிலும் 
மணவிழாவுக்கு வந்தோரைச் சிரிக்க வைப்பதற்காக 
நகைச்சுவை என்ற பெயரால் படித்த 
பெண்களைக் கேலி செய்வார்.






படித்த பெண்கள் சமையற்கட்டுக்குப் போனால்
கத்திர்க்காய்ப் பெரியல் சுத்தமாக இருக்க 
வேண்டுமென்பதற்காக முதலில் கத்திரிக்காய்க்குச்
சோப்புப்போட்டுக் கழுவுவார்கள் என்பார். 
காய்கறி நறுக்கும் கத்திகளில் கிருமிகள் 
ஒட்டிக் கொண்டிருக்கும் என்பதற்காக அந்தக்
கத்திகளை ''டெட்டால்'' விட்டுக் கழுவுவார்கள் 
என்பார். இதையே அந்த வீட்டில் நடந்த
திருமணங்களில் மூன்று தடவை 
அப்புலவர் பேசியிருக்கிறார்.






ஒருமுறை நானும் இயக்குநர் பீம்சிங் 
அவர்களும் கலைவாணர் வீட்டில் நடந்த
நாலாவது திருமணத்திற்குப் புறப்பட்டுக் 
கொண்டிருந்தோம். பீம்சிங் வருவதற்குச் 
சிறிது தாமதாகிவிட்டது.






''என்ன பீம்! திருமணம் முடிந்திருக்குமே! 
அண்ணா பேச ஆரம்பித்துவிடப் போகிறார்! 
வாருங்கள் விரைவாக!'' 
என அவசரப்படுத்தினேன்.






''அவசரப்படாதீங்க சார்! இப்பத்தான் 
அந்த-----ப் புலவர் கத்திரிக்காய்க்கு சோப்பு 
போட்டுக் கொண்டிருப்பார்''
என்றார் கேலியாக!






பேசியதையே பேசுதல்-அதுவும் ஒரே 
ஊரில் பேசுதல்- அதிலும் ஒரே வீட்டுத் 
திருமணத்தில்-அல்லது நிகழ்ச்சியில் 
பேசுதல்-எந்த அளவுக்கு விரும்பத்தகாததாகப் 
போய்விடுகிறது என்பதற்கு 
இது எடுத்துக்காட்டு!




வேறு சிலர், சில சொற்பொழிவாளர்கள் 
பேசியதையே தாங்களும் பேசி 
அவர்களைப்போல மக்களின் 
பாராட்டுதலைப் பெறவேண்டுமென்று 
ஆசைப்பட்டுத் தோல்வியை அணைத்துக்
கொள்வதும் உண்டு!






காங்கிரஸ் ஆட்சியாளரைச் சாடுவதற்காக 
நான் கூட்டங்களில் புண்யகோடி என்பவர் 
வறுமையின் காரணமாகத் தன் குடும்பத்தோடு
கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட
நிகழ்ச்சியை மிகுந்த சோகப் பெருக்குடன் 
விவரிப்பது உண்டு! எதிரில் இருந்து கேட்கும்
மக்கள் கண்ணீர் வடித்திடுவர்!






புண்யகோடியும் அவரது மனைவியும் 
மட்டுமல்ல; பதின்மூன்று வயது மணிமேகலை
என்ற மூத்த பெண்ணும் எனத் தொடங்கி, 
ஒரு வயதுப் பிஞ்சுக் குழந்தை வரை ஆறு 
பிள்ளைகளும் பெற்றோருமாக எட்டுப்பேர் 
வறுமைக்குப் பலியாயினர். இந்த ஆட்சியிலே
என்று உணர்ச்சி கொப்பளிக்க உரையாற்றுவேன். 
என்னுடன் கூட்டங்களில் கலந்து கொள்ளும் 
எனது நண்பர் காட்டூர் இராமய்யா அவர்கள்
மேடைகளில் பேசும் ஆர்வம் கொண்டவர், 
நல்ல நண்பருங்கூட!






அவர் சட்டமன்றத் தேர்தலில் 1962-ஆம் 
ஆண்டு போட்டியிட்டார்-கழகச் சார்பு
வேட்பாளராக! அவரது தொகுதியில் ஒரு
தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் புண்யகோடி
கதையைச் சொல்லி மக்களை உருகிட
வைக்க வேண்டுமென்று 
நினைத்திருக்கிறார்.






பெருங்கூட்டம் கூடியிருந்தது. வேட்பாளர் 
பேசுவார் என அறிவிக்கப்பட்டது! வேட்பாளர்கள்
எப்போதுமே குறைந்த நேரம் பேசி, 
வாக்களர்களிடம் ஆதரவு கோரிவிட்டு 
விரைவில் உரையை முடித்துக் கொள்வதே 
நல்லது! நண்பர் காட்டூரார் கூட்டத்தைப் 
பார்த்ததும் நீண்ட நேரம் பேச விரும்பி 
புண்யகோடி கதையையும் 
தொடங்கிவிட்டார்.






அந்த குடும்பத்தின் வறுமை-கஷ்டம்-அதனால்
தற்கொலை செய்து கொள்ளத் துணிந்த 
கொடுமை-எல்லாவற்றையும் அடுக்கிவிட்டு,
அவர்களைக் கிணற்றடிக்கு அழைத்து வந்து விட்டார். 
முதல் பிள்ளை மணிமேகலை என்று பெயரையும் 
கூறிவிட்டு, அத்துடன் நிறுத்தாமல் அதன் 
வயது ஐந்து என்று கூறி, அதைத் தூக்கி அந்தப்
பெற்றோர் கிணற்றில் போட்டதைச் 
சொன்னார்.






இன்னும் ஐந்து குழந்தைகளுக்கு வயது 
சொல்லவேண்டுமே! இரண்டாவது 
குழந்தைக்கு வயது மூன்று என்றார்! 
மூன்றாவது குழந்தைக்கு வயது இரண்டு
என்றார்! நான்காவது குழந்தைக்கு வயதைச் 
சொல்ல முடியாமல் தடுமாறினார்.






மணிமேகலை வயது பதின்மூன்று என 
ஆரம்பித்திருந்தால் தான் கணக்கு சரியாக 
வந்திருக்கும். வயதில் தடுமாறியவுடன், 
கவலைப்படவேண்டிய மக்கள் கைதட்டி 
ஆரவாரம் செய்யத் தொடங்கி விட்டார்கள்.






அது மட்டுமல்ல; இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை 
வெறும் செய்தி சொல்வது போலச் சொல்லிக் 
கொண்டிருந்தால் அதன் வாயிலாக உருவாக்க
நினைக்கிற உணர்ச்சியையும் எழுச்சியையும் 
நிச்சயமாக மக்கள் மத்தியில் உருவாக்க
முடியாது.






பேச்சாளர்கள் அவரவர்களுக்கென்று ஒரு 
தனியான பாணியை அமைத்துக்
கொள்ளவேண்டும். அவரைப்போல் பேசுகிறார்; 
இவரைப்போல் பேசுகிறார் என்று மக்கள் 
ஒப்பிட்டுப் பார்க்க முனைந்துவிட்டால் பிறகு
அந்தப் பாணியில் செலுத்துகிற கவனத்தைப் 
பேச்சில் செலுத்திட மாட்டார்கள்.






''பானை உடைந்திருக்கிறதா இல்லையா 
என்பதைத் தட்டிப்பார்த்து அதன் ஒலியில் 
இருந்து அறிந்து கொள்வதைப்போல-மனிதன்
அறிவாளியா அல்லவா என்பதை 
அவன் பேச்சிலிருந்து அறிந்துகொள்ளலாம்.''


என்று டெமஸ்தனீஸ் கூறியள்ளதைப் 
பேச்சாளர்கள் மனத்தில் பதிய 
வைத்துக் கொள்ள வேண்டும்.

-கலைஞர் மு. கருணாநிதி


இன்னும் வரும் -6

Wednesday, 6 January 2010

பேசும் கலை வளர்ப்போம்- 4







 பேசும் கலை வளர்ப்போம் -4



நெஞ்சம், சொற்பஞ்சமுடையதாயிருந்தால்
மேடைப்பேச்சால் மக்களைக் கவர்ந்திட இயலாது.
சிலருக்கு மனத்தில் நல்ல கருத்துக்கள் தோன்றும்.
அவற்றை வெளிப்படுத்த உரிய சொற்கள் இல்லாமல்
தவித்திடுவர். வேறு சிலருக்குச் சிறந்த கருத்துக்களும்
அவற்றை வெளிப்படுத்தக்கூடய சொற்களும் கூட
உள்ளத்தில் நீறைந்திருக்கும். ஆனால் அப்படிக்
கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தக் கூடிய
பேச்சுவன்மை அவர்களுக்கு வாய்க்காமல்
போய்விடக்கூடும்.


பல மொழிகளில் ஆராய்ச்சி செய்து பட்டம் பெற்ற
முதுபெறும் புலவர்கள் பலர் எதிரே அமர்ந்திருக்கும்
அவையோரை ஈர்த்திடும் வண்ணம் விரிவுரையாற்ற முடியாமல் தோல்வியுற்றிருக்கின்றனர். சொற்பொழிவுக்குத்
தக்கவாறு குரலின் ஏற்ற இறக்கம், எத்தகைய
சொற்களைப் பயன்படுத்த வேண்டுமென்று ஏற்படுத்திக்
கொள்கிற பழக்கம் இவையெல்லாம் ஒரு பேச்சாளர்.
ஆரம்ப காலத்தில் திட்டமிட்டுச் செயல்படுத்தினாலும்
கூட, போகப் பேச்சு அந்தப் பழக்கம் நாளாகவே
ஏற்பட்டுவிடும்.


ஒரு ஆரம்பப் பேச்சாளன் தோல்வி அடைகிற
இடம், அவன் நீண்ட நேரம் பேசவேண்டுமென்று
எண்ணுகிற மேடைதான்! அடடே! இன்னும்
கொஞ்சம் பேசியிருக்கக்கூடாதா? என்று
அவையோர் அல்லது பொது மக்கள் நினைக்கிற
அளவுக்கு ஆரம்பப் பேச்சாளன்
நடந்து கொள்ளவேண்டும்.


ஐந்து நிமிடம் அழகாகப் பேசத் தெரிந்தவுடனேயே
ஐம்பதாயிரம் பேர் கூடியிருக்கிற மாநாட்டில் பேச
வேண்டுமென்ற ஆசையை வளர்த்துக் கொள்ளக்
கூடாது. அத்தகைய மாநாடுகளில் தலைவர்களும்,
அந்தக் கட்சிகளின் முன்னணியினரும் என்ன
பேசுகிறார்கள், எப்படி மக்களைக் கவருகிறார்கள்
என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.


எத்தனை மணி நேரம் ஒரு சொற்பொழிவாளர்
பேசினார் என்பதைவிட, என்ன பேசினார்
என்பது தான் முக்கியம்.


இளம பேச்சாளனாக இருந்த நான் ஒருமுறை 
குடந்தையில் ஒரு கூட்டத்தில் பேசினேன். 
குடந்தைப் பெரியவர் கே.கே. நீலமேகம் 
தலைமூயில் அந்தக் கூட்டம் நடந்ததாக 
நினைவு. அறிஞர் அண்ணா அவர்கள் 
சொற்பொழிவாற்ற வந்திருந்தார். 
என்னையும் பேசுமாறு கூறினாரகள். 
மிகக் குறைந்த நேரமே பேசி மக்களின்
கைதட்டலையும் உற்சாக 
ஆரவாரத்தையும் பெற்றேன்.


""காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சின்ன
அண்ணாமலை ஒரு கூட்டத்தில் பேசினாராம்! 
அவர் மலையாம்! அண்ணா அவர்கள் துறையாம்! 
மலையில் மழை பெய்தால் தான் துறைக்கு வருமாம்! 
அதனால் அண்ணாதுரையை விட அண்ணாமலையே மேல்! 
இப்படிப் பேசிய அண்ணாமலைக்குச் சொல்லிக்
கொள்வேன். அந்த மலையில் பொழியவேண்டிய
மழைக்குத் தேவையான மேகம் இதோ 
எங்களிடம் இருக்கிறது! 
அதுதான் கே. கே. நீலமேகம்!""


இப்படி நான் கூறியதும் கையொலி!
மகிழ்ச்சியொலி! அத்துடன் பேச்சை 
நிறுத்திக்கொண்டு ""சபாஷ்"" 
பெற்று விட்டேன்.


கூட்டங்களில் பாராட்டியும் கைதட்டுவதுண்டு!
பேச்சை முடித்துக் கொள்ளச் சொல்லியும் 
கைதட்டுவதுண்டு! நான் குறிப்பிட்ட கே. கே. நீலமேகம் 
அவர்கள் குடந்தையில் நடைபெற்ற ஒரு 
மாநாட்டில் வரவேற்புரை ஆற்றிய நிகழ்ச்சியை 
இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.


நல்ல உடற்கட்டும், நிமிர்ந்த நோக்கும், 
கொள்கை உறுதியும் கொண்ட பெரியவர் நீலமேகம், 
தமது வரவேற்புரையை எழுதியே படித்தார். 
எழுதிப்படிக்கும் நீண்ட உரைகளை மக்கள் 
ஆர்வத்துடன் கேட்பதில்லை. அடுக்கி 
வைத்திருந்த தாள்களில் 25-ம் பக்கத்திற்குப்
பிறகு 26-ஆம் பக்கம் விட்டுப்போய் 27-ஆம் 
பக்கத்தைப் படித்தார். பேச்சின் தொடர்பு 
அறுந்துபோயிற்று. மாநாட்டுப் பந்தலில் 
கேலிச் சிரிப்பும் கைதட்டலும் எழுந்தது.
கே. கே. என். அவர்களுக்குக்
கடுங்கோபம் வந்துவிட்டது!


""யார் கேட்டாலும் சரி! கேட்காவிட்டாலும் சரி! 
ஒரு ஆள் மட்டும் இந்தப் பந்தலில் மிச்சமிருக்கும்
வரையில் நான் எனது உரையைப் 
படித்துதான் தீருவேன்.""


இப்படி அவர் கர்ச்சனை செய்தபிறகு பந்தலில் 
அமைதி ஏற்பட்டது. எழுதிப் படிக்கிற 
உரைகளானாலும் அவற்றை ஒரு 
முறைக்கு இருமுறை கவனமாகப் படித்து, 
பக்க எண்களைச் சரியாகக் குறித்து ஒழுங்காக 
அடுக்கி வைத்துக் கொண்டு மக்களைக் 
கவரும் வகையில் குரலை உயர்த்திப்
பேசவேண்டும் என்பதற்கு எடுத்துக் 
காட்டாகவே இந்த நிகழ்ச்சியை
நினைவுபடுத்தினேன்.


நாடக உலகத்திலும் திரையுலகிலும் ஒரளவு
புகழ்பெற்ற நடிகர் ஒருவர் என்னுடன் பல 
ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொதுக்கூட்டத்தில் 
பேச ஆரணிக்கு வந்திருந்தார். அவர் பேசுவார் 
என்று அறிவித்ததும் நல்ல வரவேற்பு இருந்தது.
தொடக்கத்தில் கடல்மடை திறந்தாற்போல் 
வார்த்தைகளைக்கொட்டினார். அவருடைய 
நினைவு எங்கேயோ இருந்திருக்கிறது! மக்கள்
முன் எடுத்து வைத்த கருத்துக்களோடு அவர்
ஒன்றிருக்கவில்லை. பேசிக்கொண்டேயிருந்தவர், 
திடீரெனத் திகைத்து நின்றுவிட்டார். ஒரு 
நிமிடத்திற்கு மேல் அப்படியே நின்றார். 
பேசிக்கொண்டேயிருந்த பொருள் பற்றிய
தொடர்பை அப்படியே விட்டு விட்டு அவர், 
இத்துடன் என் பேச்சை முடித்துக் கொள்கிறேன்
எனக் கூறி அமர்ந்து விட்டார்.


இதிலிருந்து புரிவதென்ன? ஒரு பேச்சாளன் 
மக்களுக்குச் சொல்ல முயன்ற கருத்துக்களுடன் 
தானும் இரண்டற கலந்திருந்தால் தான் தங்கு
தடையின்றிப் பேச முடியும்! எங்கேயோ 
மனத்தை உலவிட விட்டு விட்டு, அரங்கின் 
முன்னே உதடுகளை அசைத்துக் கொண்டிருந்தால் 
உணர்வு  பூர்வமான பேச்சாக அமையாது!


சொற்பொழிவைக் கேட்பத்ற்கு மக்கள் சங்கீதம்
கேட்கவருவது போல் வந்த காலத்தை உருவாக்கிய
பெருமை அண்ணா அவர்களுக்கு உண்டு!


முப்பது ஆண்டுகளுக்கு மேலாகிறது. சென்னை 
சேத்துப்பட்டுப் பகுதியில் அண்ணா பேசுகிறார் 
என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. நான்,
கவிஞர்  கண்ணதாசன், அரங்கண்ணல்,
முல்லை சக்தி ஆகியோர் ஒரு காரில் அந்த
இடம் நோக்கிப் புறப்பட்டோம், இரவு எட்டு 
மணியிருக்கும் கூட்டம் நடைபெறும் இடம் 
சரியாகத் தெரியவில்லை. ஒரு வெற்றிலை 
பாக்குக் கடையோரமாகக்  காரை 
நிறுத்திவிட்டு ""அய்யா"" இங்கே கூட்டம் 
எங்கே நடக்கிறது?"" என்று விசாரித்தோம்!
கடை வாசலில்  வாழைப்பழம் உரித்துத் 
தின்று கொண்டிருந்த ஒருவர் எங்களைப்
பார்த்து, ""அதுவா! அண்ணாத்துரை கச்சேரிதானே? 
இப்படி இடதுபக்கமாகத் திரும்பிப் போங்க!"" 
என்று பதில் அளித்து வழிகாட்டினார்.


சொற்பொழிவை ஒரு இசைக்கச்சேரியாகவே 
கருதிக் கொண்டனர். 1953-ல் நான் கல்லக்குடி 
போராட்டத்தில் ஈடுபட்டு திருச்சி சிறையில் 
இருந்தபோது, அங்கிருந்த ஒரு சாதாரணக்கைதி
என்னைப் பார்த்து கை கூப்பி,"" நமஸ்காரங்க!"" என்று 
சொன்னார். ""என்னைத் தெரியுமா?"" என்று 
அவரைக்கேட்டேன். ""ஓ! நல்லாத் தெரியுமே! 
மூணு மாசத்துக்கு முன்பு கச்சேரிக்கு வந்திருக்கீங்களே""
என்றார். அந்தக் கைதி கூட்டங்களையே கச்சேரி 
என்று நினைத்து கொண்டருந்த அந்த 
நிலையைக் கடந்து எவ்வளவு தூரம் தமிழ் நாடு
முன்னேறியிருக்கிறது என்பதை எண்ணிப் 
பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறதல்லாவா?
இவ்விதம் முன்னேறியுள்ள பேசும் கலையில்
வல்லவர்களாகத்திகழ, பெரும் உழைப்பைத் 
தரவேண்டும் என்பதைப் பேச்சாளர்களாக 
விரும்புவோர் புரிந்து கொள்ள வேண்டும்.


    '' அக்ராசனாதிபதி அவர்களே!'' என்று விளித்தது
மாறி-''அவைத்தலைவர் அவர்களே!'' என்று
தமிழில் ஒலிக்கிற காலம் இது!  ''ஸ்ரீமான் அவர்கள்!'' 
என்பது ''திருவாளர் அவர்கள்'' என்று 
மாறியிருக்கிற காலம் இது! இந்த மாற்றங்கள்
ஏற்படுவதற்கு எழுத்தாளர்கள் மட்டுமல்ல; 
தமிழ்ப்பற்றுக்கொண்ட சொற்பொழிவாளர்களும் 
காரணமல்லவா? கூட்டங்களில் பேசிப்பேசி 
அந்தச் சொற்களை மக்களின் உள்ளத்தில் பதிய
வைத்துவிட்டதால் அல்லவா; அவை பழகிப் 
போய்விட்டன! தமிழ் நூல்களை நிறையப் 
படிப்பதன் மூலமும், நல்ல தமிழ் ஏடுகளைத்
தவறமல் படிப்பதன் மூலமும் ஒரு தமிழ்ப் 
பேச்சாளர், தங்கு தடையற்று தமிழ்ச்
சொற்களைப் பயன்படுத்தும் 
ஆற்றலைப்பெற முடியும். 


    நுனிப்புல் மேய்பவர்களாகப் பேச்சாளர்கள் 
இருந்தால், ஒவ்வொரு கூட்டத்திலும் அரைத்த
மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்கள். 
அன்றாடம் ஏடுகளில் வருகிற புதிய 
செய்திகளைக்கூட அவர்கள் 
ஏறெடுத்துப் பார்ப்பதில்லை.


   சில பேச்சாளர்கள் ஒரு பேச்சைத் தயார் 
செய்து கொண்டு அதை வைத்துக் கொண்டே 
ஓராண்டு காலம், ஒரு சுற்று வந்துவிடுவார்கள்.
அதற்குப் பிறகு, மற்றொரு பேச்சைத் தயாரித்துக்
கொண்டு புறப்படுவார்கள். ஒரு இடத்தில் 
சொன்ன கருத்தையோ அல்லது கையாண்ட 
உவமையையோ மற்றொரு இடத்தில்  கூறுவது 
தவறல்ல! ஆனால், அவற்றைச் சொல்லும்
கோணத்தில் மாற்றங்கள் இருந்தால்தான் 
பேச்சு பொலிவு பெறும்! அதே வார்த்தைகள்- 
அதே வாசக அமைப்பு-பதிவு செய்யப்பட்ட
நாடா (டேப்) போலத் திரும்பத் திரும்ப
பயன்படுத்தப் பட்டால் இரண்டாவது அல்லது
மூன்றாவது முறையாக அவரது பேச்சைக்
கேட்பவர்கள் அலுத்துக் கொள்ள நேரிடும்.


-கலைஞர் மு. கருணாநிதி


இன்னும் வரும்----5

Monday, 4 January 2010

சென்னையில் நிறைவேற்றப்பட்ட முதல் தூக்கு தண்டணை!





சென்னை நகரமே ஒரு குற்றத்தின் மூலம் தான் நிர்மாணிக்கப்பட்டது என்று சென்னையை பற்றி ஆராய்ந்து, "" மதராஸ் பட்டிணம்"" என்ற வரலாற்று நூல் எழுதிய திரு நரசய்யா குறிப்பிடுகின்றார்.கி.பி 1639 ஆம் ஆண்டு வாக்கில் வணிகம் புரிய இங்கு வந்த ஆங்கிலேயர்கள் முதலில் எந்த ஆளுமைகளும் இங்குள்ள மக்களிடம் புரியவில்லை. வணிகம் மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்தது. அவர்களை ஆளுமை புரியும் (ஆட்சி புரியும்) தன்மைக்கு மாற்றியவர்கள்  இங்குள்ளவர்கள் தான் என்று இந்த ஆய்வாளர் கூறுகின்றார்.


அன்றைய காலகட்டத்தில் சென்னையை ஆண்டு வந்தவர் தாமர்ல வெங்கடாத்திரி நாயக்கர் என்ற மன்னர். இவரின் ஆளுமையின் கீழ் தான் சென்னை இருந்து வந்தது. அதன் தலைமையிடம் பூவிருந்தவல்லி.(பூந்தமல்லி) அவரிடம் அனுமதி பெற்றே இங்கு ஆங்கிலேயர் வணிகத்தை துவங்கினர் .



அப்பொழுது ஒரு நாள் கூவம் ஆற்றில் ஒரு பெண்ணின் பிணம் மிதந்து கொண்டு வந்தது. அந்த பெண்ணின் பிணத்தை கொண்டு வருதற்காக உள்ளுர் மக்களில் இருவரை கூலிக்கு அமர்த்தி அழைத்தனர்.


இருவரும் அந்த பிணத்தை கொண்டு வந்தவுடன், அதை எரிக்கவேண்டுமா? புதைக்க வேண்டுமா? என்ற கேள்வியை தொடுத்து விட்டு  ஆங்கிலேயரின் பதிலை எதிர் நோக்கியிருந்தனர், அந்த இரண்டு கூலியாட்களும். ஆனால் எதையும் ஆராயமால் முடிவெடுக்கும் எண்ணம் இல்லாதவர்களாக ஆங்கிலேயர் எப்போதும் இருந்து வந்ததினால். அந்த இருக் கூலியாட்களிடமே அந்தப் பெண்ணின் இறப்பை பற்றி விசாரிக்க ஆரம்பித்தனர். ஆனால் அந்த கூலியாட்கள் இருவரும் கூலி வாங்குவதிலேயே குறியாக இருந்தனர்.  மேற்கொண்டு ஒத்துழைக்கவும் மறுத்தனர். அவர்களை ""இன்னும் கூலி அதிகம் தருவதாக""  சமாதானப்படுத்தி மேற்கொண்டு விசாரித்தனர்.


அதில் ஒருவன் அது ஒரு தற்கொலை என்றும் தனக்கு அந்த பெண்ணைத் தெரியும் என்று கூறினான். ஆனால் அந்த பிணத்தில் கொலை செய்ததற்கான அறிகுறிகள் தோன்றியதால் மேலும் ஆங்கிலேயர் சந்தேகத்துடன் விசாரித்தனர்.


அதற்கு இரண்டாவதாக உள்ளவன் இது ஒரு கொலைதான் அந்தப் பெண் இவன் வீட்டில் இருந்தவள் தான். அந்தப் பெண் அணிந்திருந்த பித்தளை ஆபரணத்திற்காக இவன் தான் கொலை செய்தான் என்று கூறினான். (அக்காலத்தில் பித்தளை ஆபரணமும் விலையுயர்ந்தது தான்).


மேலும் அவன் சொன்ன இடத்தில் ஆராய்ந்த பொழுது அந்த ஆபரணங்களை அவன் மறைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த நபர்தான் கொலையாளி என்பதை உறுதிப்படுத்தினர்.


ஆனால் இதை முறையாக அன்றைய மன்னர் தாமர்ல வெங்கடாத்திரி நாயக்க மன்னரிடம் தெரிவித்து ""என்ன? நடவடிக்கை எடுக்க வேண்டும்? "" என்று கோரினார்கள் ஆங்கிலேயர்கள். ஆனால் மன்னர் ""உங்கள்! விருப்பம் போல் நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்! "" என்று எப்போதும் பொறுப்பை தட்டிக் கழிக்கும் மனத்துடன் ஆங்கிலேயரிடம் அப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டார். அவர்களும் உடனே நடவடிக்கை எடுத்துவிடவில்லை.


உடனே சூரத்தில் இருக்கும் அவர்களின் (ஆங்கிலேயர்) தலைமையகத்துக்கு அதாவது ஆங்கிலேய ஆளுநருக்கு தகவல் கொடுத்தனர். ஆளுநர் அந்த நபரை தூக்கிலிட உத்தரவிட்டார். அதன்படியே முதன் முதலில் இங்கு தூக்குத் தண்டணை நிறைவேற்றப்பட்டது. முதன் முதல் புலன் விசாரணையும் அன்றிலிருந்து தான் மேற்கொள்ளப்பட்டது. அன்றிலிருந்து சட்டம் அவர்கள் கைகளுக்கு, அதாவது ஆங்கிலேயர் கைகளுக்குப் போய்விட்டது. இதுதான் சென்னையில் நிறைவேற்றப்பட்ட முதல் தூக்குத்தண்டணை.

-நன்றி விஜய் தொலைக்காட்சி, (நூல் ஆதாரம் மதராஸ் பட்டிணம், திர நரசய்யா)

Sunday, 3 January 2010

இவரைப்போல் வாழ்ந்தவரும் இல்லை!, வீழ்ந்தவரும் இல்லை!







 இவரைப் போல் வாழ்ந்தவரும் இவரைப் போல் வீழ்ந்தவரும் இல்லை என்று இன்று வரை கூறுகின்ற அளவில் ஒருவர் வாழ்ந்தார் என்றால் அது


எம். கே. தியாகராஜ பாகவதர். - (மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர்) சுறுக்கமாக எம்.கே.டி என அழைக்கப்படும் இவர் மார்ச் 1, 1910 மாயவரத்தில் பிறந்தவர். தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் சூப்பர் ஸ்டார்  (உயர் நட்சத்திர) அந்தஸ்து பெற்ற கதாநாயகன் மற்றும் ஏழிசை மன்னர் என போற்றப்படும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரும் ஆவார். இவருடன் உடன் பிறந்த சகோதரர்கள் இருவர். ஒருவர் எம்.கே. கோவிந்தராஜ பாகவதர் கர்நாடக சங்கீத வித்துவான். இன்னொருவர் எம்.கே.சண்முகம்.


1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய எம்.கே.டி சுமார் 14 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர், அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக வலம் வந்தவை.. 1944 இல் வெளிவந்த இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 வருடம் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட் ஒரே இந்தியப்படம் இதுதான்.






எம்.கே.டி யின் திரைப்பாடல்கள் பெரும்பாலும் இறைப்பற்றுடனும், தென்னிந்திய பாரம்பரிய இசையை சார்ந்தே இருக்கும். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு பாடலெழுதும் ஆஸ்தான பாடலாசிரியரான பாபநாசம் சிவன், இவருக்கென தனித்துவமான பாடல்களை இயற்றுவதில் வல்லவராய் இருந்தார். பாபநாசம் சிவன் இயற்றியப் பல பாடல்கள் எம்.கே.டி யின் புகழை உயர்த்தின, மக்களிடையை பெரும்புகழையும் பெற்றன. அவற்றில் சில,
  • உன்னை அல்லால்,
  • நீலகண்டா,
  • அம்பா(ள்) மனம் கனிந்துருகியுனது கடைக் கண் பா(ர்),
  • சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே(ன்) சுவாமி சுப்ரமணிய(ன்)உனை மறந்தேன்,
  • ஞானக்கண் இருந்திடும் போதினிலே,
  • பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியமின்றி விலங்குகள் போல்,
  • மன்மத லீலையை வென்றார் உண்டோ,
 எம்.கே.டி  பாடல்களை 41/2 கட்டை  சு(ரு)தியில் பாடக்கூடியவர். குரலில் பெண்களின் நளினத்தன்மை மிகுந்திருக்கும் பல நேரங்களில் பெண் பாடுவது போல் தோன்றுவதுண்டு. சு(ரு)தியின் உச்சநிலையிலையிருந்து உடனே கீழே இறங்கிப்பாடும் வல்லமை பெற்றவர். வார்த்தைகளை உடைத்து உடைத்துப் பாடுவதில் வல்லவர். இறுதியில் வல்லினமெய் தெரியாமல் பாடக்கூடியவர்.
அவரின் கர்நாடக இசை சாதகத்துக்குச் சான்றாக தஞ்சை அருகே நடந்த நிகழ்வை  கூறுவர்.


தஞ்சாவூர் அருகே உள்ள மாவூரில் இசைக் கச்சேரி செய்யும் பொழுது இரவு அங்கிருக்கும் அரவை இயந்திர நிறுவனத்தின் வழக்காமான நேரச் சங்கொலி (மாவு மில் சங்கு) முழங்கியது, அந்த இடையூரைப் பொருட்படுத்தாமல் (பாடுவதை நிறுத்தாமால்), அந்த சங்கொலிக்கு நிகராக தன் குரலை இழுத்து (தம் கட்டி பாடுவது) அது முடியும் வரை பாடினார். மக்களின் கவனம் முழுவதும் அசையாமல் அவரின் குரலின் மீதுதான் இருந்தது.


ஹரிதாஸ் படத்தில் வரும் பாடலான மன்மதலீலை என்ற பாடல் சாருகேசிசாருகேசி இசையை கச்சேரியில் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதை பிரபல கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு  கூறுகையில்  ""சாருகேசியை பிரபலமாக அறிமுகப்படுத்தியவர் தியாகராஜ பாகவதர், என்றால் அது மிகையாகாது"" என்று வர்ணிக்கின்றார். அந்த பாடலுக்குப்பிறகே பிற கர்நாடக இசை வித்துவான்கள் ''சாருகேசி''
எனும் பாரம்பரிய இசையில் (கிளாசிக்கல்) பாடப்பட்டது.


அவரின் இசையை செல்வந்தர் முதல் பாமரர்கள் வரை அனைவரும் பாகுபாடின்றி ரசித்தன்ர். அனைவருக்கும் புரியும்படி எளியத் தமிழில் பாடினார்.
அன்றைய காலகட்டத்தில் நாடக மோகம் அதிகமிருந்த காலகட்டமானாதால், திரைப்படத்திற்கு நாடகக்கலைஞர்களையே தேர்வு செய்தனர். நாடகக்கலைஞர்களுக்கு நடிப்புடன் பாடவும் தெரிந்திருக்கவேண்டும் ஆகையால் பாரம்பரிய இசைக்கலைகளை கற்றுத் தேர்ச்சிபெற்றிருந்தனர். பாகவதரும் அவ்வாறு தேர்ச்சிபெற்றவராவார். அவரின் இசைப்புலமைக்கு போட்டி போட்டுக் கொண்டு திரைப்படமெடுக்க பல செல்வந்தர்கள் மதுரை டாக்கிஸ் என்ற குழுஅமைத்து படமெடுக்க முன்வந்தனர். மதுரை செல்வந்தரால் மதுரை டாக்கீஸ் நிறுவனத்தால் எடுத்து திரையிடப்பட்ட சிந்தாமணி படம் அமோக வெற்றிபெற்றதினால் அத்திரையரங்கு சிந்தாமணி திரையரங்கம் என்று பெயர் பெற்று இன்றுவரை அவ்வாறே அழைக்கப்படுகின்றது.


அவரின் சிகையலங்காரம் பாகவதர் சிகையலங்காரம் என்று அனைவராலும் அன்றைய நிலையில் பின்பற்றபட்டு அனைத்து தரப்பினரும் அலங்கரித்து கொண்டனர். இந்த புகழை வெகு விரைவில் அடைந்த அவருக்கு வீழ்ச்சியும் வெகு விரைவில் அவரை சந்தித்தது.


சென்னையில் (அன்றைய மதராஸ்) மிகப் பரப்பரப்பாகப் பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் மற்றும் அவரின் திரையுலக ஆத்ம தோழரான என்.எஸ்.கிருஷ்ணன் உடன் கைது செய்யப்பட்டு 4 வருடம் சிறைத் தண்டனைப் பெற்றார். தண்டனைகாலத்திலேய இவரின் வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டு லண்டன் பிரிவியு கவுன்சிலில் பிரபல வழக்குரைஞர் எத்திராஜ் அவர்களால் இவர்கிளன் இருவருக்காக வாதாடப்பெற்று, 1948 இல் இருவரும் குற்றமற்றவர்கள் என இரண்டு வருட சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். (ஆனால் இந்த குற்ற பாதிப்பு அவரின் செஞ்சை தொடர்ந்து வருத்தி கொண்டிருந்தது உண்மை.)


இருப்பினும் சிறை விடுதலைக்குப்பின் அவர் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.


சிறைக்குப்பின் பலர் படமெடுக்க முன்வந்தாலும் பாகவதர் அவற்றை ஒதுக்கித் தள்ளினார். அவரின் கஷ்ட காலத்தில் உதவாத திரைப்படத்துறையை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தார். அதன் பின் சொந்தப் படங்கள் எடுத்து தோல்வியைத் தழுவினார். அதன் பின் மேடைக் கச்சேரிகளை மட்டும் பண்ணிக் கொண்டு வந்தார். அதிலும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறமுடியவில்லை. காரணம் கர்நாடக இசைக்கச்சேரிகள் ஒரு சாதிப் பிரிவினரின் கையிலிருந்ததை அவர் உணர்ந்திருந்தார். தெலுங்கு கீர்த்தனைகள் பாடுபவர்கள் மத்தியில் தமிழிசைப் பாடல்கள் மட்டுமே பாடுவேன் என்று கடைசிவரை நிருபித்தவரும் அவர்தான். ஆகையால் இவருக்காக சபாக்களை ஒதுக்க யாரும் முன் வரவில்லை. இவர்கள் ஒதுக்கினால் என்ன? ஒதுக்கா விட்டால் என்ன? தான் ஒரு மக்கள் கலைஞன் என்று மக்களுக்காக பாடுவதை தொடர்ந்து கொண்டிருந்தார்.


 அன்றைய காலகட்டத்தில் இவரின் கச்சேரிகளை காண மக்கள் மின்சாரக் கம்பத்தில் ஏறி நின்று கொண்டு கேட்டனர். அம்மாதிரி சமயத்திலே ஒரு சிறுவன் மின்சாரம் தாக்கி மரணமடைந்த சம்பவங்களும் நிகழ்ந்த்து  உண்டு. பாகவதர் அச்சிறுவனின் குடும்பத்துக்கு பின் 5000 ரூபாய் நிதியுதவி அளித்தார். இது அன்றைய நாட்களில் மிக்பெரியத் தொகை.


ஒருமுறை திருச்சிக்கு காரில் பயணமான பொழுது இவரின் கார் புதுக்கோட்டை வழியாக தொடர் வண்டி பாதையைக் கடக்க முற்படுகையில் அளவுக்கதிமான  கூட்டம் இவரின் காரை கடக்க விடாமல் சூழ்ந்து கொண்டது. ரயில் வண்டியின் கார்ட் இதையறிந்து வண்டியை நிறுத்திவிட்டு பாகவதரை பாட வற்புறுத்தினார். பாகவதர் வேறுவழியின்றி அங்கு பாடிய பிறகு தான் தொடர் வண்டி அங்கிருந்து நகர்ந்தது. அந்தளவுக்கு இவரின் மீதும், இவர் இசையின் மீதும், மோகம் கொண்டவர்கள் இருந்தனர்.




இவரின் ரசிகராகவும் நண்பராகவும் விளங்கிய மதுரை டி.பி சொக்கலால் பீடி அதிபர் ஹரிராம் சேட் இவருக்கு மிக உயர்ந்த பாண்டாக் கார் பரிசளித்தார். இவரின் ரசிகராக வீட்டை விட்டு ஒடி வந்த கோபால்,  ரசிகரானப் பிறகு எம்.கே.டி கோபால் எனப் பெயர் மாற்றிக்கொண்டு எம்.கே.டி யின் ஆத்ம நண்பனாக மாறினார். ஒரு முறை எம் கே டி யின் வைர மோதிரம் கிணற்றில் விழுந்ததை அனைவரும் திடுக்கிட்டு நிற்கையில் அக்கிணற்றில் யாரும் எதிர்பாராத வகையில், உயிரைப் பற்றிக் கவலைப்படாமல்  குதித்து அம்மோதிரத்தை கண்டு பிடித்து கொடுத்தார், அது முதல் ஆத்ம ரசிகனாகவும், நண்பனாகவும் எம்.கே.டி யுடனே இருந்துவரலானார்.




பலருக்கு உதவி செய்வதில் பாகவதர் தயாள குணம் கொண்டவர். சேமிப்பு குணம் அற்றவுர். படங்களில் இருந்து ஒய்வு பெற்ற சமயத்தில் தன்னையே நம்பி இருந்த பாடலாசிரியர் பாபநாசம் சிவனுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கலை உணர்ந்து, அவர் கேட்காமலேயே தான் சாப்பிடுவதற்கும், விருந்தினர்களை உபசரிக்கவும் பயன்படுத்தும் தங்கதட்டையே கொடுத்துதவியவர். தனது வழக்கை சிக்கலின்றி முடித்து வைத்த வழக்குரைஞர் எத்திராஜிக்கு ஒரு தங்கத்தட்டை அளித்து பெருமைப்படுத்தியவர். இப்படி உதவிய பாகவதர் குடும்பம் மிகப் பெரிய பொருளாதார இக்கட்டையும் சந்தித்தது.  இன்றைய பல ஜாம்பவானகள் அனைவரும் வந்து காத்திருந்த அவரது வீட்டில் வறுமைத் தாண்டவமாடியது. பாகவதரின் கடைசி காலம் மிகவும் சோகமயமானது. வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். மருத்துவத்திற்காக கூட யாருடைய தயவையும் அவர் நாடவில்லை. பலத் திரைக்கலைஞர்கள் விழா எடுத்து நிதி திரட்டும் ஆலோசனையைக் கூறியும் அதை ஏற்க மறுத்து விட்டார்.


சிவகாமி படத்தின இறுதி காட்சிகள் கோயில்களில் எடுக்கப்பட்டது. அக்காட்சிகளின் பொழுதே அவர் அதிக நலிவடைந்திருந்தார். அவரின் காடசிகளுக்கு வாயசைக்க முடியா நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார். கண்கள் பழுதடைந்த நிலையில் காட்சிகளில் நடிக்க தடுமாறினார். . சிந்தாமணியில் பாடிய இப்பாடலே அவர் வாழ்க்கையின் இறுதி நிலையாயிற்று.


........"""ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே (பொழுதினிலே), ஊனக்கண் இழந்ததால் உலகிற்குறையுமுண்டோ"""........


என்று அவர் அப்படத்தில் பார்வையிழந்த நிலையில் பாடிய நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார்.


 இறுதியில் நவம்பர் 1, 1959, ஈரல் நோயினால் பாதிப்படைந்தவராக  சென்னை பொதுமருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் அங்கு காலமானார்.


மிகவும் செல்வச் செழிப்புட்ன வாழ்ந்த அவரது குடும்பம் அவரது மறைவுக்குப்பின் இன்னும் மிகுந்த வறுமையை அடைந்தது. மகள் மற்றும் மகன்களையும் இழந்த அவரது மனைவி (இரண்டாவது மனைவி) தனது மூன்று பேரன்களுடன் வறுமையை சந்தித்தார். சமீபத்தில் தான் அந்த வறுமை சற்று சீரடைந்தது. அவர் வாழ்க்கை சில நல்ல திரைக்கலைஞர்களின் உதவியாலும், அரசின் உதவியாலும் சற்று சீரடைந்தது. ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர்  ஜானகி இவர்களை வைத்து சொந்த படம் எடுத்த குடும்பம் மிகவும் தள்ளாட்டம் கண்டு 1999 இல் சற்று வறுமையிலிருந்து மீண்டது.


இன்றும் அவரின் திரைப்பாடல்களைக் கேட்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில், இவருக்கு  ரசிகர்கள் இன்றளவிலும் உள்ளனர்.. இவருக்கென தனி ரசிகர் மன்றமும் அங்கு உள்ளது, என்பது இவரின் மங்காதப் புகழுக்கு சான்று.




அவர் நடித்த கடைசி திரைப்படம் சிவகாமி


  1. பவளக்கொடி (1934)
  2. சாரங்கதா (1935)
  3. சத்தியசீலன் (1936)
  4. சிந்தாமணி (1937)
  5. அம்பிகாபதி (1937)
  6. திருநீலகண்டர் (1939)
  7. அசோக்குமார் (1941)
  8. சிவகவி (1943)
  9. ஹரிதாஸ் (1944)
  10. ராஜமுக்தி (1948)
  11. அமரகவி (1952)
  12. சியாமளா (1952)
  13. புதுவாழ்வு (1957)
  14. சிவகாமி (1959)


திரையில் முடிசூடா மன்னனாக வெகு விரைவிலேயே விளங்கிய ஒரு சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை  வெகு விரையிலேயே வீழ்ந்தாலும், அவரின் குறைந்த சாகசங்களே இன்று அவரின் புகழ் பாடிக்கொண்டிருக்கின்றன. கலைஞன் விமர்சனங்களையும் தாண்டியவன் என்பதை பலரும் இன்றளவில் மறந்துவிட்ட நிலையில், அன்றைய மௌடிகமான காலத்தில் மறந்திருந்தது பெரிய விஷயமில்லை. இல்லாவிட்டால் லட்சுமி காந்தன் என்ற விமர்சகருக்காக இந்த சீரழிவு விளைந்திருக்காது. இது நிகழ்ந்திராவிட்டால் அவரின் சாதனைகளை இந்த உலகம் இன்னும் கண்டிருக்கும் வாய்ப்பை பெற்றிருக்கும். இருப்பினும் இன்றும் மறவாத அவரின் ரசிகர்கள் இருக்கின்றனர், அவர்களின் வாழ்த்துக்கள் அவர்களின் குடும்பத்தாரை சீரும் சிறப்புமாக வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்காக அரசின் முயற்சியும், திரைத்துறையினரின் முயற்சியும் சேர்ந்த உதவிகள் கிடைத்திருக்கின்றது. இது அவரின் ரசிகர்களின் முயற்சியினால் மட்டுமே விளைந்திருக்கும் என நம்புவோமாக.


இது இந்த இணையதளத்தின் மூலமாக உறுதிப்படுகின்றது.
 எம்.மே.டி யின் வாழ்க்கைத் துணைவியார் பேட்டி

மேலும் விரிவான தகவலுக்கு http://www.lakshmansruthi.com/mkthyagarajabagavadhar/index.asp


பாகவதர் பாடல்கள் தரவிறக்க மற்றும் கேட்கhttp://www.lakshmansruthi.com/mkthyagarajabagavadhar/song.asp#


மற்றொரு தளம் பாகவதர் பாடல்கள் கேட்கhttp://raja1630.tripod.com/mktb/id18.html


Saturday, 2 January 2010

மோனலிசாவை வைத்து ,,,,,,, எடை போடாதீர்கள்.....!




 1452 முதல் 1519 வரையுள்ள இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த லியனார்டோ டாவின்சி என்ற இத்தாலிய ஒவியவர் உலகப் புகழ் பெற்ற ஒவியமான மோனலிசாவை வரைந்தவர், அவரின் இன்னும் பிற ஒவியங்களும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு வழி கோலின என்பதும் தெரியும். இத்தாலிய ராணுவத்தில் பணி புரிந்த அவர், பல ராணுவத் தளவாடங்களையும், அவற்றில் பல பேரழிவு ஆயுதங்களாகவும் வரைந்திருந்தார்.

அந்த ஆயுதங்கள் வடிவமைக்கப்பட்டதாக தகவல்கள் ஏதும் இல்லை, அப்படிப்பட்ட ஆயுதங்கள் இதுவரை கிடைக்கப்பெற்வில்லை. அந்த ஆயுதங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம். ஏனென்றால் இவையெல்லாம் லியோனார்டோ பிறப்பிற்கு முன்பே இந்த ஆயுதங்கள் உருவாக்கப் பட்டிருக்கவேண்டும் என்றும் கணிக்கின்றனர். அதாவது சுமார் 1800 வருடங்களுக்கு முன்பே இந்த ஆயுதங்களை பயன்படுத்தியிருக்க வேண்டும். ஒரு வேளை இதையெல்லாம் அப்போதே வடிவமைத்திருந்தால், அது மிகப்பெரிய பேரழிவை விளைவித்திருக்கும், விளைவித்திருக்க வேண்டும் என்பது சற்று சங்கடத்துடன் ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மை. அவரின் ராணுவ யுக்திகள் அன்றைய ராணுவத்திற்கும் பயன்பட்டிருக்கின்றது, அவரின் வரைபட குறிப்புகளின்படி ராணுவம் இயக்கப்பட்டிருக்கிறது என்பதை வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மிக சாந்தமான, மௌனப் புன்னகையை வெளிப்படுத்தும்  வரைபடமான மோனலிசாவை உருவாக்கிய டாவின்சி, மிக ஆபத்தான ஆயுதங்களையும் வடிமைத்திருந்தார் என்பதும், இது  அவரின், மனநிலையும் ஆராய்கின்ற சர்ச்சைகளையும் உருவாக்கியது. அவரின் அமைதியான மனத்தின் அடியில் இந்த மூர்க்க குணமும் மறைந்திருநதது என்ற வாதத்தை முன் வைப்பவர்களும் உண்டு. தன் குருவையும் மிஞ்சிய சீடராகவும் இருந்தார் என அவரை வர்ணிப்பதுண்டு. இத்தனைக்கும் அவர் காலத்தில் இம்மாதரி அறிவியல் கல்விகள் என்று தனியாக இல்லை.

இவரின் வரைபடங்களை ஆராய்வதற்காக அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் ஏற்படுத்தபெற்ற லியோனார்டோ தொழிற்கூடம் (Leonardo Davinci's workshop) , அவரின் வரைபடங்களை கொண்டு அந்த கருவிகளை தயாரித்து ஆராய முற்பட்டது. அதன் தலைவரான ஜோனாதன் பெவ்னர் (Dr.Jonathan Pevsner) தன் குழுவினருடன் சேர்ந்து பல ராணுவ தளவாடங்களையும் தயாரித்து சோதனை செய்து உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

அதில் ஒன்று தான் 33 துப்பாக்கி குழல் கொண்ட பீரங்கி (இதை ஆர்கனன்ஸ் மஸ்கட் மெசின் கன் என்றும் அழைப்பர்,33 barrel canon or 33 barrel machine gun) இதை முக்கோண வடிவில் மூன்று அடுக்குகளாக, ஒரு அடுக்கிற்கு 11 துப்பாக்கி குழல்கள் (11 barrel) வீதம் வடிமைத்திருந்தார். இதை ஒவ்வொரு முறை சுழற்றி 11 வெடிப்புகளை ஒரே நேரத்தில் வெடிக்கச் செய்யும் வகையில் இந்த வடிமைப்பு இருந்தது. லியோனார்டோவின் ஒவியத்தை அப்படியே கணிணி தொழில்நுட்பத்தின் கீழ், இதன் அளவீடுகளை கணித்து, அந்த அளவீடுகளின் படி பீரங்கியை இக்குழுவினர் புதிதாக, முழுவதுமாக வடிவமைத்தனர்.


இதில் பயன்படுத்துவதற்கான குண்டுகள் ஒவ்வொன்றும் இரண்டரை கிலோ எடை கொண்ட குண்டுகளாக இருந்தது. வெடிக்கும் பொழுது பீரங்கி வண்டி பின்னோக்கி நகரும் கணக்கையும் (Recoil velocity) துல்லியமாக கணக்கிட்டு வடிமைத்திருந்தனர். பீரங்கி ஒரு முறை வெடித்தவுடன், அந்த குழாய்களில்  வெப்பம் அதிகமாக இருக்கும். வெப்பமடைதலால் பொருள்களும் விரிவடையும் என்ற இயற்பியல் கோட்பாட்டை கணக்கிட்டுத்தான் அவர் இந்த மூன்றடுக்கு முறையில், ஒரு பக்க அடுக்கு வெடித்தவுடன் அடுத்த அடுக்கு பக்கத்தை சுழற்றி அதில் குண்டுகளை நிரப்பி வெடிப்பதற்காக இந்த வடிவமைப்பை வரைந்திருப்பார் என அறிந்து கொள்ள முடிகின்றது.


அதே போன்று வெப்பமடைந்திருக்கும் குழலில் மீண்டும் வெடிமருந்து நிரப்பும் போது தவறுதாலாக வெடிப்பதற்கான (misfire) வாய்ப்பு அதிகமிருப்பதை உணர்ந்து இந்த மூன்றடுக்கு சுழற்சி (3 tires) முறையில் இதை எச்சரிக்கையாக அப்போதே வடிவமைத்திருக்கிறார் என்பது ஆச்சர்யமூட்டும் விஷயமாகும்.சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இயற்பியல் யுக்தியை கண்க்கிலெடுத்து கொண்டு வடிவமைத்திருக்கிறார் என்பதை நம்மால் அறியமுடிகிறது.

 இதை வரைந்திருக்கும் ஒவியங்களை வைத்து  காலத்தை கணக்கிடும் பொழுது சுமார் கிபி 1482 ஆம் ஆண்டு வாக்கில் இது வரையப்பட்டிருக்கும் எனக் கணக்கிடப்படுகின்றது. அப்போது அவருக்கு 30 வயதிருந்திருக்கலாம்.   அன்றைய காலகட்டத்திலேயே விஞ்ஞானம் எந்தளவுக்கு வளர்ந்திருந்தது என்பதை அனவராலும் யூகிக்க முடிகின்றது. ஆனால் இவைகள் எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளின் வரைபடங்கள் தான் என்று கூறும் போது இன்னும் அதிக ஆச்சர்யமே ஏற்படுகின்றது.


இந்த ஆயுத வரைபடத்தை கொண்டு இன்றைய காலகட்டத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த பீரங்கியை சோதனை செய்த போது, அது கணகச்சிதமாக வேலை செய்ததது. சரியான இலக்குகளை துல்லியமாக, பலமுடன் 11 குண்டுகளும் சென்று தாக்கியது. இதன் மூலம் அது மிகப்பெரிய பேரழிவு ஆயுதம் எனபதையும் நிருபித்தது. இதன் பின்னோக்கி நகரும் விசையையும் (Recoil velocity) அதிகளவில் இல்லாமல் இருந்தது.

இன்றையளவில் அந்த பீரங்கியை பயன்படுத்தினாலும் பேராபத்துதான், இதன்மூலம் ஒரு அமைதியானவரிடத்தில் பேராபத்தான விஷயங்களும் மறைந்திருக்கும், பல அரிய கண்டுபிடிப்புக்கான தாக்கங்களும் இருக்கும் என்ற உண்மையும் வெளிப்படுகின்றது. (ஆகையால் தான் சாதுமிரண்டால்...காடு கொள்ளாது எனக் கூறுகின்றார்களோ?) எது எப்படியிருந்தாலும் பல்கலைக்கழகங்கள் இல்லாத காலத்தில், அது என்ன என்று தெரியாத காலத்தவரான டாவின்சி வரைந்த வரைபடங்கள் இன்றைய பல்கலைக்கழகங்களின் அறிவியல் வளர்ச்சிக்கும், பி.டெக், பி.இ  பட்டதாரிகளுக்கும், முனைவர்களுக்கும், அவர்களின் ஆய்வுகளுக்கும் இந்த வரைபடங்கள் துணை புரிகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. ஏன்? இன்றைய ராணுவத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுகின்றது.


நன்றி டிஸ்கவரி சேனல்.