Pages

Friday, 22 January 2010

பேசும் கலை வளர்ப்போம் -11





  பேசும் கலை வளர்ப்போம்-11
 
  "சொல்லும் கருத்துக்கள் தெளிவாக அழகான சொற்களில் தர்க்கமுறைக்கு மாறுபடாது அனுபவத்துடன் எடுத்துக்காட்டுகளோடு கேட்பவர் உள்ளத்தில் ஊடுருவுமாறு, உணர்ச்சி தோன்ற, 'உண்மைதான் சொல்வது' என்று கேட்பவர் உணரும்படி பேச்சு அமைந்திருக்கவேண்டும். இப்படியிருப்பதுதான் சிறந்த பேச்சு. இதுதான் பேச்சின் இலக்கணமுமாகும்'.
    என்று பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் அவர்கள் அழகுபடக் குறிப்பிடுவார்.
     'பேச்சு என்பது ஒரு கலை; பேராற்றல் வாய்ந்தது முத்தொழில் புரியும் வல்லமை வாய்ந்தது. பேச்சைக் கலையாக்குவது அறிவுடைமை. மேடைப் பேச்சு நாட்டை வளப்படுத்தும்; வாக்காளரைப் பண்படுத்தும்; சட்டசபையைச் சீர்செய்யும்; நல்லமைச்சு அமைக்கும்.'
     என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க. பொழிந்துள்ளார்.
     மேடைப் பேச்சாளர் இவற்றையெல்லாம் காணமுடியும் என்பதற்குப் பதிலாக இவற்றையெல்லாம் காணத்தக்க அளவுக்கு மேடைப் பேச்சு அமையவேண்டும் என்பதைத்தான் திரு.வி.க அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள் என்பதை மறந்துவிடலாகாது.
     மாலையில் இசை நிகழ்ச்சியென்றால் காலையில் ஒரு முறை இசைவாணன், தன் குழுவினருடன் இல்லத்திலோ, அல்லது தங்கியிருக்கும் விடுதியிலோ எல்லாவற்றையும்  சரிபார்த்துக் கொள்கிறான்.
    இரவு நாடகமெனில் , பல இடங்களில் நடைபெற்றுப் பழகிப்போன காட்சிகள் என்றாலுங்கூட, காலையிலோ மாலையிலோ நடிகர்கள் தங்களது முக்கிய வசனங்களை உரக்க உச்சரித்துப் பார்த்துக் கொள்கிறார்கள்.
     அதைப்போலவே பேச்சாளர்களும் தாங்கள் பேசப் போகும் கருத்துக்களை மேடைக்குப் போவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை வரிசைப்படுத்தி, எண்ணிப் பார்த்து அதன்பிறகு மேடையேறினால், நல்ல சொற்பொழிவாளர் என்ற வெற்றி முகட்டை விரைவில் அடையலாம்.
     பேச்சுத்திறன் ஓரளவு பெற்றவர்கூட அவசரத்திலும், ஆத்திரத்திலும், நிதானமிழந்து பரபரப்புக்கு ஆட்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சொல்லக் கூடாததைச் சொல்லி பின்னர் வருந்துவதுண்டு.
     பல ஆண்டுகளுக்கு முன்பு  நாகர்கோயிலில் தி.மு.கழக மாவட்ட மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டை இன்றைய தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் நாஞ்சிலாரும் நண்பர் ஜாண் என்பவரும் முன்னின்று நடத்தினார்கள். அந்த மாநாட்டில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பேச்சாளர் பேசினார். அவர் இப்போது கழகத்தில் இல்லை. வேறு கட்சியில் இருப்பதாகக் கேள்வி.
     நாட்டில் ஏற்பட்டிருந்த வறுமை நிலையைக் குறிக்க அவர் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கூறுவதுண்டு. ''திண்டுக்கல்லிலேயிருந்த மதிப்பிற்குரிய எட்டு தோழர்கள் கத்தாழைக் கிழங்குகளைச்சாப்பிட்டுச் செத்துவிட்டார்கள்' என்ற செய்தியை; நான் எழுதியுள்ள இதே வாக்கிய அமைப்பில் பல கூட்டங்களில் அவர் பேசியிருக்கிறார். ஆனால் அன்று நாகர்கோயில் மாநாட்டில் பேசும்போது, 'திண்டுக்கல்லிலேயிருந்த எட்டு தோழர்கள், மதிப்புக்குரிய கத்தாழைக் கிழங்குகளைச் சாப்பிட்டுச் செத்துவிட்டார்கள்' என்று பேசிவிட்டார். மதிப்பிற்குரிய தோழர்களுக்குப் பதிலாக மதிப்புக்குரிய கத்தாழைக் கிழங்குகள் என்று 'சொல்' இடம் மாறிவிட்டது! அவசரப்பட்டுப் பேசுவதால் வருகிற வினை!
     அதே மாநாட்டில் இன்னொருவர்! கவித்துவம் கொண்டவர்! அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்த இலக்கியப் பேச்சாளர் ஒருவரைக் கேலி செய்வதாக நினைத்துக்கொண்டு, தானே அந்தக் கூட்டத்தில் கேலிக்குரியவரானார்.
    ;அந்தக் கங்கிரஸ் இலக்கியப் பேச்சாளர், சீதையை மணக்க இராமன் அயோத்தியாபுரியில் ஜனகனின் வில்லைமுறித்தான் என்று பேசினார்! பாவம்; அந்த இலக்கியப் புலிக்கு, ஜனகனின் தலைநகரம் அயோத்தியாபுரியா? அஸ்தினாபுரியா? என்று கூடத் தெரியவில்லை!'
     என்று ஏளனம் செய்தார்! மேடையிலிருந்த அண்ணா, நான் பேராசிரியர், நாவலர், சம்பத், நாஞ்சிலார் அனைவரும் சிரித்துவிட்டோம்.அதற்குள் நண்பர் ஆசைத்தம்பி குறுக்கிட்டு, 'யோவ்! ஜனகன் தலைநகரம் மிதிலாபுரி அய்யா!' என்று திருத்தினார். அத்துடன் விட்டாரா அந்தப் பேச்சாளர்? 'மன்னிக்கவும்! நான் இராமாயன ஞாபகத்தில் தவறாகக் கூறிவிட்டேன்' என்று மக்களை நோக்கிச் சொன்னார்! மாநாட்டுப் பந்தல் சிரிப்பொலியால் அதிர்ந்தது!
     நினைவு இழையில் வார்த்தை முத்துக்குளைக் கோப்பதற்கேற்ற நிதானத்தன்மை பேச்சாளர்களுக்கு மிக அவசியம்.
     ஆங்கிலப் பேரறிவாளர் அடிசன் பதினெட்டாம் நூற்றாண்டில் புகழேணியில் இருந்தவர். அவர் ஒருமுறை பேசமுற்பட்டு ' I conceive, conceive, conceive" என்று மூன்றுமுறை மூச்சுத்திணறக் கூறிக்கொண்டே நின்றாராம்! 'கன்சீவ்' என்பதற்கு 'நினைக்கிறேன்' என்றும் பொருள் உண்டு! ' கருவுற்றிருக்கிறேன்' என்றும் பொருள் உண்டு!
     அடிசன் இப்படி திணறிக் கொண்டிருந்தபோது, எதிரேயிருந்த ஒருவர் எழுந்து'அடிசன் மூன்றுமுறை கருவுற்றார்!  ஆனால், குழந்தையைத்தான் பெறவில்லை' என நகைச்சுவை பொங்கிடக் கூறினாராம்.
     ஆங்கில நாட்டுப் பெரும் பேச்சாளரான டிசரலி, முதன் முதலில் பாராளுமன்றத்தில் பேச அஞ்சி நடுங்கினாராம். ' நான் படைக்குத் தலைமையேற்றுப் போர்க்களம் நோக்கிச்செல்ல அஞ்சிடமாட்டேன்; ஆனால் முதன்முதல் பாராளுமன்றத்தில் பேசத் தொடங்கி நான் பெரிதும் நடுங்கினேன்' என்று கூறினாராம்! அப்படித் தோல்வி மனப்பான்மையுடன் பேச்சாளராகத் தொடங்கி, பின்னர் அவரே மனதைத் திடப்படுத்திக் கொண்டு, அச்சத்தை விரட்டி, அதற்குப் பிறகு பெரும் பேச்சாளர் என்ற கீர்த்திக் கொடியை நாட்டினார்.

-கலைஞர் மு. கருணாநிதி


-,,,இன்னும் வரும்-12

Thursday, 21 January 2010

பேசும் கலை வளர்ப்போம் -10

  


பேசும் கலை வளர்ப்போம் -10    

பேசும் பொருளில் கவனம் செலுத்துவதைப்போல- பேசும் பாணியில் கவனம் செலுத்துவதைப் போல, ஒரு பேச்சாளர் உச்சரிக்கும் சொற்களும் பிழையின்றி அமைய வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
     ''ல'', ''ள'', இரண்டும் இடையினம்தான் என்பதற்காக ''அவர்கள் என்ன சொன்னார்கள்?'' என்று ஆவேசமாகக் கேட்கும் கட்டத்தில் ''அவர்கல் என்ன சொன்னார்கல்?'' என்று எவ்வளவு ஆவேசமாகக் கேட்டாலும், அது மக்கள் மத்தியில் 'அபஸ்வரமாக' ஒலிக்கும். இப்படி ''லகர'' ''வகர'' த்தை இடம்மாற்றிப் போட்டுப் பேசுகின்ற சொற்பொழிவாளர்கள் பலர் இருக்கிறார்கள்.
     '' கன்னனைக் காணச் சென்ற குசேளன், கையில் அவள் கொண்டு சென்றான்.''
     ''ல'' கரத்தை ''ள''கராமாகவும்! ''ள'' கரத்தை ''ல''கரமாகவும் ''ன''கரத்தை ''ண''கரமாகவும் ''ண''கரத்தை ''ன'' கரமாகவும் மாற்றி உச்சரிக்கும் பெரும் பிழையினைத் திருத்திக் கொள்ளப் பேச்சாளர்கள் முன்வரவேண்டும். திக்குவாய் படைத்தவர்கள், தங்களின் அயராத முயற்சியால் நல்ல கருத்துக்களை ஒழுங்குபட எடுத்துச் சொல்லுகிற ஆற்றலைப் பெற்றிருப்பதைக்காண முடிகிறதல்லவா? அதனால் உச்சரிப்புப் பிழைகளைத் திருத்திக் கொள்கிற அளவுக்குப் பேச்சாளர்கள் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டால் வெற்றிகிட்டாமற் போகாது!
     ஒருசில பேச்சாளர்கள் தாங்கள் சொல்ல விரும்புகிற விஷயங்களை அழுத்தம் திருத்தமாகச் சொல்வதாக எண்ணிக் கொண்டு ஒரு  பெரும் தவறு செய்கிறார்கள்.
     'நமது மொழியைப் பற்றிச்சொல்ல வேண்டுமென்றுச் சொன்னால், நமது நாடி நரம்புகளில் எல்லாம் சூடும் சுவையும் ஏறுகிறது.''
     இதில் 'பற்றிச்' என்பதில் ''ச்'' என்ற எழுத்தைத் தேவைக்கு அதிகமாக அழுத்துவார்கள். ''சொல்ல வேண்டுமென்றுச் சொன்னால்'' என்று தேவையில்லாமல் ''ச்'' என்ற எழுத்தைப் பேசும்போது பயன்படுத்துவார்கள். ''நாடி நரம்பு'' என்பதை ''நாடி நறம்பு'' என்று பல்லைக் கடித்துக்கொண்டு உச்சரித்து ''நறம்புகளில்'' என்று அழுத்திக் கூறுவார்கள்.இவையனைத்தும் குறையுடைய சொற்பொழிவுகளேயாகும்.
     ஒரு வேடிக்கை நிகழ்ச்சியைக் குறிப்பிட்ட விரும்புகிறேன். 1957-ல் குளித்தலைத் தொகுதியில் வெற்றிபெற்று சட்டப்பேரவையில் அறிஞர் அண்ணா தலைமையில் ஒரு உறுப்பினராக அமர்ந்திருக்கிற காலம்! சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் அவையின் மரபுக்குப் புறம்பான சொற்களைப் பயன்படுத்தினால், அதைச் சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல மற்றொரு உறுப்பினர் ஒழுங்குப் பிரச்சனையெழுப்பி சுட்டிக்காட்டலாம். அது ஒழுங்கு பிரச்சனையா-அல்லவா என்பதைச் சபாநாயகர் தீர்மானித்து, மரபுக்கு மாறாகப்பேசிய உறுப்பினருக்கு அறிவுரை கூறுவார். அல்லது அந்தக் கருத்துக்களை சட்டமன்ற நடவடிக்கைக் குறிப்பிலிருந்து நீக்கிவிட உத்தரவிடுவார்.
     1957-காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும்  கடும் மோதல் இருந்த காலம். காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் தி.மு.கழகத்தைச் சட்டசபையில் மிக வேகமாகக் கண்டித்துப் பேசக்கூடியவர். எனக்கு அவர்மீது மிகுந்த கோபம் உண்டு. தனிப்பட்ட முறையிலே அல்ல! அவர் பேசுகிற முறையிலேதான்! ஒருநாள் அவரைச் சபையில் சிக்க வைக்கவேண்டுமென்று காத்துக் கொண்டேயிருந்தேன். அவர் பேசுவதற்கு அழைக்கப்பட்டார். அவருக்கு இந்த லகர-ளகரப் பிரச்சனைதான்.
     ''தி.மு.கழகத்தை எடுத்துக் கொல்லுங்கள்! அவர்கள் பேசுவதை எடுத்துக்கொல்லுங்கள்! உதாரணத்திற்கு திருவல்லுவரை எடுத்துக் கொல்லுங்கள்!''
   இப்படிப் பேசிக்கொண்டேயிருந்தார்! நான் உடனே குறுக்கிட்டு, ''தலைவர் அவர்களே! ஒருபாய்ண்ட் ஆப் ஆர்டர்!'' என்றேன். அப்போது சபாநாயகர் டாக்டர் கிருஷ்ணாராவ்! தங்கமான மனிதர்! மழலைத் தமிழ் பேசக்கூடியவர்! ''என்ன பாய்ண்ட் ஆப் ஆர்டர்?'' என்றார்.
     பேசுகிற உறுப்பினர்..........கொல்லுங்கள்! கொல்லுங்கள்! என்று பலாத்காரமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறாரே! அது சரியா?''
     என்று கேட்டுவிட்டு உட்கார்ந்தேன். உடனே சபாநாயகர் கிருஷ்ணாராவ் அந்த உறுப்பினரைப் பார்த்து ''மிஸ்டர்..........அவர்களே! ....பலாத்காரமாகப் பேசாதீர்கள்'' என்று எச்சரிக்கை செய்தார்! என் எதிரே அமர்ந்திருந்த அமைச்சர்கள் உட்பட அனைவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள். அந்த உறுப்பினருக்குத் தாங்கமுடியாத வெட்கம்! எனக்குப் பெரிய வெற்றி என்று எண்ணிக்கொண்டேன்.


   தமிழின் தனிச் சிறப்பு வாய்ந்த ''ழ''கரமும் சில பேச்சாளர்களின் வாயில் சிக்கிப் படாத பாடுபடுகிறது!
     தமிழையே ''தமிஷ்'' என்றுகூட உச்சரிக்கிறார்கள். ''வாழு! வாழவிடு'' என்று சொல்லக் கருதி; ''வாலை! வாலைவிடு! என்று  சொல்லுகிறார்கள்.


    சித்திரமும் கைப்பழக்கம்-செந்தமிழும் நாப்பழக்கம் என்பதற்கேற்ப முயற்சி எடுத்து, அத்தகைய தவறான உச்சரிப்புக்களை நீக்கிக்கொள்ள முடியும். பேச்சாளராகப் பெயர் எடுக்க விரும்புவோர் உச்சரிப்பில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

-கலைஞர் மு. கருணாநிதி


-இன்னும் வரும்-11

Wednesday, 20 January 2010

பேசும் கலை வளர்ப்போம்- 9





 பேசும் கலை வளர்ப்போம்-9

     சென்னை புரசைவாக்கத்தில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொதுக்கூட்டம். நானும் பேராசிரியர் அன்பழகனார் அவர்களும் கலந்துகொண்டோம்.  பேராசிரியர் பேச எழுந்தபோது அவரிடம் ஒரு பெண்மணி கைக்குழந்தையொன்றைத் தந்து , பெயர் சூட்டும்படிக் கேட்டுக்கொண்டார். அது பெண் குழந்தை! பேராசிரியர் அதற்குக் ''கருணாநிதி'' என்று பெயர் சூட்டினார்.  கருணாநிதி என்ற பெயர் எல்லா மதத்தினருக்கும், ஆடவர்-பெண்டிர் இருபாலருக்கும் பொருந்துகிற பெயர்!
     ஒரு காலத்தில் ஜெயங்கொண்ட சோழபுரம் பகுதியில் திராவிடர் இயக்கம் வளர்ந்த திரு. பாஸ்கரன் அவர்களின் துணைவியார் பெயர்கூட கருணாநிதிதான்! ''கருணை-நிதி'' அதாவது அருட்கருவூலம்-அல்லது அருட்செல்வம்-இப்பெயர் எம்மதத்திற்கும்-ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தக் கூடியதுதானே-அதனால் பேராசிரியர் சிரித்துக்கொண்டே, அந்தப்பெண் குழந்தைக்கு 'கருணாநிதி' என்று பெயர் வைத்ததும் கூட்டத்தில் குபீர் சிரிப்பு!
     பின்னர் அவர் பேசி முடித்தார். நான் பேச எழுந்தேன்.என்னிடமும்  ஒரு தாய் தன்னுடைய பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு வந்து பெயர் சூட்டுமாறு கேட்டார். நான் அந்தக் குழந்தைக்கு ''அன்பழகி'' என்று பெயர் வைத்து-பேராசிரியர் மீது எனக்கிருந்த செல்லக் கோபத்தைத் தணித்துக் கொண்டேன்.
     ஒரு பேச்சாளர் கூட்டங்களில் தூக்கிக்கொண்டு வருவார்! பெயர் வையுங்கள் என்பார்! இன்னாருடைய குழந்தைக்கு இன்ன பெயர் சூட்டப்படுகிறது என்று ஒலிபெருக்கியில் சொல்வதற்காக அவரைப் பார்த்துக் குழந்தையின் தகப்பனார் பெயர் என்னவென்று கேட்போம்! உடனே அவர் ''நான்தான்'' என்பார். பரபரப்பில் பெயரைச் சொல்லத்திணறுவார். பிறகு ஒரு வழியாகத் தன் பெயரைக் கூறுவார். அவரது பெயர் அப்துல் ரகுமான் என்று இருக்கும்.
     அந்தக் குழந்தைக்கு என்ன பெயரை அவர் விரும்புகிறார்-இஸ்லாம் மார்க்கத்துக்கேற்ற பெயரையே விரும்புகிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆம் என்றால் ஷாஜகான்-ஜகாங்கீர்-இக்பால்-என்பன போன்ற பெயர்களில் ஒன்றை ஆண் குழந்தைக்கும், நூர்ஜகான், மும்தாஜ், கதீஜா போன்ற பெயர்களில் ஒன்றை பெண் குழந்தைக்கும் சூட்ட வேண்டும். அந்தப் பெயர்களைக் கேட்டுப் பெற்றோரும் அவர்கள் உற்றாரும் மகிழ்ச்சி அடைவர்!
     பொதுவான பெயர்களைச் சூட்டுவதெனில் கதிரவன், கதிரொளி, அன்புமணி, அறிவுமணி, கணிமொழி, கயல்விழி, எழிலரசி என்பன போன்ற எல்லா மதத்தினருக்கும் பொருந்தக்கூடிய பெயர்களைச் சூட்டலாம்.
     இப்படிப் பெயர் வைப்பதிலேயிருந்து கூட்டத்தில் பேசிப் பெயரெடுப்பது வரையில் பேச்சாளர்கள், மிகுந்த அக்கறையுடன் இருந்திடல் வேண்டும்.
     மதுரையில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு அ.தி.மு.க. ஆட்சியினரால் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டையொட்டித் திறந்து வைக்கப்பட்ட சுற்றுலாவாரிய  ஓட்டலுக்கு ''இராசராசன்'' என்று பெயர் சூட்டி, அதற்கான பெரிய அளவு விளம்பரங்கள் அனைத்தும் செய்யப்பட்டன.  ஓட்டல் முகப்பில் 'இராசராசன்'' என்ற பெயர்ப் பலகையும் வைக்கப்பட்டுவிட்டது. ஆனால், திடீரென்று திறப்புவிழா நாளன்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் அந்தப் பெயரை அகற்றச் சொல்லிவிட்டார். அச்செயல் தமிழ்நாட்டு மக்கள் உள்ளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
     அச்சமயம் எனது சுற்றுப் பயண நிகழ்ச்சிகள் தஞ்சை, திருச்சி, புதுக் கோட்டை மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.  அந்த நிகழ்ச்சிகளின்போது மேடைகளில் என்னிடம் பெயர் சூட்டுவதற்காகக் கொண்டு வரப்பட்ட ஆண் குழந்தைகள் பலருக்கு''இராசராசன்'' என்றே பெயர்வைத்தேன். உடனே கூட்டத்தினர் ''இராசராசன்'' வாழ்க!'' என முழங்கினர். பெயர் வைப்பதில் கூட மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்தம் இதய ஒலியை எதிரொலிக்கப் பயின்றிருக்க வேண்டுமெனில், நாட்டில் உள்ள எத்தனையோ பிரச்சனைகளில் மக்களின் கவனத்தைக் கவருவதற்கு ஏற்றவண்ணம் பேசும் கலையை வளர்த்துக் கொள்ளுதல் இன்றியமையாத்து அல்லவா?
     ''ஈஸ்த்துகிணு போ!'' என்ற சென்னை தமிழும், ''எலே! வாலே!' என்ற நெல்லைத்தமிழும், ''அந்தாண்டே! இந்தாண்டே'' என்ற தஞ்சைத் தமிழும் ''கீறியா? என்னாப்பா பேப்பர் கீதா?' வட ஆற்காட்டுத்தமிழும். இவ்வாறு மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுகிற தமிழும்-பேசுகிறவர்கள், மேடையில் ஏறிப்பேசினால், அவர்கள் நல்ல பேச்சாளர்கள் என்றால், எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் மேடைக்கேற்ற இலக்கணத் தமிழையே பேசுவர்!
     சொற்பொழிவு மேடைக்கு அத்துணைச் சக்தி உண்டு! அந்தச் சக்தியை அலட்சியப்படுத்தி, எந்தப் பேச்சாளராவது தாங்கள் பழக்கத்தில் பேசுகிற வழூஉச்சொற்களையே மேடையில் பயன்படுத்தினால் அவர்கள் நல்ல பேச்சாளர் பட்டியலில் இடம் பெறமாட்டார்கள். ஏதோ அந்தக் கூட்டத்தில் சொல்லவேண்டிய கருத்தைச் சொன்னார் என்ற அளவிலேதான் அவரது பேச்சு ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் அவர் ஒரு பேச்சாளராக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டார்.


-கலைஞர் மு. கருணாநிதி


இன்னும் வரும்-10

Tuesday, 19 January 2010

பேசும் கலை வளர்ப்போம் -8



 

பேசும் கலை வளர்ப்போம்-8


அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு சொற்பொழிவாளராகத் தமிழகத்தில் அறிமுகமான தொடக்கக் காலத்திலே அவரது பேச்சில் அடுக்குச் சொற்கள் மிகுதியாக வந்துவிழும். ஆனால், அந்த சொற்கள் எதுவும் பொருள் இல்லாமல் ''அ'' வுக்கு ''அ'' , ''க'' வுக்கு ''க'ய என்ற நிலையில் கையாளப்பட்டதில்லை! ''மாளிகையில் இருந்த நீதிக் கட்சியை மைதானத்திற்குக் கொண்டு வந்தவர் பெரியார்'' என்று அண்ணா பேசுவதின் மூலம், அந்தக் கட்சி ஏழை எளியோர்களின் கட்சியாக மாற்றப் பட்டுவிட்ட வரலாற்று உண்மையை அடுக்குத் தொடரால் விளக்கிவிடுவார். மக்கள் உள்ளம் கவர்ந்திடுவார்.      அரசியலார் 144 தடைச்சட்டம் போடுவார்களேயானால் அதனை அப்படியே தகவலாகச் சொல்லித் தாக்கிடாமல், ''நாகரிக நாட்களிலே நாக்கறுக்கும் சட்டமா''? என்று மேடையில் கேள்விக்கணை பொழிவார்.இதனைக் கண்ட சிலர், தாங்களும் பேச்சாளராக அடுக்குச் சொற்களைக் கோத்துப் பேசினால் போதுமெனக் கருதினர். பேசும்பொழுது அடுக்குச் சொற்களானாலும் அழகான தமிழானாலும் தானாக வந்து பொழிந்திட வேண்டுமேயல்லாமல் அவற்றைத் தேடிப்பிடித்துப் பயன்படுத்திப் பேச முனைந்தால் பேச்சுக் கலையில் தோல்வியைத்தான் சந்திக்க நேரிடும்.
     ''அடக்குமுறைகளால் முடக்கிவிடலாமெனத் துடுக்கு கொண்டு மிடுக்குடன் நடப்பது அடுக்குமோ என நான் ஆத்திரத்துடன் அரசாங்கத்தை அறைகூவல்விட்டுக் கேட்கிறேன்.''
     இது அடுக்குச் சொல்லை மட்டும் நம்பிப் பேசுகிற பேச்சு! நான் முதலில் குறிப்பிட்டதைப்போல அண்ணாவுடன் நாடகத்துக்குச்சென்ற நிகழ்ச்சி வேறொன்றை நினைவு படுத்துகிறேன்.
      தாம்பரத்திற்கருகே நாடகம்! நாடகத் தலைப்பு, ''மரணப்படுக்கையில்'' என்பது! நாடக விளம்பரங்கள் ''மரணப் படுக்கையில் அண்ணா'' என்றே சுவர்களில் ஒட்டப்பட்டிருந்தன. நாடகத்திற்கு அண்ணா தலைமை வகிப்பதைத்தான் அவ்வளவு அழகாக விளம்பரப்படுத்தியிருந்தார்கள்.
     அண்ணாவுடன் நானும் சென்றிருந்தேன்.  ஆரம்பம் முதல் ஒரே அடுக்குச் சொல் வசனம்தான்.
     ''பேயனே! அந்த பேப்பரை எடுத்துவரச் சொன்னால், என்னமோ பிரமாதமாக நின்றுகொண்டு பிரம்மராட்சசனைப்போலப் பேந்தப் பேந்த விழிக்கிறாயே!''
    இது போன்ற வசனங்களுக்கெல்லாம் ஒரு உச்சக்கட்டம் என்ன தெரியுமா?
     வில்லன், கதாநாயகனைப் பார்த்து, ''உன் விஷயத்தில் நான் சர்ப்பமாக இருப்பேன்'' என்கிறான். உடனே கதாநாயகன் வில்லனை நோக்கி,'நான் சர்ப்பத்தையும் சாம்பார் வைத்துச்சாப்பிடுவேன்.' என்கிறான், அய்யோ அடுக்குச் சொல் படும்பாடே!'' என்று அண்ணாவும் மற்றவர்களும் நினைத்துக் கொண்டோம்!
     மாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் மணமிருக்கும்!''
     ''சாலையோரத்தில் வேலையற்றுதுகள். வேலையற்றதுகளின் உள்ளத்திலே விபரீத எண்ணங்கள்! வேந்தே! அதுதான் காலக்குறி!''
     இப்படி எழிலார்ந்த நடைபோட்ட அண்ணாவின் அடுக்குச் சொல்லைக் கையாண்டு எல்லோரும் வெற்றி பெற்றுவிட முடியவில்லை. காரணம், அவர்கள் கையாண்ட அடுக்குச் சொற்களில் கருத்தோட்டமில்லை.


     அண்ணா அவர்களேகூட, தனது பேச்சுக்களையும் எழுத்துக்களையும் மக்களுக்காகப் புரியவைப்பதில்-அவர்களது இதயங்களில் பதியவைப்பதில் அக்கறை காட்டினாரே தவிர-வெறும் அடுக்குச் சொல்லை அடுக்கி, சொல்ல வேண்டியவைகளைச் சொல்லாமல் விட்டுவிட்ட குறைபாட்டுக்கு என்றைக்குமே தன்னை ஆளாக்கிக் கொண்டதில்லை.
     மேடையில் பேசுவதற்கு எடுத்துக் கொள்கிற பொருள்தான் மிக முக்கியம்! பொன் கட்டியைப் போன்றது பொருள் என்றால், அதனை அணியாகச் செய்து மெருகேற்றிடுவதுதான் சொற்களும்-சுவையான உவமைகளுமாகும்!
     மேடையில்  ஏறி நின்று வெறும் வார்த்தை ஜாலங்கள் புரிந்துவிட்டு, தனக்குத் தெரிந்த நாலு கவிதைகளை அழகாகக் கூறிவிட்டு, எந்தக் கருத்தையும் வலியுறுத்தி மக்கள் உள்ளத்தில் பதிய வைக்காமல் இறங்கிவிட்டால், ஏதோ ஒரு வாத்தியக் கருவி செய்த வேலையைத்தான் செய்ததாக ஆகும்! அந்தச் சங்கீத்தைச் சிறிது நேரம் ரசிப்பது போலத்தான் அந்தப்பேச்சையும் மக்கள் ரசிப்பார்கள்!.
     இதயமற்றவரைப்போல ஒரு முதலமைச்சர் நடந்து கொண்டு, மக்கள் மீது அடக்கு முறையை அவிழ்த்துவிட்டதை ஒரு முறை , கடற்கரைக் கூட்டத்தில் அண்ணா குறிப்பிட்ட அழகே அழகு!
     ''நமது முதல்வருக்கு உள்ளமிருக்குமென்று நம்பினேன். ஆனால் பாவம்; அவருக்கு உள்ளம் இருக்க வேண்டிய இடத்திலே ஒரு பள்ளம்தான் இருக்கிறது''!
     ''உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன1''
     சட்டசபையில் விநாயகம் அவர்கள் அண்ணாவை நோக்கி இந்தச் சொற்களை வீசியவுடன்,
     ''என் அடிகள் அளந்து வைக்கப்படுகின்றன!''
      என்று அண்ணா பதில் அளித்த பாங்கினை விநாயகமே வியந்து போற்றினார்.
     சட்டக்கல்லூரியில் ஒரு விழா! நானும் குமரி அனந்தன் அவர்களுன் கலந்து கொண்டோம்! அவர் என்னை விளிக்கும்மோது; ''குறளோவியம் போல் விளிக்கிறேன் ''மு.க.'' அவர்களே!'' என்றார்.
     நான் அவரை விளிக்கும்போது. ''நானும் குறள் போல விளிக்கிறேன்;''அன்புள்ள குமரி'' அவர்களே!'' என்று கூறினேன்.
     ஆசிரியர்களும் மாணவர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் புரிந்தனர்.


-கலைஞர் மு. கருணாநிதி


-இன்னும் வரும்-9

Monday, 18 January 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -5







(இ) பிற்பகுதி முறை
1. உறுதிமொழி ஏற்றல்;
மூன்றுமூறை திருமணப்பந்தலை வலம் வந்து அமர்ந்ததும் மணமக்கள் மண வாழ்க்கையை வெற்றியுடன் நடத்துவதாக உறுதிமொழி ஏற்பர். இரண்டு தாள்களில் அவ்வுறுதி மொழியை வரைந்து படிக்கச் செய்து, மணமக்கள் கையொப்பமும் மண ஆசிரியர், சில பெரியவர்கள் கையொப்பமும் வாங்கி மணமகனுக்கு ஒன்றும் மணமக்களுக்கு ஒன்றும் வழங்குவர்.
2. அழல் ஓம்பல்-2
(கோள் பிறவற்றால் குறை நேராது, இருக்க) எரிந்து தணிந்துள்ள ஓமத் தீயில், குச்சிகளும், நெய்யும் சொரிந்து முன்போல் அழல் ஓம்பப்பெறும்.

3. காப்பவிழ்த்தல்;
அரசாணிக்கால் காப்பையும், மணமக்கள் காப்பையும் ஆசிரியர் அவிழ்ப்பர். பிறகு மணமகள் காப்பு மணமகனால் அவிழ்க்கப் பெறும் கெட்டி மேளம் கொட்டும்.

4. மாறியமர்தல்;
மணமகன் வலப்பக்கமாக அமர்ந்து தன் நெஞ்சமே பகுதியான இடப்பக்கத்தில், தன் அனபிற்கு உரியவளாகிவிட்ட மணமகளை அமரச் செய்வார்.
5. மணப் பரிசுகள்;
மணமக்களுக்குப் பரிசுப் பொருள்கள் வழங்க விரும்பியவர்கள் அவற்றை வழங்குவர்.
6. அரிசி வாழ்த்து;
மணமக்களின் எதிரே அரிசியைச் சொரிந்து, அவையில் உள்ள பெரியவர்களின் மணமக்களை வாழ்த்துவர். மணமக்களுக்குத் திருநீறு பூசியும் வாழ்த்துவர்.
7. ஆலம் சுற்றல்;
மணமக்களுக்குக் கண்ணேறு கழிக்க, மூத்தவாழ்வரசியரில் ஒருவர் அல்லது இருவர் சேர்ந்து ஆலஞ்சுற்றுவர்.
8. வலம் வரல்;
முன்போல் மூன்று மூறை மணமக்கள் வலம் வருவர். விளக்குத் தட்டில் முன்போலவே காசு இடுவதும் உண்டு. முதல் முறையில் பெண் வீட்டார் இட்டால் இந்த முறையில் மாப்பிள்ளை வீட்டார் இடுவர்.
9. பாலும் பழமும்;
வலம் வந்து வீட்டுக்குள் சென்று அமர்ந்ததும் அலுப்புத்தீர மணமக்களுக்குப் பாலும் பழமும் ஆளிப்பர். முதலில் மாப்பிள்ளைத் தோழர் பருகுவதற்கு முன் அவருக்கு மணப்பரிசு அளித்து மகிழ்விப்பர் மணவீட்டார்.
10. வாழ்த்துரைகள்;
மணமக்கள் அவையில் வந்து, நாற்காலியில் அமர்ந்ததும், பெரியோர்கள் அவர்களுக்கு நல்லுரைகள் கூறி வாழ்த்துவர்.


 திருமணம் எப்படித் தோன்றியது! பெரியார் கூறுபவை....

என்று தனக்கென்று பொருள் சேமித்து வைத்துக் கொள்ள உரிமை ஏற்பட்டதோ அதன் பிறகுதான் திருமண முறையும் ஏற்பட்டிருக்க வேண்டும். பொருள் தேடிச் சேமித்து வைக்கும் உரிமை ஏற்பட்ட பிறகுதான் வெளியே பொருள் தேடச் செல்லும் போது தான் சேமித்து வைத்துள்ள பொருளைப் பாதுகாக்கவிம், தான் வந்த போது தனக்குச் சிரம பரிகாரம் செய்யவும் ஒர் ஆள் தேவையாயிருந்தது. எந்த ஆணும் மற்றொரு ஆணுக்கு இவ்விதமான உதவி செய்ய முன்வந்திருக்க மாட்டான். எனவே, இவ்வேலைக்கு ஒரு பெண்ணைத்தான் நாட வேண்டியிருக்கிறது. முதலில் பெண் ஒருவனது சொத்துக்குப் பாதுகாப்பாக அமைந்து, பிறகு அவளே அவனுக்கு சொத்துமானாள். பிறகு அந்த சொத்துக்கு வாரிசு தேடவேண்டிய அவசியமேற்பட்டது. வாரிசு தேட அரம்பித்த காலத்தில் தான் தன் சொத்துக்கு வரும் வாரிசு தனக்கேப் பிறந்ததாக இருக்க வேண்டும் என்கிற காரணத்தால் அவளைத் தனக்கே உரிமையாக்கி கொள்ளவும், அவளைத் தன்னையன்றி வேறு புருடனை நாடாமல் இருக்கும்படி செய்யவுமான நிர்பந்தம் ஏற்பட்டது. மனித சுபாவம் இப்படித்தான் இருக்கும். அதாவது, தான் தேடியப் பொருளைத் தனது இறப்புக்குப் பிறகு அனுபவிக்கப் போகும் வாரிசு, தனக்கே பிறந்ததாக- தன் இரத்தத்திலிருந்து தோன்றியதாக- இருக்கவேண்டும் என்று நினைப்பது இயற்கையின்பாற் பட்டதேயாகும்.

என்று பெரியார் திருமணம் எப்படித் தோன்றியது என்பது பற்றி குறிப்பிடுகிறார்.


-.....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -6

Sunday, 17 January 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -4




(ஆ) நடுப்பகுதி



1. இறை வழிபாடு;
மஞ்சளிலுள்ள முன்னவரையும், அன்னையும் தந்தையுமாக இரண்டு செம்புகளில் நிறுவியுள்ள இறைவனையும் இறைவியையும் மணமக்கள் மலர் தூவி வழிபடுவர்.
தாலி கோத்துள்ள மங்கல நாண், ஒரு தட்டில் அரிசியின் மீது தேங்காயில் சுற்றி வைக்கப்பெற்றிருக்கும் தேங்காய்க்கும் மஞ்சள், குங்குமம் இடப்பெற்றிருக்கும். இத்தட்டு அம்மையப்பர் முன்பு வழிபடும்போது வைக்கப் பெற்றிருக்கும்.

2. மங்கல நாணுக்கு அவையினர் வாழ்த்து;
மங்கல நாண் தட்டை மண ஆசிரியரோ, வேறு பெரியவர் ஒருவரோ அவையினரிடம் எடுத்துச் சென்று, தொடச் செய்து வாழ்த்துப் பெறுவர்.
கூடவே இன்னொருவர் ஒரு த்ட்டில் மஞ்சள் அரிசியும் மலரும் கலந்து வைத்துக் கொண்டு செல்வார். மங்கல நாண் சூட்டும்போது தூவி வாழ்த்துவதற்கும் அவையினர் அவ்வரிசி, மலரில் சிறிது எடுத்துக் கொள்வர்.

3. அழல் ஓம்பல்;
(ஒளி வடிவான இறைவனைப் போற்றி) மணமக்கள் முன்பு ஒன்பது வகை மாக்குச்சிகளை இட்டு, நெய்விட்டு ஓமம் வளர்த்துவார் ஆசிரியர். மணமகன் குச்சிகளை ஒவ்வொன்றாக ஓமத்தில் இடுவான். நெய் பெய்வான்; மணமகளும் அப்படியே செய்வாள்.

4. மங்கல நாண் சூட்டல்;
கை விளக்கை மணமகனின் உடன் பிறந்தாள் ஏந்தி மணமகளின் பின்புறம் நிற்க, மங்கல நானண மாப்பிள்ளை இரு கையில், தாங்கி பெண்ணின் கழுத்தில் சூட்டி மூன்று முடிச்சுக்களை இடுவார். கெட்டிமேளம் கொட்னும். அவையினர் அரிசி மலர் சொரிந்து வாழ்த்துவர்.
அம்மங்கல நாண் முடிச்சின்மீது மஞ்சள் இட்டுக் குங்குமம் வைப்பர்; மாப்பிள்ளை, பின் பெண்ணின் பின்புறமாக கையைக்க கொண்டு சென்று நெற்றியில் குங்குமம் இடுவார்.

5. பட்டங்கட்டல்;
மணமக்களின் பழைய உறவினர்களும், மணத்தினார் புதிதாக உறவினர் ஆனவர்களும் தங்கள் தங்கள் ‘மாமிப்பட்டம்’ ‘நாத்திப் பட்டம்’ என்றெல்லாம் உறவின் முறையாக்கூறி, மணமக்களின் நெற்றியில் தங்கத் தகட்டுப் பட்டம் கட்டுவர் சிலர் பொற்காசும் கட்டுவர்.

6. மாலை மாற்றல்;
மணமக்கள் எழுந்து நின்று, மூன்று முறை மாலை மாற்றிக் கொள்வர்.

7. வலம் வரல்;
ஒரு மூத்த இளம் பெண், தன் கையில் தட்டு வைத்த கைவிளக்கை ஏந்தி முன்னே செல்ல, அவரைத் தொடர்ந்து அறியாச் சிறுமிகள் மளைக் கலசங்களைத் தாங்கிப் போக அடுத்து மாப்பிள்ளைத் தோழர் மணமக்களின் இடக்கைத் சுண்டு விரலால் பிடித்துப் பின் செல்வர். விளக்குத் தட்டில் பந்தலின் மூலைகளில் காசு இடுவர் மணமக்கள் வீட்டார்.

8. அம்மி மிதித்தல்;
பந்தலில் இடம் பெற்றுள்ள அம்மியின் மீது மணமகன் மணமகளின் வலக்காலைப் பற்றி எடுத்து வைத்து, அதன் இரண்டாம் விரலில் வெள்ளிச் சுற்று மோதிரம் அணிவர்.
இடக்கால் இரண்டாம் விரலிலும் இன்னொரு மோதிரம் அணியப் பெறும்.


9. பொரியிடல்;
மணமக்கள் ஒரு சுற்று வந்ததும், ஓமத்தீயின் முன்பு நிற்பர். பெண்ணின் உடன் பிறந்தான், நெல் பொரியைத்தன் இரண்டு கைகளில் ஏந்திப் பெண்ணின் கையில் தர அதைப் பெண் மாப்பிள்ளையின் கையில் பொருந்த வைக்க, இருவருமாக அதைத் தீயில் இடுவர்.
இங்ஙனமே, இரண்டாவது மூன்றாவது சுற்றிலும் செய்த பிறகு மைத்துனனுக்கு மாப்பிள்ளை சந்தனம் தந்து பன்னீர் தெளித்து, மலர் மாலையிட்டு மோதிரம் போடுவார். இதற்குப் பொரி மோதிரம் என்று பெயர்.


 கல்யாணம் என்பது என்ன? பெரியார் கூறுபவை....


""கலியாணம்"" என்பதற்கு ""வாழ்த்து"" என்பது பொருள். அது வாழ்க்கைத் துணை என்னும் பொருளில் இல்லை. ஏதோ கறுப்பு ஆட்டை வெள்ளாடு என்பது போலவும் கொடிய விஷம் உள்ள பாம்பை நல்ல பாம்பு என்பது போலவும் இப்படித்த தப்பான சொற்களை அமைத்துக் கலியாணம், திருமணம் என்றெல்லாம் சொல்லி வருகிறோம். ஆனால் பார்ப்பனர் மட்டும் சரியான வார்த்தைகளையே உபயோகித்து வருகின்றனர். அவைகள் ""தாரா முகூர்த்தம்"" என்பதும், ""கன்னிகா தானம்"" என்பவைகளாகும். ""தானம்"" என்பது வடமொழிச்சொல்ஆகும். ""தாரா முகூர்த்தம்"" என்பதும் வடமொழியே; தமிழ்ச் சொல் அல்ல. தமிழர்களுக்கான காரியங்களில் வட மொழிச்சொல்லாக இருந்தால் அது ஒன்றினாலேயே நன்றாகத் தெரியுமே. அந்த முறை நமக்கில்லை என்று. ஒரு பெண்ணை பெற்று வளர்த்து ஒருவனுக்குத் தாரை வார்ப்பது, தானம் தருவது என்பது கருத்து. நம் பழக்கப்படி ஆணும், பெண்ணும் சம உரிமை கொண்டு, அன்பு பூண்டு ஒற்றுமையுடன் இருத்தல் வாழ்க்கைத் துணை. இது தமிழ்ச் சொல். அவன் வந்த பிறகுதான் இதை யெல்லாம் அழித்து விட்டுப் பெண்ணை அடிமையாக்குகிற நிகழ்ச்சியாக ஆக்கிவிட்டான்.

என்று பெரியார் குறிப்பிடுகிறார்.



-..தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -5

Saturday, 16 January 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -3



!! மணம் நிகழ் முறை
(அ) முற்பகுதி
1. மணமகன் மணமகளுக்கு நலங்கு!
மணநாள் காலை, மணமகனைப் பந்தலில் அமரச் செய்து, பெண் வீட்டு, பிள்ளை வீட்டு வாழ்வரசியார் நலங்கு வைப்பர். பிறகு மணமகளுக்கு அப்படியே நலங்கு வைப்புர். மணமகனை மாப்பிள்ளைத் தோழர் அழைத்து வருவார். மணமகளை தோழி அழைத்துவருவார்.

2. மண ஆடை படைத்தல்

மணமகனும் மணமகளும் உடுத்திக் கொள்ள வேண்டிய மண ஆடைகளையும், பாமாலைகளையும் ஒரு தட்டில் வைத்து அம்மையப்பர் குடங்களின் முன் வைத்து மண ஆசிரியர் படைப்பார்.

3. மண ஆடைக்கு அவையினர் வாழ்த்து

பிறகு அத்தட்டை அவையினரிடம் எடுத்துச் சென்று அவையில் மூத்தவர்கள் ஆடையைத் தொட்டு வாழ்த்துப் பெறுவர்.

4. மண ஆடை வழங்கல்

மணமகனை மணப் பந்தலுக்கு மாப்பிள்ளைத் தோழர் அழைத்து வருவார். அவருக்குரிய மண ஆடை, மாலைகளை அவருக்கு வாழ்த்தி அளிப்பார் ஆசிரியர். தோழி அழைத்துவர மணமகளும் பந்தலுக்கு வந்து, மண ஆடை மாலைகளைப் பெற்றுச் செல்வார்.

5. அரசாணிக்கால் நடுதல்

இலையோடு கூடிய அரசமரத்துச் சொம்பு ஒன்றுக்கு ஐந்து வாழ்வரசியார் கொண்டு திருமஞ்சனம் ஆட்டச் செய்து, மஞ்சள் குங்குமம், பூ அணிவித்துப் பந்தலின் கீழ்ப்புறத்துக் கால்களுக்கு இடையே நிறைகுடங்களையொட்டி, கெட்டி மேளங்கொட்ட அந்த அரசங்காலை ஆசிரியர் நடச் செய்வார். திருமணத்திற்கு இது ஆணிக்கால் எனவே, இதை "அரசாணிக்கால்" என்பர். இது மும்மூர்த்திகளின் அடையாளமாகும்.

6. மணப்பொங்கல்
மணப்பந்தலின் கீழ்ப்புறமாக மண்செப்பில் சோறு பொங்கி, இலைகளில் இட்டு வைப்பர். வீட்டுப் பெண்கள் மணமகனும், மணமகளும் மண ஆடை உடுத்தி, மாலை அணிந்து வந்து, படையல்களின் முன்பு நின்று கற்பூரம் காட்டி அம்மையப்பர் அரசாணிக் கால்களை வழிபடுவர்.

7. காப்புக்கட்டுதல்

மாப்பிள்ளையும் பெண்ணும், மண மனையில், பெண் வலம் இருக்கும்படி, அமர்ந்தும், அரசாணிக்காலுக்கு மஞ்சள் கொம்பு கட்டிய ஒரு மஞ்சள் நூலை காப்பாகக் கட்டுவார் ஆசிரியர். மணமகனின் வலயர் மணிக்கட்டில் ஆசிரியர் அதே போல் காப்பு கட்டுவார். காப்புக் கட்டும் போது கெட்டி மேளம் கொட்டும். திருமணம் இடையூறின்றி நடைபெறச் செய்யும் வேண்டுகோட் செயலிது ஆகும்.

8. பெற்றோர் போற்றல்

மாப்பிள்ளை தம் பெற்றோருக்குத் திருவடிப்பூசை செய்வார். அப்படியே பெண்ணும் செய்வார், ஆசிரியர் செய்விப்பார்.

9. ஓம்படைச் செய்தல்

மாப்பிள்ளையின் பெற்றோர் தம் மகனின் வலக்கையைப் பிடித்து ஏந்த, பெண்ணின் பெற்றோர் தம் மகனின் வலக்கையை எடுத்து, மாப்பிள்ளையின் வலக்கையில் வைத்து, பல்லாண்டு ஓம்பி வாழ்க! என வாழ்த்துவார்கள்.



திருமணம் ஏன் தேவைப்பட்டது பற்றி பெரியார் கூறுபவை....

கல்யாணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் கூடி இயற்கை இன்பத்தை நுகரவும், ஒருவரையொருவர் காதலித்து ஒருவருக்கொருவர் வாழ்க்கைப்போட்டியில் ஏற்படும் சிரமத்துக்கு இளைப்பாறவும் ஆயாசம் தீர்த்துக் கொள்ளவும் ஆணுக்கு ஒரு பெண்ணும், பெண்ணுக்கு ஒர் ஆணும் வேண்டியிருக்கிறது.


-தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -4