Pages

Sunday, 3 March 2013

கலைஞரை பாராட்டிய காமராஜர்

திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் பாடலூர் அருகில் பெரியார் குடிலும், பெரியார் வளைவும், தனியே நிற்கும் ஒரு ஓட்டுவில்லைக் கொட்டகையும் என்னைப் பொறுத்தவரையில் வெறும் கட்டிடங்கள் அல்ல.  நெஞ்சைவிட்டு நீங்காத நினைவுச் சின்னங்கள்.

நல்லசெல்வம் என்ற ஒரு அருமையான பெரியார் காலத் தொண்டர்.  சட்ட எரிப்புப் போரில் சிறைக்குச் சென்றவர்.  இன்னொருவர் ஆசிரியர்- பெரியார்குடில் முத்துசாமி.  (மூத்த திராவிடர்கழகத் தலைவர் திருவாரூர் தங்கராசுவின் சம்பந்தி)

பெரியார்குடில் -அழகான இயற்கைச் சூழலில் அமைதியாய் அமைந்துள்ள அருமையான கல்வி நிறுவனம்.  இது பெரியார் தொண்டர் முத்துசாமியின் நினைவுச் சின்னம்.  அந்த ஒற்றை ஓட்டு வில்லைக்குடில்,  நல்லசெல்வத்தை நினைவூட்டும் தோட்ட இல்லம்.

இந்த அரும்பணிகளுக்கெல்லாம் துணை நின்ற மிசா வீரர் -முன்னாள் சட்டமன்ற தி.மு.க உறுப்பினர் ஜே.எஸ்.ராசுவுக்கு நினைவுச் சின்னம்?  நல்லவர்கள் -நன்றியுள்ளவர்கள் -நெஞ்சம்தான்…

இந்த இரூர் பெரியார் வளைவை காமராசர் கையால் திறந்துவைக்க நல்லசெல்வமும் முத்துசாமியும் விரும்பினார்கள்.  காமராசரை நான் நேரில் பார்ப்பது இது இரண்டாம் முறை.  இரவு ஏழு மணிக்குச் சந்திக்க வரலாம் எனத் தலைவர் காமராசர் இல்லத்திலிருந்து பதில் சொன்னார்கள்.  அப்போதெல்லாம் ஆட்டோ ரிக்ஷாக்கள் அதிகம் கிடையாது.  பேபி டாக்ஸிகள்தான்.  ராயப்பேட்டை பழைய உட்லண்ட்ஸ் விடுதியிலிருந்து வண்டி பிடித்து பெருந்தலைவர் வீடுபோய்ச் சேர இரவு எட்டு மணியாகிவிட்டது.

ஒன்பது ஆண்டுகள் அசைக்க முடியாத முதலமைச்சர் இரண்டு இந்தியப் பிரதமர்களை அமைதியாய்த் தேர்ந்தெடுத்த ராஜதந்திரி.  பண்டித நேருவின் மறைவிற்குப்பின் உலகத் தலைவர்களால் ஆச்சரியத்தோடு பார்க்கப்பட்ட மாபெரும் தலைவர்.  கடுமையான பாதுகாப்பு- கூட்டம் -கார்களின் வரிசை இவைகளை எதிர்பார்த்துப்போன எங்களுக்கு பெரும் அதிர்ச்சி யாருமே இல்லை.  அந்த வளாகமே வெறிச்சோடி கிடந்தது.

வீட்டு வாசலில் போய் நின்றோம் யாருமில்லை.  அழைப்புமணி எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை.  ஒரு வேளை இல்லையோ….?
முத்துசாமி மெல்ல மேலேறி ''அய்யா… அய்யா…'' என்றார் இரண்டு முறை.  பதில் இல்லை.  சில நிமிடங்கள் இப்படியே ஓடின.  பின்கட்டில் யாரோ குறுக்கே போனார்கள்.  முத்துசாமி 'ஐயா' என்றார்.  அவர் வந்தார்.  வந்த காரியத்தையும் தலைவரைச் சந்திக்க நேரம் கேட்டு அவர் ஒப்புக் கொண்டதையும் சொன்னோம்.  ஓரிரு நிமிடங்களில் வரவேற்பறை போன்ற இடத்திற்கு படுக்கை அறையிலிருந்து வந்தார் தலைவர்.  எங்களுக்கு அடுத்த அதிர்ச்சி.

சட்டையில்லாத அந்தப் பெரிய உடம்பில் ஒரு குற்றாலம் ஈரிழைத்துண்டு.  இடையில் நாலு முழம் வேட்டி.  காலையில் முகச்சவரம் செய்யவில்லை போலிருக்கிறது.  ஆசிரியர் முத்துசாமி சாதாரணமாக சிறியவர்களிடமும் பணிவாய்ப் பேசுகின்றவர்.

''அய்யா… மன்னிக்கணும்… காலதாமதமாய் வந்து தொந்தரவு செய்யுறோம்… மன்னிக்கணும்… வாடகை வண்டி கிடைப்பதில் தாமதம், போக்குவரத்து நெருக்கடி, மன்னிக்க வேணும்…''

என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அந்த ஆற்றல்மிக்க பெருந்தலைவருக்குள் இருந்த எளிய மனிதன் வெளியே வந்தார்.  வழக்கப்படி பேச்சைத் தொடங்கும்முன் அந்த 'ஏ' மட்டும் மாறவில்லை.

'
'ஏ… யாரப்பா நீ… பைத்தியக்காரனா இருக்கே… மன்னிக்கணும்… மன்னிக்கணும்ங்றே… இப்போ இங்கே எவனும் வர்றதில்லைப்பா எங்கிட்டே 'பவர்' இல்லை… எவனும் வர்றதில்லே… சாதாரண ஆளுங்கதான் வெளியூர்லேர்ந்து வர்றான்.  பைத்தியக்காரனா இருக்கியே… மன்னிப்பு… மன்னிப்புன்னு… அதெ உடுன்னேன்.  'பவர்' போயிருச்சப்பா… 'பவர்' இல்லை… யாரும் வர்றதில்லே… டிரைவர்கூட இங்கேயே இருக்கமாட்டேங்கிறான்.  அங்கே ஒரு கடைக்கு போயிர்றான் பீடி குடிக்க.  கூப்பிட வேண்டியிருக்கு… நீ யாரப்பா பைத்தியக்காரனா இருக்கே…'' என்றார்.  அவர் சாதாரணமாய்த்தான் பேசினார்.  எவ்வித பதற்றமோ, ஆதங்கமோ… கோபமோ அவரிடம் இல்லை.

நாங்கதான் கண்ணீர் விடும் நிலைக்கு வந்துவிட்டோம்.  முத்துசாமி உணர்ச்சி வயப்பட்டு விட்டார்.  மயிலைக் குளக்கரையில் கல்லாய் நிற்கும் கபாலியைக் காண ஆயிரக்கணக்கில் நிற்கும் கூட்டத்திற்கு முன் கல்வி தந்த கடவுள் இங்கே இருக்கும் நிலையை எண்ணினேன்.  நாங்கள் நாங்களாக இல்லை.  இயல்புநிலை திரும்ப சிலகணங்கள் ஆயின.  முத்துசாமி வெளிப்படையாய் அழுது விட்டார்.  நாங்கள் கண்களைத் துடைத்துக் கொண்டோம்.  மீண்டும் காமராசரே பேச்சைத் துவங்கினார்.


'
'ஏ… விடப்பா… விடப்பா… நீ எல்லாம் யாரு…. உனக்கெல்லாம் நான் என்ன செஞ்சேன்.  செஞ்சவனையெல்லாம் காணோம்… உடு… உடு… வந்த வேலை என்ன… சரியாச் சொல்லு''  

என்றார்.  தலைவர் காமராசர் இரூர் பெரியார் வளைவைத் திறந்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.  அரசியல் கடும் வேலை நெருக்கடிகளால் முறையான மருத்துவப் பரிசோதனைகள் கவனிப்பு இன்றியும் -மன உளைச்சல் -வயது இந்தக் காரணங்களால் காமராசருக்கு ரத்த அழுத்தம் -நீரிழிவு -போன்ற நோய்கள் வெளியில் தெரியாமல் இருந்திருக்கின்றன.  அந்தச் சோர்வு அவர் பேச்சில் தெரிந்தது.

'
'பதினைந்து நாள் கழிச்சு வாங்க சொல்றேன்.  இப்போ நான் எந்த நிகழ்ச்சிக்கும் போறதில்லே.  அரசியல் சரியா இல்லே.  நான் சொல்றேன்… பாக்கலாம்… பாக்கலாம்…'' 


என்றபடி எழுந்தார்.  விடைபெற்றுக் கொண்டோம்.

ஏறக்குறைய பத்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் திராவிடர் கழகத்தின் சார்பில் அன்றைய முதல்வர் கலைஞருக்குச் சென்னை அண்ணாசாலையில் சிலையெடுக்கும் முயற்சி நடந்து கொண்டிருந்தது.

கலைஞரின் சிலையைத் திறப்பதற்கு தலைவர் காமராசரைக் கேட்டுக் கொள்வதென முடிவாயிற்று.  அப்போது பெரியார் இல்லை.  தலைவர் காமராசர் 1971 பொதுத்தேர்தல் தோல்விகளுக்குப்பின் உடல்நலம் குன்றி அதிகம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.  எம்.ஜி.ஆர். தி.மு.க. விலிருந்து விலகி அ.தி.மு.க. என்ற அமைப்பை நடத்திக் கொண்டிருந்தார்.


தியாகராயர் திருமலைப்பிள்ளை தெருவிலிருந்த தலைவர் காமராசரை பார்த்து ஒப்புதல் கேட்பதற்காக மறைந்த விடுதலை மேலாளர் நாகரசம்பட்டி சம்பந்தத்துடன் சென்றிருந்த குழுவினருடன் நானும் யதேச்சையாய் சென்றிருந்தேன்.


வேறு பல செய்திகளைப் பேசியபின் கலைஞர் சிலை திறப்பு வேண்டுகோளை நண்பர்கள் வைத்தனர்.  பேச்சு… கலைஞர் -அரசு -நிர்வாகம் எனத் திசைமாறியது.  வந்திருந்த முக்கியமான நண்பரொருவர் தன் வழக்கப்படி காமராசரை மகிழ்விக்கும் வண்ணம்-

1954-1962 இடையிலான காமராசர் முதல்வராய் இருந்த கால செய்திகளைச் சொல்லிப் பாராட்டிக் கொண்டிருந்தார்.  முதல்வர் கலைஞர் செய்த சிலவற்றைச் சொல்லி -இதையே காமராசர் முதல்வராய் இருந்தால் இன்னுமும் சிறப்பாய் செய்திருப்பார் என்று காமராசரைப் பாராட்டுவது போல் பேசிக் கொண்டிருக்க காமராசர் திடீரென்று குறிக்கிட்டார்.

''இல்லே… இல்லே… கருணாநிதி நல்லாவே ஒட்றார் நல்லாவே ஒட்றார்.  ஆமா… ஆமா… நம்மாலே இதுமாதிரி முடியாது… எங்க காலம் வேறே… வேறே… எங்க காலம் நேருவோட காலம்… நேருவோட காலம்… இவுங்களுக்கும் நமக்கும் சரிப்படாது… இப்போ… அவருதான் சரி…  அவருதான் சரி…'' (மேலும் காமராசர் சொன்ன வார்த்தைகளையும் இடக்கரடக்கல் கருதித் தவிர்திருக்கிறேன்)  என்று காமராசர் கலைஞரின் நிர்வாகத்தையும் -தனிப்பட்ட முறையிலும் பாராட்டினார்.

'
'நான் கருணாநிதி சிலையைத் திறக்கிறது அரசியல் ரீதியா சரியா இருக்குமோ என்னவோ… எனக்குச் சரியாப் படலே.  எம்.ஜி.ஆர். இப்பவே நாங்க இரண்டு பேரும் (கலைஞரும்-காமராசரும்) ஒண்ணுனு பேசுறார்.  எதுக்கும் கருணாநிதியை கலந்துக்கங்க.  அவருக்கு ஆட்சேபணையில்லேன்னா நான் வர்றேன், நான் வர்றேன்…'' என்றார்.

எல்லோரும் புறப்படுமுன் நான் அவருடைய போர்ட்டிகோவுக்கு வந்து நின்று கொண்டேன்.  கலைஞருக்கும் -காமராசருக்கும் திருவண்ணாமலை இடைத்தேர்தல் கோட்டூர்புரம் கலவரம் -விருதுநகர் தேர்தல் -நாகர்கோவில் இடைத்தேர்தல் வரை நடந்த எத்தனையோ சம்பவங்கள் நினைவிற்கு வந்தன.  காமராசரும் கலைஞரும்  பெருந்தன்மையுடன் அவைகளை மறந்துவிட்டனர்.  கலைஞரைப் பாராட்டியதை எண்ணினேன்.  எனக்கு உடல் சிலிர்த்தது.

மறத்தல் எப்பேர்ப்பட்ட வரப்பிரசாதம்.  ஆனால் அது மாமனிதர்களுக்கே கிடைக்கிறது.  எளியவர்களுக்கல்ல.

காமராசரைக் கொண்டு கலைஞர் சிலையைத் திறந்து வைக்கும் விழா வாய்க்காமலே போய் விட்டது.  நடந்திருந்தால் அது வெறும் சிலைத் திறப்பு விழாவாய் இருந்திருக்காது.  தமிழனின் வரலாற்றில் மூவாயிரம் ஆண்டுகளில் மறக்க முடியாத நினைவுச் சின்னமாய் இருந்திருக்கும்.


...திருச்சி செல்வேந்திரன்..சேயின் நோய்க்கு மருந்துண்ட தாயான தலைவர்கள்!....நக்கீரன் வெளியீடு....பகுதி 5 ல் தொடரும்..தலைப்பு ''அன்று வந்த சோதனை''

No comments: