Pages

Monday, 4 March 2013

அய்யாவைப் பற்றி அம்மையார்

ர்வலம் பெரியார் மாளிகையை அடைந்தது.  மாணவர்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில்.  பெரியார் வெளியே வந்தார். 

அன்று மாணவர்களிடையே பெரியார் ஆற்றிய உரை ஜூலியஸ் சீசர் கொலைக்குப் பின் மார்க் ஆண்டனி ஆற்றிய உரையையும் மிஞ்சியது.

''அன்புக்குரிய வாலிப ஜீவ ரத்தினங்களே!'' என்று துவங்கிய பெரியார் ''உங்கள் அன்பான ஆதரவைக் கண்டு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வாழும் உரம் பெற்றுவிட்டேன்.  நம் எதிரிகள் என் சிலையை செருப்பால் அடித்தாலும் -என்னையே செருப்பால் அடித்தாலும் அந்தக் கோபத்தையெல்லாம் இந்தத் தேர்தலில் அவர்களை அடியோடு தோற்கடிப்பதில் காட்டுங்கள்''  என்றார்.  பெரியார் சொன்னது நடந்தது.  பத்து நாட்கள் முன்னர் மாணவர்களால் வழி மறிக்கப்பட்ட அண்ணன் அன்பில், பின்னர் மாணவர்கள் அணிவகுத்து முன்செல்ல வாக்கு கேட்டுக் கொண்டு வந்தார்!
 
மாணவர்களிடம் உரையாற்றி முடித்து உள்ளே போய் அமர்ந்த பெரியாரிடம் -தினமும் அவரைப் பார்க்கப் போகும் நான் பத்து நாட்கள் 'தலைமறைவிற்கு'ப் பின் பார்த்தேன்.

''செல்வேந்திரன் -டர்னிங் பாயிண்ட் ஏற்படுத்திப் போட்டீங்க- டர்னிங் பாயிண்ட் ஏற்படுத்திப் போட்டீங்க…'' என்றார் பெரியார், என் கைகள் இரண்டையும் பிடித்து முத்தமிட்டுக் கொண்டே. எனக்கு அவர் தான் எல்லாம்!  அவரில்லாமல் நானில்லை.  இந்தப் பாராட்டுகளுக்கு ஆயிரம் பொன் மகுடங்கள் நிகராகுமா?
 
நான் மெய்சிலிர்த்துப் போனேன்.  இந்த நிகழ்ச்சி மூன்று நாட்கள் கூட நீடிக்கவில்லை.  ஊடகங்கள் பெரும் புயலைக் கிளப்பின.  வழக்கம் போல் கள ஆய்வுகள் -கருத்துக் கணிப்புகள்.  தி.மு.க. தோற்கப் போகிறது -சட்டமன்றத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எழுபது இடங்கள் கூட கிடைக்காது என்று பெரும் வதந்தி.  காவல்துறை -வருவாய்த் துறை அதிகாரிகள் பலர் தி.மு.க. அன்றைக்கு ஆளும் கட்சியாய் இருந்தாலும் எதிர்ப்புக் காட்ட ஆரம்பித்தார்கள்.

பெரியாரே ஒரு கட்டத்தில் கலக்கமடைந்தார்.  காரணம் பெரியாரின் சேலம் மாநாடுதான் இத்தனைக்கும் காரணம் என்றொரு பிரச்சாரம்.  கலைஞர் வருத்தமடைந்திருந்த பெரியாரிடம் வழக்கம்போல் துணிச்சலாக ''வருவது வரட்டும் -தோல்வியே வந்தாலும் சேர்ந்தே எதிர்கொள்வோம்.  நான் அதற்குத் தயார்'' என்றார்.

எனக்கோ நெருக்கடி அதிகமானது.  ''திருச்சி சம்பவங்களுக்குக் காரணமும் சேலத்தில் ராமரை நீ செருப்பால் அடித்தது தான்.  அதனால் பயங்கரமான குற்றப்பிரிவுகளில் உன் பேரில் வழக்குத் தொடருவேன்.  ஏழாண்டுகள் வெளிவரமுடியாது'' என திருச்சி பெரிய காவல்துறை அதிகாரி என்னை மிரட்டினார்.  அவர் 'ஆனஸ்ட்' தான், ஆனால் திராவிட இயக்க எதிர்ப்பாளர்.  பின்னாளில் உளவுத்துறையில் பெரும் பொறுப்பில் தமிழகத்தில் இருந்த அதிகாரி ஒருவரின் தந்தை.  என்னை அறியாமல் எனக்குள் ஒரு கலக்கம்.  அதிவேகம் அதி உற்சாகம் காட்டிவிட்டோமோ - 'அய்யா' என்ன சொல்லி விடுவாரோ என்று பயந்து போய் மீண்டும் ஓரிரு நாள் பெரியாரை பார்க்காமல் 'தலைமறைவு'.

பெரியாரின் நம்பிக்கைக்கு உரிய, கழகப் பொறுப்பாளர் அல்லாத அண்ணன் அடைக்கலத்திற்கு தொலைபேசியில் சொல்லி 'ஒரு மணி நேரத்தில் செல்வேந்திரனை அழைத்து வா' என்றாராம் பெரியார்.


பெரியார்முன் போய் பயத்தோடு நின்றேன்.  காவல்துறை அதிகாரி சொன்னது உள்பட யாவற்றையும் சொன்னேன்.  கண்கலங்கிவிட்டேன்.  பெரியார் என்னை அன்போடு பார்த்தார்.

''பைத்தியம்…  ஏன் பயப்படறீங்க…''  என்றார்.  ''நான் போலீசுக்குப் பயப்படலே…  அய்யாவுக்குத்தான்…''  என்றேன். பெரியார் என் தலையின் பின்முடியைப் பிடித்து செல்லமாய் உலுக்கினார்.

''எனக்காகத்தானே எல்லாம் செஞ்சீங்க…  உங்களுக்குத் தொல்லை வந்தால் நான் உட்டுடு வேனா…  பார்ப்போம்…  பார்ப்போம்…''  என்றார்.

மறுநாளே மாபெரும் சேலம் தீர்மான விளக்கத்  -தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசினார்.

'சேலத்தில் ''ராமன் சிலையை நான்தான் செருப்பால் அடிச்சேன்.  அப்படித்தானே படம் போட்டிருக்கே.  சிலையே கோவிச்சுக்கலே…  உனக்கென்ன கோவம்?''  என்று 'துக்ளக்' கார்ட்டூனை சுட்டிக்காட்டிப் பேசினார்.  'துக்ளக்' இதழ் ராமன் சிலையை பெரியார் வடிப்பதுபோல் 2 லட்சம் சுவரொட்டிகள் வெளியிட்டிருந்தது.  அதன் விளைவு பின்னால்தான் தெரிந்தது.  இவர்கள் சேய்க்கு வரும் நோய்க்கு மருந்துண்ட தாயான தலைவர்கள்.

தேர்தல் பிரச்சாரம் படுவேகமாகவும் -உக்கிரமாகவும் நடந்தது.  மற்ற செய்திகள் அனைத்தையும் பின் தள்ளிவிட்டு ராமன் சிலை சம்பவமே முதன்மைப்படுத்தப்பட்டுவிட்டது.  மதவாதிகளுக்கு தேவைப்படும்போதெல்லாம் பயன்படுவது ஒன்று பாம் அல்லது ராம்.  பெரியாரின் செயலால் தேர்தல் வெற்றி பாதிக்கப்படும் என்ற செய்தியை மதவாதிகளும் பத்திரிகைகளும் வேக வேகமாக ஊதிவிட்டனர்.  இந்திரா- கலைஞர் கூட்டணியையே இதில் உடைத்து பலவீனப்படுத்த முயன்றார்கள்.

  



இந்திராகாந்தி அம்மையார் அவர் தந்தையார்  நேரு பண்டிதரைப்போல் பகுத்தறிவுவாதியல்ல.  கடவுள் நம்பிக்கையுடைவர் என்றொரு பொதுக்கருத்து அப்போது இருந்தது.  அது ஓரளவு உண்மையும்கூட.  இந்திரா காந்தி அம்மையாரிடம் பத்திரிகையாளர்கள் படையெடுத்தார்கள்.  அவர்கள் பலரின் கையிலிருந்தது பேனா அல்ல.  கூட்டணியை வெட்டி விடும் கத்தரிக்கோல்.

சேலம் மாநாடு -பெரியார் ராமன் சிலையை,  தானே அடித்ததாய் ஒப்புக்கொண்ட செய்திகளை இந்திரா அம்மையாரிடம் காட்டி -இவர்களோடா கூட்டு?  இதை எப்படி நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள்?  என கேள்வியாகாக் கூடக் கேட்கவில்லை.  பலர் குமுறினார்கள்.  சிலர் கொந்தளித்தார்கள்.

நேருபண்டிதரின் மகளில்லையா?  இதற்கு எந்தவிதப் பதட்டமும் காட்டாமல் மென்மையாக பதில் சொன்னார்.  ''அதற்கென்ன…  பெரியார் பல ஆண்டுகளாய் இதைத்தானே செய்துகொண்டிருக்கிறார்?  (கடவுள் படத்தை எரிப்பது- சிலைகளை உடைப்பது)  இப்போது மட்டும் என்ன கோபம்'' என்றார்.
இன்னொரு சம்பவம்.  தேவராஜ் அர்ஸ்.  1970-80களில் மிகவும் பரபரப்பாய் அறியப்பட்ட பெயர்.  இந்திய அரசியல்வாதிகளிலேயே மிகவும் ஆடம்பரமான வாழ்க்கைக்குப் பெயர் போனவர்.  தங்கமும் -தந்தமும் -வைரகற்களும் இழைக்கப்பட்ட புகைக்குழாயில் (பைப்) தான் புகை பிடிப்பார்.  அவரை சென்னை கன்னிமாரா விடுதியில் மிக ஆடம்பரமான அறையொன்றில் சந்தித்தபோது அந்தக் குழாயை நான் பார்த்திருக்கிறேன்.

தேவராஜ் பற்றி..விக்கி களஞ்சியம் (ஆங்கிலம்)

செல்வாக்கு பெற்ற கர்நாடக முதல்வராய்- பின்னர் அகில இந்திய காங்கிரஸ் செயலாளராய் இந்திராகாந்தியாரின் வலதுகரமாய் செயல்பட்டவர்.  பின்னர் மாறுபட்டவர்.  எதிரியாகிவிட்டவர்.  கன்னிமாரா விடுதியில் ஒரு நண்பர் அர்சிடம் ''இந்திரா காங்கிரசை விட்டு விலகிய நீங்கள் ஏன் பெரியாரைப்போல் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக ஓர் இயக்கம் துவங்கிப் போராடக்கூடாது?''  என்று கேட்டார்.  அர்ஸ் வேகமாய் குறுக்கிட்டார்.  ''என்னை அந்த மாமனிதனோடு ஒப்பிடாதீர்கள்.  நான் வெறும் அரசியல்வாதி.  (No… No…  don't compare me with that great man.  I am after all a politician)  (அப்போது பெரியார் இல்லை)  அர்ஸ் மேலும் தொடர்ந்தார்.

''ஒருமுறை தமிழக காங்கிரஸ் தலைவர் நியமனம் பற்றி என்னோடு இந்திராகாந்தி ஆலோசனை கலந்தார்.  'மிஸ்டர் அர்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் வளர கோஷ்டிகளுக்கு அப்பாற்பட்ட ஒருவரைத் தலைவராக நியமிக்க வேண்டும் யாரைப் போடலாம்' என்றார் இந்திரா.

நான் (அர்ஸ்) சொன்னேன்.  'ஏன், ஆர்.வெங்கட் ராமனைப் போடலாமே'  (பின்னாளில் ஜனாதிபதியாக இருந்தவர்)  என்றேன்.  எப்போதும் காலையில் குளிக்குமுன் இந்திராகாந்தி ஒரு தைலம் தடவிக் கொண்டு சாவதானமாய் சாய்ந்து அமர்ந்திருப்பார்.  அப்போது யாரையும் சந்திக்கமாட்டார்.  எனக்கு (அர்ஸ்) விதிவிலக்கு.  நான் சொன்னதுதான் தாமதம்.  இந்திரா கோபமாய், நாற்காலியின் முன் பகுதிக்கு வந்துவிட்டார்.

'என்ன அர்ஸ் பைத்தியக்காரத்தனமாகப் பேசுகிறீங்கள்.  உங்கள் அண்டை மாநில அரசியல் சூழல் கூட தெரியாமல் இருக்கிறீர்கள்.  ஒரு பிராமணரை கட்சித் தலைவராகப் போட்டால் அந்தக் கட்சியைத் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?  அது பெரியார் ஈ.வெ.ரா.வின் பிரச்சாரத்தில் ஊறிய மண்' என்றார் இந்திராகாந்தி''  என்று மூச்சுவிடாமல் வேகமாய் ஆங்கிலத்தில் சொன்ன அர்ஸ்…  ஒருகணம் அப்படியே பேச்சை நிறுத்திவிட்டார்.

அது அவர் இந்திராகாந்தியிடம் கடும் கருத்து வேறுபாடு கொண்டிருந்த- தாக்கிப் பேசிக்கொண்டிருந்த நேரம்.  இருந்தாலும் இந்திராகாந்தியையும் அவருடைய தந்தை நேரு பண்டிதரையும் பாராட்டினார்.  பெரியவர்கள் பெரியவர்கள் தான்.

தேவராஜ் அர்ஸ் மேலும், ''தமிழ்நாட்டின் அரசியல் ரசாயனத்தை இந்திராவுக்கு அவருடைய தந்தை நேரு பண்டிதர் எவ்வளவு துல்லியமாய் கற்பித்திருக்கிறார்.  அதை அந்த அம்மையார் எவ்வளவு ஆழ்மனதில் பதித்திருக்கிறார் பாருங்கள்.  பெரியார் அப்படிப்பட்டவர்''  என்றார்.

ஏறக்குறைய ஏழெட்டு ஆண்டுகள் முன்னர் 1971 தேர்தலின்போது இந்திராகாந்தி எளிதாய் பெரியார் பற்றி சொன்ன கருத்தின் ஆழம் எப்படி வந்தது என்று எனக்குப் புரிந்தது.  பெரியார் உடலாய் இல்லை, வரலாறாய் வாழ்கிறார்.

மறுபடியும் நினைக்கிறேன்.  அந்த 1971 தேர்தலில் கலைஞர் வெற்றி பெற்றிருக்காவிட்டால்?  பெரியார் என்னுடைய செயலைத் தானே செய்ததாய் அறிவித்திருக்காவிட்டால்…?  நான் துன்பத்தின் உளைச்சலில் மடிந்து போயிருப்பேன்.

சிறகில் எனை மூடி அருமை மகன்போல
வளர்த்த கதை சொல்லவா?
கனவில் நினையாத காலம் இடைவந்து
பிரித்த கதை சொல்லவா?
இந்த மண்ணும் கடல் வானும்
மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதய்யா…

உறவைப் பிரிக்க முடியாதய்யா!

...திருச்சி செல்வேந்திரன்..சேயின் நோய்க்கு மருந்துண்ட தாயான தலைவர்கள்!...நக்கீரன் வெளியீடு...தொடரும்... பகுதி7-ல்-  தலைப்பு ''
'இந்தியனாய் இருந்து இழந்தோமா? பெற்றோமா? ''



No comments: