Pages

Sunday, 3 March 2013

கலைஞரை பாராட்டிய காமராஜர்

திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் பாடலூர் அருகில் பெரியார் குடிலும், பெரியார் வளைவும், தனியே நிற்கும் ஒரு ஓட்டுவில்லைக் கொட்டகையும் என்னைப் பொறுத்தவரையில் வெறும் கட்டிடங்கள் அல்ல.  நெஞ்சைவிட்டு நீங்காத நினைவுச் சின்னங்கள்.

நல்லசெல்வம் என்ற ஒரு அருமையான பெரியார் காலத் தொண்டர்.  சட்ட எரிப்புப் போரில் சிறைக்குச் சென்றவர்.  இன்னொருவர் ஆசிரியர்- பெரியார்குடில் முத்துசாமி.  (மூத்த திராவிடர்கழகத் தலைவர் திருவாரூர் தங்கராசுவின் சம்பந்தி)

பெரியார்குடில் -அழகான இயற்கைச் சூழலில் அமைதியாய் அமைந்துள்ள அருமையான கல்வி நிறுவனம்.  இது பெரியார் தொண்டர் முத்துசாமியின் நினைவுச் சின்னம்.  அந்த ஒற்றை ஓட்டு வில்லைக்குடில்,  நல்லசெல்வத்தை நினைவூட்டும் தோட்ட இல்லம்.

இந்த அரும்பணிகளுக்கெல்லாம் துணை நின்ற மிசா வீரர் -முன்னாள் சட்டமன்ற தி.மு.க உறுப்பினர் ஜே.எஸ்.ராசுவுக்கு நினைவுச் சின்னம்?  நல்லவர்கள் -நன்றியுள்ளவர்கள் -நெஞ்சம்தான்…

இந்த இரூர் பெரியார் வளைவை காமராசர் கையால் திறந்துவைக்க நல்லசெல்வமும் முத்துசாமியும் விரும்பினார்கள்.  காமராசரை நான் நேரில் பார்ப்பது இது இரண்டாம் முறை.  இரவு ஏழு மணிக்குச் சந்திக்க வரலாம் எனத் தலைவர் காமராசர் இல்லத்திலிருந்து பதில் சொன்னார்கள்.  அப்போதெல்லாம் ஆட்டோ ரிக்ஷாக்கள் அதிகம் கிடையாது.  பேபி டாக்ஸிகள்தான்.  ராயப்பேட்டை பழைய உட்லண்ட்ஸ் விடுதியிலிருந்து வண்டி பிடித்து பெருந்தலைவர் வீடுபோய்ச் சேர இரவு எட்டு மணியாகிவிட்டது.

ஒன்பது ஆண்டுகள் அசைக்க முடியாத முதலமைச்சர் இரண்டு இந்தியப் பிரதமர்களை அமைதியாய்த் தேர்ந்தெடுத்த ராஜதந்திரி.  பண்டித நேருவின் மறைவிற்குப்பின் உலகத் தலைவர்களால் ஆச்சரியத்தோடு பார்க்கப்பட்ட மாபெரும் தலைவர்.  கடுமையான பாதுகாப்பு- கூட்டம் -கார்களின் வரிசை இவைகளை எதிர்பார்த்துப்போன எங்களுக்கு பெரும் அதிர்ச்சி யாருமே இல்லை.  அந்த வளாகமே வெறிச்சோடி கிடந்தது.

வீட்டு வாசலில் போய் நின்றோம் யாருமில்லை.  அழைப்புமணி எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை.  ஒரு வேளை இல்லையோ….?
முத்துசாமி மெல்ல மேலேறி ''அய்யா… அய்யா…'' என்றார் இரண்டு முறை.  பதில் இல்லை.  சில நிமிடங்கள் இப்படியே ஓடின.  பின்கட்டில் யாரோ குறுக்கே போனார்கள்.  முத்துசாமி 'ஐயா' என்றார்.  அவர் வந்தார்.  வந்த காரியத்தையும் தலைவரைச் சந்திக்க நேரம் கேட்டு அவர் ஒப்புக் கொண்டதையும் சொன்னோம்.  ஓரிரு நிமிடங்களில் வரவேற்பறை போன்ற இடத்திற்கு படுக்கை அறையிலிருந்து வந்தார் தலைவர்.  எங்களுக்கு அடுத்த அதிர்ச்சி.

சட்டையில்லாத அந்தப் பெரிய உடம்பில் ஒரு குற்றாலம் ஈரிழைத்துண்டு.  இடையில் நாலு முழம் வேட்டி.  காலையில் முகச்சவரம் செய்யவில்லை போலிருக்கிறது.  ஆசிரியர் முத்துசாமி சாதாரணமாக சிறியவர்களிடமும் பணிவாய்ப் பேசுகின்றவர்.

''அய்யா… மன்னிக்கணும்… காலதாமதமாய் வந்து தொந்தரவு செய்யுறோம்… மன்னிக்கணும்… வாடகை வண்டி கிடைப்பதில் தாமதம், போக்குவரத்து நெருக்கடி, மன்னிக்க வேணும்…''

என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அந்த ஆற்றல்மிக்க பெருந்தலைவருக்குள் இருந்த எளிய மனிதன் வெளியே வந்தார்.  வழக்கப்படி பேச்சைத் தொடங்கும்முன் அந்த 'ஏ' மட்டும் மாறவில்லை.

'
'ஏ… யாரப்பா நீ… பைத்தியக்காரனா இருக்கே… மன்னிக்கணும்… மன்னிக்கணும்ங்றே… இப்போ இங்கே எவனும் வர்றதில்லைப்பா எங்கிட்டே 'பவர்' இல்லை… எவனும் வர்றதில்லே… சாதாரண ஆளுங்கதான் வெளியூர்லேர்ந்து வர்றான்.  பைத்தியக்காரனா இருக்கியே… மன்னிப்பு… மன்னிப்புன்னு… அதெ உடுன்னேன்.  'பவர்' போயிருச்சப்பா… 'பவர்' இல்லை… யாரும் வர்றதில்லே… டிரைவர்கூட இங்கேயே இருக்கமாட்டேங்கிறான்.  அங்கே ஒரு கடைக்கு போயிர்றான் பீடி குடிக்க.  கூப்பிட வேண்டியிருக்கு… நீ யாரப்பா பைத்தியக்காரனா இருக்கே…'' என்றார்.  அவர் சாதாரணமாய்த்தான் பேசினார்.  எவ்வித பதற்றமோ, ஆதங்கமோ… கோபமோ அவரிடம் இல்லை.

நாங்கதான் கண்ணீர் விடும் நிலைக்கு வந்துவிட்டோம்.  முத்துசாமி உணர்ச்சி வயப்பட்டு விட்டார்.  மயிலைக் குளக்கரையில் கல்லாய் நிற்கும் கபாலியைக் காண ஆயிரக்கணக்கில் நிற்கும் கூட்டத்திற்கு முன் கல்வி தந்த கடவுள் இங்கே இருக்கும் நிலையை எண்ணினேன்.  நாங்கள் நாங்களாக இல்லை.  இயல்புநிலை திரும்ப சிலகணங்கள் ஆயின.  முத்துசாமி வெளிப்படையாய் அழுது விட்டார்.  நாங்கள் கண்களைத் துடைத்துக் கொண்டோம்.  மீண்டும் காமராசரே பேச்சைத் துவங்கினார்.


'
'ஏ… விடப்பா… விடப்பா… நீ எல்லாம் யாரு…. உனக்கெல்லாம் நான் என்ன செஞ்சேன்.  செஞ்சவனையெல்லாம் காணோம்… உடு… உடு… வந்த வேலை என்ன… சரியாச் சொல்லு''  

என்றார்.  தலைவர் காமராசர் இரூர் பெரியார் வளைவைத் திறந்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.  அரசியல் கடும் வேலை நெருக்கடிகளால் முறையான மருத்துவப் பரிசோதனைகள் கவனிப்பு இன்றியும் -மன உளைச்சல் -வயது இந்தக் காரணங்களால் காமராசருக்கு ரத்த அழுத்தம் -நீரிழிவு -போன்ற நோய்கள் வெளியில் தெரியாமல் இருந்திருக்கின்றன.  அந்தச் சோர்வு அவர் பேச்சில் தெரிந்தது.

'
'பதினைந்து நாள் கழிச்சு வாங்க சொல்றேன்.  இப்போ நான் எந்த நிகழ்ச்சிக்கும் போறதில்லே.  அரசியல் சரியா இல்லே.  நான் சொல்றேன்… பாக்கலாம்… பாக்கலாம்…'' 


என்றபடி எழுந்தார்.  விடைபெற்றுக் கொண்டோம்.

ஏறக்குறைய பத்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் திராவிடர் கழகத்தின் சார்பில் அன்றைய முதல்வர் கலைஞருக்குச் சென்னை அண்ணாசாலையில் சிலையெடுக்கும் முயற்சி நடந்து கொண்டிருந்தது.

கலைஞரின் சிலையைத் திறப்பதற்கு தலைவர் காமராசரைக் கேட்டுக் கொள்வதென முடிவாயிற்று.  அப்போது பெரியார் இல்லை.  தலைவர் காமராசர் 1971 பொதுத்தேர்தல் தோல்விகளுக்குப்பின் உடல்நலம் குன்றி அதிகம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.  எம்.ஜி.ஆர். தி.மு.க. விலிருந்து விலகி அ.தி.மு.க. என்ற அமைப்பை நடத்திக் கொண்டிருந்தார்.


தியாகராயர் திருமலைப்பிள்ளை தெருவிலிருந்த தலைவர் காமராசரை பார்த்து ஒப்புதல் கேட்பதற்காக மறைந்த விடுதலை மேலாளர் நாகரசம்பட்டி சம்பந்தத்துடன் சென்றிருந்த குழுவினருடன் நானும் யதேச்சையாய் சென்றிருந்தேன்.


வேறு பல செய்திகளைப் பேசியபின் கலைஞர் சிலை திறப்பு வேண்டுகோளை நண்பர்கள் வைத்தனர்.  பேச்சு… கலைஞர் -அரசு -நிர்வாகம் எனத் திசைமாறியது.  வந்திருந்த முக்கியமான நண்பரொருவர் தன் வழக்கப்படி காமராசரை மகிழ்விக்கும் வண்ணம்-

1954-1962 இடையிலான காமராசர் முதல்வராய் இருந்த கால செய்திகளைச் சொல்லிப் பாராட்டிக் கொண்டிருந்தார்.  முதல்வர் கலைஞர் செய்த சிலவற்றைச் சொல்லி -இதையே காமராசர் முதல்வராய் இருந்தால் இன்னுமும் சிறப்பாய் செய்திருப்பார் என்று காமராசரைப் பாராட்டுவது போல் பேசிக் கொண்டிருக்க காமராசர் திடீரென்று குறிக்கிட்டார்.

''இல்லே… இல்லே… கருணாநிதி நல்லாவே ஒட்றார் நல்லாவே ஒட்றார்.  ஆமா… ஆமா… நம்மாலே இதுமாதிரி முடியாது… எங்க காலம் வேறே… வேறே… எங்க காலம் நேருவோட காலம்… நேருவோட காலம்… இவுங்களுக்கும் நமக்கும் சரிப்படாது… இப்போ… அவருதான் சரி…  அவருதான் சரி…'' (மேலும் காமராசர் சொன்ன வார்த்தைகளையும் இடக்கரடக்கல் கருதித் தவிர்திருக்கிறேன்)  என்று காமராசர் கலைஞரின் நிர்வாகத்தையும் -தனிப்பட்ட முறையிலும் பாராட்டினார்.

'
'நான் கருணாநிதி சிலையைத் திறக்கிறது அரசியல் ரீதியா சரியா இருக்குமோ என்னவோ… எனக்குச் சரியாப் படலே.  எம்.ஜி.ஆர். இப்பவே நாங்க இரண்டு பேரும் (கலைஞரும்-காமராசரும்) ஒண்ணுனு பேசுறார்.  எதுக்கும் கருணாநிதியை கலந்துக்கங்க.  அவருக்கு ஆட்சேபணையில்லேன்னா நான் வர்றேன், நான் வர்றேன்…'' என்றார்.

எல்லோரும் புறப்படுமுன் நான் அவருடைய போர்ட்டிகோவுக்கு வந்து நின்று கொண்டேன்.  கலைஞருக்கும் -காமராசருக்கும் திருவண்ணாமலை இடைத்தேர்தல் கோட்டூர்புரம் கலவரம் -விருதுநகர் தேர்தல் -நாகர்கோவில் இடைத்தேர்தல் வரை நடந்த எத்தனையோ சம்பவங்கள் நினைவிற்கு வந்தன.  காமராசரும் கலைஞரும்  பெருந்தன்மையுடன் அவைகளை மறந்துவிட்டனர்.  கலைஞரைப் பாராட்டியதை எண்ணினேன்.  எனக்கு உடல் சிலிர்த்தது.

மறத்தல் எப்பேர்ப்பட்ட வரப்பிரசாதம்.  ஆனால் அது மாமனிதர்களுக்கே கிடைக்கிறது.  எளியவர்களுக்கல்ல.

காமராசரைக் கொண்டு கலைஞர் சிலையைத் திறந்து வைக்கும் விழா வாய்க்காமலே போய் விட்டது.  நடந்திருந்தால் அது வெறும் சிலைத் திறப்பு விழாவாய் இருந்திருக்காது.  தமிழனின் வரலாற்றில் மூவாயிரம் ஆண்டுகளில் மறக்க முடியாத நினைவுச் சின்னமாய் இருந்திருக்கும்.


...திருச்சி செல்வேந்திரன்..சேயின் நோய்க்கு மருந்துண்ட தாயான தலைவர்கள்!....நக்கீரன் வெளியீடு....பகுதி 5 ல் தொடரும்..தலைப்பு ''அன்று வந்த சோதனை''

Saturday, 2 March 2013

தலைவர் காமராசர்...



லைவர் காமராசர் அப்போது முதலமைச்சர் அவருடைய அளவிற்கரிய சாதனைகளைப் போலவே அவருடைய கோபமும் ஊரறிந்தது.  அதுவும் மதிய உணவுநேரக் கோபம் உலகறிந்தது.  உள் நோக்கமில்லாதது. ஒரே நொடியில் நிலைமையை உணர்ந்ததும் அமைதியாகிவிடக் கூடியது.

காமராசரின் கட்சி பெரியாரின் திராவிடர் கழகத்தோடு நெருக்கமாய் இருந்த 1961-62-ம் ஆண்டு.  நான் திருச்சி நகர திராவிடர் கழகச் செயலாளர் திருச்சியில் நிலமில்லா விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட வட்டாட்சியர் பற்றி புகார் சொல்வதற்கு முதலமைச்சர் காமராசரை ஒரு குழுவாய்ச் சென்று சந்தித்தோம்.  முதலமைச்சர் காமராசரை முன்னேற்பாடு இல்லாமல் யாரும் அதிலும் குறிப்பாய் வெளியூர் பொதுமக்கள் சந்திக்கலாம்.  அன்றைய அமைச்சர்களில் பார்வையாளர்களை சந்திப்பதில் அதிக கெடுபிடி காட்டுபவர்கள் பக்தவத்சலமும், கக்கனும்தான் (எங்கள் அனுபவத்தில்)  காரணம் இருவருக்கும் தந்தை பெரியார் என்ற பெயரே பிடிக்காது

அன்று மதியம் ஒன்றரை மணி.  முதலமைச்சர் அறையின் வாசலில் வரிசையாய் நின்றவர்கள் ஒவ்வொருவராய் உள்ளே போனார்கள்.  முதலமைச்சரிடம் நேர்காணல்…  எங்கள் குழுவில் எல்லோருக்கும் அதுவே முதல் முறை.

காமராசர் மேசையின் பின் அமர்ந்து பேசமாட்டார்.  சற்று சாய்ந்த நாற்காலி பக்கத்தில் ஒரு கைமேசை (டீபாய்) அவ்வளவே.  கையிலிருந்த மனுவை நீட்டு முன்பே 'இருக்கட்டும் இருக்கட்டும்' என்றார்.  நான் சொல்லத் துவங்கினேன்.

'அய்யா… நாங்கள் திருச்சிலேர்ந்து வர்றோம்.  எங்க ஊர் தாசில்தார்…''  என்ற செய்தியை இரண்டு வரிதான் சொல்லியிருப்போம்…

திடீரென்று வெடித்தார் ''ஏ… நாட்டுல ஒரு தாசில்தார்தான் இருக்கானா… ஆயிரம் பேர் இருக்கான்… எவனைப் போய் கேக்கிறது… எழுதிக் கொண்டாந்திருக்கியா'' என்றார்.

அப்போது என் வயது இருபத்தொன்று.  எவ்வளவு பெரிய தலைவர் முன் நிற்கிறோம் என்று ஏற்கனவே இருந்த பதற்றத்தில் மேலும் பதற்றம்…

''என்ன… என்ன… முழிக்கிறே… மனு கொண்டாந்திருக்கியா…'' என்றார்.  உடன் வந்த நண்பர்கள் கையிலிருந்த பையைத் திறந்து கத்தையாய் இருந்த காகிதங்களில் இருந்து பொறுக்கி எடுத்து விண்ணப்பத்தைக் கொடுத்தார்கள் வாங்கிக் கைமேசையில் வைத்துக்கொண்டார்.

மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.  எவ்வித நடவடிக்கையும் இல்லை.  மீண்டும் சென்னைக்குப் படையெடுத்தோம்.  காலையிலேயே இம்முறை வேண்டுகோளைக் கொடுத்துவிட முயன்றோம்.  சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றதால் முதல்வர் காமராசர் சீக்கிரவே புறப்பட்டுவிட்டார்.  மறுபடியும் மதியம் ஒன்றரைமணி, பசி நேரம்… பயத்துடன்தான் முதல்வர் அறை வாசலில் பார்வையாளர் வரிசையில் நின்றோம்.

எங்கள் முறை வரும்போது மணி இரண்டு.  காமராசர் படபடவென்று பார்வையாளர்களைப் பார்த்து அனுப்பிக் கொண்டிருந்தார்.

கடந்த முறை அனுபவத்தில் தட்டச்சு செய்திருந்த வேண்டுகோளைக் கையிலெடுத்துக் கொண்டு உள்ளே போனோம்.  தாளைக் கையில் கொடுத்தேன்.  வாங்கி மேசையில் வைத்தார்.

அதே கனமான அதட்டும் குரல் '' என்ன… என்ன… என்னேன்னேன்'' என்றார்.
'அய்யா… எல்லா விவரமும் அதில் எழுதியிருக்கோம்'' என்று இழுத்தேன். படீரென்று வெடித்தார்.  ''மூளை இருக்கா?  ஒவ்வொருத்தரும் ஒரு கத்தை எழுதிக்கிட்டு வர்றியே எல்லாத்தையும் படிச்சுக்கிட்டே இருக்க முடியுமா…  மூளை இருக்கான்னே…'' என்றார் பெருங்குரலில்.

எனக்கு கோபம் இளம்கன்று பயமறியாதல்லவா!  நான் முதல்வரிடம் கொடுத்த எங்கள் கோரிக்கை கடிதத்தைக் குனிந்து சட்டென்று எடுத்துக்கொண்டு வெளியேப் போகத் திரும்பினேன்.

பயங்கர பூகம்பம்…!  தலைவர் காமராசர் போட்ட சத்தத்தில் வெளியிலிருந்த காவலரெல்லாம் உள்ளே வந்துவிட்டார்கள்…

''ஏன் எடுத்தே… ஏன் எடுத்தே… ஏய் என்ன செய்யுறே…'' என்றார் காமராசர் கடுங்கோபத்துடன்.

நான் கொஞ்சம் நிதானமானேன்.  ''வாயால் சொன்னாலும் சத்தம் போடுறீங்க…  காரியம் ஒண்ணும் ஆகலே…  தாசில்தார் எங்களுக்குத் தொல்லை கொடுக்கிறான்… கோரிக்கையும் வேணாம்.  நடவடிக்கையும் வேணாம்…  நாங்க போறாம்…'' என்றேன்.

அப்போதுதான் மாமனிதர் காமராசர் வெளிப்பட்டார்.

''சரி… சரி… அதெக்குடு நான் கவனிக்கிறேன்'' என்றார்.  அமைதியான கோபம் அடங்கிய குரலில்.

'மன்னிச்சுக்கங்கய்யா நாங்க போறாம்'' என்றேன்.

''ஏ… அவங்கிட்டே அதை வாங்கு.  சிறு பையன்…  சிறு பையன்…  கோபப்படுகிறான்… அதைக்கொண்டா'' என்றார்.  ஓரிரு விநாடிகள் முரண்டுக்குப்பின் நண்பர்களிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்தேன்.

''நீ தானே எடுத்தே, நீயே கொண்டா'' என்றார் மென்மையான குரலில்.  நான் நெகிழ்ந்து விட்டேன்.  இந்த முறை சற்றுக் குனிந்து வணங்கி அவர் கையில் கொடுத்தேன்.

''பைத்தியக்காரா…  பொதுக்காரியத்துக்கு வரும்போது கோபப்படக்கூடாது.  நீ என்ன செய்யறே'' என்றார்.

உடன் வந்த நண்பர்கள்,  நான் விவசாயம் செய்பவன் என்றும், திராவிடர் கழகத்தவன் என்றும் தந்தை பெரியார் எங்கள் குடும்ப நண்பர் என்றும் சொன்னார்கள்.  காமராசர் ''அதான்…  அதான்…'' என்றார்.  அந்த அதானுக்கு பொருள் என்னவென்று இன்றும் புரியவில்லை.

முதல்வரிடம் தந்த கோரிக்கை மனுபேரில் இரண்டாம்நாளே ஆய்வு தொடங்கியது.  தாசில்தாருக்கு வேலையே போய்விட்டது.

....திருச்சி செல்வேந்திரன்..(தி.மு.கழக வெளியீட்டுச் செயலாளர்)சேயின் நோய்க்கு மருந்துண்ட தாயான தலைவர்கள்!.....நக்கீரன் வெளியீடு...பகுதி 4 ல் தொடரும்..தலைப்பு ''கலைஞரை பாராட்டிய காமராசர்''


கலைஞரைக் கண்டவுடன்


பெரியாரின் பேச்சில் நிலைகுலைந்து போனார்கள்.  இரண்டுமாத விவாதங்கள் சாதிக்காததை பெரியாரின் பணிவான- ஆனால் உறுதியான வேண்டுகோள் தகர்த்துவிட்டது.  சாகின்றவரை அதில் மாற்றமே இல்லை.  பின்னர் 1965-ல் அரசியல் எதிரிகளால் துவங்கிய எங்கள் உறவு நட்பாகி - காதலாகி- 1968-ல் பெரியாரின் தலைமையில் கணவன்-மனைவியாகி - நாற்பதாண்டுகள் எத்தனையோ துன்பங்கள்- ஓராண்டு 'மிசா' சிறைவாசப் பிரிவு- எதிலும் சலனமில்லாமல்  கடந்த ஜூன் 2008 வரை தொடர்ந்தது.

சமயக்கொள்கையில் மாறானவராயும் அரசியல்  கொள்கையில் எதிரானவராயும் இருந்தவளை என் மனைவியாக்கிக்கொள்ளப் பெரியாரிடம் போனபோதுதான் பெரியார், கட்டுரையின் துவக்கத்தில் சொன்ன வரிகளைச் சொன்னார்.  காரணம் 1968-ல் தி.மு.க. வும் பெரியாருடன் மீண்டும் நட்பாகிவிட்டது.

பெரியார் எனது இயக்கத் தலைவராய் மட்டுமில்லாமல் குடும்ப ஆலோசகராகவும் இருந்தார்.  என்னுடைய துணைவியார் பி.எஸ்.ஸி., பி.எட். பட்டதாரி எனக்கு வேலைக்கு அனுப்ப விருப்பமில்லை.  பெரியார் என்னைக் கோபித்துக்கொண்டு கட்டாயமாய் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பணியில் சேரச்செய்தார்.

பின்னர் 1975 இறுதியில் 'மிசா' மேகம் தமிழகத்தைக் கவ்வியது.  நானெல்லாம் தனிமைப் படுத்தப்பட்டு 366 நாட்கள் மிசா சிறையிலிருந்தேன்.  சோதனை மேல் சோதனை.  கர்நாடகா இப்போது போலவே அப்போது கபினி, ஹேமாவதி ந்திகளில் அணைகட்டி காவிரியைக் காயப் போட்டது.  

நெல்லை இருப்பு வைத்திருந்த என் போன்ற நில உடமையாளர்கள் குடும்பங்கள் ரேஷன் கடைகளில் அரசி வாங்கிச் சாப்பிடும் சூழ்நிலை.  கடன் நிவாரணச் சட்டங்களால் என் உரக்கடைத் தொழில் அடியோடு நசிந்துவிட்டது.  குறைவான மாதச்சம்பளம் தான் என் மனைவியையும், குழந்தைகளையும் பசியின்றிக் காப்பாற்றியது.  அப்போது பெரியார் உயிரோடு இல்லை.

ஆனாலும் பெரியாரை நினைத்துக் கொண்டேன்.  அவர் மட்டும் என்னைக் கடிந்து கொண்டு என் மனைவியை வேலைக்கு அனுப்பியிராவிட்டால்?  மறக்க முடியுமா? பெரியார் என் குடும்பத்திற்குச் செய்த அந்த உதவியை?

'மிசா' சிறையிலிருந்த ஏராளமான தி.மு.க. தோழர்கள் குடும்பங்களுக்கு கலைஞர் மாதந்தோறும் உதவித்தொகை அனுப்பிக் கொண்டிருந்தார்.  அதில் சில திராவிடக் கழகத் தொண்டர்களும் மாத உதவித் தொகை பெற்று வந்தார்கள்.

நான் 1967-க்கு முன்னே பெரியார் ஆணைப்படி தி.மு.க வை மிகக் கடுமையாய் மேடைகளில் எதிர்த்துப் பேசியுள்ளேன்.  என்னுடைய பெண் நண்பர்- பின்னர் துணைவி 1965-ல் துவங்கிய நட்பு 1968-ல் திருமணமாகி கடைசிவரையிலும் அவர் தீவிர தி.மு.க. வேடிக்கையான நட்புப் பேச்சு- அரசியல் பக்கம் திரும்பி சண்டையில் முடியும்.

''மூன்று மாதங்களுக்கு முன்னால்…  என் துணைவியார் இறப்பதற்கு முன்னர் மருத்துவமனையில் அவளைப் பார்க்க வந்த நக்கீரன் ஆசிரியர் கோபாலிடம் ''கலைஞரை அடிக்கடி பார்ப்பீர்களா… அவர் எப்படி இருக்கிறார்'' என்றாள், தான் சாகப்போகிறோம் விரைவில் என்று தெரியாமல்.


''இறைவன் இணைத்து வைத்ததை மனிதன் பிரிக்காமல் இருப்பானாக'' என்கிறது பைபிள்.  ''இயக்கம் இணைத்து வைத்ததை இயற்கை பிரித்துவிட்டது''  என்னைப் பொறுத்தவரையில் உயிர் இதோ இதை எழுதிக் கொண்டிருக்கிறது.  இதனைத் தாங்கிக்கொண்டிருந்த உடல் மண்ணோடு மண்ணாக… சாம்பலோடு சாம்பலாக…

முதலமைச்சராய் இருந்த தலைவர் கலைஞர் என் வீட்டிற்கு வந்தார்.  மிகவும் உடைந்து போயிருக்கிறேன் என அறிந்து ஆறுதல் சொல்ல… குறுகிய சாலை…  உயரமான படிக்கட்டுகள்… அதில் ஏறிவரும் வயதா…? உடல் நிலையா…? வந்தார்.

'எதற்கும் கலங்கமாட்டோம்.  உணர்வுகளைக் காட்டியதில்லை.  பெரியார் உட்பட யார் காலிலும் விழுந்ததில்லை இந்த எழுபது வயதில்' என்ற என்னுடைய கம்பீரம் தகர்ந்துபோனது.  அவரைப் பார்த்தவுடன் எல்லோர் முன்னிலையிலும் உடைந்து அவர் காலில் விழுந்துவிட்டேன்.  தலைவரும் கண்கலங்கிவிட்டார்.  தட்டிக்கொடுத்து… ஆறுதல் சொன்னார்.  ''உங்களுக்கு எல்லாம் தெரியும்… நான் என்ன சொல்ல'' என்றார்..

கடைக்கோடி தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவனைத் தேற்றுகின்ற- ஆற்றுப்படுத்துகின்ற இருபெருந்தலைவர்களோடு வாழ்ந்திருக்கிறேன், வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

தொண்டனை வெறும் உறுப்பினராய் நினைக்காமல் தன் உறுப்பாய் கருதும் தலைமுறையில் கடைசித் தலைவர் கலைஞர் ' சென்னைக்கு வா' என்று சொல்லி விடைபெறுகிறார்.
 
'திருவாருரில் பிறந்தார் எல்லார்க்கும் அடியேன்' என்ற தேவாரம் காதில் ஒலிக்கிறது.

...திருச்சி செல்வேந்திரன்..(தி.மு.கழக வெளியீட்டுச் செயலாளர்) சேயின் நோய்க்கு மருந்துண்ட தாயான தலைவர்கள்!.....நக்கீரன் வெளியீடு...பகுதி 3 ல் தொடரும்

காதலியின் மனதை மாற்றியப் பெரியார்


''மக்கு எதிரியா இருந்தவங்க எல்லாம் ராசியா ஆகிட்டிருக்கிற நேரம்ஒங்க பங்குக்கு நீங்களும் ஒருத்தரை கூட்டிட்டு வந்துட்டீங்க''  என்று குழந்தைபோல் சிரித்தார் பெரியார்.

அது 1968-ம்  வருடம்அதற்கு முன் 1949-ல் பெரியாரிடமிருந்து பிரிந்து கசப்பான மோதுதல்களோடு இருந்த தி.மு..  1967 தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றபின் அதே 1967 தேர்தலில் பல்லும் நகமும் தேயத் தங்களை எதிர்த்துத் தோற்கடிக்கப் பாடுபட்ட தங்கள் தலைவர் பெரியாரிடம் வந்துசேர்ந்து சில மாதங்களே ஆன நேரமது.

காங்கிரஸ்காரர்கள்- குறிப்பாய் தலைவர் பெரியாரின் சொந்த அண்ணன் மகன் மதிப்பிற்குரிய அண்ணன்.வெ.கி.சம்பத் (இன்றைய நடுவன் அமைச்சர் இளங்கோவனின் தந்தை) போன்றவர்களே இந்த உறவைக் குறைகூறி பேசியபோது அண்ணா சொன்ன வார்த்தை வரலாற்றுக் கனபரிபாணமும் இலக்கியச் செறிவும் மிக்கதாகும்அண்ணா சொன்னார், ''பிரிந்த தந்தையிடம் மகன் சேர்வது குணங்களில் ஒன்றே தவிர- குற்றங்களில் ஒன்றல்ல.''

அன்று விழுப்புரம் பயணியர் விடுதியில் தந்தை பெரியாரின் முன்னால் நான், பெரியாரிடமே 'நாணயமாணவன்' என்று பெயர் வாங்கிய அவருடைய நம்பிக்கைக்குரிய செயலாளர் ஈரோடு சுப்பையா, என் வாழ்வில் மறக்க முடியாத தொழிலதிபர் அடைக்கலம், பெரியாரின் டிரஸ்ட்டில் உறுப்பினராய் இருந்த மீனாட்சிசுந்தரம், பின்னர் என் வாழ்க்கை துணையாகிவிட்ட எனது பெண் நணபர் காதரின் எல்லோரும் நின்றோம்மதம் மறுப்பு, சாதி மறுப்பு, சடங்கு மறுப்புத் திருமணத்தை நாங்கள் இருவரும் விழுப்புரம் பொதுக்கூட்ட மேடையில் நடத்திக்கொள்ள பெரியாரிடம் சென்றோம்அவர் முன் நின்றோம்.

பெண் கிருத்துவர் நான் சட்டப்படி இந்து எனப்பட்ட பகுத்தறிவுவாதி.  சுயமரியாதைத் திருமணச் சட்டம் அப்போது அமலுக்கு வந்துவிட்டது என்றாலும் அது இரண்டு இந்துக்கள் இடையேதான் நடக்கவேண்டும்சட்டச் சிக்கல்.

ஒருமுறை ஒரு இந்துவுக்கும்-கிறித்துவருக்கும் பெரியார் தன் தலைமையில் திருமணம் முடித்து வைத்து அது சட்ட சிக்கலாகி பாதிரிமார்கள் பெரியாரின் பேரில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கச் செய்துவிட்டார்கள் அதே எங்கள் திருச்சியில்இப்போது நான் இரண்டாவதுஅப்போது நான் தந்தை பெரியாரால் நியமிக்கப்பட்ட திருச்சி நகர திராவிடர் கழகத் தலைவர்என்னுடைய துணைவியார் மதப்படி கொள்கை ரீதியாய் பெரியார் இயக்கத்தின் எதிரி

ஆனால்
, இந்தக் காதலுக்கு விதை போட்டவரே ஒருவகையில் பெரியார் தான்எங்கள் காதல் பூங்காவில் பூக்கவில்லைபோராட்டக் களத்தில்தான் விதைக்கப்பட்டது.


தமிழகத்தின் வரலாற்றையே புரட்டிப் போட்ட 1965 இந்தி எதிர்ப்புப் போர், மாணவர்களால் துவக்கப்பட்ட போர்வேகமான புயலாய் உருவெடுத்ததுபல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மாணவர்கள் இடையேயும் அவரவர் தலைமையில் கட்டுப்பாடுகளைத் தாண்டிய இந்தி எதிர்ப்புத் தீ பற்றிக் கொண்டதுகாவல்துறையால் கட்டுப்படுத்த முடியாமல் ராணுவமே வரவழைக்கப்பட்டு திருச்சியில் துப்பாக்கிச் சூடும் சாவுகளும் நிகழ்ந்தன

  மாணவர்கள் போராட்டத்தின் இந்த உக்கிரத்தை பின்னின்று இயக்குபவர் இன்றைய முதல்வர் கலைஞர் தான் என்று கலைஞரை முகத்துக்கு எதிரிலேயே அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலம் சட்டமன்றத்தில் குற்றம்சாட்டினார்அதன் விளைவாய் கலைஞர் பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழகத்தில் இந்தி ஒழிக (தமிழ் வாழ்க அல்லஎன்ற முழக்கத்தின் காரணபூதரான தலைவர் பெரியார் 1965-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்போரை ஆதரிக்கவில்லைமாறாக எதிர்த்தார் காரணம் 1938-39ல் எந்த ராசகோபாலாச்சாரி கட்டாய இந்தியை தமிழகத்தில் கொண்டுவந்து தாளமுத்து-நடராசன் இருவரின் சாவுக்குக் காரணமாய் இருந்தாரோ-அவர்தான்.  1965-ல் இந்தி எதிர்ப்புப் போருக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த சுக்கிராச்சாரி.


அன்று 1965-களில்  தமிழகத்திலிருந்த காமராஜர் ஆட்சியை ஒழிக்க ராசகோபாலாச்சாரி கண்டுபிடித்த அரசியல் வியூகம்தான் 1965 இந்தி எதிர்ப்புப்போர் என்பது பெரியாரின் நிலைப்பாடுஇதை அப்படியே பேசவும் எழுதவும் செய்தார் பெரியார்இதனால்  அரசியலுக்கு அப்பாற்பட்ட மாணவர்களும் பெரியாரின் பேரில் கோபம் கொண்டார்கள். 


பெரியாரின் வேன் பழுதுபார்க்க (அவரில்லாமல்பழுதுபார்க்கக் கொண்டுசெல்லப் பட்டபோது யாரோ அதை கல்வீசித் தாக்கினார்கள்.
கதை எங்கோ போகிறதே திசைமாறி என்று எண்ணாதீர்கள்இந்த பின்னணியில் கட்டுரையின்  துவக்கத்திற்கு வாருங்கள்பெரியார் இந்தத் தாக்குதலை துணிவோடு எதிர்கொண்டார்கள்நாகை-நன்னிலம்-கரூர்  போன்ற இடங்களில் இது தி.மு., தி.க மோதலாய் வெடித்ததுபெரியார் இதுபற்றிய தனது நிலையை மாணவர் இடத்தில் தெளிவுபடுத்த எண்ணினார்பெரியார் மாபெரும் சிந்தனையாளர், பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர்என்னுடைய எண்ணத்தில் அவர் இவைகள்  யாவற்றையும் தாண்டி ஒரு மக்கள் இயக்கத்தை கட்டக்கூடிய மாபெரும் அமைப்பாளர்.  (Organiser)

அன்றைக்குத் திருச்சியில் மூன்று ஆண்கள் கல்லூரிகள, இரண்டு பெண்கள் கல்லூரிகள்இரண்டு கல்லூரிகள் கிறிஸ்துவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளனஇரண்டு பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் உள்ளனஒன்று இசுலாமியர்களுடையது.

வடகலை அய்யங்கார்கள் ஆதிக்கத்தில் இருந்த தேசியக் கல்லூரியின் பழைய மாணவன் நான் பெரியாரின் தொண்டரான மாபெரும் புரட்சி எழுத்தாளர் குத்தூசி குருசாமிஉலகப்புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர் டாக்டர்ராமமூர்த்தி, கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்ற பலர் இக்கல்லூரியின் மாணவர்களே!

கல்லூரிக் காலத்திலேயே மாணவர் இயக்கத் தொடர்புடைய என்னை ஆண்-பெண் மாணவர்களைப் பெரியாரை சந்திக்க வைத்துப் பின்னர்  அவர்கள் மூலமே ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யும் பொறுப்பை என்னிடம் தந்தார்கள்.
அன்றைக்கு மாணவ-மாணவிகள் , குழுகுழுவாய் சேர்ந்து அரட்டை அடிக்கும் இடங்கள் மேலரண் சாலை இருந்த இந்தியா காபி  அவுஸ்!  (இப்போது அது வணிகவளாகங்களாக கட்டப்பட்டு விட்டன) இன்னொன்று ஐம்பதாண்டுகளாய் மணமும் சுவையும் மாறாத 'மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம்' ஸ்டால்நானும் மாணவர்கள் குழுவோடும், மாணவிகள் குழுவோடும் அவர்களுடைய உறவினர்கள்- நண்பர்கள் சக மாணவர்களோடும் சில நாட்கள் பேசினேன்.

''உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு'' என்ற முழக்கம் மாணவர்களின் இதயத்துடிப்பாகிவிட்ட நேரம்இந்தி எதிர்ப்புப் போர் ராசகோபாலாச்சாரியின் சந்தர்ப்பவாதம் -என்ற எங்களுடைய அறிவுபூர்வமான வாதங்கள் எடுபடவில்லை.

''சாவிலும் தமிழ் படித்து சாகவேண்டும்

எங்கள் சாம்பலெல்லாம் தமிழ் மணந்து வேக வேண்டும்''

என்ற கவிதை வரிகள் மாணவர்கள்- தமிழ்  ஆர்வலர்கள் தங்கள் தாய்-தந்தையருக்கு எழுதும் கடிதங்களில்- ஏன் காதல் கடிதங்களில்கூட தலைப்பில் மிளிர்ந்த காலம், ஒளிர்ந்த நேரம்.



 
கல்லூரி மாணவர்களிடம் என்னுடைய அணுகுமுறையை அறவே மாற்றிக்கொண்டேன்மெல்லப் பொதுவான நட்பாக-பொதுச்செய்திகள்- அவர்களுக்கு விருப்பமான இலக்கியக் கலந்துரையாடல் என மாறியதுஇதற்கிடையில் பேரரிறிஞர் அண்ணா மாணவர்களுக்கு வைத்த வேண்டுகோள்- அரசின் அணுகுமுறையில் மாற்றம், இந்தி எதிர்ப்புப் போரில் வன்முறை வேகம் தணிந்ததுகடந்த இரண்டுமாத மாணவ- மாணவிகளுடனான மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் ஸ்டாலின் கலந்துரையாடலில் ஒருவர்தான் பின்னாளில் எனது மனைவியான காதரின் ஒருநாள் அவரையும் அவருடைய தோழிகளையும் வேறு ஒரிரு நண்பரகளையும் 'உங்கள் இந்தி எதிர்ப்பு இயக்கத்திற்கும்- பெரியார் நடத்திய இந்தி எதிர்ப்பு இயக்கத்திற்குமான வேறுபாடுகள் பற்றி நேரில் பெரியாரையே கேளுங்களேன்'' என்று மீண்டும் என் வலைக்குள் இழுத்தேன்முதலில் யோசித்த- பயந்த அவர்கள் பெரியாரிடம் என்னுடன் வந்தார்கள்பெரியார் வழக்கப்படி ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்யும் போதும் அவர்கள் பெற்றோர், குடும்பம் பற்றியெல்லாம் விசாரித்தார் பரிவோடுபிறகு எல்லோரும் கேள்விகள் கேட்கக் கேட்க பெரியார் சலிக்காமல் பதில் சொல்லிக்கொண்டே வந்தார்நீண்ட நேரத்திற்குப் பின் மாணவ- மாணவிகள் பெரியாரிடம் விடை பெற்றுக் கொண்டார்கள்மாணவியர்நிலையில் முழுமையான மாற்றமில்லை.

பெரியார்
வழக்கப்படி அவர்கள் ஒவ்வொருவரையும் கையைப் பற்றிக்கொண்டு, ''மன்னிக்க வேண்டும்ஒங்க படிக்கிற நேரத்தை வீணாக்கிப் போட்டேன்ஏதோ... என் அறிவுக்கு சரியெனப்பட்டதச் செய்யறேன்தப்புன்னு நெனைச்சா மன்னிச்சுக்குங்க...  நான் ஒங்க அளவுக்கு பெரிய படிப்பெல்லாம் படிக்கலே...  என்னைக்காவது என்னோட முடிவு தப்புன்னு தெரிஞ்சா  நிச்சயம் மாத்திக்கிறேன்''  என்றார் பணிவாகமாணவர்கள் நிலை குலைந்து போனார்கள்... 

...திருச்சி செல்வேந்திரன்..(தி.மு.க கழக வெளியீட்டாளர்) சேயின் நோய்க்கு மருந்துண்ட தாயான தலைவர்கள்!.....நக்கீரன் வெளியீடு...பகுதி1 முற்று..

தொடரும் பகுதி ...2. இன் தலைப்பு; ''கலைஞரைக் கண்டவுடன்''