Pages

Saturday 18 August, 2012

பாசியும் - தூசியும்

           கலைஞரின் சிந்தனையும் செயலும்-1
              ***************************************


உடன்பிறப்பே,

   அரசியல் என்றாலே நச்சுத்தன்மை வாய்ந்தது என்பதைப் போலவும் – அரசியல்வாதி என்றாலே அத்தன்மையினன்தான் என்று அனுமானித்துக் கொண்டும் – எழுதுவது, பேசுவது என்பது இன்றைய நிலையாகிவிட்டிருக்கிறது.  அப்படியொரு நிலையெடுப்பது அடிப்படையிலேயே பெருந்தவறுடையதாகும் என்பது என் கருத்து.  ஒருசில அல்லது பல என்றே தோராயமாகக் கணக்கிடப்படும் அரசியல்வாதிகளின் அறிவு, ஆற்றல், தொண்டு, சிந்தனை, செயல், எழுத்து, பேச்சு, உறுதி, ஒழுக்கம், தியாகம் ஆகியவற்றைக் கொண்டே ஒரு முடிவுக்கு வரவேண்டுமேயல்லாமல், பொதுவாகவே அரசியல் என்பதே பொல்லாங்கான ஒன்று என அவசரத் தீர்ப்பு வழங்கிடக் கூடாது.


      திருக்குறளில் பொருட்பால் முழுமையும் அரசியல், அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல் என வகுக்கப்பெற்று – இந்த ஏழு இயல்களிலும் இறைமாட்சி, கல்வி, கல்லாமை போன்ற 70 அதிகாரங்களும் இடம்பெற்று, அரசியல் எனும் பகுதி மட்டுமே 25 அதிகாரங்களைக் கொண்டதாக அமைந்து, அதனைத் தொடர்ந்து அடுத்து வருபவைகளும் ‘அமைச்சியல்’ எனத் தொடங்கி, ‘குடியியல்’ ஈறாக அரசியல் தொடர்புடைய அதிகராங்களாகவே இருப்பதையும் நோக்குமிடத்து, ‘அரசியல்’ என்பது நமது பண்புக்கு உகந்த ஒன்றல்ல என்றோ, பண்பாட்டுக்குரியதல்ல என்றோ அவசர முடிவுக்கு; எவராயினும் தம்மை ஆட்படுத்திக் கொள்வது அறிவுடைமையாகாது.

     ‘காதல்’ கைகூடாத காரணத்தினாலோ – அல்லது காதலில் ஏற்பட்ட ஏமாற்றத்தினாலோ – ‘காதல்’ என்பதே தீதான ஒன்று என வள்ளுவரும் வசைபாடவில்லை.
    மாறாக; ‘காலையரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் நோய்’ என்றே செல்லமாகக் கடிந்து கொண்டு;
‘     ‘கண்ணோடு கண்ணினை நோக்கொக்கின் வாயச்சொற்கள் என்ன பயனும் இல’ எனக் காதலுக்கு அங்கீகாரமே வழங்குகிறார்.

     ‘’காதல்! காதல்! காதல் போயிற் சாதல்! சாதல்!’’ எனப் பாரதி முழங்குகிறார்.

     ‘’காதலுக்கு வழிவகுத்துக் கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டறிவோம்’’ என்கிறார் பாரதிதாசன்.

     காதலில் ஈடுபடுவோர் உறுதியற்றவர்களாகவோ – ஊசலாடும் மனம் படைத்தவராகவோ – அதனை கிளைக்குக் கிளை தாவும் வேடிக்கை விளையாட்டாக கருதுகிறராகவோ இருக்கலாம்.  அவர்களை கண்டுவிட்டு; காதல் என்பதே வெறுப்பதற்குரிய ஒன்று என எண்ணிவிடக் கூடாது அல்லவா?

     அப்படித்தான் காதலைப்  போலவே அரசியலையும் அதனைக் கையாள்வோர் செயலைக் கருதிக் குறைத்து மதிப்பிட்டு வெறுத்து விடக் கூடாது.

     காதலித்து ஏமாற்றும் பேர்வழியைப்போல அரசியல்வாதிகளில் சிலபேர் அல்லது பல பேர் கூட இருக்கலாம்.  காதலித்து ஏமாற்றுபவர்கள் – ஏமாற்றுவதற்காகவே காதலிப்பவர்கள்; இதெல்லாம் காதலின் குற்றமா?  காதலித்து கைவிட்டுத் துரோகம் செய்த காதலனை அல்லது காதலியைத் தான் வெறுக்கலாம்; அதற்காக ‘காதல்’ என்பதையே வெறுப்புக்குரியதாகக் கருதிட முடியாதல்லவா; அது போலவே அரசியலும்; சில அயோக்கியர்களின் புகலிடமாகி விடுகிறது என்பதற்காக – அத்தகைய ஆட்களை வெளியேற்ற வேண்டுமே தவிர; அரசியல் மீது வெறுப்புக் கொள்வதில் என்ன பயன் இருக்க முடியும்?

     காதலுக்கு நேர்மாறான ‘துறவு’ம் அப்படித்தான் – தூய்மையானது துறவு! நான் சொல்வது புறந்தூய்மையை அல்ல!  அது வேடமாகக் கூடப் பயன்படலாம்!  அகந்தூய்மை தான் துறவுக்கு இலக்கணம் – இதையும் அரசியலுக்கு எழுதிய அய்யன் வள்ளுவர்தான் கூறுகிறார்.

 ‘’புறந்தூய்மை நீரான் அமையும்; அகம்தூய்மை
           வாய்மையால் காணப் படும்’’

 ‘’நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
           வாழ்வாரின் வன்கணார் இல்’’

 ‘’மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகம்
           பழித்தது ஒழித்து விடின்’’

     துறவி போல வேடமிட்டு வஞ்சனை செய்வோரைவிட இரக்கமற்றவர் எவருமில்லையென்கிறார்!

     துறவு என்று கூறிக் கொண்டு, துன்மார்க்கத்தில் ஈடுபடுவது போலவே அரசியல் அரங்கினையும் அநாகரிகக் கூடமாக – அராஜகக் களமாக ஆக்கிக் கொள்வோர் இருந்தனர் – இருக்கின்றனர் – எதிர்காலத்திலும் இருக்கக் கூடும்.

     அதற்காக ‘அரசியல்’ என்பது சாக்கடை என்றும் – வியாபாரம் என்றும் – பொதுவில் கூறிவிட முடியாது! கூறவும் கூடாது!

     சந்தனமாயினும் – புனுகு, சவ்வாது ஆயினும் – பூசிக் கொள்கிற அளவைப் பொறுத்து; பூசிக் கொள்கிறவர்களைப் பொறுத்துத்தானே இருக்கிறது!

     இதுபோலச் சிந்தனை செய்யாமல்; அரசியல் என்றாலே நிந்தனை செய்ய வேண்டிய ஒன்று எனும் முடிவுக்கு வந்து விடுபவர்களைப் பற்றி என்னதான் கூற முடியும்?

      இன்றைக்கு இந்தியத் திருநாட்டில் சில மாநிலங்களை ஆழ்ந்து நோக்குபவர்களுக்கு ‘அரசியல்’ மீது அருவெறுப்பு தோன்றுவதில் வியப்பில்லைதான்.

     நாட்டின் பாராளுமன்றமே ஒவ்வொரு நாளும் ஒத்தி வைப்பதற்காகவே கூடுகிறது.

     நமது மாநிலத்தின் சட்டமன்றமோ ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சியினரை வெளியேற்றுவதற்காகவே கூடுகிறது.

     இங்கே சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி மட்டுமே பேச முடிகிறது; எதிர்க்கட்சிகள் தம்மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் சொல்லக் கூட வாய் திறக்க முடியவில்லை.

     அங்கே பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் ஆவேசத் தாண்டவம் – ஆளுங்கட்சி ஊமையாக்கப்படுகிறது.  ஒத்திவைப்பில் முடிகிறது.

     மக்கள் பிரச்சினைகளையோ; முக்கிய மசோதாக்களையோ – ஏறெடுத்துப் பார்த்திட எதிர்க்கட்சியினர் எவருமில்லை.

     இப்படி அரசியல; அழுக்குப்பட்டுக் கிடக்கிறது என்பதற்காக; அழுக்கான ஆடைதானே என்று கிழித்துவிட முடியுமா?  ‘ஜனநாயக’த்தில் தூய்மையாக்கிப் பயன்படுத்திட சலவை செய்யத்தானே வேண்டியிருக்கிறது!

     ‘ஜனநாயகம்’ என்பது நாட்டின் சகல மக்களும் ஏற்றுக் கொண்டிருக்கிற சாசனம் அல்லவா?

     ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கும், வாழ்வுக்கும் சர்வரோக நிவாரணியாக இருப்பது அரசியல் என்பதை மறுக்க இயலுமா?  அதற்காக மருந்தை விஷமென்று வெறுத்து விட்டோ; விஷத்தை மருந்தென்று வேறுபாடு தெரியாமல் பயன்படுத்தி விட்டால் விளையும் ஆபத்து; எவ்வளவு வேதனை தரும் என்பதையும் விவேகிகள் சிந்திக்காமல் இருக்க முடியுமா?

     மக்களாட்சி என்பது மாடி வீட்டுக்கு – மாளிகைக்கு – மந்தகாச வாழ்வினருக்கு மட்டுமே – எழுதி வைக்கப்ப்ட்ட உயில் அல்ல!  உரிமை ஆவணமுமில்லை!  அது மாடு மேய்க்கும் மாயாண்டியும் – மண் குடிசை வாழ் மன்னாரும் – உரிமை கொண்டாடக் கூடிய சமத்துவப் பிரகடனம்!

     உரிமையுடையது என்பதற்காக நமக்காகப் பயன்படும் தண்ணீர்ப் பானையைத் தள்ளிவிட்டு உடைத்துவிட முடியுமா?

     அல்லது அந்தப் பானை ஒருவர்க்கு மட்டுமே உரியது என்று அதன் அருகே நின்று அரிவாளைத் தூக்கிக் கொண்டு ஆட்டம் போடத்தான் முடியுமா?

    எனவே, ‘காதல்’ – ‘துறவு’ – ‘அரசியல்’ – எல்லாமே பரிசுத்தமானவைதான்!

     அந்தப் பரிசுத்தம்;  அவற்றை அணிபவர்களைப் பொறுத்துத்தான் நீடிக்கும்!  அழுக்கின் ஆதிக்கத்திற்கேற்ப ஆடையின் தூய்மை அமையும்!

     ஜனநாயகம் எனும் மக்களாடசி மாண்பு அணிபவர்களைப்  பொறுத்துத்தான் நீடிக்கும்!  அழுக்கின் ஆதிக்கத்திற்கேற்ப ஆடையின் தூய்மை அமையும்!

    ஜனநாயகம் எனும் மக்களாட்சி மாண்பு வேர் இறங்கித் தழைத்து விளைந்திட;
     நிலம் செழிக்க ஏர் உழுதல், எரு இடுதல், நீர் பாய்ச்சுதல் போல களை நீக்குதல், காவல் காத்தல் தேவை என்கிறதே குறள்; அவற்றில் எல்லாவற்றையும் விட களை நீக்கும் ஏற்பாடு மிக முக்கியமாகும்.
     ஜனநாயகத்தை சீர்குலைக்கும் களைகளாக இருக்கும் இயக்கங்களையோ, நடக்கும் ஆட்சிகளையோ பயிரோடு இணைந்து வளர்வதற்கு இடம் தந்தால் ஏர் உழுதென்ன – எரு இட்டு என்ன – நீர் பாய்ச்சி என்ன பயன் ஏற்பட்டு விடும் – களைதான் வளரும்; நல்ல கதிர் வளராது!

     அரசியல்; நிலம் போன்றது! அது ஜனநாயகப் பயிர் வளர்க்கப் பயன்பட வேண்டும் – அந்தப் பயிர் மட்டுமே வளர்ந்தால் மனித வளம் – மதச்சார்பற்ற – மத நல்லிணக்க வளம் செழித்துக் குலுங்கும்!

     அரசியல் நிலத்தில் தன்னலம் வளர்க்க
     களைகளாய்த் தோன்றுவோர்;
    களையப்பட வேண்டியோரேயாவர்!
     அப்படிக் களைந்து விட்டால்; அரசியல் தூய்மையாகும்!

     ‘அறநெறி தானிய விளைச்சல்’ அமோகமாகப் பெருகும்!
     குளத்தில் படர்ந்துள்ள பாசியை அகற்றாமல்; குளத்தைப் பழிப்பது; பழிப்போரின் குற்றம் தானே?
     பாசியைக் கண்டுகொள்ள; முதலில் நம் கண்ணில் விழுந்துள்ள தூசியை அகற்றிக் கொள்வோம்.

…கலைஞர்  (27.04.2005)