Pages

Tuesday 8 April, 2014

தி.மு.க...தி.க மாறுபாடு தெரியும்...அறிஞர் அண்ணா.




 திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் வெவ்வேறாகப் பிரிந்து இருந்தாலும், இன்றையதினம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திரைக் கிழிக்கப்பட்டுவிட்டது.  அவர்களூடைய உண்மை சுயரூபத்தை நாங்கள் கண்டுவிட்டோமென்று நிதி அமைச்சரவர்கள் கூறினார்கள்.       
                                                                                                                                                                       எங்கள் சுயரூபத்தை நாங்கள் அவ்வளவு சுலபமாக காட்டிவிட மாட்டோம்.                 

நிதி அமைச்சரவர்கள் எங்கள் சுயரூபத்தை கண்டுபிடித்ததாக இருந்தாலும், அவரே திராவிடர் கழகம் திராவிட முன்னேற்றக் கழகம் கொள்கையில் வேறுபாடு, இருப்பதை, திராவிட முன்னேற்றக் கழகம் நடத்துகிற ''நம் நாடு'' பத்திரிகையிலும் நான் எழுதுகின்ற எழுத்துக்களிலும் குறை காணுவதற்கு எதுவுமில்லை என்று எடுத்துச் சொன்னதிலிருந்து,  நாங்கள் ஒப்புக் கொள்ளத் தக்க கொள்கைகளுடன் நல்ல முறையில்…..                                                   (அமைச்சர்  குறுக்கீடு) 
நிதி அமைச்சர் சி சுப்பிரமணியம்;  குறை காணுவதற்கில்லை என்பதில்லை.  சட்டப் பூர்வமாக நடவடிக்கை எடுத்துக் கொள்வதற்கு அதிலே இடமில்லை.

                                                                                                                              அண்ணா; சட்டப்  பூர்வமாக நடவடிக்கை எடுத்துக் கொள்வதற்கு அதில் இடமில்லை என்று சொல்கிறார்கள்.  அது என்னுடைய வாதத்திற்கு வலுவளிப்பது தான்.  ஆகையால் ''சட்டப்பூர்வமான முறையிலே இவைகளை எடுத்துச் சொல்வது என்பது திராவிட முன்னேற்றக் கட்சியின் கொள்கை. 

சட்டத்திற்கு விரோதமான முறையில் சட்டத்தைப்பற்றிக் கவலைப் படாமல் சொல்வது திராவிடர் கட்சியின் கொள்கை'' என நிதியமைச்சரவர்கள் கருதுகிறார்.

இது ஒன்றைப் பார்த்தாலும் திராவிட முன்னேற்றக் கட்சியினருக்கும், திராவிடர் கட்சியினருக்குமுள்ள மாறுபாடு தெரியும். 
முரண்பாடு என்பதும் மாறுபாடு என்பதும், வேறுபாடு என்பதும் தமிழில் ஒரேப் பொருளைக் குறிக்கின்ற சொல்லாகப் பொதுவாகப் பார்க்குமிடத்துத் தோன்றினாலும் ஆழ்ந்து கருத்துக்களை ஆராய முற்படும் போது இவை ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமுண்டு என்பதை நான் குறிப்பிட வேண்டுமென்பதில்லை.  கனம் நிதி அமைச்சரவர்களே உணர்ந்திருப்பார்களென்று நம்புகிறேன்.                                                                                
ஆனாலும், அவர்கள் இந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கட்சியைப் பற்றி ஏதாவது பேசவேண்டுமென்று கருதியது, ஆளுகின்ற கட்சி எங்களுக்கு கொடுத்த கௌரமாகவே நான் ஏற்றுக் கொள்கிறேன்.    


.…அறிஞர் அண்ணா...தேசீய அவமதிப்பு தடுப்பு மசோதா இறுதி சொற்பொழிவு;-11-11-1957…அறிஞர் அண்ணாவின் சட்டசபை சொற்பொழிவுகள். ..தொகுதி-1..பக்கம் 153-155,156                                                                                  

முஸ்லீம்கள் திருந்த இஸ்லாமியர்கள் முயற்சி எடுப்பார்கள் - அண்ணா

 



ந்து திருமண (தமிழ்நாடு திருத்த) மசோதா..நாள் 18.07.1967..உரை-28


மாண்புமிகு திரு. சி.என். அண்ணாதுரை; சட்டமன்றத் தலைவர் அவர்களே, இந்தத் தீர்மானத்திற்குச் சில திருத்தங்களைக் கொண்டு வரவேண்டுமென்று திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருக்கும் என்று கருதுகிறேன்.  இந்த மசோதா, இதே மன்றத்தில் இரண்டு முறைகளுக்குமேல் கருத்துச் சொல்லப்பட்ட ஒரு பிரச்சினையாகும்.  முன்னாலே, என்னுடைய நினைவு சரியான நினைவாக இருக்குமேயானால், குட்டி கிருஷ்ணன் நாயர் சட்ட அமைச்சராக இருந்த காலத்தில் இதற்கென முயற்சியெடுக்கப்பட்டது.  அதற்குப் பிறகு 57இல் ஒரு முறை முயற்சி எடுக்கப்பட்டது.   அதற்குப் பிறகு 65 லேயும் முயற்சி எடுக்கப்பட்டது.

இப்பொழுதும் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.  இந்தப் பிரச்சினைகள் மூன்று, நான்கு முறைகள் வந்த நேரத்தில் இதைப்பற்றிக் கருத்து தெரிந்தவர்கள் படிப்படியாக எப்படி மாறி வந்திருக்கிறார்கள் என்பதை அந்த விவாதங்களைப் படித்துப் பார்த்தால் தெரியும்.  முதன் முதலில் இப்படிப்பட்ட திருத்தம் வந்தபோது பதறியவர்கள் பலர்.  இப்பொழுது பதறுகின்றவர்கள் ஒருவருமில்லை.  இரண்டாவது முறை இந்தப் பிரச்சினை வந்த நேரத்தில் பதறுகின்றவர்கள் குறைவாகயிருந்தாலும் சில பேர்களிடம் பயம் இருந்தது.  இப்பொழுது அப்படிப்பட்ட பயம் கூட இல்லை.

இப்போது இருக்கும் பிரச்சினை எல்லாம் நம்முடைய டாக்டர் ஹண்டே திரும்பத் திரும்ப உங்களுக்கு இந்துதான் கிடைத்தானா? அவன் தலையிலேயே குட்டுகிறீர்களே என்கிறார். முஸ்லீம்களை திருத்த வேண்டும் என்றால் இஸ்லாமியர்கள் முயற்சி எடுத்துக் கொள்வார்கள். அதுவே வரவேற்கத்தக்கதாக இருக்கும்.  

மற்ற எல்லா மார்க்கங்களையும் விட இந்து மார்க்கத்தில் தத்துவத்தை பொறுத்த அளவில் இதில் விடப்பட்டது ஒன்றும் இல்லை. எல்லா தத்துவங்களும் இதனிடத்தில் உள்ளன என்றும் இதற்கு இந்து மதத்தின் அழிவற்ற தன்மைதான் காரணம் என்றும் சொல்வோரும் இருக்கிறார்கள். அதன் நிர்ணயமற்ற தன்மைதான் காரணம் என்று சொல்வோரும் இருக்கிறார்கள்.

உண்மையான இந்து திருத்தத்திற்குப் பயப்படக் கூடாதென்று சுவாமி விவேகானந்தர் சொன்னதாக நினைவு.  உண்மையான இந்து சாதியை ஒத்துக் கொள்ள மாட்டான் என்று இந்து மதத்தை சார்ந்தவர்களே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். 

ஆகையால் தலைப்பைப் பார்த்து இது இந்துவுக்குத்தானா என்று கவலை கொள்ளத் தேவையில்லை.  டாகடர் ஹாண்டே அவர்கள் சிறந்த நண்பர்.  முதன் முதலில் அவர் பெயரைச் சொன்னதும் அது இந்துப் பெயர் என்றுகூட எனக்கு நினைவு வரவில்லை.

 நண்பர்கள் என்னிடம் , டாக்டர் ஹாண்டே என்று இருக்கிறார், நல்ல திறமையாக அரசியல் கருத்துக்களைப் பேசுவார்கள் என்று சொன்னபொழுது அவர் ஒரு இந்துவாக இருப்பார் என்று நாங்கள் நினைக்கவில்லை.  அந்தப் பெயர் அப்படி இருந்தது.  ஆனால் அவர் எனக்கு அறிமுகமான பிறகுதான் அவர்கள் நம்முடைய இனத்தைச் சார்ந்தவர்கள் என்று நினைவே வந்தது.  முதன் முதலில் அது ஆங்கிலோ-இந்தியன் பெயர் என்று தான் நினைத்தேன்.  கன்னட மொழியில் என்ன பொருளோ தெரியாது.


திரு கே.விநாயகம்; வெங்கட்ரமணா ஹாண்டே எனபது பெயர்.  ஹாண்டே என்பது ஜாதியின் பெயர்.

மாண்புமிகு திரு.சி.என்.அண்ணாதுரை; வெங்கட்ராமன் ஹாண்டே என்று முதலிலேயே சொல்லியிருந்தால் எனக்கு இந்தச் சந்தேகமே வந்திருக்காது.


...............முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள்-1967-68..பக்கம்-352-353..பூம்புகார் பதிப்பகம்.

இஸ்லாமியர்களின் உரிமைப் போராட்டம்

சோமநாதபுரம் குட முழுக்கு விழாவில் நீங்கள் கலந்து கொள்ளவேண்டாம் என்று பிரதமராக இருந்த நேரு கேட்டுக் கொண்டதையும் தாண்டி, என்னதான் நான் குடியரசுத் தலைவராக இருந்தாலும், அடிப்படையிலே நான் ஒரு இந்து, ஆகையினாலே நான் கலந்து கொள்வேன் என்று சொல்லி, ராஜேந்திரபிரசாத் கலந்து கொண்டார்.
தச் சிறுபான்மையினருக்கான தனி ஆணையம் 1978 இல் தான்  அமைக்கப்பட்டது.  அது ஜனதா ஆட்சியில், ஆனால் அந்த ஆணையம் அமைக்கப்படுவதற்கு முன்பு அதற்கான பல போராட்டங்களில் இஸ்லாமியப் பெருமக்கள் ஈடுபடவேண்டிய கட்டாயம்  ஏற்பட்டிருக்கிறது.  இந்தியா விடுதலைப் பெறுகிறபோதே, அது இந்தியாவாகவும் பாகிஸ்தானாகவும் விடுதலைப் பெற்றிருக்கிற காரணத்தினாலே, இந்து, இஸ்லாம் கலகம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  அந்த மதக்கலவரத்திற்கு ஏராளமானோர் பலியானார்கள்.  ஆகையினாலே பாக்கிஸ்தான் என்பது இஸ்லாமிய நாடு என்றும் இந்தியா என்பது மதசார்பற்ற நாடு என்றாலும், அடிப்படையில் இந்து நாடு என்றும் ஒரு புரிதல் உண்டாகிவிட்டது. அதன் காரணமாக இஸ்லாமியர்கள் தங்களுடைய வீடுகளைத் தொடக்கத்திலேயே இழக்க நேர்ந்த்து.

விடுதலை பொறுவதற்கு முன்பு அவர்களுக்குத் தனி வாக்காளர் தொகுதி இருந்தது.  இட ஒதுக்கீடு இருந்தது.  இன்னமும் சொன்னால் அரசவையிலே பிரதித்துவம்கூட இருந்தது.  அவைகளை எல்லாம் அவர்கள் இழக்க நேரிட்டது.  இதுபற்றியெல்லாம் மிக விரிவாகச் சமநிலை சமுதாயம் என்கிற ஒரு மாத இதழில், பேராசிரியர் அ.மார்க்ஸ் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்.  பல சான்றுகளோடு அதை அவர் எழுதியிருக்கிறார்.

இந்தியா விடுதலை பெறுகிறபோதே அந்த சலுகைகளையெல்லாம் அல்லது உரிமைகளையெல்லாம் அவர்கள் இழந்தார்கள்.  அதற்குப் பிறகு மதத்தைப் பரப்புகிற உரிமை அவர்களுக்கு இருந்தது என்றாலும்கூட, இந்திய அரசமைப்புச் சட்டம் 25/1 என்பதற்கு உட்பட்டுப் பொது அமைதிக்குக் குந்தகம் வரமால் பரப்ப வேண்டும்.   அப்படிக் குந்தகம் வருமானால் மதமாற்றத் தடைச் சட்டம் என்பதைக் கொண்டு வரலாம் என்பது அங்கே இருக்கிறது.  அதன் அடிப்படையிலேதான் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த மதமாற்றத் தடைச்சட்டம் வந்து போனது என்பதை நாம் அறிவோம்.  எனவே அதையும் இழக்க நேர்ந்தது.

அதற்குப் பிறகு பொது சிவில் சட்டம் என்பதை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் இடம் பெறவில்லை, என்றாலும் வழிகாட்டு நெறிமுறைகளிலே இடம் பெற்றிருக்கிறது.  எனவே எந்த நேரத்திலும் பொது சிவில் சட்டம் வரக்கூடும் அதனாலே தங்களுக்கான தனித்துவத்தை இழந்து விடக்கூடும் என்கிற அச்சம் இருக்கிறது.   இவற்றையெல்லாம் தாண்டி 47 இல் இருந்து 50 வரைக்கும் இந்த மதக்கலவரங்களிலேயே காலம் சென்றது. அதற்குப் பிறகு 10 ஆண்டுகளில் அவர்கள் தங்களை இந்த நாட்டுக்கு விசுவாசமானவர்களா இருந்தார்கள்.  எனவே 1960 வரையில் எந்தவிதமான எதிர்ப்பையும் அவர்கள் காட்டவில்லை. காட்ட முடியவில்லை.
 



அமைச்சரவையிலே இருந்த பட்டேல், ஒருமுறை பாராளுமன்றத்திலேயே, நீங்கள்தான் நாட்டையே பிரித்துக் கொண்டுபோய் விட்டீர்களே, இதற்கு மேலும் உங்களுக்கு என்ன வேண்டும்?  என்று கேட்டார்.  எனவே பட்டேலின் எதிர்ப்பை அப்போது இஸ்லாமிய பெருமக்களால் எதிர்கொள்ளமுடியவில்லை.  அதைவிட அழுத்தமான இன்னொரு காரணமும் இருந்தது. 





அண்ணல் காந்தியடிகள் இரண்டு மதங்களுக்கும் பொதுவானவராகத்தான் இருந்தார்.  நேருவும் கூட அந்தப் போக்கை கடைப்பிடித்தார் என்றும் சொல்லலாம். 





ஆனால் இந்தியாவினுடைய முதல் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திரபிரசாத் வெளிப்படையாகவே தன்னுடைய மாற்றுக் கருத்துகள் சிலவற்றைக் காட்டத் தொடங்கினார்.  அவற்றுள் முக்கியமானது அம்பேத்கர் கொண்டு வந்த இந்து மதச் சட்டத்தொகுப்பு என்பதைக் குடியரசுத் தலைவர் மிகக் கடுமையாக மறுத்தார்.  அதை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டாலும், நான் திருப்பி அனுப்புவேன் என்று சொன்னார்.





அம்பேத்கர் அமைச்சரவையிலே இருந்து விலகியதற்கு நான்கு காரணங்களைக் காட்டுகிறார்.  அதிலே ஒன்று இந்த இந்து மத மசோதாவை ஏற்க மறுக்கிற காரணத்தினாலேயும், நான் வெளியேறுகிறேன் என்று அவர் குறிப்பிடுகிறார்.  எனவே அமைச்சரவையிலே இருந்து அம்பேத்கர் விலகுவதற்கும் கூட அன்றைக்கு குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திரபிரசாத் அவர்களினுடைய கடும் போக்கு காரணமாக இருந்தது.  அதுமட்டுமில்லாமல் சோமநாதபுரம் ஆலயம் குட முழுக்கு விழாவிலே நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று பிரதமராக இருந்த நேரு கேட்டுக் கொண்டதையும் தாண்டி, என்னதான் நான் குடியரசுத் தலைவராக இருந்தாலும், அடிப்படையிலே நான் ஒரு ஒரு இந்து, ஆகையினாலே கலந்து கொள்வேன் என்று ராஜேந்திரபிரசாத் கலந்து கொண்டார் என்பதையும் நாம் அறிவோம்.  எனவே அவர் தன்னுடைய மதச்சார்பை வெளிப்படையாகக் காட்டத் தொடங்கியதால், 60ஆவது ஆண்டு வரையில் இஸ்லாமியர்கள் தங்கள் உரிமைக்காகக் குரல் கொடுக்க இயலாதவர்களாகத்தான் இருந்தார்கள்.




1951ஆவது ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையின் சார்பாக, காஷ்மீர் பிரச்னையையொட்டி இந்தியாவிலே இருக்கும் இஸ்லாமியர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக டாக்டர் பிராங்க் (Frank Porter Graham) என்கிற ஒரு பிரதிநிதி  அனுப்பப்பட்டார்.





 

அவரை அன்றைக்கு இருந்த இஸ்லாமியத் தலைவர்கள் எல்லாம் போய்ப் பார்த்தார்கள்.  பார்த்து என்ன சொன்னார்கள் என்றால்,  எங்களுக்கு இந்தியாவிலே எந்த தொல்லையும் இல்லை, நீங்கள் தலையிட வேண்டாம்  என்றுதான் சொன்னார்கள்.  அவர்களுள் குறிப்பிடத் தக்கவர், அன்றைக்கு அலிகார் பல்கலைக்கழகத்தினுடைய துணைத் தலைவராக இருந்த  ஜாகீர் உசேன். (ஜாகீர் உசேன் இந்தியாவின் 3 வது குடியரசுத் தலைவர், இந்தியாவின் முதல் இஸ்லாமியக் குடியரசுத் தலைவர்)

 ஜாகீர் உசேன் அந்த ஐக்கிய நாடுகளினுடைய பிரதிநிதியைச் சந்திக்கிறபோது இந்தச் செய்திகளைச் சொல்லியிருக்கலாம், ஆனால் சொல்லவில்லை.   எங்களுக்கான கல்வி உரிமைகளையெல்லாம் நாங்கள் இழந்திருக்கிறோம்.  எங்களுக்கான தனி வாக்காளர் தொகுதி என்பது போய்விட்டது.  அது மட்டுமல்லாமல் உருது, இந்துஸ்தானிகூட அன்றைக்கு அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்கப்படவில்லை, இந்தி மட்டும்தான் என்கிற நிலை இருக்கிறது.  இவற்றையெல்லாம் அவர் சொல்லியிருக்கலாம்.  ஆனாலும்  1951இல் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய கட்டாயத்திலேதான்  அவர்கள் இருந்தார்கள்.  எனவே யாரும் எது குறித்தும் வாய் திறக்கவில்லை.  அதற்குப் பிறகு ஒரு பத்து ஆண்டுகள் மதக் கலவரங்கள் இல்லாமல் இருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.
 
 

  தமிழ்நாட்டிலேதான் காயிதே மில்லத்  அவர்கள் நாடாளுமன்றத்திலேயே இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை எழுப்பினார்கள்.  அதையும்கூட  வடநாட்டிலே இருக்கிற இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை.    காயிதே மில்லத் குரூப் என்று சொல்லப்பட்ட நான்கு பேர் மட்டும்தான் அதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.   இட ஒதுக்கீடு வேண்டும் என்று காயிதே மில்லத் மட்டும்தான் குரல் கொடுத்தார்.  அந்தக் குரல் ஒங்கி ஒலிக்கத் தொடங்கிய நேரத்தில் ஜபத்பூரிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான மிகப்பெரிய கலவரம் தூண்டிவிடப்பட்டது.  இஸ்லாமிய மக்களினுடைய சொத்துக்கள் சூறையாடப்பட்டன.  உயிர்ச் சேதம் இருந்தது.

61 இல் நடந்த அந்தப் போராட்டம் ஒரு விதத்திலே எதிர்விளைவையும் உருவாக்கியது.  இனி நாம் அடங்கியிருக்கக் கூடாது என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியது.  எனவே எதிர் விளைவுகள், பேரணிகள், அதை எதிர்த்து ஆர்பாட்டங்கள் என்று வளர்கிறபோது, 64ஆவது ஆண்டு இன்னொரு கடுமையான தாக்குதலை ரூர்கேலாவிலே அவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.  61, 64 ஆகிய இரண்டு ஆண்டுகளிலேயும் நடைபெற்ற அந்த மிகக் கடுமையான தாக்குதல்கள்தாம்.  இனி இந்தியா முழுவதும் இருக்கிற இஸ்லாமியர்கள் ஒருங்கிணைந்து ஒரணியில் நின்றாலே ஒழிய, நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்கிற நிலையை உருவாக்கியது.

 



அதன் விளைவு  1972 ஆவது ஆண்டு மும்பையிலே ஒரு மிகப்பெரிய அனைத்து இந்திய இஸ்லாமிய மாநாடு  என்று ஒன்று நடைபெற்றது.  அந்த மாநாடுதான் இஸ்லாமியர்களினுடைய சங்கத்தின் ஒரு திருப்பு முனை என்று நாம் சொல்ல வேண்டும்.  அதையொட்டி 73ஆவது ஆண்டு ஷேக் அப்துல்லாவினுடைய தலைமையில் அன்றைக்குப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்களைச் சந்தித்துக் கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்தார்கள்.  அந்தக் கோரிக்கையினுடைய அடிப்படையான இரண்டு மூன்று செய்திகள் என்ன என்று பார்த்தால், உருது மொழிக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும், எங்களுக்கான வாக்காளர் தனித் தொகுதி வேண்டும், அமைச்சரவையில் தவறாது பிரதிநிதித்துவம் வேண்டும், பொதுச் சிவில் சட்டம் என்பது மறுபடியும் கொண்டு வரக்கூடாத ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளையெல்லாம் வைத்தார்கள்.

 


இவற்றுக்கெல்லாம் தனியாக ஓர் ஆணையம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை அவர்கள் உள்ளடக்கி இருந்தார்கள்.  ஆனால் அன்றைக்கு அது நடைமுறைக்கு வரவில்லை.  என்ன காரணத்தினாலோ அன்றைக்கு  இந்திரா காந்தி அரசு இஸ்லாமியர்களுக்கு ஆதரவான நிலையில் இருந்தாலும்கூட, அப்படி ஓர் ஆணையத்தை அமைக்கவில்லை.   அதற்குப் பிறகு 5 ஆண்டுகள் கடந்துதான்,  1978ஆவது ஆண்டு ஜனதா அரசு பதவி ஏற்றதற்குப் பிறகு, மதச் சிறுபான்மையினருக்கான தனி ஆணையம்  என்று ஒன்று அமைக்கப்பட்டது.  அதற்குப்  பின்னாலும்கூட பல்வேறு தாக்குதல்கள், முரண்பாடுகள், மதக்கலவரங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன என்றாலும், இன்றைக்கு அவர்களினுடைய கருத்துக்களை எடுத்துச் சொல்லப் பயன்படுகிற ஒர் அமைப்பாக அந்த ஆணையம் இருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். 

                                                                                                                                                   …..பேராசிரியர். சுப.வீரபாண்டியன்…ஒன்றே சொல் நன்றே சொல்..கலைஞர் தொலைக்காட்சி..தொகுப்பு புத்தகம் 4 ..பக்கம் 117-122..வானவில் புத்தகாலயம்.

பூணூல் போட்டு மதப்பிரச்சாரம் பண்ண பாதிரியார்!..வரலாற்றுப் பார்வை

இராபர்ட்டோ டீ நொபிளி

வர் யார்? என்று பார்ப்பதற்கு முன்...மதுரை வரலாற்றின் சுறுக்கம்...                                            
                                                                                                                                                                                                          மதுரை இஸ்லாமியர்களின் பிடியில் இருந்து  கி.பி 1378 ஆம் ஆண்டில் மீண்டப் பிறகு நாயக்க மன்னர்களின் கையில் வந்தது என்பது வரலாறு.  அதற்கு முன் 40 ஆண்டுகாலம் ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் மதுரையில் பல இந்து சமயக் கோயில்களை கப்ளீகரம் செய்தனர்.  கி.பி 1365 முதல் 1378 வரை இஸ்லாமியர்களின் பிடியில் மதுரை இருந்தது. அப்போது பல இந்துக் கோயில்கள் அழிக்கப்பட்டன.  இந்துக் கோயில்களில் உள்ள சொத்துக்கள் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் கொள்ளையடிக்கப்பட்டன.  உருவ வழிபாடு செய்பவர்கள் கொல்லப்பட்டனர், சித்ரவதை செய்யப்பட்டனர். பெண்களும், சிசுக்களும் கூட தலையை வெட்டிக் கொல்லப்பட்டனர். பூஜைகள் இன்றி கோயில்கள் மூடப்பட்டன.  பலர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர்.  அவர்களின் பிடியில் இருந்து மதுரையை மீட்டவர், விஜய நகர பேரரசின் மன்னர் ''குமார கம்பணர்''.  இவர் விஜயநகர பேரரசு மன்னரான முதலாம் புக்கரின் வாரிசு. இது வரலாறு. அதன் பின் மதுரை நாயக்க மன்னர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.                                                                       



(நாயக்கர்கள் என்பது ஜாதிப் பெயர் அல்ல.   தமிழ் தெலுங்கு கன்னடம் பேசுபவர்களுக்கு என்று மதுரைப் பல பிரிவுகளாக பிரித்து ஆளுநர் பொறுப்பாக விஜயநகர பேரரசர்களால் கொடுக்கப்பட்டது. அப்படி கொடுக்கப்பட்டப் ஆளுநர் பொறுப்புகளுக்குப் பெயர் தான்  நாயக், படையாட்சிகள் என்பது.   அந்த பொறுப்புகளுடன் ஆண்ட நாயக்கர்களால், மதுரைப் பல பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு தமிழ் தெலுங்கு.... பேசுபவர்களுக்கு மீண்டும் பல பிரிவுகளாக கொடுக்கப்பட்டது.  அப்படி பிரித்துக் கொடுக்கப்பட்டப் பகுதியை ஆண்டவர்கள் பாளையக்காரர்கள் எனப்பட்டனர்.  இதுவே பின்னாளில் ஜாதிப்பெயர்களாக மாறிவிட்டது...இதுவும் வரலாறு.)                                                                                                         


அப்படி ஒப்படைக்கப்பட்ட மதுரை, நாயக்க மன்னர்களால் ஒரளவுக்கு சீர் செய்யப்பட்டது.  பல காலமாக நிறுத்தப்பட்டிருந்த பல கோயில் பூஜைகள்  மீண்டும் தொடங்கப்பட்டன.  இஸ்லாமிய மன்னர்களின் கண்ணில் மண்ணைத் தூவுவதற்காக, மண்ணில் புதைக்கப்பட்டு, மறைக்கப்பட்ட சாமி விக்ரகங்கள் வெளியே கொண்டுவரப்பட்டு ஆகம விதிப்படி மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டன.  பூஜைகள் வெகுகாலத்திற்குப் பின் விமரிசையாக  நாயக்க மன்னர்கள் ஆட்சியில் நடத்தப்பட்டன.              


நாயக்க மன்னர்கள் இந்து சமயத்திற்கு பாதுகாப்பாக இருந்த அதே சமயத்தில் இன்னொரு விஷயத்திற்கும் ஊக்குவித்தனர். அது தான் கிருத்துவ மதப்பிரச்சாரம். இவர்கள் காலத்தில் தான் முதல் முதலாக கிருத்துவ மதச்சாரம் தமிழகத்தில் நுழைந்தது.                  


முதன் முதலாக 1592 ஆம் ஆண்டு கிருத்துவ மதப்பிரச்சாரத்தை தமிழகத்தில் நுழைத்த பாதிரியார் ''கொன்கால்வ்ஸ் பெர்னான்டஸ்'' (Goncalves Fernandez).  அதன் அமைப்பு ஜெசைட் சொசைட்டி.  (Jesuit Society).  ஆனால் இதை ஆரம்பித்து, இவர் தொடர்ந்து பதினான்கு வருடங்கள் கஷ்டப்பட்டு மதப்பிரச்சாரம் பண்ணியும் மதுரையில் ஒரு மதமாற்றமும் நிகழவில்லை.            


அதன்பின் அடுத்து வந்த நாயக்க மன்னரான, முத்து கிருஷணப்ப நாயக்கர் (1601 - 1609) காலத்தில் வந்த, இராபர்ட்டோ டி நொபிலி (Roberto de Nobili) என்னும் ரோமானியக் கிறிஸ்துவர், மதப்பிரச்சாரங்களின் மூலம் ஒரளவுக்கு மதமாற்றத்தை கொண்டுவந்தார்.    
 
இவரால் மட்டும் எப்படி? முடிந்தது?     



''இராபர்ட் டி நொபிலி''  (Roberto de Nobili)
மதப்பிரச்சாரத்துக்கு கிருத்துவ உடையுடன் வரவில்லை.  தன்னை பிராமணராகவே மாற்றிக் கொண்டு காவி உடை, கமண்டலம், மார்பில் பூணூல் சகிதமாகவே வந்து தனது மதப்பிரச்சாரத்தை செய்தார்.  இந்து சமயத் துறவிகள் அணியும் உடைகளை அணிந்தே மக்களோடு மக்களாகவே கிருத்துவ மதப்பிரச்சாரத்தை பரப்பினார் என்பது வரலாறு. இவர் பிராமணர்களை மதப் பிரச்சாரம் செய்து கிருஸ்துவ மதத்துக்கு மாற்றுவதையே இலக்காக கொண்டிருந்தார்.  கிருத்துவ பாதிரி உடை எதுவும் இவர் அணியவில்லை.  தமிழ் சமஸ்கிருதம் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்.          

இவர் சர்ச்சை ''கோவில்'' என்றும் கிருபையை ''அருள்'' என்றும்..இறையருளைப் ''பிரசாதம்'' என்றும்..பாதிரியாரை ''குரு'' என்றும்...பைபிளை ''வேதம்'' என்றும்.. (mass) வழிபடுதலைப் ''பூசை'' என்றும்  இவர் கிருத்துவ ஆன்மீகத்தை குறிப்பிடும் வார்த்தைகளாக இந்து மதத்தைப் போன்றே பயன்படுத்தினார்.  அதனால் இவரின் மதமாற்ற நோக்கம் ஒரளவுக்கு வெற்றியடைந்தது என்றே வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.                                                                           


ஆனால் இவரின் இந்த செயல்பாட்டை, கிருத்துவ மிஷன்களில் உள்ளப் பலரும் எதிர்த்தனர்.  இவர், மதுரையின் பல பாகங்களுக்கும் சென்று சமயப் பிரச்சாரத்தை நடத்தினார்.  ஒரு முறை திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டார்.                                                                                                                                                            

பிப்ரவரி 26, 1605 அன்று போர்ச்சுகீசிய மன்னன், வைஸ்ராய்க்கு எழுதிய கடிதமொன்றில் மதுரை நாயக்கர் பாதிரியார்களுடன் நல்ல உறவு கொண்டிருப்பதாய் எழுதியுள்ளார்.  ஒரு போர்ச்சுகீசிய மன்னரே நாயக்க மன்னர்கள் கிருத்துவ மதப்பிரச்சாரத்திற்கு ஊக்குவிப்பதை எழுதியிருக்கிறார்கள் என்றால் நாயக்க மன்னர்கள் எந்தளவுக்கு கிருத்துவ மதப்பிரச்சாரத்திற்கு உடன்பட்டிருப்பார்கள் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.  அதற்கு அன்றைய அரசியல் சூழல் கூட காரணமாக இருக்கலாம்.                                                                   



......ஆதாரங்கள் திரட்டப்பட்டது...நாயக்கர் காலமும் பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சியும்..மதுரை- ஆலவாய்- மதுரை நகரின் வரலாறு---கடலாடி நரசய்யா..பக் 58-64-70, ஆங்கில விக்கிப்பீடியா தகவல் களஞ்சியம்..மற்றும் இணைய தளம்.