Pages

Tuesday 8 April, 2014

முஸ்லீம்கள் திருந்த இஸ்லாமியர்கள் முயற்சி எடுப்பார்கள் - அண்ணா

 



ந்து திருமண (தமிழ்நாடு திருத்த) மசோதா..நாள் 18.07.1967..உரை-28


மாண்புமிகு திரு. சி.என். அண்ணாதுரை; சட்டமன்றத் தலைவர் அவர்களே, இந்தத் தீர்மானத்திற்குச் சில திருத்தங்களைக் கொண்டு வரவேண்டுமென்று திருத்தங்கள் கொண்டு வரப்பட்டிருக்கும் என்று கருதுகிறேன்.  இந்த மசோதா, இதே மன்றத்தில் இரண்டு முறைகளுக்குமேல் கருத்துச் சொல்லப்பட்ட ஒரு பிரச்சினையாகும்.  முன்னாலே, என்னுடைய நினைவு சரியான நினைவாக இருக்குமேயானால், குட்டி கிருஷ்ணன் நாயர் சட்ட அமைச்சராக இருந்த காலத்தில் இதற்கென முயற்சியெடுக்கப்பட்டது.  அதற்குப் பிறகு 57இல் ஒரு முறை முயற்சி எடுக்கப்பட்டது.   அதற்குப் பிறகு 65 லேயும் முயற்சி எடுக்கப்பட்டது.

இப்பொழுதும் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.  இந்தப் பிரச்சினைகள் மூன்று, நான்கு முறைகள் வந்த நேரத்தில் இதைப்பற்றிக் கருத்து தெரிந்தவர்கள் படிப்படியாக எப்படி மாறி வந்திருக்கிறார்கள் என்பதை அந்த விவாதங்களைப் படித்துப் பார்த்தால் தெரியும்.  முதன் முதலில் இப்படிப்பட்ட திருத்தம் வந்தபோது பதறியவர்கள் பலர்.  இப்பொழுது பதறுகின்றவர்கள் ஒருவருமில்லை.  இரண்டாவது முறை இந்தப் பிரச்சினை வந்த நேரத்தில் பதறுகின்றவர்கள் குறைவாகயிருந்தாலும் சில பேர்களிடம் பயம் இருந்தது.  இப்பொழுது அப்படிப்பட்ட பயம் கூட இல்லை.

இப்போது இருக்கும் பிரச்சினை எல்லாம் நம்முடைய டாக்டர் ஹண்டே திரும்பத் திரும்ப உங்களுக்கு இந்துதான் கிடைத்தானா? அவன் தலையிலேயே குட்டுகிறீர்களே என்கிறார். முஸ்லீம்களை திருத்த வேண்டும் என்றால் இஸ்லாமியர்கள் முயற்சி எடுத்துக் கொள்வார்கள். அதுவே வரவேற்கத்தக்கதாக இருக்கும்.  

மற்ற எல்லா மார்க்கங்களையும் விட இந்து மார்க்கத்தில் தத்துவத்தை பொறுத்த அளவில் இதில் விடப்பட்டது ஒன்றும் இல்லை. எல்லா தத்துவங்களும் இதனிடத்தில் உள்ளன என்றும் இதற்கு இந்து மதத்தின் அழிவற்ற தன்மைதான் காரணம் என்றும் சொல்வோரும் இருக்கிறார்கள். அதன் நிர்ணயமற்ற தன்மைதான் காரணம் என்று சொல்வோரும் இருக்கிறார்கள்.

உண்மையான இந்து திருத்தத்திற்குப் பயப்படக் கூடாதென்று சுவாமி விவேகானந்தர் சொன்னதாக நினைவு.  உண்மையான இந்து சாதியை ஒத்துக் கொள்ள மாட்டான் என்று இந்து மதத்தை சார்ந்தவர்களே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். 

ஆகையால் தலைப்பைப் பார்த்து இது இந்துவுக்குத்தானா என்று கவலை கொள்ளத் தேவையில்லை.  டாகடர் ஹாண்டே அவர்கள் சிறந்த நண்பர்.  முதன் முதலில் அவர் பெயரைச் சொன்னதும் அது இந்துப் பெயர் என்றுகூட எனக்கு நினைவு வரவில்லை.

 நண்பர்கள் என்னிடம் , டாக்டர் ஹாண்டே என்று இருக்கிறார், நல்ல திறமையாக அரசியல் கருத்துக்களைப் பேசுவார்கள் என்று சொன்னபொழுது அவர் ஒரு இந்துவாக இருப்பார் என்று நாங்கள் நினைக்கவில்லை.  அந்தப் பெயர் அப்படி இருந்தது.  ஆனால் அவர் எனக்கு அறிமுகமான பிறகுதான் அவர்கள் நம்முடைய இனத்தைச் சார்ந்தவர்கள் என்று நினைவே வந்தது.  முதன் முதலில் அது ஆங்கிலோ-இந்தியன் பெயர் என்று தான் நினைத்தேன்.  கன்னட மொழியில் என்ன பொருளோ தெரியாது.


திரு கே.விநாயகம்; வெங்கட்ரமணா ஹாண்டே எனபது பெயர்.  ஹாண்டே என்பது ஜாதியின் பெயர்.

மாண்புமிகு திரு.சி.என்.அண்ணாதுரை; வெங்கட்ராமன் ஹாண்டே என்று முதலிலேயே சொல்லியிருந்தால் எனக்கு இந்தச் சந்தேகமே வந்திருக்காது.


...............முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள்-1967-68..பக்கம்-352-353..பூம்புகார் பதிப்பகம்.

No comments: