Pages

Tuesday, 8 April, 2014

இஸ்லாமியர்களின் உரிமைப் போராட்டம்

சோமநாதபுரம் குட முழுக்கு விழாவில் நீங்கள் கலந்து கொள்ளவேண்டாம் என்று பிரதமராக இருந்த நேரு கேட்டுக் கொண்டதையும் தாண்டி, என்னதான் நான் குடியரசுத் தலைவராக இருந்தாலும், அடிப்படையிலே நான் ஒரு இந்து, ஆகையினாலே நான் கலந்து கொள்வேன் என்று சொல்லி, ராஜேந்திரபிரசாத் கலந்து கொண்டார்.
தச் சிறுபான்மையினருக்கான தனி ஆணையம் 1978 இல் தான்  அமைக்கப்பட்டது.  அது ஜனதா ஆட்சியில், ஆனால் அந்த ஆணையம் அமைக்கப்படுவதற்கு முன்பு அதற்கான பல போராட்டங்களில் இஸ்லாமியப் பெருமக்கள் ஈடுபடவேண்டிய கட்டாயம்  ஏற்பட்டிருக்கிறது.  இந்தியா விடுதலைப் பெறுகிறபோதே, அது இந்தியாவாகவும் பாகிஸ்தானாகவும் விடுதலைப் பெற்றிருக்கிற காரணத்தினாலே, இந்து, இஸ்லாம் கலகம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  அந்த மதக்கலவரத்திற்கு ஏராளமானோர் பலியானார்கள்.  ஆகையினாலே பாக்கிஸ்தான் என்பது இஸ்லாமிய நாடு என்றும் இந்தியா என்பது மதசார்பற்ற நாடு என்றாலும், அடிப்படையில் இந்து நாடு என்றும் ஒரு புரிதல் உண்டாகிவிட்டது. அதன் காரணமாக இஸ்லாமியர்கள் தங்களுடைய வீடுகளைத் தொடக்கத்திலேயே இழக்க நேர்ந்த்து.

விடுதலை பொறுவதற்கு முன்பு அவர்களுக்குத் தனி வாக்காளர் தொகுதி இருந்தது.  இட ஒதுக்கீடு இருந்தது.  இன்னமும் சொன்னால் அரசவையிலே பிரதித்துவம்கூட இருந்தது.  அவைகளை எல்லாம் அவர்கள் இழக்க நேரிட்டது.  இதுபற்றியெல்லாம் மிக விரிவாகச் சமநிலை சமுதாயம் என்கிற ஒரு மாத இதழில், பேராசிரியர் அ.மார்க்ஸ் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்.  பல சான்றுகளோடு அதை அவர் எழுதியிருக்கிறார்.

இந்தியா விடுதலை பெறுகிறபோதே அந்த சலுகைகளையெல்லாம் அல்லது உரிமைகளையெல்லாம் அவர்கள் இழந்தார்கள்.  அதற்குப் பிறகு மதத்தைப் பரப்புகிற உரிமை அவர்களுக்கு இருந்தது என்றாலும்கூட, இந்திய அரசமைப்புச் சட்டம் 25/1 என்பதற்கு உட்பட்டுப் பொது அமைதிக்குக் குந்தகம் வரமால் பரப்ப வேண்டும்.   அப்படிக் குந்தகம் வருமானால் மதமாற்றத் தடைச் சட்டம் என்பதைக் கொண்டு வரலாம் என்பது அங்கே இருக்கிறது.  அதன் அடிப்படையிலேதான் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த மதமாற்றத் தடைச்சட்டம் வந்து போனது என்பதை நாம் அறிவோம்.  எனவே அதையும் இழக்க நேர்ந்தது.

அதற்குப் பிறகு பொது சிவில் சட்டம் என்பதை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் இடம் பெறவில்லை, என்றாலும் வழிகாட்டு நெறிமுறைகளிலே இடம் பெற்றிருக்கிறது.  எனவே எந்த நேரத்திலும் பொது சிவில் சட்டம் வரக்கூடும் அதனாலே தங்களுக்கான தனித்துவத்தை இழந்து விடக்கூடும் என்கிற அச்சம் இருக்கிறது.   இவற்றையெல்லாம் தாண்டி 47 இல் இருந்து 50 வரைக்கும் இந்த மதக்கலவரங்களிலேயே காலம் சென்றது. அதற்குப் பிறகு 10 ஆண்டுகளில் அவர்கள் தங்களை இந்த நாட்டுக்கு விசுவாசமானவர்களா இருந்தார்கள்.  எனவே 1960 வரையில் எந்தவிதமான எதிர்ப்பையும் அவர்கள் காட்டவில்லை. காட்ட முடியவில்லை.
 அமைச்சரவையிலே இருந்த பட்டேல், ஒருமுறை பாராளுமன்றத்திலேயே, நீங்கள்தான் நாட்டையே பிரித்துக் கொண்டுபோய் விட்டீர்களே, இதற்கு மேலும் உங்களுக்கு என்ன வேண்டும்?  என்று கேட்டார்.  எனவே பட்டேலின் எதிர்ப்பை அப்போது இஸ்லாமிய பெருமக்களால் எதிர்கொள்ளமுடியவில்லை.  அதைவிட அழுத்தமான இன்னொரு காரணமும் இருந்தது. 

அண்ணல் காந்தியடிகள் இரண்டு மதங்களுக்கும் பொதுவானவராகத்தான் இருந்தார்.  நேருவும் கூட அந்தப் போக்கை கடைப்பிடித்தார் என்றும் சொல்லலாம். 

ஆனால் இந்தியாவினுடைய முதல் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திரபிரசாத் வெளிப்படையாகவே தன்னுடைய மாற்றுக் கருத்துகள் சிலவற்றைக் காட்டத் தொடங்கினார்.  அவற்றுள் முக்கியமானது அம்பேத்கர் கொண்டு வந்த இந்து மதச் சட்டத்தொகுப்பு என்பதைக் குடியரசுத் தலைவர் மிகக் கடுமையாக மறுத்தார்.  அதை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டாலும், நான் திருப்பி அனுப்புவேன் என்று சொன்னார்.

அம்பேத்கர் அமைச்சரவையிலே இருந்து விலகியதற்கு நான்கு காரணங்களைக் காட்டுகிறார்.  அதிலே ஒன்று இந்த இந்து மத மசோதாவை ஏற்க மறுக்கிற காரணத்தினாலேயும், நான் வெளியேறுகிறேன் என்று அவர் குறிப்பிடுகிறார்.  எனவே அமைச்சரவையிலே இருந்து அம்பேத்கர் விலகுவதற்கும் கூட அன்றைக்கு குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திரபிரசாத் அவர்களினுடைய கடும் போக்கு காரணமாக இருந்தது.  அதுமட்டுமில்லாமல் சோமநாதபுரம் ஆலயம் குட முழுக்கு விழாவிலே நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று பிரதமராக இருந்த நேரு கேட்டுக் கொண்டதையும் தாண்டி, என்னதான் நான் குடியரசுத் தலைவராக இருந்தாலும், அடிப்படையிலே நான் ஒரு ஒரு இந்து, ஆகையினாலே கலந்து கொள்வேன் என்று ராஜேந்திரபிரசாத் கலந்து கொண்டார் என்பதையும் நாம் அறிவோம்.  எனவே அவர் தன்னுடைய மதச்சார்பை வெளிப்படையாகக் காட்டத் தொடங்கியதால், 60ஆவது ஆண்டு வரையில் இஸ்லாமியர்கள் தங்கள் உரிமைக்காகக் குரல் கொடுக்க இயலாதவர்களாகத்தான் இருந்தார்கள்.
1951ஆவது ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையின் சார்பாக, காஷ்மீர் பிரச்னையையொட்டி இந்தியாவிலே இருக்கும் இஸ்லாமியர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக டாக்டர் பிராங்க் (Frank Porter Graham) என்கிற ஒரு பிரதிநிதி  அனுப்பப்பட்டார்.

 

அவரை அன்றைக்கு இருந்த இஸ்லாமியத் தலைவர்கள் எல்லாம் போய்ப் பார்த்தார்கள்.  பார்த்து என்ன சொன்னார்கள் என்றால்,  எங்களுக்கு இந்தியாவிலே எந்த தொல்லையும் இல்லை, நீங்கள் தலையிட வேண்டாம்  என்றுதான் சொன்னார்கள்.  அவர்களுள் குறிப்பிடத் தக்கவர், அன்றைக்கு அலிகார் பல்கலைக்கழகத்தினுடைய துணைத் தலைவராக இருந்த  ஜாகீர் உசேன். (ஜாகீர் உசேன் இந்தியாவின் 3 வது குடியரசுத் தலைவர், இந்தியாவின் முதல் இஸ்லாமியக் குடியரசுத் தலைவர்)

 ஜாகீர் உசேன் அந்த ஐக்கிய நாடுகளினுடைய பிரதிநிதியைச் சந்திக்கிறபோது இந்தச் செய்திகளைச் சொல்லியிருக்கலாம், ஆனால் சொல்லவில்லை.   எங்களுக்கான கல்வி உரிமைகளையெல்லாம் நாங்கள் இழந்திருக்கிறோம்.  எங்களுக்கான தனி வாக்காளர் தொகுதி என்பது போய்விட்டது.  அது மட்டுமல்லாமல் உருது, இந்துஸ்தானிகூட அன்றைக்கு அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்கப்படவில்லை, இந்தி மட்டும்தான் என்கிற நிலை இருக்கிறது.  இவற்றையெல்லாம் அவர் சொல்லியிருக்கலாம்.  ஆனாலும்  1951இல் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய கட்டாயத்திலேதான்  அவர்கள் இருந்தார்கள்.  எனவே யாரும் எது குறித்தும் வாய் திறக்கவில்லை.  அதற்குப் பிறகு ஒரு பத்து ஆண்டுகள் மதக் கலவரங்கள் இல்லாமல் இருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.
 
 

  தமிழ்நாட்டிலேதான் காயிதே மில்லத்  அவர்கள் நாடாளுமன்றத்திலேயே இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை எழுப்பினார்கள்.  அதையும்கூட  வடநாட்டிலே இருக்கிற இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை.    காயிதே மில்லத் குரூப் என்று சொல்லப்பட்ட நான்கு பேர் மட்டும்தான் அதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.   இட ஒதுக்கீடு வேண்டும் என்று காயிதே மில்லத் மட்டும்தான் குரல் கொடுத்தார்.  அந்தக் குரல் ஒங்கி ஒலிக்கத் தொடங்கிய நேரத்தில் ஜபத்பூரிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான மிகப்பெரிய கலவரம் தூண்டிவிடப்பட்டது.  இஸ்லாமிய மக்களினுடைய சொத்துக்கள் சூறையாடப்பட்டன.  உயிர்ச் சேதம் இருந்தது.

61 இல் நடந்த அந்தப் போராட்டம் ஒரு விதத்திலே எதிர்விளைவையும் உருவாக்கியது.  இனி நாம் அடங்கியிருக்கக் கூடாது என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியது.  எனவே எதிர் விளைவுகள், பேரணிகள், அதை எதிர்த்து ஆர்பாட்டங்கள் என்று வளர்கிறபோது, 64ஆவது ஆண்டு இன்னொரு கடுமையான தாக்குதலை ரூர்கேலாவிலே அவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது.  61, 64 ஆகிய இரண்டு ஆண்டுகளிலேயும் நடைபெற்ற அந்த மிகக் கடுமையான தாக்குதல்கள்தாம்.  இனி இந்தியா முழுவதும் இருக்கிற இஸ்லாமியர்கள் ஒருங்கிணைந்து ஒரணியில் நின்றாலே ஒழிய, நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்கிற நிலையை உருவாக்கியது.

 அதன் விளைவு  1972 ஆவது ஆண்டு மும்பையிலே ஒரு மிகப்பெரிய அனைத்து இந்திய இஸ்லாமிய மாநாடு  என்று ஒன்று நடைபெற்றது.  அந்த மாநாடுதான் இஸ்லாமியர்களினுடைய சங்கத்தின் ஒரு திருப்பு முனை என்று நாம் சொல்ல வேண்டும்.  அதையொட்டி 73ஆவது ஆண்டு ஷேக் அப்துல்லாவினுடைய தலைமையில் அன்றைக்குப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்களைச் சந்தித்துக் கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்தார்கள்.  அந்தக் கோரிக்கையினுடைய அடிப்படையான இரண்டு மூன்று செய்திகள் என்ன என்று பார்த்தால், உருது மொழிக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும், எங்களுக்கான வாக்காளர் தனித் தொகுதி வேண்டும், அமைச்சரவையில் தவறாது பிரதிநிதித்துவம் வேண்டும், பொதுச் சிவில் சட்டம் என்பது மறுபடியும் கொண்டு வரக்கூடாத ஒன்றாக இருக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளையெல்லாம் வைத்தார்கள்.

 


இவற்றுக்கெல்லாம் தனியாக ஓர் ஆணையம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை அவர்கள் உள்ளடக்கி இருந்தார்கள்.  ஆனால் அன்றைக்கு அது நடைமுறைக்கு வரவில்லை.  என்ன காரணத்தினாலோ அன்றைக்கு  இந்திரா காந்தி அரசு இஸ்லாமியர்களுக்கு ஆதரவான நிலையில் இருந்தாலும்கூட, அப்படி ஓர் ஆணையத்தை அமைக்கவில்லை.   அதற்குப் பிறகு 5 ஆண்டுகள் கடந்துதான்,  1978ஆவது ஆண்டு ஜனதா அரசு பதவி ஏற்றதற்குப் பிறகு, மதச் சிறுபான்மையினருக்கான தனி ஆணையம்  என்று ஒன்று அமைக்கப்பட்டது.  அதற்குப்  பின்னாலும்கூட பல்வேறு தாக்குதல்கள், முரண்பாடுகள், மதக்கலவரங்கள் இருந்து கொண்டே இருக்கின்றன என்றாலும், இன்றைக்கு அவர்களினுடைய கருத்துக்களை எடுத்துச் சொல்லப் பயன்படுகிற ஒர் அமைப்பாக அந்த ஆணையம் இருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். 

                                                                                                                                                   …..பேராசிரியர். சுப.வீரபாண்டியன்…ஒன்றே சொல் நன்றே சொல்..கலைஞர் தொலைக்காட்சி..தொகுப்பு புத்தகம் 4 ..பக்கம் 117-122..வானவில் புத்தகாலயம்.

No comments: