Pages

Friday 6 June, 2014

தமிழர்களே, எகிப்திய வளர்ச்சிக்கு காரணமானவர்கள் என்று விவேகானந்தர் கூறுகிறார் -பேராசிரியர்

ரு அரசியல் கண்ணோட்டத்திலே தென்னாட்டுக்காகக் குரல்  எழுப்புகிற முறையில் தமிழ்நாடு – திராவிடநாடு, தமிழ்நாடு, பண்பாடு, நாகரிகம், திராவிட மொழிகள், கலைகள் ஆகியவைகளுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உணர்வோடு, அண்ணா அவர்கள் ‘தென்னாடு அகில இந்தியாவிற்கும் வழங்குவதற்கான ஒரு தனித்தன்மை – சிறப்புடையதான கலாச்சார மேன்மை கொண்டதாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டார்கள்.  ஒரு வேளை, அண்ணா அவர்கள் சொன்னது என்பதால், அந்தக் கருத்துக்கு அனைத்துத் தரப்பினரும் இசைவு தெரிவிப்பது கடினமல்லவா?



நூறு ஆண்டுகட்கு முன்னரே சுவாமி விவேகானந்தர் சொல்கிறார்;


The Madras Presidency is the habitat of the Tamil race whose civilization was the most ancient and a branch of whom called the Sumerians, spread a vast civilization on the banks of the Euphrates, in very ancient times, whose astrology, religious lore, morals furnished the foundation for the Assyrian, and Babylonian civilization, and whose mythology was the source of Christian Bible.  Another branch of the Tamilians spread from the Malabar coast, and gave rise to the wonderful Egyptian civilization, and the Aryans also are indebted to this race in many respects.





சென்னை மாநிலத்தை வாழ்விடமாகமாகக் கொண்டுள்ள தமிழர்கள், மிகவும் தொன்மையானதொரு நாகரிகம் பெற்றவர்களாதலின், அவர்களில் ஒரு பிரிவினரான சுமேரியர்கள், மிகவும் பழங்காலத்திலேயே யூப்ரடீஸ் நதிக்கரையில் விரிந்ததொரு நாகரிகத்தைப் பரப்பியதால், அவர்தம் சோதிடக்கலை, மதப்பழங்கதைகள், ஒழுக்க நெறிகள் ஆகியவையே அசிரியன், பாபிலோனிய நாகரிக வளர்ச்சிக்கு அடிப்படையானதுமின்றி அவர்தம் புராணச் செய்திகளே கிறித்தவர்களின் விவிலியத்திற்கு (பைபிள்) மூலமாகவும் அமைந்தன.  மேற்குக் கடற்கரையில் (மலபார்) இருந்து சென்று பரவிய மற்றொரு பிரிவான தமிழர்களே – வியக்கப்படும் எகிப்திய நாகரிக வளர்ச்சிக்கும் காரணமாயினர்.  ஆரியர்களும் இந்தத் தமிழ் இனத்திற்குப் பல வகையிலும் கடமைப்பட்டுள்ளனர், என்று கூறியுள்ளார் சுவாமி விவேகானந்தர்.        



சுவாமி விவேகானந்தர் அரசியல்வாதி அல்லர்.  திராவிடர் இயக்கத்தைக் கண்டதால் இப்படிச் சொல்கிறவர் அல்லர்.  உலகத்திற்கெல்லாம் ஒரு கலாச்சாரத்தை வழங்கிய வரலாறு படைத்த ஒரு தொன்மையான இனத்தைச் சார்ந்தவர்கள் வாழுகிற நிலம் தமிழ்நாடு என்று அவர் குறிப்பிட்டார்.  ‘’இந்தியாவிலேயே நல்ல பண்பாடுடைய மக்கள் வாழுகிற பகுதியாக விளங்குவது தென்னாடு!’’ என்று பிறிதோர் இடத்திலே சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டார்.  ஆகவே தென்னாட்டுக்கு ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது என்பதை நாம் மறந்துவிட முடியாது; மறக்கவும் கூடாது.                                                      



..கல்வி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன், திராவிட இயக்கக் கருத்தரங்கம் தொடக்க உரை  நாள் 27.04.1998, இடம் சென்னைப் பல்கலைக்கழகம்..புத்தகம் திராவிட இயக்கம் என்ற நூலிலிருந்து ஒரு பகுதி. பக்..13-14-பூம்புகார் பதிப்பகம்.

"சென்னை" என்று பெயர் மாற்றிய வரலாற்று நாயகர் "கலைஞர்" வாழ்க!

சென்னை என்றால் போடா! வெண்ணை! என்று சொல்வதை விட்டு விட்டு மதராசின் பழைய வரலாற்றை சென்னையின் 375 வது பிறந்த தினத்தில் திரும்பி பார்ப்போம்!..வரலாற்றுத் தகவல்கள். 






  ந்த மதராசப் பட்டினம் என்று ஆங்கிலேயர்களால் காரணமின்றி அழைக்கப்பட்டு வந்ததை சென்னையாக மாற்றி அழைக்க வைத்தவர் கலைஞர்.  கலைஞர்  1996 ஆம் ஆண்டு அரசு ஆணயாக உத்தரவிட்டதின் பேரில் இந்த பூர்வீகப் பெயர் இங்கே நிலைத்து நிற்க செய்யப்பட்டிருக்கிறது.  இது மாற்றப்பட்டபோது பல சரித்திர ஆசிரியர்கள் எதிர்த்தனர்.

இது பூர்வீகப் பெயரா?  என்றால் ஆமாம்!  என்ற பதில் தான் ஆங்கிலேயரிடமிருந்தே கிடைக்கிறது நூல்கள் வாயிலாக.  வரலாற்றுக் குறிப்புகளும், ஆய்வு நூல்களும் ஆதாரத்துடன் தருகிறது.


சென்னையின் வரலாறுகள் நமது முன்னோர்களால் குறித்து வைக்கப்படவில்லை. இது குறிப்பு எடுத்து வைக்கும் பழக்கம் நமக்கு இல்லாததினால் நம்மிடம் இருந்து பல வரலாறுகள் கைவிட்டுப் போனது.  அப்படி கைவிட்டுப் போனதில் இதுவும் ஒன்று.  ஆனால் இந்த வரலாறுகளை ஆங்கிலேயர்களின் குறிப்பேடுகளில் இருந்தே பல வரலாறுகளை அறிந்து கொள்ள முடிகிறது. ஆங்கிலேயர்கள் குறிப்பு எழுதுவதில் வல்லவர்கள்.  இப்போது அந்த பழக்கம் நமக்கு இருக்கிறது என்றால் அது ஆங்கிலேயனிடத்தில் இருந்து வந்தது தான்.  (டைரி எழுதுவது உட்பட)


1630 ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய நாட்டு அரசிளங்குமரியான  ‘’இன்பென்டா கேதரைன்’’ ஆங்கில நாட்டு அரசனை (இரண்டாம் சார்லஸ்) மணந்தபோது சீதனமாக பம்பாய் (மும்பாய்) கொடுக்கப்பட்டதற்கு முன்னரே இந்த மதராசப் பட்டிணம் நிர்மானிக்கப்பட்டிருக்கிறது.                                                                                                                            

ஆங்கிலேயர் எதற்காக வந்தனர்?


ஆங்கிலேயர்கள் இங்கே இந்த நாட்டிற்குள் நுழையும் போது பெரிய பரிவாரங்களோ, கத்தி, துப்பாக்கிப் போன்ற ஆயுதங்களையோ, இங்கே கொண்டு வந்து போரிட்டு ஆட்சியைப் பிடிக்கவில்லை. அவர்கள் நோக்கம் இங்கே ஆள வந்ததற்காகவும் இல்லை. 

இரண்டே இரண்டு கப்பல்களில் வணிகத்திற்காக வந்திறங்கி பல நூறு ஆண்டுகள் இங்கே ஆட்சி புரிந்தனர்.  அவர்களுக்கு அதிகாரங்களை அவர்கள் கேட்காமலே இங்கிருப்பவர்களே தாமாக முன் வந்து வழங்கி வந்துள்ளனர். 



இங்குள்ளவர்களுக்கு தண்டனை கொடுப்பதைக் கூட அவர்கள் கையில் எடுக்கவில்லை.  ‘’இந்தக் குற்றவாளியை என்ன? செய்யவேண்டும்?’’ என்றே இங்கு ஆண்ட குறு நில மன்னர்களிடமே அனுமதி கேட்டிருக்கிறார்கள்.  அப்படி தண்டனை கொடுக்க அனுமதித்ததின் பேரில் தான், இங்கு அவர்களால் ஒரு தமிழக குற்றவாளிக்கு முதல் தூக்கு தண்டனையும் கொடுக்கப்பட்டது 1641 இல்.  அந்த அனுமதி ‘’தாமரல வெங்கடப்ப நாயக்க’’ மன்னரால் வழங்கப்பட்டது என்று ஆங்கிலேயக் குறிப்புகள் கூறுகின்றன.





ஆங்கிலேயெ கிழக்கிந்தியக் கம்பெனிக்கு தென் இந்தியாவில் தொழிற்சாலை என்கிற பெயரில், மசூலிப்பட்டனத்தில் குடியிருப்பை அமைத்துக்கொள்ள 1611 ஆம் ஆண்டு கோல்கொண்டா முகலாய அரசர்கள் அனுமதி அளித்தனர். அதன் தொடர்ச்சியாக 1626 ஆம் ஆண்டு பழவேற்காட்டிற்கு 35 மைல் வடக்கே துர்கராயப்பட்டினத்தில் வேறொரு குடியிருப்பை அமைத்தனர். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அந்த இடம் ஒத்துவராததால் வேறொரு இடத்தை தேடினர்.

1636 ஆம் ஆண்டு ஃபிரான்சிஸ் டே என்பவரிடம் புதிய இடத்தை தேடும் பொறுப்பு அளிக்கப்பட்டது. மசூலிப்பட்டனத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையே கடலோரமாக இடம் தேடி அலைந்த அவர் மதராசக்குப்பம் எனும் இடத்தை தேர்ந்தெடுத்தார். அப்போது இந்தப் பகுதியை ஆட்சி செய்தவர்தான் ‘’தாமல் வெங்கடப்பா நாயக்கர்’’. அவரது தந்தை ‘’சென்னப்ப நாயக்கர்.’’ 


சென்னை என்ற பெயர் ஏற்கனவே இருந்ததற்கான ஆதாரம்!


1639 இல் ஆங்கிலேயர்கள் இங்கே வந்திறங்கி அவர்கள் வணிக நிறுவனம் கோட்டை உருவில் உருவாக வேண்டி ஒரு கோட்டையைக் கட்ட ஆங்கிலேயர்கள் தமாரல வெங்கடப்ப நாயக்க குடும்பத்தை அணுகினர். போலிகர்கள் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட ‘’பாளையக் காரர்கள்’’ (பாளையக் காரர்கள் என்றால் வீரபாண்டிய கட்ட பொம்மன் ஞாபகம் வரலாம், பொம்மு நாயக்கரும் ஞாபகம் வரலாம்) அவர்களுக்கு (ஆங்கிலேயர்களுக்கு) நான்கு கிராமங்கள் கொடுத்தனர்.  அவை முறையே , மதராச குப்பம், (இதைத்தான் பின்னர் மதராஸ் என்று அழைத்தனர்), சென்னைக் குப்பம், ஆர்க்குப்பம், மாலேபட் என்பன.

மதராசப் பட்டிணம் என்ற பெயர் வந்ததற்கான காரணம் சரித்திர நூல்களிலும், ஆங்கிலேயக் குறிப்புகளிலும் இல்லை.  ஆங்கிலேயர் வந்தது முதல் தான் இது மதராசப் பட்டிணம் என்று அறியப் படுகிறது.  சென்னைப் பட்டிணம் என்று இவ்வூர் மக்களாலும் காலங்காலமாக அழைத்துக் கொண்டு வரப்பட்டும் இருந்திருக்கிறது என்பது பல நூல்கள் வாயிலாகவும் தெரிகிறது. தாமரல வெங்கடப்ப நாயக்கர் ஆங்கிலேயருக்கு தன் தந்தைப் பெயரான சென்னப்ப நாயக்கர் பெயரையே இந்த  இந்த இருவேறு ஊர்கள் அடங்கிய மதராசப் பட்டிணத்திற்கு ஒரே பெயராக சென்னை என்று வைக்குமாறு கடிதம் எழுதியுள்ளார் என்றும் ஆங்கிலேயேக் குறிப்புகள் தெரிவிக்கிறது.

இன்னொரு முக்கியமான குறிப்பு, மிகவும் போற்றப்படுகிற பிரெஞ்சு இந்திய நாட்குறிப்பாளர், ஆனந்தரங்கம் பிள்ளையவர்களைப் பற்றியதாகும். இந்த நூல் ஸ்ரீநிவாச என்பவரால் சமஸ்கிருதத்தில் 1752 இல் ‘’ஆனந்தரங்க விஜய சம்பு’’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆனந்தரங்கம் பிள்ளை அவரது தந்தை திருவேங்கடம் பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாறாகும். இதில் மதராஸ் சென்னபட்டனா, சென்னகேசவபுரா என்றழைக்கப்படுகிறது.

பெரிய பகோடா என்று அறியப்பட்ட சென்ன கேசவப் பெருமாள் கோவில் (பிறகு உயர்நீதிமன்றம் கட்டப்பட்ட இடம்) இருந்த காரணத்தால் சென்ன கேசவபுரா என்ற பெயரால் அறியப்பட்டது. (பக்கோடா என்றால் கோயில்களையும் குறிக்கும் இன்றும், புத்தர் கோயில்களை பக்கோடா என்று குறிப்பிடுவார்கள்..அதே போன்று அன்றைய நாணயங்களையும் குறிக்கும், ‘’வராகன்’’ என்ற நாணயமும் விஜய நகரப் பேரரசுகளால் அப்போது பயன்படுத்தப்பட்டு வந்தது.  ‘’வராகன்’’ விஷணு முத்திரை பொறிக்கப்பட்டதால் அதற்குப் பெயர் வராகன். ஆனால் பகோடா நாணயங்களுக்கான பெயர்க் காரணக் குறிப்புகள்  இல்லை).





பாரதியாரும் பல இடங்களில் சென்னை என்பதை பயன்படுத்தியுள்ளார் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.


சென்னையில் உள்ள கிராமங்களான மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பல்லாவரம், வேளச்சேரி, திருவான்மியூர், குன்னத்தூர், மாங்காடு, பூவிருந்தவல்லி, பாடி, திருமுல்லைவாயில், அம்பத்தூர், கொரட்டூர், புழல், புலியூர் போன்ற இடங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தவை. இவை அன்றைய மதராசப் பட்டினத்தை சுற்றி 20 மைல் சுற்றளவிற்குள் உள்ளவை.  

பல்லவாரத்தில் தான் முதன்முதலாக ஒரு பழங்காலச் சான்று கிடைத்தது. இன்றைய சென்னையில் உள்ள இடங்களான எழும்பூர்,  சாந்தோம், மயிலாப்பூர், புரசைவாக்கம், புழுதிவாக்கம், அமைந்தகரை, நுங்கம்பாக்கம் போன்றவைகள் குறுநில மன்னர்களிடமிருந்து போர்ச்சுகீசியர் அவர்களிடமிருந்து, ஆங்கிலேயர்கள், அப்புறம் பிரஞ்சுக்காரர்கள் மறுபடியும் ஆங்கிலேயர்கள் என்று மாற்றி மாற்றி வாங்கப்பட்டதாகவும் குறிப்புகள் தருகிறது.  இவை எல்லாம் ஒவ்வொரு கிராமங்களாக இருந்தவைகள். 


சென்னையின் பெருமைகள்


அகழ்வராய்வின் போது இங்கே இருந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  திருவெற்றியூரில் வேத பாடசாலை இருந்ததாக சரித்திர ஆசிரியர் ராமன் கூறுகிறார். டாலமி குறிப்பின்படி, தென், வட பெண்ணாறுகளின் இடையில் இந்த இடம் நன்கு அறியப்பட்டிருக்கிறது  கரிகாலச் சோழன் காலத்து, தொண்டைமான் இளந்திரயன் வென்ற இடமாகக் கருதப்படும் இவ்விடம் தொண்டைமண்டலமெனப் பெயர் பெற்றிருக்கலாம்.  அசோகர் காலத்திலேயே இங்கிருந்த குறும்பர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்றும் சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.   


சென்னையின் பிறந்த நாள் சரியா?



 பிரான்சிஸ் டே எனும் ஆங்கில அதிகாரி ‘’ஈகிள்’’ ‘’யூனிடி’’ என்ற கப்பல்களோடு, 1640 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதியன்று மதராசப்பட்டினத்தை அடைந்தனர். இந்த நாள் தான் சென்னையின் பிறந்தநாளாக கருதப்படுகிறது.!  (சிலர் 1639 செப்டம்பர் மாதத்து 3 ஆம் தேதியைத்தான் முதல் நாளாகக் கருதுகின்றனர்);  மற்றும் சிலர் ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதியைத்தான் மதராசப் பட்டினத்தின் பிறந்தநாளாக்க் கருதுகின்றனர்)  இந்த தேதி ‘’ஈகிள்’’ என்ற கப்பலின் தலைவன் தனது குறிப்பில் எழுதியிருந்த்தை வைத்து நிர்ணயிக்கப்பட்டதென வரலாற்று ஆசிரியர் ஹென்றி டேவிசன் லவ் கூறுகிறார்.  

 எது எப்படி? இருப்பினும், பலகாலமாக ஆங்கிலேயரிடம், இப்பூர்வீக மக்கள் முறையிட்டும் மாற்ற முடியாமல் போனப் பெயரை, மாண்புமிகு கலைஞர் அவர்கள், மதராசப் பட்டினத்தை ‘’சென்னை’’ என்று சரித்திரப் புகழ் பெயராக மாற்றி சரித்திரத்தில் அழியா இடம்பெற்றுவிட்டார்.  நமது பெருமையையும், பூர்வீகத்தையும் நிலைநாட்டிவிட்டார். அவருக்கு நன்றி கூறுவோம்!     


…..கட்டுரைக்கான ஆதாரத் தகவல்கள் தந்து உதவிய நூல்; மதராசப்பட்டினம் (1600-1947)..ஆசிரியர் கடலாடி நரசய்யா…வெளியீடு பழனியப்பா பிரதர்ஸ்… கூடுதல் தகவல்கள் தந்தவைகளுக்கு நன்றி; விக்கிப்பீடியா ஆங்கில தகவல் களஞ்சியம்..பசுமைத் தாயகம் வலைத்தளம்.

ஆயுதப் புரட்சி நடத்தியாவது தி.மு.க. வை கலைத்துவிட வேண்டும்! அன்றைய திக கோஷம்!

திரும்பிப் பார்க்கிறேன் 1967 இல் பெரியாரின் தி.மு.க. ஆதரவு நிலைக்குத் துணை நின்ற ஒரேத் தொண்டன் ரோடு சுப்பையா!                                                                                                                                                                                                                                    

றக்கமுடியாத
1967 ஆம் ஆண்டு பிப்ரவரி - மார்ச்சு மாதங்கள்!  தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் முழுமூச்சாய் காமராசரின் காங்கிரசை ஆதரித்தக் காலம்.  தேர்தலுக்குப் பிரச்சாரம் என்று தான் தொடங்கியது.  பின்னர் 1957, 1962, 1967 தேர்தல்களில் திராவிடர் கழகத் தோழர்கள், காங்கிரசு ஊழியர்களை விட  முழுமையாய் காங்கிரசுக்குத் தேர்தலில் ஆதரவுப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர்.

காங்கிரசு வேட்பாளர்களும், ஒவ்வொரு தொகுதியிலும் இருந்த அவர்கள் உட்கட்சி பூசல் காரணமாய் அவர்களையே நம்பமுடியாமல், திராவிடர் கழகத் தோழர்களையே முழுக்க முழுக்க நம்பும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். திக தோழர்கள்,  தேர்தல் செலவுகள் பிரச்சாரம், பண விநியோகம், வாக்காளர்களைச் சந்திப்பதும், வாக்காளர்களுக்குப் பண விநியோகம் செய்வது என்கின்ற அளவிற்கு நெருக்கமாகிவிட்டார்கள்.  கொஞ்சம் தயக்கம் காட்டியவர்களையும், தந்தை பெரியாரிடமே சொல்லி செய்யும்படி பணிக்கப்பட்டார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் மறைந்த திக மாவீரன் மன்னை நல்லதம்பி போன்றவர்கள், கருப்பையா மூப்பனார், உடையார் போன்றவர்களுடனும், தஞ்சை திக இராசகோபால்  (நன்னிலம் நடராசனின் சம்பந்தி, இன்றைய நகரமன்றத் தலைவர் / ஜெயபாலின் மாமனார்) முதலியவர்கள் பரிசுத்த நாடார் போன்றவர்களுடனும், கரூர் த.க. சின்னப்பன், பொன்னப்பா போன்றவர்கள் நல்லசாமி கவுண்டர் போன்றவர்களுடனும், நெல்லை தி.க தியாக அரசன், காங்கிரசு தலைவர்கள் செல்லபாண்டியன், இராசாத்தி குஞ்சிதபாதம் போன்றவர்களுடனும் திருச்சியில் நான் (செல்வேந்திரன்)  T.D. வீரப்பா முதலிய தி.க வினர் நகர்மன்றக் காங்கிரசுத் தலைவர் லூர்துசாமிப் பிள்ளை (முன்னாள் M.P அடைக்கலராஜின் தந்தை) காங்கிரசு தலைவர் T.S.அருணாசலம் போன்றவர்களுடன் இது போல பல மாவட்டங்களிலும் இரண்டறக் கலந்துவிட்டார்கள்.  காங்கிரசுக்காரர்கள் வருந்தி வருந்தி அழைத்துப் பயன்படுத்தியப் பேச்சாளர்கள் திருவாரூர் தங்கராசு, எம்.கே.டி சுப்பிரமணியன், நாத்திகம் இராமசாமி போன்றவர்கள் மட்டும் தான்.  திருச்சியில் எந்த பெரிய காங்கிரசுத் தலைவர் பேச்சாளர் வந்தாலும் சிறப்புப் பேச்சாளருக்கு அடுத்த இடம் எனக்குத் தான். (செல்வேந்திரன்)

காங்கிரசுத் தோல்வியை தி.க வினர் தங்கள் தோல்வியாக எடுத்துக் கொண்டனர்.  இது தனிப்பட்ட விரோதம் - மோதல் - கைகலப்பு - அடிதடி - நாகையில் கொலை வரை கொண்டுப்போய்விட்டது.

இந்தப் பின்னணியில் கட்டுரையின் தொடக்கத்திற்குப் போவோம்.  நான்தான் (செல்வேந்திரன்) 1967 ல் திருச்சி நகர்மன்றத் தலைவரும் காங்கிரஸ் வேட்பாளருமான A.S.G. லூர்து சாமிப்பிள்ளையின் சீப் கவுண்டிங் ஏஜென்ட். (வாக்கு எண்ணிக்கைப் பொறுப்பாளர்).  ஒவ்வொரு மேசையிலும் வாக்கு எண்ணிக்கையைக் கவனித்துக் கொண்டவர்கள் (ஏஜென்டு) ஓரிருவர் தவிர அனைவரும் திக வினரே.  இது வேட்பாளரின் விருப்பப்படியே என் ஏற்பாடு. 

எண்ணிக்கையின் போது, எனக்கும் தேர்தல் அதிகாரி ஜோசப் கிருஷ்ணன் என்ற தாசில்தாருக்கும் ஏற்பட்ட மோதலில் கழகத் தோழர்கள் மடியிலிருந்து கத்தியை ஒரே சமயத்தில் எடுத்து உயர்த்திவிட்டனர்.  நிலைமை கட்டுக்கடங்கவில்லை.

அன்றைய திமுக நகரச் செயலாளரும், கலைஞரின் பேரன்பிற்குரியவரும், என் தொழில் நண்பருமான ஷராப் நடராஜன் என்னை அன்போடு அணைத்துக் கொண்டு ''யாருக்காகவோ நாம்ப பங்காளிங்க அடிச்சுக்கலாமா… நாளைக்கே நாம ஒன்னாப் போனாலும் போயிடுவோம்…கோவப்படாதீங்க… உங்க ஆளுங்களை சமாதானம் செய்யுங்க…'' என்றார்.  அதிகாரம் சாதிக்காததை அன்பு சாதித்தது.

ஒரு எளிய தொண்டனின் வார்த்தைகள் அடுத்தவாரமே பலிக்கும் என்று நான் கற்பனைக் கூட செய்யவில்லை.  காரணம் அன்று பெரியாரின் சுற்றுப் புறமும் சூழலும் அப்படி!

அன்று காலையிலேயிருந்தே தேர்தல் முடிவு நிலவரம் சரியில்லை.  தேர்தலில் தோல்வியே காணாத சட்டமன்ற வீராங்கனை என்று கொண்டாடப்பட்ட T.S.அனந்த நாயகியின் தோல்விச் செய்தி தான் வீழ்ச்சியின் முதல் அறிவிப்பு! இந்தச் செய்தியை ஒரு கையடக்க மேல்நாட்டு டிரான்ஸ்சிஸ்டர் (அப்போதெல்லாம் அது பெரிய அதிசயம்) மூலம் கேட்டு உற்சாகமாக எல்லார் காதுகளிலும் சொல்லிக் கொண்டிருந்தார், பிரபல வழக்கறிஞர் ஜமால் முகமது.  இவர் பெரியாரின் அன்புக்குரிய நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரும் என் தாத்தாவின் குடும்ப நண்பருமான திவான் பகதூர் கலிபுல்லாவின் மகன்.  இன்றைய (2007) தமிழக அரசு வழக்குரைஞர் இராஜா கலிபுல்லாவின் தந்தை.

மாலை நான்குமணிக்கெல்லாம் சேர்மன் லூர்து சாமியிபிள்ளையின் தோல்வி முடிவாகிவிட்டது.  நான் திமுக செயலாளர் நடராசனிடமும், முடிவு  அறிக்கையில் கையெழுத்துப் போட வந்திருந்த லூர்துசாமி பிள்ளை மகனிடமும் சொல்லிக் கொண்டு பெரியார் மாளிகைக்கு வந்துவிட்டேன்.

மதியம் தூங்கி எழுந்து காப்பிக் குடித்துக் கொண்டிருந்த பெரியாரிடம் செய்தியை சொன்னேன்.

அய்யா ஆதங்கமாய்க் கேட்டார்.  '' என்னங்க செல்வேந்திரன் எப்போதும் நல்ல சங்கதியாக் கொண்டாருவீங்க…பத்து நாளா கெட்ட சங்கதியா சொல்றீங்களே…'' என்றார்.

அருகிலிருந்து ஈரோடு சுப்பையா பெரியாரிடம் சொல்கிற சாக்கில் என்னையும் கிண்டல் செய்கிற மாதிரி சொன்னார்.

''அய்யா… எதையும் முன்கூட்டியே கணிக்கிற அளவுக்கு செல்வேந்திரன் பெரிய அறிவாளி இல்லீங்க… நடப்பை… நிலவரத்தை முன்கூட்டியே கேட்டு வந்து சொல்றாருங்க…'' என்றார்.

பெரியார் இந்த வேடிக்கையை ரசிக்கவில்லை.  ஏனென்றால் சேர்மன் லூர்துசாமி பிள்ளை பெரியாருக்கு மிக மிக வேண்டியவர். அவருடைய மாமனார் மறைந்த கவுன்சிலர் சூசையாப் பிள்ளை நீதிக்கட்சியின் ஆதரவாளர்  தமிழகத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்ட பெரியார் சிலைக்குப் பணத்தண்டல் தொடங்கி, இடத்தேர்வு - அனுமதி அனைத்தும் செய்தவர் லூர்துசாமி பிள்ளை மட்டுமே.  ஓடியாடி உடலுழைப்புச் செய்தவர் நோபிள் கோவிந்தராஜ், பெரும் பொருளை தண்டல் செய்து தந்தவர் ஈரோடு சுப்பையாதிருச்சி பெரியார் சிலைப் பீடத்தின் கல்வெட்டில பெயர் போடப்பட்டுள்ள பலரும் '' பெயர் இரவல்''அல்லது ''உண்டு காட்டிகளே''.

அதிகாரப்பூர்வமான தேர்வு முடிவுகளுக்குப் பதினைந்து நாட்களுக்கு முன்பே ஏறக்குறைய தேர்தல் நிலவரங்கள் தெரிய ஆரம்பித்துவிட்டன.  இளைய குமார பட்டயக்காரரின் மனைவி பார்வதி அர்ஜூனன் அமைச்சர் திருமயம் இராமய்யா முன்னாள் அமைச்சர் கக்கன் போன்றவர்களின் தொகுதிகளில் காங்கிரசு பெரும்பான்மை வாக்குவித்தியாசத்தில் தோற்கும் என்பதைச் சொன்னேன்; முடிவு அப்படியே இருந்தன. 

மாலை ஆறு மணி, இருள் கவ்வத் தொடங்கும் நேரம், உடல் சோர்வு, மனச் சோர்வு- நான் மாளிகை முன்னிருந்த வேப்ப மரத்தடியில் காற்றாட ஒரு பெஞ்சில் படுத்திருந்தேன்.  ஈரோடு சுப்பையாவும், பெரியார் டிரஸ்டின் உறுப்பினராய் இருந்த இந்தியன் பாங்க் மீனாட்சி சுந்தரமும் ஏதும் பேசாமல் புகைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.  பெரியார் கூப்பிடுவதாய் உதவியாளர் மகாலிங்கம் ஓடிவந்தார் பதற்றத்துடன். சுப்பையா ''என்ன மகாலிங்கம்'' என்ன சார்…'' என்றார்.  மகாலிங்கம் சொல்லத் தடுமாறினார்.

சுப்பையா ஓடினார்.  நானும் உடன் போனேன்.  பெரியார் ''சுப்பு… தெரியுமா காமராஜே தோத்துட்டாராம்.  தோத்துட்டாராம்…'' என்றார்.  மணியம்மை மெல்ல அருகில் வந்து நின்றார்.  ஒரு மாறுதலான அமைதி யாரும் பேசவில்லை.

சுப்பையா முதலில் மவுனத்தை உடைத்தார்.  ''அய்யா எந்த தரப்பிலிருந்து சேதி… யாரு சொன்னா…'' என்றார்.

பெரியார் ''சேதி உண்மைதானுங்கோ…ஆனா அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரலை… எவ்வளவு தாமதமா சொல்லணுமோ அவ்வளவு தாமதமாகத்தான் சொல்லுவாங்க… அனேகமாக நடுராத்திரியில சொன்னாலும் சொல்லுவாங்க…'' என்றவர்.  சொன்ன பெரிய அதிகாரி மற்றும் சென்னையிலிருந்து நரசம்பட்டி சம்பந்தமும் சொன்னதாய்ச் சொன்னார்.

''போச்சு எல்லாம் போச்சு... இங்கே இருக்கிறவனை (பக்தவச்சலம்) நம்பி உட்டுப் போட்டு தில்லிக்குப் போக வேணான்னு சொன்னேன். அவரு தலையில அவரே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டார் காமராஜ்...'' என்றார்.    
                                                                                                                                  
மீண்டும் பல நிமிடங்கள் பயங்கர அமைதி.  எல்லோரும் தரையைப் பார்த்தபடி நின்றார்கள்.  பெரியாரும் பெரியார் மாளிகையும் அப்படியொரு அமைதியில் நின்றதை நான் பார்த்ததில்லை.



அன்று வானொலியிலும் தொலைபேசியிலும் செய்தி - திமுக ஆட்சியமைக்கும் தனிப் பெரும்பான்மை நோக்கி முன்னேறுகிறது.  பெரியாரைச் சுற்றி நின்று கொண்டிருந்தவர்களில் நான் (செல்வேந்திரன்), சுப்பையா இருவரும் காமராசரின் பற்றாளர்களே தவிர,  காங்கிரசு என்ற தத்துவத்தின் எதிர்ப்பாளர்கள்.  அதிலும் கொள்கை அளவிலும் தனிப்பட்ட முறையிலும் தி.மு.க. வை ஒப்புக் கொள்ளலாம் காங்கிரஸ் எந்த வகையிலும் நம்மோடு ஒட்ட முடியாதவர்கள் என்ற கருத்துடையவர்கள். ஈரோடு சுப்பையாவும் - 'மீனா' என்று அழைக்கப்படும் மீனாட்சி சுந்தரத்தையும். இதனால் அக்காலத்தில் பலர் எங்களைக் ''கண்ணீர்த் துளி'' (தி.மு.க.) என்பார்கள்.


பெரியார் மெல்ல அடித்தொண்டையால் கனைத்தார்.  ''அம்மா காப்பி கொண்டா… நல்ல சூடா…'' வழக்கம்போல மணியம்மை - யாருக்கு வந்த விதியோ என்ற பாணியில் நின்றார்.  ஈரோடு சுப்பையாவின் மனைவி சலோச்சனா காப்பி கொண்டு வந்தார்.  இது பெரியாரின் இரண்டாம் முறை காப்பி குடிக்கும் நேரம் அல்ல!

பெரியார் '' சுப்பு… கொஞ்சம் தனியாகப் பேசுவோம் ராத்திரி…'' என்றார்.  நான் (செல்வேந்திரன்) சூழ்நிலை தெரிந்து வெளியே வர பெரியாரின் செயலாளர் மகாலிங்கமும் வெளியே வந்தார்.

உள்ளே பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.  பெரியார் - சுப்பையா - மணியம்மை மூவரும்!  இடையிடையில் மணியம்மை கீச்சுக் குரலில் வேகமாக ஏதோ சத்தம் போட்டார்பெரியாரின் கருத்துக்கு ஏதோ மறுப்புச் சொல்கிறார் என்று மட்டும் புரிந்து கொண்டோம். 


சுப்பையா வெளியே வந்தார்.  அடுத்தடுத்து வந்த தொலைபேசிச் செய்திகள் காமராசரின் தோல்வியை உறுதி செய்தனஆனால், அதிகாரப் பூர்வமான அறிவிப்பு மறுநாள் நள்ளிரவில் தான் வெளியாயிற்று.  இடையில் வதந்தியா? உண்மையா? என்று கேட்டுப் பெரியார் மாளிகைக்கு நிறையத் தொலைபேசிகள்…

அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து தொடர்ந்து பெரியாருடன் மாளிகையில் நண்பர்கள் கருத்துக் கூறுமாறு ''அய்யா'' கேட்டுக் கொண்டார் பொறுமையாய்.

இன்றைக்குக் கலைஞரின் தி.மு.க. அரசைக் காக்கின்ற பெரிய பொறுப்பை சுமந்து கொண்டிருக்கும் ''தலைவர்கள்'' அதே மாதத்தில் காமராசருடன் இணைந்து ஆயுதப் புரட்சியை நடத்தியாவது தி.மு.க. அரசைக் கவிழ்த்துவிட வேண்டும் என்கிற முனைப்புக் காட்டினார்கள்.

அதன் பின்னர்த் தி.மு.க. ஆதரவு என்ற தலைப்பில் பெரியார் விடுதலை நாளிதழில் தலையங்கம் ஒன்று எழுதினார்.  விடுதலை இதழில் தி.மு.க. வைத் தி.மு.க.  என முதன் முதலில் விளித்து எழுதப்பட்ட கட்டுரை அது தான்.  இது வரை தி.மு.க. வைக் கண்ணீர்த் துளிகள் என்றுதான் விடுதலை விளிக்கும்.

பெரியார் தி.மு.க. ஆதரவு நிலை எடுக்கக் காரணமாய் இருந்த ஒரே சக்தி அன்றைய பெரியார் நிறுவனங்களின் மேலாளர் ஈரோடு சுப்பையா தான்!  சுப்பையா மட்டும் தான், வாய் பேசாமல் ஒவ்வோர் அசைவையும் பார்வையாளராய் இருந்து பார்த்த நான்(செல்வேந்திரன்) அறிவேன்.

இந்த வரலாற்றுத் திருப்பத்திற்கு வாகாய் லக்கானைத் திருப்பிய சுப்பையா இப்போது எங்கோ இருக்கிறார்!  அண்ணா - கலைஞர் முதலிய தி.மு.க. அமைச்சர் படங்களோடு பெரியார் மாளிகையில் மாட்டப்பட்டிருந்த காலண்டரையே கிழித்தெறிந்தவர்கள் தாம் இப்போது கனஜோராய் இருக்கிறார்கள்.                                                                                                                                                                                                         ...இனி ஒரு பெரியாரைப் பார்ப்போமா? .....திருச்சி செல்வேந்திரன்..நாம் தமிழர் பதிப்பகம் பக்கம் 85-93.

Wednesday 4 June, 2014

ஹீரோஷிமா நாகசாகி குண்டு வெடிப்பு எதனால்?


ஹிரோஷிமா நாகசாகி குண்டு வெடிப்பு


ரண்டாம் உலகப் போர் நடந்த 1945 ஆம் ஆண்டில், அமெரிக்க பிரிட்டன் கூட்டணிப் படைகளுடன் போரிட்ட ஜப்பான், முதல் சில மாதங்களுக்கு, தத்தளித்ததுஅமெரிக்கர்கள் பசிபிக்கில் போரிட்டுக் கொண்டே, முன்னேறிக்கொண்டிருந்தனர்ஜப்பானின் வணிக கப்பல்களையும், கப்பற்படையின் விமானங்களையும் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்களும், விமானங்களும் அழித்துவிட்டன.
 
ஜப்பானின் முக்கியத் தாய்நாட்டுத் தீவுகளுக்கு, எண்ணெய் மற்றும் மூலப்பொருட்களின் வரத்து துண்டிக்கப்பட்டது.

ஜப்பானியர் தோல்வியை சந்தித்துக் கொண்டிருந்தனர்.

இருப்பினும் அவர்கள் மிக கடுமையாக எதிர்த்துப் போர் புரிந்தால். அதனை சமாளிக்க முடியாமல் அமெரிக்கர்கள் விட்டுக் கொடுத்துவிடுவர் என்ற நம்பிக்கையில், அவர்கள் சரணடைய மறுத்தனர்.

கூட்டணிப் படை தங்கள் தாய்நாட்டை நோக்கி எடுத்து வைக்கும் ஓவ்வொரு அடிக்கும், அதன் ரத்தத்தை விலையாக தரவேண்டும் என்பதில் ஜப்பானியர் தெளிவாக இருந்தனர்.

அது அமெரிக்கர்களுக்குப் பெரும் பிரச்சினையாக இருந்ததுஅதிக அமெரிக்க உயிர்களை இழக்காமல், ஜப்பானை எப்படி? தோல்வியுறச் செய்வது?

அதற்காக, அந்நாடு இதுவரைக் கண்டிராத, ஒரு மிகவும் சக்திவாய்ந்த மற்றும் ஆபத்தான ஆயுதத்தை கையில் எடுக்கும்.

அந்த ஆயுதம் போரின் போக்கை முற்றிலும், முழுமையாக மாற்றிவிடும்.




ப்பானியத் தாய்நாட்டுத்தீவுகளை சுமார் 10 லட்சம் வீரர்கள் பாதுகாத்து வந்தனர்.  அவர்களுக்கு உதவ கிட்டத்தட்ட 5000 விமானங்கள் இருந்தன.
                                                                                 
                                                    

ஜப்பானிய கேமிகேசி வீரர்கள்
  புதிய கேமி கேசி Kamikaze  (தற்கொலைத் தாக்குதல்) விமான ஓட்டிகளுக்கு பயிற்சி எப்போதும் தரப்பட்டது. பொதுமக்களில் தன்னார்வலர்களாக இருப்பவர்களில், பெருமளவில் தற்கொலைத் தாக்குதலை செய்வதும் எதிர்பார்க்கவேண்டிய ஒன்று.  ரத்த ஆறு ஓடுவது தவிர்க்கமுடியாததாக தோன்றியது.


கிட்டத்தட்ட இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்க உயிர்கள் இழக்கப்படும் என்று கணிக்கப்பட்டது.

                                                                                              
                                                                                     
ஹேரிஸ் எஸ் டூரூமென்


பிறகு 1945 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் புதிய அமெரிக்க குடியரசுத்தலைவரான, ஹேரி எஸ் ட்ரூமன் Harry S. Truman , உயர்மட்ட ரகசிய அறிவியல் ஆராய்ச்சித் திட்டத்தின் பயன்களை கேள்விப்பட்டார்.  அதனை மேன் ஹேட்டன் திட்டம் Manhattan Project என்று அழைத்தனர்.

(Project started at Manhattan District)

மூன்று வருடங்களாக கூட்டணி விஞ்ஞானிகள், அணுகுண்டை தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தனர்.  அது ஒரு அணு பிரியும்போது,  பெருமளவில் ஆற்றல் வெளியேற்றப்படும் ஒரு ஆயுதம்.  அது கற்பனை செய்யமுடியாது ஒரு அழிக்கும் சக்தி.  அந்த திட்டத்திற்கு ராணுவப் பொறியாளரான, அமெரிக்கப்படைத் தளபதி, லெஸ்லி குரூவ்ஸ் Major General Leslie Groves  தலைமை ஏற்றார். 








ராபர்ட் ஹோப்பன் ஹைமர்




அதன் அறிவியல் இயக்குநராக இருந்தவர்
, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, 39 வயது நிரம்பிய பௌதிகவாதியான,  ராபர்ட் ஹோப்பன் ஹைமர் J. Robert Oppenheimer.  கூட்டணியின் மிகச்சிறந்த அறிவியல் வல்லுனர்கள் 3 ஆண்டுகளாக, ஈடுபட்டிருந்தனர்.

ஜூலை மாதம் 16 ந்தேதி காலை 5.30 மணிக்கு,  அணுயுகம் ஆரம்பித்தது.


                                                                  

டிரினிட்டி அணு  வெடிப்பு சோதனை

ஆபரேஷன் டிரினிட்டி Trinity(nuclear test) வெற்றியடைந்தது என்ற செய்தி, குடியரசுத் தலைவர் ட்ரூமெனை விரைவாக சென்றடைந்தது.

அவர் ஐரோப்பாவின் எதிர்காலத்தைப் பத்தி கலந்து பேசுவதற்காக,  ஸ்டாலினையும், சர்ச்சிலையும் சந்திக்க, பெர்லினின் புறநகர் பகுதியில் உள்ள போட்ஸ்டேமிற்கு Potsdam சமீபத்தில் தான் வந்திருந்தார்.

ட்ரூமென் தயங்கவில்லை.   அவர் புதிய குண்டுகளை ஜப்பானில், எவ்வளவு சீக்கிரம் போட முடியுமோ? அப்படி தயாராகும்படி தன் படைத்தளபதிக்கு ஆணையிட்டார்.

இரண்டு அணுகுண்டுகள். ஒன்று லிட்டில் பாய் Little Boy  என்று குறியிடப்பட்ட யுரேனியம் கருவி.  மற்றொன்று ஃபேட் மேன் Fat man என்ற குறியீட்டுப் பெயர் கொண்ட புளுட்டோனியம் குண்டு.

இரண்டும் மரியானாத் தீவுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.



                                                                               






எனோலா கே விமானத்துடன் பால் டிபெட்ஸ் விமானி
                                                                              

 
அங்கே மிக அதிகம் அனுபவம் கொண்ட, மற்றும் சிறப்பாகப் பயிற்சி கொடுக்கப்பட்ட,  509 வது கூட்டுப்படைக் குழுவின் தலைவருமான,  பால் டிபெட்ஸ் Colonel PaulTibbets  தன் B 29 (விமானம் Boeing B-29 Super fortress ) தயார் படுத்தினார்.

ஆகஸ்டு 6 ஆம் தேதி காலை, 2.45 ற்கு டிபெட்ஸ் தன்னுடைய தாயின் பெயரான, எனோலா கே Enola Gay எனப்பெயரிடப்பட்ட விமானத்தைக் கிளப்பினார். லிட்டில் பாயை எடுத்துக்கொண்டு.

அந்த விமானம், ஜப்பானின் நான்காவது பெரிய நகரமான,  ஹீரோஷிமாவை Hiroshima, நோக்கி ஒரு தடங்கலுமில்லாமல் பறந்தது.  ஞாயிற்றுக்கிழமையின் பிரகாசமான காலையில்,  எட்டு மணிக்கு எனோலா கே EnolaGay, நகரின் மேலே சுமார் பத்தாயிரம் மீட்டர் உயரத்தில்,  பறந்தது. எட்டு பதினைந்து ஆனவுடன், லிட்டில் பாய் கீழேப் போடப்பட்டது.

அந்த யுரேனிய அணுகுண்டில்,  கிட்டத்தட்ட பதிமூன்றாயிரம் டன்களின் வெடிமருந்து சக்தி அதில் இருந்தது.  அந்த நாய்குடைப் போன்ற மேகத்தின் கீழே,  வெப்பநிலை, ஐந்தாயிரம் டிகிரி சென்டிகிரேடை தொட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள்,  உடனேயே ஆவியாகிப்போயினர்.   சுற்றுபுறத்தில் சுமார் எட்டு கிலோ மீட்டர் வரை இருந்த கட்டிடங்கள், அதிர்ச்சி அலைகளால் தரைமட்டமாயின.

இறப்பு எண்ணிக்கையின் கணிப்பு பெருமளவு,  வேறுபட்டது. சிலர் நாற்பதாயிரம் பேர் என்றனர்.  வேறுசிலர், ஒரு லட்சம் என்றனர்.

அடுத்துவந்த வாரங்களில் கதிர் வீச்சின், நச்சுத்தன்மையால் மேலும் ஆயிரக் கணக்கானோர் இறந்தனர்.

1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7 ஆம் தேதி,  குடியரசுத் தலைவர் ட்ரூமென் அணுகுண்டைப் பற்றி உலகிற்குத் தெரிவித்து ஜப்பானிற்கு எச்சரிக்கை விடுத்தார்.

''சண்டைப் போட ஜப்பானுக்கு இருக்கும் சக்தியை,  எங்களால் முழுமையாக அழிக்க முடியும் என்பது நினைவில் இருக்கட்டும்.  இதுவரையில் உலகில் பார்த்தேயிராத அழிவுமழை,   வானத்தில் இருந்து விடாமல் பொழிவதை, அவர்கள் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.''

ஆனால் ஜப்பான் சரணடைவதற்கான செய்தி, கிடைக்கவில்லை.   இரு நாட்களுக்குப் பின் ஆகஸ்டு 9 ஆம் தேதி,  முக்கிய ராணுவத் துறைமுகமான, நாகசாகியில் Nagasaki  பேட் மேன் Fat man குண்டு வீசப்பட்டது.

இந்த புளுட்டோனிய அணுகுண்டு, இன்னும் அதிக சக்தி வாய்ந்ததாக இருந்தது.   உண்மையில் அந்த அணுகுண்டு,  இலக்கில் இருந்து மிகவும் விலகி விழுந்தது.  இருப்பினும், அது பெரும் அழிவை உண்டாக்கியது.

அந்த குண்டுவெடிப்பினால் 35,000 -50,000 எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட மக்கள் உயிரிழந்ததாக கணிக்கப்பட்டது.

தாங்கள் ஒரு புதிய, மற்றும் அச்சமூட்டும் ஆயுதத்தைச்  சந்தித்தோம் என்பதை அச்சமயம் ஜப்பானிய அரசாங்கத்திற்கு எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், இதுவாவது அவர்களை, சரண்டையும்படி வற்புறுத்துமா? என்பது தான் கேள்வியாக இருந்தது.  அதன்பின் ஆகஸ்டு 14 ஆம் தேதி, கூட்டணிப் படைகளின் தளபதிகளின் ஆணைகளை ஒப்புக்கொண்டால்,  அரசரின் நிலை பாதுகாக்கப்படும் என்ற செய்தியை ட்ரூமென் நிர்வாகம் அனுப்பியது.

ஹீரோ ஹிட்டோ Hirohito  தனது பெரும் செல்வாக்கினைப் பயன்படுத்தி,  தாங்க முடியாதவைகளை தாங்கவும், விதிகளை ஒப்புக்கொள்ளவும் தனது போர் அமைச்சரவைகளுக்கு அறிவித்தார். 

அந்த தினம் ஜப்பான் எந்த நிபந்தனையுமில்லாமல் சரணடைந்ததாக
, வாஷிங்கடனில் குடியரசுத் தலைவர் ட்ரூமென் அறிவித்தார்.

'' ஜப்பானின் நிபந்தனையில்லாத சரணடைவைக் குறிக்கும் போஸ்ட்டெர்ம் பிரகடனத்திற்கு Potsdam Declaration  முழு ஒப்புதல் அளிக்க, நான் இந்த பதிலை எடுத்துக் கொள்கிறேன்."


ஒவ்வொரு அமெரிக்க நகரத் தெருக்களிலும், சந்தோஷமாக கூட்டம் கூட்டமாக, கொண்டாடினர்.


கிளமென்ட் அட்லி
                                                                            

பிரிட்டனில் புதிய பிரதம மந்திரியான கிளமென்ட் அட்லி, Clement Attlee
இந்த செய்தியை நள்ளிரவில் ஒலிபரப்பினார்.

''
ஜப்பான் இன்று சரணடைந்தது.   நம்முடைய கடைசி எதிரி வீழ்த்தப்பட்டார்.  உலகில் அமைதி திரும்பவும் வந்துவிட்டது.  இந்த இரட்சிப்புக்கும் கருணைகளுக்கும்,  நாம் கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும்.  அரசர் நீடுழி வாழ்க!''

சில நிமிடங்களிலேயே லண்டன் தெருக்களெங்கும் மக்கள் கூடினர்.   பலர் பக்கிங்காம் அரண்மனையின் முன் கூடினர்.  ஒரு மாபெரும் தெருக்கொண்டாட்டம் மறுநாளும் நீடித்தது.

மறுநாள் காலை ஆகஸ்டு 15 ஆம் தேதி, அதிர்ச்சியடைந்த ஜப்பானிய மக்கள் தங்கள், கடவுளான அரசரின் குரலை முதன் முறையாக கேட்டனர்.




ஜப்பான் மன்னர் ஹிரோ ஹிட்டா








''
ஜப்பான் இப்போது முடியாத நிலைமையில் இருப்பதாகவும்,  நாட்டிற்கு சரணடைவதை தவிர வேற வழியில்லை என்றும் அவர் கூறினார்.  எல்லா ராணுவப் படையினரும் தங்கள் ஆயுதங்களை கீழே போடவேண்டும்'' என்றார்.''

பேரரசின் செல்வாக்கு மிக அதிகமாக இருந்ததால் எல்லாப் படையினரும் கீழ்படிந்தனர்.

முடிவில் சரணடைந்த இருவாரங்களுக்குப் பின்,  ஆகஸ்டு 28 ஆம் தேதி,  முதல் அமெரிக்கப் படை ஜப்பானுக்கு வந்தது.

டோக்கியோ விரிகுடாவில் ஒரு பெரும் கப்பற்படை கூடியது.  ஒரு காலத்தில் பெருமை வாய்ந்ததாக இருந்து இப்போது,  அவர்களால் முழுமையாக வீழ்த்தப்பட்ட, ஜப்பானியக் கப்பற்படையின் உடைந்து கிடந்த கப்பற் துண்டுகளை அது கடந்துவந்தது.

பல நாட்களுக்குப் பின், 1945 ஆம் ஆண்டு,  செப்டம்பர் 2 ஆம் தேதி, ஜப்பானிய தூதுக்குழு அமெரிக்கப் போர் கப்பலான மிசௌரியின் USSMissouri (BB-63) மீது ஏறி வந்தது.

அதன் மேல்தளத்தின் பின்பகுதியில்,  ஜப்பானிய வெளிநாட்டு அமைச்சர், மெமரு ஷிமட்சு Mamoru Shigemitsu  நிபந்தனையற்ற சரண்டைவதற்கான ஆவணத்தில் கையொப்பமிட்டார்.


                                                              

டக்ளஸ் மெக்கார்த்தர்
 

அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு,  ஜப்பானை திறமையாக நடத்திச் செல்லவிருக்கும்,  அமெரிக்கத் தளபதியான ஜென்ரல் டக்ளஸ் மெக்கார்த்தரும் Douglas MacArthur  அதில் மேல் ஓப்பமிட்டார்.

''கூட்டணிப் படைகளின் முதல் பெரும் படைத்தலைவராக,  நாடுகளின் பாரம்பரியப்படி,  நான் என் கடமைகளை நேர்மையுடனும்,  பொறுமையுடனும் செய்து முடிப்பதை என்னுடைய முக்கிய நோக்கம் என்று நான் தெரிவித்துக் கொள்கிறேன்.''

பிறகு, 2000 க்கும் அதிகமான கூட்டணிப்படை விமானங்கள், வானில் உறுமின.  அது ஜெர்மனியையும், ஜப்பானையும், முழுமையான தோல்விக்கு ஆட்படுத்திய அற்புதமானப் படைக்கு ஒரு பொருத்தமான பாராட்டாக இருந்தது.

இரண்டாம் உலகப்போர் முடிந்துவிட்டது.

ஜப்பானின் போருக்கான ஒரு இரக்கமற்ற ஆசை ஒரு அற்புதமான அழிக்கும் சக்தியால், நசுக்கப்பட்டது.

இப்போது மேற்கைப் போலவே (ஜெர்மனி), கிழக்கிலும், உலகம் புதிய எல்லைகளால் பிரிக்கப்பட்டு,  பகிர்ந்துக் கொள்ளப்படும்.  புதியக் கூட்டணிகள் உருவாக்கப்படும்.  அணு யுத்தத்தின் நிழலின் கீழே உலகில் ஆதிக்கம் செலுத்த புதிய எதிரிகள் போட்டிப் போடுவார்கள்.  உலக வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் துவங்கிவிட்டது.

..தகவல்கள்  திரட்டப்பட்டது. டிஸ்கவரி சேனல் இரண்டாம் உலகப்போர் வண்ணம்  தொடர் தமிழ், ஆங்கில விக்கிப்பீடியா மற்றும் உலகப்போர் குறித்த வீடியோக்கள்.