Pages

Friday 6 June, 2014

"சென்னை" என்று பெயர் மாற்றிய வரலாற்று நாயகர் "கலைஞர்" வாழ்க!

சென்னை என்றால் போடா! வெண்ணை! என்று சொல்வதை விட்டு விட்டு மதராசின் பழைய வரலாற்றை சென்னையின் 375 வது பிறந்த தினத்தில் திரும்பி பார்ப்போம்!..வரலாற்றுத் தகவல்கள். 






  ந்த மதராசப் பட்டினம் என்று ஆங்கிலேயர்களால் காரணமின்றி அழைக்கப்பட்டு வந்ததை சென்னையாக மாற்றி அழைக்க வைத்தவர் கலைஞர்.  கலைஞர்  1996 ஆம் ஆண்டு அரசு ஆணயாக உத்தரவிட்டதின் பேரில் இந்த பூர்வீகப் பெயர் இங்கே நிலைத்து நிற்க செய்யப்பட்டிருக்கிறது.  இது மாற்றப்பட்டபோது பல சரித்திர ஆசிரியர்கள் எதிர்த்தனர்.

இது பூர்வீகப் பெயரா?  என்றால் ஆமாம்!  என்ற பதில் தான் ஆங்கிலேயரிடமிருந்தே கிடைக்கிறது நூல்கள் வாயிலாக.  வரலாற்றுக் குறிப்புகளும், ஆய்வு நூல்களும் ஆதாரத்துடன் தருகிறது.


சென்னையின் வரலாறுகள் நமது முன்னோர்களால் குறித்து வைக்கப்படவில்லை. இது குறிப்பு எடுத்து வைக்கும் பழக்கம் நமக்கு இல்லாததினால் நம்மிடம் இருந்து பல வரலாறுகள் கைவிட்டுப் போனது.  அப்படி கைவிட்டுப் போனதில் இதுவும் ஒன்று.  ஆனால் இந்த வரலாறுகளை ஆங்கிலேயர்களின் குறிப்பேடுகளில் இருந்தே பல வரலாறுகளை அறிந்து கொள்ள முடிகிறது. ஆங்கிலேயர்கள் குறிப்பு எழுதுவதில் வல்லவர்கள்.  இப்போது அந்த பழக்கம் நமக்கு இருக்கிறது என்றால் அது ஆங்கிலேயனிடத்தில் இருந்து வந்தது தான்.  (டைரி எழுதுவது உட்பட)


1630 ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய நாட்டு அரசிளங்குமரியான  ‘’இன்பென்டா கேதரைன்’’ ஆங்கில நாட்டு அரசனை (இரண்டாம் சார்லஸ்) மணந்தபோது சீதனமாக பம்பாய் (மும்பாய்) கொடுக்கப்பட்டதற்கு முன்னரே இந்த மதராசப் பட்டிணம் நிர்மானிக்கப்பட்டிருக்கிறது.                                                                                                                            

ஆங்கிலேயர் எதற்காக வந்தனர்?


ஆங்கிலேயர்கள் இங்கே இந்த நாட்டிற்குள் நுழையும் போது பெரிய பரிவாரங்களோ, கத்தி, துப்பாக்கிப் போன்ற ஆயுதங்களையோ, இங்கே கொண்டு வந்து போரிட்டு ஆட்சியைப் பிடிக்கவில்லை. அவர்கள் நோக்கம் இங்கே ஆள வந்ததற்காகவும் இல்லை. 

இரண்டே இரண்டு கப்பல்களில் வணிகத்திற்காக வந்திறங்கி பல நூறு ஆண்டுகள் இங்கே ஆட்சி புரிந்தனர்.  அவர்களுக்கு அதிகாரங்களை அவர்கள் கேட்காமலே இங்கிருப்பவர்களே தாமாக முன் வந்து வழங்கி வந்துள்ளனர். 



இங்குள்ளவர்களுக்கு தண்டனை கொடுப்பதைக் கூட அவர்கள் கையில் எடுக்கவில்லை.  ‘’இந்தக் குற்றவாளியை என்ன? செய்யவேண்டும்?’’ என்றே இங்கு ஆண்ட குறு நில மன்னர்களிடமே அனுமதி கேட்டிருக்கிறார்கள்.  அப்படி தண்டனை கொடுக்க அனுமதித்ததின் பேரில் தான், இங்கு அவர்களால் ஒரு தமிழக குற்றவாளிக்கு முதல் தூக்கு தண்டனையும் கொடுக்கப்பட்டது 1641 இல்.  அந்த அனுமதி ‘’தாமரல வெங்கடப்ப நாயக்க’’ மன்னரால் வழங்கப்பட்டது என்று ஆங்கிலேயக் குறிப்புகள் கூறுகின்றன.





ஆங்கிலேயெ கிழக்கிந்தியக் கம்பெனிக்கு தென் இந்தியாவில் தொழிற்சாலை என்கிற பெயரில், மசூலிப்பட்டனத்தில் குடியிருப்பை அமைத்துக்கொள்ள 1611 ஆம் ஆண்டு கோல்கொண்டா முகலாய அரசர்கள் அனுமதி அளித்தனர். அதன் தொடர்ச்சியாக 1626 ஆம் ஆண்டு பழவேற்காட்டிற்கு 35 மைல் வடக்கே துர்கராயப்பட்டினத்தில் வேறொரு குடியிருப்பை அமைத்தனர். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அந்த இடம் ஒத்துவராததால் வேறொரு இடத்தை தேடினர்.

1636 ஆம் ஆண்டு ஃபிரான்சிஸ் டே என்பவரிடம் புதிய இடத்தை தேடும் பொறுப்பு அளிக்கப்பட்டது. மசூலிப்பட்டனத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையே கடலோரமாக இடம் தேடி அலைந்த அவர் மதராசக்குப்பம் எனும் இடத்தை தேர்ந்தெடுத்தார். அப்போது இந்தப் பகுதியை ஆட்சி செய்தவர்தான் ‘’தாமல் வெங்கடப்பா நாயக்கர்’’. அவரது தந்தை ‘’சென்னப்ப நாயக்கர்.’’ 


சென்னை என்ற பெயர் ஏற்கனவே இருந்ததற்கான ஆதாரம்!


1639 இல் ஆங்கிலேயர்கள் இங்கே வந்திறங்கி அவர்கள் வணிக நிறுவனம் கோட்டை உருவில் உருவாக வேண்டி ஒரு கோட்டையைக் கட்ட ஆங்கிலேயர்கள் தமாரல வெங்கடப்ப நாயக்க குடும்பத்தை அணுகினர். போலிகர்கள் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட ‘’பாளையக் காரர்கள்’’ (பாளையக் காரர்கள் என்றால் வீரபாண்டிய கட்ட பொம்மன் ஞாபகம் வரலாம், பொம்மு நாயக்கரும் ஞாபகம் வரலாம்) அவர்களுக்கு (ஆங்கிலேயர்களுக்கு) நான்கு கிராமங்கள் கொடுத்தனர்.  அவை முறையே , மதராச குப்பம், (இதைத்தான் பின்னர் மதராஸ் என்று அழைத்தனர்), சென்னைக் குப்பம், ஆர்க்குப்பம், மாலேபட் என்பன.

மதராசப் பட்டிணம் என்ற பெயர் வந்ததற்கான காரணம் சரித்திர நூல்களிலும், ஆங்கிலேயக் குறிப்புகளிலும் இல்லை.  ஆங்கிலேயர் வந்தது முதல் தான் இது மதராசப் பட்டிணம் என்று அறியப் படுகிறது.  சென்னைப் பட்டிணம் என்று இவ்வூர் மக்களாலும் காலங்காலமாக அழைத்துக் கொண்டு வரப்பட்டும் இருந்திருக்கிறது என்பது பல நூல்கள் வாயிலாகவும் தெரிகிறது. தாமரல வெங்கடப்ப நாயக்கர் ஆங்கிலேயருக்கு தன் தந்தைப் பெயரான சென்னப்ப நாயக்கர் பெயரையே இந்த  இந்த இருவேறு ஊர்கள் அடங்கிய மதராசப் பட்டிணத்திற்கு ஒரே பெயராக சென்னை என்று வைக்குமாறு கடிதம் எழுதியுள்ளார் என்றும் ஆங்கிலேயேக் குறிப்புகள் தெரிவிக்கிறது.

இன்னொரு முக்கியமான குறிப்பு, மிகவும் போற்றப்படுகிற பிரெஞ்சு இந்திய நாட்குறிப்பாளர், ஆனந்தரங்கம் பிள்ளையவர்களைப் பற்றியதாகும். இந்த நூல் ஸ்ரீநிவாச என்பவரால் சமஸ்கிருதத்தில் 1752 இல் ‘’ஆனந்தரங்க விஜய சம்பு’’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆனந்தரங்கம் பிள்ளை அவரது தந்தை திருவேங்கடம் பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாறாகும். இதில் மதராஸ் சென்னபட்டனா, சென்னகேசவபுரா என்றழைக்கப்படுகிறது.

பெரிய பகோடா என்று அறியப்பட்ட சென்ன கேசவப் பெருமாள் கோவில் (பிறகு உயர்நீதிமன்றம் கட்டப்பட்ட இடம்) இருந்த காரணத்தால் சென்ன கேசவபுரா என்ற பெயரால் அறியப்பட்டது. (பக்கோடா என்றால் கோயில்களையும் குறிக்கும் இன்றும், புத்தர் கோயில்களை பக்கோடா என்று குறிப்பிடுவார்கள்..அதே போன்று அன்றைய நாணயங்களையும் குறிக்கும், ‘’வராகன்’’ என்ற நாணயமும் விஜய நகரப் பேரரசுகளால் அப்போது பயன்படுத்தப்பட்டு வந்தது.  ‘’வராகன்’’ விஷணு முத்திரை பொறிக்கப்பட்டதால் அதற்குப் பெயர் வராகன். ஆனால் பகோடா நாணயங்களுக்கான பெயர்க் காரணக் குறிப்புகள்  இல்லை).





பாரதியாரும் பல இடங்களில் சென்னை என்பதை பயன்படுத்தியுள்ளார் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.


சென்னையில் உள்ள கிராமங்களான மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பல்லாவரம், வேளச்சேரி, திருவான்மியூர், குன்னத்தூர், மாங்காடு, பூவிருந்தவல்லி, பாடி, திருமுல்லைவாயில், அம்பத்தூர், கொரட்டூர், புழல், புலியூர் போன்ற இடங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தவை. இவை அன்றைய மதராசப் பட்டினத்தை சுற்றி 20 மைல் சுற்றளவிற்குள் உள்ளவை.  

பல்லவாரத்தில் தான் முதன்முதலாக ஒரு பழங்காலச் சான்று கிடைத்தது. இன்றைய சென்னையில் உள்ள இடங்களான எழும்பூர்,  சாந்தோம், மயிலாப்பூர், புரசைவாக்கம், புழுதிவாக்கம், அமைந்தகரை, நுங்கம்பாக்கம் போன்றவைகள் குறுநில மன்னர்களிடமிருந்து போர்ச்சுகீசியர் அவர்களிடமிருந்து, ஆங்கிலேயர்கள், அப்புறம் பிரஞ்சுக்காரர்கள் மறுபடியும் ஆங்கிலேயர்கள் என்று மாற்றி மாற்றி வாங்கப்பட்டதாகவும் குறிப்புகள் தருகிறது.  இவை எல்லாம் ஒவ்வொரு கிராமங்களாக இருந்தவைகள். 


சென்னையின் பெருமைகள்


அகழ்வராய்வின் போது இங்கே இருந்த நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  திருவெற்றியூரில் வேத பாடசாலை இருந்ததாக சரித்திர ஆசிரியர் ராமன் கூறுகிறார். டாலமி குறிப்பின்படி, தென், வட பெண்ணாறுகளின் இடையில் இந்த இடம் நன்கு அறியப்பட்டிருக்கிறது  கரிகாலச் சோழன் காலத்து, தொண்டைமான் இளந்திரயன் வென்ற இடமாகக் கருதப்படும் இவ்விடம் தொண்டைமண்டலமெனப் பெயர் பெற்றிருக்கலாம்.  அசோகர் காலத்திலேயே இங்கிருந்த குறும்பர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்றும் சரித்திர ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.   


சென்னையின் பிறந்த நாள் சரியா?



 பிரான்சிஸ் டே எனும் ஆங்கில அதிகாரி ‘’ஈகிள்’’ ‘’யூனிடி’’ என்ற கப்பல்களோடு, 1640 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதியன்று மதராசப்பட்டினத்தை அடைந்தனர். இந்த நாள் தான் சென்னையின் பிறந்தநாளாக கருதப்படுகிறது.!  (சிலர் 1639 செப்டம்பர் மாதத்து 3 ஆம் தேதியைத்தான் முதல் நாளாகக் கருதுகின்றனர்);  மற்றும் சிலர் ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதியைத்தான் மதராசப் பட்டினத்தின் பிறந்தநாளாக்க் கருதுகின்றனர்)  இந்த தேதி ‘’ஈகிள்’’ என்ற கப்பலின் தலைவன் தனது குறிப்பில் எழுதியிருந்த்தை வைத்து நிர்ணயிக்கப்பட்டதென வரலாற்று ஆசிரியர் ஹென்றி டேவிசன் லவ் கூறுகிறார்.  

 எது எப்படி? இருப்பினும், பலகாலமாக ஆங்கிலேயரிடம், இப்பூர்வீக மக்கள் முறையிட்டும் மாற்ற முடியாமல் போனப் பெயரை, மாண்புமிகு கலைஞர் அவர்கள், மதராசப் பட்டினத்தை ‘’சென்னை’’ என்று சரித்திரப் புகழ் பெயராக மாற்றி சரித்திரத்தில் அழியா இடம்பெற்றுவிட்டார்.  நமது பெருமையையும், பூர்வீகத்தையும் நிலைநாட்டிவிட்டார். அவருக்கு நன்றி கூறுவோம்!     


…..கட்டுரைக்கான ஆதாரத் தகவல்கள் தந்து உதவிய நூல்; மதராசப்பட்டினம் (1600-1947)..ஆசிரியர் கடலாடி நரசய்யா…வெளியீடு பழனியப்பா பிரதர்ஸ்… கூடுதல் தகவல்கள் தந்தவைகளுக்கு நன்றி; விக்கிப்பீடியா ஆங்கில தகவல் களஞ்சியம்..பசுமைத் தாயகம் வலைத்தளம்.

No comments: