Pages

Friday 6 June, 2014

ஆயுதப் புரட்சி நடத்தியாவது தி.மு.க. வை கலைத்துவிட வேண்டும்! அன்றைய திக கோஷம்!

திரும்பிப் பார்க்கிறேன் 1967 இல் பெரியாரின் தி.மு.க. ஆதரவு நிலைக்குத் துணை நின்ற ஒரேத் தொண்டன் ரோடு சுப்பையா!                                                                                                                                                                                                                                    

றக்கமுடியாத
1967 ஆம் ஆண்டு பிப்ரவரி - மார்ச்சு மாதங்கள்!  தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் முழுமூச்சாய் காமராசரின் காங்கிரசை ஆதரித்தக் காலம்.  தேர்தலுக்குப் பிரச்சாரம் என்று தான் தொடங்கியது.  பின்னர் 1957, 1962, 1967 தேர்தல்களில் திராவிடர் கழகத் தோழர்கள், காங்கிரசு ஊழியர்களை விட  முழுமையாய் காங்கிரசுக்குத் தேர்தலில் ஆதரவுப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர்.

காங்கிரசு வேட்பாளர்களும், ஒவ்வொரு தொகுதியிலும் இருந்த அவர்கள் உட்கட்சி பூசல் காரணமாய் அவர்களையே நம்பமுடியாமல், திராவிடர் கழகத் தோழர்களையே முழுக்க முழுக்க நம்பும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். திக தோழர்கள்,  தேர்தல் செலவுகள் பிரச்சாரம், பண விநியோகம், வாக்காளர்களைச் சந்திப்பதும், வாக்காளர்களுக்குப் பண விநியோகம் செய்வது என்கின்ற அளவிற்கு நெருக்கமாகிவிட்டார்கள்.  கொஞ்சம் தயக்கம் காட்டியவர்களையும், தந்தை பெரியாரிடமே சொல்லி செய்யும்படி பணிக்கப்பட்டார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் மறைந்த திக மாவீரன் மன்னை நல்லதம்பி போன்றவர்கள், கருப்பையா மூப்பனார், உடையார் போன்றவர்களுடனும், தஞ்சை திக இராசகோபால்  (நன்னிலம் நடராசனின் சம்பந்தி, இன்றைய நகரமன்றத் தலைவர் / ஜெயபாலின் மாமனார்) முதலியவர்கள் பரிசுத்த நாடார் போன்றவர்களுடனும், கரூர் த.க. சின்னப்பன், பொன்னப்பா போன்றவர்கள் நல்லசாமி கவுண்டர் போன்றவர்களுடனும், நெல்லை தி.க தியாக அரசன், காங்கிரசு தலைவர்கள் செல்லபாண்டியன், இராசாத்தி குஞ்சிதபாதம் போன்றவர்களுடனும் திருச்சியில் நான் (செல்வேந்திரன்)  T.D. வீரப்பா முதலிய தி.க வினர் நகர்மன்றக் காங்கிரசுத் தலைவர் லூர்துசாமிப் பிள்ளை (முன்னாள் M.P அடைக்கலராஜின் தந்தை) காங்கிரசு தலைவர் T.S.அருணாசலம் போன்றவர்களுடன் இது போல பல மாவட்டங்களிலும் இரண்டறக் கலந்துவிட்டார்கள்.  காங்கிரசுக்காரர்கள் வருந்தி வருந்தி அழைத்துப் பயன்படுத்தியப் பேச்சாளர்கள் திருவாரூர் தங்கராசு, எம்.கே.டி சுப்பிரமணியன், நாத்திகம் இராமசாமி போன்றவர்கள் மட்டும் தான்.  திருச்சியில் எந்த பெரிய காங்கிரசுத் தலைவர் பேச்சாளர் வந்தாலும் சிறப்புப் பேச்சாளருக்கு அடுத்த இடம் எனக்குத் தான். (செல்வேந்திரன்)

காங்கிரசுத் தோல்வியை தி.க வினர் தங்கள் தோல்வியாக எடுத்துக் கொண்டனர்.  இது தனிப்பட்ட விரோதம் - மோதல் - கைகலப்பு - அடிதடி - நாகையில் கொலை வரை கொண்டுப்போய்விட்டது.

இந்தப் பின்னணியில் கட்டுரையின் தொடக்கத்திற்குப் போவோம்.  நான்தான் (செல்வேந்திரன்) 1967 ல் திருச்சி நகர்மன்றத் தலைவரும் காங்கிரஸ் வேட்பாளருமான A.S.G. லூர்து சாமிப்பிள்ளையின் சீப் கவுண்டிங் ஏஜென்ட். (வாக்கு எண்ணிக்கைப் பொறுப்பாளர்).  ஒவ்வொரு மேசையிலும் வாக்கு எண்ணிக்கையைக் கவனித்துக் கொண்டவர்கள் (ஏஜென்டு) ஓரிருவர் தவிர அனைவரும் திக வினரே.  இது வேட்பாளரின் விருப்பப்படியே என் ஏற்பாடு. 

எண்ணிக்கையின் போது, எனக்கும் தேர்தல் அதிகாரி ஜோசப் கிருஷ்ணன் என்ற தாசில்தாருக்கும் ஏற்பட்ட மோதலில் கழகத் தோழர்கள் மடியிலிருந்து கத்தியை ஒரே சமயத்தில் எடுத்து உயர்த்திவிட்டனர்.  நிலைமை கட்டுக்கடங்கவில்லை.

அன்றைய திமுக நகரச் செயலாளரும், கலைஞரின் பேரன்பிற்குரியவரும், என் தொழில் நண்பருமான ஷராப் நடராஜன் என்னை அன்போடு அணைத்துக் கொண்டு ''யாருக்காகவோ நாம்ப பங்காளிங்க அடிச்சுக்கலாமா… நாளைக்கே நாம ஒன்னாப் போனாலும் போயிடுவோம்…கோவப்படாதீங்க… உங்க ஆளுங்களை சமாதானம் செய்யுங்க…'' என்றார்.  அதிகாரம் சாதிக்காததை அன்பு சாதித்தது.

ஒரு எளிய தொண்டனின் வார்த்தைகள் அடுத்தவாரமே பலிக்கும் என்று நான் கற்பனைக் கூட செய்யவில்லை.  காரணம் அன்று பெரியாரின் சுற்றுப் புறமும் சூழலும் அப்படி!

அன்று காலையிலேயிருந்தே தேர்தல் முடிவு நிலவரம் சரியில்லை.  தேர்தலில் தோல்வியே காணாத சட்டமன்ற வீராங்கனை என்று கொண்டாடப்பட்ட T.S.அனந்த நாயகியின் தோல்விச் செய்தி தான் வீழ்ச்சியின் முதல் அறிவிப்பு! இந்தச் செய்தியை ஒரு கையடக்க மேல்நாட்டு டிரான்ஸ்சிஸ்டர் (அப்போதெல்லாம் அது பெரிய அதிசயம்) மூலம் கேட்டு உற்சாகமாக எல்லார் காதுகளிலும் சொல்லிக் கொண்டிருந்தார், பிரபல வழக்கறிஞர் ஜமால் முகமது.  இவர் பெரியாரின் அன்புக்குரிய நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரும் என் தாத்தாவின் குடும்ப நண்பருமான திவான் பகதூர் கலிபுல்லாவின் மகன்.  இன்றைய (2007) தமிழக அரசு வழக்குரைஞர் இராஜா கலிபுல்லாவின் தந்தை.

மாலை நான்குமணிக்கெல்லாம் சேர்மன் லூர்து சாமியிபிள்ளையின் தோல்வி முடிவாகிவிட்டது.  நான் திமுக செயலாளர் நடராசனிடமும், முடிவு  அறிக்கையில் கையெழுத்துப் போட வந்திருந்த லூர்துசாமி பிள்ளை மகனிடமும் சொல்லிக் கொண்டு பெரியார் மாளிகைக்கு வந்துவிட்டேன்.

மதியம் தூங்கி எழுந்து காப்பிக் குடித்துக் கொண்டிருந்த பெரியாரிடம் செய்தியை சொன்னேன்.

அய்யா ஆதங்கமாய்க் கேட்டார்.  '' என்னங்க செல்வேந்திரன் எப்போதும் நல்ல சங்கதியாக் கொண்டாருவீங்க…பத்து நாளா கெட்ட சங்கதியா சொல்றீங்களே…'' என்றார்.

அருகிலிருந்து ஈரோடு சுப்பையா பெரியாரிடம் சொல்கிற சாக்கில் என்னையும் கிண்டல் செய்கிற மாதிரி சொன்னார்.

''அய்யா… எதையும் முன்கூட்டியே கணிக்கிற அளவுக்கு செல்வேந்திரன் பெரிய அறிவாளி இல்லீங்க… நடப்பை… நிலவரத்தை முன்கூட்டியே கேட்டு வந்து சொல்றாருங்க…'' என்றார்.

பெரியார் இந்த வேடிக்கையை ரசிக்கவில்லை.  ஏனென்றால் சேர்மன் லூர்துசாமி பிள்ளை பெரியாருக்கு மிக மிக வேண்டியவர். அவருடைய மாமனார் மறைந்த கவுன்சிலர் சூசையாப் பிள்ளை நீதிக்கட்சியின் ஆதரவாளர்  தமிழகத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்ட பெரியார் சிலைக்குப் பணத்தண்டல் தொடங்கி, இடத்தேர்வு - அனுமதி அனைத்தும் செய்தவர் லூர்துசாமி பிள்ளை மட்டுமே.  ஓடியாடி உடலுழைப்புச் செய்தவர் நோபிள் கோவிந்தராஜ், பெரும் பொருளை தண்டல் செய்து தந்தவர் ஈரோடு சுப்பையாதிருச்சி பெரியார் சிலைப் பீடத்தின் கல்வெட்டில பெயர் போடப்பட்டுள்ள பலரும் '' பெயர் இரவல்''அல்லது ''உண்டு காட்டிகளே''.

அதிகாரப்பூர்வமான தேர்வு முடிவுகளுக்குப் பதினைந்து நாட்களுக்கு முன்பே ஏறக்குறைய தேர்தல் நிலவரங்கள் தெரிய ஆரம்பித்துவிட்டன.  இளைய குமார பட்டயக்காரரின் மனைவி பார்வதி அர்ஜூனன் அமைச்சர் திருமயம் இராமய்யா முன்னாள் அமைச்சர் கக்கன் போன்றவர்களின் தொகுதிகளில் காங்கிரசு பெரும்பான்மை வாக்குவித்தியாசத்தில் தோற்கும் என்பதைச் சொன்னேன்; முடிவு அப்படியே இருந்தன. 

மாலை ஆறு மணி, இருள் கவ்வத் தொடங்கும் நேரம், உடல் சோர்வு, மனச் சோர்வு- நான் மாளிகை முன்னிருந்த வேப்ப மரத்தடியில் காற்றாட ஒரு பெஞ்சில் படுத்திருந்தேன்.  ஈரோடு சுப்பையாவும், பெரியார் டிரஸ்டின் உறுப்பினராய் இருந்த இந்தியன் பாங்க் மீனாட்சி சுந்தரமும் ஏதும் பேசாமல் புகைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.  பெரியார் கூப்பிடுவதாய் உதவியாளர் மகாலிங்கம் ஓடிவந்தார் பதற்றத்துடன். சுப்பையா ''என்ன மகாலிங்கம்'' என்ன சார்…'' என்றார்.  மகாலிங்கம் சொல்லத் தடுமாறினார்.

சுப்பையா ஓடினார்.  நானும் உடன் போனேன்.  பெரியார் ''சுப்பு… தெரியுமா காமராஜே தோத்துட்டாராம்.  தோத்துட்டாராம்…'' என்றார்.  மணியம்மை மெல்ல அருகில் வந்து நின்றார்.  ஒரு மாறுதலான அமைதி யாரும் பேசவில்லை.

சுப்பையா முதலில் மவுனத்தை உடைத்தார்.  ''அய்யா எந்த தரப்பிலிருந்து சேதி… யாரு சொன்னா…'' என்றார்.

பெரியார் ''சேதி உண்மைதானுங்கோ…ஆனா அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரலை… எவ்வளவு தாமதமா சொல்லணுமோ அவ்வளவு தாமதமாகத்தான் சொல்லுவாங்க… அனேகமாக நடுராத்திரியில சொன்னாலும் சொல்லுவாங்க…'' என்றவர்.  சொன்ன பெரிய அதிகாரி மற்றும் சென்னையிலிருந்து நரசம்பட்டி சம்பந்தமும் சொன்னதாய்ச் சொன்னார்.

''போச்சு எல்லாம் போச்சு... இங்கே இருக்கிறவனை (பக்தவச்சலம்) நம்பி உட்டுப் போட்டு தில்லிக்குப் போக வேணான்னு சொன்னேன். அவரு தலையில அவரே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டார் காமராஜ்...'' என்றார்.    
                                                                                                                                  
மீண்டும் பல நிமிடங்கள் பயங்கர அமைதி.  எல்லோரும் தரையைப் பார்த்தபடி நின்றார்கள்.  பெரியாரும் பெரியார் மாளிகையும் அப்படியொரு அமைதியில் நின்றதை நான் பார்த்ததில்லை.



அன்று வானொலியிலும் தொலைபேசியிலும் செய்தி - திமுக ஆட்சியமைக்கும் தனிப் பெரும்பான்மை நோக்கி முன்னேறுகிறது.  பெரியாரைச் சுற்றி நின்று கொண்டிருந்தவர்களில் நான் (செல்வேந்திரன்), சுப்பையா இருவரும் காமராசரின் பற்றாளர்களே தவிர,  காங்கிரசு என்ற தத்துவத்தின் எதிர்ப்பாளர்கள்.  அதிலும் கொள்கை அளவிலும் தனிப்பட்ட முறையிலும் தி.மு.க. வை ஒப்புக் கொள்ளலாம் காங்கிரஸ் எந்த வகையிலும் நம்மோடு ஒட்ட முடியாதவர்கள் என்ற கருத்துடையவர்கள். ஈரோடு சுப்பையாவும் - 'மீனா' என்று அழைக்கப்படும் மீனாட்சி சுந்தரத்தையும். இதனால் அக்காலத்தில் பலர் எங்களைக் ''கண்ணீர்த் துளி'' (தி.மு.க.) என்பார்கள்.


பெரியார் மெல்ல அடித்தொண்டையால் கனைத்தார்.  ''அம்மா காப்பி கொண்டா… நல்ல சூடா…'' வழக்கம்போல மணியம்மை - யாருக்கு வந்த விதியோ என்ற பாணியில் நின்றார்.  ஈரோடு சுப்பையாவின் மனைவி சலோச்சனா காப்பி கொண்டு வந்தார்.  இது பெரியாரின் இரண்டாம் முறை காப்பி குடிக்கும் நேரம் அல்ல!

பெரியார் '' சுப்பு… கொஞ்சம் தனியாகப் பேசுவோம் ராத்திரி…'' என்றார்.  நான் (செல்வேந்திரன்) சூழ்நிலை தெரிந்து வெளியே வர பெரியாரின் செயலாளர் மகாலிங்கமும் வெளியே வந்தார்.

உள்ளே பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.  பெரியார் - சுப்பையா - மணியம்மை மூவரும்!  இடையிடையில் மணியம்மை கீச்சுக் குரலில் வேகமாக ஏதோ சத்தம் போட்டார்பெரியாரின் கருத்துக்கு ஏதோ மறுப்புச் சொல்கிறார் என்று மட்டும் புரிந்து கொண்டோம். 


சுப்பையா வெளியே வந்தார்.  அடுத்தடுத்து வந்த தொலைபேசிச் செய்திகள் காமராசரின் தோல்வியை உறுதி செய்தனஆனால், அதிகாரப் பூர்வமான அறிவிப்பு மறுநாள் நள்ளிரவில் தான் வெளியாயிற்று.  இடையில் வதந்தியா? உண்மையா? என்று கேட்டுப் பெரியார் மாளிகைக்கு நிறையத் தொலைபேசிகள்…

அடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து தொடர்ந்து பெரியாருடன் மாளிகையில் நண்பர்கள் கருத்துக் கூறுமாறு ''அய்யா'' கேட்டுக் கொண்டார் பொறுமையாய்.

இன்றைக்குக் கலைஞரின் தி.மு.க. அரசைக் காக்கின்ற பெரிய பொறுப்பை சுமந்து கொண்டிருக்கும் ''தலைவர்கள்'' அதே மாதத்தில் காமராசருடன் இணைந்து ஆயுதப் புரட்சியை நடத்தியாவது தி.மு.க. அரசைக் கவிழ்த்துவிட வேண்டும் என்கிற முனைப்புக் காட்டினார்கள்.

அதன் பின்னர்த் தி.மு.க. ஆதரவு என்ற தலைப்பில் பெரியார் விடுதலை நாளிதழில் தலையங்கம் ஒன்று எழுதினார்.  விடுதலை இதழில் தி.மு.க. வைத் தி.மு.க.  என முதன் முதலில் விளித்து எழுதப்பட்ட கட்டுரை அது தான்.  இது வரை தி.மு.க. வைக் கண்ணீர்த் துளிகள் என்றுதான் விடுதலை விளிக்கும்.

பெரியார் தி.மு.க. ஆதரவு நிலை எடுக்கக் காரணமாய் இருந்த ஒரே சக்தி அன்றைய பெரியார் நிறுவனங்களின் மேலாளர் ஈரோடு சுப்பையா தான்!  சுப்பையா மட்டும் தான், வாய் பேசாமல் ஒவ்வோர் அசைவையும் பார்வையாளராய் இருந்து பார்த்த நான்(செல்வேந்திரன்) அறிவேன்.

இந்த வரலாற்றுத் திருப்பத்திற்கு வாகாய் லக்கானைத் திருப்பிய சுப்பையா இப்போது எங்கோ இருக்கிறார்!  அண்ணா - கலைஞர் முதலிய தி.மு.க. அமைச்சர் படங்களோடு பெரியார் மாளிகையில் மாட்டப்பட்டிருந்த காலண்டரையே கிழித்தெறிந்தவர்கள் தாம் இப்போது கனஜோராய் இருக்கிறார்கள்.                                                                                                                                                                                                         ...இனி ஒரு பெரியாரைப் பார்ப்போமா? .....திருச்சி செல்வேந்திரன்..நாம் தமிழர் பதிப்பகம் பக்கம் 85-93.

No comments: