Pages

Tuesday, 30 March, 2010

பெண்ணுரிமைச் சட்டங்கள்-1

மக்களுக்கு தேவையான சட்டங்கள் பற்றி மக்கள் பலர் அறிந்து கொள்ளாமல் இருப்பதால் பலர் அறியாமையினால் பல இன்னல்களுக்கு ஆளாவதும் தொடர்வதும் வாடிக்கையாகி உள்ளதை நாம் அறியாமல் இல்லை. பெண்களுக்கு இந்த சமூகத்தில் என்னென்ன பாதுகாப்புகள் உள்ளது என்பது பெண்கள் பலருக்கும் தெரிவதில்லை. சட்டம் படித்தவர்களுக்கு மட்டும் தான் எல்லாமும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. சட்டங்கள் முதன் முதலில் ஒரு தனி மனிதனால் உருவாக்கப்பட்டது தான். காலப்போக்கில் அந்தந்த நிலப்பரப்பில் வாழும் குழுக்களால் சீர்செய்யப்பட்டு சட்டமாக உருவாக்கப்பட்டது. அதன் படியே சட்டக்கல்வியும் மனித சமூகத்தால் சமூகத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்டது தான்.

அனைவரும் நமக்கு என்னென்ன சட்டங்கள் நமக்கு பாதுகாப்பாக உள்ளன் என்பதை அறிந்தாலே நமக்கு ஒரு கூடுதல் பலம் கிடைத்த மாதிரியான உணர்வு ஏற்படும். நம்மை எதிர்கொள்கின்றவர்களும் சிறிது அச்சத்துடனே எதிர்கொள்வர். ஏன் காவல் நிலையங்களை அணுகுவதற்கு கூட சில அத்தியாவச சட்டங்கள் தெரிந்திருக்குமேயானல் அவை நமக்கு கூடுதல் பலம். (பலருக்கு காவல் நிலையத்தில் எப்படி புகார் மனு எழுத வேண்டும், என்பதெல்லாம் தெரியாது, இது எதிராளிக்கு சாதகமாக போய்விடும்) 

சட்டங்கள் நமக்கு பாதுகாப்பு அரண்களாக இருக்கின்றன என்பதை அறியாமலே பலர் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அப்படி இன்னல்களுக்கு ஆளாகிறவர்கள் கூட சட்டங்களை அறியாததினால் நமக்கு விதித்தது அவ்வளவு தான் என்று விதியின் பேரில் வாழ்க்கை நடத்துவபவர்களும் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். 

மனிதன் எப்போழுதும் நிம்மதியான வாழ்க்கை வாழவே ஆசைப்படுவான். ஒரு சிறு இடர்பாடுகளை கூட மனித மனம் விரும்புவதில்லை. ஆனால் அது சாத்தியமில்லை எந்த கட்டத்திலும் அவனை இடர்பாடுகள்  தொடர்ந்து சந்திக்க முயற்சி செய்து கொண்டே இருக்கும். அப்பொழுது நமக்கு இந்த சட்ட அறிவு சமயத்தில் கை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு வழக்குரைஞரை சந்திக்கும் பொழுது கூட நமக்கு சட்டங்கள் தெரிந்திருக்கவேண்டியது அவசியமாகிறது. தவிர ஒரு நபரின், சாமான்யரின், நடுநிலையான, விருப்பு வெறுப்பற்ற (பக்க சார்பற்ற) கருத்துக்கள், பேச்சுக்களே சட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளதை கண்டு நம்மை  நாமே உணர்ந்து கொள்ளலாம், நம்மை இன்னும் மேன்மை படுத்திக்கொள்ளலாம்.

தவிர சட்டங்கள் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவே வகுக்கப்பட்டுள்ளன ஆகையால் அவற்றை தெரிந்து கொள்வதில் நமக்கு எல்லா வகையிலும் பயனளிக்கும் என்ற நோக்கோடு இந்த பெண்களுக்கான சட்டத் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. பெண்கள் சமூகத்தில் அதிகம் பாதிக்கப்படுவர்கள் என்பது நாம் அறியாமலில்லை, பெண் கேலி வதையிலிருந்து (ஈவ் டீஸ்), திருமணம், மாமியார், மாமானார், மருமகள், கணவன், மாமனார், நாத்தனார்...போன்றவர்களால் ஏற்படும் இன்னல்கள், வரதட்சணையால் ஏற்படும் கொடுமைகள், ....அதனால் வெடிக்கும் ஸ்டவ்கள்...தற்கொலைகள், பாலியல் கொடுமைகள்...இன்னும் சமூகத்தில் இவையெல்லாம் மலிவாகத் தொடர்வது தான்.


ஆணுக்கும் இது தேவையான ஒன்று தான். பெண் என்ற பாலினத்தோடு ஆணும் சம்பந்தப்பட்டிருப்பதால், நம் தந்தை ஆண் தானே.  நம் உடன் பிறந்த  சகோதரன் ஆண் தானே. பெண் பாதிக்கப்படும்பொழுது பல நேரங்களில் ஆண் பாலினமான தந்தைக்கே (உடன்பிறப்புக்கும்) பல விஷயங்கள் தெரியாமல் திண்டாடுவதையும் கண்டிருக்கிறோம். ''வேண்டாம்மா விட்டு விடு நமக்கேன் வம்பு'' என்று  வலிய வருகின்ற இன்னல்களையும் தாங்கி கொண்டு செல்கின்ற அப்பாக்களையும், உடன் பிறப்புக்களையும் காணமலில்லை. 

கணவனும் ஆண்தான் அவரும் இதை போன்றதோரு நிலையை சந்திக்கின்ற வாய்ப்பினை பெற்றிருப்பார். மனைவி வேலை பார்க்கின்ற அலுலகங்களில் உயர் அதிகாரிகளால் ஏற்படும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் அனைத்தையும் தெரிந்தும் வாழ்க்கைச் சக்கரம் சுழல்வதற்காக பொறுத்துக் கொள்ளச் சொல்லுகின்ற கணவன்மார்களும் உண்டு. ஆகையால் இது அனைவருக்கும் பொதுவானதொரு சட்டத்தொடர் தான். இப்படி இன்னல்கள் தொடர்வதால் பெண்கள் இனி பொறுத்து கொள்ளத்தேவையில்லை ''இதோ இருக்கிறது சட்டம்''  ''துணிந்து எழுங்கள்'' என்று சொல்லுவது தான் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள். இந்திய பெண்ணுரிமைச்சட்டங்கள். அதை அறிந்து கொள்வதில் பெருமை கொள்வோம்......

குழந்தை திருமணத் தடைச் சட்டம்

ஒரு குழந்தை எனபது என்றால் 18 வயது முடிவடையாத ஒரு பெண்ணைக் குறிக்கும். திருமணம் செய்து கொள்ளும் இரு தரப்பினரில் ஒருவர் குழந்தையாக இருந்தால் அதாவது பெண் என்றால் 18 வயது முடிவடையாதவராக இருந்தால், அது குழந்தைத் திருமணம் என்று பொருள்படும்.


ஆணுக்கென்ன தண்டனை?

18 வயதிற்கு மேற்பட்டு 21 வயதிற்குட்பட்ட ஒர் ஆண், குழந்தைத் திருமணம் செய்து கொண்டால், அவருக்குப் பதினைந்து நாட்கள் வரை நீட்டிக்கக் கூடிய வெறுங்காவல் தண்டனையோ அல்லது ஆயிரம் ரூபாய் நீட்டிக்கக் கூடிய அபராதமோ அல்லது இரண்டையுமோ நீதிமன்றம் தண்டனையாக விதித்தாக வேண்டும்.

21 வயதிற்கு மேற்பட்ட ஒர் ஆண் குழந்தைத் திருமணம் செய்து கொண்டால் அவருக்கு 3 மாதம் வரை நீட்டிக்கலாகும் வெறுங்காவல் தண்டணையும் மற்றும் அபராதமும் வித்தித்உ தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

குழந்தைத் திருமணத்தை நடத்தி வைப்பவர்களுக்கும் தண்டனை உண்டு. குழந்தைத் திருமணத்தை நடத்துபவருக்கும், செயல்படுத்துவபவருக்கும், இயக்குபவருக்கும் தண்டனை உண்டு. 3 மாதங்கள் வரை நீட்டிக்கலாகும் வெறுங்காவல் தண்டனையும், மற்றும் அபராதமும் விதித்து தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

குழந்தைத் திருமணம் அல்ல என்று தான் நம்புவதற்குக் காரணம் இருந்தது, என்று மெய்ப்பித்தால் தான், இந்த தண்டனையிலிருந்து தப்ப முடியும்.

இளையர் ஒருவர் குழந்தைத் திருமணம் செய்து கொண்டால், அந்த இளையரின் பெற்றோர்களோ, அல்லது சட்டப்படியோ, அல்லது சட்டத்துக்கு முரணாகவோ, அந்த இளையரை பொறுப்பில் வைத்திருக்கும் காப்பாளரோ, அந்த செயலில் ஈடுபட்டிருந்தாலோ, அல்லது அத்தகைய திருமணம் நடப்பத்ற்கு அனுமதித்திருந்தாலோ அல்லது அசட்டை காரணமாக திருமணம் நடப்பதை தடுக்க தவறியிருந்தாலோ, அந்த நபர் 3 மாதங்கள் வரை நீட்டிக்கலாகும் வெறுங்காவல் தண்டனையும் மற்றும் அபராதமும் விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

ஆனால் பெண் எவருக்கும் சிறைத்ண்டனை விதிக்கப்படக்கூடாது. இந்த சட்டப்பிரிவின் நோக்கங்களைப் பொறுத்தமட்டில், ஒரு இளையர் குழந்தை திருமணம் செய்து கொண்டால், அந்த இளையரை (மைனர்) பொறுப்பில் வைத்திருக்கும் நபர் அதற்கு மாறான நிலை மெய்ப்பிக்கப்படும் வரை, தம் அசடைட காரணமாக, திருமணம் நடைபெறுவதைத் தடுக்கத் தவறிவிட்டார் என்றுதான் அனுமானிக்கவேண்டும்.

குழந்தைத் திருமணச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் பிடி ஆணையின்றி கைது செய்வதற்குரிய குற்றங்களாகவே கருதப்பட்டாக வேண்டும்.

சட்ட விளக்கம்; 1973 ஆம் ஆண்டின்  குற்ற விசாரணை முறைச் சட்டப்படி, அந்தச் சட்டத்தின் 42 வது பிரிவு மற்றும் பிடி ஆணையின்றி கைது செய்தல் போன்றவைகளைத் தவிர்த்து, இதர பொருள்களின் நோக்கங்களுக்காகவும், மற்றும் அந்த  குற்றங்களை புலன் விசாரணை செய்வதற்கும், பிடி ஆணையின்றி (வித்தவுட் வாரண்ட்) கைது செய்வதற்குரிய குற்றங்களாகவே கருதப்பட்டாக வேண்டும்.

நீதிமன்ற ஆள்வரை (ஜூரிக்ஸ்டிக்சன்)

பெருநகர நடுவர் நீதிமன்றம் அல்லது நீதித்துறை முதல் வகுப்பு நடுவர் நீதிமன்றம், ஆகியவைதாம் குழந்தைத் திருமணச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் எதனையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும், விசாரணை செய்யவும் அதிகாரம் பெற்றவை அகும்.

எந்த நீதிமன்றமும், குழந்தை திருமணச் சட்டத்தில் குறிப்பிட்ட குற்றம் எதுவும், அந்தக் குற்றம் புரியப்பட்ட நாளிலிருந்து ஒராண்டு முடிந்த பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாகாது.

 குழந்தைத் திருமணம் நடக்க இருப்பதைத் தடை செய்ய வழி என்ன?
குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின் பிரிவுகளுக்குப் புறம்பாக, குழந்தைத் திருமடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அல்லது நடைபெற உள்ளது., என்பதை ஒரு நீதிமன்றம் ஒரு முறையீட்டின் பேரிலோ, அல்லது அதன்முன் வைக்கப்பட்ட தகவல் அடிப்படையிலோ, அதற்கு திருப்தியளிக்கும் வகையில் முடிவிற்கு வருமானால், அந்த குழந்தைத் திருமணத்தைத் தடை செய்து ஏவுகட்டளை பிறப்பிக்க வேண்டும்.

குழந்தைத் திருமணத்தை தடை செய்து ஏவுகட்டளை  (இன்ஜங்ஷன்) பிறப்பிக்கும் முன், எதிர்தரப்பினருக்கு அறிவிப்புக் கொடுத்து, ஏவுகட்டளை ஏன் பிறப்பிக்க கூடாது, என்பதற்கு தகுந்த காரணம் காட்ட சந்தர்ப்பம் ஒன்று அளிக்கப்பட்டாக வேண்டும்.


அந்த ஏவுகட்டளை உத்தரவை, நீதிமன்றம், தானாகவோ, அல்லது பாதிக்கப்பட்ட நபரின் முறையீட்டின்பேரிலோ, நீக்கி விடலாம், அல்லது மாற்றலாம்.


குழந்தைத் திருமணத்தைத் தடை செய்து ஏவுகட்டளைப் பிறப்பிக்கப்பட்ட நபர், அந்த நீதிமன்ற உத்தரவிற்கு கீழ்ப்படியாது செயல்பட்டால், 3 மாதங்கள் வரை நீட்டிக்கலாகும் சிறைத் தண்டனை, அல்லது ஆயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதம், அல்லது இரண்டாலும் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார். ஆனால் பெண் எவருக்கும் தண்டனை விதித்துத் தண்டிக்கப்படலாகாது.


குழந்தைத் திருமணத் தடைச்சட்டத்தில் உள்ள குற்றங்களுக்கான தண்டனையில் குற்றம் செய்தவர் பெண் என்றால், அவருக்கு தனிச் சலுகை உள்ளது.

குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் பிரிவு (3) மற்றும் (4)ன் கீழ் குழந்தைத் திருமணம் செய்து கொள்ளும் 18 வயதுக்கு மற்றும் 21 வயதுக்கு மற்றும் மேற்பட்ட ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கப்படுகிறது.


குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் பிரிவு (6) கீழ், இளையர் ஒருவருக்கு குழந்தைத் திருமணம் செய்பவர், அவர் பெற்றோராக இருந்தாலும், பாதுகாவலராக இருந்தாலும், தண்டனை விதிக்கப்படுகிறது. அந்தத் தண்டையில், மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கும் சிறைத் தண்டணையும் உண்டு. ஆனால், அந்தப் பிரிவில், குற்றம் புரிந்த ஒரு பெண்ணை, சிறைத் தணைடனை விதித்துத் தண்டிக்க முடியாது.

குழந்தைத்திருமணத் தடைச்சட்டம் பிரிவு (12)ன்  கீழ், நிதிமன்றம் பிறப்பித்த ஏவுகட்டளைக்குப் பணியாமல் செயல்பட்டவருக்கு, 3 மாதங்கள் வரை நீட்டிக்கலாகும் சிறைத் தடண்டணையும் விதிக்கப்படலாம். ஆனால், அத்தகைய குற்றம் புரிந்தவர் பெண் என்றால், அவருக்குச் சிறைத் தண்டணை விதித்து தீர்ப்பளிக்க முடியாது.


18 வயது நிறைவடையாத பெண் இளவர் (மைனர்) ஆவார்.

18 வயது பூர்த்தியடையாத பெண் இளவரையோ, அல்லது அவருடைய சொத்தையோ, அல்லது இரண்டையுமோ, தன் பாதுகாப்பில் கொண்டிருப்பவர் பாதுகாவலர் ஆவார். பாதுகாவலர்களில், இயல்புப் பாதுகாவலர், இளையவருடைய தாயோ, தந்தையோ எழுதி வைத்த உயில் சாசனப்படி நியமிக்கப்பட்டவர், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர், சட்டப்படி அதிகாரம் கொண்ட எந்த நபரும், பாதுகாவலர் என்ற சொற்றொடரில் அடங்குவர். 

....தொடரும்....பெண்ணுரிமைச் சட்டங்கள்-2

Monday, 29 March, 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-17


தமிழ்த் திருமணம் இணைப்பு (7)


குழந்தை பிறந்த வீடு தூய்மைசெய் நிகச்சி


1. கிழக்கு நோக்கி, முன்னவனார், கலசம் அமைக்க, பழம் முதலியவை படைக்க.
2. திருமணத்துக்குரிய மந்திரங்களைச் சொல்லி வழிபடுக. தேங்காய் உடைத்து, ஊதுவத்தி கற்பூரம் காட்டுக.
3. தாயும் சேயும் விழுந்து வணங்குக/மங்கை விழுந்து வணங்குக.
4. அவர்கள் மீது கலச நீர் தெளிக்க, பருக அளிக்க, திருநீறு குங்குமம் அளிக்க.
5. வீடு முழுவதும் கலச நீர் தெளிக்க.


தூய்மைசெய் நிகழ்ச்சி முற்றிற்று

குற்றம்


(இறுதியாக சுயமாரியாதை திருமணத்தைப்பற்றியும், திருமணங்களில் நடைபெறுகின்ற குற்றங்களை பற்றியும் பெரியார் கூறியவற்றில் சில....பேராசிரியர் நன்னன்)

குடும்ப கட்டுப்பாடு என்னும் கருத்தைப் பெரியார் எடுத்துரைத்த காலத்தில் எல்லாரும் நாணிக் கூசி, அஞ்சி, முகஞ்சுளித்தனர்.ஆனால், பின் எல்லாரும் விரும்பி, ஏற்று, மகிழும் திட்டமாக அது மாறிவிடவில்லையா? அவர் நூற்றுக் கணக்கான ஆண்டுகள் முன் சென்று சிந்திப்பவர். ஆதலால், அவரைத் தொடரந்து சென்று சிந்திப்பது பலருக்கும் அரியதாக இருக்க கூடும்.

திருமணம், மனைவி, கணவன், மக்கள் என்று சிலவற்றை உண்டாக்கி கொண்டுவிட்டால் அவற்றின் எதிர்கால வாழ்வுக்காக சொத்து சேர்க்கவேண்டும் என்னும் வேட்கை வளர்ந்து எதை செய்தேனும் அதை செய்வது என்னும் நிலைக்கு பலர் வந்து சேரந்து விடுகின்றனர். அந்நிலை அது இது என்றில்லாமல் எல்லா ஒழுக்க கேடுகளையும் தோற்றுவித்துவிடுகிறது. வறிநவன், பொருள் குறைவாக உடையவன் மட்டும்தான் இந்நிலைக்கு வருகிறான் என்றில்லாமல் பெருஞ்செல்வர்களும், அரசர் போன்ற வாழ்வுடையோரும் இந்திலைக்கே வருகின்றனர். இப்படிப்பட்ட அமைப்பை வைத்துக் கொண்டிருக்கும் சமுதாயத்தில் பொது நலன் நாட்டு நலன், உலக நலன் என்பன பற்றிய உண்மையான வேட்கையும், எண்ணமும், முயற்சிகளும் நிலைக்கும் என்று எதிர்பார்ப்பது எப்படி சரியாக இருக்கமுடியும்? பொது உணர்ச்சி எப்படித் தோன்றும்? எப்படி வாழும்? எப்படி வாரும்? அவரவரும் தத்தம் குடும்ப நலனைத்தானே இயல்பாகவும், சிறப்பாகவும் நாட வேண்டிவர்களாக இருப்பார்கள்? இப்போது நிலவும் பொது நலன்கூட அங்குமிங்குமாக ஒரு சிலர் பொது நல நாட்டமுடையோராய் விதி விலக்காக இருப்பதாற்றான் என்றறிய வேண்டும்.

எப்படி மனிதன், மனிதனை அடிமை கொள்ளுவதை தவறு, சட்டப்படி குற்றமான பாரியம் என்று ஆக்கியிருக்கின்றோமோ அதே போல மனிதன் பெண்களைத் திருமணம் என்ற பெயரால் அடிமையாக்கி கொள்வதை சட்டப்படியான குற்றம் என்று செய்யவேண்டும்.

திருமணம் என்னும் முறையும் அதன் வழிப்பட்ட குடும்பம், சொத்து ஆகியவையும் மனித சமுதாயத்தின் உரிமை, வளர்ச்சி, முன்னேற்றம், மேம்பாடு ஆகியவற்றுக்கு தடைகளாக உள்ளன என்பதை பொதுவாக எடுத்துக் கூறுவதோடு சிறப்பாக பெண் விடுதலை, சமத்துவம், உரிமை ஆகியவற்றுக்கு திருமண மறுப்பு இன்றியமையாததென்றும் எடுத்தியம்பியுள்ளார்.

மண்ணின் அழுத்தத்தாலும் கால முதிர்ச்சியாலும் விளையும் பொன் போன்ற கனிப் பொருள்களைப் போல் பகுத்தறிவு தந்தை பெரியாரின் முக்கால் நூற்றாண்டு கால அறிவு, ஆராய்யச்சி, கனிவான சிந்தனை போன்றவற்றின் விளைவாக தம் முற்றி முதிர்ந்த பருவத்தில் தோன்றிய இந்தப் புரட்சி அறிவுக் கனியைப் பக்குவப்பட்ட அறிஞர்கள் மேலும் தொடர்ந்து எண்ணிப் பார்க்க கடமைப்பட்டவர்கள் எனக் கூறி ஈற்றுப் பகுதியாம் இதனை நிறைவு செய்வதன் வாயிலாக இந்நூலையும் முடிக்கிறோம்.


இதுவரை தமிழர் திருமணங்கள் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் மற்றும் தமிழர் இல்லங்களில் பல்வேறு சடங்குகளுக்கான தமிழ் மந்திரங்களையும் அதை தமிழர்களை வடமொழி கலக்காமல் பார்ப்பன புரோகிதம் என்ற பெயரில் ஆபாசங்கள் இல்லாமல் நடத்த நம்மாள் முடியும் என்பதனையும். இச்சடங்குகளே வேண்டாம் என்பவர்கள் பெரியார் கண்டறிந்த சுயமரியாதை திருமணங்களை கொண்டு தாமே அவரவர் திருமணத்தை நடத்திக்கொள்ளலாம் என்பதனையும் அறிந்தோம். மேலும் சுயமரியாதை திருமணங்கள் மிகவும் சிக்கனமானது. சட்டப்பூர்வமாக ஆக்கப்பட்டது. இதனால் திருமணத்தின் மூலம் செய்யப்படும் பணவிரயம், காலவிரயம் தடுக்கப்படுகிறது.

இதில் எது சிறந்ததோ (தமிழ் மந்திரத் திருமணங்கள் அல்லது சுயமரியாதை திருமணங்கள்) அதையே தமிழர்கள் பினபற்றி கொள்ளலாம் என்பது தெளிவாகிறது. இதற்கு புரோகிதர் தேவையில்லை தவிர அத்தனை மந்திரங்களும் நமக்கு புரிகின்றது. இல்லறத்தின் மேன்மையும் விளங்குகிறது.மணமகனின் கண்முன்னேயே, அவன் மணமுடிக்கப்போகும் மணமகளை ஆபாசமாக வர்ணிக்கும் பார்ப்பன புரோகிதர்களின் எண்ணம் தவிடு பொடியாகிறது. அந்த எண்ண்ம் முற்றிலும் தடுக்கப்படுகிறது.


தமிழர்களின் எல்லா இல்லச் சடங்குகளையும் தமிழிலேயே நடத்திக்கொள்ளலாம். மந்திரம் என்பது ஒரு வாழ்த்து தான். (எந்த மாயாஜாலமும் உருவாவதில்லை.)

இதனால் தேவையற்ற மணமுறிவுகள் நீதிமன்றத்தின் மூலம் முடித்துக் கொள்வது தடுக்கப்படுகிறது. இவையனைத்தும் புரிதலினால் மட்டுமே சாத்தியம். எதையும் தெளிந்து செய்வது மனிதனின் இயல்பாக இருக்கவேண்டும். இது தமிழர்கள் எப்போதும் பின்பற்றி வந்த ஒன்று தன். இடையில் ஆரியப்பார்ப்பனர்களின் தலையீட்டால் வஞ்சகமாக இந்த சமஸ்கிருத மந்திரங்கள் தமிழர்களை இழிவுபடுத்தும் நோக்கோடு புகுத்தப்பட்டது. அவற்றைக் களைவோம் தமிழர்களாக வாழ்வோம். திராவிட கலாச்சாரத்தை காப்போம். இதுவரை பலத் தளங்களிலும் விவாதிக்கப்பட்டாலும் இதை பார்ப்பனர்கள் எதிர்த்தே வந்திருக்கின்றனர். ஆனால் ஒருவரும் சமஸ்கிருதங்களில் ஆபாசமில்லை என்று அரிதியிட்டு அவர்களால் கூறமுடியவில்லை. மாறாக சமஸ்கிருதம் மேன்மையானது அதை போன்ற ஒலி வேறெதிலும் வருவதில்லை  என்று பூசிமழுகின்றனர். அவர்களுக்கே பொருள் தொரியவில்லை நமக்கெதற்கு? அவர்களுக்கு தெரிந்தாலும் நமக்குத் தேவையில்லை? நமக்குத் தான் அதன் பொருள் தெரிந்துவிட்டதே!  

எமது தாய் மொழித் தமிழைவிடவா? சமஸ்கிருதம் மேன்மையானது. ஆயிரம் இருந்தாலும் என் தாய் மொழியே எமக்கு உயர்ந்தது என்று கூறும் தமிழர்களிடம் இவர்கள் பாச்சா பலிக்கவில்லை.  அவரவர்களுக்கு அவர்கள் தாய்மொழி உயர்ந்தது. 

இதுகாரும் பார்ப்பன புரோகிதர்களால் சொல்லப்பட்டு வந்த சமஸ்கிருத ஆபாச மந்திரங்கள் வேண்டாம் என்று இன்று வரை ஒரு பார்ப்பனரும் மறுத்து கூறவேயில்லை. மாறாக சமஸ்கிருதத்தின் தொன்மையை பற்றி அளந்து கொண்டிருக்கின்றனர். (அதை தூக்கி குப்பையில் போடுங்கள்.)  இந்த இணையக்காலத்திலும் அவர்கள் இந்த ஆரிய வெறியுடனேயே வாழ்கின்றனர் என்பது தெள்ளத் தெளிவாகிறது.  ஆரியத்தை எதிர்ப்போம் திராவிடத்தை காப்போம்.

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும் தொடர் முற்றும்

Sunday, 28 March, 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-16
தமிழ்த்திருமணம் இணைப்பு (6)

எழுத்து அறிவித்தல் விழா
1. மேற்கு நோக்கி, மஞ்சள் பிள்ளையார், கலசம் அமைக்க பழம் முதலியன படைக்க.
2. பிள்ளைக்கு நீராட்டிப் புத்தாடை உடுத்திச் சின்னங்கள் அணிந்து, எதிரே, கிழக்கு நோக்கி அமரச்செய்க.
3. மன்னவனார் வழிபாடு செய்விக்க, திருமண மந்திரங்கள் உடன், விநாயகர் அகவல் ஓதி, ஊதுவத்தி கற்பூரம் காட்டுக.
4. கலைமகள் வழிபாடு ஆற்றுவிக்க ‘’ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்’’ என்னும் பாடல் குமரகுருபரரின் சகலகலா வல்லி மாலை, ‘புத்துகத்து உள்உறை மாதே’ என்று தொடங்கும் சரசுவதி சிந்தனை ஆகியவை ஓதி, தேங்காய் உடைத்து ஊதுவத்தி கற்பூரம் காட்டுக.
5. கலச நீரைப் பிள்ளைக்கு மூன்று மூற் உள்ளங்கையில் விட்டுப் பருகச் செய்க. தலைமீது தெளிக்க, புத்தகங்கள் பலகை, அரிசித் தட்டு மீதும் தெளிக்க.
6. அரிசித்தட்டில், பிள்ளையின் வலச்சுட்டு விரலால் ‘அ, ஆ’ பன்னிரெண்டு, ‘க், ஞ்’ பதினெட்டு, ‘A,B,C, இருபத்தாறு, ‘க, உங, ‘1,2,3 பதினொன்று வரை எழுதச்செய்க. தலைப்பில் ‘உ’ ‘ஓம்’ எழுதித் துவங்குக.
7. பத்தகம், பலகைகளைப் பெற்றோரிடமும் ஆசிரியர் இடமும் மற்ற பெரியவர்களிடமும் தந்து, பிள்ளையை விழுந்து வணங்கச் செய்து பிள்ளையிடம் தரச் செய்க. ஒவ்வொருவரும் மஞ்சள், அரிசி தூவி வாழ்த்துக.


எழுத்தறிவித்தல் விழா நிறைவுற்றது.
தாலி


(தாலி பற்றி பெரியார்....பேராசிரியர் நன்னன்)

மூட நம்பிக்கையையோ, குருட்டுப் பழக்கத்தையோ, ஆன்றி அவையிரட்னையுமோ காரடமாகக் கொண்டு பிற்காலத்தில் ஏற்பட்டதுதான் திருமணத்தில் கணவன் மனைவிக்குத் தாலிகட்டும் வழக்கம். பண்டைத்தமிழகத்தில் வீரர்கள் தாம் கொண்டு வந்த புலிப்பல்லால் தாலி செய்து தம் குழந்தைக்கு அணியும் வழக்கம் இருந்திருக்கிறது. ஆனால், சிலப்பதிகாரக் காலமாகிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலும் கோவலன் கண்ணகிக்குத் தாலி கட்டியதாகத் தெரியவில்லை. பார்ப்பான் வந்து மறை வழி நடத்திய அத்திருமணத்தில் தீ வந்துவிட்டது; ஆனால், தாலி மட்டும் அப்போது வந்ததாகச் சொல்லப்படவில்லை. ஆகவே, மிகப் பிற்காலத்தில் வந்து புகந்த அப்பழக்கம் இன்று பல பெண்களால் தம் உயிரினும் மேலானதாக கருதப்படும் தகைமையை அவர்களுக்கு தந்துள்ளது. அதை ஒரு பெரும் பேறாகவும் பாக்கியமாகவும் கருதும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிட்டது. அது பற்றிய பெரியாரின் கருத்துகள் ஒரு சிலவற்றை மட்டுமேனும் இச்சிறு பகுதியில் தெரிந்து கொள்வோமா?

மாட்டுச் சந்தையில் தாம் வாங்கிய மாட்டின் மீது தமக்குள்ள உரிமையைக் காட்ட வாங்கியவர் அம்மாட்டுக்குத் தாம் வாங்கிச் செனைற புதிய கயிற்றைக் கட்டிப் பிடிப்பது போல் ஓர் ஆண் தான் தனக்கு உரியவளாக ஆக்கிக் கொண்ட பெண்ணுக்கு அதன் அடையாளமாக கட்டுவதுதான் இத்தால். மற்றும் தாம் வளர்க்கும் விலங்குகளுக்கு நகராட்சி வில்லையைக் கட்டுவது கோல் தாலி கட்டி அப்பெண்ணைத் தன் முரட்டுத் தன்மையால் அடிமை கொள்ளும் சின்னமே அத்தால். பெண்களுக்கு சுயமரியாதையும், அடிமைத் தளையை அறுத்துக் கொண்டு விடுதலை பெறும் வேட்கையும், பகுத்தறிவும் ஏற்பட்டால் இப்பழக்கம் நிலைக்காது என்று பெரியார் கூறுவார்.
ஆணின் அடிமையே பெண் என்பதன் அடையாளமாக கட்டப்படும் அத்தாலி சீர்திருத்த திருமணம் செய்து கொள்பவர்கள் பலராலும் கை விட முடியாத வலிமை கொண்டதாக உள்ளது. சுயமரியாதை திருமணங்கள் பலவற்றுள் பார்ப்பார்,அவர் கூறும் மந்திரங்கள், அவர் செய்யும் சடங்குகள், நல்ல நேரம், சோதிடம், இகுனம் போன்ற பற்பலவும் கைவிடப்பட்டிருக்கும். ஆனால், தாலி ம்ட்டும் கைவிடப்பட முடியாததாக இருக்கும். முழுப் பகுத்தறிவு பெற்ற இரு குடும்பங்கள் உறவு கொள்ளும் திருமணங்களில் மட்டுமே தாலியும் இல்லா முழு சுயமரியாதை திருமணங்கள் நடைபெறுகின்றன. மதம், கடவுள், ஆன்மா, விதி போன்ற பலவற்றையும் விட்டவர்கள் சிலர்கூட சாதியை விடத் தயங்குவது போல் பலமூடப் பழக்கங்களை விட்டவர்களும் தாலியைவிடத் தயங்குகிறார்கள். அத்தகைய அச்சத்தை அத்தாலி ஏற்படுத்தியுள்ளது.

தாலியை பெண்களுக்கு மட்டும் ஆண்கள் கட்டுவதால் அதில் ஏதோ காரணம் இருக்க வேண்டும். தநாலி கட்டியவன் அப்பெண்ணுக்கு எசமான் என்றும், தாலி அடிமைச் சின்னம் என்றும் விளங்குகிறது. ஆண் பெண் இருவரும் சம அந்தஸ்த்துள்ளவர்கள் என்பதற்கு இருவர் கழுத்திலும் ஒருவருக்கொருவர் தாலி கட்டிக் கொள்ள வேண்டும். இல்லையேல் இருவருக்கும் தாலி இல்லாமலிருக்கவேண்டும்.

மன்பதையியல் உயர் உச்சப் பகுத்தறிவு மன்ற நீதியரசு தலைவராயிருந்து தந்தை பெரியார் வழங்கியுள்ள இத்தீர்ப்பு ஆழ்ந்து நோக்கி, அமைதி குன்றாமல் எண்ணி, நடுநிலை பிறழாது நின்று ஆய்ந்து, துணிவாகவும், மன்பதை இயலுக்கு மாசு நேராமலும் வழங்கப்பட்ட தீர்ப்பாக துலங்க காண்கிறோம்.
.....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -17

Saturday, 27 March, 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-15தமிழ்த்திருமணம் (5)

புதுமனை புகு விழா


1. விடியல் 5-00 மணி போல, நல்ல நேரத்தில், தெரு வாயிலில் மாவிலைத் தோரணம் கட்டி, இரு குத்து விளக்குகள் ஏற்றி வைக்க.
2. பூசைக்குரிய பொருள்களைத் தட்டுகள், பிறவற்றில் அங்கே வைத்துக் கொள்க. (பால் காய்ச்சுவதற்குத் தேவையான பால் உள்பட) வீட்டுப் பிள்ளையாரை மணையுடன் வீற்றிருக்கச் செய்க.
3. வீட்டுக்கு உரியவரும், அவர் மனைவியாரும் நீராடி சின்னங்கள் அணிந்து வாயிலில் நிற்க.
4. பசுவும் கன்றும் அங்கு வரச்செய்து அவற்றின் நெற்றியை நீர் கொண்டு துலக்கி, மஞ்சள் குங்குமம் இடுக. உடலிலும் அங்ஙனம் செய்க கழுத்தில் பூச்சுற்றுக. கற்பூரம் காட்டுக, பழம் அளிக்க.
5. பசுவும் கன்றும் நுழையும்போதே, முன்னே குத்து விளக்குகளையும்
பூசைப் பொருள்களையும் உள்ளே கொண்டு சென்று பூசை செய்யவேண்டிய இடத்தில் வைக்க. வீட்டுக்குரிய இருவரும் உடன் செல்க.
6. விழாச் சேலை வேட்டி வழங்குதற்குரியவர் வழங்குக.
7. இரு வாழை இலைகள் நடுவில் அரிசி பெய்து கலசம் நிறுவுக, மஞ்சள் பிள்ளையார் அமைக்க.
8. வீட்டுக்குரிய இருவரும் புத்தாடை உடுத்திக்கொண்டு கிழக்கு நோக்கிக் கலசத்திற்கு எதிரே அமர்க. திருமணச் சடங்குக்கு உரிய மந்திரங்களை ஓதி வழிபடுக.
9. திருமண அழல் ஓம்பல் மந்திரங்கள் ஓதி, ஓமம் வளர்த்துக. ஓமப் பொட்டு இடுக.
10. கலசநீரை இருவர் மீதும் தெளிக்க. பின் வீடு முழுவதும் தெளித்துக் கொண்டே சென்று அ.ல் ஓம்பிய நெருப்பை சமையல் அறைழில் புது அடுப்பில் இடுக. பால் காய்ச்சுக.
11. கலச நீரை இருவர் மீதும், வீட்டைச்சுற்றியும் தெளிக்க.
12. கணவன் மனைவியர் இருவரும் காய்ச்சிய பாலை அனைவருக்கும் வழங்கித் தாமும் உட்கொண்டு கிழக்கு நோக்கி நிற்க.
13. ஆசிரியர் பின்வரும் மந்திரங்களை ஓதி வாழ்த்துக;


அ. ‘களித்துக் கலந்த்தோர் காதல் கசிவோடு, காவிரி வாய்க் குளித்து தொழுது, முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்
தெளித்துச் சுவை அமுது ஊட்டி, அமரர்கள் சூழ் இருப்ப
அளித்துப் பெருஞ்செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே’

ஆ. ‘அன்பர் அங்கிருப்ப, நம்பர் அருளினால், அளகை வேந்தன்
தன்பெருநிதியம் தூர்த்துத் தரணிமேல் நெருங்க, எங்கும்
பொன்பயில் குவையும் நெல்லும், பொருவில் பல்வளனும் பொங்க
மன்பெருஞ் செல்வம் ஆக்கி, வைத்தனன், மனையில் நீட

இ. இல்லத்தில் சென்று புக்கார், இருநிதிக் குவைகள் ஆரந்த
செல்வத்தைக் கண்டு, நின்று திருமனையாரை நோக்கி,
‘வில் ஒத்த நுதலாய்! இந்த விளைவிலம் என்கொல்?’ என்ன
‘அல ஒத்த கண்டன், எம்மான், அருள்தர வந்தது!’ என்றார்.

ஈ.’பரந்த நிதியின் பரப்பெல்லாம் பாணனார் பத்திரனார்க்கு
நிரந்த தனங்கள் வெவ்வேறு நிரைத்துக் காட்டி ‘மற்று இவையும்
உரம் தங்கிய வெம்கரி, பரிசுகள், முதலாம், ‘உயிருள்ள தனமும்,
புரந்த அரசும், கொள்ளும்!’ என மொழிந்தார்,பொறையர் புரவலனார்


14. புதுமனை புகும் கணவன் மனைவியர் இருவரும் அவையினரை விழுந்து வணங்கிக் கொள்க.
15. அவையினர் மஞ்சள் அரிசி சொரிந்து வாழ்த்துக.

பின்வரும் மந்திரம் ஓதி.
நன்மை பெருக அருள் நெறியே வந்து, அணைந்து, நல்லூரில்
மன்னு திருத் தொண்டனார் வணங்கி மகிழ்ந்து, எழும்பொழுதில்
உன்னுடைய நினைப்பு அதனை, முடிக்கின்றோம்’ என்று அவர் தம்
சென்னிமிசைப் பாதமலர் சூட்டினன், சிவபெருமான்.’


16. அனைவரும் மகிழ்ச்சியில் மலருதல்;
ஐந்து பேர் அறிவும் கண்களே கொள்ள,
அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாக, குணம் ஒரு மூன்றும்
திருந்து சாத்துவிகமே யாக.
இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லை இல் தனிப்பெருங் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.

-சேக்கிழார்

புதுமனை புகுவிழா நிகழ்ச்சி முற்றிற்று
மூட நம்பிக்கை

மனிதன் பகுத்தறிவோடு பிறந்தும் இல்லறத்தை ஏற்றுக் கொள்வதால், கவலையோடேயே சாகிறான். பகுத்தறிவுள்ள மனிதன் எதற்காக்கஃ கவலைக்கு ஆளாக வேண்டும். மனிதனுக்கு கவலை இல்லை என்றால் நீண்ட நாள்கள் வாழ்வான்; நோயற்று வாழ்வான்; மற்ற மனிதருடன் அன்பாக நடந்து கொள்வான். மடமைக்கு அனுகூலமான முறையில் நிகழ்ச்சிகளை அமைத்து அதில் புகத்தி விட்டதால் அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் மாட்டிக் கொண்டிருக்கிறான்.
.....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -16

Friday, 26 March, 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-14தமிழ்த்திருமணம் இணைப்பு(4) 
(அறுபது/எண்பது ஆண்டு நிறைவு மணி மணம் முத்து மணம்
செய்யும் முறை(சுருக்கமாக)

ஆசிரியர் வடக்கு நோக்கி அமர்க.
மஞ்சறில் மன்னவனார் அமைக்க. அறுபது/எண்பது கலசங்கள் நிறுவுக. இடையில் நிகழும் ஆண்டுகளுக்குப் பெரிய குடங்கள் இரண்டில் அம்மையப்பரை எழுந்தருளச் செய்க.
எதிரில், கிழக்கு நோக்கி, மணி / முத்து மணமக்கள் அமர்க. மணமக்களுக்கு மக்களும் மருமக்களும் திருவடிப் பூசை செய்க.

முன்னவனாரை மணமக்கள் எழுந்து நின்று கை கூப்பிக் கொள்க. பின் வரும் மந்திரங்களை ஓதுக.

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்-உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம கை’


‘நன்றுடையானை தீயது இல்லானை, நரைவெள்ளேறு
ஒன்றுடையானை, உமையொருபாகம் உடையானை,
சென்று அடாயாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூற, என் உள்ளம் குளிரும்மே!

‘என்னில் யாரும் எனக்கு இனியார் இல்லை,
என்னிலும் இனியான் ஒருவன் உளன்
என்னுள்ளே உயிர்ப்பாய்ப் புறம்போந்து புக்கு,
என்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே!

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானைப்
பின்னைஎன் பிழையைப் பொறுப்பானை
பிழையெலாம் தவிரப் பணிப்பானை,
இன்ன தன்மையன் என்று அறிவொண்ணா
எம்மானை, எளிவந்த பிரானை,
அன்னம் வைகும் வயல் பழனத்து அணி
ஆரூரானை மறக்கலும். ஆமே’!

‘செம்மை நலம் அறியாத, சிதடரொடும் திரிவேனை,
மும்மை மலம் அறுவித்து முதலாய முதல்வன்-தான்
நம்மையும் ஓர் பொருளாக்கி, நாய் சிவிகை ஏற்றுவித்த
அம்மை எனக்கு அருளியவாறு ஆர்பெறுவர்? அச்சோவே


இருவரும் ஒவ்வொரு கலசத்திற்கு அருகே சென்று பிறந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டாக’’.............ஆண்டு வடிவான இறைவா போற்றி’’ என்று சொல்லி மலர் தூவுக.
இருவரும் மணையில் அமர்ந்து, காலனைக் காலால் கடிந்த திருக்கடவூரில், சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவர் அருளிய மந்திரங்கள் ஓதி, மலர் தூவுக.
திருஞானசம்பந்தப் பெருமானின் ‘திலுஎழு கூற்றிருகைப் பதிக’ மந்திரங்களையும்,
கோளாறு பதிக மந்திரங்களையும் ஓதி, அழல் ஓம்புக.
வலம் வந்து, தனியே, விசுப்பலகையில் கிழக்கு நோக்கி மணமக்கள் அமர்க. சுற்றிலும் பிள்ளைகள், பெண்கள், மருமக்கள் நிற்க.
அறுபது கலசங்களையும் ஒவ்வொன்றாக எடுத்து மணமக்களுக்குத் திருமஞ்சனம் செய்க. (இம்மந்திரத்தை ஓதிக்கொண்டே)

‘இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதியுள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே!


‘நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
திருமஞ்சனத்துக்குப்பின் மணமக்கள் சம்பந்திகள் வழங்கும் புத்தாடை அணிந்து மணமனையில் வந்து அமர்க.
மேற்கு நோக்கி, மணமக்கள் எதிரில், அம்மையப்பர் கலச்ங்கள் எழுந்தருளப் பண்ணித் திருமண மந்திரங்களை ஓதி, மணமக்கள் மலர் தூவச் செய்க.

‘ஓசை ஒலியெலாம்’
என்று தொடங்கும் பதிகம் ஓதி, அழல் ஓம்புக.

மணி/முத்து மணமங்கல நாண் சூட்டுக
மாலை மாற்றிக் கொண்டு, வலம் வருக.
முதிவர்களை மணமக்கள் வழிபடுக.
இளையவர்கள் மணமக்களை வழிபடுக.
பலரும் வாழ்த்துக.


குறிப்பு; எண்பதாம் ஆண்டு நிறைவு விழாவுக்கு 80 கலசங்களும், இடையில் 81 ஆண்டுக்காக அம்மையப்பர் கலசங்களும் அமைக்க வேண்டும். பிற யாவும் 60க்குப் போலவே.


விதவை மணம்

(பெரியார் கூறுபவையாக பேராசியர் நன்னன் சுயமரியாதை திருமணம்)
விதவைத் தன்மை என்பது கடவுள் செயலாக இருந்தால் ஊர் தோறும் குப்பைத் தொட்டிகளும் , ஓடைப் புறம் போக்குகளும், கள்ளி மேடுகளும் ஊருணிகளும் எப்படிப் பிள்ளைகள் பெற முடியும்?

நடைமுறையில் ஆண் ஒருவனைத் திட்டும் போது மட்டும் அவனைக் கம்மினாட்டி என்று திட்டுகிறார்களே தவிர பிறவகையில் மனைவியை இழந்த ஆண் ஒருவனை விதவன், கைம்மை ஆண், என்றன போன்ற சொற்களால் குறிக்கும் வழக்கம் இல்லை. மனைவியை இழந்த ஆண் அந்நிலையில் நெடுங்காலமாம் இருப்பதில்லை. கூடிய விரைவில் அவன் மற்றொரு பெண்ணை மனைவியாக அடைந்து விடுகாறன். அதனால், அந்நிலையில் உள்ள ஆணைக் குறிக்க தனியே ஒரு சொல் தேவைப்படாது. ஆனால் கணவனை இழந்த மனைவி எஞ்சியுள்ள தன் வாழ் நாள் முழுவதும் அந்நிலையிலேயே அஃதாவது கைம்மை நிலையிலேயே இருந்து தீர்வதால் அந்நிலையிலுள்ள பெண்களைத் தனியே குறிக்க ஒரு சொல் தேவைப்படும். அதனால் கைம்பெண் , விதவை என்னும் சொற்கள் ஏற்பட்டு வழங்கிவருகின்றன. சொல்லைப் போலவே கைம்மைத் துன்பமும் பெண்ணுக்கு மட்டுதே இருக்கம். ஆணுக்கு அத்துன்பம் கூடிய விரைவில் மறைந்து போகும். ஏனெனில், அவன் மறுமணாளனாக மாறி விடுவான். ஆகவே, நாட்டில் கணவனையிழந்த பெண்கள் மட்டுமே மிகுதியாக இருப்பர். மனைவியை இழந்த ஆண் எனப்படுவோர் மிகமிக அரியராகவே இருக்க நேரும்.

தமிழகத்தில் பெரியாராலும் பிற பகுதிகளில் அவரைப் போன்று இப் பணியிலீடுபட்ட சீர்திருத்த செம்மல்களாலும் அறிவு பெற்ற மாந்தர் பலர் கணவனையிழந்த ஒரு பெண்ணுக்கு மறுமணம் செய்விக்கும்மோது அதனை மனைவியை இழந்த கணவன் ஒருவனுக்கு நடைபெறும் மறுமணத்தை விதவன் மணம் என்பது போன்றதொரு சொல்லால் குறிப்பிடும் வழக்கம் இல்லை. இதிலும் ஆணுக்கொரு முறை பெண்ணுக்கு மற்றொரு முறை என்றுதான் உள்ளது.

இக்கயமை கலந்த கொடுமையைப் பொரியார் பின் வருமாறு விளக்குகிறார்;
உலக இன்பத்தை நுகர்ந்து அலுத்துப் போயிருக்கும் பழுத்த கிழவனேயாயினும் தன் மனைவியார் இறந்து பட்டவுடன் மறுமணம் புரிய முயலுகின்றான். அதுவும் வனப்பு மிகுந்த- எழில் பொருந்திய இளம் சகோதரிகளையே த்தன் மணத்திற்கு தேர்ந்தெக்கிறான். ஆயின், ஓர் பெண்மகள் தன் கொழுநனை இழந்து விட்டால், அவள் உலக இன்பத்தையே சுவைத்தறியாதவளாக இருப்பினும், தன் ஆயுட்காலம் முற்றும் அந்தோ! தன் அயற்கை கட்புலனை இறுக மூடி, மனம் நொந்து வருந்தி மடிய நிபந்தனை ஏற்பட்டுவிடுகிறது. என்னே அநியாயம்.111
 
.....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -15

Thursday, 25 March, 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-13
தமிழ்த்திருமணம்


திருமணம் செய்து வைப்பதற்கு வேண்டியவை.

1. மங்கல-மங்கிலியத்தை மஞ்சள் நூலில் கோத்துக் கொள்க!
2. குத்து விளக்கு-மஞ்சள் குங்குமம் இட்டுப் பூச்சூட்டுக.
3. (i) அரிசி ஒரு தட்டில்-மங்கல நாண் வைக்க

(ii) ஒரு தட்டில் அரிசி, உதிரிப்பூ மஞ்சள் கலந்து வாழ்த்துதற்கு அமைக்க.
4. தேங்காய்-நாருடன், மஞ்சள் பூசி குங்குமம் இட்டு,
5. வெற்றிலை-10
6. பாக்கு-4
7. விரல் மஞ்சள்-4
8. வாழைப்பழம்-4
9. மலர்-3 முழம்
10. திருநீறு, குங்குமம்
11. கண்ணேறு கழிக்க-தட்டில் செம்மஞ்சள் நீர்திருமணம் செய் சுருக்க முறை முற்றிற்று


மறுமணம்காதலித்தோ காதலிக்காமலோ திருமணம் செய்துகொண்ட ஆண், பெண் ஆகிய இருவருள் ஒருவர் இறந்தாலோ, இறக்காவிடினும் வேறு காரணத்தால் பிரிய நேர்ந்தாலோ மற்றொருவர் மீண்டும் செய்து கொள்ளும் மணமே மறுமணம் எனப்படும். கணவனாயிருந்தவன் மற்றொரு பெண்ணை மணப்பதும் மறுமணந்தான்; மனைவியாயாருந்தவள் மற்றொரு ஆணை மணப்பதும் மறு மணந்தான். கணவனையிழந்த பெண் மற்றொரு ஆணை மணப்பது பற்றி இதற்கடுத்த பகுதியில் மனைவியை இழந்த ஆண் மற்றொரு பெண்ணை மணப்பது பற்றிப் பெரியார் என்ன கூறியுள்ளார் எனத் தெரிந்து கொள்ளலாம்.

ஓர் ஆண் தன் மனைவியைப் பிரிந்தோ பிரியாமலோ எத்தனை பெண்களை வேண்டுமாலும் திருமணம் செய்து கொள்ளலாம். அறுபதாயிரம் உச்சவரம்பு என்று கொள்ளலாம். அதற்குமேல் யாரேனும் மணந்து கொண்டது தெரிந்தால் இந்த உச்சவரம்பை மாற்ற நேரலாம். இதற்கு எந்த தடையுமில்லை. இந்து மதக் கடவுள் இதை ஆதரித்துள்ளன. சாத்திரங்கள், புராணங்கள் எல்லாம் இதை ஆதரிக்கின்றன. நடப்பிலும் இதை ஆதரித்தே பலரும் நடந்து கொண்டு வந்தனர். பகுத்தறிவியக்கம் தோன்றி அதற்கு ஒரு கட்டுப் பாட்டை ஏற்படுத்தியது என்பது தவிர வேறு யாரும் அல்லது எதுவும் இம்மணத்தை எதிர்க்கவில்லை.
ஆகவே இதுபற்றிக் கருத்துக் கூறி மாறுதலையும் சீர்த்திருத்தத்தையும் ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை பெரியாருக்கு ஏற்படவில்லை. ஆனால், மனைவி இறக்காத நிலையில் ஒரு கணவன் மற்றொரு பெண்ணை மணப்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டாயின. மனைவி இறந்து விட்டால் கணவன் மற்றொரு பெண்ணை மணப்பதில் தவறு இராது. மனைவி இருக்கும்போதே அவள் கணவன் மற்றொரு பெண்ணை மணப்பது கருத்து மாறுபாட்டுக்குரியது. ஒரு மனிதன் ஒரு மனைவியருக்கும் போது மறுமணம் செய்து கொள்ளக்கூடது என்று பொதுவாகப் பெரியார் தீர்ப்புக் கூறுகிறார். சுருதி,யுக்தி,அனுபவம் ஆகிய மூன்றையும் ஆராய்ந்தே அவர் தம் முடிவுக்கு வருகிறார்.
.....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -14

Wednesday, 24 March, 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-12


21. காப்பு அவிழ்த்தல்
அழல் ஓம்பல்!!

வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி,
சனி பாம்பு இரண்டும் உடனே
ஆசு அறு நல்ல, அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க
எருது ஏறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி, வந்து என்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதோடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய் நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

-சம்பந்தர் கோள் அறு பதிகம்.
(குறிப்பு ; இப்பதிகத்தின் பதினொரு பாடல்களையும் ஓதுவது சிறப்பாகும்.)

(22) மணமக்கள் மாறி அமர்தல்;

ஏகம்பத்துறை எந்தாய்! போற்றி!
பாகம் பெண்ணுருவானாய்! போற்றி!
‘மஞ்சா! போற்றி! மணாளா போற்றி!
பஞ்சேர் அடியாள் பங்கா! போற்றி!

-திருவாசகம்-போற்றித் திரு அகவல்

23. (ii)

அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க!
கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க!
அருந்தவர்க்கு அருளும் ஆதி வாழ்க!
அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க!
நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன் வாழ்க!
சூழ் இரும் துன்பம் துடைப்போன் வாழ்க!
எய்தினார்க்கு ஆர் அமுது அளிப்போன் வாழ்க!
கூர் இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க!
பேரமைத் தோளி காதலன் வாழ்க!

-திருவாசகம்-திருவண்டப்பகுதி.


23.(ii) திருநீறு இடுதல்;


காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு,
மாணந்தகைவது நீறு, மதியைத் தருவது நீறு,
சேணந் நருவது நீறு, திரு ஆலவாயன் திருநீறே

-சம்பந்தர்
குறிப்பு; திருநீற்றுப் பதிகத்தின் மற்றப் பாடல்களையும் ஓதலாம்.


24. (கண்ணேறு கழித்தல்) திருமணச் சடங்கு நிறைவேறுதல்;


வாழ்க! அந்தணர், வானவர், ஆன் இனம்;
வீழ்க! தண்புகல்; வேந்தனும் ஓங்குக!
ஆழ்க! தீயது; எல்லாம் அரன் நாமமே
சூழ்க! வையகமும் துயர் தீர்க்கவே’

-சம்பந்தர்


ஓங்கி உலகளந்த உத்தமன். பேர்பாடி...............
-ஆண்டாள் – திருப்பாவை.


தமிழ் திருமண மந்திரங்கள் முற்றிற்று.


....தொடர்வது சுயமரியாதை திருமணத்தின் சில பகுதிகள், தமிழ் திருமண சுருக்கம் மற்றும் மணிவிழா, பெயர் சூட்டும் விழா மந்திரங்கள்.....

சீர்திருத்தம்


சீர்திருத்த திருமணம் பற்றி பெரியார் கூறுபவையாக பேராசிரியர் ம. நன்னன்....

வழக்கமாக நடைபெறும் திருமணங்கள் எனப்படுவனவற்றுள் மணமக்களின் பெற்றோர்கள் முதலியோர் தங்களுக்குள் செய்து கொள்ளும் ஒரு ஏற்பாடாக அவை இருக்கின்றனவே ஒழிய மணமக்கள் தங்களுக்குள் செய்து கொள்ளும் உடன்பாடாகவோ ஒப்பந்த ஏற்பாடாகவோ ஆவை இருப்பதில்லை. சரியாக சொல்வதானால் மணமகளும் மணமகனுமாகிய அவர்கள் இருவருக்கும் அந்த ஏற்பாட்டில் எந்த தொடர்பும் இருப்பதேயில்லை.

இது எவ்வளவு பெரிய தவறு? அவர் வாழ்க்கை யொப்பந்தம் செய்து கொள்கிறார்களோ அவர்களைக் கலக்காமலேயே பெரும்பாலான திருமணங்கள் நடைபெற்று வந்தன.

உண்மையில் திருமணம் என்பது வயது வந்த – அறிவு வந்த ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் சம்மந்தப்பட்ட காரியமே ஒழிய மற்ற யாருக்கும் – வேறு எந்தக் கட்டுப்பாட்டுக்கும் சம்பந்தப்பட்டதல்ல.

என்பதோடு திருமணத்தின் அடிப்படையே, அதை நடத்திக் கொடுக்க யாரும் தேவையில்லை என்பதுதான். மணமக்கள் தாங்களாகவே முடித்துக் கொள்ள வேண்டிய காரியம். பிற்கால வாழ்க்கையை இருவரும் சினேகிதர்களாய் இருந்து அன்புடனும் , ஒத்துரிமையுடனும் ஒருவருக்கொருவர் பழகி கூட்டு வாழ்க்கை ஏற்படுத்திக் கொள்ளத் தொடங்கும் இந்தக் காரியம் மணமக்களுடைய சொந்தக் காரியம் என்பது எங்கள் கொள்கை. இதில் மற்றவர்களது பிரவேசமே இருக்க கூடாது என்பது எங்களது அடுத்த கொள்கை.என்று கூறி அக்கோட்பாட்டைப் பெரியார் நன்கு வரையறுத்து தெளிவுபடுத்தக் காணலாம்.

திருமணம் தனிப்பட்ட இருவரது தனிப்பட்ட கொள்கையன்றோ? அதில் மற்றவர்கள் தலையீடு இருக்க கூடாது என்னும் பெரியார் அம்முறையில் தலையிட்டு மாறுதலும், சீர்திருத்தமும் செய்வது சரியா என்று எவரேனும் வினாவவும் கூடும். உண்மையில் திருமணம் அதன் விளைவு ஆகியவை தனிப்பட்டவர்களை மட்டுமே சார்ந்தனதாயின் பெரியார் அவைகளை நோக்கியிருக்கவே மாட்டார். ஒவ்வொரு வாழ்க்கை ஒப்பந்தமும் அதனைச் செய்து கொள்ளும் மணமக்களோடு தொடர்புடையதாக இருப்பதோடு அவர்களை சார்ந்துள்ள சமுதாயத்தையும் அது சார்ந்ததாகவே இருக்கிறது. ஆகவே, மணமக்களின் உரிமையைக் கண்ணும் கருத்துமாய்ப் பேண வேண்டுமென்று கூறும் பெரியார் அது பொது சமுதாயத்தின் முன்னேற்றம் பற்றிய நலந்தீங்குகளோடும் தொடர்புடையதாக இருப்பதால் அந்த அளவில் பொது நல நோக்கில் பெரியார் அது பற்றிக் கருத்துக் கூறவும், அதை திருத்தி சரி செய்யவும் வேண்டிய கடப்பாடுடையவரானார். ஆகவே, திருமண முறையில் அறிவும் வளர்ச்சியும் தேவை என்கிறார் பெரியார்.

வாழ்க்கை யொப்பந்த முறையின் மேன்மையைப் பெரியாரின் வாய்மொழி வாயிலாகவே கேட்போமா?

வைதீகத் திருமணத்திற்கும், பகுத்தறிவு திருமணத்திற்கும் உள்ள பேதம் என்னவென்றால் வைதீகத் திருமணம் என்றால் வேதத்தின் கருத்துப்படியானது. வேதமுறை என்றால் இந்து மதமுறை; வேதம் என்பது பார்ப்பனருக்கு உரிமையானது. மற்றவர் பார்ப்பனர் அல்லாதார் தொடக்கூடாது; படிக்கக்கூடாது; கேட்கக்கூடாது; பார்க்கவும் கூடாது என்றிருக்கும் போது வைதீக் திருமணத்தை தமிழன் செய்து கொள்கிறானென்றால் அவன் தனது மான மற்ற தன்மையையும், இழிவையும் நிலை நிறுத்திக் கொள்கிறான் என்பதே பொருளாகும். வேதத்திற்கும், மதத்திற்கும், கடவுளுக்கும், சாதிக்கும் இங்கு இடமில்லை. இம்முறையில் அவைகளைக் குறிக்கும் எந்தக் காரியங்களும் நடைபெறுவது கிடையாது. பகுத்தறிவோடு, அவசியத்தைக் கருதி தேவையானவைகளைக் கொண்டு செய்யப்படுவதே இம்முறையாகும்.

மற்றும் பார்ப்பனப் புரோகிதர்கள் தம்மை மேன்மக்கள் என்றும் பிரம்மாவின் முகத்தில் தோன்றியவர்கள் என்றும் கூறிக் கொள்வதோடு மற்றவர்களாகிய நம்மையெல்லாம் கீழ் மக்கள் (சூத்திரர்கள்) என்றும் பிரம்மாவின் பாதத்தில் தோன்றியவர்கள் என்றும் கூறுவதோடு திருமணம் முதலியவற்றைச் செய்விக்கத் தகுதியும் உரிமையும் படைத்தவர்கள் தாம் மட்டுமே என்றும் கூறி அவற்றை நிலை நாட்டவும் தொடர்ந்து வாழையடி வாழையாக முயன்று வருகின்றவர்களாதலால் அவர்களை வைத்துத் திருமணம் மானமற்ற தன்மையாகும் என்பதால் பார்ப்பனரை விலக்கிச் செய்யப்படும் முறையைச் சுயமரியாதைத் திருமண முறை என்கிறோம்.

எனவே, வாழ்க்கையொப்பந்த முறையில் உள்ள இருவகைப்பட்ட சிறப்புகளை நாம் நன்கு உள்ளத்தில் பதித்துக் கொள்வது நல்லது. ஒன்று இம்முறை நம் மானம், மதிப்பு போன்றவற்றைக் காத்து நம்மை தன்மானம் உள்ள மனிதர்களாக வாழ அழுக்குகளை களைந்து தேவையற்றது உண்மையற்றது ஆகியவற்றினின்றும் விடுபட்டு அறிவையும் தேவையையும் அடிப்படையாக்கொண்டு வாழும் பகுத்திறிவுள்ள முழு மனிதனாக வாழ வைக்கிறது.

வைதீகப் புராண முறைத் திருமணத்தில் மதம், சாதி, குலம், கோத்திரம் போன்ற பொருத்தங்கள் பார்க்கிறார்கள். ஆனால், மணமக்களின் உடல் பொருத்தமோ உளப் பொருத்தமோ சிறிதும் பார்க்கப் படுவதில்லை. ‘’குலத்தில் ஒரு குரங்கை கொள்ளு’’ ‘’கோத்திர மறிந்து பெண்ணைக் கொடு’’ என்னும் பழமொழிகளால் திருமணத்தில் குலம், கோத்திரம் போன்றவற்றுக்கிருந்த பிடிப்பு புலனாகும். இப்போக்கினால் திருமணவாழ்வில் பெண்ணுக்கேற்ற மாப்பிள்ளையோ, மாப்பிள்ளைக்கேற்ற பெண்ணோ அமையாமல் போயின. அதனால், நாயும் பூனையும் போன்ற சோடிகள் சேர்க்கப்பட்டன. இதனால் கெட்டலைவோர் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பார்கள். இதில் பெரியார் செய்த சீர்திருத்தத்தால் மேற்கூறியவை பின்னுக்குத் தள்ளப்பட்டு மணமக்களின் பொருத்தம் முன்னுக்கு கொண்டு வரப்பட்டது. இறுதியில் மணமக்களின் விருப்பம், பொருத்தம் ஆகியவை மட்டுமே பொருட்படுத்தப்பட வேண்டியவை என்னும் நிலை ஏற்படுவதாயிற்று.

ஆகவே, சுயமரியாதை முறைத் திருமணத்தால் விளையும் முதன்மையான சீர் திருத்தம் பெண்நலம் பேணுவது என்பதை உணரவேண்டும்.

பன்னெடுங் காலமாகத் தமிழ் நாட்டிலும் பெண்ணினம் அனுபவித்து வந்த மற்றொரு பொல்லாங்கு ஓர் ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணந்து கொள்ளலாம் என்பது. இதற்கு கடவுள்களிலிருந்து வேதபுராண சாத்திர சம்பிரதாய, இதிகாசங்கள் வரை ஆதாரங்கள் நிரம்ப உண்டு. சுயமரியாதை இயக்கம் தோன்றி வலுப்பெற்ற பிறகு இப்பொல்லாங்கு நீங்கியது, என்பதோடு ஒருவன் ஒருத்தி என்னும் வழக்கம் பெருமையுடையதாக கருதப்பட்டு அது சட்டப் படியானதொரு முறையாகவும் ஆயிற்று.


.....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -13

Tuesday, 23 March, 2010

மனித உயிர்களோடு விளையாடும் காலாவதியான மருந்துகள்

.

சென்னை : காலாவதியான மாத்திரைகளை விற்று வந்த மோசடி கும்பல் போலீசில் சிக்கியது. மக்களின் உயிரோடு விளையாடும் இந்த கும்பலை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்துள்ளது. காலாவதியான மாத்திரைகளை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் இன்று கோட்டையில் ஆலோசனை நடத்துகிறார்கள்.

கம்பெனிகள் தயாரிக்கும் மாத்திரைகளை குறிப்பிட்ட காலம் வரை தான் பயன்படுத்த முடியும். அதன் பிறகு அவை கெட்டுப் போய்விடும். இப்படி கெட்டுப்போன, காலாவதியான மாத்திரைகள் பல கடைகளில் விற்கப்படுவதாக மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு தகவல்கள் வந்தன. இதைத் தொடர்ந்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசாருடன் இணைந்து மருந்து கட்டுப்பாடுத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் காலாவதியான மாத்திரைகள் எப்படி கடைகளுக்கு மீண்டும் விற்பனைக்கு வருகின்றன என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை கொடுங்கையூரில் குப்பைகள் கொட்டும் இடம் உள்ளது. இங்கு கொட்டப்படும் கழிவுகளில் காலாவதியான மருந்துகளும் இருக்கும். இதனை அந்த பகுதியில் வசித்து வரும் ரவி, அவரது மனைவி சுனிதா ராணி ஆகியோர் ஆட்களை வைத்து சேகரித்துள்ளனர். அவற்றை சேகரித்து தருபவர்களுக்கு கிலோவுக்கு ரூ.150 கொடுத்துள்ளனர். இந்தத் தகவல் கிடைத்ததும் போலீசார் அவர்களை விசாரித்தனர். அப்போது சுனிதா ராணி மட்டும் போலீசில் சிக்கினார். ரவி தலைமறைவாகிவிட்டார்.

பிடிபட்ட சுதாராணியிடம் நடத்திய விசாரணையில், குப்பைமேட்டில் கிடக் கும் காலாவதியான மாத்திரைகளை வாங்கி கோயம்பேட்டில் உள்ள மீனா ஹெல்த்கேர் நிறுவனத்துக்கு சொந்தமான கடைகளில் விற்றுவிடுவோம் என்று கூறினார். உடன் கோயம்பேட் டில் சம்பந்தப்பட்ட இடத்தை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட காலாவதியான மருந்துகள் பெட்டி பெட்டியாக சிக்கின. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காலாவதி மருந்து களை போலீசார் கைப்பற்றி னர். உடன் குடோனில் வேலை பார்த்த கிருபாகரன்(30), ராமகிருஷ்ணன்(35), விஜயகுமார்(34), கோவிந்தன்(29), ஜெகதாம்மா(30), தர்மராஜன்(50) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். சுனிதா ராணியையும் கைது செய்தனர்.

குடோன் உரிமையாளர் மீனாட்சி சுந்தரம் தலைமறைவாகிவிட்டார். இவர் சென்னை மாவட்ட மருந்து விற்பனையாளர்கள் சங்க தலைவராக உள்ளார். இது தொடர்பாக எழும்பூர் சஞ்சய் குமார், முத்தமிழ் நகர் ரவி, சூளைமேடு வெங்கடேசன், பாஸ்கரன், பிரதீப், ஜோட்டியா, சேகர் உள்பட 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குப்பைமேடு மட்டுமல்லாமல் மருந்துகளை விற்கும் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்டுகளை, இந்த மோசடி கும்பல் தங்கள் கையில் போட்டுக்கொண்டு, காலாவதியான மாத்திரைகளை குறைந்த விலை கொடுத்து வாங்கியுள்ளது. பின்னர் அவற்றை கோயம்பேடு குடோனுக்கு கொண்டு சென்று, கெமிக்கல் மூலமாக அதில் உள்ள தாயாரிப்பு தேதி, காலாவதி தேதிகளை அழித்துவிட்டு, புதிதாக வேறு தேதிகளை போட்டுள்ளனர். பின்னர் இந்த மாத்திரைகளை கம்பெனிகள் தயாரித்து தந்த மாத்திரைகளைப் போல நாடுமுழுவதும் விற்று பல கோடி ரூபாய் சம்பாதித்துள்ளனர்.

காலாவதி மருந்துகள் பிடிபட்டது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜிடம் கேட்ட போது, ‘‘உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் காலாவதியான மாத்திரைகளை விற்கும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. காலாவதி மருந்துகளை விற்பது நிரூபிக்கப்பட்டால், ரூ. 10 லட்சம் அபராதமும், ஆயுள் தண்டனையும் கிடைக்கும். காலாவதியான மருந்துகளை எப்படி கண்டுபிடிப்பது, பொது மக்களுக்கு எப்படி விழிப்புணர்வை ஏற்படுத்துவது, இப்போதுள்ள பிரச்னையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அதிகாரிகளுடன் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடக்கிறது. காலாவதி மருந்து குறித்து தகவல் தர ஹெல்ப்லைன் அமைப்பது குறித்தும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

இது மனிதாபிமானம்
காலாவதி மருந்து விற்ற மீனாட்சி சுந்தரம் தலைமறைவாகிவிட்டார். மேலும் சிலர் சிக்குவார்கள் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்நிலையில் போலீசார் கோயம்பேடு குடோனில் காலாவதி மருந்துகளை பிடித்த தகவல் கிடைத்ததும், அது என்ன மருந்து என்பதை தெரிந்து கொண்ட திருவாரூர் மருந்து வியாபாரிகள் அவற்றை மக்களுக்கு விற்பதை நிறுத்திவிட்டனர். இந்த மருந்துகளை சாப்பிட்டு மக்கள் பாதிப்படைய கூடாது என்று இந்த நடவடிக்கையை அவர்கள் எடுத்துள்ளனர்.

......தினகரன் 22.03.2010

கூடுதல் தகவல்....
காலாவதியான மருந்து விற்பனையாளர்களை தண்டிக்க சட்டம் அமல்.....ஆயுள் தண்டனை,

தப்பிச்சென்ற காலாவதியான மருந்து விற்பனையாளர்களை பிடிக்க 5 தனிப்படை.....நீதிமன்றம் முன்ஜாமின் மறுப்பு (சென்னை செசன்ஸ் நீதிமன்றம்)

குறிப்பாக தாய்மார்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்காக அடிக்கடி மருந்துகள் வாங்குபவர்கள் அவர்கள் தான். எந்த கேள்வியும் கேட்காமல்.

போலி மருந்து, காலாவதியான மருந்துகள் பற்றி உடனடியான புகாருக்கு தொலைபேசி 044 24338421.

முக்கிய குறிப்பு எந்த மருந்து வாங்கினாலும் ரசீது வாங்க மறக்காதீர். இல்லையென்றால் மருந்தே வாங்காதீர். அவர்கள் அதற்குரிய உள்ளூர் வரிகளை ரசீது கொடுக்கமலேயே வாங்கி விடுகின்றனர். ஆனால் ரசீது கொடுப்பதில்லை. நாமும் கேட்பதில்லை. படித்தவர்கள் மத்தியிலேயே இந்த விழிப்புணர்வு இல்லை. 

(பயந்தது போல் நடந்துவிட்டது எத்தனை பேர்களின் உயிரைக்கொன்றார்களோ? எவ்வளவு காலம்....இதை தொடர்ந்திருப்பார்கள்....இந்த மனிதன் சென்னை மாவட்ட மருந்து விறபனையாளர் சங்கத் தலைவர் வேறு...கொஞ்சம் அசந்தால் நம்ம உயிர் நம்முடையது இல்லை)

Sunday, 14 March, 2010

எனக்கு ஷூ தைக்கவும் தெரியும்.........
ஆதிக்க சக்திகள் ஒரு சமூகத்தை ஆக்கிரமித்து வருவதும் அதன் பொருட்டு ஒடுக்கப்பட்ட சமூகத்தை எழுந்திருக்கவிடாமல் செய்வது எனபது காலங்காலமாக தொடர்ந்து வருவது தான். இது ஏதோ இந்தியாவில் மட்டும் தொடர்வது அல்ல அனைத்து நாடுகளிலும் வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு காரணங்களை வைத்து மனிதனை மனிதனே தாழ்த்துகின்ற நிலை தொடர்ந்து வருவது தான். சாதி வெறிகளாகட்டும், மதவெறிகளாகவும், இனவெறிகளாகவும் இந்தியாவில் தொடர்வது போல பிறநாடுகளில் மதவெறிகளாகவும், நிறவெறிகளாகவும் தொடர்கின்றன. அதற்காக பல முனை போராட்டங்களையும், மகப்பெரிய யுத்தங்களின் மீலமும் அவர்கள் எதிர்த்து வருவதை நாம் காணாமலில்லை.

இப்படிப்பட்ட ஆதிக்க வெறியினரிடமிருந்து இன்று ஒரு ஒபமா வெற்றிபெற்றிருந்தாலும். இந்த வெற்றி அவ்வளவு சுலபமானதல்ல என்பது பெரும்பான்மையான மக்கள் உணராமல் இல்லை. ஆதிக்க வெறி கொண்டவர்கள் ஏன் இன்றளவிலும் தன் சகமனிதனையை தாழ்த்த எண்ணம் கொண்டிருப்பதும், அது இன்றளவிலும் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட நிலையிலும் பலத்த எதிர்ப்புகிடையே தொடர்வதும் விந்தையானதுதான்.

முடிவில் அழியப்போவது என்னமோ ஆதிக்க வெறிகொண்டவர்கள் தான். மண்ணை கவ்வுவதும், மண்ணோடு மண்ணாவதும் அந்த ஆதிக்க வெறி கொண்ட மாக்கள் தான் என்பதை நல்லோர்  அனைவரும் அறிவர். 

அமெரிக்காவின் அதிபராக இருந்த ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றதை பொறுக்கமுடியாத ஆதிக்க மனப்பான்மை கொண்ட நிறவெறியனர் அவரை பாரளுமன்றத்திலேயே அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கருவிக்கொண்டிருந்தனர். ஒரு ஆதிக்க மனப்பான்மை கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், ஆப்ரகாம் லிங்கனை அனைவர் முன்னிலையிலும் அவமானப்படுத்த வேண்டும்  என்ற எண்ணத்தோடு கூறியது இதுதான்...

''மிஸ்டர் ஆப்ரகாம் லிங்கன் எனது காலில் இருக்கும் ஷூ வைப்பாருங்கள் இது உங்கள் அப்பா தைத்து கொடுத்தது தான்......''

அதற்கு சிறிதும் லட்சியம் செய்யாத ஆப்ரகாம் லிங்கன்...

''அதற்கென்ன அந்த ஷீ கிழிந்து விட்டால் சொல்லுங்கள் நான் இன்னொன்றை புதிதாக நன்றாக தைத்து தருகின்றேன்...''

என்று கூறிய லிங்கன்...

''எனக்கும் ஷீ தைக்கவும் தெரியும்...''

.என்று முன்னே நடந்தார்... 

இரண்டடி நடந்து சென்று பின் திரும்பிய லிங்கன்..

''எனக்கு நாடாளவும் தெரியும்.....''

அந்த பதிலை எதிர்பார்க்காதா நிறவெறிக்கொண்ட மனிதன் கூனிக்குறுகினான் அம்மன்றத்தில் அனைவரின் முன்னிலையிலும்.....

... பேராசிரியர்.சுப வீ ரப்பாண்டியன்