Pages

Wednesday 24 March, 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-12






21. காப்பு அவிழ்த்தல்
அழல் ஓம்பல்!!

வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி,
சனி பாம்பு இரண்டும் உடனே
ஆசு அறு நல்ல, அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.



என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க
எருது ஏறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி, வந்து என்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதோடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய் நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

-சம்பந்தர் கோள் அறு பதிகம்.
(குறிப்பு ; இப்பதிகத்தின் பதினொரு பாடல்களையும் ஓதுவது சிறப்பாகும்.)

(22) மணமக்கள் மாறி அமர்தல்;

ஏகம்பத்துறை எந்தாய்! போற்றி!
பாகம் பெண்ணுருவானாய்! போற்றி!
‘மஞ்சா! போற்றி! மணாளா போற்றி!
பஞ்சேர் அடியாள் பங்கா! போற்றி!

-திருவாசகம்-போற்றித் திரு அகவல்

23. (ii)

அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க!
கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க!
அருந்தவர்க்கு அருளும் ஆதி வாழ்க!
அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க!
நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன் வாழ்க!
சூழ் இரும் துன்பம் துடைப்போன் வாழ்க!
எய்தினார்க்கு ஆர் அமுது அளிப்போன் வாழ்க!
கூர் இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க!
பேரமைத் தோளி காதலன் வாழ்க!

-திருவாசகம்-திருவண்டப்பகுதி.


23.(ii) திருநீறு இடுதல்;


காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு,
மாணந்தகைவது நீறு, மதியைத் தருவது நீறு,
சேணந் நருவது நீறு, திரு ஆலவாயன் திருநீறே

-சம்பந்தர்
குறிப்பு; திருநீற்றுப் பதிகத்தின் மற்றப் பாடல்களையும் ஓதலாம்.


24. (கண்ணேறு கழித்தல்) திருமணச் சடங்கு நிறைவேறுதல்;


வாழ்க! அந்தணர், வானவர், ஆன் இனம்;
வீழ்க! தண்புகல்; வேந்தனும் ஓங்குக!
ஆழ்க! தீயது; எல்லாம் அரன் நாமமே
சூழ்க! வையகமும் துயர் தீர்க்கவே’

-சம்பந்தர்


ஓங்கி உலகளந்த உத்தமன். பேர்பாடி...............
-ஆண்டாள் – திருப்பாவை.


தமிழ் திருமண மந்திரங்கள் முற்றிற்று.


....தொடர்வது சுயமரியாதை திருமணத்தின் சில பகுதிகள், தமிழ் திருமண சுருக்கம் மற்றும் மணிவிழா, பெயர் சூட்டும் விழா மந்திரங்கள்.....

சீர்திருத்தம்


சீர்திருத்த திருமணம் பற்றி பெரியார் கூறுபவையாக பேராசிரியர் ம. நன்னன்....

வழக்கமாக நடைபெறும் திருமணங்கள் எனப்படுவனவற்றுள் மணமக்களின் பெற்றோர்கள் முதலியோர் தங்களுக்குள் செய்து கொள்ளும் ஒரு ஏற்பாடாக அவை இருக்கின்றனவே ஒழிய மணமக்கள் தங்களுக்குள் செய்து கொள்ளும் உடன்பாடாகவோ ஒப்பந்த ஏற்பாடாகவோ ஆவை இருப்பதில்லை. சரியாக சொல்வதானால் மணமகளும் மணமகனுமாகிய அவர்கள் இருவருக்கும் அந்த ஏற்பாட்டில் எந்த தொடர்பும் இருப்பதேயில்லை.

இது எவ்வளவு பெரிய தவறு? அவர் வாழ்க்கை யொப்பந்தம் செய்து கொள்கிறார்களோ அவர்களைக் கலக்காமலேயே பெரும்பாலான திருமணங்கள் நடைபெற்று வந்தன.

உண்மையில் திருமணம் என்பது வயது வந்த – அறிவு வந்த ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் சம்மந்தப்பட்ட காரியமே ஒழிய மற்ற யாருக்கும் – வேறு எந்தக் கட்டுப்பாட்டுக்கும் சம்பந்தப்பட்டதல்ல.

என்பதோடு திருமணத்தின் அடிப்படையே, அதை நடத்திக் கொடுக்க யாரும் தேவையில்லை என்பதுதான். மணமக்கள் தாங்களாகவே முடித்துக் கொள்ள வேண்டிய காரியம். பிற்கால வாழ்க்கையை இருவரும் சினேகிதர்களாய் இருந்து அன்புடனும் , ஒத்துரிமையுடனும் ஒருவருக்கொருவர் பழகி கூட்டு வாழ்க்கை ஏற்படுத்திக் கொள்ளத் தொடங்கும் இந்தக் காரியம் மணமக்களுடைய சொந்தக் காரியம் என்பது எங்கள் கொள்கை. இதில் மற்றவர்களது பிரவேசமே இருக்க கூடாது என்பது எங்களது அடுத்த கொள்கை.என்று கூறி அக்கோட்பாட்டைப் பெரியார் நன்கு வரையறுத்து தெளிவுபடுத்தக் காணலாம்.

திருமணம் தனிப்பட்ட இருவரது தனிப்பட்ட கொள்கையன்றோ? அதில் மற்றவர்கள் தலையீடு இருக்க கூடாது என்னும் பெரியார் அம்முறையில் தலையிட்டு மாறுதலும், சீர்திருத்தமும் செய்வது சரியா என்று எவரேனும் வினாவவும் கூடும். உண்மையில் திருமணம் அதன் விளைவு ஆகியவை தனிப்பட்டவர்களை மட்டுமே சார்ந்தனதாயின் பெரியார் அவைகளை நோக்கியிருக்கவே மாட்டார். ஒவ்வொரு வாழ்க்கை ஒப்பந்தமும் அதனைச் செய்து கொள்ளும் மணமக்களோடு தொடர்புடையதாக இருப்பதோடு அவர்களை சார்ந்துள்ள சமுதாயத்தையும் அது சார்ந்ததாகவே இருக்கிறது. ஆகவே, மணமக்களின் உரிமையைக் கண்ணும் கருத்துமாய்ப் பேண வேண்டுமென்று கூறும் பெரியார் அது பொது சமுதாயத்தின் முன்னேற்றம் பற்றிய நலந்தீங்குகளோடும் தொடர்புடையதாக இருப்பதால் அந்த அளவில் பொது நல நோக்கில் பெரியார் அது பற்றிக் கருத்துக் கூறவும், அதை திருத்தி சரி செய்யவும் வேண்டிய கடப்பாடுடையவரானார். ஆகவே, திருமண முறையில் அறிவும் வளர்ச்சியும் தேவை என்கிறார் பெரியார்.

வாழ்க்கை யொப்பந்த முறையின் மேன்மையைப் பெரியாரின் வாய்மொழி வாயிலாகவே கேட்போமா?

வைதீகத் திருமணத்திற்கும், பகுத்தறிவு திருமணத்திற்கும் உள்ள பேதம் என்னவென்றால் வைதீகத் திருமணம் என்றால் வேதத்தின் கருத்துப்படியானது. வேதமுறை என்றால் இந்து மதமுறை; வேதம் என்பது பார்ப்பனருக்கு உரிமையானது. மற்றவர் பார்ப்பனர் அல்லாதார் தொடக்கூடாது; படிக்கக்கூடாது; கேட்கக்கூடாது; பார்க்கவும் கூடாது என்றிருக்கும் போது வைதீக் திருமணத்தை தமிழன் செய்து கொள்கிறானென்றால் அவன் தனது மான மற்ற தன்மையையும், இழிவையும் நிலை நிறுத்திக் கொள்கிறான் என்பதே பொருளாகும். வேதத்திற்கும், மதத்திற்கும், கடவுளுக்கும், சாதிக்கும் இங்கு இடமில்லை. இம்முறையில் அவைகளைக் குறிக்கும் எந்தக் காரியங்களும் நடைபெறுவது கிடையாது. பகுத்தறிவோடு, அவசியத்தைக் கருதி தேவையானவைகளைக் கொண்டு செய்யப்படுவதே இம்முறையாகும்.

மற்றும் பார்ப்பனப் புரோகிதர்கள் தம்மை மேன்மக்கள் என்றும் பிரம்மாவின் முகத்தில் தோன்றியவர்கள் என்றும் கூறிக் கொள்வதோடு மற்றவர்களாகிய நம்மையெல்லாம் கீழ் மக்கள் (சூத்திரர்கள்) என்றும் பிரம்மாவின் பாதத்தில் தோன்றியவர்கள் என்றும் கூறுவதோடு திருமணம் முதலியவற்றைச் செய்விக்கத் தகுதியும் உரிமையும் படைத்தவர்கள் தாம் மட்டுமே என்றும் கூறி அவற்றை நிலை நாட்டவும் தொடர்ந்து வாழையடி வாழையாக முயன்று வருகின்றவர்களாதலால் அவர்களை வைத்துத் திருமணம் மானமற்ற தன்மையாகும் என்பதால் பார்ப்பனரை விலக்கிச் செய்யப்படும் முறையைச் சுயமரியாதைத் திருமண முறை என்கிறோம்.

எனவே, வாழ்க்கையொப்பந்த முறையில் உள்ள இருவகைப்பட்ட சிறப்புகளை நாம் நன்கு உள்ளத்தில் பதித்துக் கொள்வது நல்லது. ஒன்று இம்முறை நம் மானம், மதிப்பு போன்றவற்றைக் காத்து நம்மை தன்மானம் உள்ள மனிதர்களாக வாழ அழுக்குகளை களைந்து தேவையற்றது உண்மையற்றது ஆகியவற்றினின்றும் விடுபட்டு அறிவையும் தேவையையும் அடிப்படையாக்கொண்டு வாழும் பகுத்திறிவுள்ள முழு மனிதனாக வாழ வைக்கிறது.

வைதீகப் புராண முறைத் திருமணத்தில் மதம், சாதி, குலம், கோத்திரம் போன்ற பொருத்தங்கள் பார்க்கிறார்கள். ஆனால், மணமக்களின் உடல் பொருத்தமோ உளப் பொருத்தமோ சிறிதும் பார்க்கப் படுவதில்லை. ‘’குலத்தில் ஒரு குரங்கை கொள்ளு’’ ‘’கோத்திர மறிந்து பெண்ணைக் கொடு’’ என்னும் பழமொழிகளால் திருமணத்தில் குலம், கோத்திரம் போன்றவற்றுக்கிருந்த பிடிப்பு புலனாகும். இப்போக்கினால் திருமணவாழ்வில் பெண்ணுக்கேற்ற மாப்பிள்ளையோ, மாப்பிள்ளைக்கேற்ற பெண்ணோ அமையாமல் போயின. அதனால், நாயும் பூனையும் போன்ற சோடிகள் சேர்க்கப்பட்டன. இதனால் கெட்டலைவோர் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பார்கள். இதில் பெரியார் செய்த சீர்திருத்தத்தால் மேற்கூறியவை பின்னுக்குத் தள்ளப்பட்டு மணமக்களின் பொருத்தம் முன்னுக்கு கொண்டு வரப்பட்டது. இறுதியில் மணமக்களின் விருப்பம், பொருத்தம் ஆகியவை மட்டுமே பொருட்படுத்தப்பட வேண்டியவை என்னும் நிலை ஏற்படுவதாயிற்று.

ஆகவே, சுயமரியாதை முறைத் திருமணத்தால் விளையும் முதன்மையான சீர் திருத்தம் பெண்நலம் பேணுவது என்பதை உணரவேண்டும்.

பன்னெடுங் காலமாகத் தமிழ் நாட்டிலும் பெண்ணினம் அனுபவித்து வந்த மற்றொரு பொல்லாங்கு ஓர் ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணந்து கொள்ளலாம் என்பது. இதற்கு கடவுள்களிலிருந்து வேதபுராண சாத்திர சம்பிரதாய, இதிகாசங்கள் வரை ஆதாரங்கள் நிரம்ப உண்டு. சுயமரியாதை இயக்கம் தோன்றி வலுப்பெற்ற பிறகு இப்பொல்லாங்கு நீங்கியது, என்பதோடு ஒருவன் ஒருத்தி என்னும் வழக்கம் பெருமையுடையதாக கருதப்பட்டு அது சட்டப் படியானதொரு முறையாகவும் ஆயிற்று.


.....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -13

No comments: