Pages

Tuesday, 30 March, 2010

பெண்ணுரிமைச் சட்டங்கள்-1

மக்களுக்கு தேவையான சட்டங்கள் பற்றி மக்கள் பலர் அறிந்து கொள்ளாமல் இருப்பதால் பலர் அறியாமையினால் பல இன்னல்களுக்கு ஆளாவதும் தொடர்வதும் வாடிக்கையாகி உள்ளதை நாம் அறியாமல் இல்லை. பெண்களுக்கு இந்த சமூகத்தில் என்னென்ன பாதுகாப்புகள் உள்ளது என்பது பெண்கள் பலருக்கும் தெரிவதில்லை. சட்டம் படித்தவர்களுக்கு மட்டும் தான் எல்லாமும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. சட்டங்கள் முதன் முதலில் ஒரு தனி மனிதனால் உருவாக்கப்பட்டது தான். காலப்போக்கில் அந்தந்த நிலப்பரப்பில் வாழும் குழுக்களால் சீர்செய்யப்பட்டு சட்டமாக உருவாக்கப்பட்டது. அதன் படியே சட்டக்கல்வியும் மனித சமூகத்தால் சமூகத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்டது தான்.

அனைவரும் நமக்கு என்னென்ன சட்டங்கள் நமக்கு பாதுகாப்பாக உள்ளன் என்பதை அறிந்தாலே நமக்கு ஒரு கூடுதல் பலம் கிடைத்த மாதிரியான உணர்வு ஏற்படும். நம்மை எதிர்கொள்கின்றவர்களும் சிறிது அச்சத்துடனே எதிர்கொள்வர். ஏன் காவல் நிலையங்களை அணுகுவதற்கு கூட சில அத்தியாவச சட்டங்கள் தெரிந்திருக்குமேயானல் அவை நமக்கு கூடுதல் பலம். (பலருக்கு காவல் நிலையத்தில் எப்படி புகார் மனு எழுத வேண்டும், என்பதெல்லாம் தெரியாது, இது எதிராளிக்கு சாதகமாக போய்விடும்) 

சட்டங்கள் நமக்கு பாதுகாப்பு அரண்களாக இருக்கின்றன என்பதை அறியாமலே பலர் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அப்படி இன்னல்களுக்கு ஆளாகிறவர்கள் கூட சட்டங்களை அறியாததினால் நமக்கு விதித்தது அவ்வளவு தான் என்று விதியின் பேரில் வாழ்க்கை நடத்துவபவர்களும் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். 

மனிதன் எப்போழுதும் நிம்மதியான வாழ்க்கை வாழவே ஆசைப்படுவான். ஒரு சிறு இடர்பாடுகளை கூட மனித மனம் விரும்புவதில்லை. ஆனால் அது சாத்தியமில்லை எந்த கட்டத்திலும் அவனை இடர்பாடுகள்  தொடர்ந்து சந்திக்க முயற்சி செய்து கொண்டே இருக்கும். அப்பொழுது நமக்கு இந்த சட்ட அறிவு சமயத்தில் கை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு வழக்குரைஞரை சந்திக்கும் பொழுது கூட நமக்கு சட்டங்கள் தெரிந்திருக்கவேண்டியது அவசியமாகிறது. தவிர ஒரு நபரின், சாமான்யரின், நடுநிலையான, விருப்பு வெறுப்பற்ற (பக்க சார்பற்ற) கருத்துக்கள், பேச்சுக்களே சட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளதை கண்டு நம்மை  நாமே உணர்ந்து கொள்ளலாம், நம்மை இன்னும் மேன்மை படுத்திக்கொள்ளலாம்.

தவிர சட்டங்கள் மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவே வகுக்கப்பட்டுள்ளன ஆகையால் அவற்றை தெரிந்து கொள்வதில் நமக்கு எல்லா வகையிலும் பயனளிக்கும் என்ற நோக்கோடு இந்த பெண்களுக்கான சட்டத் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. பெண்கள் சமூகத்தில் அதிகம் பாதிக்கப்படுவர்கள் என்பது நாம் அறியாமலில்லை, பெண் கேலி வதையிலிருந்து (ஈவ் டீஸ்), திருமணம், மாமியார், மாமானார், மருமகள், கணவன், மாமனார், நாத்தனார்...போன்றவர்களால் ஏற்படும் இன்னல்கள், வரதட்சணையால் ஏற்படும் கொடுமைகள், ....அதனால் வெடிக்கும் ஸ்டவ்கள்...தற்கொலைகள், பாலியல் கொடுமைகள்...இன்னும் சமூகத்தில் இவையெல்லாம் மலிவாகத் தொடர்வது தான்.


ஆணுக்கும் இது தேவையான ஒன்று தான். பெண் என்ற பாலினத்தோடு ஆணும் சம்பந்தப்பட்டிருப்பதால், நம் தந்தை ஆண் தானே.  நம் உடன் பிறந்த  சகோதரன் ஆண் தானே. பெண் பாதிக்கப்படும்பொழுது பல நேரங்களில் ஆண் பாலினமான தந்தைக்கே (உடன்பிறப்புக்கும்) பல விஷயங்கள் தெரியாமல் திண்டாடுவதையும் கண்டிருக்கிறோம். ''வேண்டாம்மா விட்டு விடு நமக்கேன் வம்பு'' என்று  வலிய வருகின்ற இன்னல்களையும் தாங்கி கொண்டு செல்கின்ற அப்பாக்களையும், உடன் பிறப்புக்களையும் காணமலில்லை. 

கணவனும் ஆண்தான் அவரும் இதை போன்றதோரு நிலையை சந்திக்கின்ற வாய்ப்பினை பெற்றிருப்பார். மனைவி வேலை பார்க்கின்ற அலுலகங்களில் உயர் அதிகாரிகளால் ஏற்படும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் அனைத்தையும் தெரிந்தும் வாழ்க்கைச் சக்கரம் சுழல்வதற்காக பொறுத்துக் கொள்ளச் சொல்லுகின்ற கணவன்மார்களும் உண்டு. ஆகையால் இது அனைவருக்கும் பொதுவானதொரு சட்டத்தொடர் தான். இப்படி இன்னல்கள் தொடர்வதால் பெண்கள் இனி பொறுத்து கொள்ளத்தேவையில்லை ''இதோ இருக்கிறது சட்டம்''  ''துணிந்து எழுங்கள்'' என்று சொல்லுவது தான் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள். இந்திய பெண்ணுரிமைச்சட்டங்கள். அதை அறிந்து கொள்வதில் பெருமை கொள்வோம்......

குழந்தை திருமணத் தடைச் சட்டம்

ஒரு குழந்தை எனபது என்றால் 18 வயது முடிவடையாத ஒரு பெண்ணைக் குறிக்கும். திருமணம் செய்து கொள்ளும் இரு தரப்பினரில் ஒருவர் குழந்தையாக இருந்தால் அதாவது பெண் என்றால் 18 வயது முடிவடையாதவராக இருந்தால், அது குழந்தைத் திருமணம் என்று பொருள்படும்.


ஆணுக்கென்ன தண்டனை?

18 வயதிற்கு மேற்பட்டு 21 வயதிற்குட்பட்ட ஒர் ஆண், குழந்தைத் திருமணம் செய்து கொண்டால், அவருக்குப் பதினைந்து நாட்கள் வரை நீட்டிக்கக் கூடிய வெறுங்காவல் தண்டனையோ அல்லது ஆயிரம் ரூபாய் நீட்டிக்கக் கூடிய அபராதமோ அல்லது இரண்டையுமோ நீதிமன்றம் தண்டனையாக விதித்தாக வேண்டும்.

21 வயதிற்கு மேற்பட்ட ஒர் ஆண் குழந்தைத் திருமணம் செய்து கொண்டால் அவருக்கு 3 மாதம் வரை நீட்டிக்கலாகும் வெறுங்காவல் தண்டணையும் மற்றும் அபராதமும் வித்தித்உ தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

குழந்தைத் திருமணத்தை நடத்தி வைப்பவர்களுக்கும் தண்டனை உண்டு. குழந்தைத் திருமணத்தை நடத்துபவருக்கும், செயல்படுத்துவபவருக்கும், இயக்குபவருக்கும் தண்டனை உண்டு. 3 மாதங்கள் வரை நீட்டிக்கலாகும் வெறுங்காவல் தண்டனையும், மற்றும் அபராதமும் விதித்து தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

குழந்தைத் திருமணம் அல்ல என்று தான் நம்புவதற்குக் காரணம் இருந்தது, என்று மெய்ப்பித்தால் தான், இந்த தண்டனையிலிருந்து தப்ப முடியும்.

இளையர் ஒருவர் குழந்தைத் திருமணம் செய்து கொண்டால், அந்த இளையரின் பெற்றோர்களோ, அல்லது சட்டப்படியோ, அல்லது சட்டத்துக்கு முரணாகவோ, அந்த இளையரை பொறுப்பில் வைத்திருக்கும் காப்பாளரோ, அந்த செயலில் ஈடுபட்டிருந்தாலோ, அல்லது அத்தகைய திருமணம் நடப்பத்ற்கு அனுமதித்திருந்தாலோ அல்லது அசட்டை காரணமாக திருமணம் நடப்பதை தடுக்க தவறியிருந்தாலோ, அந்த நபர் 3 மாதங்கள் வரை நீட்டிக்கலாகும் வெறுங்காவல் தண்டனையும் மற்றும் அபராதமும் விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

ஆனால் பெண் எவருக்கும் சிறைத்ண்டனை விதிக்கப்படக்கூடாது. இந்த சட்டப்பிரிவின் நோக்கங்களைப் பொறுத்தமட்டில், ஒரு இளையர் குழந்தை திருமணம் செய்து கொண்டால், அந்த இளையரை (மைனர்) பொறுப்பில் வைத்திருக்கும் நபர் அதற்கு மாறான நிலை மெய்ப்பிக்கப்படும் வரை, தம் அசடைட காரணமாக, திருமணம் நடைபெறுவதைத் தடுக்கத் தவறிவிட்டார் என்றுதான் அனுமானிக்கவேண்டும்.

குழந்தைத் திருமணச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் பிடி ஆணையின்றி கைது செய்வதற்குரிய குற்றங்களாகவே கருதப்பட்டாக வேண்டும்.

சட்ட விளக்கம்; 1973 ஆம் ஆண்டின்  குற்ற விசாரணை முறைச் சட்டப்படி, அந்தச் சட்டத்தின் 42 வது பிரிவு மற்றும் பிடி ஆணையின்றி கைது செய்தல் போன்றவைகளைத் தவிர்த்து, இதர பொருள்களின் நோக்கங்களுக்காகவும், மற்றும் அந்த  குற்றங்களை புலன் விசாரணை செய்வதற்கும், பிடி ஆணையின்றி (வித்தவுட் வாரண்ட்) கைது செய்வதற்குரிய குற்றங்களாகவே கருதப்பட்டாக வேண்டும்.

நீதிமன்ற ஆள்வரை (ஜூரிக்ஸ்டிக்சன்)

பெருநகர நடுவர் நீதிமன்றம் அல்லது நீதித்துறை முதல் வகுப்பு நடுவர் நீதிமன்றம், ஆகியவைதாம் குழந்தைத் திருமணச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் எதனையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும், விசாரணை செய்யவும் அதிகாரம் பெற்றவை அகும்.

எந்த நீதிமன்றமும், குழந்தை திருமணச் சட்டத்தில் குறிப்பிட்ட குற்றம் எதுவும், அந்தக் குற்றம் புரியப்பட்ட நாளிலிருந்து ஒராண்டு முடிந்த பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாகாது.

 குழந்தைத் திருமணம் நடக்க இருப்பதைத் தடை செய்ய வழி என்ன?
குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின் பிரிவுகளுக்குப் புறம்பாக, குழந்தைத் திருமடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அல்லது நடைபெற உள்ளது., என்பதை ஒரு நீதிமன்றம் ஒரு முறையீட்டின் பேரிலோ, அல்லது அதன்முன் வைக்கப்பட்ட தகவல் அடிப்படையிலோ, அதற்கு திருப்தியளிக்கும் வகையில் முடிவிற்கு வருமானால், அந்த குழந்தைத் திருமணத்தைத் தடை செய்து ஏவுகட்டளை பிறப்பிக்க வேண்டும்.

குழந்தைத் திருமணத்தை தடை செய்து ஏவுகட்டளை  (இன்ஜங்ஷன்) பிறப்பிக்கும் முன், எதிர்தரப்பினருக்கு அறிவிப்புக் கொடுத்து, ஏவுகட்டளை ஏன் பிறப்பிக்க கூடாது, என்பதற்கு தகுந்த காரணம் காட்ட சந்தர்ப்பம் ஒன்று அளிக்கப்பட்டாக வேண்டும்.


அந்த ஏவுகட்டளை உத்தரவை, நீதிமன்றம், தானாகவோ, அல்லது பாதிக்கப்பட்ட நபரின் முறையீட்டின்பேரிலோ, நீக்கி விடலாம், அல்லது மாற்றலாம்.


குழந்தைத் திருமணத்தைத் தடை செய்து ஏவுகட்டளைப் பிறப்பிக்கப்பட்ட நபர், அந்த நீதிமன்ற உத்தரவிற்கு கீழ்ப்படியாது செயல்பட்டால், 3 மாதங்கள் வரை நீட்டிக்கலாகும் சிறைத் தண்டனை, அல்லது ஆயிரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதம், அல்லது இரண்டாலும் விதிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார். ஆனால் பெண் எவருக்கும் தண்டனை விதித்துத் தண்டிக்கப்படலாகாது.


குழந்தைத் திருமணத் தடைச்சட்டத்தில் உள்ள குற்றங்களுக்கான தண்டனையில் குற்றம் செய்தவர் பெண் என்றால், அவருக்கு தனிச் சலுகை உள்ளது.

குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் பிரிவு (3) மற்றும் (4)ன் கீழ் குழந்தைத் திருமணம் செய்து கொள்ளும் 18 வயதுக்கு மற்றும் 21 வயதுக்கு மற்றும் மேற்பட்ட ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கப்படுகிறது.


குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் பிரிவு (6) கீழ், இளையர் ஒருவருக்கு குழந்தைத் திருமணம் செய்பவர், அவர் பெற்றோராக இருந்தாலும், பாதுகாவலராக இருந்தாலும், தண்டனை விதிக்கப்படுகிறது. அந்தத் தண்டையில், மூன்று மாதங்கள் வரை நீட்டிக்கும் சிறைத் தண்டணையும் உண்டு. ஆனால், அந்தப் பிரிவில், குற்றம் புரிந்த ஒரு பெண்ணை, சிறைத் தணைடனை விதித்துத் தண்டிக்க முடியாது.

குழந்தைத்திருமணத் தடைச்சட்டம் பிரிவு (12)ன்  கீழ், நிதிமன்றம் பிறப்பித்த ஏவுகட்டளைக்குப் பணியாமல் செயல்பட்டவருக்கு, 3 மாதங்கள் வரை நீட்டிக்கலாகும் சிறைத் தடண்டணையும் விதிக்கப்படலாம். ஆனால், அத்தகைய குற்றம் புரிந்தவர் பெண் என்றால், அவருக்குச் சிறைத் தண்டணை விதித்து தீர்ப்பளிக்க முடியாது.


18 வயது நிறைவடையாத பெண் இளவர் (மைனர்) ஆவார்.

18 வயது பூர்த்தியடையாத பெண் இளவரையோ, அல்லது அவருடைய சொத்தையோ, அல்லது இரண்டையுமோ, தன் பாதுகாப்பில் கொண்டிருப்பவர் பாதுகாவலர் ஆவார். பாதுகாவலர்களில், இயல்புப் பாதுகாவலர், இளையவருடைய தாயோ, தந்தையோ எழுதி வைத்த உயில் சாசனப்படி நியமிக்கப்பட்டவர், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர், சட்டப்படி அதிகாரம் கொண்ட எந்த நபரும், பாதுகாவலர் என்ற சொற்றொடரில் அடங்குவர். 

....தொடரும்....பெண்ணுரிமைச் சட்டங்கள்-2