Pages

Thursday, 18 February, 2010

நல்லவரிடம் தோற்பதும் பெருமை தானே!சில வருடங்களுக்கு முன் என்னுடைய அலுவலகத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக சிறப்பு விருந்தினராக மறைந்த இலக்கியச் செல்வரும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான வலம்புரி ஜான் வருகை புரிந்து எங்களது கருத்தரங்கில் உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறிய நிகழ்வுதான் பின்வருவன-;
நம் இந்தியக் குடியரசுத் தலைவரான அப்துகலாம் (அன்றையக் காலகட்டத்தில் அவர்தான் குடியரசுத்தலைவர்) அடிக்கடி கூறும் கீதையின் வாசகமான 

'' எது நடந்ததோ! அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ? அது நன்றாகவே நடக்கிறது! எது நடக்கவிருக்கிறதோ? அதுவும் நன்றாகவே நடக்கும்!'' 

என்று அடிக்கடி கூறிவருகின்றாரே! இதற்கு என்ன சொல்கிறார்! என்ற நோக்கத்தில் 


''மும்பையில் சில நாட்களுக்கு முன் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததே!, அதில் பலர் மாண்டனரே! அதுவும் நன்றாகவே நடந்தது! என்று எடுத்துக்கொள்ளலாமா? உங்கள் கருத்துப்படி'' 

''என்று நம் உயர்திரு குடியரசுத் தலைவருக்கு தமிழில் கடிதம் எழுதினேன்! அவர் கண்ணில் இது படுமா? அதற்கு பதில் எழுதுவரா? அவருக்கு நேரமிருக்குமா? என்ற எண்ணத்திலும், அதிக எதிர்பார்ப்பில்லாமலும் இருந்தேன். ஆனால் இரண்டு நாள் கழித்து என் இல்லத் தொலைபேசிக்கு அழைப்பு வந்தது, அழைத்தது வேறு யாருமல்ல! நம் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமே தான். நானோ அதிர்ச்சியில் ஒரு நிமிடம் நின்றேன். அவரே தொடர்ந்தார்....

''நான் தான் அப்துல் கலாம் பேசுகிறேன்! நலமா! வலம்புரி ஜான் அவர்களே! என்று வீட்டில் உள்ள அனைவரின் நலனையும் விசாரித்து விட்டு, எது நடந்ததோ? நன்றாகவே நடக்கும் என்று நல்லவற்றுக்குத்தான் குறிப்பிட்டேன். நல்லது நடக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே குறிப்பிட்டேன். இது (மும்பை சம்பவம்) நடந்ததற்காக ஏற்கனவே மிக வருத்தத்தில் இருக்கிறேன். உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது கண்டு மிகுந்த வருத்தமடைகிறேன்'' என்று குறிப்பிட்டார்.  எனக்கோ மிக அதிர்ச்சிஅவர் தொலைபேசியில் அழைத்ததில் இருந்தே, ஆனால் மேலும் அவர் தொடர்ந்தார் எப்படி? இப்படித்தான் 

'' நீங்கள் கூடத்தான் சன் தொலைக்காட்சியில் தினமும் 'இந்தநாள் இனிய நாள்' என்று கூறுகிறீர்கள். அனைவருக்கும் இனியநாளாக அமைந்து விடுகின்றதா?'' என்று பதிலுக்கு என்னை மடக்குவது போல் வினவினார். 

''ஆம் நீங்கள் சொல்வது சரிதான் ஐயா!'' என்று கூறிவிட்டு  இப்படி மனதுக்குள் நினைத்துக்கொண்டேன் '' நான் கூறும்  இந்த நல்ல விஷயங்களை பின்பற்றினால் இந்த நாள் மட்டுமல்ல எந்த நாளும் இனிய நாள் என்று வழக்கமாக சன் தொலைக்காட்சியில் கூறிடுவேன். அதை பின்பற்றுபவர்கள் அனைவருக்கும் எந்த நாளும் இனிய நாளாகத்தான் இருக்கும்'' என்று கூற நினைத்து என் மறுமொழியை மனதுக்குள்ளேயே பூட்டிக் கொண்டேனே தவிர!, அவரிடம் கூற மனம் வரவில்லை. 

ஏனென்றால் அந்த மாபெரும் மனிதர், இந்தியாவின் மிக உயர் ஏன்? மிக உச்ச பதவியில் இருப்பவர். ஆனால் என் இல்லம் நோக்கி பாரபட்சம் பார்க்காமல் இந்தத் தமிழனையும் மதித்து அழைக்கின்றாரே! தமிழை அவ்வளவு நேசிக்கின்றாரே! ஒரு சாமான்யனையும் தனக்கு நிகராக வைத்து போற்றுகின்றாரே! அந்த மனிதரிடம் நமது திறமையை காட்டி என்ன? ஆகப் போகின்றது. இவரிடம் தோற்பதைவிட மிகப்பெரிய பெருமை வேறொன்றுமில்லை! என்று நினைத்து அவருக்கு நன்றிகூறி விடை கொடுத்தேன். அது தான் அப்துல் கலாம்! அதுதான் அவரை அனைவரும் நேசிப்பதற்கான காரணம் என்று எங்களிடம் அவரின் சிறப்பை கூறினார் வலம்புரிஜான்.

நல்லவரிடம் தோற்பதும் பெருமை தானே! என்ற புதிய விளக்கத்தை பெற்ற திருப்தியோடும், அப்துல் கலாமின் மிக உயர்ந்த குணத்தை போற்றுகின்ற மனதோடு கூட்டம் இனிதே முடிந்தது.

----நன்றி அனுபவம்

Tuesday, 16 February, 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-11(14) அழல் ஓம்புதல் i:
(i) கற்பூரம் இடும்போது:

விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே. -

                                                    ----அப்பர்

இறைவன் எங்கு இருக்கிறான்? எப்படிக் காண்பது?என்று வினவுவார்க்கு அப்பர் எளிமையாக ஒரு வழி காட்டுகிறார். விறகில் தீ இருப்பது போலவும், பாலில் நெய் இருப்பது போலவும், மணியில் ஒளி இருப்பது போலவும் இறைவன் மறைந்திருக்கிறான். ஆனால் சோதி வடிவாய் இருக்கிறான். அதிலும் மணிச்சோதியாய் மாமணிச்சோதியாய் உள்ளான்.

அப்படியிருந்தும் நம்கண்ணுக்குத் தெரியவில்லையே என்பார் சிலர். குருட்டுக் கண்ணுக்கு உலகியல் பொருள் தெரியாது அதுபோல அறியாமை நிரம்பிய நம்மனோருக்கு அச்சோதி புலப்படாது. நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவாகிய கோலை நட்டு, உணர்வாகிய கயிற்றினால் முறுக வாங்கிக் கடைய முன்னின்றருளுவான் என்கிறார். அப்பர். முறுகக் கடைய விறகில் தீ தோன்றும். வாங்கிக் கடைய பாலில் நெய் தோன்றும். கடைய மணியில் ஒளி தோன்றும். எனவே பக்தியுடன் உறவுடன் முறுக வாங்கிக் கடைந்து இறைவனைக்கண்டு இன்புறுவோமாக.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா-நன்புகழ்சேர்
ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்
                                   ---பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி

வெளிச்சடங்குகளைக் கைவிட்டு நெஞ்சுருகிக் கடவுளை வழிபட்டால் போதும் என்பதே இதன் கருத்து.

(ii) (iii) (அ) அழல் ஓம்பும்போது;

ஓசை, ஓலி எல்லாம் ஆனாய் நீயே!
உலகுக்கு ஒருவனாய், நின்றாய் நீயே!
வாச மலர் எலாம் ஆனாய், நீயே!
மலையான் மருமகனாய் நன்றாய் நீயே!
பேசப் பெரிதும் இனியாய், நீயே!
பிரானாய், அடி என்மேல் வைத்தாய், நீயை!
தேச விளக்கு எலாம் ஆனாய் நீயே!
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ!

'உற்று இருந்த உணர்வு எலாம் ஆனாய் நீயே!
உற்றவர்க்கு ஓர் சுற்றமாய் நின்றாய் நீயே!
சுற்று இருந்த கலைஞானம் ஆனாய் நீயே!
கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே!
பெற்று இருந்த தாய் அவளின் நல்லாய் நீயே!
பிரனாய், அடி, என்மேல் வைத்தாய் நீயே!
செற்று இருந்த திருநீலகண்டன் நீயே!
திருவையாறு அகவாத செம்பொன் சோதீ!

'எல்லா உலகமும் ஆனாய், நீயே!
ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே!
நல்லாரை நன்மை அறிவாய் நீயே!
ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் நீயே!
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே!
புகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே!
செல்வாய செல்வம் தருவாய் நீயே!
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ!

                                        ---அப்பர் -- திருவையாற்றுத் திருத்தாண்டகம்
குறிப்பு; இத்திருத்தாண்டகத்தின் பதினோரு பாடல்களையும் ஓதுவது சிறப்பாகும்.

மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,
பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்
புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி,
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை
தளிர்ப்புரையும் திருவடியென் தலைமே லவ்வே

                                                          --திருமங்கையாழ்வார் - திருநெடுந்தாண்டகம்


பார் உருவில் நீரெரிகால் விசும்பு மாகிப்
பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற,
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற,
இமையவர்தம் திருவுருவேரு எண்ணும்போது
ஒருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ
ஒன்று மாகடலுருவம் ஒத்து நின்ற
மூவுருவும் கண்டபோது ஒன்றாம் சோதி,
முகிலுருவம், எம் அடிகள் உருவந்தாளே.

                                       ---திருமங்கை -- திருநெடுந்தாண்டகம்


இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் றன்னை
இருநிலம்கால் தீநீர்விண் பூதம் ஐந்தாய்,
செந்திறத்த தமிழோசை வடசொல் லாகித்
திசைநான்கு மாய்த்திங்கள் ஞாயி றாகி,
அந்தரத்தில் தேவர்க்கும் அறிய லாகா
அந்தணனை அந்தணர்மாட் டந்தி வைத்த
மந்திரத்தை, மந்திரத்தால் மறவா தென்றும்
வாழுதியேல் வாழலாம் மடநெஞ் சம்மே.

                                                         ---திருமங்கை --திருநெடுந்தாண்டகம்.


குறிப்பு::  இந்தத் திருநெடுத்தாண்டகத்தில் உள்ள பாடல்களில் மேலும் பல ஓதுவது சிறப்பாகும்.
(ii) (iii) (ஆ) ஓமம் நிறைவேறும்போது (பூரண ஆகுதி)

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்கவேண்டா சுடர் விட்டுளன் எங்கள்சோதி
மாதுக்கம் நீங்கலுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே!

                                                         ---சம்பந்தர்

பொழிப்புரை; இறைவனை அன்பால் வழிபடும் ஞானிகளே ! அனுமானப் பிரமாணத்தாலும் உரையளவையாலும் இறைவனை மிகுதியாகச் சோதிக்க வேண்டா. அவன் ஊனக்கண் கொண்டு நோக்கப்புறத்தே சோதிவடிவமாகவும், அன்போடு கூடி அகத்தால் ஞானக்கண் கொண்டு நோக்க உள்ளொளியாகவும் விளங்குபவன். அவனை விரைவில் வந்து சார்ந்து, மனம் ஒன்றி வழிபட்டுப் பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள். இறைவன் அளவைகளால் அறியப்படும் ஆராய்ச்சிக்கு அப்பாற் பட்டவன்.நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாகவுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா
காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
பெருமானுன் திருவடியே பேணினேனே.

                                                    -திருமங்கையாழ்வார் - திருநெடுந்தாண்டகம்

எம்பெருமான் நீர்மைத் தன்மையானவன். நீரிடை மீனாக அவதாரம் செய்தவன். நீர்ப்பாயலை இருப்பிடமாக் கொண்டவன். பிரளய காலத்தின் போது பூவலகு நீரால் சூழ ஆலிலை மேல் மிதப்பவன். என்வே அவனை நீரகத்தான் என்று மங்களாசாசனம் செய்தார் திருமங்கையாழ்வார். ஆனால் இத்தலம் எங்கிருந்து என்று மட்டும் விளம்பாது சென்றார் ஆழ்வார்.

(15) (ii) மங்கல நண் சூட்டதல்;

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல் அக்து உறும் கழுமல வளநகர்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.
                                                             --சம்பந்தர்
புகழு நல்லொருவன் என்கோ? பொருவில் சீர்ப்பூமி என்கோ?
திகழுந்தண் பரவை என்கோ? தீஎன்கோ? வாயு என்கோ?
நிகழும் ஆகாசம் என்கோ? நீள்சுடர் இரண்டும் என்கோ?
இகழ்வில் இவ்வனைத்தும் என்கோ? கண்ணனைக் கூவுமாறே.

                                                            -நம்மாழ்வார்-திருவாய்மொழி

(iv) (v) பொட்டு இடுதல் 

பாத தமரையின் நுண்துக்ள, பரம
அணுவினில், பல இயற்றினால்,
வேத நான் முகன், விதிக்க வேறுபாடு
விரிதலம் புவனம் அடைய மால், 
மூது அரா வடிவு எடுத்து, அனந்த
முது கணபண அடலி பரிப்ப; மேல்
நாதனார் பொடி படுத்து நீறு அணியின்
நாம் உரைத்தது ஏன்? அவள் பான்மையே!

                                                      --ஆனந்தலகரி


(17) மணமக்கள் உறுதிமொழி 
மணமக்கள்; எல்லாம் வல்ல இறைபரம் பொருளின் திருவருட்பாங்கால்--------------------------------- ஊர் திரு---------------------------------
மகன்--------------------------------ஊர்------------------------------------------------
திரு--------------------------------- மகள்-------------------------------------

ஆகிய நாம் இருவரும் நம் உற்றார் உறவினர் அன்பர் நண்பருமாக இத்திருமண மண்டபத்தில் குழுமியுள்ள பெரியோர்கள் திருமுன்பு இவர்கள் வாழ்த்த அம்மையும் அப்பனுமாக விளங்கும் அப்பெரும்பொருளை வழிபட்டுப் பேரொளி வடிவிலும் தொழுது, மணாளனும் மணாட்டிமாகியுள்ளோம்.

இது முதல் நாம் இருவரும் ஈருடல் ஒருயிராய் வள்ளுவப் பெருந்தகை இல்லற நெறியில் நிலை நின்று பெற்றோரும் சுற்றமும் பேணி, நடுநிலை பிறழாது ஒழுகி இயன்ற வகையிலெல்லாம் பிற உயிர்க்கு உதவி புரிந்து கொண்டு நாடும் மொழியும் போற்ற இன்ப நல்வாழ்வில் இனிது வாழ்த்த வருவோமாக!'

அவையினர்;

'நீடு வாழ்க! நிறைக நலங்கள் !

மணமகன்;--------------------- (ஒப்பம்) மணமகள்; ----------------------(ஒப்பம்)

(ஒப்பம்)------------------------இருபெருந்தகையர்;-----------------------(ஒப்பம்)

திருமணக்கூடத்தின் பெயர்;---------------     மண ஆசிரியர் (ஒப்பம்)

இடம்;----------------------நாள்;----------------

(தமிழ் முறையில் சடங்குகளோடு செய்யப் பெறும் திருமணத்தில் 'உறுதி மொழி தேவையில்லை என்பர் பலர். சிலர் விரும்புவதால் இங்கு இது இடம் பெறுகிறது) 


சிக்கனம்

சிக்கனத் திருமணம் பற்றி பெரியார் கூறுபவையயாக பேராசிரியர் மா. நன்னன் விளக்குபவை;

இக்காலத்தில் நண்பர்களையும், உறவினர்களையும் திருமணத்திற்கு வருமாறு அழைக்கும் அழைப்பிதழ் ஒன்றுக்கு ஆகும் செலவே பத்துப் பதினைந்து ரூபாய்கள் என்று கூறுகின்றனர். ஆகவே, பத்துப் பதினைந்தாயிரம் ரூபாய்களைத் திருமண அழைப்பிதழ் அச்சிடவே செலவிடுகிறார்கள். நூறு கோடி செலவில் நடந்த திருமணமும் அண்மையில் தமிழ்நாட்டில் நடந்ததை நாமறிவோம். ஆதலால், பகுத்தறிவு வழிபட்ட பெரியாரின் சுயமரியாதைத் திருமணம் சிக்கனமாகத் தான் நடைபெற வேண்டும் என்பதைத் தனியே எடுத்துக் கூறுவது தக்கதே.

வாழ்க்கை ஒப்பந்தத்திற்கு உறுதி மொழியும், அவசியப்பட்டால் பதிவு ஆதாரமும் தவிர வேறு காரியங்கள் எதற்கு? அதன் மூலம் அறிவு, காலம், பணம், ஊக்கம், சக்தி இவை ஏன் வீணாக வேண்டும்.?

என்பன பெரியாரின் வினாக்கள். இவ்விரு வினாக்களுக்கும் அறிவுள்ளவர்கள் சொல்லக் கூடிய விடை முறையே தேவையில்லை என்பதும் வீணாகக் கூடாது என்பதுமாகவே இருக்கமுடியும். வாழ்க்கைத் துணைவர்களாக இணையும் அவ்விளைஞர்களுக்கு அறிவு, காலம், ஊக்கம், சக்தி போன்ற பலவும் தாம் துணைவர்களான பிறகு மிகுதியாகத் தேவைபடும். அவற்றைச் செலவிட்டுத்தான் அவர்கள் தம் வாழ்க்கையைச் செம்மையாக நடத்த வேண்டும். அப்படியிருக்க பிற்காலத்தில் தமக்குத் தேவைப்படும் அந்த அரியவற்றை எல்லாம் துணைவர்களாகத் தாம் ஆவதற்கே செலவிட்டு விடுவதென்றால் அது எப்படிச் சரியானதாக இருக்கமுடியும்?

பலர் தம் திருமணக் கடனை அடைப்பதிலேயே தம் வாழ்வின் முனைப்பான பருவத்தை செலவிட்டுத் தளர்ந்து போவதை நாம் அறியோமா? அக்கடனில் தம் பிற சொத்துக்களையெல்லாம் மூழ்கடித்து இழந்து போனவர்களை நம் கண்கள் கண்டதில்லையா? காதுகள் கேட்டதில்லையா? வாழ்க்கையில் மகிழவும், முன்னேறவும், அவையிரண்டும் நிலைக்கவும் தேவைப்படுவனவற்றையெல்லாம் இப்படி வீண்டித்துவிட்டுத் தவிப்பது அறிவுடைமைநாகுமோ?

சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்வோர் சிக்கனமாக அதை நடத்திக் கொள்வதால் பணம் மிச்சமாகிறது. என்பதைச் சற்று விரிவாக எண்ணிப் பார்ப்போமா? 1997-ஆம் ஆண்டாகிய இக்காலத்தில் ஒருவர் தம் திருமணத்தைச் சற்று ஆரவார ஆடம்பரத்துடன் செய்து கொள்ள விரும்பினால் ஒன்றரை அல்லது இரண்டு நூறாயிரம் ருபாய்கள் செலவிட வேண்டியிருக்கும். அவர் சற்று சிக்கனமாக அத்திருமணத்தை நடத்திக் கொண்டு அய்ம்பதாயிரம் ரூபாய்களை மிச்சப்படுத்துவதாக வைத்துக் கொள்வோம். அம்மணமக்களுக்கு 1998-ஆம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்தால் அக்குழந்தைக்கு கி. பி. 2023 ஆம் ஆண்டுவாக்கில் இருபத்தைந்து வய்து ஆகும். இந்த இருபத்தைந்து ஆண்டுக் காலத்தில் தாம் மீதப்படுத்திய அய்ம்பதாயிரம் ரூபாய்களையும் அவர்கள் வட்டிக்குத் தந்து வைத்தால் அத்தொகை கி.பி. 2023 ஆம் ஆண்டுவாக்கில் குறைந்ததுபதினாறு நூறாயிரம் (1,60,0000) ரூபாய்களாக வளர்ந்து பெருகியிருக்கும். அத்தொகையைத் தம் மகவின் மேற்படிப்பு, தொழில் போன்றவற்றுக்குச் செலவிட்டுத் தம் பரம்பரையை எப்படி முன்னேற்றமுடியும் என்றுபாருங்கள். யார் கையையும் எதிர் பாராமலேயே தம் மக்களை மேன்மேலும் உயர்த்த முடியுமே.இப்படி வாழ்க்கையில் சிக்கனத்தை கடைப்பிடிப்பதற்குத் திருமண சிக்கனமே தொடக்கமாகவும் வழி காட்டியாகவும் அமைய வேண்டும் என்பதே பெரியாரின் விருப்பம்.

பணமிச்சம், அதனால் அக்குடும்பம் பெறும் பெரும் பலன் ஆகியவற்றைப் போன்றே சுயமரியாதைத் திருமணத்தால் நேரக்கேடு, அதிகமானதொந்தரவு, தொல்லை, அலைச்சல் ஆகிய பலவும் தவிர்க்கப்படுவதால் அக்குடும்பத்தாரின் உடலுக்கும், உணர்வுகளுக்கும் ஏற்படும் பலன்களைக் கணக்கிட்டுப் பார்க்கவேண்டும். நாற்பது வய்துக்குள்ளாகவே நாடி தளர்ந்து, மூளையின் திறன் தடுமாறி, மூப்படைந்து வாழ்வை முடித்துக் கொள்ளத் தாமே விரும்பும் நிலை அவர்களுக்கு ஏற்படாதே. மேலும் மூட நம்பிக்கை, காட்டுமிராண்டித் தன்மை ஆகியவற்றால் நடைபெறும் செயல்கள் தவிர்க்கப்பட்டு அக்குடும்பத்தின் அறிவு,மானம், மதிப்பு ஆகியவையும் நல்ல அளவு காப்பாற்றப்படுவதையும் நாம் மறந்துவிடக் கூடாதே. ஆகவே, பெரியார் செய்து காட்டிய சீர்திருத்த திருமணத்தால் அக்குடும்பங்களுக்கும் அவற்றையுள்ளடக்கிய நம் சமுதாயத்திற்கும் ஏற்படும் பல் வகை ஆதாரங்களையும் நலன்களையும் நாம் நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

திருமணங்களில் மக்களின் சராசரி வரும்படியல் ஒரு பத்து நாள் அல்லது பதினைந்து நாள் வரும்படிக்கு மேல் செலவு செய்ய அனுமதிக்கவே கூடாது.
என்று கூறிப் பெரியார் திருமண செலவுகளுக்கு ஓர் உச்ச வரம்பையே ஏற்படுத்தியுள்ளார்.


.....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -12

Monday, 15 February, 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-10(12) (iv)பெற்றோரும் மற்றோரும் வாழ்த்துதல்;

நீடு வாழ்க! நிறைக நலங்கள்! என்று மும்முறை வாழ்த்துக

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்!

                                                         ---ஆண்டாள் திருப்பாவை


பொருள்: சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.

http://temple.dinamalar.com/Slogandetails.aspx?id=164 

(13) மணமக்கள் வழிபாடற்றல்;
(i) முன்னவனார்;

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. 

                                              ----பத்தாம் திருமுறை

பொழிப்புரை;ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன். 
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
                                                             ---பதினோராம் திருமுறை--நம்பியாண்டார் நம்பி
பொருள்: யானை முகம் கொண்ட விநாயகப்பெருமானை வழிபாடு செய்தால் செல்வ ளம் உண்டாகும். செய்யும் செயல் இனிதே நிறைவேறும். நாவில் நல்ல சொற்கள் பிறக்கும். செல்வாக்கும் உயரும். ஆக்கம் உண்டாகும். அதனால் வானுலக தேவர்களும் ஆனை முகப்பெருமானை அன்பு கொண்டு கரம் குவித்து வணங்கி மகிழ்வர்.

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.
                                                       ---பதினோராம் திருமுறை


பொருள்: விநாயகப்பெருமானே நமக்குத் துன்பம் தரும் தீவினைகளை அடியோடு நீக்குபவர்( வேரோடு அகற்றும் அருள் கொண்டவர்) யானைமுகப் பெருமானாகிய அவரருளால் நம் மனத்தில் எண்ணும் ஆசைகள், விருப்பங்கள் நிறைவேறும். அவரே இம் மண்ணுயிர்களுக்கும், விண்ணுலக தேவர்களுக்கும் தலைவராக வீற்றிருக்கின்றார். அதனால் மிகுந்த விருப்பத்துடன் அவர் திருப்பாதங்களைப் பணிந்து வழிபடுவோம்.


(ii) இறைவன்,  இறைவி

நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளங் குளிரும்மே. 

                                       ----முதல் திருமுறை-சம்பந்தர் 


பொழிப்புரை;நன்மைகளையே தனக்கு உடைமையாகக் கொண்டவனை, தீயது ஒன்றேனும் இல்லாதவனை, மிக வெண்மையான ஆனேற்றைத் தனக்கு ஊர்தியாகக் கொண்டவனை, பார்வதியை ஒரு பாகமாக உடையவனை, அவனது அருளாலன்றிச் சென்றடைய முடியாத வீடுபேறாகிய செல்வத்தை உடையவனை, சிராப்பள்ளிக் குன்றில் எழுந்தருளி யுள்ளவனைப் போற்ற என் உள்ளம் குளிரும்.''என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை;
என்னிலும்(ம்) இனியான் ஒருவன்(ன்) உளன்;
என்உளே உயிர்ப்புஆய்ப் புறம் போந்து புக்கு
என்உளே நிற்கும், இன்னம்பர் ஈசனே.``
                                                         --ஐந்தாம் திருமுறை--அப்பர்

பொழிப்புரை; என்னைவிட எனக்கு யாரும் இனியவர் இல்லை ; ஆயினும் என்னைவிட இனியவன் ஒருவன் உள்ளான் ; என்னுள்ளே உயிர்ப்பாகப் புறம் போந்தும் புக்கும் என்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே அவன்.பொன்னார் மேனியனே புலித்
    தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
    கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ
    பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி
    யாரை நினைக்கேனே
                                                  ---ஏழாம்  திருமுறை- சுந்தரர்பொழிப்புரை;பொன்போலும் திருமேனியை உடையவனே, அரையின்கண் புலித்தோலை உடுத்து, மின்னல்போலும் சடையின் கண், விளங்குகின்ற கொன்றை மாலையை அணிந்தவனே, தலை வனே, விலையுயர்ந்த இரத்தினம் போல்பவனே, திருமழபாடியுள் திகழும் மாணிக்கம் போல்பவனே, எனக்குத் தாய்போல்பவனே, இப்பொழுது உன்னை யன்றி யான் வேறு யாரை நினைப்பேன் ? 


வானாகி மண்ணாகி வளியாகி
    ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய்
    இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதென் றவரவரைக்
    கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி
    வாழ்த்துவனே.

                                              ----எட்டாம் திருமுறை- திருச்சதகம்- திருவாசகம்
பொழிப்புரை;ஆகாயம், மண், காற்று, ஒளி, ஊன், உயிர் முதலாகிய எல்லாப் பொருள்களாகியும், அவற்றின் உண்மை இன்மை களாகியும் அவற்றை இயங்குவிப்போன் ஆகியும் யான், எனது என்று அவரவர்களையும் கூத்தாட்டுவானாகியும் இருக்கின்ற உன்னை என்ன சொல்லிப் புகழ்வேன்? 
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
    உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
    சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
    அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
    தொண்டனேன் விளம்புமா விளம்பே.
                                          ---ஒன்பதாம் திருமுறை-திருவிசையப்பா
பொழிப்புரை;இயற்கையான ஒளி நாளும் வளருகின்ற விளக்கு ஆனவனே! என்றும் அழிதல் இல்லாத ஒப்பற்ற பொருளே! உயிரினது அறிவைக் கடந்த ஒப்பற்ற ஞான வடிவினனே! தூய்மை மிக்க பளிங்கின் குவியலாகிய அழகிய மலையே! அடியவர் உள்ளத்தில் இனிமைதரும் தேனே! பொதுவான எல்லையைக் கடந்து இறைவனிடம் ஈடுபட்டு இருக்கும் உள்ளத்தில் பேரின்பம் நல்கும் கனியாக உள்ளவனே! பொன்னம்பலத்தைத் தன் கூத்தினை நிகழ்த்தும் அரங்கமாகக் கொண்டு அடியவருடைய காட்சிக்குப் புலனாகும் அருள் நடனத்தை விரும்பி நிகழ்த்தும் உன்னை, உன் தொண்டனாகிய நான் புகழுமாறு நீ திருஉள்ளம்பற்றிச் செயற்படுவாயாக.
குழல் ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி
    எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி
    மிகுதிரு வாரூரின்
மழவிடை யாற்கு வழிவழி ஆளாய்
    மணஞ்செய் குடிப்பிறந்த
பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே
    பல்லாண்டு கூறுதுமே.
                                                                    ---ஒன்பதாம் திருமுறை-திருப்பல்லாண்டு
பொழிப்புரை; வேய்ங்குழல்இசை, யாழின்இசை, கூத்தாடுதலின் ஓசை, துதித்தலின் ஓசை என்பன கூட்டமாகப்பெருகித் திருவிழா நாளில் நிகழ்த்தப்படும் ஓசையோடுகூடி வானத்தளவும் சென்று பெருகி மிகுகின்ற திருவாரூரில் இளைய காளையை வாகனமாக உடைய சிவபெருமானுக்குப் பரம்பரை பரம்பரையாக அடிமையாய் அத்தகைய குடும்பங்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்கின்ற அடியவர் குடும்பங்களில் பிறந்த பழ அடியாரோடும் கூடி எம் பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராக இசைந்திருந் தானே.  
                                              --பத்தாம் திருமுறை-திருமந்திரம்

பொழிப்புரை; மகேசுவரி முதலாகப் பாகுபட்ட அச்சத்தியே தானாய் நிறைந்த மகேசுரனே, உருத்திரன், திருமால், அயன் என்பவரிடத்தும் சென்று உலாவி அவர்களேயாயிருந்து அவர்களது தொழில்களை இயற்றுவிப்பன்.


எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய தொன்று.
 --அற்புத திருவந்தாதி-- காரைக்கால் அம்மையார்

விளக்கம்:

எனக்கு இனிய எம்பிரானை! ஈசனை யான் என்றும் மனத்தினுள் இனிய பெருஞ்செல்வமாகக் கொண்டேன். என் உயிர்ப்பிரானனாகவும் கொண்டேன்; அதனால் மாறாத இன்பம் கொண்டேன். இனி எனக்குக் கிடைத்தற்கரிய பொருள் ஒன்றேனும் உண்டோ? இல்லை.உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம். 
                                              ----பன்னிரன்டாம் திருமுறை-சேக்கிழார் 
பொழிப்புரை; எவ்வுயிர்களானும் தம்மறிவால் உணர்தற்கும் ஓதுதற்கும் அரியவனாயும், அங்ஙனம்அரியவனாயினும் தன்னை அடைந்து உய்ய வேண்டும் எனும் பெருங்கருணையினால் பிறைச் சந்திரன் உலாவுதற்கும், கங்கையைத் தாங்குதற்கும் இடனாயுள்ள திருச்சடையை உடையனாயும், அளவிறந்த ஒளியுரு உடையனாயும், தில்லைச்சிற்றம்பலத்தே திருக்கூத்து ஆடுகின்றவனாயும் உள்ள கூத்தப் பெருமானின், அன்பர்கள் உள்ளத்தில் என்றும் மலர்ந்து நிற்கின்ற சிலம்பணிந்த திருவடிகளை வாழ்த்தி வணக்கம் செய்வாம்.


தேட்டருந்திறல் தேனினைத் தென்னரங்கனை – திருமாதுவாழ்
வாட்டமில் வனமாலை மார்வனை வாழ்த்தி மால்கொள் சிந்தையராய் -
ஆட்டமேவியலந்தழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள்தாம்
ஈட்டம் கண்டிடக்கூடுமேல் அதுகாணும் கண் பயனாவதே!

                                                                      ----குலசேகராழ்வார்- பெருமாள் திருமொழி


( பொருள்; நம்முடைய முயற்சியினால் தேடி அடைவதற்கு மிகவும் அருமையானவனும், தன்னை அடைந்தவர்களக்கு மிகுந்த பலனைக் கொடுப்பவனும், தேன் போன்று இனிமையும் குணமும் உள்ளவனும், திருவரங்கத்தில் வாசம் செய்பவனும், பெரியபிராட்டியார் பிரியாமல் இருப்பதற்கு உகந்ததாய், எப்போதும் வாடாத மணம் பொருந்திய மாலையினைக் கொண்டுள்ள திருமார்பினையுடைய பெரியபெருமாளை – பல்லாண்டு பாடி, அவன் மிகுதியான அன்பு கொண்ட மனதினையுடையவராய், அதனால் ஆடுவதில் ஈடுபட்டு, அந்த ஆட்டத்தினால் சோர்வு ஏற்பட்டு, அதனை நீக்குவதற்காக அவனை, அவன் நாமங்களைச் சொல்லி அழைத்து மெய்மறந்து நிற்கும் அவனுடைய உண்மையான அடியார்கள் கூட்டத்தினைக் காணும் வாய்ப்பு கிட்டினால், நமது கண்கள் அடைந்த பேறு அதுவே ஆகும்.)

“பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா! அமரர் ஏறே! ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே!”
                                                              ----தொண்டரடிப் பொடியாழ்வார்-திருமாலை


திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழத்
தீவினைகள் போய் அகல, அடியவர்கட்கு என்றும்
அருள் நடந்து இவ்ஏழ் உலகத்தவர் பணிய லானோர்
அமர்ந்து ஏத்த இருந்த இடம், பெரும்புகழ்வேதியர்வாழ்
தருமிடங்கள் மலர்கள் மிகுகைதைகள் செங்கழுநீர்
தாமரைகள் தடங்கள்தொறும் இடங்கள் தொறும் திகழ 
அருவிடங்கள் பொழில் தழுவி எழில் திகழும் நாங்கூர்
அரிமேய விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே!
                                             ---திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி

நந்தா விளக்கே! அளத்தற்கரியாய்!
நா நாராயணனே! கருமுகில் போல்
எந்தாய்! எமக்கே யருளாய் என நின்று
இமையோர் பரவும் இடம் எத்திசையும்
கந்தா ரம் தேனிசைபாட மாடே களிவண்டு
மிழற்ற நிழல் துதைந்து
மந்தாரம் நின்று மணமல்கு நாங்கூர் மணிமாடக் கோயில்
வணங்கு என் மட செஞ்சே
        
                                                ---- திருமங்கையாழ்வார் -- பெரிய திருமொழி 


(ii) மங்கல நாண்;

''வேதரஞ்சகன், மால், புரந்தரன், வேகசண்ட குபேரனோடு
ஆதி எண்திசை பாலர் பொன்றவும், ஆதி அந்தம் இலாததோர்
நாதர் பொன்றிலர்; ஏது! உன் மங்கல நாண் உறும் திறம்!
                                                                                                                         ஆதலால்!
நீ தழைத்தது யோகம்! அம்பிகை! நீலி' என்பது பாவமே!

                                                                                                    ----ஆனந்தலகரி 

அறிவுரை

மணம்க்களிருவருக்கும் பெரியார் கூறும் முதல் அறிவுரை அவர்களிருவரும் உற்ற நண்பர்களாக அஃதாவது

உயிருக்குயிரான நண்பர்களாகத் தங்களை நினைத்து அவ்வாறே நடைமுறையிலும் நடந்து கொள்ளவேண்டும் என்பதாகும். இஃது அவ்விருவருக்கும் சம்மாகப் பொருந்தக் கூடியதாகும். காந்தத்திற்கு ஈர்க்கும் தன்மை இருப்பது போல் அக்காந்தத்தால் ஈர்க்கப்படும் இரும்புக்கு தன்மையும் இருக்கிறது. அதனால் தான் காந்தத்தால் இரும்பை இழுக்க முடிகிறது. அவ்வாறே ஆணுக்குப் பெண்ணை அடக்கியாளும் குணம் இருப்பது போன்றே பெண்ணுக்கு அடங்கிப் போகும் குணமும் உள்ளது. அதனாற்றான் ஆணால் பெண்ணை அடக்கியாள முடிகிறது. ஆண்டான் அடிமை முறை உள்ள எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். ஆகவே, ஆண்தான் எசமானன் என்னும் எண்ணத்தையும் பெண்தான கணவனின் அடிமை அடுப்பூத வந்தவள் என்பது போன்ற எண்ணங்களையும் கைவிட்டுத் தாம் இருவரும் பல வகையாலும் ஒத்த நண்பர்கள்-உற்ற உயிர்த்தோழர்கள்-என்னும் எண்ணத்துடன் வாழவேண்டும் என்பதே அய்யாவின் விருப்பமாகும்.

இரண்டாவதாக அம்மணமக்களுக்கு மற்றொரு மேல் நிலையைக் காட்டி அவ்வாறு வாழவேண்டும் என்று பெரியார் அறிவுரை வழங்குகிறார். நண்பர்கள் தோழர்கள் என்பதைவிடக் கூட்டாளிகள், பங்காளிகள் என்றால் அவை மேன்மையுடையனவா யமையும் எவ்வாறென்றால் நண்பர் என்பதைவிடக் கூட்டாளி என்பதில் உரிமைப் பலம் சற்றுக் கூடுதலாக உள்ளது. இருவுரும் முதல் போட்டுச் செய்யும் வாணிபத்தில் இருவருக்கும் சம உரிமை இருப்பது போலக் கணவனும் மனைவியுமாக வாழத் தொடங்கும் மணமக்கள் இருவருக்கும் அதில் சம உரிமையுண்டு என்பது பொருளாகிறது. ஆகவே, பெரியார் மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் துணைவர்கள் கூட்டாளிகள் என்று உணரந்து நடந்து கொள்ள வேண்டுமென்கிறார்.

மூன்றாவதாக நண்பர்களாகவும் கூட்டாளிகளாகவும் வாழும் வாழ்வில் பெண்ணைக் கூலியில்லா வேலைக்காரியாக நடத்த உரிமை வழங்கும் தாலி இருக்க இடம் தரலாமா? கூடாதே. ஆணுக்குப் பெண்ணிடம் உள்ள உரிமையின் அடையாளமே தாலி. வேறு காரணம் எதனாலாவது தாலி வேண்டுமென்றால் அது ஆணுக்கும் வேண்டியதாகத் தானே இருக்க வேண்டும். தாலி கட்டினால் இருவரும் ஒருவருக்கொருவர் கட்டிக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் இருவருக்குமே அது வேண்டாப் பொருளே.

மணமக்களுக்கு நான்காவதாகப் பெரியார் கூறும் அறிவுரை தனிச் சிறப்புடையதாகும். எதிரும் புதிருமடி நீயும் நானுமடி என்பது போல் இருந்துவிடாமல் இருவரும் மற்றவர்களுக்காகவும் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறார் பெரியார். தமக்கென மட்டும் வாழும் வாழ்வை எல்லா மக்களும் மேற்கொண்டிருப்பராயின் உலகம் முன்னேறாது என்பதோடு அது நிலைத்திருப்புதும் அரிதேயாகும். மக்களில் சிலரேனும் தமக்கென மட்டும் வாழாது பிறர்க்கென வாழும் பெருவாழ்வை உடையவர்களாக இருப்பதாற்றான் இந்த உலகமே இருக்கிறது. .பிறர் பற்பலருடைய உதவிகளைப் பெற்று வாழும் போது நாமும் பிறர் பற்பலருக்கும் உதவுவோராக இருக்க வேண்டுவது நம் கடமையன்றோ.

‘’ஊடலில் தோற்றவர் ’’வென்றார்’’ என்று திருவள்ளுவர் கூறுகிறார். காதல் வாழ்வில் விட்டுக்கொடுத்துத் தோற்றலில் உள்ள சுவையையும், பயனையும் உணர்ந்து கொண்ட கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பதிலும் ஒருவருக்காக மற்றொருவர் தோல்வியை ஏற்பதிலும் போட்டி போட்டுக்கொண்டு முந்துவர். அகவாழ்வில் முழுச்சுகம் காணும் வல்லநர் அனைவரும் அறிந்த உண்மைதான் இது. அதனாற்றான் பெரியார் மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டுமென்கிறார். இது ஐந்தாம் அறிவுரையாகும்.

ஆறாவதாக மணமக்கள் மகப்பேற்றில் அவசரப்படவேண்டா என்கிறார் பெரியார். குழந்தைகள் பெறவேண்டா என்று கூட இங்குப் பெரியார் கூறவில்லை. குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் அவசரப்படவேண்டா என்றுதான் கூறுகிறார். எவ்வளவு காலம் முடியுமோ அவ்வளவு காலத்துக் குழந்தைப்பேற்றைத் தள்ளிப் போடுவதே மேலானது. அதற்குப் பற்பல காரங்கள் உள்ளன. குழந்தைகளைப் பெறவும் பின் அவற்றைத் தக்கபடி வளர்க்கவும் தேவையான உடல் நலமும், உள்ளப் பக்குவமும், அறிவு முதிர்ச்சியும் ஏற்பட்ட பிறகு மகப்பேறு நிகழ்வதே சிறந்ததாக இருக்க முடியும். இன்ப வாழ்வுக்காக என்று வாழ்க்கைத் துணையைத் தேடியவர்கள் உடனே குழந்தைச் சுமையைத் தாங்க நேர்வது தகாதே. குழந்தை வேண்டும் என்று உண்மையிலேயே தேவைப்படும்போது அதனைப் பெற்றுக் கொள்வதே பொருத்தமாகும். அதற்கும் ஓர் அளவிருப்பதை இன்று அறியாதவர் யாரும் இருக்க முடியாது. மேலும் மக்கட் பேறே நாணயமும் நேர்மையும் உள்ள நல் வாழ்வுக்குத் துணை செய்யும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

ஏழாவதாக மணமக்கள் தமக்குள் அன்பும் பண்பும் உடையவர்களாய் வாழ்ந்தால் மட்டும் போதாது. ஏனெனில், அவர்கள் வாழ்வு அவர்களிருவருடன் மட்டுமே நிகழ்வதில்லையே. பெற்றோர், உற்றோர், உறவினர், அன்பர், நண்பர், அயலார், ஊரார், நாட்டார், உலகத்தார் என அனைவரோடும் தொடர்பு கொண்டு வாழ்வதே வாழ்க்கையாதிலின் அவர்கள் மற்றவர்களோடும் அன்பும் பிற நற்பண்பும் உடையோராக இருப்பது அறிவுடைமையும், பயன் உடைமையுமான நற்செயாலகும். மற்றவர்களுக்கு நல்லது செய்யமுடியாவிட்டாலும் கெடுதல் செய்யாமலாவது இருக்கவேண்டுபென்கிறார் பெரியார்.

சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர்கள் வாழ்நாள் முழுவதிலும் தாம் பகுத்தறிவு வாழ்க்கை வாழ்வதிலிருந்து நழுவியோ சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதை எட்டாம் அறிவுரையாகக் கொள்ளலாம். கோயில், சடங்குகள், தீபாவளி போன்ற பண்டிகைகள் போன்ற பகுத்தறிவு நெறிக்கு மாறான எத்தொடர்பும் ஏற்பட்டு விடாமல் பர்ர்த்துக் கொள்ள வேண்டும்.

‘ஈயென இரத்தல் இழிந்தன்று’’ என்று புறநானூறு கூறும் தமிழர் கோட்பாட்டைப் பெரியார் ஒன்பதாம் அறிவுரையாக மணமக்களுக்கு வழங்குகிறார். தம் வாழ்வில் இடர், நெருக்கடி போன்றவை ஏற்படும் காலங்களிலும் பிறர் உதவியை நாடாமல் வாழவேண்டும். பிறரிடம் கையேந்துவதை வெறுக்கவேண்டும். பிறருக்கு உதவ முயலலாமே தவிரப் பிறரிடம் உதவியை நாடுவதைத் தம் மரியாதைக் குறைவாகக் கொள்ளவேண்டும்.. இல்லாத இறைவனிடம் கையேந்தும் பழக்கமே பிறரிடம் இரந்து பின்னிற்கும் இழிந்த பழக்கத்துக்கு மனிதனை அழைத்துச் செல்கிறது, அல்லது இது அதற்கு இட்டுச் சென்றது என்றாலும் சரியே.

பத்தாம் அறிவுரையாகச் சிக்கன வாழ்வை மேற்கொள்க என்கிறார் பெரியார். ஊதாரித்தனம், கஞ்சத்தனம் ஆகிய இவையிரண்டுக்கும் மாறுபட்ட சிக்கனமே பெரியார் கடைப்பிடிக்கக் கூறும் வாழ்வியலாகும். பகுத்தறிவு நெறியான் ஒரு கூறாகவே அவர் சிக்கனத்தைக் கொள்கிறார். ஊதாரித் தனமை பகுத்தறிவின்மையேயாகும். மேலும் சிக்கன வாழ்வு ஒழுக்க வாழ்வென்பதும், சிக்கனமின்மை ஒழுக்கக்கேடு என்பதும் அவர் கருத்தாகும். வரவுக்குமேல் செலவிட்டால் பிறர் கையை எதிர் பார்க்க வேண்டியநிலை ஏற்படும். அந்நிலை ஏற்பட்டால் அது ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடச் செய்யும் என்றும் கூறிய அவர் வரவிற்குள் அடங்கும்படிச் செலவிட்டால் அது கவலையற்ற நல்வாழ்வை அளிக்கும் என்றும் கூறுகிறார். ஆகவே, சிக்கனம் கவலையற்ற சீரான வாழ்வைத்தரும் என்பதையும் சிக்கனமின்மை பிறரிடம் கையேந்தும் மானக்கேட்டையும் உண்டாக்கும் என்பதையும் மணமக்களுக்கு உணர்த்தி அவர்தம் அன்றாட நல் வாழ்வுக்கு வழிகாட்டுகிறார்.

இச்சிக்கனம் பற்றி மக்கள் நெஞ்சில் உறைத்து நிற்குமாறு அவர் கூறும் மற்றோர் அறிவுரையை இங்கு அவர்தம் வாய்மொழி வடிவிலேயே தர விரும்புகிறோம். இதோ படியுங்கள் அதனை;-

மணக்கள் தங்கள் வாழ்க்கையில் வரவுக்கேற்ற வகையில் செலவு செய்யவேண்டும்; கடன் வாங்கக் கூடாது. வரவு சிறிதாக இருப்பினும் அதிலும் ஒரு காசாவது மிச்சப் படுத்தனும். என்னைப் பொருத்தவரையில் ஒழுக்கம் என்பது இதுதான் என்பேன். வரவுக்கு அதிகமாகச் செலவு செய்வது விபச்சாரித்தனம் என்பேன்.

வரவுக்கு மேல் செலவு செய்வது எத்தகைய ஒழுக்கக் கேட்டை ஒக்கும் என்பதைப் பெரியார் வாய்மொழி வாயிலாகவே கேட்டவர்கள் சிக்கனம் தவறமாட்டார்கள். பெரியார் நெறியின் சிறப்புக் கூறுகளில் ஒன்றான சிக்கனம் பயன் மிக்கது என்பது மட்டுமேயன்றி எளிதாகப் பின்பற்றக் கூடியதுமாகும். பின்பற்ற முடியாத எதுவும் அவர் நெறியில் இடம் பெறாது. உண்மையை உணர்ந்து அறிவு கைவரப் பெற்றுவிட்டால் பின்பற்றற்கரியது என்று மலைத்துத் திணற வேண்டிய நிலை ஏற்படாது.

ஆகாறு அளவு இட்டிதாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
என்னும் வள்ளுவம் கூறும் கருத்தும் இதுதான். .....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -11

Sunday, 14 February, 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-9(4) (iv) தொடர்ந்து தேவிப்பாடல்களாம் 'அபிராமி அந்தாதி'  'ஆனந்தலகரி' மந்திரம் ஓதுக.

(5) (i) (ii) புத்தாடை வழங்குதல்;

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை,
போகமும் திருவும் புணர்ப்பானை,
பின்னை என் பிழையைப் பொறுப்பானை,
பிழைஎலாம் தவிரப் பணிப்பானை,
இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா
எம்மானை, எளிவந்த பிரானை,
அன்னம் வைகும் வயல்-பழனத்து அணி
ஆரூரானை, மறக்கலும் ஆமே? 
                                       ---சுந்தரர்

பொருள்;நிலையில்லாத பொருளாகிய பொன்னையும் நிலையான உண்மைப் பொருளாகிய திருவருளையும் தருபவரும், உலக இன்பத்தையும் வீட்டின்பத்தையும் சேர்ப்பவரும், என் தவறுகளைப் பொறுத்தருளுபவரும், தவறுகளே செய்யாதவாறு என்னைத் தடுத்து ஆட்கொள்பவரும், இவ்வாறான இயல்பை உடையவர் என்று அறிய இயலாதவருமான எம்பெருமானும், எனக்கு எளிதாகக் கிடைத்த தலைவருமாகிய அன்னங்கள் தங்கியிருக்கும் வயல்கள் நிறைந்த மருதநிலம் அழகுசெய்யும் திருவாரூரில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை என்னால் மறக்கவும் இயலுமோ?’ 

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் றன்னைப்
   பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
   சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
   ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
   கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!

                                   

                                                                                          ---ஆண்டாள் திருப்பாவை
 
பகைவரை வெல்லும் சிறப்புடைய கோவிந்தனே ! நாங்கள் உன்னிடம் பறை பெற்று உன்னை போற்றிப் பாடுவோம். அதனால் நீ அகமகிழ்ந்து எங்களுக்கு பரிசாக வழங்கும், நாட்டவர் எல்லாம் கொண்டாடுகின்ற அழகான சூடகம், தோள்வளை, தோடு, காதில் அணியும் மடல், காற்சதங்கைகள் மற்றும் பல ஆபரணங்களை நாம் அணிந்து மகிழ்வோம் ! அழகான ஆடைகளை உடுத்துவோம் ! 

பின்பு, பாற்சோறு மறையுமாறு அதன் மேல நெய் வார்த்து செய்த அக்கார அடிசிலை, எங்கள் முழங்கையெல்லாம் நெய்யொழுக நாம் உண்போம் ! இவ்வாறு உன்னுடன் சேர்ந்திருந்து, உள்ளம் குளிர்ந்து, பாவை நோன்பை முடிக்கவே நாங்கள் வந்துள்ளோம் ! எங்களுக்கு அருள்வாயாக !
 
http://balaji_ammu.blogspot.com/2007/01/tpv27.html 
 
(6) அரசாணிக்கால் நடுதல்;இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
    இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
    ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
    பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
    நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.


                                          ---அப்பர் ஆறாம் திருமுறை


பொழிப்புரை; (பொருள்) பெரிய பூமியாகியும், நீராகியும், தீயாகியும், எறியும் காற்றாகியும், ஆகாயமாகியும், ஞாயிறாகியும், அழிவில்லாத நிலையையுடைய திங்களாகியும், இயமானனாகியும் இங்ஙனம் அட்ட மூர்த்தியாகியும், பெருமையுடையதாகிய நன்மையும், சிறுமை உடையதாகிய குற்றமும், பெண்ணும், ஆணும் ஏனைய தேவருடைய வடிவங்களும் அருவம், உருவம், அருவுருவம் என்னும் தம் மூவகைத் திருமேனிகளும் தாமே ஆகியும், நேற்று ஆகியும், இன்று ஆகியும், நாளை ஆகியும் நீண்ட செஞ்சடையுடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத் தக்கதாகும். 
பூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்நின்ற நான்குமாய்* 
தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்தகா லிரண்டுமாய்* 
மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்* 
நீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே? 

                                             ---திருமழிசையாழ்வார்---திருச்சந்த விருத்தம்


பொருள்; பெருவெளியில் (பிரபஞ்சத்தில்-கோள்கள், விண்மீன்கள் உள்ளடக்கியது அது தான் பெருவெளி) நாம் வெளிப்படையாக உணரும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் இயற்கையின் குணங்களை..... பூமிக்கு ஐந்து குணங்கள், நீருக்கு நான்கு குணங்கள், தீக்கு மூன்று குணங்கள், காற்றுக்கு இரண்டு குணங்கள், ஆகாயத்திற்கு ஒரு குணம் என்று நீ இருப்பதை யாரால் நினைத்துப் பார்க்க முடியும் என்று வியப்படைகிறார். 

பூமிக்கு ஒலி, தொடுகை, உருவம், சாரம், மணம் என்று ஐந்து குணங்கள் உள்ளன. நீருக்கு அவைகளில் நான்கு குணங்கள் மட்டும் உண்டு. ஒலி, தொடுகை, உருவம், சாரம், அதற்கு வாசனை கிடையாது. நெருப்புக்கு ஒலி, தொடுகை, வடிவம் என்று மூன்று மட்டும் உண்டு. சாரம், மணம் இரண்டும் இல்லை. காற்றுக்கு ஒலி, தொடுகை இரண்டும் உண்டு. உருவம் சாரம், மணம் இல்லை. ஆகாயத்துக்கு ஒலி மட்டுமே உண்டு.

 (9) (i) திருநீறு அளித்தல்;

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணம் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணம் தருவது நீறு திருஆலவாயான் திருநீறே.


                                                       ---சம்பந்தர்
பொருள்;
காண இனியது நீறு - அணிந்தவர்களைக் காண இனிமையாக இருக்கும்படி செய்வது திருநீறு
கவினைத் தருவது நீறு - அழகையும் நற்குணங்களையும் தருவது திருநீறு
பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு - உளம் விரும்பி பேணி அணிபவர்களுக்கெல்லாம் பெருமையைக் கொடுப்பது திருநீறு
மாணம் தகைவது நீறு - மாண்பைத் தருவது திருநீறு. (உறுதிப்படுத்தும் ஆதாரமாய் (பிரமாணமாய்) அமைவது திருநீறு என்று தொடக்கத்தில் தவறாகப் பொருள் சொல்லியிருந்தேன்)
மதியைத் தருவது நீறு - நிலைத்த ஞானத்தைத் தருவது திருநீறு
சேணம் தருவது நீறு - விண்ணுலகப்பேற்றையும் உயர்வையும் அளிப்பது திருநீறு.
திருஆலவாயான் திருநீறே - அது திருவாலவாயாம் மதுரையம்பதியில் வாழும் இறைவனின் திருநீறே
http://koodal1.blogspot.com/2008/06/blog-post_25.html

 (ii) ஐந்தெழுத்து ஓதுவித்தல்; 'நமச்சிவாய'


இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே
.
                                ---அப்பர் நான்காம் திருமறை

பொழிப்புரை; வீட்டில் உள்ள விளக்கு ஆங்குள்ள இருளைப் போக்குவதாம். சொல்லின் அகத்து நின்று விளக்குவதாய், ஒளியுடைய தாய், பல இடங்களையும் விளக்குவதாய்ப் பல சமயத்தாரும் தம்மை அறியாமலே காண நிற்பதாய் ஞானம் நிறைந்த உள்ளத்திற்கு விளக்குப் போல ஒளியை நல்குவது திருவைந்தெழுத்து மந்திரமே. 

எட்டெழுத்து ஓதுவித்தல்; ''ஓம் நமோ நாராயணா''


”குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
        படுதுயர் ஆயின எல்லாம்
நிலம்தரம் செயும் நீள்விசும்பு அருளும்
       அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலம்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
        தாயினும் ஆயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
        நாராயணா என்னும் நாமம்”
                                      ---திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி

தாயைப்போல் அன்பு செலுத்த வேறு ஒருவர் உலகில் இல்லை. அதனாலேயே இறைவனை அடியார்கள் தாயினை விடவும் அன்பு செய்பவர் என்று குறிப்பிடுகின்றனர். அத்தகைய மேன்மை கொண்ட தாயின் அருமை இளவயதில் எல்லோருக்கும்  தெரிவதில்லை. இதன் காரணமாகவே தம் சுகம் ஒன்றையே பெரிதாக எண்ணி, தாய் தந்தையரைத் தவிக்க விடுவோரும் இவ்வுலகில் உளர்.


(11) (i) (ii) பெற்றோர் வழிபாடு

. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.(உயிர் வருக்கம் )
   தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. (
தகர வருக்கம்)
   தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.
                                                                 (ஔவை-கொன்றை வேந்தன்)
தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.

                 
           ---திருவருட்பா (இராமலிங்க அடிகளார்)

ஞான சபையில் ஏஆனக்கூத்தாடுகின்ற தெய்வம் எதுவோ அதுவே எனக்குத் தாயும் தந்தையுமாய் என்னைத் தாங்கி அருளும் தெய்வமாகும்; அது தனக்கு ஒப்பாக ஒன்றில்லாத தனித்த தலைமை பொருந்திய தெய்வமாகும்; வாயாரா வாழ்த்தி வணங்குகின்ற நன்மக்களின் மனத்தின்கண் எழுந்தருளுவதும் தாமரை மலர் போன்ற தன்னுடைய திருவடியை என் தலை மேல் வைத்தருளிய பெரிய தெய்வமும் அதுவேயாகும்; பிஞ்சும் காயுமாய் முதிர்தலின்றி எடுத்த எடுப்பிலேயே முற்றவும் கனிந்த பழமாய், என்னுயிரில் கலந்து இனிமை நல்கும் தெய்வமாய். எனக்கு அருட் செல்வமாய், எனது அறிவு அறியுமாறு எல்லாவற்றையும் குறைவறக் காணச் செய்யும் தெய்வமாய் விளங்குவதாகும். என்னைச் சிறு குழந்தையாகக் கொண்டு அருள் நெறியில் வளர்த்தருளும் மகா தெய்வமும் அதுவேயாகும்.


உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே

                                          --நம்மாழ்வார்--திருவாய்மொழி

பொருள்; இறைவனை நம்பும் அனைத்து சமயங்களுக்கும் பொருந்துமாறு ஆரம்பிக்கிறார். இறைவனின் தன்மைகள் பற்றி முழுதுமாய் சொல்லமுடியாதஅளவு உயர் நலம் உடையவனாக அவன் இருக்கிறான். அவனைப் பற்றி அறிந்துகொள்ளுவதற்கான நல்லறிவைத் தந்தவனுமாய் உள்ளான். இறைத் தூதர்கள்,சித்தர்கள், முக்தர்கள் போன்ற அமர நிலை அறிந்தவர்களும் என்றும் போற்றும் அதிபதியாக உள்ளான். அப்படிப் பட்டவனின் சுடர் போன்ற அடிகளைத் தொழுது, உயர்வு கொள் மனமே.


(12) (i) ஓம்படை செய்தல்;
(12) (ii) மணமகன் கைகூப்பிக் கொண்டு;

உங்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கு அப்பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைபோம் கேள்
எம்கொங்கை நின் பால் அன்பர் அல்லாது தோள் செரற்க
என்கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யறக்
கங்குல் பகல் எம் கண் மற்று ஒன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு ஏல் ஓர் எம்பாவாய்
.
                                                        ----திருவெம்பாவை---திருவாசகம்
உனது கையில் உள்ள பிள்ளை உனக்கே அடைக்கலம் என்ற
அந்தப் பழமொழியைப் புதுப்பிக்க நாங்கள் அஞ்சுகிறோம்.

ஏனென்றால் அது எங்களுக்கு தேவையில்லை.எங்கள் பெருமானே
உனக்கு ஒன்று சொல்லுகின்றோம், கேட்பாயாக.

நாங்கள் உன்னுடைய மெய்யன்பர்களையே மணந்துகொள்வோம்.உனக்கே
நாங்கள் என்றும் பணிவிடை செய்வோம்.இரவும்,பகலும் நாங்கள்
உன்னையே யாண்டும் காணவேண்டும்.

இந்த வாய்ப்பை இறைவா, நீ எங்களுக்குக் கொடுத்தருள்வாயாகில்
பிறகு சூரியனே தடுமாறி போய்விடினும் அதைப்பற்றி எங்களுக்குக்
கவலையில்லை.பாவையே, இப்பெருநிலையை ஏற்றுக்கொள்,பின்பு
இதனை ஓர்ந்து பார்மணமகன் மணமகளை நோக்கி;
முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ? பெருகு ஒளியால்  தன்னேரில் மாரனோ? தார் மார்பின் விஞ்சையனோ?
மின் நேர் செஞ் சடை அண்ணல் மெய்யருள் பெற்று உடையவனோ?  என்னே என் மனம் திரித்த இவன் யாரோ என நினைந்தார்
                                                                       ----திருமலைச் சருக்கம்


பொழிப்புரை;எனக்கு முற்பட வந்து என் எதிரில் தோன்றுகின்ற முருகப்பெருமானோ? பேரொளியால் தனக்கு ஒப்பில்லாத மன் மதனோ? மாலையை யணிந்த மார்பினையுடைய வித்தியாதரனோ? மின்னலையொத்த சிவந்த சடையினையுடைய சிவபெருமானின் மெய்ம்மையான திருவருளைப் பெற்றவனோ? என்ன வியப்பு? என் மனத்தைத் தன் வயப்படுத்தி நிற்கும் இப்பெருமகன் யாரோ அறியேன் என்று நினைந்தார்.


மணமகன் மணமகளை நோக்கி;

" கற்பகத்தின் பூங்கொம்போ காமன் தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ யாதொவென்று அதிசயித்தார் "
 
                                                                           ----தடுத்தாட் கொண்ட புராணம்

பொழிப்புரை; இவ்விடத்து யான் காணும் இப்பொருள் கற்பக மரத்தின் பொலிவினையுடைய கொம்போ? மன்மதன்தன் பெருவாழ் வாகக்கொண்ட இரதி தேவியோ? உயர்வுமிக்க புண்ணியத்தின் பயனாய் விளைந்ததொரு புண்ணியமோ? மேகத்தைச் சுமந்து, வில், குவளை, பவளம், பிறபிற பூக்கள், சந்திரன் ஆகிய அனைத்தையும் தன்னிடத்தே கொண்டதொரு கொடியோ? இவற்றுள் யாதானும் ஒன்றோ, அல்லது வேறொன்றோ? என அறிய ஒண்ணாத அற்புதத் தின் திரண்ட வடிவோ? அல்லது சிவனருளால் வந்ததொரு திரு வடிவோ? இவற்றுள் எந்த ஒன்றாகவும் உறுதிப்படுத்த அறியேன் என்று அதிசயித்தார். 

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1200&padhi=72&startLimit=286&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC 

கலப்பு மணம்

கலப்பு மணம் பற்றி பெரியார் கூறுபவையாக பேராசிரியர் மா.நன்னன் விள்குகிறார்.

சாதி என்னும் சொல்லே தமிழில் இல்லை; ஆகவே தமிழனுக்குச் சாதியில்லை. பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும் சாதியிருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. சாதி பற்றிய எண்ணமே இல்லாமல் தமிழர் தம்முள் உண்டும் உறைந்தும், கொண்டும் கொடுத்தும் வாழ்ந்ததாகத்தான் சங்க இலக்கியங்கள் பெருமிதத்துடன் முழங்கக் கேட்கிறோம்.

திருவள்ளுவர் ‘’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்றே குறிப்பிட்டுள்ளார். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்எனத் தமிழர் வாழ்வை அய்ந்து தினணகளாகப் பிரித்துதான் இலக்கண இலக்கிஞங்களைப் புலவர்கள் எழுதியிருக்கிறார்கள். வாழும் நிலம் போன்றவற்றால் சிற்சில வேறுபாடுகள் தமிழரிடையே நிலவியது உண்மையே தவிரப் பிறவியின் அடிப்படையில் சாதி வகுத்து வாழ்ந்த முறை தமிழர்க்குரியதே.

அது முழுக்க முழுக்க ஆரயக் கலப்பால் தமிழர்களிடம் வந்து புகுந்த பொல்லாங்குகளுள் ஒன்றாகும். ஆரியர்களின் இதிகாசங்கள் எனப்படும் இராமாயணம், பாரதம் ஆகியவற்றில் எல்லாமே சாதி அடிப்படையில் நடைபெற்றதாக்கக் கூறப்பட்டுள்ளது. அவர்களின் நீதி நூல்கள் யாவும் பார்ப்பானுக்கொரு நீதி மற்றவனுக்கு நீதி என வகுத்துள்ளன. அதைத்தான் மனோன்மணீய நாடக ஆசிரியர் சுந்தரனார்.
‘’வள்ளுவன் செய் திருக்குறளை மறுவறநன்குணர்ந்தவர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொரு நீதி’’

என்று தம் நாடக நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கலப்பு மணம் என்பது இந்திய நாட்டில் இன்று நேற்று ஏற்பட்டதல்ல; எல்லா மதங்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டும், வேத புராணக் காலங்களிலிருந்தும் சுமிருதி, சுருதி ஆகியவைகளால் அனுமதிக்கப்பட்டும் நடந்துவருகின்ற காரியந் தானே ஒழிய சுயமரியாதைக்காரர்கள் மாத்திரம் ஆரம்பித்து நடத்துவதாகச் சொல்லமுடியாது.

உண்மையில் கலப்புத் திருமணம் என்று கூற வேண்டுமானால் பார்ப்பனர். பார்ப்பனர் அல்லாதார் இருவருக்கும் நடைபெறும் திருமணம்தான் கலப்புத் திருமணம் என்று கூறவேண்டும். சாதிகளுக்குள் மிக உன்னத சாதி என்றும், கடவுளுக்கு அடுத்த அந்தஸ்து உடைய சாதி என்றும் கூறப்படுகிற சாதிதான் சமூகத்தில் மிகவும் கீழானதென்றும், சமுதாயத்தின் கடைச்சாதி என்றும் நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த வேற்றுமை ஒழிய வேண்டும். இவ்விரண்டு சாதிகளுக்கும் திருமணம் நடைபெறுவதைத்தான் கலப்புத் திருமணம் என்று கூறலாம்.

மனிதனுக்கு மனிதன் செய்துகொள்ளும் திருமண்த்தில் கலப்பு என்ன வந்தது? கலப்புத் திருமணம் என்பதே ஆரியர்கள் வந்ததிலிருந்து வந்ததுதான். அவன்தான் ஆடு, மாடு, கழுதையைக் கட்டிக் கொண்டிருக்கிறான் என்பதாக அவர்களுடைய புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள் என்பவைகளில் காணப்படுகின்றன. இது, அது போன்றதன்றி மனிதச் சீவனுக்கும் மனிதச் சீவனுக்கும் நடைபெறும் திருமணமேயாகும். இதில் கலப்பு என்று சொல்வதற்குப் பொருளே கிடையாது.


.....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -10