Pages

Wednesday 10 February, 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-6






iii செய்முறை விளக்கம்

மேலே கண்ட ஒவ்வொரு இனமும் நல்ல கருத்தை அடிப்படையாக கொண்டது.
தமிழரின் திருமணம் பண்டைக் காலத்திலே, சோலையிலே தான் முகிழ்த்தது. ஒருவனும், ஒருத்தியும் ஒருமனப்பட்டனர். அதற்கு அரசு மரத்தைச் சான்றாக வைத்துக் கொண்டனர். தெய்வத் திருவருளால் திருமணம் கூடுகிறது என்னும் நம்பிக்கை உடையவர்கள் நம்மவர்கள்.

மணப்பந்தல், பந்தற்கால்;
‘மணப்பந்தல்’ பண்டைக்காலத்திய சோலையை நினைவூட்டும். தெய்வ அருளால் மணம் கூடுவதால், அச்சோலையைப் ‘பந்தற்கால்’ என்னும் தெய்வச் சடங்கு வைத்து நடுவர். அரசமரம் திருமணத்திற்கும் ஆணிக்கால்போல சான்றாவதைக் குறிக்க அரசாணிக்கால் நடப்பெறுகிறது.
மண மனண;
மணமக்கள் அமரும் மணையின் அடியில் நெல்லோ, அரிசியோ இடுவர் அவர்கள் வாழ்வு நெல்லுக்கும் அரிசிக்கும் சிறிதும் குறைவு இன்றி அமைய வேண்டும் என்னும் அவாவினைக்குறிப்பதாகும். .வாழ்வுக்கு அடிப்படைப் பொருள் அரிசியே அன்றோ?

நிறை குடங்கள்;
மணமக்கள் இருவரின் இல்லற வாழ்க்கை. நிறைவானதாக அமைய வேண்டும். என்பதற்கு அறிகுறியாக இருநிறை குடங்கள், மங்கலத் தோற்றத்துடன், மணமக்கள் கண்முன்னே விளங்குவதற்கு அமைக்கப் பெறுகின்றன. குடங்களை வைக்க, அடியில் இடும் மணல், எதிர்பாராமல் எப்போதேனும் பந்தலில் தீப்பற்ற நேருமானால், அனைப்பதற்கு உடனடி உதவக்கூடியது. குடங்களில் உள்ள நீர் அவ்வண்ணமே பயன்படக்கூடியது.
குட விளக்கு;
மணமாகும் வரையில் மணமக்களின் நெஞ்சமாகிய குடத்திற்கு உள்ளேயிருந்த ஒளி விளக்கம், மணத்தினால் குடத்திற்கு வெளியே வந்து ஒளிவீசப் போகிறன்றது என்பதற்கு அடையாளமே குடவிளக்கு. இது அனணயாமல் இருக்க வேண்டும். எனவே இதற்கு இலை மறைப்பு மண நிகழ்ச்சிக்குப்பின் இவ்விளக்கை விழிப்பாகக் கொண்டு சென்று, வீட்டிற்குள் தூய இடத்தில் வைப்பர்.
முளைத்த கூலம்;
முளைத்த நவதானியம், மணமக்களின் கண் எதிரே அழகு செய்து, அவர்கள் ஒன்று பலவாக, அறிவில், திறமையில், ஆற்றலில், செல்வத்தில், சிறப்பில், பிறவற்றில் இனி முளைக்க வேண்டும் என்பதை அறிவுறுத்திக் கொண்டு இருக்கிறது.

அம்மியும் குழவியும்;
அம்மியும், குழவியும், மணமக்கள் எதைச் செய்தாலும் ஒன்றாக இருந்து செய்யவேண்டும் என்பதை நினைவுறுத்தியபடி விளங்குகின்றன. அம்மி தெருவிலும் குழவி புழக்கடையிலும் இருந்தால், அவற்றால் ஏதேனும் பயன் உண்டா?
தமிழ்த் திருமணப் பந்திலில் அம்மி மட்டும் போட்டு வைப்பதில்லை. குழவியும் இன்றியமையாமல் உடனிருக்கும். பிறவகை மணங்களில் அம்மி மட்டுமோ அல்லது ஒரு கருங்கல் துண்டோ இருப்பதைக்காணலாம். அகலிகை சாபத்தை நினைவூட்டவோ, அல்லது மணமக்கள் ஏழடி நடப்பதில் முதலடி எடுத்து, வைப்பதற்குப் பயன்படவோ எந்த கருங்கல்லும் சாலுமே, என்று அவ்வகையில் மணங்களைச் செய்து வைக்கும் ஆசிரியர் கூறக் கேட்டது உண்டு.

கை விளக்கு;
கைவிளக்கு மங்கல நாண் சூட்டும்போது மணமக்களின் உடன் பிறந்தாள் ஏந்தி நிற்கவும், வலம் வரும்போது முன்னே ஏந்திச் செல்லவும் பயன்படுகிறது. மங்கல நாண் சூட்டியதற்கு ஒரு முக்கிய சான்றாவார் விளக்கு ஏந்தியவர். வாழ்க்கையில் உலாவி வருவதற்கு, அறிவான ஒளி முன்னே செல்லப் பின்னே செல்ல வேண்டும் என்பதே விளக்கு எடுப்பதன் கருத்து.
கிளை விளக்கு;
கிளை விளக்கு அழகுக்கு மட்டும் அன்று, ஒரு விளக்கு அணைந்தாலும் பிற விளக்குகள் எரியும். காளைகளிலுள்ள எல்லா விளக்குகளும் ஒரே நேரத்தில் அனைந்து அமங்கலம் விளைவித்துவிடா.
அம்மையப்பர்;
உலகமே ஆணும் பெண்ணுமாக இயங்குகிறது. உயிரற்ற பொருள்களிலும் ஆண் உண்டு. பெண் உண்டு. மினவிசை ஒரு சடப்பொருளே. அதிலும் ஆண் ஆற்றல் பெண் ஆற்றல் இருப்பதை (Positive-Negative) காண்கிறோம். அண்டங்களை எல்லாம் நடத்திக் காத்துவரும் பேரறிவும் பேராற்றலுமான பரம் பொருளும் ஆணும் பெண்ணுமாக இயங்குவதை நம் முன்னோர்கள் உணர்ந்து அதனை அம்மையப்பர் என்றும் மாலும் திருவும் என்றும் போற்றிவரலாயினர். அப்பரம் பொருளையே இரு குடங்கள் உருவத்தில் மணமக்கள் கண்டுவழிபடுவதற்கு ஏற்றமுறையில் இரு செம்புகளில் எழுந்தருளச் செய்வது மரபு. சைவ, வைணவ நெறியினர் இருவர்க்கும் இம்மரபு பொது.

நலங்கு;
மணமக்களுக்கு நலங்கு வைப்பது, அவர்களை இல்லற வாழ்வுக்கு ஆயத்தம் ஆக்கல். இது ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சி மணமக்கள் சமுதாயத்தில் கலந்து பழகும் மனநிலையை வளர்ப்பது (நலுங்குதல்-கசங்குதல், இலக்கணமாதல்)

மண உடை;
மண ஆடையை இறைவனுக்குப் படைத்து அதற்கு அவையினரின் வாழ்த்துப் பெற்று, வழங்குவது. பெண்ணும் மாப்பிள்ளையும்,, முதல்முறையாக மணக்கோலம் பூண்பதற்குத் திருவருள் துணையும் மக்கள் நல்லெண்ணமும் நிலவ்வேண்டி.
அரசாணிக்கோல்;
அரசமரமே, காதலன் காதலி இருவரது உள்ளங்களும் முதன் முதலில் சோலையில் ஒன்றியதற்குச் சான்றாக அமைந்தது. சோலையிலுள்ள தாவரங்களினல் தலைசிறந்து ஓங்கி வளர்ந்த்து. வாழ்வரசியர் கூடி அரசங்காலை நடுவது. மணமக்கள் அரசு போல பன்னெடுங்காலம் மங்கல வாழ்வு வாழ்ந்து வரவேண்டி.

மணப்பொங்கல்;
இப்பொங்கல் படையல்கள், திருமணப் பந்தலில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரியன, மணமணை ஏறுவதற்கு முன்பு மணாளனும் மணாட்டியும் கடவுளை வழிபட்டு அன்னதானம் செய்யும் நோக்கமுடையது.
(மணப்பொங்கல் சில குடும்பங்களில் இடுவதோ படைப்பதோ இல்லை).

காப்புக்கட்டல்;
இருவரும் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்வை இனிது நடத்துவோம் என்னும் உறுதியைத் தெரிவிப்பதே மணமக்கள் காப்பு அணிதல். சான்றாக நின்ற அரச மரத்திற்கும் முன்னதாகக் காப்புக் கட்டுவது பொருத்தமே.

பெற்றோர் போற்றல்;
சோலையிலே இருவரும் உளங்கலந்து திருமணம் பூண உறுதி செய்து கொள்வதே பண்டை நாளில் தமிழகத்தில் நடந்தது. பிறகு பெற்றோரின் ஒப்புதல் பெறுவர். அதற்கு வாயிலாக அமைவதே மணமக்கள் அவரவர் பெற்றோர்களுக்குத்திருவடிப் பூசை செய்து வணங்குவது பெற்றோரில் ஒருவரோ, இருவருமோ இல்லாதபோது, பெற்றோர் நிலையில் கணவன் மனைவியுமாக இருக்கும் இருவர் பாத பூசை செய்து கொள்வர்.

ஓம்படை செய்தல்;
ஓம்படை செய்ல் சங்ககாலச் செய்யுள்களில் பொறிக்கப் பெற்றுள்ள ஒரு வழக்கு.
மற்ற முறைகளில் நடைபெறும் திருமணங்களிலே கன்னியைத் தாரை வார்த்துத் தத்தம் செய்வது போன்றது அன்று. மணமகனும், மணமகளும் ஒத்த நலங்கள் உடையவர்கள். ஆதலின், பெண்ணை மாப்பிள்ளைக்குத் ‘தானம்’ செய்வதோ. தத்தம்ய பண்ணுவதே தமிழ் மரபுக்கு முற்றும் மாறானது. பெண்ணை ஆணுக்கு அடிமையாக்கல் தமிழ் வழக்கில் இல்லை.


இறை வழிபாடு;
இறைவனை மணமக்கள் வழிபடுவதற்கு விளக்கம் தேவை இல்லை. இருவரின் வாழ்விலும் ஈடு எடுப்பற்ற ஓர் இன்ப நிகழ்ச்சி நடைபெறுவதற்கு அவர்களைப் போலவே, ஆணும் பெண்ணுமாக அங்கிங்கு எனாதபடி விளங்கும் எல்லாம் வல்ல பரம்பொருளை இங்கித மண அறையில் வணங்குவது இன்றிஅமையாதது அன்றோ?.
மங்கல நாணுக்கு வாழ்த்து;
மங்கல நாண் தேங்காய் மேல் சுற்றப் பெற்றிருக்கும் தேங்காய் ஆடாதபடி, அரிசியின் மீது பொறுத்தப் பெற்று இருக்கும். அவையினர் தாலியைத் தங்கள் இருகரத்தாலும் தொட்டு, தூய சிந்தனையோடு வாழ்த்துவதற்கு ஏற்றபடி பொன் தாலி மேல்புறமாக அனைவர் கண்களிலும் தோன்றும்படி இருக்கும். திருமணத்திற்கு இன்றியமையாத அடையாளமாக வந்துவிட்ட தாலியைத் தொடுவதால் திருமணம் ந்டந்த்தற்கு அவையினர் சான்றாகின்றனர்.
மங்கல நாண் சூட்டும்போது, கெட்டிமேளம் அடிக்குமாதலின் அவையினர் நினைவு, தாலி கட்டும் நிகழ்ச்சிக்கு ஈர்க்கப் பெற்று, கையில் வைத்துள்ள மஞ்சள் அரிசி மலரைத் தூவி, தாலி கட்டியதற்கு நேர்ச்சான்றாகவும் அவையினர் ஆவர்.


அழல் ஓம்பல்;
அழல் ஓம்பல், இறைவன் ஒளி வடிவில் போற்றுவதற்குத் துணையாவது, இறைவன் ஐந்து பெரும் பொருள்களான நிலம், நீர். நெருப்பு, காற்று வெளி இவற்றில் ஊடுருவித் தங்கி உள்ளான் என்னும் உண்மைச் சிந்தனை செய்து நிலத்தின் மீது நீர் நிரம்பிய இரு கலசங்கள் வைத்து, எதிரே நெருப்பை வளர்த்து, வ்ழிபடுவது இயற்கைக்குப் பொருத்தமாவதே, காற்றும் வெளியும் முன்னைய மூன்றுள் கலந்தனவாகும். ஆதலின், ஐம்பூதங்களிலுமே இறைவனை உணர்ந்து போற்றுவதற்கு அம்மையப்பர் வழிபாடும், ஓமமும் வாயிலாகின்றன்.
இழல் ஓம்பல் பண்டைய நாளில், திருமணங்களில் இடம் பெற்றிருந்ததா என்பது ஆராய்ச்சிக்குரியதே. ஆயினும், ஒளிவழிபாடு சிறந்தது. என்பதை உன்னி இதனை மண நிகழ்ச்சியில் ஓர் இனமாக வைத்துக் கொள்வது அறிவுக்கு உகந்ததே.

அழல் ஓம்பல் 2;
இரண்டாவது ஒருமுறை ஓமம் வளர்ப்பது, கோள் குறைபிற குறைகளைத் தீயின் முன் தூசுபோல் அகலச் செய்ய இறைவனின் அருளைத் தீ வடிவில் வழிபடுவதற்காகும்.
மங்கல நாண் சூட்டல்;
மங்கல சூட்டும்போது, மணமக்களின் உடன் பிறந்தநாள் கைவிளக்கேந்தி நிற்பது பந்தலில் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றி ஒளி அளிக்கப் பயன்டுவதோடு, தாலி கட்டியதற்குத் தக்க சான்றாக மாப்பிள்ளையின் அக்கா தங்கையே அமையவும் ஏற்பாடு செய்த்தாயிற்று.
தமிழ்மணத்தாலி, புலிப்பல் போன்றது. மணமகனின் வீரத்திற்கு அடையாளமாக அவன் புலியைக்கொன்று கொண்டுவந்ததாகக் கருதுதற் பொருட்டே இன்றும் தாலி புலிப்பல் வடிவில் செய்யப்பெறுகிறது.


சிக்கனத் திருமணம் பற்றி பெரியார் கூறியவை;

பெரியார் உருவாக்கித் தந்த திருமண முறை வீண் செலவுகள் தவர்க்கப்பட்டு மிகமிகச் சிக்கனமாகவே நடைபெறவேண்டும் என்பது ஒரு கட்டாயமாகும், மற்றும் எல்லாத் திருமணங்களும் பதிவு செய்யப்பெறவேண்டுமென்றும் அவர் வற்புறுத்துகிறார். சாதி பொன்ற எந்த வேறுபாடும், வரையறைகளும் இல்லாமல் ஆணும் பெண்ணும் தம் துணைவரைத் தேர்ந்தெடுக்க முழு உரிமையிருக்கவேண்டுமென்றும் அவர் தெரிவிக்கிறார். துணைவர்களான பிறகு எக்காரணத்திலாவது ஒத்து வாழ விரும்பாத போது திருமண ஒப்பந்தத்தை விலக்கிக் கொள்ளவும் உரிமையிருக்கவேண்டும் என்பதோடு கணவனை இழந்த பெண் மறுமணம் செய்து கொள்ள உதவ வேண்டுமென்றும் மன்பதையன்பராம் பெரியார் வகுத்துரைகக் காண்கிறோம். என்று பேராசிரியர் மா.நன்னன் குறிப்பிடுகிறார்.

மேலும்...
வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொண்டு வாழும் ஆணும் பெண்ணும் எவ்வகை ஏற்றத் தாழ்வுமற்று ஒத்த உரிமையுள்ள சமமான நண்பர்களாக ஒருவரையொருவர் கருதி நடைமுறையிலும் அதைப் பின்பற்றத் தவறக்கூடாது. அவ்வாறின்றிப் பெண்ணை ஆண் தன் அடிமை பொல் கருதி நடத்தும் பழைய கோட்பாட்டைப் பின் பற்றுவதாயிருந்தால் பெண் அவ்வாறு மணந்து வாழ்வதைவிடத் தருமணமே செய்து கொள்ளாமல் தனித்து வாழ்வது எவ்வளவோ மேல் என்று கூறும் பெரியார் எதற்காக ஆணுக்குப் பெண் அடிமையாக இருக்கவேண்டும்? பெண் ஒப்புக் கொள்ளாவிட்டால் என்ன செய்ய முடியும்? என்றும் வினாவுகிறார். பெரியார் குறிப்பிடுவன்...

வாழ்க்கை ஒப்பந்தத்திற்கு அறிவு, அன்புப் பொருத்தம், அனுபவம் ஆகிய பல காரியங்களே முக்கியமானதாகும். இவற்றில் முரண்பாடு ஏற்பட்டுவிடுமாயின் அந்தத் திருமணமே இவர்களுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தமே‍‍ ‍‍...முறிந்து விட்டதாகவே அர்த்தம். என்று பெரியார் கூறுகிறார்.


.....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -7

No comments: