Pages

Friday, 5 February 2010

தவறான கணிப்பு..... பாதிப்பு யாருக்கு.....!





இந்தப் பதிவு சில ஆண்டுகளுக்கு முன் என் நண்பரும் நானும் சந்தித்த நிகழ்வினை பகிர்ந்து கொள்ளும் எண்ணமே. இது அனைவருக்கும் என்றாவது ஒரு நாள் நிகழலாம். நிகழாமலும் போகலாம்....

ஒரு முறை என் அலுவலக் மூத்த நண்பர்  ஒருவர் தற்செயலாக என்னிடம் ஒரு 3000 ரூபாயை கொடுத்து ஆயுள் காப்பீட்டில் அந்த பக்கமாக செல்லும் வேலையிருந்தால் கட்டிவிடவும் என்று கூறினார். அனைத்து ரூபாய் தாள்களும் இந்தியாவன் பிரபல தனியார் வங்கியில் இருந்து தானாயங்கி மூலம் பெறப்பட்டவை ஆகும்.  இரண்டு 500 ரூபாய் தாள்களும் இருபது  100 ரூபாய் தாள்களும் இருந்தன. 100 ரூபாய் தாள்கள் அனைத்தும் ஒரே வரிசையில் அடங்கிய தொடர் எண்கள் கொண்டவை. 

அவர் கொடுத்த பணம் லேசாக கசங்கி இருந்தது. காரணம், இந்த 100 ரூபாய் நோட்டுக்களை பழைய கால் சட்டையிலிருந்து (பேன்டிலிருந்து) எடுக்காமல் அதை அப்படியே மின்சார சூடு சலவை எந்திரத்தில் (டிரையர்) போட்டு துவைத்துவிட்டார் மனிதர். அதற்குப்பின் தான் அவருக்கு அந்த ரூபாய் தாள்கள் கால் சட்டையில் வைத்ததே ஞாபகத்திற்கு வந்திருக்கிறது.  பின்பு அது அனைத்தையும் எடுத்து பார்த்தவுடன் தாள்களின் மேல் உள்ளப் பூச்சுக்கள் லேசாக அழிந்திருந்தது. (மைகொட்டினால் அழிந்தது போல் அல்ல) தாள்களின் மேல் வழவழப்பான பூச்சு மட்டுமே அழிந்து லேசாக ஒரு சில இடங்களில் மட்டும் சொர. சொரப்பாக மாறியத் தாள்களாக கிழியாமலே இருந்தது.

இன்னும் புதுசு போலவே இருந்தது.  வழக்கமாக துணிகளில் தெரியாமல் வைத்துவிட்டு பின் துவைத்து விட்டு பார்த்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்தது. பலத் தாள்களை அப்படித்தான் பயன்படுத்தியிருக்கிறோம். இன்னும் பயன்படுத்தி கொண்டு தான் வருகின்றோம். மேலும் இது மாதிரி துவைப்பதினால் இந்த தாள்கள் பாதிப்படைவதில்லை என்பதும் இந்திய சேம வங்கி (இந்திய ரிசர்வ் வங்கி) அளித்துள்ளத் தகவல்கள் தான். 

அதன்படி அவரிடம் இது ஒன்றும பெரிய விஷயமில்லை என்று வாங்கிச் சென்று கட்டத் தயாரானேன். அந்த அலுவலகம் ''''என்  நண்பர்கள் பணிபுரியும் ஆயுள் காப்பீட்டு கிளை அலுவலகம் தான். ஆகையால் பிரச்சினை ஒன்றுமில்லை என்றும், வந்தால் உங்களை தொடர்பு கொள்கிறேன்'''' என்று கூறிப் பெற்றுச் சென்றேன்.

அதே போன்று கிளைக்குச் சென்று கட்டணம் செலுத்தும் இடத்தில் அந்த பணத்தை கொடுத்து காப்பீட்டு எண்ணையும் கொடுத்தேன். காசாளராக பெண் தான் இருந்தார். வழக்கம் போல் அனைத்து நோட்டையும் புறவூதாக் கதிர் உட்பாட்டுக்கு கொண்டு சென்றனர். அதில் என்ன தெரிந்த்தோ? தெரியவில்லை? (ஒரு அலை போன்ற மாறுபாட்டை காட்டியிருக்கும் மற்றபடி அது எந்த தகவலையும் அளிக்காது) இது போலி என்று சுட்டிக்காட்டினர். நான் அந்த நபருடைய காப்பீட்டு எண் மற்றும், தொலைபேசி எண், அனைத்தையும் கொடுத்து அவரிடமே இது பற்றி விசாரிக்கச் சொன்னேன். இருந்தாலும் நான் தான் அளித்தேன் என்பதால், என்னையே தொடர்பு கொள்ளச் சொன்னார்கள். நான் அவரிடம் தொடர்பு கொண்டு அந்த தாள்கள் எங்கிருந்து பெறப்பட்டது என்ற விவரத்தையும் சொன்னேன்.

அது சம்பந்தமான பரிவர்த்தனை ரசீதும் (டிரான்சாக்சன் சிலிப்) தன்னிடம் உள்ளதாகவும் அது எந்த வங்கியிலிருந்து பெறப்பட்டது என்பதையும் நண்பர் தெரிவித்தார்.  பின் அந்த தனியார் வங்கியை அவர் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். எங்களிடம் அந்த மாதிரி தாள்கள் வருவதில்லை. அதை தணிக்கை செய்ய தனியாக ஒரு பிரிவே செயல்படுவதாகவும் அந்த வங்கி கறாராகத் தெரிவித்தது. அந்த எண்ணில் சரியானத் தாள்கள் உள்ளது என்பதை அந்த வங்கியும் தெரிவித்த்து. அப்படி சந்தேகம் என்றால் வேறு தாள்கள் தரவும் அந்த தனியார் வங்கி ஒப்புக்கொண்டது. இது அனைத்தையும் தொலைபேசியில் தெரிவித்தார்.

ஆனால் இவர்கள் அருகில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் உள்ள காசாளரிடம் இந்த தாள்களை காட்டி அவரிடமும் வய்மொழி மூலம் போலி என்று ஒப்புதல் பெற்றுக் கொண்டனர்.

அந்த காப்பீட்டுக் கழகத்தில் பணிபுரியும் நண்பர் இவரை எனக்குத் தெரியும் இவரைத் தொந்தரவு செய்யாதீர்கள் எனக் கூறிவிட்டார்.  அவர்கள் பின் என்னை தொந்தரவு செய்வதை விட்டு விட்டனர். பிறகு உள்ளே சென்று மேலாளர் அறையில் ஏதேதொ பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் அவர்களாகவே வந்து அனைத்து தாள்களிலும் போலி என்று தடிமனான எழுத்தில் எழுதினர்.. அப்படியே நன்றாக உள்ள  500 ரூபாய் தாள்களிலும் எழுதிவிட்டனர். அது நான்றாகத்தானே இருக்கிறது என்றால் இல்லை, ஒருவர் கொண்டு வரும் தாள்களில் ஒரு கத்தை நோட்டே போலி என்று கண்டுணர்ந்தால். அவர் கொண்டு வந்துள்ள தாள்கள் அனைத்துமே போலியாகத் தான் இருக்கும் என்ற முடிவுக்குத் தான் வரமுடியும் என்று கூறிவிட்டனர். (எல்லாமே யூகம் தான்)


இதற்கு பின் நண்பரே கிளைக்கு வந்து என்னிடம் முதலில் வருத்தத்தை தெரிவித்தார். வீணான சிரமத்திற்கு உங்களை ஆளாக்கிவிட்டேன் என்று மிகவும் வருந்தினார். அவருக்கு என்னை சிக்கலில் மாட்டவிட்டோமே என்ற வருத்தம் மட்டுமே. மற்றபடி இது ஒரு பெரிய விஷயமில்லை. அவரே மேலாளர் அறைக்கு அனைத்தையும் விவரித்து அது சம்பந்தமான ரசீதுகளையும் கொடுத்தார். அவரிடம் போலி என்று எழுதப்பட்ட தாள்கள் ஒப்படைக்கப்பட்டது.  அவரும் இதில் ஏன் எழுதினீர்கள் என்று வினவினார். இப்படித்தான் எழுதி ஒப்படைக்க வேண்டும் இல்லையேல் காவல் துறையிடம் தான் ஒப்படைக்க முடியும் என்றனர். அவர் தாராளமாக புகார் செய்யுங்கள், இல்லை நானே செய்யட்டுமா? என்றார், என் நண்பர். அப்போதே பதட்டம் ஏற்பட்டுவிட்டது. இல்லை என்று ஒருவாறு மழுப்பினார்கள். சரி அது போலி என்பதை எழுத்துமூலமாவது தாருங்கள் என்று கேட்டார். தரமறுத்து விட்டனர்.

 உடனே ''''நீங்கள் இதை போலி இல்லை என்பதை எப்படி நிருபிப்பீர்கள், முடிந்தால் நிருபியுங்கள்'''', அதற்கு பின்  நாங்கள் தருகிறோம்?'''' என்றனர் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தினர். நாங்கள் போக மாட்டோம் என்று நினைத்து கொண்டனர் போலும்.  பதிலுக்கு நாங்களும், ''''நீங்கள் எப்படி யூகித்தீர்கள் என்று தானே எழுத்து மூலம் கேட்கின்றோம்''''. ஆனால்  இதற்கு பதிலில்லை, இது தானே அரசு நிறுவனம்.

இதை நான் கூட பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை  இதை பெரிய விஷயமாக நண்பர் எடுத்துக் கொண்டார். அதுவும் நல்லது தான். இல்லாவிட்டால் இந்த பதிவு எழுதியிருக்க முடியாது. அந்த தாள்களை அந்த வங்கியில் கொண்டு சென்றவுடன் அவர்கள் வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர், அதற்கான கடிதத்தையும் தருகிறோம் என்று கூறினர். ஆனால் இதில் போலி என்று எழுதப்பட்டுள்ளதே. இப்போது நாங்கள் தலையிடமுடியாது. இதை சாதாரணமாக ஒருவர் எழுதமுடியாது. ஆகையால் இதை ஆய்வுக்கு உட்படுத்த ரிசர்வ் வங்கிக்கு கொடுங்கள் என்றார்.

அங்கே அவருடையை உறவுகள் பணிபுரிந்து வந்ததால் (மற்றவரும் நாடலாம்) அவர் பணி எளிதாக முடிந்தது. அவர்கள் இந்த தாள்கள் உண்மையானவை,. அசல் தாள்கள் தான் என உறுதியளித்தனர். மேலும் இதை யார்? இப்படி எழுதினார்களோ? அவர்கள் மீது  நீங்கள் விரும்பினால் நடவடிக்கை எடுக்கலாம் என்று அந்த தணிக்கை அதிகாரி கடிதம் கொடுத்து விட்டார். மாற்றுத் தாள்களையும் தந்துவிட்டனர். இல்லை நாங்களே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் அந்த தாள்கள் மேல் அப்படி எழுதிய அலுவலகத்தில் இருந்து கடிதம் பெற்று வருமாறு கூறினார்கள்.

உடனே அவர் என்னை நாடினார். அதே போன்று கிளையையும் நாடினார். ஆயுள் காப்பீட்டுக் கிளையில் கடிதத்தை காண்பித்ததும் பயந்து விட்டனர். உடனே அன்று போலி என்று வாய் மொழியாக உறுதி கொடுத்த தேசியமயமாக்கப்பட்ட வங்கியை கை காட்ட ஆரம்பித்தனர். உடனே விடவில்லை நம் நண்பர் ''''அங்கே போய் அந்த காசாளரிடம் கடிதம் வாங்கிவருமாறு'''' அறிவுறுத்தினார். இல்லையேல் ''''நீங்கள் கொடுங்கள் ''''

அவர்கள் போய்  தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கேட்டவுடன் ''''நீங்கள் சொன்னதற்காகத் தான்  நான் அப்படி சந்தேகமாகத் தான் கூறினேன்''' என்று காசாளார் நழுவினார். ''''நான் விளக்கினடியில் பார்க்கும் பொழுதும் அப்படித் தெரிந்தது''''. நீங்கள் நம் வாடிக்கையாளராயிற்றே, அதனால் தான் கூறினேன் என்று மேலும் ஆதரவாக நைசாகப் பேசி அவர்களை அனுப்பிவைத்தார். வெறுங்கையுடன் வந்து கிளை மேலாளரிடம் முறையிட்டனர் ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள்.

இது பற்றி விவாதித்து நல்ல முடிவெடுப்பதாக கூறி எங்களை அப்போதைக்கு அனுப்பி வைத்தார்., பின் கிளை மேலாளர், வளரச்சி அதிகாரி என்று ஒரு குழுவாக சென்று பேசி விவாதித்தப் பின் இறுதியில் ஆயுள் காப்பீட்டு நண்பர் மூலம் என்னிடம் சமரசத்திற்கு இரவு 1 மணியளவில் என்னிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். ""இதை அப்படியே விட்டு விடுமாறு உங்கள் நண்பரை அறிவுறுத்துங்கள் "" என்று கெஞ்சினார்கள். ""இதனால் இருவரின் வேலையே போய்விடும்"" என்ற காரணத்தையும் காட்டினர்.  ''''இதை பற்றி மேலிடத்திலும் விசாரித்தோம் அவர்களும் ஆமாம் இது தவறு தான் என்று கூறினார்கள்.  ஏதோ தவறு நடந்து விட்டது..... இதை இத்தோடு சுமுகமாக முடித்து வையுங்கள். மேலாளர் மிகவும் கலவரமுற்று இருக்கிறார்.''''... என்று தெரிவித்தனர்.

ஆனால்  பாதிக்கப்பட்ட நண்பர் விடுவதாயில்லை என்பதை பதிலாகத் தெரிவித்தேன். ஆகையால் தான் உன்னிடம் பேசி அதை ஒரு அமுக்கு அமுக்கச் சொல்கிறோம். '' ''அவர் மிக கோபமாக இருக்கிறார்,'''' என்று கூறினார்கள். 

வேறு வழி என்ன செய்வது. அவரிடம் இது பற்றி கூறினேன். அவர்கள் எந்தளவுக்கு நம்மை அலைய வைத்திருப்பார்கள், உங்களுக்கும் மனவுளைச்சல் தந்திருப்பார்கள், அவர்களை சும்மா விடவா சொல்கிறீர்கள்? என்றார். ஆனால் கேட்பதும் ஒரு நண்பர் தான் என்று விளக்கினேன். '' ''நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ அப்படியே செய்யுங்கள்'' '' என்று  பிரச்சனையை அத்தோடு விட்டு விட்டார்.

இதை எதற்கு கூறுகிறேன் என்றால் சட்டம் தெரியாமல் இருந்தால் இது மாதிரி சிக்கல்களில் நாமும் சமயங்களில் மாட்டிக்கொண்டு அவதிப்பட நேரிடும். ரிசர்வ் வங்கி கூறும் தகவல் இதுதான் போலி தாள்கள் பரிசோதிப்பது என்பது பல கட்ட சோதனைகளுக்கு உட்பட்டது. இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முதல் கட்டத்திலேயே அதுவும் புற ஊதா விளக்கின் முடிவிலேயே ரூபாய்த்  தாள்கள் போலி என்ற தவறான முடிவுக்கு வந்து விடக்கூடாது. அப்படி வந்தது இல்லாமல் ரிசர்வ் வங்கி கையிலெடுக்கும் அதிகாரத்தை தாங்களே எடுத்துக்கொண்டு ரூபாய்த்தாள்களில் போலி என்று எழுதியது அதை விட பெரிய குற்றம். இதனால் அந்த நிறுவனத்தில் உள்ளவர்கள் மேல் குற்றவியல்  (கிரிமினல்) வழக்கை வாடிக்கையாளரும் தொடுக்க முடியும். ரிசர்வ் வங்கியும்  புகாரின் பேரில் மேல் நடவடிக்கை எடுக்கும். அசல் தாள்களை போலி என்று தன்னிச்சையாக அறிவிப்பது எவ்வளவு தவறு, அதற்கான சட்டம் என்ன என்பதை உணராமலேயே அந்த ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள் செய்துள்ளனர். வாடிக்கையாளரையும் பல்வேறு மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். 

ஆனால் ரிசர்வ் வங்கி அந்தத் தாள்களை கையில் வாங்கியவுடனேயே ''''இது அசல் தாள்கள் தான். இதை யார் போலி என்று  இப்படி முட்டாள் தனமாக எழுதியது'''' என்று கேட்டனர்.  ஆக ருபாய் தாள்கள் பரிசோதிப்பு முறையும் அரசு அலுவலகங்களில் உள்ளவர்களுக்கு சரியான பயிற்சி இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. ஏதோ குருட்டுப் போக்கில் எல்லாவற்றையும் தவறாக கணிக்கின்றனர். நமக்கும் தொந்தரவு தருகின்றனர்.


ஒரு நிர்வாகம் எதையும் அறியாமல் ஏதோ பெரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து விட்டோம் என்று ஆர்ப்பரித்து கொண்டு செய்ததின் விளைவு. அதை செய்ததற்கான ஆதாரத்தையும் தாள்களின் மேல் அவர்கள் கைப்பட எழுதிவிட்டனர். 

இம்மாதிரி ரிசர்வ் வங்கியே உடனே முடிவெடுக்காதாம். அது பல ஆய்வுகளுக்கு பின் தான் இறுதி செய்யப்படும். சமயத்தில் இது மாதிரி துணி துவைப்பதினால் ஏற்பட்ட சிலும்பல்களினால் புறஊதாக் கதிர் அலைகள் மாறுபட்டுத் தெரிவிக்கும் அதை வைத்து ஒருவரை, ''''போலி ரூபாய் நோட்டு வைத்திருக்கிறார்''' என்ற உடனடியான முடிவுக்கு வந்து விடமுடியாது. அதுவும் தானே இறுதி முடிவையும் எடுத்து விடக் கூடாது என்பது தான் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல் என்பது அங்கு சென்ற பின் தான் தெரிந்தது.

போலி ரூபாய் நோட்டுக்களின் விஷயத்தில் சட்டம் எப்படிப்பட்டது என்பதும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதற்காக தவறாக கணிப்புக்கு ஒரு தனி நபர் ஆளாக முடியாது.   போலி ரூபாய் தாள்கள் எங்கிருந்து உருவாக்கப்பட்டன என்று ஆதி முதல் அந்தம் வரை கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுவதற்காகவே இவ்வளவு கடுமையான சட்டம் என்பது நம்க்குத் தெரியாமலில்லை.


வங்கியிலிருந்து பெறப்படும் பரிவர்த்தனை ரசீதுகளை பத்திரப்படுத்திவைத்துக்கொள்ளவும்  இந்தப் பதிவு அறிவுறுத்துகிறது. இது சமயத்தில் நமக்கே உதவுகிறது. தானியங்கி மூலம் பெறப்படும் பணம் போலித்தாள்கள் உள்ளது என கண்டுணர்ந்தால் உடனடியாக அந்த வங்கியை காலதாமதம் செய்யாமல் அங்கிருக்கும் தொலைபேசி மூலமாகவே தெரிவித்து மாற்று நோட்டைப் பெற்றுக்கொள்ளலாம். அதற்கான அத்தாட்சியை காண்பித்தபின் இது சாத்தியமாகும்.

எந்த வங்கி பரிவர்த்தனை ரசீதுகளையும் பத்திரப்படுத்தி, கோப்புகளில் வைத்திருப்பது நல்லது. கல்லூரியில் தேர்ச்சி அறிக்கையையே இந்த ரசீதின் மூலம் தான் பெறமுடிந்தது. பணம் செலுத்தவில்லை என்று தேர்ச்சியையே நிறுத்தி வைத்திருந்தனர். பின்பு தேர்வு கட்டணம் வங்கியில் செலுத்தியதற்கான  அத்தாட்சியை, வங்கி ரசீதை.  நகல் எடுத்து இணைத்து அனுப்பியவுடன் தேர்ச்சி அறிக்கை வந்தது. '' ''இதெல்லாம் நடக்கும் என்று முன்பே தெரியுமா?'' '' என்று கூட கேட்டனர். இந்த பின்பற்றலை வழக்கமாக கொண்டிருந்ததால் இது சாத்தியமாயிற்று. நமக்கு நாமே துணை. பலவேளைகளில் வங்கிகளால் நமக்கேற்படும் பிரச்சனைகளுக்கு, தீர்வு காண்பதற்கு இம்மாதிரி அத்தாட்சிகளே உதவுகின்றது. உதவியும் இருக்கின்றது.

தானியங்கி மூலம் பெறப்படும் ரசீதுகளையும் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்வது நல்லது. அப்படியிருந்தால் பணம் எங்கிருந்து பெற்றோம், என்று பெற்றோம், எவ்வளவு பெற்றோம் என்பதை உடனே நம்மாள் கணிக்க முடியும். பலர் அதை குப்பையில் அப்போதே தூக்கி எரிவார்கள். வங்கித் தகவல்கள் கணிணியில் கிடைக்கிறது இப்போது இது பெரிய விஷயமில்லை. இருப்பினும்.... இப்படியிருப்பது நல்லது.

....நன்றி அனுபவம்....

No comments: