Pages

Sunday 14 February, 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-9











(4) (iv) தொடர்ந்து தேவிப்பாடல்களாம் 'அபிராமி அந்தாதி'  'ஆனந்தலகரி' மந்திரம் ஓதுக.

(5) (i) (ii) புத்தாடை வழங்குதல்;

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை,
போகமும் திருவும் புணர்ப்பானை,
பின்னை என் பிழையைப் பொறுப்பானை,
பிழைஎலாம் தவிரப் பணிப்பானை,
இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா
எம்மானை, எளிவந்த பிரானை,
அன்னம் வைகும் வயல்-பழனத்து அணி
ஆரூரானை, மறக்கலும் ஆமே? 
                                       ---சுந்தரர்

பொருள்;நிலையில்லாத பொருளாகிய பொன்னையும் நிலையான உண்மைப் பொருளாகிய திருவருளையும் தருபவரும், உலக இன்பத்தையும் வீட்டின்பத்தையும் சேர்ப்பவரும், என் தவறுகளைப் பொறுத்தருளுபவரும், தவறுகளே செய்யாதவாறு என்னைத் தடுத்து ஆட்கொள்பவரும், இவ்வாறான இயல்பை உடையவர் என்று அறிய இயலாதவருமான எம்பெருமானும், எனக்கு எளிதாகக் கிடைத்த தலைவருமாகிய அன்னங்கள் தங்கியிருக்கும் வயல்கள் நிறைந்த மருதநிலம் அழகுசெய்யும் திருவாரூரில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை என்னால் மறக்கவும் இயலுமோ?’ 





கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் றன்னைப்
   பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
   சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
   ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
   கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!

                                   

                                                                                          ---ஆண்டாள் திருப்பாவை
 
பகைவரை வெல்லும் சிறப்புடைய கோவிந்தனே ! நாங்கள் உன்னிடம் பறை பெற்று உன்னை போற்றிப் பாடுவோம். அதனால் நீ அகமகிழ்ந்து எங்களுக்கு பரிசாக வழங்கும், நாட்டவர் எல்லாம் கொண்டாடுகின்ற அழகான சூடகம், தோள்வளை, தோடு, காதில் அணியும் மடல், காற்சதங்கைகள் மற்றும் பல ஆபரணங்களை நாம் அணிந்து மகிழ்வோம் ! அழகான ஆடைகளை உடுத்துவோம் ! 

பின்பு, பாற்சோறு மறையுமாறு அதன் மேல நெய் வார்த்து செய்த அக்கார அடிசிலை, எங்கள் முழங்கையெல்லாம் நெய்யொழுக நாம் உண்போம் ! இவ்வாறு உன்னுடன் சேர்ந்திருந்து, உள்ளம் குளிர்ந்து, பாவை நோன்பை முடிக்கவே நாங்கள் வந்துள்ளோம் ! எங்களுக்கு அருள்வாயாக !
 
http://balaji_ammu.blogspot.com/2007/01/tpv27.html 
 
(6) அரசாணிக்கால் நடுதல்;



இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
    இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
    ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
    பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
    நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.


                                          ---அப்பர் ஆறாம் திருமுறை


பொழிப்புரை; (பொருள்) பெரிய பூமியாகியும், நீராகியும், தீயாகியும், எறியும் காற்றாகியும், ஆகாயமாகியும், ஞாயிறாகியும், அழிவில்லாத நிலையையுடைய திங்களாகியும், இயமானனாகியும் இங்ஙனம் அட்ட மூர்த்தியாகியும், பெருமையுடையதாகிய நன்மையும், சிறுமை உடையதாகிய குற்றமும், பெண்ணும், ஆணும் ஏனைய தேவருடைய வடிவங்களும் அருவம், உருவம், அருவுருவம் என்னும் தம் மூவகைத் திருமேனிகளும் தாமே ஆகியும், நேற்று ஆகியும், இன்று ஆகியும், நாளை ஆகியும் நீண்ட செஞ்சடையுடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத் தக்கதாகும். 
பூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்நின்ற நான்குமாய்* 
தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்தகா லிரண்டுமாய்* 
மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்* 
நீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே? 

                                             ---திருமழிசையாழ்வார்---திருச்சந்த விருத்தம்


பொருள்; பெருவெளியில் (பிரபஞ்சத்தில்-கோள்கள், விண்மீன்கள் உள்ளடக்கியது அது தான் பெருவெளி) நாம் வெளிப்படையாக உணரும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் இயற்கையின் குணங்களை..... பூமிக்கு ஐந்து குணங்கள், நீருக்கு நான்கு குணங்கள், தீக்கு மூன்று குணங்கள், காற்றுக்கு இரண்டு குணங்கள், ஆகாயத்திற்கு ஒரு குணம் என்று நீ இருப்பதை யாரால் நினைத்துப் பார்க்க முடியும் என்று வியப்படைகிறார். 

பூமிக்கு ஒலி, தொடுகை, உருவம், சாரம், மணம் என்று ஐந்து குணங்கள் உள்ளன. நீருக்கு அவைகளில் நான்கு குணங்கள் மட்டும் உண்டு. ஒலி, தொடுகை, உருவம், சாரம், அதற்கு வாசனை கிடையாது. நெருப்புக்கு ஒலி, தொடுகை, வடிவம் என்று மூன்று மட்டும் உண்டு. சாரம், மணம் இரண்டும் இல்லை. காற்றுக்கு ஒலி, தொடுகை இரண்டும் உண்டு. உருவம் சாரம், மணம் இல்லை. ஆகாயத்துக்கு ஒலி மட்டுமே உண்டு.

 (9) (i) திருநீறு அளித்தல்;

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணம் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணம் தருவது நீறு திருஆலவாயான் திருநீறே.


                                                       ---சம்பந்தர்
பொருள்;
காண இனியது நீறு - அணிந்தவர்களைக் காண இனிமையாக இருக்கும்படி செய்வது திருநீறு
கவினைத் தருவது நீறு - அழகையும் நற்குணங்களையும் தருவது திருநீறு
பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு - உளம் விரும்பி பேணி அணிபவர்களுக்கெல்லாம் பெருமையைக் கொடுப்பது திருநீறு
மாணம் தகைவது நீறு - மாண்பைத் தருவது திருநீறு. (உறுதிப்படுத்தும் ஆதாரமாய் (பிரமாணமாய்) அமைவது திருநீறு என்று தொடக்கத்தில் தவறாகப் பொருள் சொல்லியிருந்தேன்)
மதியைத் தருவது நீறு - நிலைத்த ஞானத்தைத் தருவது திருநீறு
சேணம் தருவது நீறு - விண்ணுலகப்பேற்றையும் உயர்வையும் அளிப்பது திருநீறு.
திருஆலவாயான் திருநீறே - அது திருவாலவாயாம் மதுரையம்பதியில் வாழும் இறைவனின் திருநீறே
http://koodal1.blogspot.com/2008/06/blog-post_25.html





 (ii) ஐந்தெழுத்து ஓதுவித்தல்; 'நமச்சிவாய'


இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே
.
                                ---அப்பர் நான்காம் திருமறை

பொழிப்புரை; வீட்டில் உள்ள விளக்கு ஆங்குள்ள இருளைப் போக்குவதாம். சொல்லின் அகத்து நின்று விளக்குவதாய், ஒளியுடைய தாய், பல இடங்களையும் விளக்குவதாய்ப் பல சமயத்தாரும் தம்மை அறியாமலே காண நிற்பதாய் ஞானம் நிறைந்த உள்ளத்திற்கு விளக்குப் போல ஒளியை நல்குவது திருவைந்தெழுத்து மந்திரமே. 

எட்டெழுத்து ஓதுவித்தல்; ''ஓம் நமோ நாராயணா''


”குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
        படுதுயர் ஆயின எல்லாம்
நிலம்தரம் செயும் நீள்விசும்பு அருளும்
       அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலம்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
        தாயினும் ஆயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
        நாராயணா என்னும் நாமம்”
                                      ---திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி

தாயைப்போல் அன்பு செலுத்த வேறு ஒருவர் உலகில் இல்லை. அதனாலேயே இறைவனை அடியார்கள் தாயினை விடவும் அன்பு செய்பவர் என்று குறிப்பிடுகின்றனர். அத்தகைய மேன்மை கொண்ட தாயின் அருமை இளவயதில் எல்லோருக்கும்  தெரிவதில்லை. இதன் காரணமாகவே தம் சுகம் ஒன்றையே பெரிதாக எண்ணி, தாய் தந்தையரைத் தவிக்க விடுவோரும் இவ்வுலகில் உளர்.


(11) (i) (ii) பெற்றோர் வழிபாடு

. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.(உயிர் வருக்கம் )
   தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. (
தகர வருக்கம்)
   தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.
                                                                 (ஔவை-கொன்றை வேந்தன்)
தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.

                                 
                     ---திருவருட்பா (இராமலிங்க அடிகளார்)

ஞான சபையில் ஏஆனக்கூத்தாடுகின்ற தெய்வம் எதுவோ அதுவே எனக்குத் தாயும் தந்தையுமாய் என்னைத் தாங்கி அருளும் தெய்வமாகும்; அது தனக்கு ஒப்பாக ஒன்றில்லாத தனித்த தலைமை பொருந்திய தெய்வமாகும்; வாயாரா வாழ்த்தி வணங்குகின்ற நன்மக்களின் மனத்தின்கண் எழுந்தருளுவதும் தாமரை மலர் போன்ற தன்னுடைய திருவடியை என் தலை மேல் வைத்தருளிய பெரிய தெய்வமும் அதுவேயாகும்; பிஞ்சும் காயுமாய் முதிர்தலின்றி எடுத்த எடுப்பிலேயே முற்றவும் கனிந்த பழமாய், என்னுயிரில் கலந்து இனிமை நல்கும் தெய்வமாய். எனக்கு அருட் செல்வமாய், எனது அறிவு அறியுமாறு எல்லாவற்றையும் குறைவறக் காணச் செய்யும் தெய்வமாய் விளங்குவதாகும். என்னைச் சிறு குழந்தையாகக் கொண்டு அருள் நெறியில் வளர்த்தருளும் மகா தெய்வமும் அதுவேயாகும்.


உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே

                                          --நம்மாழ்வார்--திருவாய்மொழி

பொருள்; இறைவனை நம்பும் அனைத்து சமயங்களுக்கும் பொருந்துமாறு ஆரம்பிக்கிறார். இறைவனின் தன்மைகள் பற்றி முழுதுமாய் சொல்லமுடியாதஅளவு உயர் நலம் உடையவனாக அவன் இருக்கிறான். அவனைப் பற்றி அறிந்துகொள்ளுவதற்கான நல்லறிவைத் தந்தவனுமாய் உள்ளான். இறைத் தூதர்கள்,சித்தர்கள், முக்தர்கள் போன்ற அமர நிலை அறிந்தவர்களும் என்றும் போற்றும் அதிபதியாக உள்ளான். அப்படிப் பட்டவனின் சுடர் போன்ற அடிகளைத் தொழுது, உயர்வு கொள் மனமே.


(12) (i) ஓம்படை செய்தல்;
(12) (ii) மணமகன் கைகூப்பிக் கொண்டு;

உங்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கு அப்பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைபோம் கேள்
எம்கொங்கை நின் பால் அன்பர் அல்லாது தோள் செரற்க
என்கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யறக்
கங்குல் பகல் எம் கண் மற்று ஒன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு ஏல் ஓர் எம்பாவாய்
.
                                                        ----திருவெம்பாவை---திருவாசகம்
உனது கையில் உள்ள பிள்ளை உனக்கே அடைக்கலம் என்ற
அந்தப் பழமொழியைப் புதுப்பிக்க நாங்கள் அஞ்சுகிறோம்.

ஏனென்றால் அது எங்களுக்கு தேவையில்லை.எங்கள் பெருமானே
உனக்கு ஒன்று சொல்லுகின்றோம், கேட்பாயாக.

நாங்கள் உன்னுடைய மெய்யன்பர்களையே மணந்துகொள்வோம்.உனக்கே
நாங்கள் என்றும் பணிவிடை செய்வோம்.இரவும்,பகலும் நாங்கள்
உன்னையே யாண்டும் காணவேண்டும்.

இந்த வாய்ப்பை இறைவா, நீ எங்களுக்குக் கொடுத்தருள்வாயாகில்
பிறகு சூரியனே தடுமாறி போய்விடினும் அதைப்பற்றி எங்களுக்குக்
கவலையில்லை.பாவையே, இப்பெருநிலையை ஏற்றுக்கொள்,பின்பு
இதனை ஓர்ந்து பார்



மணமகன் மணமகளை நோக்கி;
முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ? பெருகு ஒளியால்  தன்னேரில் மாரனோ? தார் மார்பின் விஞ்சையனோ?
மின் நேர் செஞ் சடை அண்ணல் மெய்யருள் பெற்று உடையவனோ?  என்னே என் மனம் திரித்த இவன் யாரோ என நினைந்தார்
                                                                       ----திருமலைச் சருக்கம்


பொழிப்புரை;எனக்கு முற்பட வந்து என் எதிரில் தோன்றுகின்ற முருகப்பெருமானோ? பேரொளியால் தனக்கு ஒப்பில்லாத மன் மதனோ? மாலையை யணிந்த மார்பினையுடைய வித்தியாதரனோ? மின்னலையொத்த சிவந்த சடையினையுடைய சிவபெருமானின் மெய்ம்மையான திருவருளைப் பெற்றவனோ? என்ன வியப்பு? என் மனத்தைத் தன் வயப்படுத்தி நிற்கும் இப்பெருமகன் யாரோ அறியேன் என்று நினைந்தார்.


மணமகன் மணமகளை நோக்கி;

" கற்பகத்தின் பூங்கொம்போ காமன் தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல் சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ யாதொவென்று அதிசயித்தார் "
 
                                                                           ----தடுத்தாட் கொண்ட புராணம்

பொழிப்புரை; இவ்விடத்து யான் காணும் இப்பொருள் கற்பக மரத்தின் பொலிவினையுடைய கொம்போ? மன்மதன்தன் பெருவாழ் வாகக்கொண்ட இரதி தேவியோ? உயர்வுமிக்க புண்ணியத்தின் பயனாய் விளைந்ததொரு புண்ணியமோ? மேகத்தைச் சுமந்து, வில், குவளை, பவளம், பிறபிற பூக்கள், சந்திரன் ஆகிய அனைத்தையும் தன்னிடத்தே கொண்டதொரு கொடியோ? இவற்றுள் யாதானும் ஒன்றோ, அல்லது வேறொன்றோ? என அறிய ஒண்ணாத அற்புதத் தின் திரண்ட வடிவோ? அல்லது சிவனருளால் வந்ததொரு திரு வடிவோ? இவற்றுள் எந்த ஒன்றாகவும் உறுதிப்படுத்த அறியேன் என்று அதிசயித்தார். 

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=12&Song_idField=1200&padhi=72&startLimit=286&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC 

கலப்பு மணம்

கலப்பு மணம் பற்றி பெரியார் கூறுபவையாக பேராசிரியர் மா.நன்னன் விள்குகிறார்.

சாதி என்னும் சொல்லே தமிழில் இல்லை; ஆகவே தமிழனுக்குச் சாதியில்லை. பண்டைத் தமிழ் இலக்கியங்களிலும் சாதியிருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. சாதி பற்றிய எண்ணமே இல்லாமல் தமிழர் தம்முள் உண்டும் உறைந்தும், கொண்டும் கொடுத்தும் வாழ்ந்ததாகத்தான் சங்க இலக்கியங்கள் பெருமிதத்துடன் முழங்கக் கேட்கிறோம்.

திருவள்ளுவர் ‘’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ என்றே குறிப்பிட்டுள்ளார். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்எனத் தமிழர் வாழ்வை அய்ந்து தினணகளாகப் பிரித்துதான் இலக்கண இலக்கிஞங்களைப் புலவர்கள் எழுதியிருக்கிறார்கள். வாழும் நிலம் போன்றவற்றால் சிற்சில வேறுபாடுகள் தமிழரிடையே நிலவியது உண்மையே தவிரப் பிறவியின் அடிப்படையில் சாதி வகுத்து வாழ்ந்த முறை தமிழர்க்குரியதே.

அது முழுக்க முழுக்க ஆரயக் கலப்பால் தமிழர்களிடம் வந்து புகுந்த பொல்லாங்குகளுள் ஒன்றாகும். ஆரியர்களின் இதிகாசங்கள் எனப்படும் இராமாயணம், பாரதம் ஆகியவற்றில் எல்லாமே சாதி அடிப்படையில் நடைபெற்றதாக்கக் கூறப்பட்டுள்ளது. அவர்களின் நீதி நூல்கள் யாவும் பார்ப்பானுக்கொரு நீதி மற்றவனுக்கு நீதி என வகுத்துள்ளன. அதைத்தான் மனோன்மணீய நாடக ஆசிரியர் சுந்தரனார்.
‘’வள்ளுவன் செய் திருக்குறளை மறுவறநன்குணர்ந்தவர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொரு நீதி’’

என்று தம் நாடக நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கலப்பு மணம் என்பது இந்திய நாட்டில் இன்று நேற்று ஏற்பட்டதல்ல; எல்லா மதங்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டும், வேத புராணக் காலங்களிலிருந்தும் சுமிருதி, சுருதி ஆகியவைகளால் அனுமதிக்கப்பட்டும் நடந்துவருகின்ற காரியந் தானே ஒழிய சுயமரியாதைக்காரர்கள் மாத்திரம் ஆரம்பித்து நடத்துவதாகச் சொல்லமுடியாது.

உண்மையில் கலப்புத் திருமணம் என்று கூற வேண்டுமானால் பார்ப்பனர். பார்ப்பனர் அல்லாதார் இருவருக்கும் நடைபெறும் திருமணம்தான் கலப்புத் திருமணம் என்று கூறவேண்டும். சாதிகளுக்குள் மிக உன்னத சாதி என்றும், கடவுளுக்கு அடுத்த அந்தஸ்து உடைய சாதி என்றும் கூறப்படுகிற சாதிதான் சமூகத்தில் மிகவும் கீழானதென்றும், சமுதாயத்தின் கடைச்சாதி என்றும் நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த வேற்றுமை ஒழிய வேண்டும். இவ்விரண்டு சாதிகளுக்கும் திருமணம் நடைபெறுவதைத்தான் கலப்புத் திருமணம் என்று கூறலாம்.

மனிதனுக்கு மனிதன் செய்துகொள்ளும் திருமண்த்தில் கலப்பு என்ன வந்தது? கலப்புத் திருமணம் என்பதே ஆரியர்கள் வந்ததிலிருந்து வந்ததுதான். அவன்தான் ஆடு, மாடு, கழுதையைக் கட்டிக் கொண்டிருக்கிறான் என்பதாக அவர்களுடைய புராணங்கள், இதிகாசங்கள், வேதங்கள் என்பவைகளில் காணப்படுகின்றன. இது, அது போன்றதன்றி மனிதச் சீவனுக்கும் மனிதச் சீவனுக்கும் நடைபெறும் திருமணமேயாகும். இதில் கலப்பு என்று சொல்வதற்குப் பொருளே கிடையாது.


.....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -10

No comments: