Pages

Monday, 1 February, 2010

கொடுமையிலும் கொடுமை கண்ட கொடுமுடி கோகிலம் -1நாடகம், இசை திரைப்படம் ஆகிய மூன்று துறைகளிலும் சாதனை படைத்த கே.பி. சுந்தரம்பாள் குழந்தைப் பருவத்தில் வறுமையில் வாடியவர். அவருடைய நிஜவாழ்க்கை, சினிமாக் கதைகளையும் மிஞ்சக் கூடியதாகும்.

கோவை மாவட்டம் கரூரை அடுத்த கொடுமுடியில் பாலாம்பாள் என்கிற கொங்கு கவுண்டர் இன ஒரு ஏழைப் பெண்மணிக்கு 1908_ம் ஆண்டு அக்டோபர் 11_ந்தேதி சுந்தராம்பாள் பிறந்தார். இவருக்கு கனகசபாபதி என்று ஒரு தம்பி, சுப்பம்மாள் என்று ஒரு தங்கை. சிறுமியாக இருக்கும் பொழுதே தந்தையை இழந்தவர். (கொடுமுடி மும்மூர்த்திகள் குடிகொண்டிருக்கும் தெய்வீக தளம்.

குடும்பத் தலைவர் இறந்ததால் குடும்பம் வறுமையில் வாடியது. அம்மா பாலம்பாளின் தம்பி அதாவது தாய் மாமா மலைக்கொழுந்தன் ஆதரவில் வளர்ந்தனர். இருப்பினும், சுந்தராம்பாளின் தாயார் பாலம்பாள், குழந்தைகளை வளர்க்க வீட்டு வேலைகள் செய்ய நேரிட்டது. வறுமை அளவு கடந்து போனதால், குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள பாலம்பாள் முயற்சி செய்தார்.

இதுபற்றி, பிற்காலத்தில் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில சுந்தராம்பாளே குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதாவது:- .

வறுமையின் காரணமாக எங்களை இழுத்துக்கொண்டு போய் நல்லதங்காள் மாதிரி காவிரியில் தள்ள முயன்றார் அம்மா. நான், தம்பி, தங்கை எல்லோரும் ஓவென்று அழுதோம். வீட்டு வேலை செய்து காப்பாற்றுவதாக அம்மாவிடம் சொல்லி காலைக் கட்டிக்கொண்டு அழுதேன். அம்மாவோ எங்களைச் சேர்த்து அணைத்துக்கொண்டு அழுதார்.

பிழைக்க வேண்டி, கரூருக்கு ரெயிலில் பயணமானோம். அம்மா கண்களில் நீர் நிறைந்து கன்னத்தில் வழிந்தது. அவரைப் பார்த்து நாங்களும் அழுதோம். எதிரே உட்கார்ந்திருந்த ஒரு பெரியவர் மெல்ல எங்களை அணுகி, "நீங்கள் யார்? ஏன் அழுகிறீர்கள்? உங்களைப் பார்த்துக் குழந்தைகளும் அழுகின்றனவே!" என்றார்.

அம்மா விஷயத்தைச் சொன்னார். அவரும் பரிதாபப்பட்டுப் போனார். "என் தங்கை விதவையாக வந்து என்னுடன் வசிக்கிறாள். உங்களை உடன் பிறவாத பொறப்பாக நினைத்துக் கொள்கிறேன். எனக்கும் பிள்ளைகள் கிடையாது. இந்தக் குழந்தைகளை வளர்த்து விட்டுப் போகிறேன்" என்று தன் வீட்டுக்கு அழைத்தார். அம்மாவுக்கு முதலில் பயம். பின்னர் ஒத்துக்கொண்டார்.

அந்தப் பெரியவரின் பெயர் மணவாள நாயுடு. "மாமா" என்று அழைக்க ஆரம்பித்தோம். மாமா கரூர் முனிசிபாலிடியில் படிக்கற்களுக்கு முத்திரை வைக்கும் உத்தியோகம் செய்து வந்தார்.

இரவு வேளையில் நான் வாசலில் பாயைப் போட்டுப் படுத்துக் கொண்டு வெகுநேரம் ராகம் போட்டு ஏதாவது பாட்டுப் பாடிக்கொண்டே இருப்பேன். விடியற்காலையில் இரண்டு காவல்காரர்கள் வந்து என்னை அழைத்தார்கள். அம்மா பயந்து கொண்டே அனுப்பி வைத்தார். "நடு ராத்திரியில் பாடியது யார்?" என்றார் இன்ஸ்பெக்டர்.

நான்தான்" என்றேன். அவர் நம்பவில்லை.

எங்கள் கதையைக் கேட்டார். சொன்னேன். அவர் மூலம் வேலு நாயரிடம் அனுப்பி வைக்கப்பட்டு குழந்தை நட்சத்திரமானேன். அவரிடம் சேர்ந்து நான் நடித்த முதல் நாடகம் நல்லதங்காள். அப்போது எனக்கு வயது ஏழு.

காவிரியாற்றில் அம்மா தள்ள நினைத்தபோது, எப்படி அழுது கதறினேனோ அதுவே கதாபாத்திரமாகக் கிடைத்தது. நடித்தேன், உணர்ச்சிகரமாக.

இவ்வாறு சுந்தராம்பாள் குறிப்பிட்டார்.

வேலு நாயர் நாடகக் கம்பெனியில் குழந்தை நட்சத்திரமாக (பால பார்ட்) நடிக்கத் தொடங்கிய சுந்தராம்பாள் படிப்படியாக முன்னேறினார். அவர் பாடல்கள், பெரும் வரவேற்பைப் பெற்றன. அவர் புகழ் தமிழ் நாடெங்கும் பரவியது.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சீக்கிரமே நடிகையாக மாறினார் (ஸ்திரீபார்ட்) வள்ளித்திருமணம், பவளக்கொடி சாரங்கதாரா நந்தனார்.... நாடகங்கள் கே.பி. சுந்தராம்பாளை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது.!


ஆண்வேடம் (ராஜபார்ட்) பூண்டும் நடித்தார். அர்ஜூனனாக தோன்றி கம்பீரம் காட்டினார். உச்ச ஸ்தாயி (ஏழு சுவரங்களின் ஒரு அலகு-unit of sound notes spectrum of sounds) எட்டுக்கட்டையில் பாடும் பெண் கே.பி. சுந்தரம்பாள் மட்டும் தான். நாடகம் பார்க்க உட்கார்ந்திருக்கும் கடைசி ரசிகனுக்கும் இவர் குரல் தெளிவாய் கேட்டது. தமிழ்க் கடவுளாம் முருகனின் மீது தீவிர பற்று கொண்டதால் அதிகமாக நாடக மேடையில் முருகனைப்பற்றித் தான் பாடுவார்.மெளனப்பட காலம் என்பதால் நாடகங்களுக்கே அதிக வரவேற்பு இருந்தது. அதிலும் கே.பி.எஸ் நடிக்கிறார் என்றால் வண்டி கட்டிக் கொண்டு வருவார்கள். பாட்டியின் துணையுடன் சுந்தரம்பாள் நாடகங்களில் நடித்து வந்தார். தமிழகம் மட்டுமில்லாது இவரது புகழ் கடல் கடந்தும் பரவியது.இலங்கையில் இருந்தும் அழைப்பும் வந்தது. தாய்மாமன் மலைக்கொழுந்தன் துணையுடன் இலங்கைக்கு நாடகத்தில் நடிக்க சென்றபொழுது கிட்டப்பாவின் அறிமுகம் கிடைத்தது.கே.பி.சுந்தரம்பாள்.... ''ஔவையார்'' இசை உலகமும் இந்த கொடுமுடி கோகிலத்தின் செளந்தர்யக் குரல் என்றும் அழியாத நிலை கொண்டவை....!


என்றும் இளமையாய் இருக்கும் அந்த சுந்தர்வ கானம் கேட்டு மயங்காத மனிதனே இல்லை!


இறைபற்றைப் போலவே! தேசப் பற்றும் கே.பி சுந்தரம்பாளின் ரத்தத்தின் கலந்தவை!
கிட்டப்பா கே.பி.எஸ் இருவரும் கல்ப்புத்திருமணம் புரிந்து ஜோடியாக சேர்ந்து நாடக உலகை திரும்பி பார்க்க வைத்ததால், கிட்டப்பாவின் வரலாற்றை சற்று பார்ப்போம்.....


தமிழ் நாடக உலகின் முடிசூடா மன்னராக விளங்கியவர், எஸ்.ஜி.கிட்டப்பா.


நெல்லை மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை அந்தக் காலத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் சேர்ந்திருந்தது. அங்கு, கங்காதர அய்யர் _ மீனாட்சியம்மாள் தம்பதிகளின் மகனாக 1906_ம் ஆண்டு ஆகஸ்டு 26_ந்தேதி கிட்டப்பா பிறந்தார்.


அவருடைய இயற்பெயர் ராமகிருஷ்ணன். எல்லோரும் செல்லமாக "கிட்டப்பா", "கிட்டன்" என்று அழைப்பார்கள். அதில் கிட்டப்பா என்ற பெயர் நிலைத்து விட்டது.


கிட்டப்பாவுடன் பிறந்தவர்கள் 8 சகோதரர்கள். ஒரு சகோதரி. இவர்களில் காசி அய்யர், சுப்பையர், செல்லப்பா ஆகியோர், அந்த நாளில் பிரபலமாக விளங்கிய சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் குழுவில் நிரந்தர நடிகர்களாக இருந்தார்கள்.


கிட்டப்பா தன் 6 வயதில் சகோதரர்களின் நாடகத்தைக் காணச் சென்றார். அப்போது அவர் மேடை ஏறி, கணீர் குரலில் பாடினார். தம்பியின் குரல் வளத்தைக் கண்ட சகோதரர்கள் அவரையும் நாடக நடிகராக்கினர்.


இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருந்த ஒரு நாடகக்குழு, கிட்டப்பாவையும், அவர் சகோதரர்களையும் நாடகங்களில் நடிக்க அழைத்தது. 1916_ம் ஆண்டில் கிட்டப்பா தன் சகோதரர்களுடன் இலங்கை சென்று, நாடகங்களில் நடித்தார். அங்கு கிட்டப்பா பாடிய பாடல்கள் மிகவும் பிரபலம் அடைந்தன.

சென்னை திரும்பிய கிட்டப்பா சகோதரர்கள், "வள்ளி திருமணம்" உள்பட பல நாடகங்களை நடத்தினர். கிட்டப்பா புகழ் பரவியது.


அழகும், இனிய குரலும் கொண்ட கிட்டப்பாவுக்குப் பெண் கொடுக்க பலர் முன் வந்தனர். பெற்றோர், கிட்டம்மாள் என்ற பெண்ணைப் பார்த்து முடிவு செய்தனர்.


கிட்டப்பா _ கிட்டம்மாள் திருமணம் 24 ஜுன் 1923_ல் சென்னையில் நடந்தது. அப்போது கிட்டப்பாவுக்கு வயது 18. கிட்டப்பா தொடர்ந்து நாடகங்களில் நடித்தார். அவர் நடித்த "தசாவதாரம்" ஒரே ஆண்டில் 200 முறை மேடை ஏறியது.


இந்த சமயத்தில், கே.பி.சுந்தராம்பாள் இலங்கையில் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.


"கிட்டப்பாவையும், சுந்தராம்பாளையும் ஜோடியாக நடிக்க வைத்தால் நாடகங்கள் பிரமாதமாக அமையும். வசூலும் அமோகமாக இருக்கும்" என்று, நாடக அமைப்பாளர்கள் நினைத்தனர்.


இலங்கைக்கு வந்து நாடகங்களில் நடிக்கும்படி, கிட்டப்பா சகோதரர்களுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை ஏற்று, கிட்டப்பாவும், அவருடைய சகோதரர்களும் 1925 இறுதியில் இலங்கை சென்றனர்.

எஸ்.ஜி.கிட்டப்பாவும், கே.பி.சுந்தராம்பாளும் முதன் முதலாக இலங்கையில் "வள்ளி திருமணம்" நாடகத்தில் ஜோடியாக நடித்தனர். கிட்டப்பா வேலனாகவும், சுந்தராம்பாள் வள்ளியாகவும் நடித்தனர். இருவரும் போட்டி போட்டுப் பாடி, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றனர்.


தமிழ்நாட்டுக்குத் திரும்பிய பிறகும், கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் பல நாடகங்களில் இணைந்து நடித்தனர். அவர்கள் புகழ் திக்கெட்டும் பரவியது.


(குறிப்பு; இவரின் வாழ்க்கை பலவாறு குறிப்பிடப்படுகிறது. பெரும்பாலும் இவரின் வாழ்க்கை தொடர்வண்டியில் (யாசகம்) இரப்பைப்  பெறப் பாடிக்கொண்டிருக்கும் பொழுது பலரால் கண்டுணர்ந்து நாடகத்துறையிலும் அறிமுகப்படுத்தப்பட்டாதாக கூறப்படுகின்றது. தொடர்வண்டியில் பாடி இரப்பை (யாசகம்) பெற்றுக்கொண்டிருக்கும் பொழுதே கிட்டப்பாவின் அறிமுகமும் கிடைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

தொடரும்...2 

(ஆதாரத் தகவல்கள், இணையம், மாலை மலர், தினமலர், தமிழ்த் திரையுலக சாதனைப்படங்கள் நூல்...எழுதியவர் பாலபாரதி.......)1 comment:

தங்க முகுந்தன் said...

அருமையான தொகுப்பு!
கே. பி சுந்தராம்பாள் என்றாலே எமக்கு ஒளவையாருடைய நினைவுதான் வரும். மேலும் படிக்க காத்திருக்கிறேன்!