Pages

Friday, 12 February 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-8





தமிழ்த் திருமணம்
III மந்திரங்கள்

(இங்கே குறிக்கும் எண்கள் 11 வது பகுதியான சடங்குகள் பகுதியில் இடம் பெற்ற வரிசை எண்கள் மந்திரம் ஓத வேண்டிய நிகழ்ச்சிகளின் எண்கள் மட்டும் தரப்பெற்று அவற்றிற்கு நேரே மந்திரங்களும் தரப்பெற்றுள்ளன. மந்திரம் ஓத வேண்டிய தேவை இல்லாத எண்கள் தரப்படவில்லை)

(1), (2), (3), (4), (i) திருமணத்திற்கு இறைவியின் இன்னருளை மடுத்துக் கொள்வதற்காக, அபராமி அந்தாதி' 'சௌந்தரியலகரி, ஆனந்தலகரி' போன்ற தேவியின் பாடல்களை ஓதிக்கொண்டே செய்க.

(குறிப்பு; புத்தகத்தில் பாடல்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. அது செய்யுள் நடை.  பேராசிரியர்கள், தமிழாசிரியர்கள், மற்றும் தமிழ் இலக்கியம் பயின்றவர்களால் முழுதும் பொருளுணர்ந்து கொள்ள முடியும்.  செய்யுள் இலக்கணம் தெரிந்தவர்களால் முழுதும் பொருளுணர்ந்து கொள்ள முடியும். பிரித்து பொறுமையாக வாசித்தோமானால் அனைவராலும் பொருளுணரமுடியும். இணையத்தில் அகராதிகள் உள்ளன. இருப்பினும் சில பாடல்களுக்கு  பொருளுரைகளை கொடுக்க முயற்சித்துள்ளேன்.. சில பாடல்களுக்கு பொருளுரைத் தேவையில்லை. முடிந்தவரை கொடுக்க  முயலுகின்றேன். தங்களுக்கு தெரிந்தாலும் கொடுக்கலாம்.)

(4) (ii) முன்னவனார் பூஜை



உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ்
உலகிற்பிறக்கும் விவகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.
                                                                                                                ----கச்சியப்பர்
பொருள்: எல்லா உலகங்களையும் நீக்கமற ஒருவனாய் நின்று காப்பவர், உலகில் நிகழும் மாற்றங்கட்கு அப்பால் ஆனவர். மேலாம் ஒளியானவர். உலக உயிர்களின் வினைப் பயனைக் களைபவர், அவரே பெருந்தெய்வம் கணபதி ஆவார். அப்பெருந்தெய்வத்தின் திருவடிகளை மகிழ்வோடு சரண் அடைவோம்.
                                                                                                     

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி வாவிளை யாட்டுடை யார்அவர்
தலைவர் அன்னவர்க் கேசர ணாங்களே!  

                                                    -------(கம்பர்)
 பொருள்; உலகங்கள் அனைத்தையும் தன்னந்தனியராக இருந்து படைத்தலும், தம் படைப்புகளாகிய ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான எல்லா உயிர்களையும் பரிவோடு காத்தலும், காத்தவற்றை அழித்தலும் ஆகிய முத்தொழில்களையும் ஒரு விளையாட்டாகவே செய்து கொண்டிருப்பவரான அந்த இறைவனே, எல்லா உலகங்களுக்கும் தலைவர் ஆவார். அந்தக் கடவுளிடமே நாங்கள் சரணடைவோம் என்பதாக இப்பாடல் கூறுகின்றது.

(iii) இறைவன் இறைவியை எழுந்தருளச்செய்தல்
    விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
           விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்    மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே!
         வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்   கண்ணகத் தேநின்று களிதரு தேனே!
         கடலமு தேகரும் பேவிரும் படியார்    எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்!
        எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே!. 376                                                     ----------திருவாசகம்
    பதப் பொருள்; விண்ணகத்தேவரும்-விண்ணில் வாழும் தேவர்களும், நண்ணவும் மாட்டா-அணுகவும் முடியாத, விழுப்பொருளே-மேலானப் பொருளாய் உள்ளவனே, உன்-உன்னுடைய, தொழும்பு அடியோங்கள்-தொண்டைச் செய்கின்ற அடியார்களாகிய எங்களை, மண்ணகத்தே வந்து வாயச்செய்தானே-மண்ணுலகில் எழுந்தருளி வந்து வாழச்செய்தவனே,வண்திருப்பெருந்துறையாய்-வளப்பம் பொருந்திய திருப்பெருந்துறையில் வீற்றிருப்பவனே, வழியடியோம்-பரம்பரை அடியாராகிய, எங்களுடைய கண்ணகத்தே நின்று-கண்ணில் நின்று, களி தரு தேனே-களிப்பைத் தருகின்றத் தேன் போன்றவனே, கடல் அமுதே- பாற்கடலில் தோன்றிய அமுதம் போன்றவனே, கரும்பே- கரும்பு போன்றவனே,  விரும்பு அடியார்- அன்பு செய்கின்ற அடியவரது, எண்ணகத்தே-எண்ணத்தில் இருப்பவனே,  உலகுக்கு உயிர் ஆனாய்-உலகமனைத்துக்கும் உயிர் ஆனவனே, எம்பெருமான்- எம்பெருமானே, பள்ளி எழுந்தருளாய்- பள்ளியிலிருந்து எழுந்தருள்வாயாக.
பொருள்; 'விண்ணுலகை விட்டு மண்ணுலகுக்கு வந்து மனிதரை ஆட்கொள்ளும் வள்ளலர்தலின் மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே' என்றார். 'வான் பழித்து மண் புகுந்த மனிதரை ஆட்கொண்ட வள்ளல்' என்ற அடியையும் ஒப்பு நோக்குக. அடியார்களுக்கு கண்ணுக்கினியக் காட்சியை நல்கி இன்பத்தை தருவான் என்பார். 'கண்ணகத்தே நின்று கனி தரும் தேனே'என்றார். 'கண்ணிலே தோன்றி இன்பத்தை தருதலோடு எண்ணத்திலும் விளங்கி நன்மையும் செய்வான்' என்பார். 'எண்ணகத்தாய்' என்றார். இறைவனது இயக்கமின்றி உலகம் இயங்காதாதலின், உலகுக்குயிரானாய் என்றார்.

இதனால் இறைவன் உலகுக்கு பேரின்பம் நல்குவான் என்று கூறப்பட்டுள்ளது.




1. உடையாள் உன்தன் நடுவிருக்கும்
         உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
       இருப்பதானால் அடியேன்உன்
அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்
      புரி யாய் பொன்னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து
      முடியும் வண்ணம் முன்னின்றே. 378

                                                    ------திருவாசகம்

பதப்பொருள்; பொன் அம்பலத்து-பொற்சபையில் ஆடுகின்ற, எம்முடியா முதலே-எம் ஈறில்லா முதல்வனே, உடையாள்- எம்மை ஆளாகவுடைய உடையம்மை, உன் தன் நடு இருக்கும்- சொரூப நிலையில் உன்னிடேயே அடங்கித் தோன்றும், உடையாள் நடுவுள்- உடையவளாகிய உமையம்மையினடத்தே, நீ இருத்தி- தடத்த நிலையில் நீ அடங்கித் தோன்றுவாய், அடியேன் நடுவுள்- அடியேன் இடையே, இருவீரும் இருப்பதனால்-நீங்கள் இருவீரும் இருப்பது உண்மையானால், என் கருத்து முடியும் வண்ணம்-என் எண்ணம் நிறைவேறும்படி, முன் நின்று- எனக்கு முன்னே நின்று, அடியேன்-அடியேனாகிய யான், உன் அடியார் நடுவுள் இருக்கும்-உனது அடியார் நடுவில் இருக்கின்ற,  அருளைப் புரியாய்- திருவருளைப் புரிவாயாக.

விளக்கம்; ' உமையாள் உன்றன் நடு இருக்கும்' என்றது. சிவம் உலகை நோக்காது. அறிவே வடிவமாய் இருக்கும் போது. சக்தி சிவத்தில் அடங்கி அதன் வயமாய் நிற்றலை. இதுவே சிவத்தின் சொரூப நிலை. அல்லது உண்மை நிலையாம். 'உடையாள் நடுவுள் ந இருத்தி' என்றது. உலகத்தை நோக்கி அருள் புரிய வரும்போது. சிவம் சக்தியில் அடங்கி அதன் வயமாய் நிற்றலை. இதுவே சிவத்தின் தடத்த நிலை அல்லது அருள் நிலை. ஆதலின் சிவன் வேறு சக்தி வேறு அல்ல, இரண்டும் ஒன்றேயாம்.

அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பது என்றது. இறைவன் சிவம் சக்தி என்னும் இருநிலையோடும் உயிருடன் கலந்திருத்தலை. அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரிதலாவது  திருப்பெருந்துறையில் காட்சி கொடுத்து மறைந்த போது உடன் அழைத்து சென்ற அடியவர்களோடு அடிகளைச் சேர்த்தல். அதாவது, வீட்டு நிலையை அருளல் என்பதாம். இத்திருப்பாடலுக்கு பஞ்சாக்கரத்தோடு பொருத்தி உரை காண்டலும் உண்டு.

இதனால் அடியார் கூட்டச் சிறப்பு கூட்டப்பட்டது


கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்
    கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,
மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்
    வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,
எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த
    இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,
அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும்
    அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தரு ளாயே! 1

                                              ----தொண்டரடிப்பொடியாழ்வார் திருப்பள்ளியெழுச்சி

[பொருள்; சூரியன் கிழக்கே தோன்றி விட்டான். இருள் அகன்றது. காலைப் பொழுது, மலர்களில் தேன் ஒழுகுகிறது தேவர்கள் வந்து எதிர்திசையை நிரப்புகிறார்கள். அவர்களுடன் ஆண்-பெண் யானைகளின் கூட்டமும் வந்துள்ளன. முரசு கடல் அலை போல அதிர்கிறது. அரங்கனே எழுந்திரு!]

காதலைப் பற்றி பெரியார் கூறுபவையாக பேராசியர் மா நன்னன் விளக்குகிறார்

ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரையொருவர் அறிந்து கொண்ட பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்களோடு சாதாரணமாகப் பெண்களைப் பழகச் சொல்ல வேண்டும். யோக்கியனா? கோபக்காரனா? பைத்தியக்காரனா? வேடக்காரனா? என்று பெண்ணுக்கு முன்னரே தெரிய வேண்டாமா? பழகினால் தானே தெரியும்? திடீரென்று ஒருவரையொருவர் முடிச்சுப் போடலாமா? அன்பு, குடம், பழக்க வழக்கம் இவைகளை உணர்ந்து ஒருவருக்கொருவர் நண்பர்களாகப் பழகவேண்டும். உடல் சேர்க்கை வேண்டும் என்று நான் கூறவில்லை.

இத்தகைய உரிமைச் சூழலில் முளைவிடும் காதலே சரியானதாக இருப்பதோடு வலுவானதாகவும் நிலைத்துப் பயன் விளைப்பதாகவும் இருக்க முடியும்.
‘மலரினும் மெல்லிது காமம்’ என்று காதலுக்கு விளக்கங்கூறிய திருவள்ளுவர் ‘சிலர் அதன் செவ்வி தலைப்படுவார்’என்று வேறு ஒரு வரையறையும் வகுத்துள்ளார். காதலை உண்மையாகவும், முழுமையாகவும் புரிந்து கொண்டு அதனை அடைவோர் சிலரே; பலரல்லர் என்று வரையறைப்படுத்திக் கூறியுள்ளமை அறியத்தக்கது. மிக மிக நுண்ணுணர்வாகிய காதலை யானை கண்ட குருடர்போல் புரிந்துகொண்டவர்களும் அக்குருடர் கூற்றுகளை மட்டும் கேட்டறிந்து கொண்டவர்களுமாகிய மாந்தர் பலர் காதல் இலக்கியம் படைக்கின்றனர். அதனால் தான் இன்றைய கதை, திரைப்படம் படைப்புகளில் வரும் காதற் காட்சிகள் பெரும்பாலும் புறப் பொருட்காட்சிகளாகவே அமைந்துவிடுவது தவிர்க்க முடியாத்தாகிவிட்டது. எல்லாரிடத்திலும் காதலுணர்ச்சி இருக்கிறது. ஆனால், எத்தனை மக்கள் தம் உணர்வைப் புரிந்து கொள்ளும் திறம் உடையவர்களாக உள்ளனர். அரைப் பார்வைக்காரரின் புறக் காட்சிபோல் இத்தகையோரின் அகக் காட்சிகளும் அமைந்துவிடுகின்றன. அரைப் பார்வையாளருக்கப் புறத்தே ஏதோ இருப்பதாகத் தெரியுமேயன்றி அது மாடா? ஆளா? ஆடா? என்று தெளிவாக விளங்காது.
அதுபோல் தான் இந்த அகக் காட்சியாளர்களும் காதலை விளங்கிக் கொள்கின்றனர். அவர்கள் படைப்பாளராகவும் இருந்துவிடுவதால் அவர்களின் காதல் படைப்புகளை குறைபாடு மிகுந்தனவாகவும் மரண்பாடு உள்ளனவாகவும் இருந்திருக்கின்றன. இத்தனை வகையானவர்களும் சேர்ந்து எலியைக் குத்திக் குத்திப் பெருச்சாளியாக்கி விட்டது போல் காதல் உணர்ச்சியை ஒரு பெரும் குழப்பமானதாகவும் அஞ்சத் தக்கதாகவும், மயங்கத் தக்கதாகவும் ஆக்கிவிட்டனர். இந்நிலையில் காதலின் உண்மையான பொருளை-இயலைப் பெரியார் எப்படி விளக்கிப் புலப்படுத்தியுள்ளார் எனப் பார்ப்போமா?

காதல் என்பது ஆசை, காமம், நேச்ம், ,மோகம், நட்பு என்பவைகளைவிடச் சிறிதுகூடச் சிறந்தது அல்ல........அதற்கு ஏதேதோ கற்பனைகளைக் கற்பித்து ஆண், பெண்களுக்குள் புகுத்தி விட்டதால், ஆண், பெண்களும் தாங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக் கொள்ளவேண்டுமென்று கருதி, எப்படி பக்திமான் என்றால் இப்படியெல்லாம் இருப்பான் என்று சொல்லப்பட்டதால் அனேகர் தங்களைப் பக்திமான் என்று பிறர் சொல்லவேண்டும் என்று கருதிப் பூச்சு பூசுவதும், பட்டை நாமம் போடுவதும், சதா கோவிலுக்குப் போவதும், பாட்டுகள் பாடி அழுவதும், வாயில் சிவசிவ என்று சொல்லிக் கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்தும் தங்களைப் பக்திமான்களாக் காட்டிக் கொள்கிறார்களோ அது போலவும், எப்படிக் குழந்தைகள் தூங்குவது போல் வேசம் போட்டுக் கண்களை மூடிக் கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காகத் தூங்கினால் கால் ஆடுமே என்று சொன்னால் அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைத்துக் கொள்ளவேண்டுமென்று கருதிக் காலைச் சிறிது ஆட்டுமோ அது போலவும், எப்படி பெண்கள், இப்படி இப்படியிருப்பதுதான் கற்பு என்றால் பெண்கள் அதுபோலெல்லாம் நடப்பது போல் நடப்பதாக் காட்டிக் கொள்கிறார்களோ அதுபோலவும் உண்மையான காதலர்களானால் இப்படியல்லவா இருப்பார்கள் என்று சொல்லிவிட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்துவிட்டால் அது போலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்கிறார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேடத்தையெல்லாம் போடுவார்கள். ஆகவே, ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிடக் காதல் என்பதாக வேறு ஒன்றும் இல்லை. 33

அன்பு, அருள், நட்பு, உறவு, பக்தி, அகியவற்றுள் எந்த வகையான வேறுபாடு உள்ளதோ அந்த வகையிலும், அளவிலும்தான் மேற்கூறப்பட்ட சொற்களும் காதல் என்னும் சொல்லுக்கும் இடையிலும் வேறுபாடு அமைந்திருக்க முடியும். தெரியாதவர்களும் எத்தொடர்பு மற்றவர்களுமாகிய அயலாரிடம் தோன்றும் அன்பே அருள் எனப்படுகிறது; நெருக்கமாகப் பழகி உற்றுழியுதவுவோருக்கிடையில் ஏற்படும் அன்பே நட்பு எனப்படும். பெற்றோர் முதலியோருடன் ஏற்படும் அன்புத் தொடர்பே உறவு என்று கூறப்படுகிறது. எவ்விடத்திலும் எக்காலத்திலும் இல்லாத பொருளை உவமையாக கூறுவது போல் எங்கும் எப்போதும் இல்லாத கடவுளிடம் காட்டும் அன்பே பக்தி எனப்படுவதாயிற்று. இவைபோன்றே பல்வகைப் பொருத்தங்களும் அமைந்த ஆண் பெண் ஆகிய இருவரிடம் தக்க பருவத்தில் அறிவார்ந்த விருப்பத்திற்கிணங்கத் தோன்றும் அன்பே காதல் என்னும் பெயரைப் பெற்றது என்பதேயன்றிக் காதல் என்பது முற்றிலும் வேறுபட்டு அன்பு முதலியவற்றுக்கு மாறாக மாந்தரிடம் தோன்றும் சிறப்புக் குணமன்று என்பதே பெரியார் காதலுக்குத் தரும் விளக்கமாகும்.


.....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -9

No comments: