Pages

Thursday 11 February, 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-7






II சடங்குகள்
மண அறையின் தென்புறமக மண ஆசிரியர் வடக்கு நோக்கி அமர்க;

1. முன்னவனார், இறைவன், இறைவி கலசங்கள் அமைத்தல்

2.
(அ) தலை வாழையிலை இரண்டை ஒன்றன் மேல் ஒன்று
தலைப்பகுதி வடபுறம் இருக்கும்படி, மேற்கு நோக்கி இடுக
நடுநரம்புகளுக்கு இடையே அரிசியைப் பெய்க.

(ஆ) மஞ்சள் பிள்ளையாரை, முன் இலையின் தலைப் பக்கம் அமர்த்துக, குங்குமம் இடுக, மலர் சொரிக, பழம் படைக்க.

(இ) முக்கால் அளுவு நீர் நிரம்பிய இரு செம்புகளுக்கு நாற்புறமும் மஞ்சள் பொட்டு வைத்துக் குங்குமம் இடுக. பெரிய செம்பை வலப்புறமும் சிறியதை இடப்புறமும் அரிசிமீது பொருத்துக. செம்புகளில் மாவிலை செருகுக. மாவிலைமீது நாரோடு உள்ள தேங்காய்களை மஞ்சள் குங்குமம் இட்னு வைக்க தேங்காய்கள் மீது மலர்ச்சரம் மாலையாகச் சூட்டுக. இரு கலசங்களுக்கு முன் வெற்றிலைப் பாக்கு விரல் மஞ்சள், பழம் படைக்க.


2. காப்புக் கயிறு;
(அ) ஒரு முழ நீளம் உள்ள மஞ்சள் பூசிய மூன்று துண்டு நூல்களில் விரல் மஞ்சள் முடிக்க.
(ஆ) ஒரு தட்டில் அரிசி பெய்து. அதன் மீது நாரோடுள்ள ஒரு தேங்காயைப் பொருத்துக. தேங்காய்க்கு மஞ்சள் குங்குமம் இடுக. மலர் சொரிக. வெற்றிலை பாக்கு பழம் வைக்க. தேங்காயின் மீது கப்பு நூல்கள் மூன்றையும் இடுக.


3. மங்கல நாண்;
(அ) நாரோடுள்ள ஒரு நல்ல தேங்காய்க்கு நிரம்ப மஞ்சள் பூசிக் குங்குமம் இடுக. ஒரு தட்டில் அரிசி பெய்து அதன் மீது தேங்காயைப் பொருத்துக.
(ஆ) மாங்கல்ய நூலுக்கு நிரம்பிய மஞ்சள் தடவி அதில் மாங்கல்யத்தைக் கோத்து இருபுறமும் முடி இடுகந அதனைத் தேங்காய் மீது சுற்றுக. மலர்ச்சரம் சுற்றுக. வெற்றிலை பாக்கு, விரல் மஞ்சள், பழம் இவற்றைத் தேங்காயின் முன் தட்டில் வைக்க.
(இ) இன்னொரு தட்டில் அரிசியுடன் மஞ்சளும் மலரும் கலந்து வைக்க.


4.மண வேட்டி, சேலை, மாலை;
(அ) ஒரு பெரிய தட்டில் மண வேட்டி, சேலை, மணமாலை, வெற்றிலை பாக்கு, மஞ்சள் வைத்துக் கலசங்கள் முன் வைக்க.
(ஆ) மன்னவனாரை வழிபடுக.
(இ) இறைவன், இறைவியை வழிபடுக.
(ஈ) வேட்டி, சேலைத் தட்டினை, அவையினரிடம் எடுத்துச் சென்று வாழ்த்துப் பெறுக.


5. மணமக்களுக்கு வேட்டி, சேலை, மாலை வழங்குக;
(அ) மணமகனை மண அறைக்கு வரச்சொல்லி, வேட்டி மாலையை வாழ்த்தியளிக்க.
(ஆ) மணமகளை மண அறைக்கு வரச்சொல்லி, சேலை மாலையை வாழ்த்தியளிக்க.




6. அரசாணிக்கால் நடுதல்;
மண அறையின் நடுவில் ஒரு தாம்பாளம் வைத்து அதில் அரசாணிக்காலை ஐந்து வாழ்வரசியர் நிறுத்திப் பிடிக்க. நீர் விட்டு பால் விட்டு பிறகு நீர் விட்டு மஞ்சனம் ஆட்டுவிக்க,. மஞ்சள் பூசி குங்குமம் இடச் செய்து மலர்ச் சரம் சூட்டச்செய்க. சாம்பிராணி, வர்த்தி, கற்பூரம் காட்டி நிறை குடங்களுக்கு இடையில் நடச்செய்க (கெட்டிமேளம்)

7. மணப் பொங்கல் படைத்தல்;
மணமகனும், மணமகளும் உடுத்திக் கொண்டு மாலையணிந்து வந்ததும், மணப்பந்தலுக்கு எதிரே இடப்படுப் மணப்பொங்கல் படையலுக்குச் சாம்பிராணி வர்த்தி கற்பூரம் காட்டி வழிபடச் செய்க.

8. மணமக்கள் மண அறையில் அமர்தல்;
மணப்பொங்கல் படைத்தபின் மணமக்கள் வலமாக வந்து மண அறையில் மேற்கு ஓரமாக இடப்பட்டுள்ள மணமனையில் கிழக்கு நோக்கி, அமரக (மணப்பெண் வலப்புறமும் மணமகன் இடப்புறமுமாக)

9. திருநீறு குங்குமம் அளித்தல்;
(அ) மணமக்களுக்குத் திருநீறு குங்குமம் அளிக்க;
(ஆ) ஐந்தெழுத்து எட்டெழுத்து ஓதுவிக்க.

10. காப்புக் கட்டுதல்;
(அ) அரசாணிக்காலுக்குக் காப்புக் கட்டுக (கெட்டி மேளம்)
(ஆ) மணமக்களின் வலக்கையில் கட்டுக. (கெட்டி மேளம்)
(இ) மணமகளின் இடக்கையில் மணமகளைக் கட்டச் செய்க. (கெட்டிமேளம்)
(தட்டிலுள்ள அரிசியுடன் தேங்காயை மணமக்கள் இருகைகளாலும் அள்ளி ஏந்தச் செய்து)

11. பெற்றோரை வழிபடுதல்;
(அ) தட்டில் மணமகனின் பெற்றோர் இருவர் பாதங்களையும் வைக்கச் செய்து மணமகன் நீர்விட்டு, பால்விட்டு, நீர்விட்டு, மஞ்சனமாட்டச் செய்க. மஞ்சள் பூசி, குங்குமம் இடச் செய்து, மலர் தூவச் செய்க, சாம்பிராணி வர்த்தி, கற்பூரம் காட்டி பாதங்களைத் தொட்டு வழிபடச் செய்க. பெற்றோர் பாதங்களின் மீதுள்ள மலரை மணமகன் மீது வாழ்த்திச் சொரியச் செய்க.
(ஆ) மணமகளும் தம் பெற்றோருக்கு இங்ஙனே வழிபாடாற்றச் செய்க.

12. ஓம்படை செய்தல்;
(அ) மணமக்களின் பெற்றோர் இருபுறமும் நிற்க மணமக்களை எழுந்து நிற்கச் செய்க.
(ஆ) மணமகள், தனக்கு வாய்க்கும் மணாளளின் தகுதியை நினைத்துக் கைகூப்பித் திருவருளை வேண்டுதல்.
(இ) மணமகனும் மணாட்டியின் பண்புநலம் நினைத்து வரவேற்றல்.
(ஈ) மணமகனின் வலக்கையைப் பெற்றோர் ஏந்த மணமகளின் வலக்கையை அவள் பெற்றோர் எடுத்து மணமனின் கைமேல் வைக்க (கெட்டிமேளம்)


13. இறை வழிபாடு ஆற்றுதல்;
(அ) முன்னவனார்.
(ஆ) இறைவன், இறைவி மங்கலநாண் மணமக்கள் மலர் தூவி வழிபடுக. சாம்பிராணி, வர்த்தி கற்பூரம் காட்டுக.
(இ) மங்கல நாண் தட்டினை அவையினரின் வாழ்த்துக்கு அனுப்புக.
(ஈ) மஞ்சள் அரிசித் தட்டினை இன்னொருவர் எடுத்துச் சென்று அரிசியை அவையினர் அள்ளிக் கொள்ளச் செய்க.

14. அழல் ஓம்புதல்;
(அ) ஒரு தாம்பாளத்தில் உமிபெய்து அதன்மீது ஓமச்சுப்பலை இட்டு, கற்பூரம், காட்டி சுப்பல் மீது இடுக.
(ஆ) ஒரு கிண்ணத்தில் நெய்வைத்துக் கொண்டு மாவிலைக் கரண்டியால் ஓமச் சுப்பல் மீது மாப்பிள்ளையைப் பெய்யச் செய்க.
(இ) மணமகன் ஒவ்வொரு சுப்பலாக எடுத்து ஓமத்தில் இடச் செய்க.
(ஈ) ஒரு வெற்றிலையில் சிறிது நெய் தடவி ஓமக்கரியில் அப்பி எடுத்துக் கொள்க (மணமக்களுக்கு ஓமப் பொட்டு இடுவதற்கு ஓமம் முடிந்தபின் செய்ய வேண்டியது.


15. மங்கல நாண் அணிதல்;
(அ) மடமகன் உடன் பிறந்தாள், கையில் விளக்கு ஏந்தி மணமகளின் பின்புறம் நிற்க.
(ஆ) மங்கல நாணை வாழ்த்தி மணமகளின் கழுத்தில் அணிவதற்கு உகந்த வகையில் மாப்பிள்ளையின் கையில் தருக. மூத்த வாழ்வரசியார்


ஒருவர் உடனிருந்து கவனித்துக் கொள்ள, மங்கல நாணுக்கு மூன்று முடிச்சு இடச்செய்க (கெட்டிமேளம்)
(இ) அவையினர் மஞ்சள், அரிசி தூவி வாழ்த்துதல்,.
(ஈ) முடிச்சின் மீது மாப்பிள்ளை மஞ்சள் குங்குமம் இடச் செய்தல்.
(உ) மணமகளின் நெற்றியில் மணமகனைக் குங்குமம் இடச் செய்க. (மணமகளை அணைத்த பாங்கில்)


16. மாலை மாற்றிக் கொள்ளல்;
மணமக்கள் மும்முறை மாலை மாற்றிக் கொள்க.

17. உறுதிமொழி ஏற்றல்;
இரண்டு தாள்களில் வரையப்பெற்றுள்ள உறுதி மொழியை மணமகனும் மணமகளும் அவையினர் காதில் விழும்படி படித்துக் கையொப்பமிடுக. ஆசிரியர் வேறு இருவரும் ஒப்பமிட்டு மணமக்களிடம் தந்திடுக.

18. பட்டங் கட்டுதல்.
மாமியார் நாத்துணையார், உடன்பிறந்தார் என்னும் உறவுகள் கொண்டாடி, மணமக்களுக்கப் பட்டங்கள் கட்டுதல்.
19. வலம்வருதல்;
(அ) முன்னே ஒரு செல்வி விளக்கு ஏந்தச் செல்ல தொடர்ந்து இளஞ்செல்வியர் முளைப்பாலிகை ஏந்தி நடக்க மாப்பிள்ளைத் தோழர் மணமகனின் இடக்கைச் சுண்டு வரலைப் பற்றி நடக்க மும்முறை மண அறையை வலம் வருக.
(ஆ) முதல் சுற்றில் அம்மியருகே சென்றதும் மணாட்டியின் வலப்பாதத்தை மணாளன் எடுத்து அம்மிமீது வைத்து இரண்டாவது விரலில் காலாழி போடுக. இடப்பாதத்திலும் போடுக.
(இ) ஒவ்வொரு சுற்றிலும் மணமகளின் உடன் பிறந்தான் இருகைகளில் பொரி அள்ளி மணமகள் இருகைகளிலும் தர, மணமகள் மணமகனின் இரு கைகள்மேல் தம் பொரியேந்திய கையை வைத்து ஓமத்தில் பொரியைச் சொரிக.


20. பொரி மோதிரம் இடுதல்;
மூன்றவது சுற்றில் பொரி சொரிய உதவிய மைத்துனனுக்கு மாப்பிள்ளை சந்தனம் தந்து மாலை இட்டுப் பொரி மோதிரம் போடுக.
21. காப்பு அவிழ்த்தல்
வலம் வந்து முடிந்ததும் மணமக்களை மணையில் அமரச் செய்க.
(அ) அழல் ஓம்புக.
(ஆ) மணமக்களுக்கு ஓமப் பொட்டு இடுக.
(இ) கட்டிய முறையிலேயே மூன்று காப்புகளையும் களைந்து தட்டிலுள்ள தேங்காய் மீது இடுக.
(ஈ) காப்புக் கட்டுக்கான அரிசி, தேங்காயை மேளக்காரருக்கு அளிக்க.

22. மாறியமர்தல்;
மணாட்டி இடப்புறமும், மணாளன் வலப்புறமுமாக மாறி அமர்க.

23. வாழ்த்து.
(அ) அரிசி வாழ்த்து
(ஆ) திருநீறு பூசுதல்.
(இ) பரிசுகள் வழங்குதல்

24. கண்ணேறு கழித்தல்;
(ஆலம் சுற்றுதல்)மூத்த வாழ்வரசியார் செய்க.

25. வலம் வருதல்;II
முன் போன்றே
(முதல் தடவை மணமகன் வீட்டுச் செல்வியர் விளக்கும் முளைப் பாலிகையும் ஏந்திச் சென்றால் இந்தத் தடவை வீட்டுச் செல்வியர் ஏந்திச் செல்வர்.


26. பாலும் பழமும் அருந்துதல்;
வீட்டுக்குள்ளே சென்று மாப்பிள்ளைத் தோழர் பால்பழக் குவளையை எடுத்துத்தர, மணமகனும் மணமகளும் அருந்துதல்.

27. வாழ்த்துரை;
அச்சிட்ட வாழ்த்துரைகளைப் படித்தல், வாழ்த்து நவிலல். (மணமக்களை அவையில் நாற்காலிகளில் அமரச்செய்தல்.)


காதல் திருமணம் பற்றி பெரியார் கூறுபவை......

திருமணமுறை தொடக்க காலத்தில் இல்லை என்றும் ஒருவரையொருவர் மனம்நிறைந்த உவகையுடன் விரும்பிக் காதலித்து வாழும் வாழ்வே இருந்ததென்று வரலாற்றின்மூலம் அறியலாம்.

திருமணம் அல்லது கன்னிகாதானம் போன்ற நிகழ்ச்சிகள் தமிழ் மக்களாகிய நமக்கு கிடையாது. நம்மவர்களுக்கெல்லாம் மணவாழ்க்கை இல்லை;காதல் வாழ்க்கைதான் இருந்தது.

என்று கூறும் பெரியார் காதலின் பழமையையும் அது தமிழர் வாழ்வில் பெற்றிருந்த சிறப்பையும் தெளிவாக்கியுள்ளார். தொல்காப்பியம் கூறும் காதல் வாழ்க்கையே தமழரின் அக வாழ்க்கை. ஆனால் வாழ்க்கையில் எப்பொழுது ஏற்பட வேண்டும்? எப்படி ஏற்பட வேண்டும்? என்பவற்றை அவர் இப்படிக்கூறுகிறார்...

உண்மையில் காதல் மணம் என்றால் பெண்களும் ஆண்களும் சமநிலையில் பழகும் வாய்ப்புத் தந்து ஒருவருடைய குணங்களை மற்றவர் அறியும் சமயம் கிடைத்து, ஒருவருடைய வாழ்க்கைக்கு ஒருவர் இன்றியமையாதவர் என்ற நிலையில் காதல் கொள்வதுதான் உயர்ந்த காதலாகும்.

உயர்ந்த காதல் என்பது இதுதான். பிறவகையில் கூறப்படும் காதலெல்லாம் உயர்ந்த காதல் ஆகா.

.....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -8

No comments: