Pages

Tuesday, 16 February, 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்!-11(14) அழல் ஓம்புதல் i:
(i) கற்பூரம் இடும்போது:

விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே. -

                                                    ----அப்பர்

இறைவன் எங்கு இருக்கிறான்? எப்படிக் காண்பது?என்று வினவுவார்க்கு அப்பர் எளிமையாக ஒரு வழி காட்டுகிறார். விறகில் தீ இருப்பது போலவும், பாலில் நெய் இருப்பது போலவும், மணியில் ஒளி இருப்பது போலவும் இறைவன் மறைந்திருக்கிறான். ஆனால் சோதி வடிவாய் இருக்கிறான். அதிலும் மணிச்சோதியாய் மாமணிச்சோதியாய் உள்ளான்.

அப்படியிருந்தும் நம்கண்ணுக்குத் தெரியவில்லையே என்பார் சிலர். குருட்டுக் கண்ணுக்கு உலகியல் பொருள் தெரியாது அதுபோல அறியாமை நிரம்பிய நம்மனோருக்கு அச்சோதி புலப்படாது. நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவாகிய கோலை நட்டு, உணர்வாகிய கயிற்றினால் முறுக வாங்கிக் கடைய முன்னின்றருளுவான் என்கிறார். அப்பர். முறுகக் கடைய விறகில் தீ தோன்றும். வாங்கிக் கடைய பாலில் நெய் தோன்றும். கடைய மணியில் ஒளி தோன்றும். எனவே பக்தியுடன் உறவுடன் முறுக வாங்கிக் கடைந்து இறைவனைக்கண்டு இன்புறுவோமாக.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா-நன்புகழ்சேர்
ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்
                                   ---பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி

வெளிச்சடங்குகளைக் கைவிட்டு நெஞ்சுருகிக் கடவுளை வழிபட்டால் போதும் என்பதே இதன் கருத்து.

(ii) (iii) (அ) அழல் ஓம்பும்போது;

ஓசை, ஓலி எல்லாம் ஆனாய் நீயே!
உலகுக்கு ஒருவனாய், நின்றாய் நீயே!
வாச மலர் எலாம் ஆனாய், நீயே!
மலையான் மருமகனாய் நன்றாய் நீயே!
பேசப் பெரிதும் இனியாய், நீயே!
பிரானாய், அடி என்மேல் வைத்தாய், நீயை!
தேச விளக்கு எலாம் ஆனாய் நீயே!
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ!

'உற்று இருந்த உணர்வு எலாம் ஆனாய் நீயே!
உற்றவர்க்கு ஓர் சுற்றமாய் நின்றாய் நீயே!
சுற்று இருந்த கலைஞானம் ஆனாய் நீயே!
கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே!
பெற்று இருந்த தாய் அவளின் நல்லாய் நீயே!
பிரனாய், அடி, என்மேல் வைத்தாய் நீயே!
செற்று இருந்த திருநீலகண்டன் நீயே!
திருவையாறு அகவாத செம்பொன் சோதீ!

'எல்லா உலகமும் ஆனாய், நீயே!
ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே!
நல்லாரை நன்மை அறிவாய் நீயே!
ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் நீயே!
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே!
புகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே!
செல்வாய செல்வம் தருவாய் நீயே!
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ!

                                        ---அப்பர் -- திருவையாற்றுத் திருத்தாண்டகம்
குறிப்பு; இத்திருத்தாண்டகத்தின் பதினோரு பாடல்களையும் ஓதுவது சிறப்பாகும்.

மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்
விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,
பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்
புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி,
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை
தளிர்ப்புரையும் திருவடியென் தலைமே லவ்வே

                                                          --திருமங்கையாழ்வார் - திருநெடுந்தாண்டகம்


பார் உருவில் நீரெரிகால் விசும்பு மாகிப்
பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற,
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற,
இமையவர்தம் திருவுருவேரு எண்ணும்போது
ஒருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ
ஒன்று மாகடலுருவம் ஒத்து நின்ற
மூவுருவும் கண்டபோது ஒன்றாம் சோதி,
முகிலுருவம், எம் அடிகள் உருவந்தாளே.

                                       ---திருமங்கை -- திருநெடுந்தாண்டகம்


இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் றன்னை
இருநிலம்கால் தீநீர்விண் பூதம் ஐந்தாய்,
செந்திறத்த தமிழோசை வடசொல் லாகித்
திசைநான்கு மாய்த்திங்கள் ஞாயி றாகி,
அந்தரத்தில் தேவர்க்கும் அறிய லாகா
அந்தணனை அந்தணர்மாட் டந்தி வைத்த
மந்திரத்தை, மந்திரத்தால் மறவா தென்றும்
வாழுதியேல் வாழலாம் மடநெஞ் சம்மே.

                                                         ---திருமங்கை --திருநெடுந்தாண்டகம்.


குறிப்பு::  இந்தத் திருநெடுத்தாண்டகத்தில் உள்ள பாடல்களில் மேலும் பல ஓதுவது சிறப்பாகும்.
(ii) (iii) (ஆ) ஓமம் நிறைவேறும்போது (பூரண ஆகுதி)

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்கவேண்டா சுடர் விட்டுளன் எங்கள்சோதி
மாதுக்கம் நீங்கலுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே!

                                                         ---சம்பந்தர்

பொழிப்புரை; இறைவனை அன்பால் வழிபடும் ஞானிகளே ! அனுமானப் பிரமாணத்தாலும் உரையளவையாலும் இறைவனை மிகுதியாகச் சோதிக்க வேண்டா. அவன் ஊனக்கண் கொண்டு நோக்கப்புறத்தே சோதிவடிவமாகவும், அன்போடு கூடி அகத்தால் ஞானக்கண் கொண்டு நோக்க உள்ளொளியாகவும் விளங்குபவன். அவனை விரைவில் வந்து சார்ந்து, மனம் ஒன்றி வழிபட்டுப் பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள். இறைவன் அளவைகளால் அறியப்படும் ஆராய்ச்சிக்கு அப்பாற் பட்டவன்.நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி
ஊரகத்தாய் ஒண்துறை நீர் வெஃகாகவுள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகமேத்தும்
காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா
காமரு பூங்காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய் பேராதென் நெஞ்சினுள்ளாய்
பெருமானுன் திருவடியே பேணினேனே.

                                                    -திருமங்கையாழ்வார் - திருநெடுந்தாண்டகம்

எம்பெருமான் நீர்மைத் தன்மையானவன். நீரிடை மீனாக அவதாரம் செய்தவன். நீர்ப்பாயலை இருப்பிடமாக் கொண்டவன். பிரளய காலத்தின் போது பூவலகு நீரால் சூழ ஆலிலை மேல் மிதப்பவன். என்வே அவனை நீரகத்தான் என்று மங்களாசாசனம் செய்தார் திருமங்கையாழ்வார். ஆனால் இத்தலம் எங்கிருந்து என்று மட்டும் விளம்பாது சென்றார் ஆழ்வார்.

(15) (ii) மங்கல நண் சூட்டதல்;

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல் அக்து உறும் கழுமல வளநகர்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.
                                                             --சம்பந்தர்
புகழு நல்லொருவன் என்கோ? பொருவில் சீர்ப்பூமி என்கோ?
திகழுந்தண் பரவை என்கோ? தீஎன்கோ? வாயு என்கோ?
நிகழும் ஆகாசம் என்கோ? நீள்சுடர் இரண்டும் என்கோ?
இகழ்வில் இவ்வனைத்தும் என்கோ? கண்ணனைக் கூவுமாறே.

                                                            -நம்மாழ்வார்-திருவாய்மொழி

(iv) (v) பொட்டு இடுதல் 

பாத தமரையின் நுண்துக்ள, பரம
அணுவினில், பல இயற்றினால்,
வேத நான் முகன், விதிக்க வேறுபாடு
விரிதலம் புவனம் அடைய மால், 
மூது அரா வடிவு எடுத்து, அனந்த
முது கணபண அடலி பரிப்ப; மேல்
நாதனார் பொடி படுத்து நீறு அணியின்
நாம் உரைத்தது ஏன்? அவள் பான்மையே!

                                                      --ஆனந்தலகரி


(17) மணமக்கள் உறுதிமொழி 
மணமக்கள்; எல்லாம் வல்ல இறைபரம் பொருளின் திருவருட்பாங்கால்--------------------------------- ஊர் திரு---------------------------------
மகன்--------------------------------ஊர்------------------------------------------------
திரு--------------------------------- மகள்-------------------------------------

ஆகிய நாம் இருவரும் நம் உற்றார் உறவினர் அன்பர் நண்பருமாக இத்திருமண மண்டபத்தில் குழுமியுள்ள பெரியோர்கள் திருமுன்பு இவர்கள் வாழ்த்த அம்மையும் அப்பனுமாக விளங்கும் அப்பெரும்பொருளை வழிபட்டுப் பேரொளி வடிவிலும் தொழுது, மணாளனும் மணாட்டிமாகியுள்ளோம்.

இது முதல் நாம் இருவரும் ஈருடல் ஒருயிராய் வள்ளுவப் பெருந்தகை இல்லற நெறியில் நிலை நின்று பெற்றோரும் சுற்றமும் பேணி, நடுநிலை பிறழாது ஒழுகி இயன்ற வகையிலெல்லாம் பிற உயிர்க்கு உதவி புரிந்து கொண்டு நாடும் மொழியும் போற்ற இன்ப நல்வாழ்வில் இனிது வாழ்த்த வருவோமாக!'

அவையினர்;

'நீடு வாழ்க! நிறைக நலங்கள் !

மணமகன்;--------------------- (ஒப்பம்) மணமகள்; ----------------------(ஒப்பம்)

(ஒப்பம்)------------------------இருபெருந்தகையர்;-----------------------(ஒப்பம்)

திருமணக்கூடத்தின் பெயர்;---------------     மண ஆசிரியர் (ஒப்பம்)

இடம்;----------------------நாள்;----------------

(தமிழ் முறையில் சடங்குகளோடு செய்யப் பெறும் திருமணத்தில் 'உறுதி மொழி தேவையில்லை என்பர் பலர். சிலர் விரும்புவதால் இங்கு இது இடம் பெறுகிறது) 


சிக்கனம்

சிக்கனத் திருமணம் பற்றி பெரியார் கூறுபவையயாக பேராசிரியர் மா. நன்னன் விளக்குபவை;

இக்காலத்தில் நண்பர்களையும், உறவினர்களையும் திருமணத்திற்கு வருமாறு அழைக்கும் அழைப்பிதழ் ஒன்றுக்கு ஆகும் செலவே பத்துப் பதினைந்து ரூபாய்கள் என்று கூறுகின்றனர். ஆகவே, பத்துப் பதினைந்தாயிரம் ரூபாய்களைத் திருமண அழைப்பிதழ் அச்சிடவே செலவிடுகிறார்கள். நூறு கோடி செலவில் நடந்த திருமணமும் அண்மையில் தமிழ்நாட்டில் நடந்ததை நாமறிவோம். ஆதலால், பகுத்தறிவு வழிபட்ட பெரியாரின் சுயமரியாதைத் திருமணம் சிக்கனமாகத் தான் நடைபெற வேண்டும் என்பதைத் தனியே எடுத்துக் கூறுவது தக்கதே.

வாழ்க்கை ஒப்பந்தத்திற்கு உறுதி மொழியும், அவசியப்பட்டால் பதிவு ஆதாரமும் தவிர வேறு காரியங்கள் எதற்கு? அதன் மூலம் அறிவு, காலம், பணம், ஊக்கம், சக்தி இவை ஏன் வீணாக வேண்டும்.?

என்பன பெரியாரின் வினாக்கள். இவ்விரு வினாக்களுக்கும் அறிவுள்ளவர்கள் சொல்லக் கூடிய விடை முறையே தேவையில்லை என்பதும் வீணாகக் கூடாது என்பதுமாகவே இருக்கமுடியும். வாழ்க்கைத் துணைவர்களாக இணையும் அவ்விளைஞர்களுக்கு அறிவு, காலம், ஊக்கம், சக்தி போன்ற பலவும் தாம் துணைவர்களான பிறகு மிகுதியாகத் தேவைபடும். அவற்றைச் செலவிட்டுத்தான் அவர்கள் தம் வாழ்க்கையைச் செம்மையாக நடத்த வேண்டும். அப்படியிருக்க பிற்காலத்தில் தமக்குத் தேவைப்படும் அந்த அரியவற்றை எல்லாம் துணைவர்களாகத் தாம் ஆவதற்கே செலவிட்டு விடுவதென்றால் அது எப்படிச் சரியானதாக இருக்கமுடியும்?

பலர் தம் திருமணக் கடனை அடைப்பதிலேயே தம் வாழ்வின் முனைப்பான பருவத்தை செலவிட்டுத் தளர்ந்து போவதை நாம் அறியோமா? அக்கடனில் தம் பிற சொத்துக்களையெல்லாம் மூழ்கடித்து இழந்து போனவர்களை நம் கண்கள் கண்டதில்லையா? காதுகள் கேட்டதில்லையா? வாழ்க்கையில் மகிழவும், முன்னேறவும், அவையிரண்டும் நிலைக்கவும் தேவைப்படுவனவற்றையெல்லாம் இப்படி வீண்டித்துவிட்டுத் தவிப்பது அறிவுடைமைநாகுமோ?

சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்வோர் சிக்கனமாக அதை நடத்திக் கொள்வதால் பணம் மிச்சமாகிறது. என்பதைச் சற்று விரிவாக எண்ணிப் பார்ப்போமா? 1997-ஆம் ஆண்டாகிய இக்காலத்தில் ஒருவர் தம் திருமணத்தைச் சற்று ஆரவார ஆடம்பரத்துடன் செய்து கொள்ள விரும்பினால் ஒன்றரை அல்லது இரண்டு நூறாயிரம் ருபாய்கள் செலவிட வேண்டியிருக்கும். அவர் சற்று சிக்கனமாக அத்திருமணத்தை நடத்திக் கொண்டு அய்ம்பதாயிரம் ரூபாய்களை மிச்சப்படுத்துவதாக வைத்துக் கொள்வோம். அம்மணமக்களுக்கு 1998-ஆம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்தால் அக்குழந்தைக்கு கி. பி. 2023 ஆம் ஆண்டுவாக்கில் இருபத்தைந்து வய்து ஆகும். இந்த இருபத்தைந்து ஆண்டுக் காலத்தில் தாம் மீதப்படுத்திய அய்ம்பதாயிரம் ரூபாய்களையும் அவர்கள் வட்டிக்குத் தந்து வைத்தால் அத்தொகை கி.பி. 2023 ஆம் ஆண்டுவாக்கில் குறைந்ததுபதினாறு நூறாயிரம் (1,60,0000) ரூபாய்களாக வளர்ந்து பெருகியிருக்கும். அத்தொகையைத் தம் மகவின் மேற்படிப்பு, தொழில் போன்றவற்றுக்குச் செலவிட்டுத் தம் பரம்பரையை எப்படி முன்னேற்றமுடியும் என்றுபாருங்கள். யார் கையையும் எதிர் பாராமலேயே தம் மக்களை மேன்மேலும் உயர்த்த முடியுமே.இப்படி வாழ்க்கையில் சிக்கனத்தை கடைப்பிடிப்பதற்குத் திருமண சிக்கனமே தொடக்கமாகவும் வழி காட்டியாகவும் அமைய வேண்டும் என்பதே பெரியாரின் விருப்பம்.

பணமிச்சம், அதனால் அக்குடும்பம் பெறும் பெரும் பலன் ஆகியவற்றைப் போன்றே சுயமரியாதைத் திருமணத்தால் நேரக்கேடு, அதிகமானதொந்தரவு, தொல்லை, அலைச்சல் ஆகிய பலவும் தவிர்க்கப்படுவதால் அக்குடும்பத்தாரின் உடலுக்கும், உணர்வுகளுக்கும் ஏற்படும் பலன்களைக் கணக்கிட்டுப் பார்க்கவேண்டும். நாற்பது வய்துக்குள்ளாகவே நாடி தளர்ந்து, மூளையின் திறன் தடுமாறி, மூப்படைந்து வாழ்வை முடித்துக் கொள்ளத் தாமே விரும்பும் நிலை அவர்களுக்கு ஏற்படாதே. மேலும் மூட நம்பிக்கை, காட்டுமிராண்டித் தன்மை ஆகியவற்றால் நடைபெறும் செயல்கள் தவிர்க்கப்பட்டு அக்குடும்பத்தின் அறிவு,மானம், மதிப்பு ஆகியவையும் நல்ல அளவு காப்பாற்றப்படுவதையும் நாம் மறந்துவிடக் கூடாதே. ஆகவே, பெரியார் செய்து காட்டிய சீர்திருத்த திருமணத்தால் அக்குடும்பங்களுக்கும் அவற்றையுள்ளடக்கிய நம் சமுதாயத்திற்கும் ஏற்படும் பல் வகை ஆதாரங்களையும் நலன்களையும் நாம் நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

திருமணங்களில் மக்களின் சராசரி வரும்படியல் ஒரு பத்து நாள் அல்லது பதினைந்து நாள் வரும்படிக்கு மேல் செலவு செய்ய அனுமதிக்கவே கூடாது.
என்று கூறிப் பெரியார் திருமண செலவுகளுக்கு ஓர் உச்ச வரம்பையே ஏற்படுத்தியுள்ளார்.


.....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -12

No comments: