Pages

Thursday 18 February, 2010

நல்லவரிடம் தோற்பதும் பெருமை தானே!







சில வருடங்களுக்கு முன் என்னுடைய அலுவலகத்தில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக சிறப்பு விருந்தினராக மறைந்த இலக்கியச் செல்வரும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான வலம்புரி ஜான் வருகை புரிந்து எங்களது கருத்தரங்கில் உரையாற்றினார். அப்பொழுது அவர் கூறிய நிகழ்வுதான் பின்வருவன-;
நம் இந்தியக் குடியரசுத் தலைவரான அப்துகலாம் (அன்றையக் காலகட்டத்தில் அவர்தான் குடியரசுத்தலைவர்) அடிக்கடி கூறும் கீதையின் வாசகமான 

'' எது நடந்ததோ! அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ? அது நன்றாகவே நடக்கிறது! எது நடக்கவிருக்கிறதோ? அதுவும் நன்றாகவே நடக்கும்!'' 

என்று அடிக்கடி கூறிவருகின்றாரே! இதற்கு என்ன சொல்கிறார்! என்ற நோக்கத்தில் 


''மும்பையில் சில நாட்களுக்கு முன் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததே!, அதில் பலர் மாண்டனரே! அதுவும் நன்றாகவே நடந்தது! என்று எடுத்துக்கொள்ளலாமா? உங்கள் கருத்துப்படி'' 

''என்று நம் உயர்திரு குடியரசுத் தலைவருக்கு தமிழில் கடிதம் எழுதினேன்! அவர் கண்ணில் இது படுமா? அதற்கு பதில் எழுதுவரா? அவருக்கு நேரமிருக்குமா? என்ற எண்ணத்திலும், அதிக எதிர்பார்ப்பில்லாமலும் இருந்தேன். ஆனால் இரண்டு நாள் கழித்து என் இல்லத் தொலைபேசிக்கு அழைப்பு வந்தது, அழைத்தது வேறு யாருமல்ல! நம் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமே தான். நானோ அதிர்ச்சியில் ஒரு நிமிடம் நின்றேன். அவரே தொடர்ந்தார்....

''நான் தான் அப்துல் கலாம் பேசுகிறேன்! நலமா! வலம்புரி ஜான் அவர்களே! என்று வீட்டில் உள்ள அனைவரின் நலனையும் விசாரித்து விட்டு, எது நடந்ததோ? நன்றாகவே நடக்கும் என்று நல்லவற்றுக்குத்தான் குறிப்பிட்டேன். நல்லது நடக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே குறிப்பிட்டேன். இது (மும்பை சம்பவம்) நடந்ததற்காக ஏற்கனவே மிக வருத்தத்தில் இருக்கிறேன். உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது கண்டு மிகுந்த வருத்தமடைகிறேன்'' என்று குறிப்பிட்டார்.  எனக்கோ மிக அதிர்ச்சிஅவர் தொலைபேசியில் அழைத்ததில் இருந்தே, ஆனால் மேலும் அவர் தொடர்ந்தார் எப்படி? இப்படித்தான் 

'' நீங்கள் கூடத்தான் சன் தொலைக்காட்சியில் தினமும் 'இந்தநாள் இனிய நாள்' என்று கூறுகிறீர்கள். அனைவருக்கும் இனியநாளாக அமைந்து விடுகின்றதா?'' என்று பதிலுக்கு என்னை மடக்குவது போல் வினவினார். 

''ஆம் நீங்கள் சொல்வது சரிதான் ஐயா!'' என்று கூறிவிட்டு  இப்படி மனதுக்குள் நினைத்துக்கொண்டேன் '' நான் கூறும்  இந்த நல்ல விஷயங்களை பின்பற்றினால் இந்த நாள் மட்டுமல்ல எந்த நாளும் இனிய நாள் என்று வழக்கமாக சன் தொலைக்காட்சியில் கூறிடுவேன். அதை பின்பற்றுபவர்கள் அனைவருக்கும் எந்த நாளும் இனிய நாளாகத்தான் இருக்கும்'' என்று கூற நினைத்து என் மறுமொழியை மனதுக்குள்ளேயே பூட்டிக் கொண்டேனே தவிர!, அவரிடம் கூற மனம் வரவில்லை. 

ஏனென்றால் அந்த மாபெரும் மனிதர், இந்தியாவின் மிக உயர் ஏன்? மிக உச்ச பதவியில் இருப்பவர். ஆனால் என் இல்லம் நோக்கி பாரபட்சம் பார்க்காமல் இந்தத் தமிழனையும் மதித்து அழைக்கின்றாரே! தமிழை அவ்வளவு நேசிக்கின்றாரே! ஒரு சாமான்யனையும் தனக்கு நிகராக வைத்து போற்றுகின்றாரே! அந்த மனிதரிடம் நமது திறமையை காட்டி என்ன? ஆகப் போகின்றது. இவரிடம் தோற்பதைவிட மிகப்பெரிய பெருமை வேறொன்றுமில்லை! என்று நினைத்து அவருக்கு நன்றிகூறி விடை கொடுத்தேன். அது தான் அப்துல் கலாம்! அதுதான் அவரை அனைவரும் நேசிப்பதற்கான காரணம் என்று எங்களிடம் அவரின் சிறப்பை கூறினார் வலம்புரிஜான்.

நல்லவரிடம் தோற்பதும் பெருமை தானே! என்ற புதிய விளக்கத்தை பெற்ற திருப்தியோடும், அப்துல் கலாமின் மிக உயர்ந்த குணத்தை போற்றுகின்ற மனதோடு கூட்டம் இனிதே முடிந்தது.

----நன்றி அனுபவம்

No comments: