Pages

Tuesday 2 February, 2010

கொடுமையிலும் கொடுமை கண்ட கொடுமுடி கோகிலம் -2








கோவைக்கும், கொடுமுடிக்குமாக ஓடுகிற ரயிலில், தன் வெண்கலக் குரலில் தேசபக்திப் பாடல்களைப் பாடியபடி, கேட்பவர்கள் மனமுவந்து தரும் காசுகளை வாங்கி, தன் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து, வாழ்வு நடத்திக் கொண்டிருந்தவர் தான் கே.பி.சுந்தராம்பாள்.

தன் கம்பீரமான குரலில், உச்ச ஸ்தாயியில் பாடுவதையே தனக்கென ஒரு பாணியாய் கொண்டு, இசை உலகில் ஒரு தலையாய இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருந்த எஸ்.ஜி.கிட்டப்பா, கோவையில் தன் நாடகம் ஒன்றை முடித்துக் கொண்டு, செங்கோட்டை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார்.

அந்த ரயிலில், ரயில் ஓட்டத்தில் ஏற்படுகிற ஓங்காரக் கூச்சலுக்கிடையே, அதையும் மீறி நாதம் ஒன்று ஓங்கி ஒலித்துக் கொண்டிருப்பதை கேட்டு, "யார் பாடுவது, எங்கிருந்து இந்த இனிய நாதம் வருகிறது?' என்று தன்னிலையையும் மீறிய ஆவலில், தானிருக்கும் இடத்திற்கு அருகில் வரட்டும் என்று எதிர்பார்ப்புடன் இருந்தார்.

ஒவ்வொரு பெட்டியாக பாடிக் கொண்டே வந்த சுந்தராம் பாள், கிட்டப்பா இருந்த பெட்டிக்கும் வந்தார். யாரையும் லட்சியம் செய்யாமல், மடை திறந்த வெள்ளம் போல ஒலித்துக் கொண்டிருந்த பாட்டு, எதிரே பிரபலமான இசைக்கலைஞர் கிட்டப்பா அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்ந்து, அவரறியாமலேயே நின்றது.

அவரிடம் கிட்டப்பா, "ஏம்மா, நீ பாட்டுக்கு பாடு, ஏன் நிறுத்திட்டே?' என சொல்ல, சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தன் பாடலைத் தொடர்ந் தார். பாடல் முடியவும், கிட்டப்பாவின் முன் கூனிக்குறுகி நின்றார்.

பிறகு, "என் வயிற்றுப் பிழைப்புக்கு, எனக்குத் தெரிந்த எதையோ பாடிக் கொண்டிருக்கிறேன்...' என்றார்.


"நீ, முறையாக இசை பயின்றவர்களை விடவும், மிகவும் நேர்த்தியாகப் பாடுகிறாய். இசைவாணர்களின் எல்லாவித திறனும், பாணியும், நுணுக்கங்களும் உன் பாடலில் தானாக வருகிறது.

"நீ சாதாரணமாகப் பாடுவதாக எண்ணாதே... நான் தான் சிறப்பாக உச்ச ஸ்தாயியில் பாடுவதாக இதுவரையும் எண்ணியிருந்தேன். இன்று தான் என்னையும் வியப்பில் ஆழ்த்தும் இன்னொரு பாடகி இருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டேன்...' என்றார் கிட்டப்பா.

என்ன சொல்வது என்று தெரியாமல், திகைப்புடன் நின்றார் சுந்தராம்பாள்.

"வாம்மா, இப்படி உட்கார்...' என்று இடம் தந்தார். முதலில் அவர் முன், அருகில் அமர தயங்கி, பிறகு, அவரது கண்டிப்புக்கு இணங்கி, அவருக்கு மதிப்பளிக்கும் வகையில், பணிவுடன் அமர்ந்தார்.


தான் அன்றாடம் பாடிக் கொண்டிருந்த அத்தனை பாடல்களையும், முன்னே பாடியதை விட உணர்ச்சி ததும்பும்படியாக, கிட்டப்பா கேட்க, கேட்க பாடிக் காட்டினார்.

ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த அனைவரும் எஸ்.ஜி.கிட்டப்பாவே, அந்தப் பெண்ணைப் பாடச் சொல்லி, அருகில் அமர வைத்துக் கேட்டு ரசிப்பதை பார்த்தும், கேட்டும் அதிசயித்துப் போயினர்.

கிட்டப்பா, சுந்தராம்பாளை ஒரு அர்த்தமுடன் பார்த்தார்; பேசினார். தன்னுடனேயே செங் கோட்டைக்கு அழைத்துச் சென்று விட்டார். கிடப்பாவின் மதிப்புக்குரியவராக மட்டுமல்ல, மன துக்கு பிடித்தவராகவும், மனைவியாகவும் ஏற்றுக்கொண்டு விட்டார்.

கேட்பவர்களை தேனுண்ட வண்டாக மயங்க வைத்த இரு குரல்களும், தாம்பத்திய வாழ்க்கைக்கு வழிவகுத்து ஒளியேற்றி வைத்தன. கச்சேரிகள், மேடை நாடகங்கள் என, அவர்களின் கலைப்பயணம் தொடர்ந்தது. தமிழகமே அவர்களின் சேர்க்கைக்கு எல்லா வகையிலும் பாராட்டையே தந்தது. ( நன்றி தினமலர்)


இருப்பினும் கிட்டப்பா கே.பி.எஸ் தம்பதியர்களின் வாழ்க்கை அவ்வளவு இனிமையானதாக இல்லை என்பதே வரலாற்றியலாளர்களின் கூற்று. இது கிட்டப்பாவை விட்டு பிரிந்த நாட்களில் கேபிஎஸ் எழுதிய கடிதங்களில் வாயிலாக தெரிகின்றது என்று சித்ரா லட்சுமணன் தெரிவிக்கின்றார்.

அப்போதெல்லாம் பேசும் படங்கள் கிடையாது என்பதால் தினமும் நாடகங்கள் நடக்கும். அதிலும் கே.பி. சுந்தராம்பாள் நடிக்கும் நாடகம் என்றால் இன்று ரஜினிகாந்த் திரைப்படங்களுக்கு கூடுவதைப் போல கட்டுக்கடங்காத கூட்டம் கூடும். முருக பக்தையான சுந்தராம்பாள் அவர்களின் பெருமை கடல் கடந்தும் பரவியது. அவரது நாடகங்களை இலங்கையில் நடத்த அழைப்பு வந்தது. அதை ஏற்று 1926 ஆம் ஆண்டு தனது பதினெட்டாவது வயதில் இலங்கைக்கு பயணமானார் கே.பி.எஸ்.

அவரது வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்பத்தை உண்டு பண்ணப் போகிற பயணம் அது என்று அப்போது அவருக்குத் தெரியாது. கே.பி.எஸ். போன்று உச்ச ஸ்தாயியில் பிசிறின்றி பாடக் கூடிய ஆற்றல் படைத்த அற்புதமான கலைஞராக விளங்கியவர் எஸ்.ஜி. கிட்டப்பா. காங்கிரசில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த கிட்டப்பா கதர் ஆடைகளைத்தான் அணிவார். தீரர் சத்தியமூர்த்தியுடன் கிட்டப்பாவிற்கு நெருங்கிய தொடர்பு உண்டு. சுந்தராம்பாள் ஒரு புறம் தன்து தெய்வீகக் குரலால் நாடக மேடையை கலக்கிக் கொண்டிருந்தார் என்றால் அவருக்கு இணையாக இன்னொரு புறம் மேடைகளை கலக்கிக் கொண்டிருந்தவர் எஸ்.ஜி. கிட்டப்பா.


1906 ஆம் வருடம் ஆகஸ்ட் 25 ஆம் நாள் கங்காதரஅய்யருக்கும், மீனாட்சி அம்மையாருக்கும் திருநெல்வேலி ஜில்லா அம்பாசமுத்திரம் தாலுகா ஆழ்வார்குறிச்சியில் அவதரித்த கிட்டப்பாவின் ஆரம்ப கால வாழ்க்கை வறுமைக் கோட்டிற்கு மிகவும் கீழேதான் தொடங்கியது.

தந்தை கங்காதர அய்யரின் வருமானம் குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்லாததால் கிட்டப்பாவின் சகோதரர்கள் எஸ்.ஜி. சுப்பையர், எஸ்.ஜி. செல்லப்பா, எஸ்.ஜி. சாமி அய்யர் ஆகிய எல்லோருமே நாடகத் துறையில் ஈடுபட்டனர். சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் குழுவில் பணியாற்றிய இவர்களோடு சேர்ந்து கிட்டப்பாவும் தனது ஐந்தாவது வயதில் நடிக்கத் தொடங்கினார். தனது ஆறாவது வயதில் “நல்லதங்காள்’ நாடகத்தில் ஏழு பிள்ளைகளில் ஒருவராக நடித்தார் கிட்டப்பா.

கிட்டப்பாவின் சங்கீத ஞானமும், அயராத அவரது பயிற்சியும் கிட்டப்பாவிற்கென்று ஒரு தனி ரசிகர்கள் வளையத்தை உருவாக்கியது. ஒவ்வொருநாளும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்தது. பின்னாளில் அவரது பாட்டைக் கேட்க பைத்தியமாக பலர் அலையத் தொடங்கினார்கள்.

தங்களது வேலைகளை எல்லாம் விட்டு விட்டு அவரது பாடலைக் கேட்பதற்காக நாடகக் கொட்டகைகளில் தவமிருப்போர் எண்ணிக்கை அதிகரித்தது. செம்மங்குடி சீனிவாச அய்யர், மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர், அரியக்குடி ராமானுஜ அய்யர் போன்ற இசை மேதைகள் எல்லாம் “”கிட்டப்பா நாடக மேடையை விட்டு விட்டு கச்சேரி நடத்த சபா மேடைகளுக்கு வந்தால் நம் நிலை என்னவாகும்?” என்று பேசிக் கொள்வார்களாம்.

தன்னைப் போல பாட எவருமில்லை என்பது கிட்டப்பாவிற்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், தனக்கு இணையாக பாடக் கூடிய பெண் நாடகக் கலைஞர் இல்லையே என்ற வருத்தமும் இன்னொரு புறம் அவரை வாட்டியது. அவருடைய சுதியில் சேர்ந்து பாட முடியாதபடி பல பெண் பாடகிகள் திண்டாடினார்கள்.

இந்தச் சூழ்நிலையில் 1924-ஆம் ஆண்டு ஜூன் 23-ம் நாள் திருநெல்வேலி விஸ்வநாத அய்யர் மகள் கிட்டம்மாளுக்கும் கிட்டப்பாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு கிட்டப்பாவும், காசி அய்யரும் ஸ்பெஷல் நாடகங்களில் நடிக்க இலங்கைக்குப் பயணமானார்கள். அப்போது கே.பி. சுந்தராம்பாள் இலங்கையில் நாடகங்கள் நடத்தி இலங்கை வாழ் மக்களை தன் பக்கம் முழுமையாக ஈர்த்திருந்தார். தமிழ் நாட்டைப் போலவே இலங்கையிலும் அவரது நாடகங்களுக்கு கூட்டம் அலை மோதியது.

எஸ்.ஜி. கிட்டப்பாவிற்கு இணையாக பாடக் கூடிய பெண் கலைஞர் இல்லாதது போல் கே.பி. சுந்தராம்பாளுக்கு இணையாக பாடக் கூடியவர் இல்லாதது அவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. சுந்தராம்பாளுடன் நடிக்கும் நடிகர்கள் அவரோடு இணைந்தும், ஈடு கொடுத்தும் பாட முடியாததால் நாடகம் பார்க்க வந்த ரசிகர்கள் அவர்களை கேலி பேசத் தொடங்கினர். இதனால் பல நடிகர்கள் கே.பி.எஸ். அவர்களோடு நடிக்கவே அச்சப்படத் தொடங்கினர்.

இந்த நேரத்தில் இலங்கை வந்த கிட்டப்பா “தில்லானா மோகனாம்பாள்’ திரைப் படத்தில் பத்மினி நடனத்தைப் பார்க்க சிவாஜி போவாரே, அது போன்று சுந்தராம்பாள் நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க கிளம்பினார். அவர்கள் சந்திப்பைப் பற்றி “இசை ஞானம் பேரொளி பத்மஸ்ரீ கே.பி. சுந்தராம்பாள்’ என்ற தனது புத்தகத்தில் கீழ்க்கண்டவாறு சுவைபட விவரித்துள்ளார் பாஸ்கரதாசன்.

“”சுந்தராம்பாளின் ஓங்காரமான ரீங்கார நாதத்தைக் கேட்ட கிட்டப்பா கதி கலங்கி, மதி மயங்கி கிறு கிறுத்தும் போனார். “”என்ன சங்கீத ஞானம், என்ன சுகமான சாரீரம், என்ன தெய்வீகமான குரல்” என்று துதிபாட ஆரம்பித்தார். நமக்கு இணையாக பாடக் கூடிய வல்லபி இவர்தான் என்று முடிவு செய்து கொண்டார்.

கிட்டப்பா சுந்தராம்பாளைச் சந்திக்கிறார். ஏற்கனவே கிட்டப்பாவின் மகிமையைக் கேள்விப்பட்டிருந்த சுந்தராம்பாள் அவரை நேரில் பார்த்ததும் காந்தத்தின் வடதுருவமும், தென்துருவமும் சந்திப்பதைப் போல ஈர்க்கப்படுகிறார்.

இருவருமே புகழ் பெற்ற பாடகர்கள். இருவருமே உச்ச ஸ்தாயியில் பாடக் கூடியவர்கள். இருவருமே தங்களுக்கான இசை ஜோடியை தேடிக் கொண்டிருந்தவர்கள். எனவே, இவரும் ஒரு நாடகத்தில் இணைந்து நடிப்பது என்று முடிவு செய்கின்றனர்.

சங்கீத ஜாம்பவான் என்று புகழப்படும் கிட்டப்பாவிற்கு இணையாகப் பாட வேண்டுமே என்ற பயம் சுந்தராம்பாளுக்கும், உச்ச ஸ்தாயியில் பாடும் சுந்தராம்பாளுக்கு ஈடு கொடுத்து பாட வேண்டுமே என்ற அச்சம் கிட்டப்பாவிற்கும் இருந்தது.

இருவரும் சேர்ந்து நடித்த நாடகம் இலங்கையில் அரங்கேறியது. எட்டுக்கட்டை சுதியில் பாடும் கிட்டப்பாவை யாரும் எட்டாத நிலையில் சுந்தராம்பாள் அதே சுதி லயத்தோடு தொட்டுவிட்டார். உச்ச ஸ்தாயியில் பாடலையும், உள்ளத்தையும் ஒரு சேரத் தொட்டுவிட்டார் அவர் என்பது தான் உண்மை.

சுந்தராம்பாளுக்கு இணையாக நடித்த ராஜபார்ட்டுகளை மதிக்காத கலா ரசிகர்கள் சுந்தராம்பாளோடு உச்ச ஸ்தாயியில் ஒன்றிப் போன கிட்டப்பாவின் சங்கீத ரசனையில் மூழ்கித் திளைத்தார்கள்.

ஓங்கிக் குரலெடுத்து இருவரும் பாடினால் ஒரு மைல் தூரத்திற்குக் கேட்கும் என்று பெருமையாக சொல்லிக் கொண்டார்கள். சுந்தராம்பாளும், கிட்டப்பாவும் போட்டி போட்டுக் கொண்டு நடித்தார்கள். ரசிகர்கள் “”இருவரும் நல்ல ஜோடி” என்று அவர்கள் காதுபாட வாழ்த்திப் பேசினார்கள்.

இலங்கைக்குச் சென்ற சில மாதங்களிலேயே இசை மேதைகள் இருவரும் புகழின் உச்சியில் பறந்தார்கள். வானம்பாடியாய் இசை வானில் பாடித் திரிந்தார்கள். ஈடு இணையற்ற ஜோடி என்று நிரூபித்துக் காட்டினார்கள்.

இருவரும் சேர்ந்து நடிப்பதென்றால் நாடகக் கம்பெனிகள் பெரிய தொகையை கொட்டித் தர தயாராக இருந்தனர். அதற்குக் கட்டணமாக ரசிகர்களும் அள்ளித்தர ஆவலாக இருந்தனர். இருவரும் பல இடங்கள் பயணம் செய்து நாடகங்கள் நடித்து ஏராளமாக சம்பாதித்தார்கள். கிட்டப்பா மீது சுந்தராம்பாள் அபரிமிதமான பக்தியும், விசுவாசமும் கொண்டிருந்தார்.

சுந்தராம்பாளின் இசையில் மயங்கிய கிட்டப்பா நாடகத்திற்கு மட்டுமின்றி இல்லறத்திற்கும் சுந்தராம்பாள்தான் சரியான ஜோடி என்ற முடிவில் திட்டவட்டமாக இருந்தார். கலை வாழ்க்கையில் உள்ள உறவும், பரிவும் சுந்தராம்பாளின் வாழ்க்கையிலும் இருந்தது. கிட்டப்பாவையே தனது வாழ்க்கைத் துணையாக ஏற்க சுந்தராம்பாளும் முடிவு செய்தார்.

இந்த முடிவில் சுந்தராம்பாளின் தாய் மாமனான மலைக்கொழுந்துவிற்கு (இவர் தான் கே.பி.எஸ். அவர்களுக்கு நிர்வாகியாக பணியாற்றியவர்) உடன்பாடு இல்லை என்றாலும் சுந்தராம்பாளை எதிர்த்து அவர் ஒன்றும் செய்யவில்லை.

சதிபதிகளின் கலைப் பயணமும், வாழ்க்கைப் பயணமும் ஆரம்பத்தில் இனிதாகவே போய்க் கொண்டிருந்தது.

எஸ்.ஜி. கிட்டப்பாவுக்கு கே.பி.சுந்தராம்பாள் எழுதிய கடிதங்கள்


கிட்டப்பாவும், சுந்தராம்பாளும் ஒருவரை ஒருவர் அளவிட முடியாத அளவுக்கு நேசித்தாலும் மேடையில் மட்டும் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். போட்டி போட்டுக் கொண்டு பாடுவார்கள். மேடையில் அவர்கள் போட்டி போட்டு நடிப்பதையும், வசனங்கள் பேசுவதையும் பார்த்த பல ரசிகர்கள் இந்தப் போட்டி அவர்கள் வாழ்க்கையில் எந்த விரிசலையும் ஏற்படுத்திவிடக் கூடாதே என்று அஞ்சினார்கள்.


சுந்தராம்பாள் குணக்குன்று. ஒரு பெண் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர். எந்தவித கெட்ட பழக்கத்திற்கும் ஆளாகாதவர். ஆனால் கிட்டப்பா அப்படிப்பட்டவர் அல்ல. மது போன்ற சில தீய பழக்கங்கள் அவரிடம் குடி கொண்டிருந்தன. இதையெல்லாம் மீறி கிட்டப்பா மீது மாறாத நேசம் கொண்டிருந்தார் கே.பி.எஸ். என்பதுதான் உண்மை.


கிட்டப்பா சுந்தராம்பாளை மணமுடிக்க தன் விருப்பத்தைத் தெரிவித்தபோது கே.பி.எஸ். கேட்டது ஒரே கேள்விதான்.


“”என்னைக் கண்கலங்காமல் கடைசிவரை வைத்துக் கொள்வீர்களா?” என்பதுதான் அக்கேள்வி.


“”கடைசிவரை என்னை கைவிடக் கூடாது'''' என்று சத்தியம் வாங்கிக் கொண்ட பிறகே கிட்டப்பாவை கணவனாக ஏற்றுக்கொண்டார் கே.பி.எஸ்.

1927-ன் தொடக்கத்தில் மாயவரத்தில் உள்ள கோவிலில் இருவரது திருமணம் நடைபெற்றதாக ஒரு பத்திரிகைப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் கே.பி.எஸ்.தமிழ் நாடாக மேடைகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த ஜோடிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடையாளமாக வாரிசு ஒன்று கே.பி.எஸ். வயிற்றில் வளர ஆரம்பித்தது.


இந்த நேரம் செங்கோட்டை சென்ற கிட்டப்பா, கே.பி.எஸ். அவர்களைப் பார்க்க வரவேயில்லை. கடிதங்கள் மட்டுமே அவரது எண்ணங்களைச் சுமந்து வந்தது. தன் முதல் மனைவியான கிட்டம்மாவுடன் கிட்டப்பா இருந்தாலும் கே.பி.எஸ். அதற்காக பொறாமைப்படவில்லை. ஆனால் யாரோ சிலர் விதைத்த விஷ விதை கிட்டப்பா மனதில் விருட்சமாக வளர்ந்ததால் சுந்தராம்பாளை விட்டு விலகியே இருந்தார்.

நிறைமாத கர்ப்பிணியான கே.பி. சுந்தராம்பாள் தன் கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் அவர் எந்த அளவு கிட்டப்பா மேல் பாசமும் நேசமும் கொண்டிருந்தார் என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது.


கரூர். நவம்பர் 1927

அன்புள்ள பதி அவர்களுக்கு, அடியாள் அநேக நமஸ்காரம். என்னிடம் நேரில் சொன்னபடி நடப்பதாகத் தெரியவில்லை. நான் செய்த பாக்கியம் அவ்வளவுதான்.

உங்கள் மீது வருத்தப்படுவதில் பிரயோசனமில்லை. தாங்கள் பார்த்துச் செய்வதென்றால் செய்யலாம். “வளைகாப்பு’ இட வேண்டுமென்று தங்களிடமும் சொன்னேன். தங்கள் அண்ணாவிடமும் சொன்னேன். ஒருவரும் கவனிக்கவில்லை.

என்னைப் பற்றி கவனிக்க ஏதாவது கொடுத்து வைத்திருக்கிறேனா? உங்களுடைய சுக துக்கங்களில் பாத்யப்படும் தன்மையில்தான் இருக்கிறேனா!

நான் இங்கும் நீங்கள் அங்கும் இருக்கும் நிலையில் நீங்கள் ஏன் கவனிக்கப் போகிறீர்கள். ஏதோ என் மீது இவ்வளவு அன்பு வைத்து தவறாமல் எழுதியதைப் பற்றி அளவு கடந்த சந்தோஷமடைகிறேன். தவறாமல் கடிதமாவது அடிக்கடி எழுதிக் கொண்டிருக்க வேண்டுமென்று அன்போடு நமஸ்கரித்துக் கொள்கிறேன்.

எது எப்படியிருந்தாலும், தங்கள் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளவும். தங்கள் உடம்பு இளைத்தால் தங்களைத் திட்டமாட்டேன். கிட்டம்மாளைத்தான் திட்டுவேன் என்று அவளிடம் சொல்லுங்கள்.

அடிக்கடி வெளியில் சுத்த வேண்டாம். தூக்கம் முழிக்க வேண்டாம். காலா காலத்தில் சாப்பிடவும். அனாவசிய விஷயங்களில் புத்தியைச் செலவிட வேண்டாம். நானும் அப்படியே நடக்கிறேன்.

மாதமும் ஆகிவிட்டது. தங்களுக்குத் தெரியாதது அல்ல. அவ்வளவுதான் நான் எழுதலாம். நேரில் வாருங்கள். உங்களை என்ன செய்கிறேன் என்று பாருங்கள்.

இப்படிக்கு,
தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள்,

சுந்தரம்.


சுந்தராம்பாளை மணமுடிப்பதற்கு முன்னால் கிட்டப்பா அவருக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே அவர் காப்பாற்றவில்லை என்றபோதிலும் கூட கிட்டப்பாவை தன் மனதில் ஏற்றி வைத்திருந்த இடத்திலிருந்து ஒரு அங்குலம் கூட கீழே இறக்கவில்லை சுந்தராம்பாள்.


1928 ஜனவரி மாதம் 28-ஆம் தேதி சுந்தராம்பாளுக்குப் பிறந்த குழந்தை பத்து நாள் மட்டுமே உயிரோடிருந்தது.  குழந்தையின் பிறப்பு, இறப்பு இரண்டிற்குமே கிட்டப்பா வரவில்லை.


சுந்தராம்பாளின் கடிதங்களுக்கு கிட்டப்பா எழுதிய பதில் கடிதங்களிலும் கேலியும் கிண்டலும் நிறைந்திருந்ததாகத் தெரிகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுந்தராம்பாள் தன் மன உணர்ச்சிகளையெல்லாம் கடிதமாக வடித்து கிட்டப்பாவிற்கு அனுப்பினார்.


தேவரீர் அவர்கள் சமூகத்திற்கு எழுதியது.

தங்கள் லெட்டர் கிடைத்துச் சங்கதி அறிந்தேன். தங்களுக்கு எந்த வகையிலும் நான் துரோகம் செய்தவளல்ல, தாங்கள் அறிந்த கிண்டல் வார்த்தைகளை எனக்கு எழுத வேண்டாம். இந்த மாதிரி எழுதி என் மனம் கொதித்தால் தாங்கள் ரொம்ப காலத்திற்கு ஷேமமாக இருப்பீர்கள். அம்மாதிரியெல்லாம் எழுதினால் தங்களுக்கு பலன் மீளாத நரகக் குழிதான்.

கிருஷ்ணலீலா பார்த்ததில்லையே என்று பார்க்கப் போனேன். அதைப் பற்றி வித்தியாசம் என்றால் இருக்கட்டும் எத்தனையோ வித்தியாசங்களில் இதுவும் ஒன்று.


மனம் போலிருக்கும் வாழ்வு. என்னைப் பற்றி கவலையே தங்களுக்கு வேண்டாம். நான் இப்படியெல்லாம் எழுதினேன் என்று வருத்தம் வேண்டாம்.

தங்களுக்கு பதில் போட இஷ்டம் இருந்தால் எழுதவும். இல்லையென்றால் வேண்டாம்.

இதுதான் கடைசி லெட்டர். இதுதான் கடைசி. இதுதான் கடைசி. இது உண்மையென்றும், பொய்யென்றும் பின்னால் தெரியும்.

இப்படிக்கு

சுந்தரம்.


“”தங்கள் அன்பையே ஆபரணமாகக் கொண்ட அடியாள் சுந்தரம், தங்கள் அன்பை என்றும் மறவாத காதலி கே.பி. சுந்தராம்பாள்” என்றெல்லாம் எழுதி கடிதத்தை முடித்த சுந்தராம்பாள் மேற்கண்ட கடிதத்தை எந்த அடைமொழியுமின்றி சுந்தரம் என்று முடித்திருப்பதிலிருந்தே அவர் எந்த அளவிற்கு கோபமாக இருந்திருக்கிறார் என்பதை நம்மால் உணர முடிகிறது அல்லவா?

நம்மாலேயே உணர முடியும்போது கிட்டப்பா அதை உணரமாட்டாரா? உணர்ந்தார். அதன் விளைவாக நீண்ட காலத்திற்குப் பின்பு அன்பான கடிதமொன்றை தன் பண்பான மனைவிக்கு எழுதி அனுப்பினார்.

தனியாக இருந்த காலகட்டங்களில் சுந்தராம்பாள் நாடகத்தில் உச்சக் கட்டத்தில் இருந்தபோதிலும் நிம்மதி இல்லாமல் தவித்தார். அதே போன்று கிட்டப்பாவும் நாடகங்களில் புகழோடு இருந்தபோதிலும் சுந்தராம்பாள் இல்லாததால் தவிப்புக்கு ஆளாகியிருந்தார். அவர்களைப் பிரித்த காலமே 1931-ல் மீண்டும் அவர்களை இணைத்தது.

அவர்கள் பெயரிலேயே நாடகக் கம்பெனி அமைத்து இருவரும் நடத்தத் தொடங்கினர். ரசிகர்கள் பெருமகிழ்ச்சியோடு அவர்கள் நாடகத்திற்கு உற்சாக வரவேற்பினைத் தந்தனர். சுந்தராம்பாள் – கிட்டப்பா ஆகிய இருவரது பாடல்களும் இசைத் தட்டாகவும் வெளிவந்து விற்பனையில் சக்கைபோடு போட்டது.

1931-ல் பேசும்பட காலம் வந்த பிறகும் நாடகங்கள் தங்கள் செல்வாக்கை இழக்காது இருந்தன.

“”கே.பி. சுந்தராம்பாள் வேடன், வேலன், விருத்தன் என்று ராஜபார்ட்டாக நடிப்பார். கிட்டப்பா வள்ளியாக ஸ்திரீ பார்ட்டாக நடிப்பார். இருவரும் மேக்அப் போட்டு வெளியில் வருவதற்குள் ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் அதிகமாக இருக்கும். கிட்டப்பா திரைக்கு முன்னால் வந்து ஒரு ஆலாபனை செய்துவிட்டுப் போனால்தான் ரசிகர்கள் கொஞ்சம் அமைதியடைவார்கள்.

சுந்தராம்பாளும் வந்து பாடமாட்டாரா என்று ஜனங்கள் ஏங்கிக் கிடப்பார்கள். இருவருமே உச்ச ஸ்தாயியில் பாடக் கூடியவர்கள். ஒலிபெருக்கி வசதியில்லாத அந்த காலகட்டத்தில் அவர்கள் குரல் கடைசியில் உள்ளவர்களுக்கும் கேட்கும்” என்று கிட்டப்பா – சுந்தாரம்பாள் நாடகங்கள் பற்றி தன் அனுபவங்களைக் கூறுகிறார் குன்னக்குடி வைத்தியநாதன்.

கிட்டப்பா மதுவுக்கு அடிமையாகி இருந்ததால் நாடகங்களில் நடிக்கும்போது ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கு வருவதற்கு முன் திரையின் ஓரமாக சாராயத்தை சுடுதண்ணீரில் கலந்து சுடச் சுட குடிப்பார். இந்த குடிப்பழக்கம் தனது நாடக முதலாளியான கன்னையா இறந்த பின் அதிகரித்தது. காலையில் எழுந்தவுடன் காப்பி குடிப்பதற்கு பதில் சுடச் சுட சாராயம் சாப்பிட ஆரம்பித்தார் அவர். அதன் விளைவாக அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. வருமானம் குறைந்தது. ஆனால் செலவு கூடியது.

உடல் நலம் சரியாக இல்லாததால் நாடக நிகழ்ச்சிகளை குறைத்துக் கொண்டாலும், நாடகத்தில் நடிக்காமலும், பாடாமலும் இருப்பது பித்து பிடித்திருப்பது போல் உள்ளதாக அவர் உணர்ந்தார்.


இந்த சமயத்தில் மீண்டும் விதி அவர்கள் வாழ்க்கையில் தன் விளையாட்டைத் தொடங்கியது. அவர்கள் இருவருக்குமிடையே இருந்த தீவிரமான அன்பையும் மீறி அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் முளைத்தன. மீண்டும் சுந்தாரம்பாளைப் பிரிந்து சொந்த ஊருக்குச் சென்றுவிட்டார் கிட்டப்பா. மீண்டும் தனி மரமானார் சுந்தராம்பாள்.

மதுபானம் போன்ற தீய பழக்கங்களால் கிட்டப்பாவின் உடல் நாளுக்கு நாள் மெலிந்தது. 1933 மார்ச் 29-ஆம் நாள் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. தகவல் அறிந்த சுந்தாராம்பாள் அவரை சென்னைக்கு அழைத்து வந்து டாக்டர் பீமாராவ் அவர்களிடம் காட்டினார். அவரைப் பரிசோதித்த பீமாராவ் குடல் வெந்து புண்ணாகி இருப்பதாகவும், ஈரல் சுருங்கிப் போய்விட்டதாகவும், எவ்வளவு செலவு செய்தாலும் அவர் குணமாவதற்கு உத்திரவாதம் அளிக்க முடியாது என்றும் கூறினார்.

இருப்பினும் செலவுப் பற்றி கவலைப்படாமல் சிகிச்சையைத் துவங்கச் சொன்னார் சுந்தராம்பாள். தீவிர சிகிச்சை தொடங்கியது. கிட்டப்பாவின் அருகிலேயே இருந்து அவரைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டார் சுந்தராம்பாள்.

எந்நேரமும் அவரது நெற்றியில் திருநீறைப்பூசி அவர் செய்த பிரார்த்தனை வீண் போகவில்லை. கிட்டப்பா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று கவனித்துக் கொள்வதற்காக மைலாப்பூரில் பெரிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தார் சுந்தாரம்பாள்.

விதி விரட்டவே பூரண குணமடைவதற்கு முன்பே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் செங்கோட்டைச்குச் சென்றுவிட்டார் கிட்டப்பா.

உடல் பூரண குணமடையாத நிலையில் திருவாரூரில் ஒரு நாடகத்திற்கு ஒப்புக் கொண்ட அவர் அதில் நடித்துக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்தார். அதிலிருந்து படுத்த படுக்கையிலிருக்கும் நிலைக்கு ஆளானார் அவர். கால்கள் வீக்கம் கண்டன. கண்கள் மஞ்சளாயிற்று. நாட்கள் செல்லச் செல்ல அவரது முகம் வெளிறிப் போனது. உடல் துரும்பாக இளைத்தது. மெல்ல பேசும் சக்தியும் குறைந்தது.

1933 டிசம்பர் 2-ஆம் தேதி சனிக்கிழமை காலையில் வயிற்று வலியால் தூடித்த அவரைப் பரிசோதித்த டாக்டர் ஒரு ஊசி போட்டார். கிட்டப்பா நாக்கு வறண்டது. சிறிதளவு தண்ணீரை விழுங்கி விட்டுத் திரும்பிப் படுத்தவர் அதற்குப் பிறகு திரும்பவேயில்லை.

கிட்டப்பா மறைந்த செய்தி காங்கிரஸ் கூட்டத்தில் பாடிக்கொண்டிருந்த கே.பி. சுந்தராம்பாளுக்கு இடையில் தெரிவிக்கப்பட்டது. பாடுவதை நிறுத்தி மேடையிலிருந்து இறங்கி துக்கத்தில் கலந்து  கொண்டார்.
கிட்டப்பாவின் மரணச் செய்தி நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உண்டு பண்ணியது. சுந்தராம்பாளை யாராலும் தேற்ற முடியவில்லை. உயிருக்குயிராக நேசித்த தன் காதல் கணவனின் மறைவைத் தாங்க முடியாது துடித்தார் அவர்.

கிட்டப்பா இறந்தபோது அவரது வயது 28. தனது 20-வது வயதில் அவரை மணந்த சுந்தராம்பாள் ஆறு வருடங்கள் மட்டுமே அவரோடு வாழ்ந்தார். அதிலும் பல மாதங்கள் இருவரும் தனித்தனியே பிரிந்திருந்தனர்.

சாதாரணமாக பெண்கள் மணமுடிக்கும் வயதான 26 வயதில் தன் கணவரை இழந்த சுந்தராம்பாள் மிகுந்த மன உறுதியோடு பொட்டையும், பூவையும் துறந்தார். வெள்ளைச் சேலை உடுத்தத் தொடங்கினார். இல்லற வாழ்விலிருந்து துறவறத்திற்குள் புகுந்தார்.

கணவன் இறந்த பிறகு பல மாதங்கள் கொடுமுடி வீட்டிற்குள்ளேயே அடைந்து கொண்டிருந்தார்.

அதன் பின் பாடுவதையும், நடிப்பதையும் நிறுத்திக் கொண்டார். அந்த இளம் கைம்பெண். கொடுமையிலும் கொடுமை கண்டார் கொடுமுடி கோகிலம்.

பேசும் படம் வருவதற்கு முன்னரேயே கிட்டப்பா மறைந்தார். 

தொடரும்....3

No comments: