Pages

Tuesday, 9 February, 2010

வரி ஏய்த்த நகை கொள்ளை போனது, அபகரித்தவர் வாழ்க்கை கொள்ளியில் போனது!
சில வருடங்களுக்கு முன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஒரு விசேஷத்திற்காக தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆகையால் அங்கு புறப்பட்டு சென்றேன். அந்த பகுதி பகலில்  மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும் சந்தைப்பகுதி, உறவினர் இல்லமும் அந்தப் பகுதியொட்டிய தெருவில் அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

வீட்டிற்குள் நுழையும் போதே உறவுக்காரப் பாட்டனாரிடம் சில அதிகாரிகள் கையொப்பம் வாங்கிக் கொண்டிருந்தனர். அந்த வீட்டின் எதிர்வீட்டில் அந்த அரசு அதிகாரிகள் போவதும் வருவதுமாகவும், சிலப்பெட்டிகளை தூக்கி வருவதுமாக இருந்தனர். அது  ஒரு மார்வாடி வீடு, வெளியில் நிறுத்தப்பட்ட வாகனம் பழைய ஸ்டாண்டர்டு வேன், (முற்றிலும் சீலிடப்பட்ட வாகனம்) இப்பொழுது அங்கே என்ன நடக்கின்றது என்பதை நானே யூகித்துக்கொண்டேன். 

வேறொன்றமில்லை வருமான வரித்துறையினர் அந்த வீட்டை சோதனை செய்து கொண்டிருக்கின்றனர். அந்த மார்வாடி முகத்தில் சவக்கலை, அந்த அதகாரிகளிடம் என்னென்னவோ பேசி கெஞ்சிக்கொண்டிருந்தார். அவர்கள் அதை அலட்சியம் செய்து கொண்டே அவர்கள் பணியை செய்து கொண்டிருந்தனர். அந்த மார்வாடி பல இடங்களில் பவுன் புரோக்கர் மற்றும் வட்டிக்கடை நடத்திவருபவர்.

மெதுவாக அங்கிருந்த உறவுகளிடம் '' என்ன? கையொப்பம் வாங்குகின்றனர்! பாட்டனாரிடம்...'' (அது ஒரு பெரிய கூட்டு குடும்பம், அந்த வீட்டின் மூத்தவரான அந்த (பாட்டனார்) பெரியவர் ஊர்த்தலைவர், அரசியல் புள்ளி மற்றும், வியாபாரி சங்கத் தலைவரும் ஆவார்) என்று வினவியபோது. அவர்கள் கூறியபோது எதிர் வீட்டில் நடக்கும் சோதனையில் கைப்பற்றிய ஆவணங்கள், சொத்துக்கள், மற்றும் ரொக்கங்கள் இவற்றிற்காக சாட்சி கையொப்பம் வாங்குகின்றனர். 

இதற்காக அந்த பெரியவர் மறுத்துக் கொண்டிருந்தார். அவர்களும் '' நீங்களே பெரியத் தலைவராக இருந்து கொண்டு மறுத்தால் எப்படி?'' என்று வாதாடிக்கொண்டிருந்தனர். அது வேறொன்றுமில்லை அந்த மார்வாடி எதிர் வீட்டுக்காரர் தவறாக நினைத்துவிடப்போகிறார் என்ற அச்சத்தில் தான் அந்த பெரியவர் மறுத்துக் கொண்டிருந்தார். இறுதியில் கையொப்பம் போட்டுவிட்டார். பொருள்களும் வாகனத்தில் போய்விட்டது.

இது இரவு பகலாக இரண்டு நாளாக நடந்து கொண்டிருந்த  சோதனை அன்று தான், அதாவது  நான் செல்லும் போது தான் முடிவடைந்திருக்கிறது.

இதில் என்ன செய்தியிருக்கிறது..... இதற்கு பின் தான் ஒரு செய்தியிருக்கிறது..

அதற்குபின் ஒருவாரம் அங்கே தங்கியிருந்தேன். அன்றிரவே அந்த வீட்டு மொட்டை மாடியில், தூக்கம் வராமல், நடு இரவில் காற்று வாங்குவதற்காக தற்செயலாக சென்றேன் இரவு 1 மணியளவில். அப்போதே அந்த விட்டு கூரையின் மீது சில நடமாட்டங்கள் நிழலாகத் தெரிந்தது. வேறோருவராக இருந்தால், அந்த திடீர் உருவங்களைப் பார்த்து பேய் என்று பயந்து வந்திருப்பார்கள். அந்தப் பகுதியில் இரவில் ஒரு நடமாட்டமும் இருக்காது. ஆள் அரவமற்று நிசப்தமாக இருக்கும்.

சில உருவங்கள் குனிவதும் என் தலை பார்த்ததும், பதுங்குவதுமாக இருந்தது. அந்த உருவங்கள் எதையோ தேடிக்கொண்டிருந்ததை மட்டும் என்னால் சந்தேகத்துடன் உணரமுடிந்தது. அது பற்றியும் உறவுகளிடமும் விசாரித்தேன் என்னைத்தான் திட்டினார்கள்... உனைன யார் பேய் உலாவுகின்ற நேரத்தில் மொட்டை மாடிக்கு செல்ல சொன்னது.... என்று பெரியவர்கள் எனக்கு சுற்றிப்போட ஆரம்பித்தனர்.

மீண்டும் அந்த விசேஷ நிகழ்ச்சிகள் முடிந்து வீடு திரும்பினோம். ஒரு 1 மாதம் கழித்து மீண்டும் அந்த இல்லம் சென்று தங்க வேண்டியிருந்தது. சென்றேன். இந்த முறை அந்த மார்வாடி வீட்டில் பாட்டுக்கள் (இந்திப் பாடல்கள் தான்) ஒலித்து கொண்டிருந்தது. வீடே மங்களகரமாக இருந்தது. மார்வாடி வீட்டில் உள்ள உறவுகள் அனைவரும் மார்வாடி வீட்டில் போய்க்கொண்டிருந்தனர். 

மார்வாடி வீட்டு பக்கத்து வீட்டில் ஒரு பால்காரர் வசித்துவருகிறார். அவர் முந்தைய இரவில்  மாரடைப்பால் அகால மரணமடைந்து அவருடைய உடல் வெளியில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது.  அங்கிருந்த பகுதி மக்கள் அந்தப் பால்காரரின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதையை செலுத்திவிட்டு புன்னைகயுடன் போய்க்கொண்டிருந்தனர்.  போகும் போது அனைவரும் மார்வாடியைப் பார்க்கத் தவறவில்லை. பக்கத்து வீட்டில் துக்கம் மார்வாடி வீட்டில் பாட்டு, குதூகலம்.... இது திடீரென்று பார்ப்பவர்கள் அனைவருக்கும் சந்தேகத்தை உருவாக்கியது. மார்வாடி எதை பற்றியும் கவலைப்படாமல் இதை செய்து கொண்டிருந்தார்.

இவர்கள் ஏதோ விஷயம் புரிந்து கொண்டு சிரிக்கின்றனர். இத்தனைக்கும் துக்க வீட்டிற்கு சென்று வருபவர்கள் சிரிப்பார்களா? எனக்கு வழக்கம் போல சந்தேகம் வந்து உறவுகளிடம் கேட்ட பொழுது ஒரு கதையை கூறினர்.....அந்த கதை இது தான்...

கடந்த முறை தணிக்கை அதிகாரிகள் அவர் வீட்டில் திடீரென்று நிழைய முற்பட்டபொழுது அந்த மார்வாடி அனைத்து நகைகளையும், எடுத்து வீட்டின் கூரை மீது எறிந்திருக்கிறார். அது பல இலட்ச மதிப்புள்ள நகைகள். இதை இரு கண்கள் முதலிலேயே பார்த்து விட்டது. அதற்கு பின் கதவைத்திறந்து அதிகாரிகளை உள்ளே விட்டிருக்கிறார் இந்த மார்வாடி. வீட்டின் சோதனை நடைபெற்றிருக்கும் பொழுதே ஒரு உருவம் முகத்தை மறைத்து கொண்டு பக்கத்து வீட்டின் மாடி சன்னல் பகுதியில் இருந்து கையை விட்டு இந்த மூட்டைகளை எடுத்துக் கொண்டது. 

அந்த உருவம் வேறு யாருமல்ல. அந்த பக்கத்து வீட்டு பால்காரர் தான். இதை இந்த மார்வாடி பார்த்துவிட்டார். அப்போது கத்தவும் முடியாது. தன் கண்ணெதிரே நகை களவாடப்படுவதை இல்லையில்லை எடுக்கப்படுவதை பார்த்துக் கொண்டிருந்தார், அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத் தூவிய மார்வாடி. அவர் அதை பிறகு பக்கத்து வீட்டாரிடம் பார்த்து கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்தார்.

வருமான வரி சோதனைகள் முடிந்து அவர்கள் புறப்பட்டதும். அந்தப் பால்காரரிடம் போய் நகைகளை கேட்டிருக்கிறார் மார்வாடி.

''பால்காரர் எந்த நகை? என்னிடம் வந்து கேட்கிறாய்? ''என்று பதிலுக்கு ஒன்று தெரியாதவர் போல் நடிக்க... 
....மார்வாடி தொடர்ந்து நடந்தவைகளைக் கூற....
...''நான் எதையும் எடுக்கவில்லை... வேண்டுமானால் காவல் துறையில் போய் முறையிடு....''
(அங்கே போக முடியாதே! இது தெரிந்து தான் பால்காரர் சமயோசிதமாக சொல்கிறார்)
....''''இந்த சோதனைப் பற்றியே எனக்குத் தெரியாது''... என்று பால்காரர் முரண்டு பிடிக்க... ஒரு கட்டத்தில் வாக்குவாதமாக முற்றி...வாய்த்தகராறில் முடிந்தது... ...''என் நகை போனது என்...... (முடிக்கு) சமம், நீ எப்படி வாழ்ந்துவிடுகிறாய் என்று பார்த்துவிடுகிறேன்...''

என்று அவர் பங்குக்கு கூறிவிட்டு வீட்டிற்குள் போய்விட்டார், அந்த மார்வாடி.

இனி என்ன பால்கார்ருக்கு செம குஷி... நகைகளை அப்போதே ஊரில் எடுத்து சென்று பதுக்கி வைத்துவிட்டார், இந்த விபரீத மனிதர்.  உடனே ஊருக்குச் சென்றார் கொஞ்சம் கொஞ்சமாக காசாக்கினார். மிக ஜாலியாக குடியும், குடித்தனமுமாக போயிற்று. ஒரு கட்டத்தில் இவரின் சந்தோஷம் எல்லை மீறி மிக அதிகமாக குடித்தார் மாரடைப்பு வந்து விட்டது. அப்படியே சந்தோஷ மரணமடைந்துவிட்டார்.

இப்போது தெரிந்து விட்டது மார்வாடி ஏன் பாட்டு போட்டுக் கொண்டிருந்தார் என்று? மார்வாடிக்கு மிக சந்தோஷம். பால்காரர் வீட்டில் துக்கம் இவர் வீட்டில் பாட்டுக் கச்சேரி..... திரைப்படத்தில் வந்த வடிவேல் நகைச்சுவை மாதிரி இருந்தது.

வரி ஏய்த்த காசு வாய் புளித்திடுமா?....நாய் வித்த காசு தான் குரைத்திடுமா?....

வரி ஏய்ப்பினால் மார்வாடி நகைகள் கொள்ளை போனது... அதை அபகரித்தவர் வாழ்க்கையோ கொள்ளியில் போனது.... என்று அங்கிருந்தவர்கள் முனகி கொண்டு சென்றனர்... இப்படியல்ல இப்படி...
ஊரை ஏய்த்த மார்வாடிக்கு (மசிறு )போச்சு..... அதை பிடுங்கித்தின்ன பால்காரருக்கு உசிறு போச்சு....
மார்வாடி அப்படித்தானே நகைகளை தூக்கி போட்டார் சர்வ சாதாரணமாக விட்டின் கூரை மேல்....

ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த விஷயத்தையே அந்த பகுதி மக்கள் தங்களுக்குள் நகைச்சுவையாக சொல்லி சிரித்து கொண்டிருந்தனர்.

இப்போது எனக்கும் புரிந்து விட்டது அன்று ஏன்? நடுஇரவில் அந்த வீட்டின் கூரை மீது நடமாட்டம் தெரிந்ததின் பின்புலம். இதை என் உறவுகளும் உறுதி படுத்தினர். அதற்கு பின் தொடர்ந்து அந்த வீட்டின் கூறை மீது பலர் நடு இரவில், சிறுவர்களும், பேய் மாதிரி தேடிக்கொண்டிருந்ததை காண முடிந்தது. ஆசை எனும் பேய் யாரை விட்டது. அது பிடிக்காத மனிதர்கள் இல்லை. 

''ஆசையே துன்பத்திற்கு காரணம் '' என்று இதற்குத்தான் சாக்கிய முனிவரான கௌதம புத்தர் சொன்னாரோ?


No comments: