Pages

Thursday 4 February, 2010

மெலியாரை ஏய்க்கும் வலியோர் கூட்டம்....





சமீபத்தில் உறவுகளுடனும், நட்புகளுடனும் சென்னை மெரினாவிற்கு சற்று காலத்தை கொல்வதற்காகவும், காற்று வாங்குவதற்காகவும் சென்றோம்.  அது ஒரு ஞாயிறு.... ஞாயிறு கடலுக்குள் மறையும்  வேளையில்.....

...அங்கே பலூனை சுட்டி காதலை வெளிப்படுத்த அலைமோதும் இளசுகள்... ஒரு பஞ்சு மிட்டாயை .....இரண்டு பேரும் காக்கா கடி கடித்து காதலை வெளிப்படுத்தும் ஜோடி..., பஜ்ஜிக்காக பறந்து பறந்து சென்று கடாயில் கையை விட்டு...  சூடு ஆறுவதற்குள் வாயுக்குள் உள்ளே தள்ளும் குடும்பங்கள்..., 


...தீப்பொறி சட்டையில் பட்டாலும் பரவாயில்லை சோளக் கதிரைத் தீயிலிட்டு பொரித்து உடனே தின்னத்துடிக்கும் இளைஞர்கள் கூட்டம்...

....படிப்பைத் தொலைத்துவிட்டு ஜோடிக்களைத் தேடிச்சென்று சுண்டல்களை திணிக்கும்...சிறிய வியாபாரச் சிறுவர்கள்...

...படிப்பிலிருந்தும், அம்மா அப்பா தொல்லயிலிருந்தும் சிறிது நேரமெ விடுதலை... என்று விடுதலையின் பெருமையை உணரும் குழந்தைகளின் குதுகலத் துள்ளல்கள்... ''''அம்மா அம்மா இங்கேயே இருந்திடலம்மா''''... ...அம்மா அப்பாவை பொம்மை வாங்கித் தரச் சொல்லி அடம் பிடிக்கும் குழந்தைகளின் சிலும்பல்கள, அழுகைகள்...

...நம் காலம் முடிந்துவிட்டது? என்று தூரத்தில் வரும் கப்பலின் தொலைவு இருக்குமா? நம் வாழ்க்கை?  அது வரை நாம் வாழ்வோமா? என்று நாட்களை எண்ணி ஏக்க பெருமூச்சு விடும் மூத்தவர்கள்...

...காதல் ஜோடிகள் ஒன்று சேருமா?, சேராதா? பெத்தவர்களிடம் மாட்டிக்கொள்ளுமா? மாட்டாதா?  என்று குறி சொல்லி தைரியத்தை வரவழைக்கக் காத்திருக்கும்...கைராசி, பெயர் ராசி பார்க்கும் பெண்கள் கூட்டம்.... 

....இவர்கள் காற்று வாங்குவதற்குள் நம்ம தாவு அறந்து போகிறது என்று அலுத்துக் கொண்டு, போக்குவரத்தையும், குளிப்பவர்களையும் ஒழுங்குபடுத்தும் காவலர்கள்.....

...எப்போதுமே எங்கள் பணி இரப்பது தான் என யாசிப்பவர்கள் கூட்டத்தின் ''''யம்மா! யம்மா! ...ஏழை பாட்டிக்கு காசு போடும்மா!'''' என்ற அவலக்குரல்கள.... .

இதை எதையுமே கவனிக்காத, ஆர்வமில்லாத ஜோடிப்புறாக்கள் மூக்கால் தீனியை செவ்வனேக் கொத்திக்கொண்டிருந்தது ஒரு பக்கம்.... என்று இப்படி ஆங்காங்கே போக்கிடமில்லாத நகர மக்களின் ஆதங்கத்தை ஒரளவுக்கு போக்கி கொண்டிருந்தது, அனைவரையும் ஆதரித்து கொண்டிருந்தது சென்னை மெரினா...

அங்கே போன பிறகு தானே தெரிந்தது காலத்தை கொல்ல நினைத்தது எவ்வளவு தவறு என்று........ பலர் மனித இதயங்களை கொன்று கொண்டிருப்பதையும் காணமுடிந்தது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு....

அதில் ஒரு நிகழ்வு.... அங்கே ஒரு 50 வயதை தாண்டிய  பெரியவர் (இளைஞர்) அழுக்கு வேட்டியுடன் பரபரப்பாக பட்டம் விற்றுக் கொண்டிருந்தார். ஒரு பட்டம் 10 ரூபாய் என்ற விலையில் ஒரு 15 மீட்டர் நீள மாஞ்சாத் தடவாதா நூலுடன் விற்று கொண்டிருந்தார். அதை வாங்குவதற்கு சிறுவர்களை விட 45,55 நடுத்தர வயது,  பெரியவர்களுக்கே ஆர்வம் அதிகமிருந்ததைக் காணமுடிந்தது. 

அதில் ஒருவர் 45 வயது நபர் அல்ல அல்ல உள்ளத்தில் மிகச் சிறியவர் தனது இரண்டு பிள்ளைகளுக்காக (ஆண் பிள்ளை, பெண் பிள்ளை) காற்றாடி வாங்கி விடத் தெரியாமால் விட்டு கொண்டிருந்தார். 

அவர் பறக்க விட்ட காற்றாடி, காற்று திசை நோக்கி பறக்க விடாமல், ஒரே இடத்தில் நின்றதால் காற்றின் திசை மாறியதால் அடிக்கடி கீழே இறங்கியது.... பலரும் காற்றாடி விற்பவரை விட்டு விட்டு அவரின் சிறுபிள்ளைத்தனமான முயற்சியை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். 

காற்றாடியை வாங்கிய இடத்திலேயே பறக்க விட்டு கொண்டிருந்ததால் காற்றாடி விற்றுக் கொண்டிருந்தவருக்கோ இடைஞ்சல் வேறு. அவரும் பலவாறு அவரை அறிவுறுத்திக் கொண்டிருந்தார். சற்று கடலை நோக்கி பின்னோக்கி சென்றோமானால் அனைவரும் தாராளமாக இடத்தை பயனபடுத்தி டீல் ஆகாமல் காற்றாடி விடலாம். (உலகத்தின் இரண்டாவது பெரிய கடற்கரை ஆயிற்றே இடமா இல்லை) காற்றாடியும் கீழே இறங்காது என்பதை விற்பவர் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார். அவர் அதை காதில் வாங்காமல் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து கொண்டும் இருந்தார். இது அடுத்து காற்றாடி வாங்கும் எண்ணம் கொண்டோரை தடை செய்ததாலும், அடுத்து வாங்கியவரின் பட்டத்தில் சிக்கி அவருடைய பட்டத்தையும் கீழே சேர்த்து இறக்கியது.

இதை பார்த்து விட்டு வாங்குபவர்கள் காற்றாடி அடிக்கடி கீழே இறங்குகிறதே என்ன காரணம் என்று விற்கும் பெரியவரிடம் வினவியபடி வாங்கலாமா? (என்னமோ காற்றை அவர் திசை மாற்றுவது போல...) வாங்கக்கூடாதா? என்ற சிந்தனையில் விற்பவரையே நெருங்கினர். பறக்கவில்லை..பறக்கவில்லை..என அவரையே தொந்தரவும் செய்தனர்.

அவர் அதற்கு ''''அவருக்கு விடத்தெரியவில்லை'''' என்ற வார்த்தையை விடுத்து விட்டார். ''''கொஞ்சம் தள்ளிச் சென்று காற்று அடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பின்னோக்கி சென்றால் பறக்கும்'''' என்று பதில் தெரிவித்தார். உடனே அந்த மேதாவிக்கு காற்றாடி பறக்காத கோவத்தினாலும், விடத்தெரியாது என்பதை ஏதோ ''''விமானம் தான் ஒட்டத் தெரியவில்லை'''' என்ற பொருளில் கூறிவிட்டார், என்ற ரீதியில்

...''''எப்படி நீ சொல்லலாம்?'''' என்று ஒருமையில் ஆரம்பித்து, ''''பின் எப்படிய்யா சொல்லலாம்?'''' என்று போய் இறுதியில் ''''ஆத்தா''''..... என்று தாய் மொழியில் வசை பாட ஆரம்பித்தார். அந்த மனிதருள் மாணிக்கம்.  

காற்றாடி விற்ற பெரியவருக்கோ அதிர்ச்சி....'''' நான் என்ன சொல்லி விட்டேன்.... ''''என்று கூறி விட்டு தன்னுடைய விற்பனையில் இன்னும் மும்முரமாகினார்.

ஆனால் அவருடைய பதில் இவருக்கு திருப்தியளிக்கவில்லை. மேதாவி மனதல்லாவா? எப்படித் திருப்தியடையும்...மேலும் விடாமல் தொடர்ந்தார்...

''''உனக்கு வேண்டியது காசு''''.... ''எவ்வளவுய்யா வேணும் என்று கத்தையாக ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் காட்டினார்''''...

''''என்க்கு உங்க காசு வேணாங்க'''...... இது  காற்றாடி விற்கும் பெரியவர்

..'''' உன் வேலை விற்பது தான்''''  ....இது அந்த மேதாவி. ( இது அனைத்தையும் பொறுமையாக காதில் வாங்கி கொண்டிருந்தார் ஒரு சிறு வியாபார மூதாட்டி...)

....என்று அவர் வேலையையும் சுட்டிக் காட்ட ஆரம்பித்தார். இது அத்தனையும் அனைவரும் கூடியிருக்கிற இடத்திலேயே இந்த அர்ச்சனைகள் ஆரம்பித்தது. அனைவரும் அவரின் ஏளனப் பேச்சை கேட்டு எள்ளி நகையாடினர். சிலர் என்ன மாதிரியான மனிதன் என்று வாய்திறந்து திட்டிக் கொட்டிருந்தனர் சற்றுத் தொலைவில்....
...''''அவரிடம் போய் சவடால் விடுகிறானே''''.... ''''இதை அந்த மனிதனின் மனைவி மற்றும் பிள்ளைகளும் பார்த்துக்கொண்டிருக்கின்றதே''''... 

என்று பக்கத்தில் அமர்ந்திருந்த வயதான மூதாட்டியும் தன்னுடைய எதிர்ப்பை முனகலாகத் தெரிவித்து கொண்டிருந்தார்.

அவர் தொடர்ந்து வசை பாடிக்கொண்டே இருந்த அந்த பெரிய மனிதன் ஒருகட்டத்தில்.... 
....''''எப்படிடா என்னை கேட்கலாம் ஆத்தா!?''''... என்று தொடங்கி 
அவரிடம் தன் வலிமையை காட்ட என்னிடம் 
''''எவ்வளவு பணம் இருக்கிறது தெரியுமா?.... ''''

....அவர் எனக்கு வேணாங்க'''' என்று மறுபடியும் அந்த பெரியவர் கூற அப்போதும் விடவில்லை. 
''''நான் எவ்வளவு படித்திருக்கிறேன் தெரியுமா? நான் ஒரு கம்யூட்டர் இன்ஜினியர்''''..'''எனக்கு கீழே எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள் தெரியுமா?... இடையிடையே நாயே பேயே வேறு....

....''''. எங்கே இந்த கணக்கு எவ்வளவு சொல்ல முடியுமா?  1739 ரூபாயில் 360 ரூபாய் கழித்தால் எவ்வளவு என்று கூறு பார்ப்போம்...'' என்னால் எல்லாம் முடியும்...என்னை எப்படி டா...ஆத்தா!''.... ''ஆத்தா! எப்படிடா!....சொல்லலாம்!....அதுவும் என் பொண்டாட்டி முன்னாடி..... என் பொண்டாட்டி என்ன நினைப்பா''''.... 

...அனைத்திற்கும் மௌனம் காத்தார் ...அந்த பெரியவர்....அந்த எளிய காற்றாடி வியாபாரி.. வாய்த் திறக்கவில்லை... இன்னொரு காற்றாடிக்கு வால் ஒட்டிக்கொண்டிருந்தார்....அன்றைக்கு அதுதானே அவரது ஜீவனம்....

....அந்த அழகு, அவரின் அருமை பொண்டாட்டி இதை தட்டிக் கேட்பார்  என்று  சுற்றி அமர்ந்திருந்த அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை, பதிலுக்கு அந்த பெரியவரையே அதட்டினார் இப்படி...

....''''நீ எப்படிய்யா என் வீட்டுக்காரரை சொல்லலாம்?....  அவர் யார்? என்று தெரியுமா?''''

'''அந்த பெண்மணிக்கு தாய் தந்தையர் உண்டா இல்லையா? தெரியவில்லை? இவளும் ஒரு பெண்ணா?''' என்று அருகில் இருந்த முதிய. நடுத்தர வயது பெண்மணிகள் அந்த பெண்ணை வசை பாடினார்.... வாய்திறந்து, சற்றுத் தொலைவில், அவர்கள் காதில் விழாமல்.....

ஒரு கட்டத்தில் சுற்றி இருந்தவர்கள் எல்லாம் எழுந்து சென்று அந்த ஆளை உண்டு இல்லை என்று வாங்குவது என்று எழுந்து புறப்பட்டவுடன்.... 

அந்த பக்கத்தில் பொம்மைகள் விற்றுக்கொண்டிருந்த அந்த மூதாட்டியே  முந்திக்கொண்டார்......

''''யோவ் என்னய்யா நானும் பார்த்துகிட்டே இருக்கேன்...ஆத்தா...ஆத்தா... என்று ஏன் அடிக்கடி சொல்லுற...எதுக்கு அந்த பெரியவரை திட்டுரே...'' என்று சண்டைக்கு போக... 

'''இல்லம்மா என்னை எப்படி, காற்றாடி விடத்தெரியாது என்று சொல்லலாம்''''..... 

''''என்ன அப்படி பெரிசா சொல்லிட்டார் இப்படி குதிக்கிற.... '''' என்று மேலும் அந்த மூதாட்டி குத்திக்காட்ட... அந்த மனிதருக்கு சுருதி குறைந்தது....

இதெல்லாம் அந்த வயது வந்த பிள்ளைகளின் முன்னாலேயே நடத்திக் காட்டினார் அந்த பணம் படைத்த மேதாவி. அந்த பிள்ளைகளும் தடுக்கவில்லை. ஒருவாறு அந்த மேதாவியை அவரின் இன்னொரு உறவினர் வந்து.... அவரும் இந்த பெரியவரை திட்டிவிட்டு தான் நகர்த்தி கொண்டு சென்றார்...அந்த மேதாவியை...

பிறகு காரில் ஏறி அந்த மேதாவிக் கூட்டம் சென்றது.... அந்த மேதாவிக் கூட்டத்தைப்பார்த்து பல பெண்கள் இப்படிக் கூறினர்....

......''''போகிற வழியில் அடிபட்டு சாவான்... இவன்.''''....என்று ஒரு வயதான பெண்மணி அனைவரின் காது படக் கூறியது கண்டு, அனைவரும் அதை ஆமோதிப்பதாக குறுநகை புரிந்தனர்... சுண்டல் சாப்பிட்டுக்கொண்டே...

நாம் நினைத்துக் கொண்டோம் எளியாரை இழித்து வலியார் பெருமைக் கொள்வதும் இன்னும் மாறவில்லை.... எளியாரை ஏய்ப்பதும் இன்னும் மாறவில்லை.... என்று உள்ளூர சமூதாயத்தை திட்டிக்கொண்டு வள்ளுவர் கூறிய இந்த மூன்று குறளை நினைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

 பொருள், குடியியல், பெருமை (978)

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்.

அறத்துப்பால், துறவறவியல், வெகுளாமை (302)

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனின் தீய பிற.

வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.



 அறம், துறவறவியல், அருளுடமை (250)

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேற் செல்லு மிடத்து.

தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாது.

 ---நன்றி மெரினா....

No comments: