Pages

Monday 6 May, 2013

பார்ப்பனருக்குக் கடைசியில் ஊரூராகச் சென்றவர் பெரியாரே தவிர நாம் அல்ல..அண்ணா



பாக்கிஸ்தான் தரவேண்டும் என்றால் சுயராஜ்யமே வேண்டாம் என்ற உறுதி என்னாயிற்று என்பது நமக்குத் தெரியும்.   என் பிணத்தின் மீது நின்று கொண்டு தான் பாக்கிஸ்தான் பிரிக்கப்படமுடியும் என்று பேசியவர்களை நானறிவேன்.  என்னென்ன நிலையில் எந்தெந்த அரசியல் கட்சிகள், தலைவர்கள், கொள்கைகளைக் குறைத்துக் கொண்டனர் என்பதும் எனக்குத் தெரியும்.

பெரியாரின் பொதுவுடமைப் பிரச்சாரம் என்ன ஆயிற்று என்பதும், அக்ரகாரத்தை கொளுத்த தீவட்டியைத் தயாராக பெட்ரோல் டின்னுடன் வைத்துக் கொண்டிருக்கச் சொன்னது என்ன ஆயிற்று என்பதும் எனக்குத் தெரியும்.  எனவேதான் தி.மு.கழகம் கொள்கையை மாற்றிக் கொண்டது என்று தூற்றக் கூடியவர்களைப்பற்றி நான் கவலைப்படவில்லை என்று சொன்னேன்.  எனக்கு உள்ள கவலை அவர்கள் என்னை ஏசுவார்கள் என்பது அல்ல.  என் மனம் என்ன பாடுபடும் என்பது தான்.  கொள்கையிலே எனக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு,  வெறுப்பு ஏற்பட்டு மாற்றிக் கொள்வதினால் மனம் பாடுபடாது. 

பார்ப்பனீயம் என்று நாம் பேசினோம்-நாம் பார்ப்பனருக்கு அடிமையாகிவிட்டோம். என்று பெரியார் பலத்த பிரச்சாரம் செய்தார்-மிகக்கேவலமான முறையிலே பேசினார்-நாம் பயந்துவிடவும் இல்லை-நமது கொள்கை பாதிக்கப்படவுமில்லை-நாம் பார்ப்பனருக்கு அடிமையாகிவிடவுமில்லை.  பார்ப்பனருக்குக் கடைசியில் ஊரூராகச் சென்றவர் பெரியாரே தவிர நாம் அல்ல.  

பிள்ளையாரை உடைக்கப்போவதில்லை என்று கூறினோம்-உடனே பெரியார் பார்! பார்! இவர்கள் சுயமரியாதையை விட்டுவிட்டார்கள்.  வைதீகர்கள் ஆகிவிட்டார்கள் என்று ஏசினார்.  நாம் அஞ்சிடவுமில்லை.  நமது வளர்ச்சி குன்றிடவுமில்லை.  சட்டசபைக்கு சென்றாலே காங்கிரசின் காலடியிலே வீழ்வார்கள் என்றார் பெரியார்.  நாம் அப்படி விழுந்துவிடவுமில்லை.  தூற்றி நம்மைத் தொலைத்துவிட்டிருக்க முடியுமானால்,  பெரியாரின் பிரச்சாரத்தின் காரணமாக, நாம் புதைக்கப்பட்ட இடத்தில் புல் முளைத்திருக்க வேண்டும்.  தூற்றலுக்காக துளியும் அஞ்சவில்லை.  அஞ்சப்போவதுமில்லை.

..அறிஞர் அண்ணா..எண்ணித்துணிக கருமம்….விடுதலை வேட்கை..பக்கம் 54..55..திருச்சி கே.சௌந்தர்ராஜன்…வெளியீடு புரட்சிப் பாதை...1963 ஆம் ஆண்டு சூன் திங்கள், 8, 9, 10 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அறிஞர் அண்ணாவின் கருத்துக்கள் தீர்மானமாக நிறைவேற்றப் பெற்றன. தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன் அண்ணா பேசிய பேச்சின் ஒரு பகுதியே மேலே வருபவை.....(1963 பிரிவினை தடைச் சட்டம் அமலாகியபோது..அண்ணாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன)

ஆண்டவனைக் கொண்டுவாருங்கள்!...வீழ்ந்து வணங்குவோம்!..அறிஞர் அண்ணா.

 



''மாதத்திற்கு ஒரு தடவை ''ஹரிஜன தினம்'' என்று கொண்டாடப்படுவதாகக் கூறப்பட்டது.  அந்த ஹரிஜன தினங்கள் சிலவற்றைக் கண்ணுறுகின்ற துர்பாக்கியம் எனக்குக் கிடைத்தது.  அரசாங்க அதிகாரிகள் தம்தம் பட்டியலை படிக்கவும், அதிகாரியிடம் சலுகை பெற வேண்டியவர்கள் தாமே புன்னகையை அடிக்கடி வருவித்துக்கொள்ளவும், பக்கத்திலே இருக்கும் ஒருவரிடம் 'இவர் யார்' என்று அதிகாரி கேட்க,  ''இவர் தான் இந்த வேலைக்குக் கான்டிராக்ட் எடுத்துக் கொள்ள விண்ணப்பம் போட்டவர்'' என்று கவனப்படுத்துவதும்  ஆக இந்த முறையில் தான் இந்த ஹரிஜன தினம் கொண்டாடப்படுகிறது.  இப்படிப்பட்ட தினங்கள் வாரத்திற்கொருமுறை  நடத்தினாலும் கூட நிச்சயமாக ஹரிஜனப் பிரச்சினை தீராது எனச் சொல்வேன்.

ஆகையால் கனம் அமைச்சர் அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். ஒரு ஐந்தாண்டு காலத்திற்கு ஹரிஜன தினங்களை மிகவும் தீவிரமாக, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உயிர் ஊட்டும் வகையில் உள்ளத்துக்கு உறுதியை வீரத்தை ஊட்டும் வகையில், மாபெரும் தினமாகக் கொண்டாடச் செய்தாலேயே பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுவிடும். 

ஹரிஜன தினத்தில் சேரியில் ஊரில் உள்ளவர்கள் அத்தனை பேரும் அன்றைய தினம் பூராவும் 24-மணி நேரமும் ஒன்றாகக் கலந்து உறவாடத் தக்க வகையில், ஒரு பெரும் கோலாகலத் திருவிழாவாகக் கொண்டாடப்பட ஏதாவது வழிமுறைகளை வகுத்துத் தந்தால் அந்தச் சமுதாயத்தின் நிலைமையில் புரட்சிகரமான மாறுதல்களைச் செய்ய முடியும், அன்றைய தினம் ஆண்டவனை வேண்டுமானால் கொண்டுவாருங்கள்.  வீழ்ந்து வணங்குவோம்.  வணங்கச் சொல்வோம்.  நல்ல காரியத்திற்கு வணங்கினாலும் வணங்கலாம்.  அதைவிட்டு அந்த ஹரிஜன தினத்தில் அதிகாரிகள் பட்டியல் படிப்பதும்,  அவரோடு உள்ளவர்கள் புன்னகைப் பூப்பதுமாகச் சுவையற்ற தினமாக இருந்து வருவதை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். ''

.. .....அறிஞர் அண்ணா…20.07.1957 -சனிக்கிழமை... சட்டமன்றத்தில் ஹரிஜன முன்னேற்றத்திற்கான மானிய கோரிக்கையைப் பற்றி எழுந்த விவாதத்தில் பேசியவைகளில் இருந்து ஒரு பகுதி…அண்ணாவின் சட்டசபை சொற்பொழிவுகள் தொகுதி-1 ..பாரதி பதிப்பகம்..பக்.72

நான் நாத்திகனா?...அறிஞர் அண்ணா.






நாத்திகத்தை புகுத்துவதாக, தமிழக சட்டமன்றத்தில் குற்றஞ்சாட்டி பேசிய எதிர்க்கட்சித் தலைவருக்கு (காங்கிரஸ்) அண்ணா கூறியதாவது;

அரசாங்க அலுவலகங்களில் கடவுள் படங்கள் மாற்றப்படுவது குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர்,  நாங்கள் ஒரே நாத்திகக் கொள்கையை மக்கள் மீது திணிப்பது போல் பேசினார்.  அது மட்டுமல்ல இரணியனுக்கு ஏற்பட்ட கதிதான் எனக்கும் ஏற்படும் என்று ஒரு கதையைச் சொன்னார்.

இரணியன் பிரகலாதன் கதை அவருக்குத் தெரிந்து இருப்பது போலவே எனக்கும் தெரியும் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் உணர்ந்திருப்பார் என்று கருதுகிறேன்.  அந்தக் கதை தெரிந்து இருந்தும் அப்படி நான் செய்வேன் என்று எதிர்பார்க்கிறார் என்றால் அவரது நிலைக்காக மிகவும் பரிதாபப்படுகிறேன்.

ஆத்திகம் என்பது சில இடங்களில் சாமியின் படங்களை மாட்டி வைப்பதாலோ, மாற்றுவதாலோ ஏற்படுவதல்ல.  அது உள்ளத்திலேயே ஏற்படுகின்ற உணர்வு.  ஆகவே அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

இந்த அரசு ஆத்திக எண்ணம் கொண்டவர்கள் மனம் புண்படும்படியான எந்த ஒரு செயலையும் செய்ததில்லை என்பதை நினைவுப் படுத்துகிறேன்.  அது மட்டுமல்ல.  ஆத்திக எண்ணம் கொண்டவர்கள் கொண்டாடுகின்ற பல்வேறு திருவிழாக்கள் மகாமகம் போன்ற பண்டிகைகளுக்கு - அரசாங்கம் உதவி புரிந்ததை இந்த நாடறியும்.  நல்லவர்கள் உணர்வார்கள்.  ஆகவே அரசாங்க அலுவலகங்களில் கடவுள் படங்களை மாட்டுவதால் இரணியன் போல் ஆகி விடுவேன்''  என்று கூறுவது என்பது எப்படியாவது இவன் அழிய மாட்டானா?  என்ற அவர்களது ஆசையைத்தான் காட்டுமே தவிர உண்மையில் எங்களை யாரும் தவறாகக் கருத மாட்டார்கள்!

…அறிஞர் அண்ணா..சட்டமன்றத்தில் அண்ணா…ந.முடிகோபதி..மணிவாசகர் பதிப்பகம்…பக்கம் 221-222

பண்பின் சிகரம் அண்ணா




முதலமைச்சராக இருந்த காலத்திலேயும்கூட ஆடம்பரமாக அவர் என்றைக்கும் இருந்ததில்லை.   எளிமைதான் அவருடைய மிகப்பெரிய வலிமையாக இருந்திருக்கிறது.  எதிரிகளிடத்தில் அவர் காட்டுகிற அன்புதான் அவர்களையும்கூட அவரை அண்ணா என்று அழைக்கவைத்திருக்கிறது.


அண்ணாவினுடைய கூர்மையான அறிவு, மக்களைக் கவர்கிற மிகச்சிறந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல், இவைகளைப் பற்றி யெல்லாம் இந்த நாடு அறியும்.  அவை எல்லாவற்றையும் தாண்டி மிகச்சிறந்த பண்பாளராக, மிக உயர்ந்த மனிதராக இந்த மண்ணிலே வாழ்ந்தவர்தான் நம்முடைய அறிஞர் அண்ணா அவர்கள்.

அவருடைய பண்பாட்டுக்கு ஆயிரம் எடுத்துக்காட்டுக்களை எதிர்க்கட்சியினரே கூடச் சொல்வார்கள்.  சட்டமன்றத்தில், பொதுக் கூட்டத்தில், பொது நிகழ்வுகளில் எந்த இடத்திலேயும் அவர் பண்பாட்டினுடைய குன்றாய் விளங்கினார் என்பதை அவரோடு இருக்கிறவர்கள் அல்ல…. அவரை மறுக்கிறவர்கள்கூட ஏற்றுக்கொள்கிறார்கள்.  அவருடைய பண்பாடுகள் குறித்துப் பல செய்திகளைப் பலர் கூற நான் கேட்டிருக்கிறேன்.  அண்ணாவினுடைய ஆட்சிக் காலத்திலே அரசு அதிகாரியாக இருந்த சிலம்பொலி செல்லப்பனார், அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலே இரண்டு மூன்று நிகழ்ச்சிகளை மக்களுக்கு எடுத்துச் சொன்னார்.  எந்த அளவுக்கு அண்ணா அதிகாரிகளிடம் நாகரிகமாக, பண்பாக நடந்து கொள்வார் என்பதை அவர் அந்தக் கூட்டத்திலே விளக்கினார்.

அதிலே இரண்டு நிகழ்ச்சிகள் அப்படியே என் நெஞ்சத்திலே பதிந்துவிட்டன.  ஒருமுறை ஒரு பெரிய அதிகாரி அண்ணாவோடு பேசிக் கொண்டிருக்கிறார்.  பேசிக்கொண்டிருந்து விட்டுச் சில கோப்புகளைப்பற்றி விவாதித்து விட்டு, அந்த அதிகாரி வெளியே போனபோது, ஏதோ ஒன்றை அவரிடத்திலே சொல்ல அண்ணா மறந்து விட்டார்.  பக்கத்திலே இருந்த சட்டமன்ற உறுப்பினரை அழைத்து அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை அழைத்துக் கொண்டு வரும்படி அவசரமாகச் சொல்கிறார். அண்ணா அவசரமாகச் சொல்கிறாரே என்று நினைத்து, நாம் போய் அழைத்து வருவதற்குக்கூட நேரமாகலாம் என்று கருதியோ என்னவோ, அந்தச் சட்டமன்ற உறுப்பினர், அதிகாரி வெளியேறப் போகிற நேரத்தில் வேகமாகக் கை தட்டி "ஐயா இங்கே வாங்க, உங்களை முதலமைச்சர் கூப்பிடுகிறார்"... என்று சொல்கிறார்.  கைதட்டி அந்த அதிகாரியை அழைத்த உடன் அண்ணாவினுடைய முகம் அப்படியே சுருங்கிப் போய் விடுகிறது.  இதை அண்ணா அவர்கள் எதிர்பார்க்கவில்லை.  ஓடிப்போய் அழைத்து வருவார் என்றுதான் அண்ணா நினைத்தார்.  இப்படி அவர் கைதட்டிக் கூப்பிடுவார் என்று அவர் கருதவில்லை.

 


அந்த அதிகாரி திரும்ப வந்துவிட்டார்.  "அழைத்தீர்களா?"  என்றார் "இல்லை… இல்லை…  நான் இன்னொருவரை அழைக்கச் சொன்னேன், மன்னித்துக் கொள்ளுங்கள் உங்களை இல்லை நீங்கள் போகலாம்..." என்று அண்ணா சொல்லியிருக்கார்.  அந்த அதிகாரி போனதற்குப் பிறகு பக்கத்திலே இருந்த சட்டமன்ற உறுப்பினரைப் பார்த்து  

"நான் கை தட்டினால் எனக்கு கை வலிக்கும் என்றா உங்களை அழைக்கச் சொன்னேன்.  அவர் எவ்வளவு பெரிய அதிகாரி…  இன்றைக்கு நாம் அமைச்சர்களாக இருக்கிறோம்…  இன்னும் 5 வருடத்துக்கு அதிகபட்சம் இருக்கலாம்.  மறுபடியும் வருவோம், வராமல்கூடப் போவோம்.  ஆனால் அவர் ஓய்வு பெறுகிறவரை அதிகாரி.  அது மட்டுமல்ல.  அவர் படித்தவர்… அறிவாளி.  நாட்டினுடைய நிர்வாகத்திலே ஒரு பொறுப்பிலே இருக்கிறவர்.  கைதட்டி அழைக்கலாமா?" என்று கடுமையாகக் கடிந்து கொண்டிருக்கிறார்.  "என்னால் போகமுடியவில்லை.  ஓடிப்போய் கூப்பிடுங்கள் என்று உங்கள் உதவியை கேட்டுத்தானே நான் சொன்னேன்.  ஓரு மூத்த அதிகாரியை இப்படிக் கைதட்டி அழைக்கலாமா? இன்றோடு இந்தப் பழக்கத்தை நிறுத்தி விடுங்கள்"... என்று தன்னோடு இருக்கிற தன் கட்சிக்காரரை கடுமையாக அண்ணா கடிந்து கொண்டிருக்கிறார்.  அந்தக் காட்சியை பக்கத்திலேயே அதிகாரியாக இருந்த சிலம்பொலியார் பார்த்திருக்கிறார்.  இது ஒரு நிகழ்வு.





இன்னொரு சுவையான நிகழ்ச்சியையும் அவர் குறிப்பிட்டார்.  பாவலர் முத்துச்சாமி அன்றைக்கு ஒரு அமைச்சராக இருக்கிறார்.  அந்தத் துறையிலே அவரோடு சேர்ந்து சிலம்பொலியாரும் முதலமைச்சரைப் பார்ப்பதற்காக அறைக்குப் போகிறார்.  கோப்புகளை எடுத்துக் கொண்டு போகிறார்கள்.  அரசு தொடர்பான… ஆட்சி தொடர்பான சில செய்திகளை முதலமைச்சரிடம் பேசவேண்டும்.  அப்படி உள்ளே போகிறபோது.  அண்ணாவுக்கு மிக நெருக்கமான ஒரு நண்பர் அண்ணாவினுடைய அறையிலே அமர்ந்திருக்கிறார்.  முதலமைச்சருக்கு மிக நெருக்கமானவர் அவர், அவரை வெளியே செல்லுமாறு இவரகள் சொல்ல முடியாது.  ஆனால் அது முதலமைச்சரிடம் தனியாகப் பேச வேண்டிய செய்தி.  என்ன செய்யலாம் என்கிற ஒரு தயக்கத்தோடு அங்கே அந்த அமைச்சர் அமர்ந்திருக்கிறார்.  அருகிலே அதிகாரியாக ஐயா அமர்ந்திருக்கிறார்.  அண்ணா அந்த தயக்கத்தைக் குறிப்பின் மூலமாகவே புரிந்து கொள்கிறார்.

இவர்கள் தன்னிடம் தனியாகப் பேசவேண்டும் என்று கருதுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு இந்த நண்பரை அனுப்புவதற்காக மறைமுகமாக வெவ்வேறு செய்திகளையெல்லாம் சொல்கிறார்.  ஆனால் அவர் புரிந்து கொள்வதாக இல்லை.  சிலபேர் நேரடியாகச் சொன்னாலே தவிர புரிந்துகொள்ளமாட்டார்கள்.  எத்தனையோச் செய்திகளை மறைமுகமாகச் சொன்னதற்குப் பிறகும் நண்பர் அங்கேயே அமர்ந்திருக்கிறார்.  அண்ணாவுக்கு எழுந்து போங்கள் என்று சொல்வதற்கு மனமில்லை.  கடிந்து கொள்கிற பழக்கமில்லாதவர்.  தன்கூட இருக்கிற கட்சிக்காரர்களை, மிகவும் உரிமை எடுத்துக் கொள்கிறவர்களைத் தான் அவர் கடிந்து கொள்வார்.  இவர் என்னதான் நண்பரானுலும், வெளியே போங்கள் என்று சொன்னால் நாம் அரசு பொறுப்பிலே இல்லை அதனாலேதான் மதிக்கவில்லை என்று அவர் கருதிவிடுவாரோ என்கிற அச்சம்.  கடைசியில்  சுவையான ஒரு உத்தியை அண்ணா கையாளுகிறார்.  அந்த நண்பரைப் பார்த்து ..''பக்கத்தில் இருக்கிற நூலகத்திலே ஒரு புத்தகம் எனக்கு வேண்டும் அதை எடுத்துக் கொண்டு வருவீர்களா?'' என்று கேட்கிறார்.  ''சொல்லுங்கள் என்ன வேண்டுமோ நான் எடுத்து வருகிறேன் என்று சொல்கிறார்.''  ஒரு ஆசிரியரினுடைய பெயரையும், புத்தகத்தினுடைய பெயரையும் எழுதி ''எனக்கு உடனடியாக வேண்டும், எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை.  இந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டுதான் வரவேண்டும்'' என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.  அனுப்பிவைத்துவிட்டு , இவர்களிடம் ''சொல்லுங்கள் என்ன செய்தி? ''என்று கேட்கிறார்.  இவர்கள் சொல்லத் தொடங்குகிறார்கள்.  கொஞ்சம் வேகம் வேகமாகச் சொல்கிறார்கள்.  அண்ணா சொல்கிறார்.  ''...நீங்கள் மெதுவாகவே சொல்லலாம்.  அவர் இப்போதைக்கு திரும்ப வரமாட்டார்.  ஏனென்றால் நான் எழுதிக் கொடுத்திருக்கிற புத்தகம் அந்த நூலகத்திலே இல்லை என்பது எனக்குத் தெரியும்.  இல்லாத புத்தகத்தினுடைய பெயரைத்தான் எழுதிக் கொடுத்திருக்கிறேன்.  எப்படியும் கொஞ்ச நேரம் ஆகும்.  பிறகு இல்லை என்றுதான் திரும்ப வருவார்.  அதற்குள்ளே நாம் பேசிவிடலாம்...'' என்று அண்ணா சொல்கிறார்.

யாருடைய மனமும் நோகாமல், அதே நேரத்தில் வந்திருக்கிற அமைச்சரின் குறிப்பையும் அறிந்து கொண்டு அண்ணா அணுகிய விதத்தைச் சிலம்பொலியார் அன்றைக்கு மேடையிலே சொல்கிற போது, எவ்வளவு பக்குவமான எவ்வளவு பண்பான மனிதராக அண்ணா இருந்திருக்கிறார் என்பதை நாம் அறிய முடிகிறது.

முதலமைச்சராக இருந்த காலத்திலேயும்கூட ஆடம்பரமாக அவர் என்றைக்கும் இருந்ததில்லை.  எளிமைதான் அவருடைய மிகப்பெரிய வலிமையாக இருந்திருக்கிறது.  எதிரிகளிடத்தில் அவர் காட்டுகிற அன்புதான், அவர்களையும்கூட அவரை அண்ணா என்று அழைக்க வைத்திருக்கிறது.  அத்தனை பேருக்கும் அண்ணாவாக, உடன் பிறந்த அண்ணாவாக, சின்னக் குழந்தையிலே இருந்து கட்சியிலே அவரைவிட மூத்தவர்களாக இருந்தவர்கள் வரைக்கும், அத்தனை பேருக்கும் அண்ணாவாக, உடன் பிறந்த அண்ணாவாக,  வழிகாட்டும் தலைவராக வாழ்ந்த அண்ணா அவர்கள் மிகக் குறுகிய காலம் தான் இந்த நாட்டினுடைய முதலமைச்சராக இருந்தார்.  ஆனால் பல நல்ல செய்திகளை பெரிய தொடக்கங்களை அவர் ஆட்சியிலே தொடக்கி வைத்தார்.  மிகக் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், தாய்க்குப் பெயரிட்ட மகன் அவர்தான்.  இந்த நாட்டுக்குத் தமிழ்நாடு என்று அவர்தான் பெயர் சூட்டினார்.  சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடியாகும் என்கிற ஒரு புரட்சிகரமான சட்டம் அவருடைய காலத்திலேதான் நிறைவேறிற்று.

பண்பின் சிகரம் அண்ணா.
செயலின் வடிவம் அண்ணா.


...பேராசிரியர் சுப.வீரபாண்டியன். ஒன்றே சொல் நன்றே சொல்.. கலைஞர் தொலைக்காட்சி..தொகுப்பில் இருந்து.

ராமர் தடவிய அணில் குஞ்சும் மதக்கலவரமும்...சுப.வீ (கலைஞர் சிறுகதை)







  • ''''ங்கேயும் எப்போதும் ஒரு மதக்கலவரம் வருவதற்கான ஒரு சூழல் இந்த நாட்டில் இருந்து கொண்டிருக்கிறது.''''


    • தம் என்பது அவரவருடைய ''வாழ்க்கை நெறி'' அல்லது ''வாழ்க்கை முறையாக'' இருக்கிற வரையில் யாருக்கும் எந்த சிக்கலும் இல்லை. 


    • அவரவர் நெறியில் அவரவர் வாழ இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடுகளில் எல்லோருக்கும் ''உரிமை'' இருக்கிறது.


    • ஆனால், எப்போது மதநெறி எப்போது மதவெறியாக மாறுகிறதோ, அந்த நாடு கலவரத்துக்கு உள்ளாகி விடுகிறது. பொதுவாகவே நாம் கணக்கெடுத்துப் பார்த்தால், இரண்டு நாடுகளுக்கு நடந்த போரில் இறந்துப்போன மனிதர்களைக் காட்டிலும், இரண்டு மதங்களுக்கு இடையே நடந்த போராட்டங்களிலும், கலவரங்களிலும் இறந்துபோன மனிதர்களின் எண்ணிக்கை தான் கூடுதலாக இருக்கிறது.

    அதுவும்1992 ஆவது ஆண்டு பாபர் மசூதிஇடிக்கப்பட்டதற்குப் பிறகு இந்தியா முழுவதும் இதுபோன்ற கலவரங்கள் அங்கேங்கே நடந்துகொண்டிருக்கின்றன. ஒருபக்கம் கலவரம் என்றால் இன்னொரு பக்கம் மதநல்லிணக்கம் குறித்த கலை இலக்கியங்களும் வந்து கொண்டேதான் இருக்கின்றன அப்படிப்பட்டஒரு சிறுகதை, மதம் என்பது அவரவர்வாழ்க்கை நெறியாக இருக்கட்டும், ஏன்மோதிக் கொள்கிறீர்கள் என்கிற உணர்வை ஊட்டுகிற சிறுகதையாக உள்ளது.  அணில்குஞ்சுஎன்பது  அக்கதையின் பெயர்.  மிகஅருமையான கதை அது. எழுதப்பட்டு சில ஆண்டுகள் ஆகிவிட்டன.  இப்போதும்அந்தக்கதை பொறுத்தமாக இருக்கிறது.

    பாரூக் என்று ஒரு இளைஞன், 10 வயதுஇருக்கும்.  பள்ளிக் கூடத்தை விட்டு வெளியிலே வருகிறபோது, முதலில் ஒரு கூட்டத்திலே பேசுகின்ற ஒரு செய்தி அவன் காதிலே விழுகின்றது.  கொஞ்சதூரம் நடந்து வந்தால், இன்னொருகூட்டத்தில் பேசப்படுகின்ற செய்திகளும் அவன் காதிலே விழுகின்றன.  முதல்கூட்டத்திலே, பாபர் மசூதியைஇடித்தது சரிதான் என்று பேசப்படுகிறதுஇன்னொரு கூட்டத்தில்பாபர் மசூதியை இடித்ததினாலேதான் நாட்டிலே இத்தனை கலவரங்களும் என்றுசொல்லப்படுகிறது. இரண்டையும் கேட்டுக் கொண்டு பாரூக் வருகிறபோது, மரத்தில் இருந்து தொப்பென்று ஒரு அணில் குஞ்சுகீழே விழுகிறது.  அப்போதுதான் பிறந்திருக்கிற, அழகான வேகமாக ஒடமுடியாத ஒரு அணில் குஞ்சு.  அதைப் பார்த்தபோது, அந்த பாரூக் என்கிற சிறுவனுக்கு அந்த அணில்குஞ்சின்மீது ஒரு ஆர்வம் ஏற்படுகிறது.  அதைப் பிடித்து தனதுகைகளிலே வைத்துக் கொள்கிறான்.  அழகாக இருக்கிறது.  அதுசின்ன அணில் குஞ்சு என்பதினாலே அதனுடைய கீழ்ப்பகுதி சிவந்திருக்கிறது.  அதுஅதற்கு மேலும் அழகூட்டுகிறது.  அதன் மேலே இருக்கிறமூன்று கோடுகளையும் அவனும் ஒருமுறை தடவிக் கொடுத்து, அந்த அணில் குஞ்சைத் தன்னுடைய வீட்டுக்குக் கொண்டு வருகிறான்.

    அவனுடையஅம்மா கேட்கிறாள், என்னடா இந்தஅணில் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறாயே என்று.  அம்மா மரத்திலிருந்துதொப்பென்று விழுந்தது,  அழகா இருக்கும்மா அதனால தூக்கிட்டு வந்தேன்என்று சொல்கிறான். அப்போது கறிக்கடை வைத்திருக்கிற அவனுடைய வாப்பாவீட்டுக்குள்ளே வருகிறார்.  அவரும் அந்த அணில்குஞ்சைப் பற்றிக் கேட்கிறார்.  முதலில் அவரும் அழகாய்இருக்கிறது வைத்துக் கொள் என்று தான் சொல்கிறார்.  ஆனால் பாரூக் சொன்னசிலவார்த்தைகள் அவருக்கு கோபமூட்டுகின்றன.  பாரூக் சொல்கிறான் அப்பாஇந்த அணில் குஞ்சுக்கு மேலே மூன்று கோடுகள் எவ்வளவு அழகா இருக்கு பார்த்தீங்களா?  இது ராமனுக்கு பாலம் கட்ட இந்த அணில் குஞ்சு உதவியபோது அவர் தடவிக் கொடுத்ததினாலேவந்துச்சாம்எங்க பள்ளிக் கூடத்திலே டீச்சர் சொன்னாங்க என்று  சொன்னவுடனேயே வாப்பாவுக்கு கோபம் வருகிறது.  ஏன்டாராமன் வைத்திருந்த குஞ்செல்லாம் இங்கே ஏன் கொண்டுவருகிறாய்கொண்டுபோய்முதலில் வெளியே விடு என்கிறார்.


    • அணில்குஞ்சு அழகாக இருக்கிறதுஅதை நீ வைத்துக் கொள்என்று சொன்ன அதே மனிதர்தான், மதத்தோடுதொடர்பு படுத்தப்பட்ட உடனேயே கோபப்பட்டு, அப்படி ராமர் தடவிக் கொடுத்த அணில் என்று டீச்சர் வகுப்பிலே சொல்லிக்கொடுத்திருக்கிறார் என்றால், அதையெல்லாம்நம் வீட்டிலே வைத்துக் கொள்ளக் கூடாது, அதை முதலிலே கொண்டு வெளியே விடு என்கிறார்.  அந்தப் பையனுக்கு மனம்வரவில்லை


    • அழகாக இருக்கிற இந்த அணிலுக்குள் எப்படி? ''மதம்'' வந்து சேர்ந்தது என்றுஅந்தச் சிறுவனுக்குப் புரியவில்லை

         ஆனாலும், வாப்பாவோடு அதை எல்லாம் கேட்டு வாதாடமுடியாது.  இல்லையப்பாநான் வைத்துக்கொள்கிறேன் என்று கெஞ்சிப்பார்க்கிறான்.  அவர் விடுவதாக இல்லை.  அம்மாஇடையிலே புகுந்து, இரண்டுபேருக்கும் இடையில் ஒரு சமாதானம் செய்கிறாள்.  சரி, நீங்கள் சொன்னதற்கு அப்புறம் அவன் வைத்துக்கொள்ளமாட்டான்., கொண்டு போய் விட்டுவிடுவான். என்று அவள் சமாதானம்செய்கிறாள்.  அந்தச் சமாதானத்தை இரண்டு பேருமே ஏற்றுக் கொள்கிறார்கள்.

         காற்றுப்போவதற்கு வசதியான ஒரு கூண்டுக்குள்ளே இரவு முழுக்க வைத்து,அதற்குத் தேவையான தீனிகளையும் கொடுத்து, அந்த அணிலின் அழகை ரசித்து ரசித்து அந்தப்பையன் பாரூக் பார்த்துக் கொண்டிருக்கிறான்.  மறுநாள் காலையில் பொழுதுவிடிகிறபோது சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும்.  அப்பாவுக்கு இனிமேலும்வைத்துக் கொண்டிருந்தால் கோபம் வந்துவிடும் என்று அணில் குஞ்சை எடுத்துக் கொண்டு, எடுத்த அந்த மரத்துக்கு அருகிலேயே கொண்டு போய்விட்டு விடலாம் என்று நினைத்து அங்கே போகிறான்.

         போகிறபோது, அந்த ஊரைச் சேர்ந்த ஆராவமுத ஐயங்கார் எதிரிலே வருகிறார்.  என்னடா அம்பி கையிலேஅணில் குஞ்செல்லாம் வைச்சிண்டிருக்கிறே என்று கேட்கிறார்.  இந்தப் பையன் நடந்ததைச்சொல்கிறான்.  இங்கிருந்து நேற்று எடுத்துக் கொண்டு போனேன்.  இது ராமர் தடவிக் கொடுத்தஅணில் என்பதினால வாப்பாவுக்கு கோபம் வந்துவிட்டதுதிரும்பவும் கொண்டுபோய்விட்டுவிடச் சொன்னார், அதற்காகவருகிறேன் என்கிறான்.

          அப்போது ஆராவமுத ஐயங்கார் கேட்கிறார் ''எங்களுடைய ராமர்வைத்திருந்த குஞ்செல்லாம் நீங்கள் ஏன் கொண்டுபோய் வைத்திருக்கிறேள்''.  உங்கள்வீட்டிலெல்லாம் வைத்திருக்க கூடாது இங்கே கொண்டு விட்டு விடுவது தான் சரி,'' என்கிறார்.

    • யாருமேஅதை ஒரு அணிலாக…. ஒரு உயிராகப்பார்க்காமல் ''மதத்தோடு'' இணைத்து இணைத்துப் பார்க்கிறார்கள்.

         அந்தநேரத்தில் பாரூக்கினுடைய அப்பா அந்த இடத்துக்கு வருகிறார்.  பையனிடம் என்னபேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று அவரைப் பார்த்து இவர் கேட்கிறார்.  அவர்நடந்ததை சொன்னபோது வாப்பாவுக்கு மறுபடியும் கோபம் வருகிறது. ராமருக்குஉதவி செய்த அந்த அணில் குஞ்சை நம் வீட்டுக்கு ஏன் கொண்டு வருகிறாய் என்று கேட்டஅதே அப்பா தான், இப்போது ஆராவமுதஐயங்கார் கேட்ட உடனே, ஏன் நாங்கஅணில் குஞ்சை வைத்துக் கொள்ளக் கூடாதுஅது உங்களுக்கு மட்டும்தான் சொந்தமா? அணில் எல்லோருக்கும்தான் சொந்தம்இதிலே நீங்கள் எப்படிச் சொந்தம் கொண்டாடுவது, உங்கள் மதத்துக்கும் அணிலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறார்வாய்வாதம் வலுக்கிறது.

          சின்னப்பையனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.  கொஞ்ச நேரத்திலே இந்தப்பக்கத்திலே இருந்து இரண்டு பேர் வருகிறார்கள், அந்தப் பக்கத்திலே இருந்து ஒருவர் வருகிறார்.  கொஞ்சம் கொஞ்சமாக விவாதம்சூடேறுகிறது.  அணில் குஞ்சை ஒரு இஸ்லாமியர் தன் வீட்டில் வைத்துக் கொள்ளலாமா? கூடாதா? என்கிற ஒரு தேவையற்ற விவாதம், அந்த இடத்திலே ஒரு சண்டையாக மாறுகிறது.   பலரும் கூடுகிறார்கள்.  இந்தநேரத்தில் பாரூக்கின் அம்மாவும் அங்கே வந்து சேருகிறாள்.   அவள் சொல்கிறாள், போகிற போக்கைப் பார்த்தால், இந்த அணில் குஞ்சினால் பத்துக் கொலை விழும் போலஇருக்கிறது, வேண்டாம் பாரூக் விட்டுவிடு என்கிறாள்.  அதை விடுவதற்குத்தானே வந்தேன் அம்மா, அதற்குள் இவ்வளவு பெரிய சண்டை வந்துவிட்டதே என்கிறான்.

    அமைதியாக…அன்பாக இருந்தவர்களிடத்திலே மதம் இப்படிகலவரத்தை தூண்டி விடுகிறது என்று இந்தக் கதை மிக அழகாகச் சொல்கிறது.  அதற்குப்பிறகும் அதை வைத்துக்கொண்டிருக்க மனமில்லாமல் அந்தப் பையன் அணில்குஞ்சை கீழேவிட்டு விடுகிறான். அப்போது மரத்திலிருந்து ஒரு பருந்து ஒடி வந்து அந்தஅணில் குஞ்சைக் கவ்விக் கொண்டு போய்விடுகிறது.

      இந்த ஊரில் மதக்கலவரம்வந்துவிடாமல் இருக்க வேண்டுமென்று அந்த அணில்குஞ்சு தன்னைத் தியாகம் செய்துகொண்டுவிட்டது என்று அந்தக் கதை முடிகிறது.




    • எங்கேயும்எப்போதும் ஒரு மதக்கலவரம் வருவதற்கான சூழல் இந்த நாட்டில் இருந்து கொண்டே இருக்கிறது என்பதை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிற ஒரு அருமையான சிறுகதையாகஇந்தக் கதை இருக்கிறது.

    இந்தக்கதையை எழுதிய எழுத்தாளர் யார் என்று சொல்ல நான் மறந்துவிட்டேன்அத்தனைபேரும் அறிந்த எழுத்தாளர் தான் அவர்.

    நம்முடைய தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எழுதியிருக்கிற கதைதான் இந்த "அணில்குஞ்சு" என்கிற சிறுகதை.

    .…பேரா.சுப.வீ...ஒன்றே சொல் நன்றே சொல்..கலைஞர்தொலைக்காட்சி…தொகுதி 3 பக்..99-103

    திராவிட இயக்க நூற்றாண்டு-27.02.2012