Pages

Monday 6 May, 2013

பார்ப்பனருக்குக் கடைசியில் ஊரூராகச் சென்றவர் பெரியாரே தவிர நாம் அல்ல..அண்ணா



பாக்கிஸ்தான் தரவேண்டும் என்றால் சுயராஜ்யமே வேண்டாம் என்ற உறுதி என்னாயிற்று என்பது நமக்குத் தெரியும்.   என் பிணத்தின் மீது நின்று கொண்டு தான் பாக்கிஸ்தான் பிரிக்கப்படமுடியும் என்று பேசியவர்களை நானறிவேன்.  என்னென்ன நிலையில் எந்தெந்த அரசியல் கட்சிகள், தலைவர்கள், கொள்கைகளைக் குறைத்துக் கொண்டனர் என்பதும் எனக்குத் தெரியும்.

பெரியாரின் பொதுவுடமைப் பிரச்சாரம் என்ன ஆயிற்று என்பதும், அக்ரகாரத்தை கொளுத்த தீவட்டியைத் தயாராக பெட்ரோல் டின்னுடன் வைத்துக் கொண்டிருக்கச் சொன்னது என்ன ஆயிற்று என்பதும் எனக்குத் தெரியும்.  எனவேதான் தி.மு.கழகம் கொள்கையை மாற்றிக் கொண்டது என்று தூற்றக் கூடியவர்களைப்பற்றி நான் கவலைப்படவில்லை என்று சொன்னேன்.  எனக்கு உள்ள கவலை அவர்கள் என்னை ஏசுவார்கள் என்பது அல்ல.  என் மனம் என்ன பாடுபடும் என்பது தான்.  கொள்கையிலே எனக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு,  வெறுப்பு ஏற்பட்டு மாற்றிக் கொள்வதினால் மனம் பாடுபடாது. 

பார்ப்பனீயம் என்று நாம் பேசினோம்-நாம் பார்ப்பனருக்கு அடிமையாகிவிட்டோம். என்று பெரியார் பலத்த பிரச்சாரம் செய்தார்-மிகக்கேவலமான முறையிலே பேசினார்-நாம் பயந்துவிடவும் இல்லை-நமது கொள்கை பாதிக்கப்படவுமில்லை-நாம் பார்ப்பனருக்கு அடிமையாகிவிடவுமில்லை.  பார்ப்பனருக்குக் கடைசியில் ஊரூராகச் சென்றவர் பெரியாரே தவிர நாம் அல்ல.  

பிள்ளையாரை உடைக்கப்போவதில்லை என்று கூறினோம்-உடனே பெரியார் பார்! பார்! இவர்கள் சுயமரியாதையை விட்டுவிட்டார்கள்.  வைதீகர்கள் ஆகிவிட்டார்கள் என்று ஏசினார்.  நாம் அஞ்சிடவுமில்லை.  நமது வளர்ச்சி குன்றிடவுமில்லை.  சட்டசபைக்கு சென்றாலே காங்கிரசின் காலடியிலே வீழ்வார்கள் என்றார் பெரியார்.  நாம் அப்படி விழுந்துவிடவுமில்லை.  தூற்றி நம்மைத் தொலைத்துவிட்டிருக்க முடியுமானால்,  பெரியாரின் பிரச்சாரத்தின் காரணமாக, நாம் புதைக்கப்பட்ட இடத்தில் புல் முளைத்திருக்க வேண்டும்.  தூற்றலுக்காக துளியும் அஞ்சவில்லை.  அஞ்சப்போவதுமில்லை.

..அறிஞர் அண்ணா..எண்ணித்துணிக கருமம்….விடுதலை வேட்கை..பக்கம் 54..55..திருச்சி கே.சௌந்தர்ராஜன்…வெளியீடு புரட்சிப் பாதை...1963 ஆம் ஆண்டு சூன் திங்கள், 8, 9, 10 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அறிஞர் அண்ணாவின் கருத்துக்கள் தீர்மானமாக நிறைவேற்றப் பெற்றன. தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன் அண்ணா பேசிய பேச்சின் ஒரு பகுதியே மேலே வருபவை.....(1963 பிரிவினை தடைச் சட்டம் அமலாகியபோது..அண்ணாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன)

No comments: