Pages

Monday 6 May, 2013

பண்பின் சிகரம் அண்ணா




முதலமைச்சராக இருந்த காலத்திலேயும்கூட ஆடம்பரமாக அவர் என்றைக்கும் இருந்ததில்லை.   எளிமைதான் அவருடைய மிகப்பெரிய வலிமையாக இருந்திருக்கிறது.  எதிரிகளிடத்தில் அவர் காட்டுகிற அன்புதான் அவர்களையும்கூட அவரை அண்ணா என்று அழைக்கவைத்திருக்கிறது.


அண்ணாவினுடைய கூர்மையான அறிவு, மக்களைக் கவர்கிற மிகச்சிறந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல், இவைகளைப் பற்றி யெல்லாம் இந்த நாடு அறியும்.  அவை எல்லாவற்றையும் தாண்டி மிகச்சிறந்த பண்பாளராக, மிக உயர்ந்த மனிதராக இந்த மண்ணிலே வாழ்ந்தவர்தான் நம்முடைய அறிஞர் அண்ணா அவர்கள்.

அவருடைய பண்பாட்டுக்கு ஆயிரம் எடுத்துக்காட்டுக்களை எதிர்க்கட்சியினரே கூடச் சொல்வார்கள்.  சட்டமன்றத்தில், பொதுக் கூட்டத்தில், பொது நிகழ்வுகளில் எந்த இடத்திலேயும் அவர் பண்பாட்டினுடைய குன்றாய் விளங்கினார் என்பதை அவரோடு இருக்கிறவர்கள் அல்ல…. அவரை மறுக்கிறவர்கள்கூட ஏற்றுக்கொள்கிறார்கள்.  அவருடைய பண்பாடுகள் குறித்துப் பல செய்திகளைப் பலர் கூற நான் கேட்டிருக்கிறேன்.  அண்ணாவினுடைய ஆட்சிக் காலத்திலே அரசு அதிகாரியாக இருந்த சிலம்பொலி செல்லப்பனார், அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலே இரண்டு மூன்று நிகழ்ச்சிகளை மக்களுக்கு எடுத்துச் சொன்னார்.  எந்த அளவுக்கு அண்ணா அதிகாரிகளிடம் நாகரிகமாக, பண்பாக நடந்து கொள்வார் என்பதை அவர் அந்தக் கூட்டத்திலே விளக்கினார்.

அதிலே இரண்டு நிகழ்ச்சிகள் அப்படியே என் நெஞ்சத்திலே பதிந்துவிட்டன.  ஒருமுறை ஒரு பெரிய அதிகாரி அண்ணாவோடு பேசிக் கொண்டிருக்கிறார்.  பேசிக்கொண்டிருந்து விட்டுச் சில கோப்புகளைப்பற்றி விவாதித்து விட்டு, அந்த அதிகாரி வெளியே போனபோது, ஏதோ ஒன்றை அவரிடத்திலே சொல்ல அண்ணா மறந்து விட்டார்.  பக்கத்திலே இருந்த சட்டமன்ற உறுப்பினரை அழைத்து அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை அழைத்துக் கொண்டு வரும்படி அவசரமாகச் சொல்கிறார். அண்ணா அவசரமாகச் சொல்கிறாரே என்று நினைத்து, நாம் போய் அழைத்து வருவதற்குக்கூட நேரமாகலாம் என்று கருதியோ என்னவோ, அந்தச் சட்டமன்ற உறுப்பினர், அதிகாரி வெளியேறப் போகிற நேரத்தில் வேகமாகக் கை தட்டி "ஐயா இங்கே வாங்க, உங்களை முதலமைச்சர் கூப்பிடுகிறார்"... என்று சொல்கிறார்.  கைதட்டி அந்த அதிகாரியை அழைத்த உடன் அண்ணாவினுடைய முகம் அப்படியே சுருங்கிப் போய் விடுகிறது.  இதை அண்ணா அவர்கள் எதிர்பார்க்கவில்லை.  ஓடிப்போய் அழைத்து வருவார் என்றுதான் அண்ணா நினைத்தார்.  இப்படி அவர் கைதட்டிக் கூப்பிடுவார் என்று அவர் கருதவில்லை.

 


அந்த அதிகாரி திரும்ப வந்துவிட்டார்.  "அழைத்தீர்களா?"  என்றார் "இல்லை… இல்லை…  நான் இன்னொருவரை அழைக்கச் சொன்னேன், மன்னித்துக் கொள்ளுங்கள் உங்களை இல்லை நீங்கள் போகலாம்..." என்று அண்ணா சொல்லியிருக்கார்.  அந்த அதிகாரி போனதற்குப் பிறகு பக்கத்திலே இருந்த சட்டமன்ற உறுப்பினரைப் பார்த்து  

"நான் கை தட்டினால் எனக்கு கை வலிக்கும் என்றா உங்களை அழைக்கச் சொன்னேன்.  அவர் எவ்வளவு பெரிய அதிகாரி…  இன்றைக்கு நாம் அமைச்சர்களாக இருக்கிறோம்…  இன்னும் 5 வருடத்துக்கு அதிகபட்சம் இருக்கலாம்.  மறுபடியும் வருவோம், வராமல்கூடப் போவோம்.  ஆனால் அவர் ஓய்வு பெறுகிறவரை அதிகாரி.  அது மட்டுமல்ல.  அவர் படித்தவர்… அறிவாளி.  நாட்டினுடைய நிர்வாகத்திலே ஒரு பொறுப்பிலே இருக்கிறவர்.  கைதட்டி அழைக்கலாமா?" என்று கடுமையாகக் கடிந்து கொண்டிருக்கிறார்.  "என்னால் போகமுடியவில்லை.  ஓடிப்போய் கூப்பிடுங்கள் என்று உங்கள் உதவியை கேட்டுத்தானே நான் சொன்னேன்.  ஓரு மூத்த அதிகாரியை இப்படிக் கைதட்டி அழைக்கலாமா? இன்றோடு இந்தப் பழக்கத்தை நிறுத்தி விடுங்கள்"... என்று தன்னோடு இருக்கிற தன் கட்சிக்காரரை கடுமையாக அண்ணா கடிந்து கொண்டிருக்கிறார்.  அந்தக் காட்சியை பக்கத்திலேயே அதிகாரியாக இருந்த சிலம்பொலியார் பார்த்திருக்கிறார்.  இது ஒரு நிகழ்வு.





இன்னொரு சுவையான நிகழ்ச்சியையும் அவர் குறிப்பிட்டார்.  பாவலர் முத்துச்சாமி அன்றைக்கு ஒரு அமைச்சராக இருக்கிறார்.  அந்தத் துறையிலே அவரோடு சேர்ந்து சிலம்பொலியாரும் முதலமைச்சரைப் பார்ப்பதற்காக அறைக்குப் போகிறார்.  கோப்புகளை எடுத்துக் கொண்டு போகிறார்கள்.  அரசு தொடர்பான… ஆட்சி தொடர்பான சில செய்திகளை முதலமைச்சரிடம் பேசவேண்டும்.  அப்படி உள்ளே போகிறபோது.  அண்ணாவுக்கு மிக நெருக்கமான ஒரு நண்பர் அண்ணாவினுடைய அறையிலே அமர்ந்திருக்கிறார்.  முதலமைச்சருக்கு மிக நெருக்கமானவர் அவர், அவரை வெளியே செல்லுமாறு இவரகள் சொல்ல முடியாது.  ஆனால் அது முதலமைச்சரிடம் தனியாகப் பேச வேண்டிய செய்தி.  என்ன செய்யலாம் என்கிற ஒரு தயக்கத்தோடு அங்கே அந்த அமைச்சர் அமர்ந்திருக்கிறார்.  அருகிலே அதிகாரியாக ஐயா அமர்ந்திருக்கிறார்.  அண்ணா அந்த தயக்கத்தைக் குறிப்பின் மூலமாகவே புரிந்து கொள்கிறார்.

இவர்கள் தன்னிடம் தனியாகப் பேசவேண்டும் என்று கருதுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு இந்த நண்பரை அனுப்புவதற்காக மறைமுகமாக வெவ்வேறு செய்திகளையெல்லாம் சொல்கிறார்.  ஆனால் அவர் புரிந்து கொள்வதாக இல்லை.  சிலபேர் நேரடியாகச் சொன்னாலே தவிர புரிந்துகொள்ளமாட்டார்கள்.  எத்தனையோச் செய்திகளை மறைமுகமாகச் சொன்னதற்குப் பிறகும் நண்பர் அங்கேயே அமர்ந்திருக்கிறார்.  அண்ணாவுக்கு எழுந்து போங்கள் என்று சொல்வதற்கு மனமில்லை.  கடிந்து கொள்கிற பழக்கமில்லாதவர்.  தன்கூட இருக்கிற கட்சிக்காரர்களை, மிகவும் உரிமை எடுத்துக் கொள்கிறவர்களைத் தான் அவர் கடிந்து கொள்வார்.  இவர் என்னதான் நண்பரானுலும், வெளியே போங்கள் என்று சொன்னால் நாம் அரசு பொறுப்பிலே இல்லை அதனாலேதான் மதிக்கவில்லை என்று அவர் கருதிவிடுவாரோ என்கிற அச்சம்.  கடைசியில்  சுவையான ஒரு உத்தியை அண்ணா கையாளுகிறார்.  அந்த நண்பரைப் பார்த்து ..''பக்கத்தில் இருக்கிற நூலகத்திலே ஒரு புத்தகம் எனக்கு வேண்டும் அதை எடுத்துக் கொண்டு வருவீர்களா?'' என்று கேட்கிறார்.  ''சொல்லுங்கள் என்ன வேண்டுமோ நான் எடுத்து வருகிறேன் என்று சொல்கிறார்.''  ஒரு ஆசிரியரினுடைய பெயரையும், புத்தகத்தினுடைய பெயரையும் எழுதி ''எனக்கு உடனடியாக வேண்டும், எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை.  இந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டுதான் வரவேண்டும்'' என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.  அனுப்பிவைத்துவிட்டு , இவர்களிடம் ''சொல்லுங்கள் என்ன செய்தி? ''என்று கேட்கிறார்.  இவர்கள் சொல்லத் தொடங்குகிறார்கள்.  கொஞ்சம் வேகம் வேகமாகச் சொல்கிறார்கள்.  அண்ணா சொல்கிறார்.  ''...நீங்கள் மெதுவாகவே சொல்லலாம்.  அவர் இப்போதைக்கு திரும்ப வரமாட்டார்.  ஏனென்றால் நான் எழுதிக் கொடுத்திருக்கிற புத்தகம் அந்த நூலகத்திலே இல்லை என்பது எனக்குத் தெரியும்.  இல்லாத புத்தகத்தினுடைய பெயரைத்தான் எழுதிக் கொடுத்திருக்கிறேன்.  எப்படியும் கொஞ்ச நேரம் ஆகும்.  பிறகு இல்லை என்றுதான் திரும்ப வருவார்.  அதற்குள்ளே நாம் பேசிவிடலாம்...'' என்று அண்ணா சொல்கிறார்.

யாருடைய மனமும் நோகாமல், அதே நேரத்தில் வந்திருக்கிற அமைச்சரின் குறிப்பையும் அறிந்து கொண்டு அண்ணா அணுகிய விதத்தைச் சிலம்பொலியார் அன்றைக்கு மேடையிலே சொல்கிற போது, எவ்வளவு பக்குவமான எவ்வளவு பண்பான மனிதராக அண்ணா இருந்திருக்கிறார் என்பதை நாம் அறிய முடிகிறது.

முதலமைச்சராக இருந்த காலத்திலேயும்கூட ஆடம்பரமாக அவர் என்றைக்கும் இருந்ததில்லை.  எளிமைதான் அவருடைய மிகப்பெரிய வலிமையாக இருந்திருக்கிறது.  எதிரிகளிடத்தில் அவர் காட்டுகிற அன்புதான், அவர்களையும்கூட அவரை அண்ணா என்று அழைக்க வைத்திருக்கிறது.  அத்தனை பேருக்கும் அண்ணாவாக, உடன் பிறந்த அண்ணாவாக, சின்னக் குழந்தையிலே இருந்து கட்சியிலே அவரைவிட மூத்தவர்களாக இருந்தவர்கள் வரைக்கும், அத்தனை பேருக்கும் அண்ணாவாக, உடன் பிறந்த அண்ணாவாக,  வழிகாட்டும் தலைவராக வாழ்ந்த அண்ணா அவர்கள் மிகக் குறுகிய காலம் தான் இந்த நாட்டினுடைய முதலமைச்சராக இருந்தார்.  ஆனால் பல நல்ல செய்திகளை பெரிய தொடக்கங்களை அவர் ஆட்சியிலே தொடக்கி வைத்தார்.  மிகக் குறிப்பாக சொல்ல வேண்டுமானால், தாய்க்குப் பெயரிட்ட மகன் அவர்தான்.  இந்த நாட்டுக்குத் தமிழ்நாடு என்று அவர்தான் பெயர் சூட்டினார்.  சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடியாகும் என்கிற ஒரு புரட்சிகரமான சட்டம் அவருடைய காலத்திலேதான் நிறைவேறிற்று.

பண்பின் சிகரம் அண்ணா.
செயலின் வடிவம் அண்ணா.


...பேராசிரியர் சுப.வீரபாண்டியன். ஒன்றே சொல் நன்றே சொல்.. கலைஞர் தொலைக்காட்சி..தொகுப்பில் இருந்து.

No comments: