Pages

Monday 6 May, 2013

ஆண்டவனைக் கொண்டுவாருங்கள்!...வீழ்ந்து வணங்குவோம்!..அறிஞர் அண்ணா.

 



''மாதத்திற்கு ஒரு தடவை ''ஹரிஜன தினம்'' என்று கொண்டாடப்படுவதாகக் கூறப்பட்டது.  அந்த ஹரிஜன தினங்கள் சிலவற்றைக் கண்ணுறுகின்ற துர்பாக்கியம் எனக்குக் கிடைத்தது.  அரசாங்க அதிகாரிகள் தம்தம் பட்டியலை படிக்கவும், அதிகாரியிடம் சலுகை பெற வேண்டியவர்கள் தாமே புன்னகையை அடிக்கடி வருவித்துக்கொள்ளவும், பக்கத்திலே இருக்கும் ஒருவரிடம் 'இவர் யார்' என்று அதிகாரி கேட்க,  ''இவர் தான் இந்த வேலைக்குக் கான்டிராக்ட் எடுத்துக் கொள்ள விண்ணப்பம் போட்டவர்'' என்று கவனப்படுத்துவதும்  ஆக இந்த முறையில் தான் இந்த ஹரிஜன தினம் கொண்டாடப்படுகிறது.  இப்படிப்பட்ட தினங்கள் வாரத்திற்கொருமுறை  நடத்தினாலும் கூட நிச்சயமாக ஹரிஜனப் பிரச்சினை தீராது எனச் சொல்வேன்.

ஆகையால் கனம் அமைச்சர் அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். ஒரு ஐந்தாண்டு காலத்திற்கு ஹரிஜன தினங்களை மிகவும் தீவிரமாக, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உயிர் ஊட்டும் வகையில் உள்ளத்துக்கு உறுதியை வீரத்தை ஊட்டும் வகையில், மாபெரும் தினமாகக் கொண்டாடச் செய்தாலேயே பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுவிடும். 

ஹரிஜன தினத்தில் சேரியில் ஊரில் உள்ளவர்கள் அத்தனை பேரும் அன்றைய தினம் பூராவும் 24-மணி நேரமும் ஒன்றாகக் கலந்து உறவாடத் தக்க வகையில், ஒரு பெரும் கோலாகலத் திருவிழாவாகக் கொண்டாடப்பட ஏதாவது வழிமுறைகளை வகுத்துத் தந்தால் அந்தச் சமுதாயத்தின் நிலைமையில் புரட்சிகரமான மாறுதல்களைச் செய்ய முடியும், அன்றைய தினம் ஆண்டவனை வேண்டுமானால் கொண்டுவாருங்கள்.  வீழ்ந்து வணங்குவோம்.  வணங்கச் சொல்வோம்.  நல்ல காரியத்திற்கு வணங்கினாலும் வணங்கலாம்.  அதைவிட்டு அந்த ஹரிஜன தினத்தில் அதிகாரிகள் பட்டியல் படிப்பதும்,  அவரோடு உள்ளவர்கள் புன்னகைப் பூப்பதுமாகச் சுவையற்ற தினமாக இருந்து வருவதை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். ''

.. .....அறிஞர் அண்ணா…20.07.1957 -சனிக்கிழமை... சட்டமன்றத்தில் ஹரிஜன முன்னேற்றத்திற்கான மானிய கோரிக்கையைப் பற்றி எழுந்த விவாதத்தில் பேசியவைகளில் இருந்து ஒரு பகுதி…அண்ணாவின் சட்டசபை சொற்பொழிவுகள் தொகுதி-1 ..பாரதி பதிப்பகம்..பக்.72

No comments: