Pages

Wednesday 3 February, 2010

கொடுமையிலும் கொடுமை கண்ட கொடுமுடி கோகிலம் -3







லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற முதல் நடிகை சுந்தராம்பாள்



இந்தியாவிலேயே திரைப்படத்தில் நடிக்க ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற முதல் நடிகை சுந்தராம்பாள் அவர்கள்தான். எந்த கால கட்டத்தில் அவர் ஒரு லட்சம் ரூபாயை சம்பளமாகப் பெற்றிருக்கிறார் என்பதை சரியா உணர்ந்தால்தான் கே.பி.எஸ். படைத்திருப்பது எவ்வளவு பெரிய சரித்திரம் என்பதை உணர முடியும்.


கே.பி.எஸ். ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்ற நாட்களில் ஒரு சவரன் தங்கத்தின் மதிப்பு 14 ரூபாய். அதன்படி பார்த்தால் ஒரு லட்சம் ரூபாய்க்கு 7143 சவரன் வாங்கலாம். இன்றைய சவரன் விலை தோராயமாக ரூபாய் ஏழாயிரம் என்று வைத்துக்கொண்டு கணக்கிட்டால்கூட கே.பி.எஸ். அன்று பெற்ற தொகை 5 கோடி ரூபாய்க்கு சமம். அதன்படி பார்த்தால் முதலில் மட்டுமல்ல- இன்று வரை அதிக சம்பளம் வாங்கிய ஒரே இந்திய நடிகை கே.பி. சுந்தராம்பாள் மட்டுமே என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.


1935-ம் ஆண்டு “பக்த குசேலா’வை முந்திக்கொண்டு ''நந்தனார்'' திரைக்கு வந்தது. ''நந்தனார்'' வெற்றிப்படமாக அமைந்தபோதிலும் அந்த படத்திற்குப் பின் கே.பி.எஸ். வேறு படங்களில் நடிக்கவில்லை. படங்களில் நடிக்கவில்லையே தவிர காங்கிரஸ் கூட்டங்களில் தேசியப் பாடல்களையும், கோவில் கச்சேரிகளில் தெய்வீகப் பாடல்களையும் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார் அவர். காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியும், செயலாளரான காமராசரும் சுந்தராம்பாளை பல கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றனர்.


காங்கிரஸ் கூட்டங்களில் கூட்டம் சேர கே.பி.எஸ். அவர்களின் பாட்டுக்கள் பெரிதும் உதவியது என்பதை யாரும் மறுக்க முடியாது. மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜாஜி,         '' என்ன இவ்வளவு கூட்டம் கூடியிருக்கிறதே'' என்று வியந்தார். “”இது சுந்தராம்பாள் பாட்டுக்கு கூடிய கூட்டம்” என்று சத்தியமூர்த்தி கூறியதும் ராஜாஜி ஆச்சர்யம் அடைந்தார்.

மகாத்மா 1936-ல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது சுந்தராம்பாள் பிறந்த ஊரான கொடுமுடி அருகே கார் பழுதடைந்தது. அப்போது காந்தி அடிகளை கே.பி.எஸ். இல்லத்திற்கு அழைத்துச் சென்றார் சத்தியமூர்த்தி. வீட்டிற்கு வந்த காந்தியடிகளுக்கு வெள்ளி டம்ளரில் பால் தரப்பட்டது. “”பாலோடு இந்த டம்ளரும் எனக்குத்தானே” என்று மகாத்மா கேட்க, முகமலர்ச்சியோடு அதைத் தந்தார் கே.பி.எஸ். அதை ஏலமாக விட்டு நிதியாக காங்கிரஸ் இயக்கத்திற்கு அளித்தார் மகாத்மா.


1935-ஆம் ஆண்டு வெளியான “நந்தனார்’ திரைப் படத்திற்குப் பிறகு 1940-ல் வெளியான “மணிமேகலை’ திரைப்படத்தில் நடித்திருந்தார் கே.பி.எஸ். அதற்குப் பின் எந்தப் படத்திலும் நடிக்க அவர் ஒப்புக் கொள்ளவில்லை. கச்சேரி, தேசியப் பாடல்கள் என்று அவரது வாழ்க்கைப் பயணம் நடைபெற்றது.

1940-க்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த கே.பி.எஸ். மீண்டும் 1948-ல் நடிக்க ஒப்புக் கொண்ட படம் “ஔவையார்’. அந்த நாட்களில் “ஔவயார்’ நாடகத்தை டி.கே.எஸ். சகோதரர்கள் நடத்தி வந்தனர். அதில் டி.கே. சண்முகம் ஔவையாராக நடித்தார். மிகச் சிறப்பாக மேடைகளில் ஔவையாராக நடித்த அவரைத்தான் “ஔவையார்’ படத்தில் நடிக்க முதலில் அணுகினார் எஸ்.எஸ். வாசன்.


ஆனால் டி.கே. சண்முகம் அவர்கள் “”நான் பெண் வேடம் போட்டது நாடக மேடைக்கு மட்டுமே சரி. சினிமாவிற்கு சரிப்பட்டு வராது. ஒரு பெண் இந்தப் பாத்திரத்தில் நடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும்” என்றார். “”அப்படியென்றால் யாரை நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று நீங்களே கூறுங்கள்” என்று எஸ்.எஸ். வாசன் கேட்க, டி.கே. சண்முகம் சொன்ன பெயர்தான் கே.பி. சுந்தராம்பாள்.

ஔவையாராக நடிப்பதற்கு ஏற்ற தமிழ் உச்சரிப்பும், கணீர்க் குரலும் உள்ள ஒரே நபர் கே.பி.எஸ். அவர்கள்தான். அவர் ஔவையாராகத் தோன்றினாலே போதும்  நடிக்கவே தேவையில்லை” என்று டி.கே.எஸ். சொல்ல அதை ஏற்றுக் கொண்டார் எஸ்.எஸ். வாசன்.

கே.பி.எஸ். அவர்களிடம் யார் மூலம் தொடர்பு கொள்வது என்று சிந்தித்த வாசன் அவர்களுக்கு “ஹிந்து’ சீனிவாசன் நினைவு வந்தது. சீனிவாசன் வாசனுக்கு நல்ல நண்பர். கே.பி.எஸ். அவர்களுக்கோ அவர் வழிகாட்டியாக இருந்தார். சீனிவாசன் அவர்கள் துணையுடன் வந்த வாசன் கேட்க தட்டாமல் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார்.
 கே.பி.எஸ் படத்தில் நடிக்க வருடம் ஒரு லட்ச ரூபாய் சம்பளம், அது தவிர மாதம் ஒரு தொகை தர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த லட்ச ரூபாய் சம்பளத்தின்  மதிப்பு எவ்வளவு என்பதை  வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இன்னொரு விவரத்தையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த நாளில் ஜெமினி ஸ்டூடியோவை வாங்க வாசன் கொடுக்க பணம் 86, 496 ரூபாய்தான்.

1947-ல் தொடங்கப்பட்ட “ஔவையார்’ படம் 15.8.1953 அன்று சுதந்திரதின வெளியீடாக வெளிவந்தது. ''''படம் முடிவடைந்ததும் எஸ்.எஸ். வாசன் அவர்கள் அப்போது ஜெமினியில் பொது மேலாளராக இருந்த நம்பியாரிடம் காசோலையைக் கொடுத்தனுப்பி ஆறு வருடத்துக்குரிய தொகையை அம்மையாரையே எழுதிக் கொடுக்கும்படி சொல்லி அனுப்பியிருந்தார்.

ஆனால் சுந்தராம்பாள் அந்த காசோலையில் பெருந்தன்மையுடன் நான்கு லட்சும் ரூபாயை மட்டும் பூர்த்தி செய்து கொள்வதாக அவரிடம் சொன்னார்'' என்று '''' இசைஞானப் பேரொளி பத்மஸ்ரீ சுந்தராம்பாள்'' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் பாஸ்கரதாசன். ஆனால் '''' இது ராஜபாட்டை அல்ல” என்ற தனது புத்தகத்தில் நட்சத்திரத்தின் பெயரை மட்டும் குறிப்பிடாமல் இந்த சம்பவத்தைப் பற்றி மட்டும் சிவகுமார் எழுதியுள்ள தகவல் பாஸ்கரதாசன் கூற்றுக்கு மாறுபட்டதாக இருக்கிறது.


ஜெமினி உருவாக்கிய ஒரு படம் முடிய ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது. படத்தின் கதாநாயகிக்கு (ஆண்டுக்கு) ஒரு லட்சம் சம்பளம் பேசி ஓராண்டுக்குள் படத்தை முடிப்பதாக ஒப்பந்தம். திட்டமிட்ட காலவரைக்குள் படம் முடியவில்லை. காலம் கடந்தாலும் மாபெரும் படைப்பாக அது உருவாகியது.


தனது அந்தரங்கச் செயலாளர் பி.பி. நம்பியாரை அழைத்தார் வாசன். ''''ஹீரோயினுக்கு ஓராண்டில் படம் முடிப்பதாகப் பேசி ஒரு லட்சம் சம்பளம் முடிவு செய்தோம். இப்போ ஏழு வருஷம் ஆயிடுச்சு. அதனால நாம கொஞ்சம் கூட்டி நாலு லட்சம் தருவோம்'''' என்றார்.



பேராசை பிடித்த ஹீரோயின் ''''ஐயறு சொன்ன சொல் தவறமாட்டாரு. ஏழு வருஷம் வேலை செஞ்சிட்டு நாலு லட்சம் சந்தா எப்படி?'''' என்று கேள்வி கேட்டார்.


உடனே நடிகையின் விருப்பப்படி ஏழு லட்சம் தர சம்மதித்தார். ஆனால் அவர் பேராசையைக் கண்டிக்கும் வகையில் ஓராண்டு வருமானம் 7 லட்சம் என்பது போல எழுதி வாங்கிக் கொண்டார்.


வருமானவரி இலாக்காவுக்கு விபரம் தெரிந்தால் ஏழு லட்சத்தில் சுமார் 4.5 லட்சம் ரூபாய் வரியாகப் போய்விடும்” என்பதைப் பின்னர் அறிந்த நடிகை தன் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்க, உடனே ஏழாண்டுக்கும் வருமானத்தைப் பிரித்து எழுதிக் கொடுத்தார்.”

மேற்கண்டவாறு தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் சிவகுமார்.




''ஔவையார் படத்தைப் பார்த்த டி.கே, சண்முகம் ''நீங்கள் நடிக்கவில்லை, ஔவையாராகவே வாழ்ந்திருக்கிறீர்கள்'' என்று கே.பி.எஸ் ஐ புகழ்ந்தார்.

''ஔவையார் திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடித்த படம் கலைஞர் கதை வசனத்தில் உருவனா  ''பூம்புகார்'' என்ற படம். இந்த படம் எடுக்க முடிவு ஆனவுடன் அதில் வரும் கவுந்தியடிகளாக கே.பி.எஸ்  நடத்தால் தான் நன்றாக வரும் என்று அவரை ஒப்பந்தம் செய்ய முடிவெடுதத கலைஞர்., எஸ்.எஸ். ராஜேந்திரனையும் அழைத்துக்கொண்டு கே.பி.எஸ். அவர்களின் சம்மதம் பெற கொடுமுடி புறப்பட்டார். அவர்கள் கோரிக்கையை கேட்டவுடன் முதலில் தனது மறுப்பைத் தெரிவித்தார் சுந்தராம்பாள்.


''''கவுந்தியடிகளாக நீங்கள் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும். பொருத்தமாகவும் இருக்கும்'''' என்று இருவரும் வற்புறுத்த “”நான் கடவுள் மீது தீவிர பக்தி கொண்டவள், நீங்களோ திராவிடர் கழக கொள்கையுடையவர்கள். எப்படிப் பொருத்தமாக இருக்கும்?” என்று தேங்காய் உடைப்பது போல் பட்டென்று உடைக்கிறார் கே.பி.எஸ்.


கலைஞரும் விடவில்லை. ''''நாங்கள் எடுப்பது கடவுள் படமோ, கட்சிப் படமோ அல்ல. கற்புக்கரசி கண்ணகி பற்றிய படம். நீங்கள் நடிக்கப் போவது சமணத்துறவி வேடம்” என்கிறார்.


''''சரி, மகனே. பழனிக்குச் சென்று முருகனின் உத்தரவு பெற்ற பிறகுதான் நடிப்பது பற்றி நான் முடிவு சொல்ல முடியும்'' என்று இறுதியாக கே.பி.எஸ். சொல்ல, ''''முருகனிடம் கேட்கும்போது கருணாநிதி கேட்டதாகச் சொல்லுங்கள். என் கோரிக்கை என்பதால் முருகன் மறுக்கமாட்டார். உடனே ஒப்புதல் அளித்து விடுவார்” என்று விளையாட்டாகச் சொல்கிறார் கலைஞர்.


அவர் விளையாட்டாகச் சொன்னது பலிக்கிறது. சில நாட்களில் கொடுமுடியில் இருந்து கலைஞருக்குத் தகவல் வருகிறது. ''''முருகன் உத்தரவு கொடுத்து விட்டான்'' என்று.


தன்னுடைய லட்சியத்தில் யாருக்கும் விட்டுக் கொடுக்காத போக்கை கே.பி.எஸ். கொண்டிருந்தார்.


''''கடவுளை நிந்திக்கும் பாடலைப் பாடமாட்டேன்'''' என்று ''''பூம்புகார்'''' படப்பிடிப்பில் நிர்த்தாட்சண்யமாக அவரால் சொல்ல முடிந்திருக்கிறது. மாற்றப்பட்டது பாடல் வரிகள்” எனது தனது ''''வியப்பளிக்கும் ஆளுமைகள்'''' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் வெங்கட் சாமினாதன்.


“பூம்புகார்’ திரைப் படத்திற்குப் பிறகு கே.பி.எஸ். நடித்த படங்களில் குறிப்பிடத்தக்க படங்கள் என்று ''''திருவிளையாடல்'''', ''''துணைவன்''' ஆகிய படங்களைச் சொல்லலாம். இவைகள் தவிர “மகாகவி காளிதாஸ்’, “கந்தன் கருணை’, ''உயிர் மேல் ஆசை'', ''சக்திலீலை'', ''காரைக்கால் அம்மையார்’, ''திருமலை தெய்வம்’ (கடைசி படம்) ஆகிய படங்களிலும் நடித்தார் அவர்.


கே.பி.எஸ். நடித்து வெளிவராத ஒரே படம் சிவாஜி, தேவிகா ஜோடியாக நடித்த ''ஞாயிறும் திங்களும்’. படம் ஏழாயிரம் அடி வளர்ந்த நிலையில் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சடகோபன் இறந்துவிட படமும் நின்று போனது.


அன்று சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்.கே. தியாகராஜ பாகவதரை ''ஏண்டாப்பா'' என்றும், கலைஞர் கருணாநிதியை  ''மகனே'' என்றும் காங்கிரஸ் தலைவர் சத்யமூர்த்தியை   ''அண்ணா'' என்றும், அழைக்கும் உரிமை பெற்றிருந்த கே.பி. சுந்தராம்பாள் உடல்நிலை 1980-ஆண்டு நலிவடையத் தொடங்கியது.

24.9.80 அன்று இரவு 9.30 மணிக்கு அறிஞர் அண்ணாவால் “”கொடுமுடி கோகிலம்” என்று அழைக்கப்பட்ட கே.பி.எஸ். இயற்கை எய்தினார். உடன் தகவல் அன்றைய முதல்வரான எம்.ஜி.ஆர். அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கை நடத்த உத்தரவிடும் எம்.ஜி.ஆர். அப்போது நடிகர் சங்கப் பொறுப்பிலிருந்த மேஜர் சுந்தரராஜனை அழைத்து செலவுகளுக்கு தன் சொந்தப் பணத்தைத் தந்துதவினார்.


கலைஞர் காலையில் கே.பி.எஸ். அவர்கள் வீட்டுக்கு வந்து மலர் அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்ல, நடிகர் சங்கத்தில் 25.9.80 அன்று காலை முதல் மாலை வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கே.பி.எஸ். அவர்களின் உடல் வைக்கப்பட்டது. அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், சிவகுமார், பி.எஸ். வீரப்பா, எஸ்.வி. சஹஸ்ரநாமம், இயக்குநர்கள் முக்தா சீனிவாசன், பா. நீலகண்டன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.




கலைஞர் வானொலியில் இரங்கற்பா பாடினார்




''''கலை உலகில் தமிழ் இன்பம் கொட்டக் கொட்ட


கொடிகட்டிப் பறந்த கோகிலம் மறைந்ததோ''''
 
இசையால் தமிழுலகத்தை ஈர்த்த பெண் கலைஞர் எவ்வளவு கொடுமையில் வாழ்ந்தார் என்பதை அறியமுடிகின்றது. அத்தனைக் கொடுமையிலும் இசைப்பணியை பல்வேறு போராட்டுங்களுக்கு இடையும் தொடர்ந்தார். வாழ்க அவர் புகழ்.


------ முற்றும்-----



No comments: