Pages

Tuesday 8 April, 2014

தி.மு.க...தி.க மாறுபாடு தெரியும்...அறிஞர் அண்ணா.




 திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் வெவ்வேறாகப் பிரிந்து இருந்தாலும், இன்றையதினம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திரைக் கிழிக்கப்பட்டுவிட்டது.  அவர்களூடைய உண்மை சுயரூபத்தை நாங்கள் கண்டுவிட்டோமென்று நிதி அமைச்சரவர்கள் கூறினார்கள்.       
                                                                                                                                                                       எங்கள் சுயரூபத்தை நாங்கள் அவ்வளவு சுலபமாக காட்டிவிட மாட்டோம்.                 

நிதி அமைச்சரவர்கள் எங்கள் சுயரூபத்தை கண்டுபிடித்ததாக இருந்தாலும், அவரே திராவிடர் கழகம் திராவிட முன்னேற்றக் கழகம் கொள்கையில் வேறுபாடு, இருப்பதை, திராவிட முன்னேற்றக் கழகம் நடத்துகிற ''நம் நாடு'' பத்திரிகையிலும் நான் எழுதுகின்ற எழுத்துக்களிலும் குறை காணுவதற்கு எதுவுமில்லை என்று எடுத்துச் சொன்னதிலிருந்து,  நாங்கள் ஒப்புக் கொள்ளத் தக்க கொள்கைகளுடன் நல்ல முறையில்…..                                                   (அமைச்சர்  குறுக்கீடு) 
நிதி அமைச்சர் சி சுப்பிரமணியம்;  குறை காணுவதற்கில்லை என்பதில்லை.  சட்டப் பூர்வமாக நடவடிக்கை எடுத்துக் கொள்வதற்கு அதிலே இடமில்லை.

                                                                                                                              அண்ணா; சட்டப்  பூர்வமாக நடவடிக்கை எடுத்துக் கொள்வதற்கு அதில் இடமில்லை என்று சொல்கிறார்கள்.  அது என்னுடைய வாதத்திற்கு வலுவளிப்பது தான்.  ஆகையால் ''சட்டப்பூர்வமான முறையிலே இவைகளை எடுத்துச் சொல்வது என்பது திராவிட முன்னேற்றக் கட்சியின் கொள்கை. 

சட்டத்திற்கு விரோதமான முறையில் சட்டத்தைப்பற்றிக் கவலைப் படாமல் சொல்வது திராவிடர் கட்சியின் கொள்கை'' என நிதியமைச்சரவர்கள் கருதுகிறார்.

இது ஒன்றைப் பார்த்தாலும் திராவிட முன்னேற்றக் கட்சியினருக்கும், திராவிடர் கட்சியினருக்குமுள்ள மாறுபாடு தெரியும். 
முரண்பாடு என்பதும் மாறுபாடு என்பதும், வேறுபாடு என்பதும் தமிழில் ஒரேப் பொருளைக் குறிக்கின்ற சொல்லாகப் பொதுவாகப் பார்க்குமிடத்துத் தோன்றினாலும் ஆழ்ந்து கருத்துக்களை ஆராய முற்படும் போது இவை ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமுண்டு என்பதை நான் குறிப்பிட வேண்டுமென்பதில்லை.  கனம் நிதி அமைச்சரவர்களே உணர்ந்திருப்பார்களென்று நம்புகிறேன்.                                                                                
ஆனாலும், அவர்கள் இந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கட்சியைப் பற்றி ஏதாவது பேசவேண்டுமென்று கருதியது, ஆளுகின்ற கட்சி எங்களுக்கு கொடுத்த கௌரமாகவே நான் ஏற்றுக் கொள்கிறேன்.    


.…அறிஞர் அண்ணா...தேசீய அவமதிப்பு தடுப்பு மசோதா இறுதி சொற்பொழிவு;-11-11-1957…அறிஞர் அண்ணாவின் சட்டசபை சொற்பொழிவுகள். ..தொகுதி-1..பக்கம் 153-155,156                                                                                  

No comments: