விவேகானந்தர்...
குருட்டு நம்பிக்கை என்ற பொருளில் எந்த நம்பிக்கையும் உண்மையான மதத்தில் கிடையாது.
எந்தப் பெரிய போதகரும் அப்படிப் போதித்ததில்லை.
சீரழிவின் காரணமாகத்தான் இது நிகழ்கிறது.
மூடர்கள் தாங்கள் யாராவது ஒரு பெரிய மகானின் சீடர்கள் என்று சொல்லிக்கொண்டு, அவர்களுக்கு அதற்குரிய அதிகாரம் இல்லாவிட்டாலும்கூடக் கொள்கைகளை அப்படியே நம்பும்படி மக்களுக்கு உபதேசிக்கிறார்கள்.
எதை நம்புவது? கண்மூடித்தனமாக நம்புவது மனிதனைக் கீழ்நிலைக்கே கொண்டு செல்லும்.
வேண்டுமானால், நாத்திகர்களாக இருங்கள்,ஆனால், கேள்வி கேட்காமல் எதையும் நம்பாதீர்கள்.
ஏன் உங்களை மிருக நிலைக்கு இழிவு படுத்த வேண்டும்?
அதனால் நீங்கள் உங்களை மட்டும் கெடுத்துக் கொள்ளவில்லை, சமுதாயத்தையும் கெடுக்கிறீர்கள், உங்கள் பின்னால் வரப்போகிறவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள்.
எழுந்து நில்லுங்கள், பகுத்தறிவுடன் பாருங்கள், கண்மூடித்தனமாக எதையும் நம்பாதீர்கள், நம்புவதல்ல மதம்.
மதம் என்பது இருப்பதும் ஆவதும். அதுதான் மதம். அந்த நிலையை அடைந்தால் தான் உங்களுக்கு மதவுணர்வு இருக்கிறது என்பது பொருள். அதற்கு முன்பு நீங்கள் மிருகங்களை விட உயர்ந்தவர்கள் அல்ல.
புத்தர் பெருமான் கூறியது போல், நீங்கள் கேட்டதை நம்பாதீர்கள்,
தலைமுறை தலைமுறையாக உங்களிடம் வந்த கொள்கைகள் என்பதற்காக நம்பாதீர்கள்,
பலர் கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள் என்பதற்காக நம்பாதீர்கள்,
யாரோ ஒரு மகான் சொன்னார் என்பதற்காக நம்பாதீர்கள்,
பழக்கத்தால் உங்களுக்கு பிடித்துப்போனவை என்பதற்காக நம்பாதீர்கள்,
உங்கள் ஆச்சாரியர்களும் பெரியவர்களும் சொல்கிறார்கள் என்பதற்காக நம்பாதீர்கள்.
சிந்தித்து பாருங்கள் சீர்தூக்கிப் பாருங்கள், அதனால் வருகின்ற முடிவு பகுத்தறிவுக்கு ஒத்ததாக இருக்குமானால், அது எல்லோருக்கும் நன்மை பயக்குமானால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள் அதன்படிச் செல்லுங்கள்.
விவேகானந்தர் நியுயார்க்கில் 1896 இல் ஜனவரி 5 ஆம் நாள் அன்று கிளைம்ஸ் ஆப் ரிலிஜியன் (The claims of Religion) என்ற பெயரில் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி ...தகவல் திரட்டு ஸ்ரீ ராமகிருஷண மடம், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அச்சகம், மைலாப்பூர், சென்னை-4
No comments:
Post a Comment