Pages

Friday, 5 August, 2011

அ.தி.மு.க.வின் 34 வயது பள்ளி மாணவர் கொடுத்த பொய் கேஸ்!

   திரண்டு வந்த தி.மு.க.வினர்!


  புதிய ஆட்சி அமைந்து இரண்டரை மாதத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக இத்தனை வலிமையான ஒரு ஆர்ப்பாட்டத்தை எதிர்க்கட்சி நடத்தும் என்பதை இரு தரப்பையும் கவனித்து வரும் அரசியல் பார்வையாளர்களே எதிர்பார்க்கவில்லை.  பொய்யாக நில அபகரிப்பு வழக்குப் போடும் ஜெ. அரசைக் கண்டித்து தி.மு.க. சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்பாட்டம் என தலைமைக்கழகம் அறிவித்தபோது, அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்கிறது கார்டன் வட்டாரம்.

     ''இந்தத் தேர்தலில் சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்துகூட தி.மு.கவுக்குக் கிடைக்கவில்லை.  அதனால் அவர்கள் ரொம்பவும் சோர்ந்து போயிருப்பார்கள் என்பதுதான் எங்கள் கணக்கு.  தினந்தோரும் பாயும் வழக்குகளால்  தி.மு.க.வினர் திக்குமுக்காடிப் போயிருப்பார்கள் என்றும், அதனால் போராட்டக் களத்திற்கு வருவதற்கே பயப்படுவார்கள் என்றும் நினைத்திருந்தோம்..  எங்களுடைய கணிப்பு, தமிழகம் முழுவதும் அதிகபட்சம் 10 ஆயிரம் அல்லது 15 ஆயிரம் பேர்தான் போராட்டத்திற்கு வருவார்கள் என நினைத்தோம்.  எங்கள் கணக்குப் பொய்யாகிவிட்டது.'' என ரகசியமாக நம்மிடம் ஒப்புக்கொள்கிறார்கள் அ.தி.மு.க.வின் சீனியர்கள்.

     ஆகஸ்டு 1-ந் தேதி வடசென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலும் மற்ற மாவட்டங்களில் மா.செக்கள்-முன்னணியினர் தலைமையிலும் நடந்த போராட்டத்திற்கு அனுமதி கொடுக்காத போதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் திரண்டு வந்திருந்தனர்.  தடையை மீறி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால், கைது செய்ய வேண்டிய போலீசார், போதிய வாகன வசதி இல்லாமல் பெயருக்கு சில உ.பி.க்களை மட்டும் கைது செய்ய மற்ற உ.பி.க்களோ போலீஸ் வாகனங்களை மறித்து, 'ஒட்டுமொத்தமாக கைது செய்... கணக்கை குறைத்துக்காட்டி ஜெ.விடம் பெயர் வாங்க நினைக்காதே' என்று தமிழகமெங்கும் போலீசாருடன் வாக்குவாதம் செய்தபடியே இருந்தனர்.

     ஒவ்வொரு மாவட்டத்திலும் 70, 80 வயது நிறைந்த கட்சியின் சீனியர்கள் பலரும் திரண்டு வந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.  கட்சியின் மகளிரணி, இளைஞரணி உள்ளிட்ட பல அணிகளைச் சேர்ந்தவர்களும், தடையை மீறி வந்து கைதானபடியே இருந்தார்கள்.  கைது எண்ணிக்கை போலீஸ் கணக்குப்படியே 50 ஆயிரத்தைத் தாண்ட, அவர்களை அடைத்து வைக்க தமிழக சிறைகளில் இடமில்லை என்பதால் அனைவரையும் விடுவிக்கும்படி மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது.

      வெற்றிகரமான போராட்டத்தை தி.மு.க. நடத்தி முடித்திருக்கும் நிலையில், நில அபகரிப்பு வழக்குகள் தொடர்பாக பொதுமக்களிடம் எழும் கேள்விகளை தி.மு.க. இளைஞரணி துணைச் செயலாளரும், முன்னாள் அரசு குற்றவியல் கூடுதல் வழக்கறிஞருமான அசன் முகமது ஜின்னாவிடம் முன் வைத்தோம்.  சட்டத்தை சுட்டிக்காட்டி, விரிவாக பேசத்தொடங்கிறார் ஜின்னா.


     * நில அபகரிப்பு விவகாரத்தில் ஈடுபட்ட தி.மு.க. முன்னாள் அமைச்சர் உள்பட தி.மு.க.வினர் பலரையும் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது அரசு.  இது சரியான நடவடிக்கைதான் என்று மக்களிடம் பரவிலாக ஒரு கருத்து எதிரொலிக்கறதே?

      இது பொய் வழக்குதான் என்பதை தலைவர் கலைஞரும், தளபதியும் ஆதாரங்களோடு சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.  பிறகெப்படி இது சரியான நடவடிக்கை என்றால் சட்டத்தின் மீதும் உண்மையின் மீதும் நம்பிக்கைக் கொண்டிருப்பவர்கள் சிரிப்பார்கள்.  யார் வேண்டுமானாலும் யார் மீதும் காவல்துறையிடம் புகார்  கொடுக்கலாம்.  கொடுத்து வடவும் முடியும்.  ஆனால் அந்த புகாரினை முறைப்படி விசாரித்து அதில் உண்மையிருக்கும் பட்சத்தில்தான் வழக்குப்பதிவு செய்யவேண்டும்.  அதுதான் சட்டப்படியான வழிமுறை.  ஆனால் தமிழக காவல்துறை தற்போது அப்படித்தான் செயல்படுகிறதா?  புகார்கள் உண்மைதானா என்று விசாரித்து அறிந்து கொள்ளாமலே கைது செய்கிறார்கள்.  இது சட்டப்படி தவறானது.  பொதுவாக குற்றவாளியைத்தான் போலீஸார் வலைவீசித் தேடுவார்கள்.  புகார்தாரார்களை வலைவீசிப் பிடித்துக்கொண்டிருக்கிறது போலீஸ்.  தி.மு.க.வினரில் யாரைப்பிடித்து உள்ளே போட அரசு நினைக்கிறதோ, அதற்கேற்ப புகார்தாரர்களைப் பிடித்து அவர்களிடம் எழுதி வாங்கிக்கொள்கிறார்கள்.  அல்லது இவர்களே எழுதிக்கொண்டு அவர்களிடம் கையெழுத்து மட்டும் வாங்கி கொள்கிறார்கள்.  இதைத்தான் போலீஸ் செய்து கொண்டிருக்கிறது.  பிரதமர் மீதும், முதல்வர் மீதும் ஒருவர் புகார் தந்தால் அதை பதிவு செய்துவிடுவார்களா?  புகார் வந்துடுச்சே... அதன் உண்மைத் தன்மையை விசாரிக்கத் தேவையில்லை என்று நினைத்து அவர்களை கைது நடவடிக்கை எடுத்துவிடுவார்களா?

     *   நில விவகாரத்தில் மிரட்டல், அடி உதை என இறங்கியிருப்பதால்தான் கிரிமினல் வழ்க்காக மாறுகிறது என்கிறார்களே?

      நம்ம போலீஸார்தான் ரொம்ப திறமைசாலிகள்.  அதனால் சிவில் வழக்குகளுக்கு கிரிமினல் சாயம் பூசி கிரிமினல் வழக்குகளாக மாற்றி எஃப்.ஐ.ஆர். போடுகிறார்கள்.  அதாவது... ஒரு சொத்து தொடர்பாக இரண்டு பேருக்குள் தகராறு எனில், இதில் யாருக்கு எதிராக வழக்கு போடணும் என்று முடிவு செய்து கொண்டுவிட்டு மற்றொருவரிடம் 'இவர் என்னை மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டுவிட்டார்.  அல்லது எனது நிலம் தொடர்பாக போர்ஜரி டாகுமெண்டுகளை தயாரித்து என் நிலத்தை சொந்தம் கொண்டாடுகிறார்' என்று புகார் வாங்கிக்கொள்வார்கள் காவல்துறையினர்.  மிரட்டல், போர்ஜரி டாகுமெண்ட் என்கிற வார்த்தைகள் இடம் பெற்று விட்டாலே அது கிரிமினல் வழக்காக மாறிவிடுகிறது.  சிவில் வழக்குகளை, கிரிமினல் வழக்காக மாற்ற முயற்சிக்கக் கூடாது என்று பல வழக்குகளில் காவல்துறையினரை எச்சரிக்கை செய்திருக்கிறது உச்சநீதிமன்றம்.  இந்த உத்தரவையெல்லாம் காவல்துறை எங்கே மதிக்கிறது?  இப்படி காவல்துறையினர் நடந்துகொள்வதால்தான்... இரண்டு பேருக்கும் இடையில் சுமூகமாக நடந்து முடிந்திருக்கும் நில விவாகாரம் கூட இப்போ புகாராக போலீஸ் ஸ்டேஷன் போகிறது.  அதாவது... 5 வருடத்துக்கு முன்பு ஒருவரிடமிருந்து 10 லட்சத்துக்கு ஒரு நிலத்தை இன்னொருவர் வாங்கிக் கொள்கிறார்.  அந்த நிலத்தின் மதிப்பு தற்போது 20 லட்சமாக மாறியிருக்கும் உடனே நிலத்தை விற்றவர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒடோடிப்போய், ' என் நிலத்தை இவர் மிரட்டி அபகரித்துக்கொண்டார்' என்று புகார் தெரிவிக்கிறார்.  அபகரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு உரியவர்களுக்கு தருவோம் என்று அரசு அறிவித்த அறிவிப்பால் இப்படிப்பட்ட புகார்கள் தான் அதிகரித்து வருகிறது. 


       *   எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றன.  அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது என்று வீரமணி, ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் சொல்லிவரும் நிலையில், தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போடப்படவில்லை என்கிறாரே ஜெயலலிதா?

     ஜெயலலிதா அரசு போட்டு வருவது பொய் வழக்குகள்தான் என்பதை பொதுக்கூட்டத்திலும் ஆர்பாட்டத்திலும் தளபதி விவரித்திருக்கிறார்.  திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளரை கைது செய்துள்ளது போலீஸ்.  பாஸ்கர் என்பவர் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம் என்கிறார்கள்.  சரி... பாஸ்கர் தனது புகாரில் என்ன சொல்லியிருக்கிறார்?  அந்த புகாரில், 'என் பையன் தனிராஜா ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்.  பள்ளிக்குள் தி.மு.க. மா.செ. கலைவாணன் தலைமையில் ஒரு கும்பல் வெறித்தனமாக கூச்சல் போட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தது.  அவர்களின் வெறித்தனத்தை பார்த்ததும் நாங்கள் அசம்பாவிதம் நடக்குமோ! என பயந்து நாங்கள் வெளியே ஒடி வந்துவிட்டோம். எங்களது கல்வி இவர்களால் பாதிக்கப்பட்டது.  மாணவர்கள் படிப்பையும் எனது படிப்பையும் பாதிக்கச் செய்து, அத்துமீறி நடந்த இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று பாஸ்கரன் பெயரில் புகார் உள்ளது.  பையனும், தானும் அந்தப் பள்ளியில் படிப்பதாக புகார் தெரிவிக்கறது.  பையன் ஒன்பதாம் வகுப்பு படிப்பதால் பாஸ்கருக்கு குறைந்த பட்சம் 34 வயதிருக்கலாம்.  34 வயதில் பள்ளி மாணவராக ஒருவர் இருக்க முடியுமா?  ஆக, இதை சாதரணமாக பார்த்தாலே புகாரை போலீஸாரே எழுதிக்கொண்டு கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள் என்று தெரியவில்லையா?  அதே போல, தென் சென்னை மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகனை திருப்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.  இதில் புகார்தார் டுமலை சீனிவாசன் என்பவர்.  ஜூலை 18-ந் தேதி நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி.பிரவேஷ்குமார், ஒரு நூற்பாலை மோசடி (12.50 கோடி) தொடர்பாக உடுமலை சீனிவாசன் என்பவரை தேடி வருகிறோம் என்றும் அவர் தேடப்படும் குற்றவாளி என்றும் அறிவிக்கிறார்.  இது நாளிதழ்களிலும் செய்தியாகியிருக்கிறது.  அந்த சீடிவாசன்தான் ஜூலை 28-ந் தேதி திருப்பூரில் அன்பழகனுக்கு எதிராக புகார் கொடுக்கிறார்.  நாமக்கல் எஸ்.பி. யால் தேடப்படும் குற்றவாளியென்று அறிவிக்கப்பட்ட சீனிவாசனை, திருப்பூர் போலீஸார் கைது செய்யாமல் அவரிடம் புகார் எப்படி வாங்கினார்கள்?  இந்த இரண்டு உதாரணங்களை வைத்து பார்த்தாலே... பொய்வழக்குகள் என்பது புரிய வருகிறதுதானே!  பொய் வழக்கு போடவில்லை என்கிற ஜெயலலிதா, அவரது அமைச்சரவையில் உள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது நில அபகரிப்பு புகார் வந்ததே... தி.மு.க.வினரை உடனடியாக கைது செய்வதுபோல உடனே அதை பதிவு செய்து அக்ரியை கைது செய்திருக்க வேண்டியது தானே?  அப்படிச் செய்திருந்தால் தானே தி.மு.க.வினர் மீது பொய் வழக்குப் போடவில்லை என்பது நிரூபணமாகும்.  இப்பொழுது மக்களுக்குத் தெரிந்துவிட்டதே... பழிவாங்கும் செயல்தான் என்று.  அதனால்தானே, தமிழகம் முழுவதும் மக்கள் ஆதரவுடன் பெரும் ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது.

---சந்திப்பு : ஆர்.இளையசெல்வன்..நக்கீரன் 2011 ஆக. 03-05

*******************
பொது ஜனம்; அ.தி.மு.க. கட்சிக்காரங்க எல்லாம் 30 வயசுக்கு மேலதான் பள்ளிக்கூடத்துக்கே படிக்கப் போவாங்க போல இருக்கே! 

பொது ஜனம்; சரி, அந்த வயசுல  கூடவா சமச்சீர் கல்வியைப் பத்தி தெரியாம ''அம்மா'' கிட்ட ''ங்கா'' குடிச்சுகிட்டு இருப்பாங்க! கருமம் யா!

பொது ஜனம்;போராட்டத்துனால கல்வி பாதிக்கப்பட்டதுன்னு 34 வயது அ.தி.மு.க குழந்தை ரொம்பக் கவலைப்படுதே! 

பொது ஜனம்;அ.தி.மு.க. குண்டு அம்மாவின் சம்ச்சீர் கல்வி தடை சட்டத்தால ஒன்னேகால் கோடி,  குழந்தைங்க, கல்வி கிடைக்காமப் பாதிக்கப்பட்டு இருக்காங்களே! இத்தாப் பெரிய  (34 வந்து) குழந்தைக்கு இது கூடத் தெரியலையே?

No comments: