Pages

Wednesday, 14 September, 2011

நீறு பூத்த நெருப்பு ! உயிர்களை பறித்த வன்முறை!

   


 
தேவேந்திர குல வேளாள மக்களின் குலதெய்வமாகவும், தீண்டாமைக்கு எதிரானக் குறியீடாகவும் போற்றப்படும் தியாகி இம்மானுவேல் சேகரனின் 54-வது நினைவுதினத்தை மிகவும் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.

     "தொலைதூரத்திலிருந்து அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் எந்த உதவியும் செய்வதில்லை.  கடைகளை கட்டாயப்படுத்தி போலீசே அடைக்கச் சொல்வதால் எங்கள் மக்களுக்கு குடிக்கத் தண்ணீர்கூட கிடைப்பதில்லை"  என்று பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஜீவன்குமார் சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். 

     இதற்கு உயர்நீதிமன்றம், ராமநாதபுரம் எஸ்.பி.யிடம் விளக்கம் கேட்டபோது, "நாங்கள் அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளோம், கடைகளை வியாபாரிகளே அடைத்துவிடுகிறார்கள்" என்று சொன்னது எஸ்.பி. தரப்பு.

      இந்த நிலையில்தான் விழா நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ நடத்திய கூட்டத்தில் பேசிய பரமக்குடியைச் சேர்ந்த தலித் தலைவர் ஒருவர், "எங்கள் விழாவுக்கு பத்திரிகையாளர்கள் வரக்கூடாது.  தேவர் குரு பூஜைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் கால் பகுதியைக் கூட இம்மானுவேலுக்கு கொடுப்பதில்லை.  அதனால் அவர்கள் வரக்கூடாது" என்று கடுமையாகப் பேசியுள்ளார்.  இந்த நிலையில் தான் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ராமநாதபுரம் கலெக்டர், எஸ்.பி.யிடம் "எங்கள் தேவர் பெயருக்கு முன்னால் போடப்படும் 'தெய்வத் திருமகன்' எனும் அடைமொழியை இம்மானுவேல் பெயருக்கு முன்னால் போட்டு எங்களை வம்புக்கு இழுக்கிறார்கள்" என்று முறையிட்டனர்.

       இதற்கு எந்த பதிலையும் கூற முடியாத மாவட்ட நிர்வாகம், விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அவர்களை அனுப்பி வைத்தது.  இப்படியே டென்ஷன் நீடித்துக்கொண்டிருந்த நிலையில் தான் கடந்த 9-ந்தேதி கமுதி அருகே பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த +1 மாணவன் பழனிக்குமார், நாடகம் பார்த்துவிட்டு திரும்பும் வழியில் படுகொலை செய்யப்பட்டார்.  இவர் தேவேந்திர சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், டென்ஷன் இன்னும் அதிகமானது.  போலீஸ் போர்ஸைப் போட்டு, மக்களின் கொந்தளிப்பை அடக்கி வைத்தனர்.

      குருபூஜை பாதுகாப்புக்காக, இதே மாவட்டத்தில் பணிபுரிந்த எஸ்.பி.க்களான செந்தில்வேலன், அனில்குமார், கிரி ஆகியோரும் வரவழைக்கப்பட்டனர்.

      11-ந் தேதி அதிகாலையிலிருந்து போலீசிடம் வாங்கிய அனுமதியின்படி ஒவ்வொரு அமைப்பாக வந்து அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தனர்.  ஒருநாள் முன்பாக வந்த டாக்டர் ராமதாசும் அஞ்சலி செலுத்திவிட்டு, "இம்மானுவேல் தினத்துக்கு தொடர்ந்து வருவது நாங்கள்தான், இது இனி அரசு விழாவாக நடத்த தமிழக அரசு உத்தரவிடவேண்டும்" என்று கூறிவிட்டுச் சென்றார்.


      இதையே அஞ்சலி செலுத்த வந்தவர்களும் "நாங்க ஓட்டுப்போட்டுதான் ஜெயலலிதா முதலைமைச்சரா வந்திருக்கு, இதை அரசு விழாவா அறிவிக்கணும், இல்லேன்னா கிருஷ்ணசாமியை இங்க வரவிடமாட்டோம்" என்று கோஷமிட்டபடி சென்றனர்.  தி.மு.க. சார்பில் சுப.தங்கவேலனும், அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயகுமாரும் வருகை தந்தனர்..  மதியம் 12 மணிவரை அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அமைதியாகப் போய்க்கொண்டிருந்தது.  அந்த நேரத்தில்தான் வல்லநாட்டில் ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் பரவ, அஞ்சலி செலுத்த வந்த பிற அமைப்பினரும், 'ஜான்பாண்டியனை விடுதலை செய்யவில்லையென்றால் தமிழ்நாடே பத்திக் கொண்டு எரியும்' என்று போலீஸ் முன் கோஷம் போட்டனர்..  சிறிது நேரத்தில் அஞ்சலி செலுத்த வரும் கூட்டமும் குறைந்தது.  'அஞ்சுமுக்கு ரோட்டில் சாலை மறியல் நடக்கிறதாம்' என்ற தகவல் பரவ...ஆங்காங்கே நின்ற மக்கள் திரளாக அங்கு சென்றனர்.

      ரெண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் அஞ்சுமுக்கு ரோட்டில் அமர்ந்து, ஜெயலலிதாவுக்கு எதிராகவும், டாக்டர்.கிருஷ்ணசாமிக்கு எதிராகவும் கோஷமிட்டபடி இருக்க... அந்த இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த டி.ஜ.ஜி. சந்தீப் மிட்டல், ஏ.சி செந்தில்வேலன் மிகவும் கெஞ்சல் தொனியில் அவர்களைக் கலைந்து செல்லச் சொல்கின்றனர்.  மதுரை மாவட்டம், சிவகங்கை மாவட்டம், விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட வாகனங்கள் நுழையும் பகுதி ஐந்துமுக்கு ரோடு என்பதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்க ஆரம்பித்தன.  அதில் வந்தவர்களும் இறங்கி சாலையில் அமர ஆரம்பித்தனர்.  பக்கத்து ரயில்வே டிராக்கில் கிடந்த கற்கள் குவியல் குவியலாக கூட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டது.  போலீஸ் கலைந்து செல்லும்படி கடுமை காட்ட, அவர்களை நோக்கி கற்கள் பறந்து வர ஆரம்பித்தன.  அதில் டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல் தலையில் ரத்தம் வடிய ஆரம்பித்தது, அவர் கீழே விழுந்தார்...தொடர்ந்து வந்த கற்களால், செந்தில்வேலன் காலில் காயம்பட்டு ரத்தம் வடிந்துக்கொண்டிருந்தது.  டி.எஸ்.பி. கணேசன், கமுதி எஸ்.ஐ. தங்கமுனியசாமி, ஐம்பதுக்கும் அதிகமான போலீஸ்காரர்கள் காயமானதும், லத்திசார்ஜ் செய்யப்பட்டதில் ஐந்துமுக்கு ரோடே போர்க்களமானது.


       அந்த நேரத்தில் அதை படம் பிடிக்கச் சென்ற நக்கீரன் புகைப்படக்காரர் பாலாஜியையும், ஜூனியர் விகடன் புகைப்படக்காரர் பாண்டியையும் ஒரு கும்பல் சுற்றி வளைத்து தாக்கியது.  இருவர் கேமிராவையும் வாங்கி ரோட்டில் போட்டு உடைத்தனர்.  "நாங்கள் பத்திரிகைக்காரங்க, எங்களை ஒன்றும் செய்யாதீர்கள்" என்று இவர்கள் சொல்லியும் வெறியோடு இருந்த அந்தக் கும்பல் காதில் வாங்கவில்லை.  அவர்கள் கத்திகளை எடுத்து துரத்த, இருவரும் ஆளுக்கொரு திசையில் ஒட ஆரம்பித்தனர்.  மறுபக்கம், பெட்ரோல் குண்டுகள் வரிசையாக விழ ஆரம்பித்தன.  வஜ்ரா வாகனம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது, இதை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்திலும் பெட்ரோல் குண்டு விழ... பெரும் ஜூவாலையுடன் எரிய ஆரம்பித்தது.  போலீஸ் ஜீப், கார், கடைகள் என எல்லா இடத்திலும் நெருப்பு.  தலையில் பச்சை, சிவப்பு டர்பன் கட்டிய இளைஞர்கள் ரொம்பவும் தில்லாக நின்றபடி, கற்களை வீசிக்கொண்டிருந்தனர்.  போலீஸ் மொத்தமாக ஒரு பக்கம் சென்றால், இன்னொரு பக்கம் கல்வரக் கும்பல் தங்கள் அராஜகத்தை நடத்தினர்.  காவல்துறையினர் என்ன செய்வதென்று யோசித்த நிலையில்தான் துப்பாக்கிச் சூட்டை நடத்த ஆரம்பித்தனர்.  அதில் பரமக்குடி பன்னீர்செல்வம், ஜெயபால், கணேசன், வெள்ளைச்சாமி, தீர்ப்புகனி, முத்துக்குமார் உட்பட ஆறுபேர் ஸ்பாட்டிலேயே குண்டடிப்பட்டு விழுந்தனர்.

       துப்பாக்கிச் சூடு நடத்தியதால் மக்களின் கோபம் இன்னும் அதிகமானது.  தேவேந்திரகுல மக்கள் பெருவாரியாக வாழும் காட்டுபரமக்குடி, பொன்னையாபுரம் பகுதியில் திரண்டுவிட்டார்கள்.  பொன்னையாபுரத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளது.  அதற்குள் புகுந்த கலவரக்காரர்கள், அங்கிருந்த பெண் காவலர்களைத் தாக்க ஆரம்பித்தனர்.  காவல் நிலையத்தைக் கொளுத்த நினைத்த அவர்களை அப்பகுதி பெண்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.  நீண்ட நேர போராட்டத்திற்குப் பின், ஆயிரக்கண்க்கான போலீசுடன் சென்றுதான் அங்கிருந்த மூன்று பெண் காவலர்களை எஸ்.பி. மகேஸ்ரன், காளிராஜன் மீட்டு வந்தார்.  உடனே 144 சட்டம் அமல் படுத்தப்பட்டது.  காவல் துறையினர் மொத்தமாக ஓரிடத்தில் குவிந்தனர்.  பொன்னையாபுரம் பகுதியில் புகுந்து ஒவ்வொரு கலவரக்காரர்களைப் பிடித்து வந்து ஐந்துமுக்கு ரோட்டில்  ரவுண்டு கட்டி அடித்து துவைத்தனர்.  அதில் பத்துபேர் மூர்ச்சையாகி ரோட்டிலேயே கிடந்தனர்.

      தண்டவாளத்தை உடைத்து, ரயில்வே கேட்டை வளைத்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் போன்றோர் படம் போட்டு வைக்கப்பட்டிருந்த ப்ளக்ஸ்களை போலீசாரே அடித்து உடைத்தனர்.  ராம்நாடு- பரமக்குடி சாலையில் மரங்களை வெட்டியும், கற்களைப் போட்டும் தடுப்பு ஏற்படுத்தியிருந்தனர்.  நம்மிடம் பேசிய போலீஸ்காரர் ஒருவர், "எங்களுக்குள்ளும் ஜாதி வெறியோடு பலர் இருக்கிறார்கள்.  தேவர் குருபூஜைக்கு ஆதரவாக சிலரும், இம்மானுவேல் பூஜைக்கு ஆதரவாக சிலரும் செயல்பட்டு பிரச்சினைளை உருவாக்குகிறார்கள்.  அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்.பி.யிலிருந்து எஸ்.ஐ. வரை அதிகம் வருவது குமரி,, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சாதியினர்தான்.  அவர்களுக்கு முக்குலத்தோர், தேவேந்திரர் ரெண்டுபேரும் ஆகாது.  அவர்களே சின்ன விஷயத்தைப் பெரிதாக்கி கலவரமாக்கிவிடுகிறார்கள்" என்றார்.

     நம்மிடம் பேசிய தலித் இளைஞர், "ஜான்பாண்டியன் அஞ்சலி செலுத்த வந்தால் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது தானே, அதை விடுத்து ஏன் தடுக்கிறார்கள்?  அவர் கைதானதால் மட்டும் எங்கள் மக்கள் போராட வரவில்லை.  தொடர்ந்து எங்கள் சமூதாயம், அரசியல் கட்சிகளாலும், அதிகாரிகளாலும், மீடியாக்களாலும் அங்கீகரிக்கப்படவில்லை என்ற ஆதங்கம்தான் அவர்களை கிளர்ந்தெழ வைத்துள்ளது" என்றார்.

      பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன வழித்தடங்கள், பீஸ் கமிட்டிகள் எல்லாம் போட்ட மாவட்ட காவல்துறை.... மக்கள் திடீரென்று போராட்டம் நடத்தினால் அதை கலவரமாக்காமல் எப்படி சால்வ் செய்யலாம் என்பதைப் பற்றி மட்டும் ஏன் யோசிக்கவில்லை...? என்பது தான், இன்று ஸ்தம்பித்துப் போயுள்ள தென்மாவட்ட மக்களின் கேள்வி.

---சேகுவேரா...படங்கள் பாலாஜி & அண்ணல்...
-----நக்கீரன்..செப்..14--16,2011
************************************************************************************************
ரியாக்ஷன்!
  தியாகி இம்மானுவேல் பேத்தி ரூபா;

     ற்கனவே கடந்த வாரம் பரமக்குடியில் ஒரு சங்கத்தினர் கூடிப்பேசி கலவரத்துக்கு திட்டம் வகுத்திருக்கிறார்கள்.  செப்.11-ல் இம்மானுவேல் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.  'இதை நாம் ஏற்கக்கூடாது.  தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக அறிவித்து நடத்திவிட்டு அதன்பிறகு இம்மானுவேலுக்கு நடத்தட்டும். அதற்குமுன்பு இம்மானுவேலுக்கு விழா நடத்தவிடக்கூடாது' என்று அவர்கள் பேசியதோடு, ' நம்ம ஜாதி போலீசார் பட்டியலை ரெடிபண்ணி இம்மானுவேல் குருபூஜை அன்றைக்கு கலவரத்தை உருவாக்கணும்'னு திட்டம் போட்டிருக்காங்க.  திட்டமிட்டபடியே தேவேந்திரர்கள் மீது தாக்குதல் நடத்தி, கலவரமாக ஆக்கிவிட்டார்கள்.
      சென்னையில் இருந்து வந்து கலவரத்திற்கிடையே புகுந்த ஒரு தரப்பு ஆதரவு போலீஸார் தான் திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தி கலவரத்தை பெரிதாக்கினார்கள்.  

.....(இவர் தியாகி இம்மானுவேலின் மூத்தமகள் நிர்மலாமேரியின் மகள்)
....நக்கீரன்
************************************************************************************************
ஒரே சீராக ஏன் பாவிக்கவில்லை!
     ருவாய்த் துறையில் உள்ள ஒரு பட்டியலின அதிகாரி சொல்கிறார்-
      "தேவர் குருபூஜை "அக்டொபர் 30- ஆம் தேதி எந்தப் பகுதியிலும் எந்தப் பிரச்சினையும் தலை தூக்கிவிடக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர்கள் ஏழெட்டு பேர், எஸ்.பி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், ஐ.ஜி., சட்ட  -ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. என எல்லோரும் மதுரையில் கூட்டம் போட்டு பேசி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முடிவு எடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.  தேவர் குரு பூஜைக்கு தமிழக அரசு தாராளமாக முக்கியத்துவம் கொடுக்கட்டும்... வேண்டாம் என்று சொல்லவில்லை.

       அதேநேரத்தில் படுகொலை செய்யப்பட்ட இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் தேதியும் தேவேந்திர மக்கள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கின்ற ஒரு தினம் அல்லவா?  மதுரையிலிருந்து மானாமதுரை, பரமக்குடிவரை வழி நெடுகிலும் இருப்பது தலித் கிராமங்களாயிற்றே...'தோழனென்றால் உயிர் கொடுப்போம்! தொல்லை என்றால் உயிர் எடுப்போம்!' என பச்சை-சிகப்பு கொடியை உருவாக்கியவர்களாயிற்றே.. தலித்துக்கள் அனுஷ்டிக்கின்ற நாள் என்றால் மட்டமா?  அதுவும், தாழ்த்தப்பட்ட மக்கள் விழிப்புணர்வு பெற்று வரும் இந்த நேரத்தில் அவர்களை எத்தனை ஜாக்கிரதையாக கையாண்டிருக்கவேண்டும்.  தேவர் குரு பூஜை நாளுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவத்தை இம்மானுவேல் சேகரன் நினைவு நாளுக்கும் கொடுத்திருந்தால், இத்தனை குளறுபடிகள், மோதல், கலவரமெல்லாம் வெடித்திருக்காது.  துப்பாக்கிச் சூட்டில் 7 (6) பேர் செத்த பிறகு 4000-க்கும் மேற்பட்ட போலீசாரைக் குவித்திருக்கிறார்கள்.  பள்ளி கல்லூரிகளுக்கெல்லாம் விடுமுறை விட்டிருக்கிறார்கள்.  இனியாவது, நடந்ததை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு அமரராகி விட்ட இரண்டு தலைவர்களின் பெயரில் நடக்கும் குருபூஜைகளை சமமாக பாவிக்கவேண்டும் அரசு.  இல்லையென்றால் தீண்டாமை கொடுமையை அரசே செய்கிறது என்னும் பழியே தொடரும்" என்றார்.

....சி.என்.இராமகிருஷ்ணன்...நக்கீரன்
.***************************************************************************************************

விருதுநகர் மாவட்டத்திலும் டென்ஷன்!
     ஸ் மறியல் கடை அடைப்பு என அருப்புக்கோட்டையும் அவதிக்குள்ளானது.  பேருந்துகள் ஒடாததால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.  விருதுநகர் அடுத்துள்ள்ள ஆமத்தூர் வழியாக மதரைக்குச் சென்ற அரசுப் பேருந்து மீது கல் வீச்சு நடந்து கண்ணாடி உடைந்தது.  டிரைவர் ராஜேஷ்கண்ணனுக்கு காயம்.  விருதுநகரிலிருந்து சுந்தரலிங்கபுரத்துக்குச் சென்ற அரசு டவுன் பஸ் மீது ராமன்குடும்பன்பட்டி அருகே கல் வீசி சேதப்படுத்தினார்கள்.  செங்குன்றாபுரத்திலும் பஸ் மறியல் நடக்க... விருதுநகர் தாசில்தார் வந்து பேசி சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று.
..........சி.என்.இராமகிருஷ்ணன்..நக்கீரன்
****************************************************************************************************

மதுரை பலி!
     துரை சிந்தாமணி ரிங் ரோடு வழியாக, தியாகி இம்மானுவேல் குருபூஜைக்காக பரமக்குடி சென்று கொண்டிருந்த தலித் இளைஞர்களின் வாகனத்தை, உதவி கமிஷனர் வெள்ளத்துரை தடுத்து நிறுத்தி, "பரமக்குடியில் வன்முறையா இருக்கு, வேறு பாதையில் போங்க என்றபடி பாதையைத் திருப்பிவிட்டார்.  நான்கைந்து நாட்களுக்கு முன் மாற்று சாதியினரால் கொல்லப்பட்ட  தலித் சிறுவனுக்கு அஞ்சலி செலுத்த ஏற்கனவே பக்கத்தில் இருக்கும் பச்சேரி கிராமத்துக்குப் போய் கொதிப்போடு திரும்பி வந்து கொண்டிருந்த ஒரு கும்பலும் மறிக்கப்பட, அவர்கள் ஏ.சி.வெள்ளத்துரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  ஒரு கட்டத்தில் சாலை மறியலிலும் இறங்க முயற்சித்தனர்.

     ஏ.சி.யோ அவர்களின் லாரியை அப்புறப்படுத்தச் சொல்ல ஆவேசப்பட்ட அந்தக் கும்பல் ஏ.சி.க்கு எதிராக கோஷம் எழுப்பியது.  ஏ.சி.யோ, " எல்லோரும் கலைஞ்சி போங்க, மீறிப்போனால் எல்லோரையும் குண்டியில் சுட்டுப்புடுவேன்" என்று மிரட்ட, பதிலுக்கு ஏ.சி. உள்ளிட்ட போலீஸ் மீதும் அவ்வழியாக வந்த அரசு பஸ்கள் மீதும் கற்களை வீசினர்.  ஸ்பாட்டுக்கு வந்த மதுரை எஸ்.பி அஸ்ரா கார்க் மீதும் கற்கள் வீசப்பட... இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் ஒடிவந்து எஸ்.பி.மீது கற்கள் படாமல் தடுத்தார்  அவர் உள்ளிட்ட 13 போலீசார்கள்மீது லாரியில் வந்து இறங்கியவர்கள் சரமாரியாகக் கற்களால் தாக்க, துப்பாக்கியை எடுத்து இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் சுட ஆரம்பித்தார்.  இதில் பாலகிருஷ்ணன், ஜெயபிரசாத் என்ற இரண்டு இளைஞர்கள் குண்டடிப்பட்டு சுருண்டு விழ....108 ஆம்புலன்ஸ் மூலம் குண்டு காயம் பட்டவர்கள் உள்ளிட்டவர்களையும், காயமடைந்த 13 போலீசாரையும் அரசு மருத்துவமனைக்கு அள்ளிக்கொண்டு போனார்கள்.  இதன்பிறகும் இரவு வரை அங்கே பதட்டம் தணியவில்லை.  போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டதால், முகூர்த்த நாளான அன்று திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு வந்தவர்களால் சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை.  பொதுமக்கள் பீதியிலேயே நிமிடங்களைக் கழித்தார்கள்.

---முகில். நக்கீரன்.
*********************************************************************************************

பொது ஜனம்; இது என்னய்யா அடைமொழிப் பெயர் போட்டுக்கிறதுலக் கூடவாத் தகராறு....தெய்வத் திருமகன் என்று யார் வைத்துக்கொண்டால் என்ன? தமிழ் வார்த்தைகளுக்கு கூட பட்டாப் போட்டுக்கிறாங்க!

பொது ஜனம்; அதானே! இவங்களும் ஏட்டிக்கு போட்டியா வைச்சுகிட்டாங்கன்னா? "டபுள் தெய்வத் திருமகன்னு" இல்லைன்னா "தெய்வத்தின் தெய்வம்" என்று இவரு பேருக்கு முன்னாடி வைச்சுகிட்டாப்போகுது! ஜெயலலிதா மாதிரி அல்பத்தனமா யோசிக்கிறாங்களேப்பா!

பொது ஜனம்; அதான்! இதுக்காகவே ஜெயலலிதாவை ஜெயிக்கவைச்சிருக்காங்கன்னு சொல்லு!

பொது ஜனம்; அவங்கதான் வைச்சுட்டாங்களே! இவங்களாவது மாத்தி வைச்சிருக்கலாம் இல்லே! இவங்களுக்கு மட்டும் வார்த்தைகளே இல்லாத மாதிரி! வம்புக்குப் போறாங்களே!

பொது ஜனம்; ஆமாம்பா இதுவும் சரிதானப்பா!

பொது ஜனம்; சரி, அதுக்காக ஒருத்தனை ஒருத்தன் வெட்டிகிட்டு சாகனுமா?

பொது ஜனம்; போலீசு என்ன? ஐ.பி.எஸ் க்கு படிச்சுதா? இல்லை ஜாதியை எப்படி காப்பாத்தரதுன்னு படிச்சுதா? இல்லே ஜாதிக்கலவரத்தை எப்படி உருவாக்கிறதுன்னு படிச்சுதா? இந்த கேடுகெட்ட பொழைப்புக்கு பதில் வேறு ஏதாவது..... பார்க்கலாமே!

பொது ஜனம்; அதுங்க எங்க படிச்சுது? எப்படி உடுப்பு போட்டு அராஜாகம் பண்ணலாம் என்பதை தான் படிச்சது! ஆளுங்கட்சிக்கு எப்படி ஜால்ரா அடிச்சு பதவியை காப்பாத்திக்கலாம் என்பதைத்தான் படிச்சது! மக்களுக்காக என்னைக்கு வேலை செஞ்சதுங்க! 

பொது ஜனம்; அப்படியே செஞ்சாலும் "லஞ்சம்" என்ற பேரிலே பெட்டிக்கேசுக்கு கூட "சர்வீஸ் சார்ஜ்" போட்டுரும்! (இப்ப இப்படித்தான் சொல்லணும்)

பொது ஜனம்; யார் இந்த ஏ.சி. வெள்ளைத்துரை? இந்த நொச்சிக்குப்பம் வீரமணியையும், வீரப்பனையும்  போட்டுத்தள்ளின அந்த ஆளா?

பொது ஜனம்; இவங்களே ரவுடித்தனம் பண்ணசொல்லிட்டு இவங்களே பண்ணவங்களை போட்டுத்துள்ளுவாங்களே! அந்த பலே பேர்வழி தானே! இந்த வெள்ளைத்துரை!.

பொது ஜனம்; சரி! யாரு சுட்டாலும் தான் துப்பாக்கி சுடப்போகுது! இதுல வெள்ளத்துரைக்கு என்ன பெரிய ரோல்! இவருக்கு குண்டி இல்லையா என்ன? முதல்ல உச்சநீதிமன்ற கருத்துப்படி, மக்களின் சம்பாத்யத்தை வாங்கி கொண்டு மக்களையே கொல்லுகின்ற இவங்களை முதல்ல தூக்குல போடணும்!

பொது ஜனம்; இதை தேசிய மனிதவுரிமை ஆணையமும், சி.பி.ஐ யும் தான் விசாரிக்கணும். மாநில போலீசாரிடம் ஒப்படைக்க கூடாது.

பொது ஜனம்; இதுல சம்பந்தப்பட்ட அத்துணை போலீசாரையும் பணிநீக்கம் செய்யணும், கொலை குற்ற வழக்கு தொடர்ந்து சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

பொது ஜனம்; பலியானவர்களுக்கு பிச்சை போடறமாதிரி 1 லட்ச ரூபாய் கொடுத்திருக்குதே! இதுக்கு மேல கஜானவில பணமில்லையா!

பொது ஜனம்; இதுக்காக நாக்கறத்தவங்க, மூக்கறத்தவங்களுக்கு அரசு வேலை போட்டு கொடுக்குது! விட்டா தர்மபுரியில மூன்று மாணவிகளை உயிரோட கொளுத்துன அல்லக்கைங்களுக்கு கூட நிவாரணம் கொடுக்கும்.

பொது ஜனம்; இது வீணாக்கின பணமே பல கோடி ரூபாயாச்சேப்பா! இது எலிகாப்டர்ல போற செலவு ஆகுமா? இந்த ஏழுபேருக்கும் தலா பத்துலட்சம், ஏன் அதுக்கு மேலேயும் தரலாம்!


1 comment:

குடிமகன் said...

அழுத்தமான பதிவு.. சாதி ஒழியுமா? இல்லை மக்களே ஒழியுமா?