Pages

Saturday, 29 October, 2011

இறுகிய பிடி! திணறிய ஜெ! வெளிவராத கோர்ட் காட்சிகள்!ங்கே கால் வைக்கமாட்டேன் என்று இத்தனை ஆண்டுகளாக ஜெ பிடிவாதம் பிடித்துக்கொண்டிருந்தாரோ அங்கே அவரை நேரில் ஆஜராகச் செய்துவிட்டது உச்சநீதிமன்ற உத்தரவு.  இரண்டு நாட்கள் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் 313 ஸ்டேட்மெண்ட்டுக்காக ஆஜராகிவிட்டு, அடுத்த வாய்தாவை எப்படித் தடுக்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் ஜெ.வால், அக்டோபர் 20,21 இரண்டு நாட்களும் நடந்த விசாரணையின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்கிறது போயஸ் கார்டன் வட்டாரம்.

     அக்டோபர் 21-ந் தேதி வெளியான உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க.வுக்குப் பெரும் வெற்றியைக் கொடுத்திருந்தபோதும், பெங்களூருவிலிருந்து திரும்பிய ஜெ. தன்னை வரவேற்ற வெற்றி வேட்பாளர்களிடம் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை.  காரணம், சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.வைத் துளைத்தெடுத்த நீதிபதி மல்லிகார்ஜூனய்யாவின் கருத்துகளும், அரசு வழக்கறிஞர் வாதங்களும்தான் என்கிறார்கள் பெங்களூரு நீதிமன்றத்தில் இருந்த அ.தி.மு.க. அமைச்சர்களே.

      பாதுகாப்பில் எந்தக் குளருபடியும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று சுமார் 2000 கோலீசாரைக் குவித்திருந்த கர்நாடக அரசைப் போலவே நீதிபதி மல்லிகார்ஜூனய்யா, ஜெ.வின் பாதுகாப்பு விஷயத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டார்.  19-ந் தேதியன்று பெங்களூரு பரப்பன அக்ரகாரத்தில் சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தைப் பார்வையிட பெங்களூரு தமிழ்ப் பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர்.  அப்போது அங்கு வந்த நீதிபதி மல்லிகார்ஜூனய்யா அவர்களை யாரென விசாரித்துவிட்டு, விசாரணையின் போது பத்திரிகையாளர்களை அனுமதிக்கக்கூடாது என்று தமிழக முதல்வர் தரப்பிலிருந்து கோரிக்கை வந்திருக்கிறது.  அதனால் நாளை யாருக்கும் அனுமதி கிடையாது என்றவர், அதனை உத்தரவாகவே போட்டார்.  நீதிமன்றத்திலிருந்து 2கி.மீ முன்னதாகவே பத்திரிகையாளர்கள் நிறுத்தப்பட்டதன் பின்னணி இதுதான்.

       அடுத்து ஜெ. தரப்பிலிருந்து, தங்கள் அமைச்சர்கள், வக்கீல்கள் முக்கிய பிரமுகர்கள் ஆகியோருடன் 27 கார்கள் கொண்ட கான்வாய் வரும்.  அதனை நீதிமன்ற வளாகத்தில் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிபதி ஏற்றுக்கொண்டார்.  எவ்வித அரசுப் பொறுப்பிலும் இல்லாத கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தியும் சைரன் காரில் வந்தபோது, அவரையும் போலீசார் அனுமதித்தனர்.  மின்விசிறிக்குக் கீழே ஜெ.வை உட்கார வைக்கவேண்டும்.  அவருக்கு மதிய உணவு இடைவெளியாக ஒன்றரை மணிநேரம் வேண்டும் என்றெல்லாம் ஜெ. தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளையும் ஏற்றுச் செயல்படுத்தினார் நீதிபதி.  எனினும், வழக்கு விசாரணை தொடங்கியதும் நீதிபதி மல்லிகார்ஜூனய்யாவின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்டிருந்தன.  அவருடைய கண்டிப்பான முகம் அப்போதுதான் வெளிப்படத் தொடங்கியது.

      இதுபற்றி நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்களிடம் விசாரணை முடிந்த பிறகு பேசினோம்.  அவர்கள் நம்மிடம், "ஒவ்வொரு கேள்வியையும் நீதிபதி சம்பந்தமாக படித்தார்.  பெரும்பாலான கேள்விகளுக்கு, 'தெரியாது.. பொய்.. ஞாபகமில்லை' என்று ஒற்றை வார்த்தையில் ஜெ பதிலளிக்க, அவற்றைக் கவனமாக ஒரு பள்ளி மாணவன் போல தனது வழக்கு ஆவணங்களில் நீதிபதி பதிவு செய்துக்கொண்டிருந்தார்" என்றனர்.

     "நம்ம கோரிக்கைகளை ஏற்றுக்கிட்டப்ப நீதிபதி ரொம்ப சாதகமா இருப்பாருன்னு நினைச்சோம்.  ஆனா, கோர்ட்டில் அவரோட நடவடிக்கைகள் இத்தனை ஸ்டிரிக்ட்டா இருக்கே" என்று அ.தி.மு.க. அமைச்சர்கள் தங்களுக்குள் மெதுவாகப் பேசிக்கொண்டார்களாம்.  20-ந் நேதியன்று விசாரணை முடிந்தபோது ஜெ.  "நாளைக்கு நான் ஆஜராகமாட்டேன்.  22-ந் தேதி டெல்லியில் தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியுள்ளது.  ஒரு முதல்வர் என்ற முறையில் அதற்கானத் தயாரிப்புகளில் ஈடுபடவேண்டும்" என்றார்.

       அதற்கு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா எதிர்ப்புத் தெரிவிக்க, அதனை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.  கண்டிப்பாக 21-ந் தேதியும் ஆஜராகவேண்டும் என ஜெ.வின் முகத்திற்கு நேராகப் பார்த்து கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிக்க, ஜெ படு அப்செட்.  அரசு வக்கீலின் வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டதால் கோபமான ஜெ. அன்று மாலை ஏற்போர்ட்டுக்கு வந்தபோது அங்கு நின்றிருந்த மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்களிடம், "என்ன இங்கே ரெக்கார்டு டான்சா நடக்குது, போய் எல்லோரும் உள்ளாட்சித் தேர்தல் ரிசல்ட்டுக்கான ஏற்பாடுகளைக் கவனிங்க" என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.  இதனால் தான், இரண்டாவதுநாள் ஜெ. விசாரணைக்காகப் போனபோது ஏர்போர்ட்டில் அ.தி.மு.க. கரைவேட்டிகள் அவ்வளவாக இல்லை என்று ர.ர.க்களே சொல்கிறார்கள்.

      உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின் ஆரம்பநிலையைக் கவனித்துவிட்டுத்தான் 21-ந் தேதி பெங்களூருக்கு தனிவிமானம் ஏறினார் ஜெ.  நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த ஜெ.வின் முகத்தில் களைப்பு வெளிப்பட்டுள்ளது.  நகை பற்றிய கேள்விகளை நீதிபதி கேட்டதும், "இதற்கு நேற்றே நான் பதில் சொல்லிவிட்டேன்" என்று ஜெ. சொல்ல, "உங்களுடைய நகைகளை 4 நாட்கள் ஆராய்ந்து மதிப்பீடுசெய்த கஸ்டம்ஸ் நகை மதிப்பீட்டாளரின் கணக்குகள் பற்றிய கேள்வி இது.  நீங்கள் உரிய பதில் சொல்ல வேண்டும்" என கண்டிப்பான குரலை வெளிப்படுத்தியிருக்கிறார் நீதிபதி.

      டென்ஷனான ஜெ. "கோர்ட்டில் எந்த உத்தரவும் பெறாமல் நான் வீட்டில் இல்லாதபோது என் வீட்டுக்குள்ளே நுழைந்து  ரெய்டு நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?  அவர்கள் கைப்பற்றியதாக கணக்கு காட்டிய நகைகள் என் வீட்டில் இருந்தவைதான் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கு?" என்றார்.  அப்போது குறுக்கிட்ட ஆச்சார்யா, "அந்த நேரத்தில் போயஸ் கார்டனில் இருந்தவர்கள் இந்த நகைகளெல்லாம் உங்கள் வீட்டில் இருந்தவைதான் என்று ஒப்புதல் கையெழுத்துப் போட்டிருக்கிறார்களே"ன்னு சொன்னார்.

      மீண்டும் டென்ஷனனான ஜெ. " என் வீட்டு வேலைக்காரர்கள் கையெழுத்துப் போட்டு கொடுத்துவிட்டால் அதெல்லாம் நான் முதலமைச்சராக இருந்தபோது வாங்கிய நகைகளாகிவிடுமா?  அதில் பல நகைகள் நான் சினிமாவில் நடித்தபோது  வாங்கியவை.  சில நகைகள் வெறும் தங்க முலாம் பூசியவை" என்று பதில் சொன்னார்.  அரசு வழக்கறிஞர் விடவில்லை.  "98 ரிஸ்ட் வாட்சுகள், 200 செருப்புகள் யாருடையவை" எனக் கேட்க, "அது என்னுடையதல்ல" என்றார் ஜெ.

      போயஸ் தோட்டத்திலிருந்து கைப்பற்றப்பட்ட வெள்ளிப் பொருட்கள் பற்றி கேள்வி கேட்டதும், அதெல்லாம் அ.தி.மு.க.வினர் கொடுத்தது.  ஒரு பாதுகாப்புக்காக என் வீட்டில் இருந்தது என்று சமாளித்தார் ஜெ. தொடர்ந்து இதேபோன்ற கேள்விகளை நீதிபதி கேட்டபடியே இருக்க, ஜெ.வின் டென்ஷனும் அதிகரித்தது.  "நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்.  15 கம்பெனி போலீசார் கொண்ட பெரும்படையை என்னுடைய வீட்டுக்குள் எந்தவிதமான நோட்டீசும் இல்லாமல் அனுப்பி, 28 கிலோ நகை, 98 ரிஸ்ட் வாட்சுகள், வெள்ளிப்பொருட்கள், செருப்பு என மதிப்பீடு செய்து பொய் வழக்கு போட்டிருக்கிறார்கள்" என்று ஜெ. சொல்ல, "இதை நான் மறுக்கிறேன்" என்றார் அரசு வக்கீல் ஆச்சார்யா.

      அவர் பக்கம் திரும்பிய ஜெ. "யார் இவர்?  நான் பேசும்போது ஏன் குறுக்கிடுகிறார்?  இவர் ஒரு சாதாரண அரசு வக்கீல்.  நான் பெங்களூரு வந்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏதுவும் இருக்காது என்று இவர் பேட்டி கொடுக்கிறார்.  நான் ஒரு மாநிலத்தின் முதல்வர்.  நான் என்ன செயல்களை செய்தேன், அதற்கு எப்படியெல்லாம் விளைவுகள் வரும் என்றெல்லாம் எனக்குத்தான் தெரியும்.  அது பற்றி கருத்து சொல்ல இவர் யார்?" என்று வெடித்தார்.

       அப்போது நீதிபதி மல்லிகார்ஜூனய்யா, "அரசு வழக்கறிஞர் பாதுகாப்பு நிலைப்பாடு பற்றி பொதுவான கருத்தைத்தானே சொன்னார்" என்று சொல்லிவிட்டு, ஜெ.வின் சொத்துவிவரங்கள் பற்றிய கேள்விகளைக் கேட்க ஆரம்பித்து விட்டார்.  அரசு வக்கீலின் கருத்துக்கு ஆதரவாக நீதிபதி பேசியதோடு, தொடர் கேள்விகளால் துளைத்ததும், ஜெ.வை எரிச்சலடைய வைத்துவிட்டது.  "போயஸ் கார்டன் வீடு, ஹைதராபாத் பங்களா இதெல்லாம் நான் முதல்வராவதற்கு முன்பே வாங்கிய சொத்துக்கள்" என்று சலிப்போடு பதில் சொன்னார் ஜெ..  அதைத் தொடர்ந்து  ஜெ.வும், சசியும் இயக்குநர்களாக உள்ள கம்பெனிகள் பற்றிய கேள்விகளை நீதிபதி தொடுக்க, "நான் அதிலெல்லாம் சைலண்ட் பார்ட்னர்தான்" என்று சுரத்தே இல்லாமல் பதில் வந்திருக்கிறது.

      "சனிக்கிழமை நீங்கள் நேரில் ஆஜராகி பதில் சொல்ல வேண்டும்" என்று நீதிபதி சொன்னபோது, டென்ஷனின் உச்சத்திற்கே போன ஜெ.வின் முகமெல்லாம் சிவந்துவிட்டது என்கிறார்கள், நீதிமன்றத்தினுள் இருந்த வழக்கறிஞர்கள்.  "தண்ணீர் வேணும்" என்று ஜெ. கேட்க, ஒரு தண்ணீர் பாட்டில் அவருக்குத் தரப்பட்டது.  அதைக் குடித்துவிட்டு, தனது வக்கீல் குமாருடன் ஆலோசனை செய்தார் ஜெ..  அதைத்தொடர்ந்து, இன்னும் எத்தனை கேள்விகள் இருக்கிறது என்று கேட்டார் வக்கீல் குமார்.

      அதற்கு நீதிபதி "மொத்தமுள்ள 259 அரசு தரப்பு சாட்சியங்களில் 159 சாட்சியங்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறார்.  இன்னும் 100 சாட்சியங்களிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லவேண்டும்.  இன்னும் மூன்று நாட்கள்  அவர் பதில் சொல்ல வேண்டி வரும்" என்றதும் ஜெ. படுடல்லாகி விட்டார்.  வக்கீல் மூலமாக, "சனிக்கிழமையன்னைக்கு டெல்லியில் நடக்கும் தேசிய வளர்ச்சி ஆணையக் கூட்டத்தில் கலந்துக்கணும்" என்று ஜெ. சொல்ல, "அப்படியென்றால், நவம்பர் 4-ந் தேதி வைத்துக்கொள்ளலாமா?" என்று கேட்டார் நீதிபதி.  அந்த தினத்திலும் ஒரு எங்கேஜ்மென்ட் இருப்பதாக ஜெ.வின் வக்கீல் சொல்ல, "சரி..8-ந் தேதி?" என்று கேட்டார் நீதிபதி.

      மீண்டும் ஆஜராவதைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்த ஜெ. தன் வக்கீலை அழைத்து ஏதோ சொன்னார்.  உடனே அவருடைய வக்கீல், சிறப்பு நீதிமன்றத்தில் 2 நாட்கள் ஆஜராகவேண்டும் என்றுதான் சுப்ரிம் கோர்ட் உத்தரவிட்டிருக்கு என்றார்.  அதற்கு என்ன எதிர் வாதம் வைக்கப்பட்டது என்பதை அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவே பின்னர் நம்மிடம் நேரில் தெரிவித்தார்.

      "313 சட்டப்பிரிவின்படி பதிலளிக்க நேரில் ஆஜராகவேண்டும் என்றுதான் சுப்ரிம் கோர்ட் சொல்லியிருக்கிறதே தவிர, வெறெந்த உத்தரவையும் இடவில்லை.  மெத்தம் 1400 கேள்விகள்.  அதில் 567 கேள்விகளுக்குத்தான் பதில் சொல்லியிருக்கிறார்.  சட்டப்படி அனைத்துக் கேள்விகளுக்கும் ஜெ. பதில் சொல்லவேண்டும்.  இரண்டு நாட்களில் 10 மணி நேரத்திற்குள் எல்லாக் கேள்விகளையும் கேட்டு, அதற்குத் தரப்படும் பதில்களுக்கு ஒப்புதல் கையெழுத்து வாங்குவது என்பது எந்த நீதிமன்றத்தாலும் முடியாத விஷயம்.  அப்படி செய்ய சுப்ரிம் கோர்ட் எப்படி உத்தரவிடும்? என்று வாதங்களை வைத்தேன்" என்றவர், "ஜெ. தரப்பு வக்கீல் பொய் சொல்கிறார்.  வருகிற 8-ந் தேதி ஜெ. கட்டாயம் ஆஜராகியே தீரவேண்டும்.  அவர்  அதற்குள் சுப்ரிம் கோர்ட்டுக்கே போய் கேட்கட்டும்.  எந்த கோர்ட்டுக்குப் போனாலும், ஜெ. இங்கு மறுபடியும் வருவதை யாராலும் தடுக்க முடியாது" என்றார்.

      ஜெ. தரப்பு வாதத்தையும் அதற்கு ஆச்சார்யா வைத்த எதிர்வாதத்தையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜூனய்யா, 8-ந் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று சொல்ல, கோர்ட்டிலேயே இடிந்து போய்விட்டார் ஜெ.  இரண்டாம் நாள் விசாரணையில் 187 கேள்விகளுக்குப் பதில் சொன்ன ஜெ. அதற்கான வழக்கு ஆவணத்தில் ஒரு மணிநேரம் கையெழுத்துப் போட்டுவிட்டு, கோர்ட் வளாகத்திலேயே வக்கீல் குமாரோடு நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.

      அங்கிருந்த அ.தி.மு.க வக்கீல்கள், "இந்த நீதிபதி இப்படி கடுமையாக இருக்கிறார், அரசு வக்கீல் பாய்கிறார், இதை நாம் எப்படி சமாளிப்பது?  குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 4 பேர் சார்பிலும் தலா 20 சாட்சிகள் என்று 80 சாட்சிகளை ரெடி பண்ணி கோர்ட்டில் நிறுத்தி, அவர்களின் சாட்சியத்தை பதிவு செய்து, அரசு தரப்பு கிராசிங் செய்ய சொல்லி வழக்கை இழுத்தடிக்க வேண்டும்னு  ப்ளான் போட்டோமே, அதெல்லாம் இங்கே எடுபடுமா? என தங்களுக்குள் ஆலோசனைகள் நடத்தியபடி இருந்தனர்.

      டென்ஷன் குறையாமல் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலிருந்து புறப்பட்ட ஜெ. போயஸ் கார்டனுக்குத் திரும்பிய போது, தமிழக உள்ளாட்சித் தேரதலில் எதிர்பார்த்தது போலவே அ.தி.மு.க. பெரும்பாலான இடங்களைப் பிடித்திருந்தது.

      சென்னை மாநகராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் ஜெ.வுக்காக பூங்கொத்தோடு காத்திருந்தார்கள்.

      முகத்தில் எந்த சலனமும் இல்லாமல், பூங்கொத்துகளை வாங்கிக்கொண்டு எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிட்டார் ஜெ.

      கார்டனிலும் யாரிடமும் சரியாகப் பேசாமல் இருக்கும் ஜெ.வின் ஒரே சிந்தனை, சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து தப்பிக்க சாம-பேத-தான-தண்டம் என எந்த வழிமுறையையும் பயன்படுத்தி, விடுபடவேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது என்கிறார்கள் சீனியர் அமைச்சர்கள்.
----பெங்களூருவிலிருந்து பிரகாஷ்
       படங்கள்;ஸ்டாலின்---நக்கீரன் அக்-26-28-2011

********************
பொது ஜனம்; என்னய்யா இது? வேலைக்காரங்க கையெழுத்து போட்டா, நகைகள் என்னுதாயிடுமான்னு! கேட்டுட்டு! அதில் பல நகைங்க நடிக்கும்போது வாங்கியதுன்னு! கோர்ட்டுல பதில் சொல்லியிருக்குதே! ஜெ.

பொது ஜனம்; ஆமாம்! அதானே! தங்க முலாம் பூசினது வரை கரெக்டா தெரிந்து வைத்திருக்கும் போது நகைகங்க அந்தம்மாவுது தானே!

பொது ஜனம்; எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு மாட்டிக்கிச்சே!

பொது ஜனம்; இப்பக் கூட அராசங்க அதிகாரிங்க, அரசியல்வாதிங்க வீட்ல ஜெ. போலீஸ் ரெய்டு எடுத்துச்சே என்ன? சொல்லிட்டா எடுத்துச்சு! 
பொது ஜனம்; அதுக்கு ஒரு சட்டம்! மத்தவங்களுக்கு ஒரு சட்டம் போல இருக்குது!

பொது ஜனம்; அதுனால தான் அரசுத் தரப்பு வக்ககீலை கோர்ட்டுன்னு கூட பார்க்காம தாக்குச்சா?

பொது ஜனம்; அது என்ன? சாதாரண அரசு வக்கீல்!? ஸ்பெஷல் அரசு வக்கீல்!?

பொது ஜனம்; இந்த சாதாரண முதலமைச்சர் மாதிரி, அதுவும் சாதாரணமானதா இருக்குமோ? என்னவோ?

பொது ஜனம்; அன்றைய சொத்து குவிப்பு மதிப்பு 66 கோடின்னா? இன்னைக்கு மதிப்பு பத்து மடங்கா ஆகியிருக்காது!

பொது ஜனம்; அப்ப 660 கோடியா? எம்மாடியோவ்!

பொது ஜனம்; தெரியலைப்பா? இருந்தாலும் இருக்கும்??????????????


    
    4 comments:

sivalingamtamilsource said...

பத்திரிக்கையாளர் யாரும் அனுமதிக்காத இடத்தில் நடந்த அனைத்தையும் நக்கீரன் (சொந்த கற்பனையில்) வெளியே கொண்டு வந்ததற்கு நன்றி. அருகிலிருந்த அதிமுக வக்கீல்கள் இவர்களிடம் இவையெல்லாவற்றையும் சொல்லி இருப்பார்கள் என்பதை பாமரனும் நம்ம மாட்டார்கள்.

நம்பி said...

Blogger sivalingamtamilsource said...
//பத்திரிக்கையாளர் யாரும் அனுமதிக்காத இடத்தில் நடந்த அனைத்தையும் நக்கீரன் (சொந்த கற்பனையில்) வெளியே கொண்டு வந்ததற்கு நன்றி.//
******************************
தங்கள் கருத்துக்கு நன்றி!
********************************
செய்திகள் அனைத்துமே இந்த முறையில் தான் வெளிவருகின்றன...அனைத்து ஊடகங்களுக்கும் இப்படித்தான் செய்திகள் கிடைக்கின்றன. அதுவும் புலனாய்வு பத்திரிகைகள் இப்படித்தான் வெகுநாட்களாக வெளியிடுகின்றன. இது புதிது அல்ல..

ஒரு குடும்பத்திலேயே பலகட்சிக்கார்ர்கள் இருக்கிறார்கள்...அப்பா ஒரு கட்சி, அம்மா ஒரு கட்சி, புள்ளைங்க ஒரு கட்சி, தாத்தா ஒருகட்சி, பாட்டி ஒரு கட்சி.......... ஆனா எல்லோருமே ஓரே குடும்பம் தான்...

....தாமரைக்கனி..திமுக...அவருடைய மகன்.......... அதிமுக (இப்போது திமுக)

மதுசூதனன் அதிமுக என்றால் மச்சான் சேகர்பாபு திமுக.....இது உதாரணத்திற்கு இப்படியிருக்கும் போது நீதிமன்றத்தில் பல பேர் பணிபுரியும் இடத்தில் செய்தி சேகரிப்பதா? கடினம்.

இவ்வளவு பேர் முண்டியடித்துக்கொண்டு உள்ளே சென்றார்களே பணத்தை கொடுத்துவிட்டு செய்தி சேகரிப்பவர் வக்கீல் மாதிரி இல்லை ஊழியரை உள்ளே கைக்குள் போட்டுக்கொண்டு உள்ளே போவது கடினமா? இது பாமரனுக்கும் தெரியும். நமக்குத்தான் இந்த விவரங்கள் எல்லாம் தெரியாது. இல்லை தெரியாது போலும் நடிக்கலாம்.

இது பற்றியெல்லாம் பத்திரிகை துறை சார்ந்தவர்களுக்கு மிக நன்றாக தெரியும். எது? எது? டெலி பிரிண்டரில் வரும் எந்த செய்தியை களத்தில் இருந்து நேரடியாக சேகரிக்கவேண்டும் என்பதெல்லாம் அந்த துறை சார்ந்தவருக்கு நன்றாக தெரியும். இல்லைன்னா அவர்கள் பொழைப்பு நாறிவிடும். (எல்லா பத்திரிக்கையாளருக்கும் சேர்த்துதான்)

அனைவருமே அப்படி உயிரைக்கொடுத்து விசுவாசிகளாக அரசியலில் இருப்பதில்லை. அதுவும் இப்போது சுத்தமாக இல்லை. அதிமுக வில் அது நிச்சயம் இல்லை.

. சோறுபோடற தாய் தந்தைக்கே விசுவாசமாக இருப்பதில்லை.

அரசு ஊழியர்கள், அதிகாரிகள் என்ன 5 வருடத்திற்கு ஒரு முறை விசுவாசத்தை மாற்றிக்கொள்வார்களா?

வாக்குகள் அனைத்தையும் அவர்கள் ஒரேக் கட்சிக்குத்தான் வாரி வழங்கினார்களா?

அரசியல் கட்சிக்குத்தான் 5 வருடம் (அதுவும் நிரந்தரமல்ல)....ஊழியர் ரிட்டையர்ட் ஆகிறவரைக்கும் அரசு ஊழியர்தான். ஒன்றும் செய்யமுடியாது. இது அனைத்து பாமரனுக்கும் தெரியும். பத்திரிகைகாரனுக்கும் தெரியும். நமக்கு?????????????????????

நம்பி said...

என்ன பண்ணுவது? தமிழ்நாடு ரிஜிஸ்டிரேஷன் நம்பர் போட்ட கார்ல வந்தா கர்நாடக போலீஸ் தடுக்கும்.

கர்நாடக ரிஜிஸ்டிரேஷன் கார்ல வந்தா ஏன்? கர்நாடக போலீஸ் தடுக்கப்போகுது.

அதான் பதிவில உள்ள செய்தியில் ஒரு மினிஸ்டர் எப்படி வந்திருக்கிறார் என்பதை பார்க்கலாமே!....

இதெல்லாம் தாத்தா காலத்து டெக்னிக்......இங்கே எல்லோரும் அசால்டா எல்லா கவர்ன்மென்ட் ஆப்பிஸ்லேயும் பண்ணுவாங்க,

கோர்ட்டுல இன்னும் அசால்ட்டா பண்ணுவாங்க...எல்லோருக்கும் எல்லா இடத்திலேயும் ஆள் இருக்குது......

நண்பன் said...

பாவத்துக்கும் சம்பளம் உண்டு ?