Pages

Saturday 29 October, 2011

குற்றவாளி கூண்டில் ஜெயலலிதா! அடுத்த முதல்வர் யார்? அ.தி.மு.க.வில் பரபரப்பு!

      

ந்திய நீதிமன்ற வரலாற்றில் எந்தவொரு வழக்கிற்கும் இத்தனை முறை வாய்தா வாங்கப்பட்டதேயில்லை. தன்மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இதுவரை 130 க்கும் அதிகமான முறை வாய்தா வாங்கியிருந்தார் ஜெயலலிதா.  எக்காரணம் கொண்டும் இந்த வழக்கிற்காக நீதிமன்றத்தின் படிக்கெட்டுகளில் ஏறமாட்டேன் என்று சொன்ன ஜெ.வும் சட்டத்திற்குட்பட்டவர்தான் என்பது 13 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 20-ந் தேதியன்று நிரூபணமானது.

      1991-96 ஆட்சிக்காலத்தில் மாதம் 1 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குவதாகச் சொன்ன ஜெ. அந்த 5 ஆண்டுகாலத்தில் தனது வருமானத்திற்கு மீறி 66 கோடி ருபாய்க்கு சொத்துகள் குவித்தார் என்பதுதான் வழக்கு.  96-ல் தி.மு.க. ஆட்சி அமைந்தபோது ஜெ. ஆட்சிக்காலத்து ஊழல்கள் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்குகளில் இதுவும் ஒன்று.  அப்போதே, ஜெ. தனது வக்கீல்களிடமும் நெருக்கமானவர்களிடமும், 'என் மேலே போட்டிருக்கிற கலர் டி.வி. வழக்கு, ப்ளசண்ட் ஸ்டே ஒட்டல் வழக்கு, டான்சி வழக்கு, சி.பி.ஐ. போட்டிருக்கும் பிறந்தநாள் பரிசு வழக்கு இதைப்பற்றியெல்லாம் கவலைப்படலை.  வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததா போட்டிருக்கிற 'வெல்த் கேஸ்' தான் தலைக்கு மேலே கத்தி போல ஆபத்தானதாக இருக்கு.  அந்தக் கேஸை ஆரம்பத்திலேயே முறியடிச்சிடணும்' என்று சொல்லியிருக்கிறார்.

      தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஜெ. மீதான ஊழல்களை விசாரிப்பதற்காக 3 தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.  முடிந்தளவு ஒவ்வொரு வழக்கையும் இழுத்தடிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்த ஜெ., இந்த சொத்துக்குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை ஒரு முறைகூட நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.  2001-ல் ஜெ ஆட்சிக்கு வந்ததும், வழக்கு திசைமாறுவதையறிந்த தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், ' இந்த வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும்' என்று உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார்.  அவரது மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் தனி நீதிமன்றம் அமைத்து ஜெ.வின் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது.

      உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெங்களூருவில் அமைக்கப்பட்ட தனி நீதிமன்றத்தின் நீதிபதியாக மல்லிகார்ஜூனய்யா பொறுப்பேற்றார்.  அரசு வழக்கறிஞராக ஆச்சார்யலு நியமிக்கப்பட்டார்.  ஜெ.வுடன் அவரது தோழி சசிகலா, ஜெ.வின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின் அண்ணி இளவரசி ஆகியோரும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள்.

      வழக்கு ஆவணங்களை மொழிபெயர்த்துத் தரவேண்டும் என வாய்தா, மொழிபெயர்ப்பு சரியில்லை என வாய்தா, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என வாய்தா, குற்றம்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் தனது சொந்தப்பணிக்காக வாய்தா என இந்த வழக்கு வாய்தா வழக்காகவே போய்க்கொண்டிருந்தது.  இதனிடையே, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று வழக்குகளும் போடப்பட்டன.  130-க்கும் அதிகமான வாய்தாக்கள், பலவிதமான இழுத்தடிப்பு வழக்குகள் என காலம் நீண்டுகொண்டேபோனதே தவிர, ஒரு முறைகூட பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஜெ. ஆஜராகவில்லை.

      இத்தனை இழுத்தடிப்புகளுக்கு நடுவிலும், சாட்சிகள் விசாரணை நடந்தது.  அரசு வழக்கறிஞர் ஆச்சார்யலு நேர்மையான முறையில் வழக்கினைக் கொண்டு செல்ல, நீதிபதி மல்லிகார்ஜூனய்யா சட்டவிதிகளின்படி வழக்கை கையாண்டார்.  சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டபிறகு, குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் 313 ஸ்டேட்மென்ட் பதிவு செய்யவேண்டும்.  இதிலும் பல இழுத்தடிப்புகளுக்குப் பிறகு சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் ஆஜராயினர்.  ஜெ.வோ, தேர்தல் காலம் என்றும் முதல்வர் பொறுப்பில் இருப்பதால் நேரில் வராமல் வீடியோ கான்ஃபரன்சிங்கில் விசாரணை நடத்தலாம் என்றும், இசட்+ பாதுகாப்பில் இருக்கும் தனக்கு தனி நீதிமன்றத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இருக்காது என்றும் சொல்லி உச்சநீதிமன்றம் வரை சென்றார்.  உச்சநீதிமன்றம் அவருடைய மனுவை நிராகரித்து, அக்டோபர் 20-ந் தேதி தனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவேண்டும் என உத்தரவிட்டது.

      இந்நிலையில் தனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதைத் தவிர்க்கும் கடைசி முயற்சியாக அக்டோபர் 18-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் ஜெ. சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.  விமான நிலையத்திலிருந்து நீதிமன்றம் செல்லும்போது இசட்+ பாதுகாப்பு வசதி உரிய அளவில் செய்ய கால அவகாசம் வேண்டும் என்றும், பரப்பன அக்ரகாரம் நீதிமன்றத்திற்கு பெயிண்ட் அடிப்பதால் ஜெ.வின் உடல்நிலைக்கு ஒத்துவராது என்றும், அதனால் ஆஜராகும் தேதியைத் தள்ளிவைக்கவேண்டும் என்றும், ஜெ.வின் மனுவில் கோரப்பட்டிருந்தது.  உச்சநீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி-தீபக் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதனை விசாரித்தது.

      பாதுகாப்பு வசதிகள் குறித்து கர்நாடக அரசு சார்பில் அதன் தலைமைச் செயலாளர்-டி.ஜி.பி. ஆகியோரின் முழுமையான ரிப்போர்ட் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செப்டம்பர் 26-ந் தேதியே தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியும் இதுவரை பதில் வரவில்லை என கர்நாடக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.  ஜெ. தரப்பிலோ அவருக்கு என்.எஸ்.ஜி. பாதுகாப்பு தரப்படவேண்டும் என்றும், இதற்கு 96 மணி நேரம் முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.  நீதிபதிகள் இதை ஏற்கவில்லை.  பிரதமரும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பில்தான் இருக்கிறார்.  அவர் அவசரமாக ஒரிடத்திற்குப் போகும்போது இந்த 96 மணிநேர விதிமுறை கடைப்பிடிக்கப்படுகிறதா? என்று கண்டித்ததுடன், 19-ந் தேதி பிற்பகலில் அளித்த தீர்ப்பில், 'கர்நாடக அரசு பாதுகாப்பை உறுதி செய்துள்ள நிலையில், பொது வாழ்வில் உள்ள ஜெயலலிதா இவ்வழக்கிலிருந்து ஒதுங்கிப்போவது நல்லதல்ல.  நியாயமாக நடந்துகொள்ளவேண்டும்.  வழக்கு விசாரணைக்கு கட்டாயம் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டனர்.

      உச்சநீதிமன்றம் உறுதியான உத்தரவை வழங்கியதையடுத்து, தனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார் ஜெ.  அவருடைய வழக்கறிஞர்களிடம் 313 செக்ஷன் கீழான விசாரணை எப்படி இருக்கும் என ஜெ. கேட்டுள்ளார்.  1000 கேள்விகள் அளவுக்கு கேட்பார்கள் என்றும் அந்தக் கேள்விகள் எப்படி? இருக்கும் என்றும் டைப் செய்து கொடுத்த வக்கீல்கள், இதற்கு இப்படியெல்லாம் பதில் சொல்லலாம் என்று அதனையும் தயாரித்து தந்துள்ளனர்.  அச்சிடப்பட்ட காகிதத்தில் இருப்பதை எளிதாக மனப்பாடம் செய்து மேடையில் பேசிவிடுவார் ஜெ. அதேபாணியில், தனி நீதிமன்றத்திற்கும் ரெடியானார்.

      அக்டோபர் 20-ந் தேதி காலையில் சென்னையிலிருந்து சிறப்பு விமானத்தில் பெங்களூரு புறப்பட்டார் ஜெ. அவரது வருகையொட்டி 1500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.  தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன் வண்டிகள் தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் சோதனையிடப்பட்டு, அரசியல் சார்புள்ளவர்களாக இருந்தால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கொடநாட்டிலிருந்து வந்த சசிகலா உறவினர்களும், தமிழ்நாடு ரெஜிஸ்ட்ரேஷன் அரசு காரில் வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பனும் இப்படித்தான் தடுக்கப்பட்டனர்.  அமைச்சர் அதன்பின் கர்நாடக ரெஜிஸ்ட்ரேஷன் கார் ஒன்றைப் பிடித்து பெங்களூரு வந்தார்.

      ஜெ.வின் சிறப்பு விமானம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் விமானதளத்தில் தரையிறங்க, அங்கே வழக்கம்போல் அவரது வருகையை படம்பிடிக்க ஜெயா டி.வி. குழு காத்திருந்தது.  அவர்களைப் பார்த்ததும், 'இதையெல்லாம் படம்பிடித்து ஒளிபரப்பவேண்டாம்' என்று சொல்லிவிட்டார் ஜெ.  14 கார்கள் கொண்ட கான்வாய் அந்த விமான தளத்திலிருந்து புறப்பட, ஜெ.வுடன் ஒரே காரில் 'சசிகலா பயணித்தார்.  ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா உள்ளிட்ட அமைச்சர்கள், தம்பிதுரை எம்.பி ஆகியோரும் பின்தொடர்ந்த கார்களில் பயணித்தனர்.

      பரப்பன அக்ரகாரம் சிறை வளாக நீதிமன்றம் என்பது, அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த முத்திரைத்தாள் மோசடி மன்னன் டெல்கி மீதான வழக்கிற்காக அமைக்கப்பட்டது.  தற்போது பரப்பன அக்ரகாரம் சிறையில் தான் சுரங்க ஊழல் குற்றச்சாட்டில் கைதாகியுள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா இருக்கிறார்.  அந்த வளாகத்தில் உள்ள கோர்ட்டில் ஆஜராவதற்காகத்தான் ஜெ.வின் கான்வாய் விரைந்து வந்துகொண்டிருந்தது.  கோர்ட் வளாகத்திலிருந்து 2 கி.மீ முன்னதாகவே தடுப்பரண்கள் போடப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.  நீதிமன்றத்திற்கு நேரில் சென்று வழக்கு விசாரணை பற்றிய செய்திகளைத் தொகுக்கலாம் என நினைத்திருந்த மீடியாக்கார்களை 2 கி.மீ முன்னதாகவே தடுத்து நிறுத்திவிட்டது கர்நாடக காவல்துறை.

      காலை 10.30 மணி ஜெ.வின் கான்வாய் உள்ளே நுழைந்தது.  அங்கே திரண்டிருந்த அ.தி.மு.க. வழக்கறிஞர்களும் உள்ளே நுழையவேண்டும் என போலீசாருடன் மல்லுக்கட்டினர்.  கடைசியில், 20 வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  அப்போது நீலக்கொடிகளுடனும், கருப்பு கொடிகளுடனும் ரிபப்ளிக் பார்ட்டி ஆப் இந்தியா, வெங்கடசாமி தலைமையிலான சமாத சைமிக்க தளா, ராவணன் தலைமையிலான பெரியார்.தி.க. ஆகியவற்றைச் சேர்ந்த தோழர்கள் அங்கே கூடி, ஜெ.வுக்கு எதிராக முழக்கமிட்டனர்.  பரமக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துக் குரலெழுப்பிய அவர்கள், ஜெ.வின் ஊழலையும் எதிர்த்து கோஷம் போட்டனர்.  அங்கு திரண்டிருந்த அ.தி.மு.க.வினர் ஜெ.வுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள்.  பெரியார்.தி.க. ராவணன் நம்மிடம், ''தார்மீக அடிப்படையில் ஜெ. ராஜினாமா செய்யவேண்டும்.  பரமக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்' என்றார் ஆவேசமாக.  அவர்களை கர்நாடகப் போலீசார் வேகவேகமாக அப்புறப்படுத்தினர்.

      11 மணிக்கு, நீதிபதி மல்லிகார்ஜூனய்யா தனது ஆசனத்தில் அமர்ந்தார்.  குற்றவாளிக் கூண்டுக்கு முன்பாக போடப்பட்டிருந்த நாற்காலியில் ஜெ. உட்கார்ந்தார்.  ஏ.சி வசதியில் இருந்தவர் ஜெ. கோர்ட்டில் ஏ.சி. கிடையாது.  குற்றவாளிக் கூண்டு உள்ள பகுதியில் ஃபேன் காற்றும் சரியாக வராது.  அதனால், நீதிபதிக்காக உள்ள ஃபேனிலிருந்து காற்று வரும் அளவில், ஜெ.வுக்கு குற்றவாளிக் கூண்டுக்கு முன்பாக நாற்காலி போடப்பட்டிருந்தது.  சசிகலா, சுதாகரன், இளவரசி மூவரும் குற்றவாளிக்கூண்டுக்குள் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்தனர்.

      ஜெ.தரப்பில் வழக்கறிஞர்கள் பி.குமார், அசோகன், ராஜன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.  சசிகலாவுக்காக வழக்கறிஞர் கந்தசாமி, சுதாகரனுக்காக வக்கீல் சரவணகுமார், இளவரசிக்காக மனோஜ்பாண்டியன் ஆகியோர் ஆஜராயினர்.  வெளியிலிருந்த முன்னாள் சபா பி.ஹெச்.பாண்டியனும் தன்னை உள்ளே அனுமதிக்க வேண்டும் என சண்டைபோட்டு, உள்ளே சென்றுவிட்டார்.  கோகுல இந்திராவை உள்ளே அனுப்புமாறு ஜெ. தரப்பிலிருந்து சொல்லப்பட அவரும் அனுமதிக்கப்பட்டார்.  தமிழக அமைச்சர்களும் அனுமதிக்கப்பட்டனர்.  ஜெ.சார்பிலான இந்த படைக்கு முன் ஒற்றை ஆளாக நின்று எல்லாவற்றையும் எதிர்கொண்டார் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யலு.  அவருக்கு உதவியாக அவரது ஜூனியர் சந்தோஷ் இருந்தார்.


      சொத்துக் குவிப்பு வழக்கில் 249 சாட்சிகள் விசாரிக்கப்பட்டிருந்தனர்.  அவர்களின் சாட்சியங்களிலிருந்து மொத்தம் 412 கேள்விகளை நீதிமன்றம் தயாரித்திருந்தது.  ஜெ.விடம் கேள்விகளை கேட்கத் தொடங்கினார் நீதிபதி மல்லிகார்ஜூனய்யா.  அவருடைய குரல் மென்மையாகவும் கேள்விகள் துளைத்தெடுக்கும் வகையிலும் இருந்தன.

       போயஸ் கார்டனிலிருந்த தங்க நகைகள் குறித்த கேள்விகளிலிருந்து விசராணை ஆரம்பமானது.  '28 கிலோ நகைகளை கைப்பற்றியிருக்கிறார்கள்.  இந்த நகைகள் எப்போது வாங்கப்பட்டன. எப்படி வாங்கப்பட்டன?' என்று நீதிபதி கேட்க, 'எனக்கு நினைவில் இல்லை', என்று ஜெ. பதில் சொல்லியிருக்கிறார்.  போயஸ் கார்டனிலிருந்த வைரங்கள் பற்றியும், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள பங்களாக்கள் பற்றியும் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் ஜெ.விடமிருந்து, 'தெரியாது', 'நினைவில் இல்லை', 'இது தவறான குற்றச்சாட்டு' என்ற ரீதியிலேயே பதில் வந்துள்ளது.

      மதிய உணவு இடைவேளை வந்தபோது, பெங்களூருவில் உள்ள 'இஸ்கான்' என்ற சேவை அமைப்பினரின் பிரபலமான தயாரிப்பின் தரமான ஆரோக்கிய உணவு ஜெ.வுக்கும் மற்றவர்களுக்கும் வழங்கப்பட்டது.  பின்னர் தொடர்ந்த கேள்விகளிலும் ஜெ.விடம் வலிமையான கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தார் நீதிபதி.

       'பி.சுப்ரமணியம் என்பவரின் 59 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சசிகலா வாங்கியிருக்கிறார்.  நீங்கதான் சீஃப் மினிஸ்டர்.  உங்கள் வீட்டில்தான் அவர் இருக்கிறார்.  (குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் தங்கள் முகவரிகளாக 36-போயஸ்கார்டன் - சென்னை-600 086 என்றுதான் குறிப்பிட்டுள்ளனர்)  அந்த சொத்தின்மீது உங்களுக்கு என்ன இன்ட்ரஸ்ட்?'  என்று நீதிபதி கேட்க, 'எனக்கு அதுபற்றித் தெரியாது.  எனக்கு அதில் தனிப்பட்ட ஆர்வமில்லை' என்று ஜெ.பதிலளித்தார்.

      மாலை 4 மணி வரை 359 கேள்விகள் முடிந்திருந்தன.  இதில் 80 முதல் 90 கேள்விகளுக்கு, 'எனக்குத் தெரியாது என்றும் 100 முதல் 130 கேள்விகளுக்கு :அது பற்றி என் கவனத்திற்கு வரவில்லை அல்லது தவறானத் தகவல் என சொல்லியிருக்கிறார்.  மீதி கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார்.  மிச்சமுள்ள 163 கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை பதிலளிப்பதற்காக கோர்ட்டில் ஆஜராகவேண்டும் என்று நீதிபதி மல்லிகர்ஜூனய்யா உத்தரவிட, ஜெ. சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.குமார், 'எனது கட்சிக்காரர் தேசியவளர்ச்சி ஆணையக் கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும்.  தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன, அதனால் முதல்வர் என்ற முறையில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பணி இருக்கிறது' என்று தெரிவித்தார்.  நீதிமன்றம் இந்த காரணங்களை ஏற்கவில்லை.  மறுநாளும் ஆஜராக வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார் ஜெ.

       இதன்பின், ஒவ்வொரு கேள்வியும் அதற்கு ஜெ. சொன்ன பதிலும் பதிவு செய்யப்பட்ட காகிகதங்களில் கையெழுத்துப் போடவேண்டிய படலம் ஆரம்பமானது.  4.15 க்கு கையெழுத்துப் போடத் தொடங்கிய ஜெ. 5.10 வரை கையெழுத்திட்டார்.  இடையில், அவருடைய பேனாவில் இங்க் தீர்ந்துவிட்டதால், புதுப் பேனா தரப்பட்டது.  கையெழுத்துப் போட்டுவிட்டு ஜெ. வெளியே வந்தபோது, மணி 5.20.

       ஜெ.வின் வழக்கறிஞர் பி.குமாரிடம் நாம் வழக்கு விசாரணை பற்றிக் கேட்டபோது, ''அரசுத்தரப்பு சாட்சியங்களின் அடிப்படையில் 313 ஸ்டேட்மென்ட் பெறப்பட்டுள்ளது.  இன்னும் டிஃபன்ஸ் தரப்பு சாட்சியங்களை விசாரிக்கவேண்டும்.  அதிலும் 200 க்கும் மேலான சாட்சியங்கள் எங்கள் தரப்பில் உள்ளன'' என்றார்.

      வெள்ளியன்றும் விசாரணையை எதிர் கொள்ள வேண்டும் என்பதால் பெங்களூரிலேயே ஜெ. தங்குவதற்கு இடம் பார்க்கப்பட்டது.  பின்னர், அது சரிவராது என சென்னைக்கு ஸ்பெஷல் ஃப்ளைட்டில் திரும்பி, மறுநாள் அதே ஃப்ளைட்டில் பெங்களூரு வரலாம் என முடிவெடுக்கப்பட்டது.

       ஜெ.வை பயப்படவைத்துள்ள இந்த சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையை வேறு எந்தெந்த வகைகளில் இழுத்தடிக்கலாம் என ஆலோசிக்கத் தொடங்கிவிட்டது அவரது வழக்கறிஞர்கள் குழு.

------பெங்களூரிலிருந்து பிரகாஷ்.
----நக்கீரன்--அக்-22-25-2011
**********************
பொது ஜனம்; எப்படியாவது தீர்ப்பு வந்து தண்டனை கொடுத்தா புண்ணயமா போகும்!

பொது ஜனம்; எல்லோரையும் ராஜினாமா செய்! என்று கூறும் ஜெயலலிதா மட்டும் குற்றவாளி கூண்டிலேயே நின்னுட்டு வந்துருக்கு! இன்னும் ராஜினாமா பண்ணலையே!

பொது ஜனம்; அதுதான் சொல்லிச்சே! குற்றம் செஞ்சவங்க பொம்பளையா இருந்தா என்ன? ஆம்பளையா இருந்தா என்ன? குற்றவாளி குற்றவாளி தான்னு பெரிய உத்தமராட்டம் சொல்லுச்சே, அது கனிமொழிக்கும் மட்டும் தானா? இதுக்கு இல்லையா? 

பொது ஜனம்; ராஜினாமா பண்ணும்பா! அதுதான் உச்சநீதிமன்றத்திலே அதுக்கும் வழக்கு போட்டிருக்காங்களே!



No comments: