Pages

Monday, 4 March, 2013

அன்று வந்த சோதனை

 
''எனக்கு ஏற்பட்ட பழி நீங்கிவிட்டது.  முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்'' என்றொரு அறிக்கை வெளியிட்டார் தந்தை பெரியாரவர்கள்.  தமிழ்நாட்டு அரசியலின் போக்கையே மாற்றிப் போட்டுவிட்ட 1971-ம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள் தெரிந்த பின்னர் தான் மேற்கண்ட அறிக்கை.

தேர்தல் முடிவுகளும் -துவக்கமும் -இடையிலேயும் நடைபெற்ற சம்பவங்கள்தான் அவை.  வழக்கமாய் பயன்படுத்தப்படும் 'வரலாற்றை மாற்றியது' என்ற சொற்பிரயோகம் இதற்குத்தான் முழுக்க முழுக்கப் பயன்படும்.

இந்தத் தேர்தல் முடிவுகள்…

 *வழக்கமான மத்திய-மாநில அரசுகளின் உளவுத்துறைகளின் துல்லியமான தேர்வு முடிவு கணிப்பு அறிக்கைகளையே நூற்றுக்குநூறு மாற்றிக் காட்டினது.

 *இந்திய அரசியலில் நேரு பண்டிதரின் அச்சத்திற்குரிய அறைகூவலுக்கே உரியவர் மூதறிஞர் என்றெல்லாம் பாராட்டப்பட்ட ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) ஏறக்குறைய அரசியலை விட்டே ஒதுங்கி விட்டார்.  அவருடைய வருத்தம் 'தோற்றோம்' என்பதல்ல.  'யாரிடம்' தோற்றோம் என்பதுதான்.  (இது பெரியார் சொன்னது)

   *வெற்றி பெற்றாலும் கலைஞரும் அவருடைய அமைச்சரவையினரும் பெருந்தலைவர் காமராசரிடம் காட்டிய பணிவும் -மரியாதையும் - காமராசரின் அணுகு முறையிலேயும் சிந்தனைப் போக்கிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டன.  "GREAT AS WARRIORS GREATEST AS VICTORS"  (போரில் வீரராகவும் வெற்றியில் மாவீரராகவும்) கலைஞர் நடந்துகொண்டதே காரணம்.
 
இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் காரணம் அந்தத் தேர்தல்தான்.  பதவிக்காலம் இன்னும் ஓராண்டு இருக்கும் போதே முதல்வர் கலைஞர் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு 1971-ல் பாராளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலையும் சந்தித்தார்.  பலருக்குத் தலைவர் கலைஞர் பேரில் கோபம்.

தங்கள் நாற்பதாண்டுகால பகையை மறந்து ராஜகோபாலாச்சாரியாரும் பெருந்தலைவர் காமராசரும் களமிறங்கியது பலருடைய கலக்கத்திற்குக் காரணமாகி விட்டது.  தேர்தலுக்கு முன் அந்த பெருங்கூட்டணி (GRAND ALLIANCE) யின் வெற்றிக்காக ராஜகோபாலாச்சாரியார் காமராசரை வாழ்த்தி அவர் நெற்றியில் திலகமிட்டார்.  ஆனால் அது வெற்றித் திலகமாய் அமையவில்லை.  காரணம் எளிதானது.  அதற்கு நான்கு ஆண்டுகள் முன்னர் 1967-ல் இதே ராஜகோபாலாச்சாரியார் தி.மு.க வை தேர்தலில் ஆதரித்துத் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.  ராஜகோபாலாச்சாரியாரை சேர்ந்தவர்களும்- சார்ந்தவர்களும் 'பெரியாரின் சீடர்களுக்கு ஓட்டுப் போடச் சொல்கிறீர்களே' என்று கேட்டார்கள்.  ராஜகோபாலர் வழக்கம் போல் ராமாயணத்திலிருந்து மேற்கோள் காட்டினார்.  ராமன் சொன்னான், ''யுத்தம் சீதையை மீட்க அல்ல, இராவணனைக் கொல்வதற்கே'' என்று.

''தேர்தலில் தி.மு.க. வுக்கு ஆதரவு தருவது காமராசரை வீழ்த்தவே'' என்றார் 1967-ல்.  அதுபோலவே காமராசருக்கு ராஜகோபாலரின் வெற்றித் திலகம் காமராசரின் வெற்றிக்கல்ல.  கலைஞரை வீழ்த்தவே என்பதை யார் புரிந்து கொண்டார்களோ இல்லையோ சாமான்யமான வாக்காளர்கள் புரிந்து கொண்டார்கள்.

இந்தப் பெரிய பிரச்சினைக்குள் சின்னவன் நீ எங்கே வந்தாய்' என்று நீங்கள் கேட்கலாம்.  இங்கிருந்து மறக்க முடியுமா தொடர்கிறது.

கலைஞரின் கூட்டணியில் பெரிய வாக்கு வங்கியோ,  மக்கள் செல்வாக்கோ, தொண்டர்கள் வலிமையோ உள்ள கட்சிகள் இல்லை.

தேர்தலில் போட்டியிடாத -தி.மு.க. வை ஆதரித்த பெரியாரின் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் முகவர்களாய் பணியாற்றினார்கள்.  பெரியாரின் அனுமதியோடு அவர்களை அப்பணியில் அமர்த்தியவனே நான்தான்.

ஆர்வமிகுதியால் சில நண்பர்கள் புராண ஆபாசப் படங்களையும் ஊர்வலமாய் எடுத்து வந்தார்கள்.  இது பெரியாருக்குத் தெரியாமல் நடந்தது.  

 ஊர்வலத்தையும் மாநாட்டையும் தடை செய்ய வேண்டுமென்று மாநாட்டிற்குப் பந்தல் அமைக்கத் துவங்கும்போதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொங்கு சதையான இந்து மகாசபை மாவட்ட ஆட்சியரிடமும், கவர்னரிடமும் வேண்டுகோள்கள் கொடுக்கத் துவங்கினார்கள்.  இந்து மகாசபை -இன்றைய பா.ஜ.க.வின் தந்தையர் இயக்கமாகும்.

 
கலைஞரின் ஆட்சிதான் நடந்தது.  காவல்துறையினர் இருதரப்பிற்கும் வழியமைத்து நடுநிலையோடு நடந்து கொண்டார்கள்.  

 ஊர்வல ஒலி முழக்கங்கள் கூட முறைப்படுத்தப்பட்டன.  இந்து மகாசபையினர் நடத்திய கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு இடம் ஒழுங்கு செய்து பாதுகாப்பும் காவல்துறை கொடுத்தது.  ஆனால் அவர்கள் திட்டமிட்டு வந்தது பெரியாரின் பேரிலேயே செருப்பை வீசி -அது பெருங்கலவரமாகி துப்பாக்கிச் சூடு வரை கொண்டு போய் அதைத் தேர்தல் பிரச்சாரமாக்க எண்ணி இருந்தார்கள் என்பது.

 'சோ'வின் 'துக்ளக்' இதழ் வெளியிட்ட கார்ட்டூன்களும் அதையே பல லட்சம் சுவரொட்டிகளாக்கி தி.மு.க.விற்கு எதிராகத் தமிழகம் துவங்கி இந்தியா பூராவும் ஒட்டியதும் நிரூபித்தது.
 

'பெரியார் வாழ்க… பெரியார் வாழ்க' என ஆவேசமாய் முழக்கமிட்டார்கள்.

 பெரியார் வண்டிதான் பக்கத்தில் வருகிறது என்று தவறாக எண்ணிய இந்து மகாசபைக் கூட்டம் காவல்துறையினருக்குத் தெரியாமல் வைத்திருந்த கருப்புக்கொடியைக் குச்சியோடு வெளியே எடுத்து உயர்த்தினார்கள்.  எல்லா கம்புகளிலும் பழைய செருப்புகள்.  கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செருப்புக்கொடி ஆர்ப்பாட்டமாகி 'ஒழிக' கோஷத்தோடு அவர்கள் சரமாரியாய் செருப்புகளை வீசினார்கள் எங்கள் பேரில்.
 
லாடம் கட்டிய செருப்பொன்று வண்டியின் மேல் நின்றிருந்த என் மேல்பட்டு ரத்தம் கொட்டியது. எனக்கோ ஆத்திரம்.  என்னுடைய வண்டியைச் சுற்றி இருந்த தோழர்களோ வெறி கொண்ட வேங்கையானார்கள்.  காவல்துறை வளையத்தை உடைத்துக் கொண்டு கருஞ் சட்டை வெள்ளம் உள்ளே பாய -போலீசார் தடியடி நடத்தி கருஞ்சட்டைத் தோழர்களை தடுத்துக் கொண்டிருக்க இந்து மகாசபை கூட்டம் கலைந்தோடியது.

மாநாட்டில் பெரியார் பெண்ணுரிமையை வலியுறுத்தும் தீர்மானமொன்றைத் தனது பாணியில் சற்றுக் கூடுதல் அழுத்தம் கொடுத்து நிறைவேற்றினார்.

அத்தனை ஆதிக்க சாதிப் பத்திரிகைகளும் ஓர் குரலாய் எதிர்ப்புக் குரல் கொடுத்தார்கள்.  ''ராமனை அவமரியாதை செய்த கட்சிக்கா உங்கள் ஓட்டு?'' என்ற ஒற்றை வரி முழக்கமே எதிரணியின் தேர்தல் திட்டமானது.

நாடெங்கும் பரபரப்பு தங்களுக்குச் சம்பந்தமில்லாதது என்று உணராத மாணவ-மாணவிகளையும் தி.மு.க. அணிக்கு எதிராகக் களம் இறக்கினார்கள்.  சேலம் தி.க. மாநாட்டின் தீர்மானத்திற்காக தி.மு.க. வேட்பாளர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டுமெனத் திருச்சியில் அண்ணன் அன்பில் தர்மலிங்கம் (முன்பு நான் படித்த) தேசிய கல்லூரி மாணவர்களால் வாக்குக் கேட்காமல் தடுக்கப்பட்டார். 

 ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனையே கடித்த கதையாய் திருச்சியில் பெரியார் சிலையைக் கல் வீசித் தாக்கினார்கள்.  நான் வேகமானேன்.  அப்போது திராவிடர் கழகத் தலைவர் மூத்தவர்கள்  'நிலைமையை இன்னும் மோசமாக்க வேண்டாம்'  என்று என்னைத் தடுத்தார்கள்.  'உனக்குத்தான் ஆபத்து' என்றார்கள்.  காரணம் சேலத்தில் நடந்த ஊர்வலத்தில், நடந்த சம்பவங்கள் பெரிதாகி ஊரெங்கும் கண்டன ஊர்வலமாகத் தகராறுகளும் நடக்க நானே காரணம் என்பது சிலரின் கருத்து.

இரண்டு நாட்கள் நான் பெரியாரையே பார்க்கவில்லை.  மூத்த தலைவர்கள் சொன்னதையும் கேட்கவில்லை.  'முள்ளை முள்ளாலேயே எடுக்க முடிவு செய்தேன்.  கட்சி சார்பற்ற மாணவர்களையே முழுவதுமாய் கொண்ட பெரிய ஊர்வலம் நடத்தி நடந்த செயலுக்கு மாணவர்கள் பெரியாரிடம் வருத்தம் தெரிவிக்கச் செய்வது எங்கள் திட்டம்.  திட்டம் வென்றது.  கடும் உழைப்புக்குப் பயன் கிடைத்தது.

இன்றைக்குத் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் இருக்குமிடம் அப்போது பெரிய திடல்.  எங்கு பார்த்தாலும் மாணவர்கள்.  அப்போது பேருந்தில் சென்ற ஒருவர் ஊர்வலத்தில் வந்த மாணவர்களைப் பார்த்து ஏதோ கை நீட்டித் திட்ட மாணவர்கள் பேருந்துக்குள் ஏறி விட -கலவரம் வெடித்தது.  வழியெங்கும் கலவரம்.

ஊர்வலம் பெரியார் மாளிகைக்குப் போயிற்று.  மாணவர்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் பெரியாரே வெளியே வந்தார்.
 
...திருச்சி செல்வேந்திரன்..சேயின் நோய்க்கு மருந்துண்ட தாயான தலைவர்கள்!....நக்கீரன் வெளியீடு....தொடர்ச்சி பகுதி 6 ல் தொடரும்..தலைப்பு ''அய்யாவைப் பற்றி அம்மையார்''

No comments: