Pages

Saturday, 2 March, 2013

தலைவர் காமராசர்...லைவர் காமராசர் அப்போது முதலமைச்சர் அவருடைய அளவிற்கரிய சாதனைகளைப் போலவே அவருடைய கோபமும் ஊரறிந்தது.  அதுவும் மதிய உணவுநேரக் கோபம் உலகறிந்தது.  உள் நோக்கமில்லாதது. ஒரே நொடியில் நிலைமையை உணர்ந்ததும் அமைதியாகிவிடக் கூடியது.

காமராசரின் கட்சி பெரியாரின் திராவிடர் கழகத்தோடு நெருக்கமாய் இருந்த 1961-62-ம் ஆண்டு.  நான் திருச்சி நகர திராவிடர் கழகச் செயலாளர் திருச்சியில் நிலமில்லா விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட வட்டாட்சியர் பற்றி புகார் சொல்வதற்கு முதலமைச்சர் காமராசரை ஒரு குழுவாய்ச் சென்று சந்தித்தோம்.  முதலமைச்சர் காமராசரை முன்னேற்பாடு இல்லாமல் யாரும் அதிலும் குறிப்பாய் வெளியூர் பொதுமக்கள் சந்திக்கலாம்.  அன்றைய அமைச்சர்களில் பார்வையாளர்களை சந்திப்பதில் அதிக கெடுபிடி காட்டுபவர்கள் பக்தவத்சலமும், கக்கனும்தான் (எங்கள் அனுபவத்தில்)  காரணம் இருவருக்கும் தந்தை பெரியார் என்ற பெயரே பிடிக்காது

அன்று மதியம் ஒன்றரை மணி.  முதலமைச்சர் அறையின் வாசலில் வரிசையாய் நின்றவர்கள் ஒவ்வொருவராய் உள்ளே போனார்கள்.  முதலமைச்சரிடம் நேர்காணல்…  எங்கள் குழுவில் எல்லோருக்கும் அதுவே முதல் முறை.

காமராசர் மேசையின் பின் அமர்ந்து பேசமாட்டார்.  சற்று சாய்ந்த நாற்காலி பக்கத்தில் ஒரு கைமேசை (டீபாய்) அவ்வளவே.  கையிலிருந்த மனுவை நீட்டு முன்பே 'இருக்கட்டும் இருக்கட்டும்' என்றார்.  நான் சொல்லத் துவங்கினேன்.

'அய்யா… நாங்கள் திருச்சிலேர்ந்து வர்றோம்.  எங்க ஊர் தாசில்தார்…''  என்ற செய்தியை இரண்டு வரிதான் சொல்லியிருப்போம்…

திடீரென்று வெடித்தார் ''ஏ… நாட்டுல ஒரு தாசில்தார்தான் இருக்கானா… ஆயிரம் பேர் இருக்கான்… எவனைப் போய் கேக்கிறது… எழுதிக் கொண்டாந்திருக்கியா'' என்றார்.

அப்போது என் வயது இருபத்தொன்று.  எவ்வளவு பெரிய தலைவர் முன் நிற்கிறோம் என்று ஏற்கனவே இருந்த பதற்றத்தில் மேலும் பதற்றம்…

''என்ன… என்ன… முழிக்கிறே… மனு கொண்டாந்திருக்கியா…'' என்றார்.  உடன் வந்த நண்பர்கள் கையிலிருந்த பையைத் திறந்து கத்தையாய் இருந்த காகிதங்களில் இருந்து பொறுக்கி எடுத்து விண்ணப்பத்தைக் கொடுத்தார்கள் வாங்கிக் கைமேசையில் வைத்துக்கொண்டார்.

மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.  எவ்வித நடவடிக்கையும் இல்லை.  மீண்டும் சென்னைக்குப் படையெடுத்தோம்.  காலையிலேயே இம்முறை வேண்டுகோளைக் கொடுத்துவிட முயன்றோம்.  சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றதால் முதல்வர் காமராசர் சீக்கிரவே புறப்பட்டுவிட்டார்.  மறுபடியும் மதியம் ஒன்றரைமணி, பசி நேரம்… பயத்துடன்தான் முதல்வர் அறை வாசலில் பார்வையாளர் வரிசையில் நின்றோம்.

எங்கள் முறை வரும்போது மணி இரண்டு.  காமராசர் படபடவென்று பார்வையாளர்களைப் பார்த்து அனுப்பிக் கொண்டிருந்தார்.

கடந்த முறை அனுபவத்தில் தட்டச்சு செய்திருந்த வேண்டுகோளைக் கையிலெடுத்துக் கொண்டு உள்ளே போனோம்.  தாளைக் கையில் கொடுத்தேன்.  வாங்கி மேசையில் வைத்தார்.

அதே கனமான அதட்டும் குரல் '' என்ன… என்ன… என்னேன்னேன்'' என்றார்.
'அய்யா… எல்லா விவரமும் அதில் எழுதியிருக்கோம்'' என்று இழுத்தேன். படீரென்று வெடித்தார்.  ''மூளை இருக்கா?  ஒவ்வொருத்தரும் ஒரு கத்தை எழுதிக்கிட்டு வர்றியே எல்லாத்தையும் படிச்சுக்கிட்டே இருக்க முடியுமா…  மூளை இருக்கான்னே…'' என்றார் பெருங்குரலில்.

எனக்கு கோபம் இளம்கன்று பயமறியாதல்லவா!  நான் முதல்வரிடம் கொடுத்த எங்கள் கோரிக்கை கடிதத்தைக் குனிந்து சட்டென்று எடுத்துக்கொண்டு வெளியேப் போகத் திரும்பினேன்.

பயங்கர பூகம்பம்…!  தலைவர் காமராசர் போட்ட சத்தத்தில் வெளியிலிருந்த காவலரெல்லாம் உள்ளே வந்துவிட்டார்கள்…

''ஏன் எடுத்தே… ஏன் எடுத்தே… ஏய் என்ன செய்யுறே…'' என்றார் காமராசர் கடுங்கோபத்துடன்.

நான் கொஞ்சம் நிதானமானேன்.  ''வாயால் சொன்னாலும் சத்தம் போடுறீங்க…  காரியம் ஒண்ணும் ஆகலே…  தாசில்தார் எங்களுக்குத் தொல்லை கொடுக்கிறான்… கோரிக்கையும் வேணாம்.  நடவடிக்கையும் வேணாம்…  நாங்க போறாம்…'' என்றேன்.

அப்போதுதான் மாமனிதர் காமராசர் வெளிப்பட்டார்.

''சரி… சரி… அதெக்குடு நான் கவனிக்கிறேன்'' என்றார்.  அமைதியான கோபம் அடங்கிய குரலில்.

'மன்னிச்சுக்கங்கய்யா நாங்க போறாம்'' என்றேன்.

''ஏ… அவங்கிட்டே அதை வாங்கு.  சிறு பையன்…  சிறு பையன்…  கோபப்படுகிறான்… அதைக்கொண்டா'' என்றார்.  ஓரிரு விநாடிகள் முரண்டுக்குப்பின் நண்பர்களிடம் கோரிக்கை மனுவைக் கொடுத்தேன்.

''நீ தானே எடுத்தே, நீயே கொண்டா'' என்றார் மென்மையான குரலில்.  நான் நெகிழ்ந்து விட்டேன்.  இந்த முறை சற்றுக் குனிந்து வணங்கி அவர் கையில் கொடுத்தேன்.

''பைத்தியக்காரா…  பொதுக்காரியத்துக்கு வரும்போது கோபப்படக்கூடாது.  நீ என்ன செய்யறே'' என்றார்.

உடன் வந்த நண்பர்கள்,  நான் விவசாயம் செய்பவன் என்றும், திராவிடர் கழகத்தவன் என்றும் தந்தை பெரியார் எங்கள் குடும்ப நண்பர் என்றும் சொன்னார்கள்.  காமராசர் ''அதான்…  அதான்…'' என்றார்.  அந்த அதானுக்கு பொருள் என்னவென்று இன்றும் புரியவில்லை.

முதல்வரிடம் தந்த கோரிக்கை மனுபேரில் இரண்டாம்நாளே ஆய்வு தொடங்கியது.  தாசில்தாருக்கு வேலையே போய்விட்டது.

....திருச்சி செல்வேந்திரன்..(தி.மு.கழக வெளியீட்டுச் செயலாளர்)சேயின் நோய்க்கு மருந்துண்ட தாயான தலைவர்கள்!.....நக்கீரன் வெளியீடு...பகுதி 4 ல் தொடரும்..தலைப்பு ''கலைஞரை பாராட்டிய காமராசர்''


No comments: