Pages

Monday, 4 March, 2013

பெரியாரின் அன்பர் மகாசன்னிதானம் குன்றக்குடி அடிகளார்

 இனப்பற்றாளர் இறைத்தொண்டர் - பெரியாரின் அன்பர் மகாசன்னிதானம் குன்றக்குடி அடிகளார்
மிழகத்தைப் பொருத்தவரை நாத்திகம் என்பது கீழ்ச்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும், ஆத்திகம் என்பது மேல்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும் ஆகிவிட்டதை ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கின்றது.'' என்ற புதிய சித்தாந்தத்தைச் சொன்ன புரட்சித் துறவிதான் திருவண்ணாமலை ஆதீன கர்த்தர் குன்றக்குடி மகாசன்னிதானம் புகழுடம்பு எய்திவிட்ட மகாசன்னிதானம் தெய்வசிகாமணி அடிகளார்.

தஞ்சை மாவட்டத்தில் பிறந்த ரெங்கநாதன் தருமபுரம் ஆதீனம் கட்டளைத் தம்பிரானாகத் தொடங்கிச் சமயப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பின்னர்க் குன்றக்குடி சன்னிதானமாய்ப் பரிணாமம் பெற்றவர்.

சன்னிதானத்தின் கல்வி என்பது சமய நூல்கள் அதிலும் அதிகமாய்ச் சைவ நூல்கள்- அது குறித்த ஆய்வு- பதவுரை பொழிப்புரை- என்பதோடு முடித்துவிடுவதுதான் வழக்கம்.

குன்றக்குடி அடிகளின் கல்வியும் பணியும் அதற்கு முன்னும் பின்னும் இருந்த ஆதீனங்களின் எல்லை தாண்டியது விரிவானது, விசாலமானது, ஆழமானது. துணிச்சல் மிக்கது அதனால் கடும் கண்டனத்துக்கு ஆளானது.  அரசின் குற்றவியல் சட்டப்படி தண்டமே விதிக்கப்பட்டது.


தமிழ்நாட்டின் சமய நிறுவனங்கள் என்பவை 

சைவம் - வைணவம் - அதில் வடகலை - தென் கலை இன்னும் பல்வேறு நம்பிக்கையுடன் மடங்கள், நிறுவனங்கள் எனப் பல இருந்தன, இருக்கின்றன.

அவை கடந்த நூற்றாண்டில் இந்து சமய ஆட்சித்துறை என்ற அரசின் கட்டுப்பாட்டிற்குள் வேறு பல நல்ல நோக்கங்களுக்காகக் கொண்டுவரப் பட்டன.   காலப் போக்கில் ''கறையான் புற்றெடுக்கக் கருநாகம் புகுந்த கதையாகிவிட்டது.''  கடந்த 1947 க்குப் பின்னர் மெல்ல மலைப் பாம்பு இரையை வளைப்பது போல் காஞ்சி சங்கரமடம் தன்னுடைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அனைத்து இந்து சமய நிறுவனங்களையும் தன் குடைக்கீழ் இந்து மதம் என்ற பெயரால் கொண்டுவரத் தொடங்கியது.  அந்தக் கைங்கர்யம் எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனவுடன் பரிபூரணத்துவம் பெற்றுவிட்டது.  இந்து மதம் என்றால் காஞ்சி சங்கரமடம், அதன் தலைமை, சங்கராச்சாரியார்களே.  இந்து மதத்தின் போப்பாண்டவர்கள் சங்கரர்களே என்ற நிலைப்பாட்டை எவ்வளவு வலிமையானதாக்க முடியுமோ அவ்வளவு வலிமையாக்கினார்கள்.

இந்தியத் தலைமை அமைச்சர் முதல் மாநில முதல்வர்கள்- நடுவணரசு அமைச்சர்கள்- பெரிய பெரிய அரசு அதிகாரிகள்- கவர்னர்கள் யாவரும் தமிழ்நாட்டிற்கு வந்தால் காந்தி நினைவிடத்திற்குப் போகிறார்களோ இல்லையோ காஞ்சி மடத்திற்குச் செல்வதும் - முக்கால் நிர்வாணமாய்ச் சங்கர மடத்தலைவரிடம் போய்க் கைகட்டி நிற்பதும்- முக்காலே மூணுவீசம் நிர்வாணமாய் நின்று சங்கராச்சாரி ஆசீர்வாதம் செய்வதும் - அரசாங்க விழாக்களில் தேசிய கீதம் பாடுவது போல் தவிர்க்க இயலாத நிகழ்ச்சி நிரல் ஆகிப்போனது.

இந்த நிறுவனம் அந்த 1950 களிலேயே பல்வேறு சட்ட - சம்பிரதாய விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருந்தது என்பது சுவையான செய்தி.

மேற்சொன்ன இப்படிப்பட்டதொரு சூழ்நிலையில் தான் குன்றக்குடி தெய்வசிகாமணி அடிகளார் குன்றக்குடி மடத்தலைவராகிறார்.  இயல்பாகவே நல்ல பேச்சாற்றலும்-செழுமையான சொல்வளமும் - மிக்க குன்றக்குடி அடிகளாருடைய சொற்பொழிவுகள் எல்லாத் தரப்பினரையும் கவர்ந்தனபெருங்கூட்டத்தை ஈர்த்தன.

ஆன்மீகம் - ஆத்திகம் என்பதே மேல் சாதி மக்களின் நலன் போல் பேணப்பட்ட உருவாக்கப்பட்ட தத்துவம் என்பதை அடிகளார் சொன்னதைக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறியிருக்கிறோம்ஆனால், இதை அடிகளாரே உணர்ந்து கொள்ள அவருக்கே கால் நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டதுதான் கொடுமை.

கௌதம புத்தனுக்கு ஞானம் போதி மரத்தடியில் பிறந்தது போல் அடிகளாருக்கு இது புரிந்தது திருச்சி பொன்மலையில்.  புத்தனுக்குப் பகுத்தறிவில்லாத மரத்தினடிஅடிகளாருக்குப் பகுத்தறிவு இயக்கத் தலைவர் தந்தைபெரியாரின் அண்மை!

ஆன்மீகம் உண்மையென்றால் ஆன்மிக நூல்களுக்கு விளக்கவுரை சொல்வது தானே!      

அதற்குமேல் இறைவனுக்கு ஏற்பட்ட வேலையே எதிரிகளை அழிப்பதும் வேண்டியவர்களை வாழவைப்பதும் தானே.  இன்றைய வல்லரசு நாடுகளுக்கு வழிகாட்டியே இறைவன்தான் போலிருக்கிறது.  ஆன்மிகமும் - ஆன்மிக உரைகளும் நல்லவர்களை வாழ்த்தியதோ இல்லையோ எதிரிகளை தாக்கியதுஅழித்ததுசிலரை அழிக்க முயன்று தோற்றது.

அடிகளாரும் இந்த வழக்கமான ஆன்மிக மேடை உரைகளிலிருந்து தொடக்கத்தில் விலகி விடவில்லைபெரியாரும் - பெரியாரின் பகுத்தறிவு இயக்கமும் அடிகளாரின் கடுந்தாக்குதலுக்கு உள்ளாயின.  ஓரிரு இடங்களில் பெரியாரின் திராவிடர் கழகத்தினரும் இதற்குப் பதிலடி கொடுத்தனர்.

அந்த நேரத்தில்தான் பெரியாரும் மகா சன்னிதானமும் கலந்து கொள்ளும் பொன்மலை நிகழ்ச்சி அமைந்ததுஅதுதான் சன்னிதானத்தின் வாழ்வில் ஒரு திருப்புமுனையாயும், சமய உலகிற்கு ஒரு ஆச்சரியமாகவும் சனாதன (பார்ப்பனர்) உலகிற்கு ஒரு பேரதிர்ச்சியாகவும் அமைந்ததுபொன்மலை நிகழ்ச்சிக்குப் பின்னர் அடுத்தடுத்துப் பெரியாரும் - அடிகளாரும் கலந்து கொண்ட பலநிகழ்ச்சிகள் தொடர ஆரம்பித்தனதமிழர்கள் இடையில் இது மாபெரும் வரவேற்பைப் பெற்றதுஅதே சமயம் அடிகளார் உருவாக்கிய அருள் நெறித்திருக்கூட்டம் தெய்விகப் பேரவை போன்ற அமைப்புகளுக்கு அடிகளார் பேரில் கடும் கோபம் ஏற்பட்டு, சிலர் கண்டனமும் செய்யத் தொடங்கினர்.

ஏற்கனவே இது போன்ற மக்கள் அமைப்புகளைச் சமய மடத்தின் சுவர்களைத் தாண்டி எடுத்துச் சென்று மக்கள் மத்தியில் அடிகளார் பெற்று வந்த புகழையும்- செல்வாக்கையும் காஞ்சி மடமும் உள்ளுக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்த பார்ப்பனர்களும் அவர்களுடைய அமைப்புகளும் அவர்களின் பத்திரிகைகளும் மேலும் ஊதிவிட்டு அடிகளாரையும் - அவருடைய அமைப்புகளையும் ஒரே கல்லில் அடித்துப் பல காய்களை வீழ்த்தும் உத்தியைக் கையாண்டனர்.

இதில் மறைமுகமாகச் சைவை சமய அமைப்பினரும் கலந்து கொண்டு ஒத்து ஊதினார்கள்அடிகளார் அடங்கிவிடுவார் என்று கற்பனை செய்தார்கள்விளைவு வேறுவிதமாக மாறிவிட்டது.

ன்னைவிட பாதி வயதே உடையவரும் - மாற்றுக் கருத்துக் கொண்டவருமான குன்றக்குடி அடிகளாரிடம் பெரியார் காட்டிய பண்பாடும் - அடிகளார் கலந்து கொள்ளும் மேடைகளில் பெரியார் தன்னுடைய கடவுள் மறுப்புக் கொள்கைகளைச் சொல்வதில் காட்டிய அணுகுமுறையும்பெரியாரின் திராவிடர் கழகத்து மாவட்ட அளவிலான தோழர்களின் பணிவும் அடிகளாரை நெகிழச் செய்துவிட்டன.  அடிகளாரின் அன்பர்களும் அந்தந்த ஊர்களில் இதே விதமாகப் பெரியார் தொண்டர்களால் நடத்தப் பட்டார்கள்அடிகளார்- பெரியாருடன் இணைந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்று முன்னிலும் அதிக உறுதி காட்டினார்கள்.

பெரியாரின் வழியில் பிரச்சினைகளை அணுகும் முறை அரசியலிலும் அடிகளாரிடமும் எதிரொலித்ததுகாமராசரின் இலவசக் கல்வித் திட்டத்தையும் பெரியாரின் வழியில் அடிகளார் ஆதரித்தார் இது அன்றைய தமிழகக் காவல் துறை அமைச்சராய் இருந்து பின்னர் முதலமைச்சராகவும் ஆகிவிட்ட பக்தவச்சலத்துக்கு மிகுந்த எரிச்சலூட்டியது.  காங்கிரசார் என்ற வேடத்திலிருந்து காமராசர் எதிர்ப்பாளர்கள் வேறு சிலருக்கும் இது பிடிக்கவில்லை.

இயல்பாகவே மொழிப்பற்றும் - இனப்பற்றும் மிக்க அடிகளாரை 1965 நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டமும் அதனை ஒட்டித் தமிழகத்தில் நடைபெற்ற காவல் துறை அடக்குமுறைகளும் உலுக்கியதில் வியப்பில்லைபெரிய கல்லூரிப் பட்டமோ, மொழிப்புலமையோ இல்லாத தி.மு.கழகத்தின் எளிய தொண்டர்கள் மொழிப்போரில் தங்களை மாய்த்துக் கொண்டது தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் உலுக்கியது.  போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களைப் பக்தவச்சலம் அரசினர் வரைமுறையின்றித் தாக்கித் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள்ஆன்றைய ஆளும் கட்சியினரும் நடைமுறைகளால் இன்று போலவே உள்ளூர்க்காரர்களை எரிச்சலூட்டினர்குன்றக்குடியில் நடைபெற்ற மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் உணர்வு மேலிடக் குன்றக்குடி ஆதீனம் காவி உடையுடனே வந்து கலந்து கொண்டது மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுகாவல் துறையினர் அடிகளாரைத் தனிமைப்படுத்தினார்கள்நீதிமன்றத்தில் அடிகளாருக்குப் பல நூறு ரூபாய்கள் தண்டம் விதிக்கப்பட்டது.

பெரியார் 1938-39 போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர்ஆனால் 1965 இல் நடைபெற்ற அந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் அதில் முக்கிய பங்கு கொண்ட அனைவரையும் கடுமையாகச் சாடி வந்த நேரமிதுகாரணம் 1938-39 இல் கட்டாய இந்தியைத் தமிழ்நாட்டில் கொண்டு வந்த ராசகோபாலச்சாரி (ராஜாஜி) 1965 இந்தி எதிர்ப்புப் போரில் முக்கிய நாயகராய் நின்றதைப் பெரியார் அய்யத்தோடு பார்த்தார்இது தமிழகத்தில் காமராசரின் அரசை வீழ்த்த இராசகோபாலர் கையாளும் அரசியல் சூழ்ச்சி என்றார்.ஆனாலும், அதே பெரியார் - அதே இந்தி எதிர்ப்புப் போரில் குன்றக்குடி சன்னிதானத்தைக் கைது செய்ததற்காகவும் இவருக்கு நீதிமன்றம் தண்டம் விதித்ததற்காகவும் மிகக் கடுமையாய் பக்தவச்சலம் அரசைக் கண்டித்தார்.  பெரியாரின் இந்த இரட்டை நிலை பலருக்குப் பேராச்சிரியத்தை ஏற்படுத்தியதுகுன்றக்குடி ஆதீனகர்த்தர் பேரில் அய்யாவுக்கு இருந்த பேரன்பைப் பலரும் மேலும் போற்றினார்கள்.

பின்னர் 1967 இல் ஆட்சியமைத்த பேரரிஞர் அண்ணா அடிகளாருக்கு தமிழக அரசு தண்டல் செய்த தொகையை மீண்டும் அவரிடமே திருப்பித் தரச் செய்தார்.  குன்றக்குடி அடிகளார் பேரவையில் உறுப்பினராகவும் ஆக்கப்பட்டார்இந்தியாவிலேயே சட்டப்படியான ஒரு ஆதீனகர்த்தர் முதன் முறையாக மேலவை உறுப்பினராக ஆக்கப்பட்டது நாத்திகர்கள் அரசு எனச் சைவ சமய அறிஞரான கிருபானந்தவாரி சுவாமிகளாலேயே வர்ணிக்கப்பட்ட தி.மு.க அரசால் தான்.  இது வருங்காலச் சமய உலகின் வரலாற்று ரீதியான ஆய்விற்குரிய ஒன்றாகும்.

தி.மு.க அரசு அமைந்த பின்னர்த் திருச்சி பெரியார் மாளிகையில் பெரியார் கல்வி நிறுவனங்களில் பெரியாரின் பிறந்த நாள் விழா நடைபெற்றது தந்தை பெரியார் அன்றைய கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன், குன்றக்குடி அடிகளார் நான் (செல்வேந்திரன்) யாவரும் கலந்து கொண்டோம்.

அந்த ஆண்டு பெரியார் தமது பிறந்த நாள் செய்தியாக- அவருக்கு அவருடைய மனைவியுடன் குடும்ப அளவில் இருந்த மனச்சங்கடங்களை மறைமுகமாகச் சொல்லி ''நான் துறவியாகிவடலாமா என்று பார்க்கிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார்இது பல்வேறு முனைகளில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது அப்போது பேரறிஞர் அண்ணா அமெரிக்காவில் இருந்தார்அறுவை சிகிச்சைத் துன்பத்திற்கு இடையிலேயும் தன் ஆசான் பெரியாருக்கு ஒரு ஆறுதல் கடிதம் எழுதியிருந்தார்.


மகா சன்னிதானம் குன்றக்குடி அடிகளார்தாம் அன்றைய விழாத் தலைவர்பெரியாரின் மேற்கண்ட துறவு பூணுதல் செய்தியைக் குறிப்பிட்டு ''அப்படித் துறவு மேற்கொள்வதானால் குன்றக்குடி மடத்துக்கு வாருங்கள்''  என்று அன்பழைப்பு விடுத்துப் பேசிப் பார்வையாளர்களின் இடையில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர்ப்பேசிய நான் (செல்வேந்திரன்) ''பெரியார் குன்றக்குடி மடத்திற்குப் போய்விட்டால் திராவிடர் கழகத் தலைமையை யார் மேற்கொண்டு இந்தப் பணியைச் செய்வதுஓர் இடமாற்றம் செய்து கொள்வோம்மகா சன்னிதானம் திராவிடர் கழகத் தலைமையை ஏற்கட்டும்பெரியார் குன்றக்குடி மடத்தலைவராகட்டும்மகா சன்னிதானம் அதற்காகச் செய்யும் அறிவிப்புப் பெரியாருக்கு மிகச் சிறப்பான பிறந்த நாள் பரிசாக அமையும்'' என்று பேச பார்வையாளர் இடையில் மிக உற்சாகமான கரவொலி, வரவேற்புஅரங்கம் மேலும் பரபரப்பானதுநாவலர் நெடுஞ்செழியன் என்னைப் பார்த்துக் கிண்டலாக ''என்ன அடிகளாருடனேயே பட்டிமன்றமா'' என்றார்ஏனென்றால் பட்டிமன்றம் என்றதொரு அமைப்பை- சிறப்பாயும் - ஆக்க பூர்வமாயும் எளிய மக்களும் உணரும் வண்ணம் எடுத்துச் சென்ற முன்னோடி அடிகளார்தாம்.

தந்தை பெரியார் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர பதிலொன்றும் சொல்லவில்லை.  அடிகளாரின் முடிவுரையை ஆவலுடன் எதிர்பார்த்தவர்களிடம் அடிகளார் ''பெரியாரே இது பற்றி ஏதும் சொல்லாததால் நான் செல்வேந்திரன் கோரிக்கையை தள்ளுபடி செய்கிறேன்'' என்று பட்டிமன்ற பாணியில் பதில் சொல்லி அரங்கிற்கு கலகலப்பு ஊட்டினார்.

பெரியார் அன்று உரையைத் தொடங்குமுன்புதான் என் நெஞ்சில் ஓடி, ஊனில் ஓடி, உயிரில் கலந்த அந்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் நடைபெற்றதுஅடிகளார் பெரியாருக்கு ஒரு பொன்னாடையை அணிவிக்கத் தன் இருக்கையிலிருந்து எழுந்து போய் அணிவிக்க முயன்றார்சாதரணமாய்ப் பெரியாரால் பிறர் துணையின்றி எழ முடியாதுஇருந்தாலும் பெரியார் அன்று தானே முயன்று எழுந்து கால்கள் நடுங்க நின்றார்அடிகளார் பெரியாருக்குப் பொன்னாடையை அணிவித்து வணக்கம் தெரிவிக்க பெரியார் கால்கள் நடுங்க - நடுங்கக் குனிந்து மகா சன்னிதானத்தின் கால்களைத் தொட்டு வணங்கினார்இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை.  வந்திருந்தோரில் பெரும்பகுதி திராவிடர் கழகத்தினார்மற்றவர்கள் பெரியார் பற்றாளர்களான அரசு அலுவலர்கள் - வணிகர்கள் - தொழில் அதிபர்கள்இதைப் பார்த்தவுடன் நிலவிய மயான அமைதி யாருமே இதனை ஏற்கவில்லை என்பதைக் காட்டிவிட்டதுமுதலில் இதனை எதிர்பாராத அடிகளார் அடுத்த விநாடியே சமாளித்துத் தடுக்க முயன்றார்ஆனால் அதற்குள் யாவும் முடிந்துவிட்டன.

மறுநாள் காலை திருச்சி பெரியார் மாளிகையில் கழக முன்னணியினர் யாவரும் கூடி நின்றனர் பெரியாரைச் சுற்றியாருமே முதல் நாள் நிகழ்ச்சியை விரும்பவில்லை என்றாலும் பெரியாரிடம் அதைச் சொல்லும் துணிவு யாருக்கும் இல்லை.

பெரியாரே பேச்சைத் தொடங்கினார்''என்னநேத்து எல்லோரும் விழாவுக்கு வந்தீங்களாகடைசிவரை இருந்தீங்களாபேச்செல்லாம் எப்படி?''  என்றார்.

ஒரே ஒரு விநாடி அமைதிஇருந்தவர்களில் நான்தான் வயதில் மிகச்சிறியவன்ஆனால் அய்யாவின் செல்லப்பிள்ளை''அய்யா…  எல்லாம் நல்லா போய்க்கிட்டு தான் இருந்திச்சு…  கடைசிலே அய்யா செஞ்ச அந்தக் காரியம் தான் யாருக்குமே பிடிக்கலை…  எனக்கெல்லாம் இராத்திரி தூக்கமே இல்லை…''  என்றேன்.

அய்யா நிமிர்ந்து பார்த்தார்எதைக் குறிப்பிடுகிறேன் என்று புரிந்துகொண்டார்''எல்லோருமா…?''  என்றார்சுற்றி இருந்தவர்கள் மவுனத்தின் மூலமே ஆமோதித்தார்கள்.

பெரியாரே தொடங்கினார், ''என்னங்க செல்வேந்திரன் உங்களை நான் ரொம்ப புத்திசாலின்னு நெனச்சுக்கிட்டு இருந்தேனே…''  என்றார் கேலியாக.

சர்.சி.பி.இராமசாமி அய்யரைத் தெரியுமா உங்களுக்குஎருமை நாக்கை விரும்பிச் சாப்பிடுகிற பார்ப்பனத் தலைவர்  உலகமெல்லாம் சுத்தி வந்து பெரியப் பதவியிலெல்லாம் இருந்தவர்அவர் போய் காஞ்சிபுரம் சங்கராச்சாரி கால்லே உழுவுறாரு…  ஏன்…  தான் மரியாதை பண்ணினாத்தான் தன்னோட சாதி நிறுவனம் பெருமைப்படுனுமின்னுஅதைத்தான் நானும் செஞ்சேன்.  சூத்திரசாதி மடத்தை நானும் பெருமைப்படுத்தோணுமின்னு செஞ்சேன்  எனக்கு என் மரியாதை முக்கியமல்ல…  என் இனத்தோட மரியாதைதான் முக்கியம்  பகுத்தறிவு எல்லா எழவையும் அப்புறம் பாத்துக்கலாம்''  என்றார்.

எங்களுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லைபெரியார் எவ்வளவு பெரிய தொலைநோக்காளர்இதை மற்றவர்கள் எவ்வளவு உணர்ந்தார்களோ இல்லையோ…  மகா சன்னிதானம் புரிந்திருந்தார்…  உணர்ந்திருந்தார்.

பெரியாரின் மறைவிற்குப் பின் பெரியாரின் நிறுவனத்துடன் அடிகளாரின் உறவு முன்போல் இல்லைபுதிய தலைமை தன்னையும் பெரியாராகவே எல்லோரும் ஏற்க வேண்டுமென விரும்பியதை அடிகளார் ஏற்கவில்லை.  என்னைப் போன்ற சிலரிடம் மகாசன்னிதானம், அதை வெளிக்காட்டிக் கொள்ளவும் தயங்கவில்லை.  பல நிகழ்ச்சிகளுக்குப் பெரியார் இயக்கத்தின் புதிய தலைவர்கள் அழைத்தபோது தவிர்க்கவும் செய்தார்.

சைவ சமயத்தின் நாயன்மார்களும் - வைணவ சமய ஆழ்வார்களும்கூடச் சென்று நிற்க முடியாத இடத்தில் அடிகளார் நின்றார்.

சமயக் குரவர்கள் - ஆழ்வார்களின் காலத்தில் மாறுபட்ட கொள்கை உடைய சகோதர சமயங்களான சமண, பவுத்தங்களுடன் இணக்கமாய் இல்லாதது மட்டுமல்ல, மோதுதல், சண்டை என்று தொடங்கிக் கொலை வரை நீடித்ததுதிருஞான சம்பந்தர் காலத்தில் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றிக் கொல்வது என்ற எல்லைவரை ''அன்பே சிவம்''  என்ற சைவம் ''அம்பே சிவம் - கத்தியே கடவுள்''  என்று போய் நின்றது.

சைவ சமயத்தைத் தொண்டு சமயமாக்க முயன்றவர் அப்பரடிகள்மன்னவன் தவறு செய்தபோது அதையும் எதிர்த்து, கடலில் வீசப்பட்டாலும் அஞ்சேன் என்று நின்றவர்அரசின் தண்டனையை ஏற்றவர்அப்பரடிகளுக்குப் பிறகு அதேபோல் சமயத்தைச் சாமான்ய மக்களிடம் எடுத்துச் சென்றவர் குன்றக்குடி தெய்வசிகாமணி அடிகளார் மட்டும் தான்!

சைவச் சமய சின்னங்களை அணிந்தபடியே பெரியார் கூட்டிய நாத்திகர் அவைகளிலும் - கிறித்துவ இசுலாமியச் சமய அமைப்புக் கூட்டங்களிலும் துணிவோடு சென்று கலந்து கொண்டவர்களில் முதல் சமயத் தொண்டர் குன்றக்குடி அடிகளார்தாம்கடந்த ஆயிரம் ஆண்டு சைவ, சமய வரலாற்றில் வேறெந்த ஒரு சமயத் தொண்டருக்கும் இவருக்கு முன் இந்தத் துணிவுமில்லை, வரவேற்புமில்லை.

பெரிய புராணத்திற்கு - புதிய பொழிப்புரை - திருவிளையாடற் புராணத்திற்குப் புதுப்பதிப்பு என்று தன் மொழிப் பணியை இலக்கியப் பணியை நிறுத்திக்கொள்ளாமல் விஞ்ஞானத் தமிழுக்கு வித்திட்டவர் - நூல்கள் எழுதியவர் - இதழ்கள் நடத்தியவர் குன்றக்குடி அடிகளார் மட்டுமேஅதற்காகத் தமிழுலகம் அவருக்கு மிகவும் கடன்பட்டுள்ளது.

அடிகளார் அரசு அறிவித்த ஏழைகளுக்கு வழங்கும் இலவசத் திட்டங்களை எதிர்ப்பவராய் இருந்தார்தமிழீழப் பிரச்சினையில் மறைந்த குன்றக்குடி அடிகளாரிற் நிலைப்பாடு என் போன்ற அவருடைய அன்பர்களுக்கே உடன்பாடானதாயில்லைஅதற்காக நான் அவரோடு பட்டிமன்ற - வழக்காடு மன்ற மேடையில் உண்மையிலே மோதிக்கொள்ளும் சூழ்நிலைகள் இரண்டு மூன்று முறை ஏற்பட்டன.

ஆனால், இவை எல்லாம் தாண்டி என் பேரிலும் என் குடும்பத்தார் பேரிலும் தனிப்பட்ட அன்பு செலுத்தி வந்தார்.   நான் சமுதாய விடுதலை இயக்கமான பெரியாரின் திராவிடர் கழகத்தைவிட்டு தி.மு..வில் இணைந்ததைத் தனிப்பட்டமுறையிலும் - இரண்டுக்கு மேற்பட்ட முறைகள் மேடையிலுமே ''சரியான முடிவல்ல''  என்று சுட்டிக் காட்டினார்மகா சன்னிதானம் என்ற நிலையையும் தாண்டி என்னிடம் அன்புக் கொண்டிருந்தார்.  அவர் மறைந்த அன்று - பெரியார் மறைந்தபோது எப்படியொரு ழப்பை தனிமையை உணர்ந்தேனோ அதுபோல் உணர்ந்தேன்அடிகளார் இறைப்பற்றுமிக்க சமயத் தலைவர்நான் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகத் தொண்டன்இந்த உறவை என்னவென்று சொல்வது?

 ...திருச்சி செல்வேந்திரன்..(தற்போதைய தி.மு.கழக வெளியீட்டுச் செயலாளர் முன்னாள் திருச்சி திராவிடர் கழகத் தலைவர்).இனி ஒரு பெரியாரைப் பார்ப்போமா...நாம் தமிழர் பதிப்பகம்...(பக்கம் 171-184)
 இனி ஒரு பெரியாரைப் பார்ப்போமா?

3 comments:

பழனி. கந்தசாமி said...

நம்பி அவர்களுக்கு,

நீங்கள் இன்று என் பதிவில் இரண்டு பின்னூட்டங்களை இட்டிருக்கிறீர்கள். அவை நல்ல உண்மைக் கருத்துகளை எடுத்துக் காட்டுகின்றன.

அவைகளை என் தளத்தில் ஒரு பதிவாகவே பிரசுரிக்கட்டுமா? ஏனென்றால் என்னுடைய பதிவு பிரசுரமாகி பல நாட்கள் ஆகி விட்டபடியால் உங்கள் கருத்துக்கள் அதிகம் பேரைச் சென்றடையாது என நான் நினைக்கிறேன்.

உங்கள் பெயரைக் குறிப்பிடவேண்டுமென்றால் குறிப்பிடுகிறேன். வேண்டாம் என்றால் விட்டு விடுகிறேன். இன்று மாலைக்குள் உங்கள் கருத்தைத் தெரியப் படுத்தவும்.

நம்பி said...

பெயர் போட்டே தாராளமாக வெளியிடலாம்...நன்றி

நம்பி said...

நானும் அடிக்கடி பிளாக் வரமுடியாததால் உங்கள் பின்னூட்டத்தைப் பார்க்கமுடியவில்லை! இப்போது தான் பார்த்தேன்!