Pages

Saturday, 2 March, 2013

கலைஞரைக் கண்டவுடன்


பெரியாரின் பேச்சில் நிலைகுலைந்து போனார்கள்.  இரண்டுமாத விவாதங்கள் சாதிக்காததை பெரியாரின் பணிவான- ஆனால் உறுதியான வேண்டுகோள் தகர்த்துவிட்டது.  சாகின்றவரை அதில் மாற்றமே இல்லை.  பின்னர் 1965-ல் அரசியல் எதிரிகளால் துவங்கிய எங்கள் உறவு நட்பாகி - காதலாகி- 1968-ல் பெரியாரின் தலைமையில் கணவன்-மனைவியாகி - நாற்பதாண்டுகள் எத்தனையோ துன்பங்கள்- ஓராண்டு 'மிசா' சிறைவாசப் பிரிவு- எதிலும் சலனமில்லாமல்  கடந்த ஜூன் 2008 வரை தொடர்ந்தது.

சமயக்கொள்கையில் மாறானவராயும் அரசியல்  கொள்கையில் எதிரானவராயும் இருந்தவளை என் மனைவியாக்கிக்கொள்ளப் பெரியாரிடம் போனபோதுதான் பெரியார், கட்டுரையின் துவக்கத்தில் சொன்ன வரிகளைச் சொன்னார்.  காரணம் 1968-ல் தி.மு.க. வும் பெரியாருடன் மீண்டும் நட்பாகிவிட்டது.

பெரியார் எனது இயக்கத் தலைவராய் மட்டுமில்லாமல் குடும்ப ஆலோசகராகவும் இருந்தார்.  என்னுடைய துணைவியார் பி.எஸ்.ஸி., பி.எட். பட்டதாரி எனக்கு வேலைக்கு அனுப்ப விருப்பமில்லை.  பெரியார் என்னைக் கோபித்துக்கொண்டு கட்டாயமாய் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பணியில் சேரச்செய்தார்.

பின்னர் 1975 இறுதியில் 'மிசா' மேகம் தமிழகத்தைக் கவ்வியது.  நானெல்லாம் தனிமைப் படுத்தப்பட்டு 366 நாட்கள் மிசா சிறையிலிருந்தேன்.  சோதனை மேல் சோதனை.  கர்நாடகா இப்போது போலவே அப்போது கபினி, ஹேமாவதி ந்திகளில் அணைகட்டி காவிரியைக் காயப் போட்டது.  

நெல்லை இருப்பு வைத்திருந்த என் போன்ற நில உடமையாளர்கள் குடும்பங்கள் ரேஷன் கடைகளில் அரசி வாங்கிச் சாப்பிடும் சூழ்நிலை.  கடன் நிவாரணச் சட்டங்களால் என் உரக்கடைத் தொழில் அடியோடு நசிந்துவிட்டது.  குறைவான மாதச்சம்பளம் தான் என் மனைவியையும், குழந்தைகளையும் பசியின்றிக் காப்பாற்றியது.  அப்போது பெரியார் உயிரோடு இல்லை.

ஆனாலும் பெரியாரை நினைத்துக் கொண்டேன்.  அவர் மட்டும் என்னைக் கடிந்து கொண்டு என் மனைவியை வேலைக்கு அனுப்பியிராவிட்டால்?  மறக்க முடியுமா? பெரியார் என் குடும்பத்திற்குச் செய்த அந்த உதவியை?

'மிசா' சிறையிலிருந்த ஏராளமான தி.மு.க. தோழர்கள் குடும்பங்களுக்கு கலைஞர் மாதந்தோறும் உதவித்தொகை அனுப்பிக் கொண்டிருந்தார்.  அதில் சில திராவிடக் கழகத் தொண்டர்களும் மாத உதவித் தொகை பெற்று வந்தார்கள்.

நான் 1967-க்கு முன்னே பெரியார் ஆணைப்படி தி.மு.க வை மிகக் கடுமையாய் மேடைகளில் எதிர்த்துப் பேசியுள்ளேன்.  என்னுடைய பெண் நண்பர்- பின்னர் துணைவி 1965-ல் துவங்கிய நட்பு 1968-ல் திருமணமாகி கடைசிவரையிலும் அவர் தீவிர தி.மு.க. வேடிக்கையான நட்புப் பேச்சு- அரசியல் பக்கம் திரும்பி சண்டையில் முடியும்.

''மூன்று மாதங்களுக்கு முன்னால்…  என் துணைவியார் இறப்பதற்கு முன்னர் மருத்துவமனையில் அவளைப் பார்க்க வந்த நக்கீரன் ஆசிரியர் கோபாலிடம் ''கலைஞரை அடிக்கடி பார்ப்பீர்களா… அவர் எப்படி இருக்கிறார்'' என்றாள், தான் சாகப்போகிறோம் விரைவில் என்று தெரியாமல்.


''இறைவன் இணைத்து வைத்ததை மனிதன் பிரிக்காமல் இருப்பானாக'' என்கிறது பைபிள்.  ''இயக்கம் இணைத்து வைத்ததை இயற்கை பிரித்துவிட்டது''  என்னைப் பொறுத்தவரையில் உயிர் இதோ இதை எழுதிக் கொண்டிருக்கிறது.  இதனைத் தாங்கிக்கொண்டிருந்த உடல் மண்ணோடு மண்ணாக… சாம்பலோடு சாம்பலாக…

முதலமைச்சராய் இருந்த தலைவர் கலைஞர் என் வீட்டிற்கு வந்தார்.  மிகவும் உடைந்து போயிருக்கிறேன் என அறிந்து ஆறுதல் சொல்ல… குறுகிய சாலை…  உயரமான படிக்கட்டுகள்… அதில் ஏறிவரும் வயதா…? உடல் நிலையா…? வந்தார்.

'எதற்கும் கலங்கமாட்டோம்.  உணர்வுகளைக் காட்டியதில்லை.  பெரியார் உட்பட யார் காலிலும் விழுந்ததில்லை இந்த எழுபது வயதில்' என்ற என்னுடைய கம்பீரம் தகர்ந்துபோனது.  அவரைப் பார்த்தவுடன் எல்லோர் முன்னிலையிலும் உடைந்து அவர் காலில் விழுந்துவிட்டேன்.  தலைவரும் கண்கலங்கிவிட்டார்.  தட்டிக்கொடுத்து… ஆறுதல் சொன்னார்.  ''உங்களுக்கு எல்லாம் தெரியும்… நான் என்ன சொல்ல'' என்றார்..

கடைக்கோடி தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவனைத் தேற்றுகின்ற- ஆற்றுப்படுத்துகின்ற இருபெருந்தலைவர்களோடு வாழ்ந்திருக்கிறேன், வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

தொண்டனை வெறும் உறுப்பினராய் நினைக்காமல் தன் உறுப்பாய் கருதும் தலைமுறையில் கடைசித் தலைவர் கலைஞர் ' சென்னைக்கு வா' என்று சொல்லி விடைபெறுகிறார்.
 
'திருவாருரில் பிறந்தார் எல்லார்க்கும் அடியேன்' என்ற தேவாரம் காதில் ஒலிக்கிறது.

...திருச்சி செல்வேந்திரன்..(தி.மு.கழக வெளியீட்டுச் செயலாளர்) சேயின் நோய்க்கு மருந்துண்ட தாயான தலைவர்கள்!.....நக்கீரன் வெளியீடு...பகுதி 3 ல் தொடரும்

No comments: