Pages

Monday, 11 July, 2011

குலக்கல்வி-சமச்சீர் கல்வி- ஓர் ஆய்வு

நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின்னர் -உச்சநீதிமன்றத் தீர்க்கமான தீர்ப்பையும் பெற்ற பின்னர் -சமச்சீர் கல்வித் திட்டத்தை சென்ற ஆண்டுதான் தி.மு.க அரசு செயல்படுத்தத் தொடங்கியது.

     ஆனால் அந்தச் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது புதிய அ.தி.மு.க அரசு முடிவு செய்தது.  அந்த முடிவுதான் அரியணை ஏறியதும் எடுத்த முதல் முடிவு.  அதிர்ந்து போனோம்.


     ஏனெனில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்திவைக்கவேண்டும் என்று எந்த இயக்கமும் கோரவில்லை.  ஆனால் துக்ளக் "சோ"தான் அந்தத் திட்டத்தை ஆரம்பம் முதல் எதிர்த்து வந்தார்.  அனைத்து கல்வி முறையையும் கீழே இறக்கி சமன் செய்யும் சமத்தாழ்வு கல்வித்திட்டம் என்று அவர் சாடி வந்தார்.

     அவர் இன்னும் ஒருபடி மேலே சென்றார்.  ஒரு சிலர் உயர்க்கல்வி பெறுவதைத் தடுப்பதற்குத்தான் சமச்சீர் கல்வித்திட்டம் என்றார்.  இதனை ஏற்கனவே விளக்கியிருக்கிறோம்.  அவர் சொல்லும் ஒருசிலர் யார் எனபது தெரியும்.

     சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தப்படுகிறது என்ற தமிழக அரசின் அறிவிப்பை ஒரே ஒருவர்தான் ஆனந்தமாக வரவேற்றார்.  அவர்தான் இந்து முன்னணித் தலைவர் இராம.கோபாலன்.

     சமஸ்கிருதத்தை மையப் பாடமாகக் கொண்டு ஓரியண்டல் பள்ளிகள் செயல்படுகின்றன.  அரசு உதவியோடு செயல்படும் அந்தப் பள்ளிகள் தமிழகத்தில் மொத்தமே 27-தான்.  அந்தப் பள்ளிகளுக்கு சமச்சீர் கல்வி வேண்டாம் என்று மாம்பலம் அகோபில மடம் ஓரியண்டல் பள்ளியின் செயலாளர் வாசுதேவாச்சாரியார் செல்வி ஜெயலலிதாவிற்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

     சமஸ்கிருதம் என்பது ஒரு மொழி மட்டுமல்ல ஒரு கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான ஒரு கருவி.  எனவே சமச்சீர் கல்வித் திட்டத்தை ஏற்றால் சமஸ்கிருதம் ஓரம்கட்டப்பட்டுவிடும்.   ஆகவே, அந்தக் கல்வித்திட்டம் கூடாது என்று வாசுதேவாச்சாரியார் மிகத்தெளிவாகக் கூறியிருக்கிறார்.

     ஆம்...துக்ளக் சோ, இராமகோபாலன், வாசுதேவாச்சாரியார் போன்றவர்கள் சமச்சீர் கல்வித் திட்டத்தை நஞ்சென வெறுக்கின்றனர். 

     எதனையும் வர்க்கக் கண்ணோட்டத்தோடு பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு இவர்கள் எதிர்ப்பதன் பின்னணி தெரியவில்லை. அய்யா...எதிர்ப்பவர்கள் வர்ணாஸ்ரம கண்ணோட்டத்தில் எதிர்க்கிறார்கள், இது சோலைக்குத் தெரியவில்லையா?  என்று ஒரு வாசகர் நமக்கு ஒரு குட்டு வைத்தார்.

     சமச்சீர் கல்வித் திட்ட எதிர்ப்பும் அன்று ராஜாஜி முதல்வராக இருந்தபோது கொண்டு வந்த குலக்கல்வித் திட்டமும் ஒன்றுதான் என்று அவர் நமக்கு விளக்கம் அளித்திருக்கிறார்.  அதன்பின்னர்தான் நமது சிந்தனைச்சாளரம் திறந்தது.  'விடுதலையில் தோழர் மின்சாரம் தொகுத்துத் தந்துள்ள கருத்துக்கள் மண்டையில் உறைத்தன.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பின்னணியில் இயங்குவது நியூ செஞ்சுரி புத்தக நிலையம்.  'உங்கள் நூலகம்' என்ற சஞ்சிகையை நடத்துகிறது.  சமச்சீர் கல்வியை எதிர்ப்பவர்கள் யார் என்று அந்த இதழ் (ஜூன் 2011) அம்பலப்படுத்தியிருக்கிறது.

     ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார்.  சமச்சீர் பாடப்புத்தகங்களை நிபுணர் குழு வைத்து ஆராயப்போவதாக அறிவித்திருக்கிறார்.  அவர் நிறுத்தி வைத்துள்ளாரா?  குப்பைத் தொட்டியில் வீசிவிட்டாரா என்று தெரியவில்லை.  இதுபற்றி வெளிவந்திருக்கும் செய்திகளுக்கு இணையதளங்களில் பலர் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கின்றனர்.  அவற்றிலிருந்து பார்ப்பனீய கருத்து நிலையை ஊக்கமுடன் ஆதரிக்கும் சீரழிந்த நடுத்தர வர்க்கத்தினர் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஜெயலலிதா குப்பைத் தொட்டியில் வீசிவிட்டதாகக் குதூகலிக்கின்றனர் என்று தெரிகிறது.    இவ்வாறு 'உங்கள் நூலகம் படம் பிடித்துக் காட்டுகிறது.  கிறித்துவ சமுதாய மக்களின் இதயநாதமாக வெளிவருவது, 'நம் வாழ்வு'.  சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது என்று தமிழக அரசு எடுத்த முடிவுகளைப் பற்றி விமர்சனம் செய்திருக்கிறது.

     அம்மாவின் மனுதர்ம பார்ப்பன சித்தாந்தம் அய்ந்தாண்டுகளுக்கு இனி மறைமுகமாக அமல் படுத்தப்படும்.  முதல் அடியே முதல் கோணலானது.  நம்பி வாக்களித்த மக்களுக்கு அம்மா செய்த துரோகமாகும்.

     சமச்சீர் கல்வி மறுபரிசீலனை செய்யப்படும் என்பதை ராஜாஜியின் குலக்கல்வித் திணிப்பு போன்ற பார்ப்பன இனச்சதியின் நூற்றாண்டுகாலப் போராட்டத் தொடர்ச்சியாக இனம் காணலாம்.  

      -இவ்வாறு நல்லவர்களின் நாடித் துடிப்பாம் 'நம் வாழ்வு' விளக்கியிருக்கிறது.

      எந்தக் கருத்தையும் நெருப்புச் சொற்களால் விமர்சிக்கின்ற விடுதலைச் சிறுத்தைகள் என்ன சொல்கிறார்கள்?

     "பறையனுக்கும் பார்ப்பானுக்கும் ஒரே கல்வித் திட்டத்தைத் தருகின்ற சமச்சீர் கல்வியை இங்கே நடைமுறைப்படுத்திவிடக்கூடாது.  இதனை அழித்தே தீருவேன் என்ற கருத்துப் போர் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது" -என்கிறார் தொல்.திருமாவளவன்.  (தமிழ் மண் ஜூன் 2011)

     ஆனால் அதே சமயத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நீக்க முன்வந்த தமிழக முதல்வருக்கு சென்னையில் பாரட்டுவிழா நடைபெற்றது.  ஜெயலலிதா கலந்துகொள்ளவில்லை, ஆனாலும், அந்த விழாவை சீரோடும் சிறப்போடும் நடத்தியவர்கள் தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள்தான்.

     அவர்கள் கல்வியை வியாபாரமாக நடத்துகிற நேற்றைய லட்சாதிபதிகள்.  நாளைய கோடீஸ்வரர்கள்.  அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் என்றால் அவர்களுடைய வியாபாரம் படுத்துவிடும்.  எனவே துக்ளக் சோ, இராம.கோபாலன், வாசுதேவாச்சாரியாரோடு இவர்களும் கரம் கோர்க்கிறார்கள்.  ஒரே லட்சியம், ஆனால் வெவ்வேறு பாதையில் அந்த எல்லையை நோக்கி நடைபோடுகிறார்கள்.

     அதே சமயத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தும் அரசின் முடிவை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?  அந்தக் கல்வித் திட்டத்தைக் கைவிடுவதை மக்கள் விரும்பவில்லை.  வேதனைப்படுகிறார்கள் என்பதனை லயோலா கல்லூரி கருத்துக் கணிப்புத் தெரிவிக்கிறது.  இவை முதல்வரின் கவனத்திற்குச் சென்றதா?  அநேகமாக எல்லா இயக்கங்களும், பொதுநல அமைப்புக்களும் சமச்சீர் கல்வித் திட்டத்தை வரவேற்கின்றன.  சர்வதேச தொடக்கப்பள்ளி ஆசிரியர் அமைப்போடு இணைந்தது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியாகும்.  மிகப்பெரிய இயக்கம்.  அதன் வழிகாட்டி ஈசுவரன் சர்வதேச அமைப்பின் துணைத்தலைவராக மீண்டும் தேர்வுப் பெற்றிருக்கிறார்.

     கட்சிகளுக்கு அப்பால் தமிழகத்தில் இயங்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் அமைப்புகளில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தான் பெரிய அமைப்பாகும்.  சமச்சீர் கல்வித் திட்டத்தை இந்த ஆண்டே செயல்படுத்த வேண்டும் என்று அந்தக் கூட்டணி தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.  சமச்சீர் கல்வி ஏன் என்பதனை அந்தக் கூட்டணி அற்புதமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறது.


     எல்லோரும் இந்நாட்டு மன்னர், எல்லோரும் ஓரு நிறை, எல்லோருக்கும் ஓர் விலை என்பதே மக்களாட்சியின் மாண்பு, மாபெரும் சிறப்பு.  அதனை அடியொற்றியே செல்வந்தருக்கு ஒரு கல்வி, ஏழைகளுக்கு ஒரு கல்வி என்ற நிலையை தமிழ்நாட்டில் முற்றிலும் அகற்றி, அனைவருக்கும் ஒரே கல்வி முறை அது சமச்சீர் கல்வி முறை என்று கொண்டு வரப்பட்டது.  தமிழகத்து அனைத்து தரப்பு மக்களும் அதனை ஆமோதித்து ஏற்றுக்கொண்டனர்.  கல்வியாளர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியில் ஒரு வரப் பிரசாதமாக சமச்சீர் கல்வியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர்.  உச்சநீதிமன்றமும் சமச்சீர் கல்வியைத் தொடர்ந்து அமுல்படுத்திட உத்திரவிட்டுள்ளது -என்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தெளிவுப்படுத்தியிருக்கிறது.  பாடத்திட்டங்களில் மாறுதல் செய்யலாம்.  ஆனால் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும் என்றும் சுட்டிக் காட்டியிருக்கிறது.

     இவ்வளவு சிறப்பான கல்வித் திட்டத்தை கைவிடுவது நிறுத்தி வைப்பது எனபது சரித்திரச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழற்றுகின்ற செயலாகும்.

     ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தையும் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பதையும் ஏன் ஒரே நிலையில் காண்கிறார்கள்?

     அப்பன் தொழிலை மகன் அரைநாள் கற்றுக் கொள்ள வேண்டும்.  மீதி அரைநாள் பள்ளிக்குப் படிக்க வர வேண்டும் எனபதுதான் ராஜாஜியின் குலக்கல்வித் திட்டமாகும்.

     விளங்கச் சொல்வதானால் செருப்புத் தொழிலாளியின் மகன் செருப்புத் தைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.  அதன் பின்னர் பள்ளிக்கு செல்ல வேண்டும்.

     சலவைத் தொழிலாளியின் மகன் அரைநாள் துணி வெளுக்கப் போக வேண்டும்.  பின்னர் பள்ளியை எட்டிப்பார்க்கவேண்டும்.  இந்தக் குலக்கல்வித்திட்டம் ஜாதீய அமைப்புகளுக்கு உயிரூட்டவதாகும்.  பிறப்பால் கற்பிக்கப்பட்ட பேதத்திற்கு வலுவூட்டுவதாகும்.  வர்ணாசிரம தர்மத்தை நிலைநிறுத்துவதாகும்.  எனவே ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து தமிழகமே கொந்தளித்தது.  அரியாசனத்திலிருந்து அவரும் இறங்கிச் சென்றார்.

     இதுவரை தமிழகத்தில் இருக்கும் கல்வியின் நிலை என்ன?  ஏழை, எளிய கிராமத்து மாணவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் ஒரு பாடம்.

     நடுத்தர வர்க்கத்து வசதியான மாணவர்கள் படிக்க மெட்ரிகுலேஷன் கல்வி.  அதற்கு ஒரு பாடம்.  பெரிய தனக்காரர்களும் அரசியல் பெரிய வீட்டுப் பிள்ளைகளும் படிக்க சி.பி.எஸ்.இ. கல்வி.  அதற்கு மத்திய அரசின் பாடத்திட்டம்.  ஆனால் அந்தப் பாடத்திட்டம் இந்தியா முழுமைக்கும் பொதுவான  சமச்சீர் கல்வித் திட்டமாகும்.

     இப்படி வசதியும் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப கல்வி நிலையங்கள்.  தனித்தனிப் பாடத்திட்டங்கள்.  துக்ளக் சோ கூறுவது போல ஒரு சிலர் உயர் கல்வி கற்பதற்கு மேல்நிலைக் கல்வி நிறுவனங்கள் அதற்குத் தனியாகப் பாடத்திட்டங்கள்.

     இதுவும் இன்னொரு கோணத்தில் நால்வருண தர்மம் தான்.  ஏழைகளுக்கு ஒரு கல்வி; சற்று தலை தூக்குகிறவர்களுக்கு இன்னொரு கல்வி என்று வசதிக்குத் தக்க கல்வி கற்கப்படும் அவல நிலை.  இது கூடாது.  கல்வியிலும் சமத்துவம் வேண்டும் என்றுதான் ஆன்றோரும் சான்றோரும் சமச்சீர் கல்வித் திட்டத்தை வலியுறுத்தினர்.  ஆனால் அதனை எதிர்ப்பவர்கள் என்ன கூறுகிறார்கள்?

     ஆதிவாசிப் பையனுக்கும் அக்கிரஹாரத்துப் பையனுக்கும் ஒரே பாடமா?  ஒரே கல்வியா?  இது அநியாயம் என்கிறார்கள்.  மேல்ஜாதி மாணவனுக்கு ஈடாக கீழ் ஜாதி மாணவன் மார்க் வாங்கினால் மேல் ஜாதியின் மகிமை கீர்த்திக்குப் பங்கம் வந்து விடாதா எனகிறார்கள்.  இது அவர்களுடைய குல தர்மம்.  இந்த நூற்றாண்டில் அந்த அதர்மங்களுக்கு இடமில்லை எனபதனை முரசறைந்து சொல்வது தான் சம்ச்சீர் கல்வித் திட்டமாகும்.

........சோலை...நக்கீரன்

*****************
பொது ஜனம்; என்னய்யா திராவிட ஆரியப்போர் தொடங்கிடுச்சு போல இருக்கே! மீண்டும் பெரியார் காலத்துக்கு திரும்பிகிட்டு இருக்குது! 


பொது ஜனம்; இதுங்களுக்கு பீதியில பேதியாவுது! அதனால இந்த திருட்டு வேலைகளை மீண்டும் ஆரம்பிக்குதுங்க!


பொது ஜனம்; ஆரிய மாயை எழுதிய அண்ணாவின் பெயரை வைச்சி பார்ப்பன மாயை தொடங்கிடுச்சி!


பொது ஜனம்; திருப்பி இதுங்களை ஓடவிடனுமா?


பொது ஜனம்; அதுக்கு என்ன? மொத்தமா ஓடவிட்டுட்டா போகுது!


பொது ஜனம்; யாரும் ஓடவிடவேத் தேவையில்லை! அதுங்களாவே ஓடிடும்!

2 comments:

குடிமகன் said...

ஓ நாம இத இப்படி கூட பாகலாமோ??
நான் என்னமோ அரசு தனியார் பள்ளிகளுக்கு சாதகமா செயல்படுது னு ல நெனச்சேன்.

தற்கால கல்விமுறை குறித்த எனது கருத்தை வலையில் பதிந்துள்ளேன்.

http://kudimakan.blogspot.com/2011/06/blog-post.html

நன்றிகள்,
குடிமகன்

நம்பி said...

குடிமகனின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி! குடிமகனின் பதிவைப் படித்தபின் பின்னூட்டமிடுகிறேன்!