Pages

Saturday, 30 July, 2011

சமச்சீர் கல்வி! உண்மையை ஒத்துக்கொண்ட அரசு!

     காலாண்டு பரிட்சை நடக்குமா நடக்காதா?, முழு ஆண்டு பரிட்சைக்குள் பாதி புத்தகத்தையாவது படிக்க முடியுமா, முடியாதா? - தவிப்பும் குழப்பமுமாக இருக்கிறார்கள் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள்.  சமச்சீர்  கல்வி விவகாரத்தில், தமிழக அரசு வழக்கறிஞரே குழம்பிப்போனதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆச்சரியத்தோடு பார்த்த நிலைமையும் ஏற்பட்டது.

     இந்த ஆண்டு சமச்சீர் கல்வியைக் கொண்டு வருவதில்லை என்பதில் பிடிவாதமாக இருக்கும் ஜெ. அரசு, சமச்சீர் கல்வியை அமல்படுத்த வலியுறுத்திய உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  அரசு நிலைக்கு ஆதரவாக மெட்ரிக் பள்ளி சங்கங்களும் முறையீடு செய்தன.  உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், ஆகஸ்டு  2-ந் தேதிக்குள் சமச்சீர் பாட்ப்புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது.  இதுவரை இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கான பணி தொடங்கப்படவில்லை என்பதுடன், இணையதளத்தில் இருந்த சமச்சீர்கல்விப் பாடங்களும் அகற்றப்பட்டுவிட்டன.  ஜெ. அரசின் நிலைப்பாடு என்ன என்பது எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்துள்ள நிலையில் தான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஜூலை 26-ந் தேதி தொடங்கியது.

     நீதியரசர்கள் ஜே.எம்.பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சவுகான் ஆகியோர் அடங்கிய மூவர் பெஞ்ச் முன் நடந்த விசாரணையில், தமிழக அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பி.பி. ராவ்வை நோக்கி சரமாரியான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினார்கள்.  நீதிமன்ற உத்தரவுகள் தான் இறுதித் தீர்ப்பு என்றபிறகும் தமிழக சட்டமன்றத்தில் சட்டதிருத்தம் கொண்டு வந்ததற்கு என்ன காரணம்?  இது அரசின் அதிகாரத்தை மீறிய செயல் இல்லையா?  என்பது உள்ளிட்ட கேள்விகள் சீறின.  27 -ந் தேதியும் வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்தபோது தமிழக அரசு வழக்கறிஞரான பி.பி. ராவ், "இது போன்ற சட்டதிருத்தம் தேவையில்லை எனத் தெளிவான -துணிவான -சுதந்திரமான சட்ட ஆலோசனை அரசுக்கு வழங்கப்படவில்லை.  தேவையில்லாத வேலைகளைச் செய்ததால், தேவையில்லாத பிரச்சினகளை நாங்களே (அரசு) தேடிக்கொண்டோம் என்பது தான் உண்மை "என்றார்.  நீதிபதிகளும், சமச்சீர் கல்விக்கு ஆதரவாகப் போராடும் பெற்றோர் -மாணவர் சார்பிலான வழக்கறிஞர்களும் தமிழக அரசு வழக்கறிஞரின் ஒப்புதல் வாதத்தால் ஆச்சரியமும் குழப்பமும் அடைந்தனர்.

     மதியமும் தொடர்ந்த வாதத்தின் போது, தன்னுடைய கருத்துக்கள் சொந்தக்கருத்துதான் என்றும் தமிழக அரசின் சட்ட ஆலோசகர்கள் மீது உயர்ந்த மதிப்பு வைத்திருப்பதாகவும் பி.பி. ராவ் சொன்னார்.  எனினும், சம்ச்சீர் கல்வி விவகாரத்தில் ஜெ. அரசின் போக்கு எப்படி இருக்கிறது என்பதை நீதிமன்றஃத்தில் பதிவு செய்துவிட்டது அரசு வழக்கறிஞரின் வாதம் என்கிறார்கள் பெற்றோர்-மாணவர்களுக்கான வழக்கறிஞர்கள்.


     பாடத்திட்டத்தை தேசிய-சர்வதேச அளவில் உயர்த்தவிருப்பதாகவும் அதனால் அடுத்த ஆண்டு தான்  (2012-13) சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ள ஜெ.அரசு, அதற்கான டைம் டேபிளையும் கொடுத்துள்ளது.  புதிய அறிவிக்கை வெளியிட ஒரு வாரம், அட்வைசரி கவுன்சில் அமைக்க ஒரு வாரம், பள்ளிக்கான அடிப்படை கட்டமைப்பு -பாடம் நடத்துவதற்கான கருவிகள் -ஆசிரியர் விகிதம் உள்ளிட்டவற்றை முடிவு செய்ய ஒருவாரம், புதிய பாடத்திட்டம் பற்றி முடிவு செய்ய ஒரு வாரம், அந்தப் பாடத்திட்டத்தை வடிவமைக்க 2 மாதம் என செப்டம்படர்வரை பல்வேறு பணிகள் இருப்பதாகவும், பாடத்திட்டம் உருவாக்கப்பட்டதும் அதை இணையதளத்தில் வெளியிட்டு, கல்வியாளர்கள்- பெற்றோர் - பெற்றோர் -பொதுமக்களின் கருத்தைக் கேட்பதற்கு 2 வார அவகாசம் தேவைப்படும் என்றும், இதன்பின் பாடங்களை எழுதி, மறு ஆய்வு செய்ய 4 மாத காலமும், புத்தகங்களை அச்சிட மேலும் 4 மாத காலமும் தேவைப்படுவதால் 2012 மே மாதம்தான் தரமான சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தயாராகும் என்றும் தெரிவித்துள்ளது.  ஆகஸ்டு 2-க்குள் புத்தகங்களை வழங்குவதற்கான அவகாசம் போதாது என அரசுத் தரப்பு தெரிவித்த்தால் 5-ந் தேதி வரை அவகாசம் தந்துள்ளது உச்சநீதிமன்றம்.


     ஜெ. அரசின் இழுத்தடிப்பு நடவடிக்கைகளை நன்கறிந்த பெற்றோர்-மாணவர் சார்பிலான வழக்கறிஞர்கள் 28-ந் தேதியன்று தங்களின் வலுவான வாதங்களை எடுத்து வைத்தனர்.  இதனிடையே, தமிழகத்தின் பல பகுதிகளிலும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மாணவர்களின் போராட்டம் வலுவடைந்து வருகிறது.

     சி.பி.எம்.மின் இந்திய மாணவர் சங்கம், சி.பி.ஐ.யின் இந்திய மாணவர் பெருமன்றம், ம.க.இ.க.வின் புரட்சிகர இளைஞர்-மாணவர் அமைப்புகள் தீவிர போராட்டங்களை நடத்திவரும் நிலையில், சமச்சீர் கல்வியைக்  கொண்டு வந்த தி.மு.க. இப்போது போராட்டக்களத்திற்கு வந்துள்ளது.

     ஜூலை 29-ந் நேதியன்று தமிழக மாணவர்கள் தங்கள் பள்ளி-கல்லூரிகளை புறக்கணிக்க வேண்டுமென்றும் பெற்றோரும் அலுவலகங்களைப் புறக்கணிக்க வேண்டுமென்றும் தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்ததுடன், தி.மு.க. இளைஞரணி-மாணவரணி சார்பில் அனைத்து பள்ளி கல்லூரிகள் முன்பாகப் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.  ரொம்பவும் தாமதமான போராட்ட அறிவிப்பு என்ற எண்ணம்  தி.மு.க.வினர் மத்தியிலேயே உள்ளபோதும், 27-ந் தேதி இரவு வரை போராட்டத்திற்கான ஏற்பாடுகளை பல மாவட்டங்களிலும் மேற்கொண்டனர்.

     சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரி மாணவர்களுடன் பல கட்டங்களாக ஆலோசனைகள் நடத்தப்பட்டன.  மீடியாக்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் என்னென்ன போராட்ட யுக்திகளை கையாளலாம் என்று விவாதிக்கப்பட்டது என்கிறார்கள் தி.மு.க. இளைஞரணி-மாணவரணி நிர்வாகிகள்.

     அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு அப்பாற்பட்டு, தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறை சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், சமச்சீர் கல்வி விஷயத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பே பெற்றோர்-மாணவர் மனதில் எதிர்பார்ப்பையும் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

--நமது நிருபர், நக்கீரன் 2011 ஜூலை 30-ஆக.02

************************


பொது ஜனம்; ஜெ. சர்வதேச அளவில் தமிழகக் கல்வியைக் எவ்வளவு அக்கறையா உச்சநீதிமன்றத்தை ஏமாத்தியாவது கொண்டுவரணும்னு! நினைக்குது! இதை இந்த ஜனங்க புறிஞ்சிக்க மாட்டேங்கதுங்களே!

பொது ஜனம்; இந்த பொம்பளையை நல்லா புறிஞ்சிகிட்டுத்தான் 29 ந் தேதி போராட்டம் பண்ணாங்களோ! 
பொது ஜனம்; போலீசை விட்டு மாணவர்களின் போராட்டத்தை தடுக்குதேப்பா!

பொது ஜனம்; தடுத்தா மட்டும் சும்மா விட்டுருவாங்களா? போலீஸ்காரன் புள்ளைங்களும் படிக்குது இல்லே! அவங்களுக்கும் சேர்த்து தானே இந்த போராட்டம்! அ.தி.மு.க அள்ளக்கைங்களோட புள்ளைங்களுக்கும் சேர்த்துதான்.


No comments: