Pages

Friday, 27 November 2009

இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழக மக்களை அவ்வளவாக பாதிப்பதில்லை? இதை அரசியலாக்குவதும் தேவையற்றது.

இலங்கைத்தமிழர் பிரச்சினைகள் தமிழக மக்களை அவ்வளவாக பாதிப்பதில்லை. ஆனால் இங்குள்ள ஏன் அங்குள்ள சில இலங்கைத் தமிழர்கள் மற்றும் அயல்நாட்டு  இலங்கை வாழ் தமிழர்கள் இதை பூதகாரமான பிரச்சினையாக ஆக்கிப் பார்க்கின்றனர். சமீபகாலமாக இது பல அரசியல் களங்களில் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ள இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர். இதில் அதிக ஆர்வம் காட்டாத அதிமுக வும் இதை கையில் எடுத்திருப்பது மக்களிடையே மிக ஆச்சரியத்தை தான் ஏற்படுத்துகின்றது.

பெரும்பாலும் இந்த பிரச்சினை தமிழகத்தையும், தமிழக அரசியல்வாதிகளையும் நோக்கியே தாக்குதல் அம்புகள் வீசப்படுகின்றது. இதில் அதிக அக்கரை காட்டி வந்த திமுக, தன்னுடைய அத்தனை முயற்சிகளை பயன்படுத்தியும் முழுப்பயனையும் எட்டியுள்ளதா? என்பது சந்தேகமே. ஆனால் இதற்கு மேல் ஒன்றுமே செய்யமுடியாத நிலைக்கு அது தள்ளப்பட்டுவிட்டது என்பது உண்மை.  அதற்கு காரணம் அதன் கூட்டணியான காங்கிரஸ் கட்சியே என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்.  தமிழக மக்கள் இதற்கு ஆதரவான மனநிலையில் உள்ளனரா ? என்றால் அவர்களை இந்த பிரச்சினை பாதித்ததாக தெரியவில்லை.



அரசியலைமைப்பு

இதுவரை இந்தியாவின் அரசியலமைப்பை பற்றி இந்திய மக்களுக்கு தெரியும் இலங்கை வாழ் மக்களுக்கும் தெரியும் ஆனால் தமிழக மக்களுக்கு இலங்கை அரசியல் பற்றித் தெரிவதில்லை. அதை தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை. அப்படியிருக்க  தமிழக அரசியலை இலங்கையின் குறிப்பிட்ட மக்கள் கண்டன குரல் எழுப்புவதின் நோக்கமென்ன?

இலங்கை அரசியல் தலைவர்கள் யார? யார்? என்று தமிழக மக்களுக்கோ இந்தியாவின் எந்தவொரு மக்களுக்கும் தெரியாத பொழுது இலங்கைவாழ் தமிழ் மக்களில் சிலர் மட்டும் இங்குள்ள தலைவர்களை குறிபார்த்து தாக்குவதால் என்ன விளைவை எதிர்பார்க்கின்றனர்? இலங்கை வாழ் 18 இலட்சம் தமிழ் மக்களில் அனைவரும் ஒரு போராளிக்குழுவையா ஆதரித்து வந்தார்களா? என்றால் அதுவும் இல்லை. அதிலும் பல பிரிவினைகள்.

வறுமைக்கோட்டில்

இந்தியாவின் அரசியல் வாதிகள் இந்திய மக்களின் அல்லது தமிழக மக்களின் வாழ்வதாரங்களை உற்று நோக்கியே அரசியல் நடத்துகின்றனர். அது யாராக இருந்தாலும். மக்களும் தங்கள் வாழ்வதாரத்தை யார் மேம்படுத்த முன்வருகின்றார்களோ அவர்களுக்கே தங்களது ஆதரவையும் வாக்குகள் மூலம் வழங்குகின்றனர் .  இதில் இலங்கைத் தமிழர்களின் பங்கு இங்கு எந்த இடத்திலும் வரவில்லை.

தமிழகத்தின் 6 கோடி மக்கள் தொகையில் (இது 2001 நிலவரப்படிஇப்பொழுது கூடுதலாயிருக்கும்.) சுமார் 2 1/2 கோடி பேர் (இரண்டரை) வறுமைக்கோட்டில் உள்ளனர். இவர்களின் தேவைகளை சுற்றியே அரசியலும் இருக்கின்றது. (தேசிய அளவிலும் இப்படியே). அரசியல் வாதிகளும் இந்த மக்களின் தேவைகளையறிந்து அதன்படி வாக்குறுதிகளை அளித்து அதன்படி மக்களால் வாக்களிக்கப்பட்டு ஆட்சியிலும் பங்கு பெறுகின்றனர். இதிலும் இலங்கை மக்களின் வாக்குகள் எந்த இடத்திலும் இடம்பெற்வில்லை. இதில் யாதொருவரும் நான் இலங்கையில் ஈழம் பெற்றுத்தருவது தான் என் முதல் வேலை அதற்காக ஒட்டு போட்டு என்னை வெற்றிபெற செய்ய வேண்டும் என்று வாக்கு கேட்பதில்லை. கேட்டால் அந்த வேட்பாளரால் டெபாசிட் கூட பெற முடியாது.

பிபிசி செய்தி ஆதாரம்

இலங்கை மக்கள் இன்னல்களுக்கு தமிழக மக்கள் உணர்வுபூர்வமாக ஆதரவை நல்கினாலும் அவர்களின் வாழ்வதாரத்தின் பாதிப்பை விட பேரிடர் பாதிப்பாக எடுத்து கொள்ள தமிழக மக்கள் தயாராய் இல்லை. அதன் விளைவாக தேர்தலிலும் இது எடுபடுவதில்லை. (இதை பிபிசி செய்தி தமிழக மக்களின் செவ்வியை வெளியிட்டுள்ளது‍ ஆக இது செய்தி).

தமிழகமே இந்தியா இல்லை

தமிழகம் இந்தியாவின் மாநிலம் தமிழகமே இந்தியா இல்லை. இதில் தமிழக அரசியல்வாதிகளே நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளனர். அதில் மாறுபட்ட கருத்துடையவர் ஒரு சிலர் இருக்கலாம். வேறு மாநிலத்தவர் இதை அவர்கள் உணர்வுபூர்வமாக கூட எடுத்து கொள்ள தயராய் இல்லை. பிற மாநில அரசியல் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் இது பற்றி குரல் கொடுத்ததில்லை.

தமிழக அரசியல் இந்திய மைய அரசியலை சார்ந்தே உள்ளது. யார் வந்தாலும் கூட்டணி அரசியல் தான் மத்தியிலும் கூட்டணி அரசியல் தான். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அவரவர்களுக்கு கட்சி ரீதியாக பல்வேறு நிலைப்பாடுகள் உள்ளன.

தற்பொழுதும் அதே நிலைதான் இலங்கைத் தமிழருக்காக ஆதரவு நிலை கொண்டுள்ள திமுக, பாமக, கம்யூனிஸ்டு,, எதிர் கருத்துடைய காங்கிரஸ் என்ற தேசியக் கட்சி கூட்டணியுடன் ஆட்சி புரிகின்றது. இதில் தேசிய கட்சிக்கு இலங்கை போராளிகளின் ஒரு குழுவுடன் இணக்கமான போக்கே இல்லை. அதற்கு இதற்கு முன் தமிழகத்தில் நிகழ்ந்த ஒரு துயரமான சம்பவத்தை சுட்டிக்காட்டுகின்றனர்.  அது முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை அவருடன் சேர்ந்த 7 காவலர்கள் மற்றும் கட்சினர் படுகொலை.

இந்த சம்பவத்துக்கு என்னதான் ஆயிரம் காரணங்கள ஒரு போராளிகள்  குழுவின் தரப்பில் கூறினாலும் இதை தமிழக மக்கள் ஏற்றுகொள்ளத் தயாராயில்லை. இது திமுக ஆட்சி கலைப்பிற்கு பின் நடந்தது.

ஆட்சியின் பொழுதே மக்கள் நெருக்கடி மிகுந்த சூளைமேட்டில் ஏ கே 47 ரக துப்பாக்கி கொண்டு பத்மாநாபாவை சுட்டு கொன்றது போன்றவை இந்த தமிழ் மக்கள் மறக்கவில்லை. அதற்காக திமுக ஆட்சி கவர்னர் எதிரிப்பையும் மீறி அநியாமாக களைக்கப்பட்டது எதையும் மக்கள் மறந்துவிடவில்லை. 

ஆட்சி கலைக்கபட்டும் கருணாநிதி ஜெயித்துவிடுவார் என்ற நம்பிக்கையில், (கருத்து கணிப்பும் வெளியிடப்பட்டது) இருந்த திமுக வை ஒரே ஒரு உறுப்பினர் கூட இல்லாமல் ஆக்கியது இந்த நிகழ்வுதான். அதனால் அரசியலை விட்டே ஒதுங்க போகின்றேன் என்று கூறி வந்த அதிமுக வின் தலைவியும் 5 ஆண்டுகாலம் நடத்திய மிக மோசமான ஆட்சியை தமிழக மக்கள் சந்தித்ததற்கு இந்த நிகழ்வே காரணம்.  1991 இல் நடைபெற்ற தேர்தலில் மக்கள் அதிமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு பெருவாரியான வாக்குகளை அள்ளி கொடுத்தது ஒன்றே இதற்கான சாட்சி.

இலங்கை அரசியலை பாதித்த்தில்லை

அதேபோன்று இங்கு விவசாயிகள் கஞ்சித் தொட்டி திறக்கின்ற நிலை, எலிக்கறித் தின்று பஞ்சத்தில் ஜிவனம் நடத்தும் நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், இன்னும் பல தற்கொலை நிகழ்வுகளாகட்டும் அல்லது எந்த வாழ்வாதார போராட்டமாகட்டும் இது எதுமே இலங்கை அரசியலை பாதிப்பதில்லை. அப்பொழுது இலங்கையில் உள்ள தமிழர்கள் யாருக்கும் தமிழகத் தமிழர்கள் தொப்புள் கொடி உறவுகளாகத் தெரிவதில்லை. அப்பொழுது மட்டும் இது இங்குள்ள அரசியல் நிலை, அண்டை நாடு என்று அழகாக நழுவிடுவர்.  இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் வாதிகளையும் பாதித்ததில்லை. அதற்காக குரல் கொடுத்ததுமில்லை. தமிழக மக்கள் எதிர்பார்ப்பதுமில்லை.

ஆட்சியை காப்பாற்றத் தெரியாதவர்
ஆனால் அங்குள்ளவர்கள் நினைப்பது தமிழகத்தில் உள்ளவர்கள் ஆட்சியைத் துறந்தாவது இலங்கை மக்களுக்காக தங்களுடைய தியாகத்தை நிலைநிறுத்திக்காட்டவேண்டும் என்று நினைக்கின்றனர். இதற்கு இங்கு மக்கள் செல்வாக்கு இல்லாத ஒரு சில அரசியல் வாதிகளே காரணம் கடைசியில் ஒன்றாக சேர்ந்து புகழ் பாடி மறப்போம் மன்னிப்போம் என்று கையைத் தூக்கி  கூட்டணி வைத்து மக்களை சந்திப்பார்கள்.   இதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளத்தயாராயில்லை. தமிழக மக்கள் கேட்பது இதற்காகவா ஒட்டு போட்டோம். 


ஏற்கனவே இப்பொழுதுள்ள கட்சி இருமுறை ஆட்சியை இழந்துள்ளது அதற்கு மக்களிடையே எழுந்த விமர்சனம் ஆட்சியை காப்பாற்றி கொள்ளத் தெரியாதவர் கருணாநிதி என்றே விமர்சிக்கப்பட்டது. இது கடந்த முறை ஆட்சி புரிந்தவர்களிடமும் (அதிமுக) மக்கள் இதே நிலைப்பாட்டைதான் கொண்டிருந்தனர்.

ஒற்றுமையின்மை
இலங்கையில் உள்ள அனைத்து போராளிக் குழுக்களும் ஒருவருக்கொருவர்  இணக்கமான போக்கை கடைப்பிடிக்கவில்லை. அவர்களுக்குள்ளேயே ஒற்றுமையின்மை நிலவும் பொழுது இங்கிருந்து அனைவரும் என்ன விலைகொடுத்தேனும் ஆதரவு அளிக்கவேண்டும் என்பதை தமிழக மக்கள் விரும்பவில்லை.

அனைத்து மாநில மக்களின் வரிப்பணம்
இந்தியாவின் ராணுவத்தை அனுப்பித் தடுத்திருக்க வேண்டும் என்று குரல் எழுகின்றது. இதில் இந்திய அரசியல்வாதிகளின் அனைவரது ஆதரவு இருந்தால் தான் முடியும். ராணுவம் பல மாநில மக்களின் வரிப்பணத்தில் இயங்குவது. போரை இந்திய மக்கள் எந்த காலத்திலும் விரும்புவதில்லை. அதற்கு மும்பை சம்பவங்களே சாட்சி. இங்கே நக்சலைட், பாகிஸ்தான், காஷ்மீர், மாவோயிஸ்டு, உல்பா...என அதிக அளவில் பிரச்சினைகள் இருக்கும் பொழுது. அண்டை நாட்டில் இலங்கையின் அதிகாரப்பூர்வ அரசின் ஆதரவை எப்படி ஒரு நாடு  ஒரு மாநில மக்களின் வற்புறுத்தலுக்காக எதிர்த்து கொள்ளும். அதனால் ஏற்படும் வணிகத் தொடர்பு, அரசியல் தொடர்பு அனைத்துக்கும் எதிரியாகவும் இந்தியா ஆகத் தயாராயில்லை,  கேரள  மாநிலத்தின் பெரியார் அணை விவகார அநியாயத்தையே  இங்குள்ள தேசிய கட்சிகள் தட்டிக் கேட்கவில்லை. மொத்தத்தில் இந்திய அரசியல் வாதிகளின் ஆதரவு இல்லை. இருந்தால் இது சாத்தியம். இங்கு அதை விட மிகப் பெரிய பிரச்சினைகள் உள்ளன.

எங்கள் ஒட்டு
இங்குள்ள சில அரசியல் வாதிகளும் இலங்கைத் தமிழர்களுக்காக மிக மூர்க்கமாக குரல் கொடுக்கின்றனர். அவர்களுக்கென்று மக்கள் செல்வாக்கு இல்லை. அம்மாதிரி அரசியல் வாதிகளே அல்லது தேர்தலை சந்திக்காத அரசியல் வாதிகளே இம்மாதிரி குரல் கொடுக்கின்றனர். அதனால் ஒரு பயனும் விளையப்போவதில்லை. இங்கு மக்களதான் ஆட்சியை தீர்மானிக்கவேண்டும். அந்த நேரத்தில் மக்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என நம்புகின்றார்களோ? அவர்களுக்கே, அவர்கள் ஒட்டு. இலங்கைத் தமிழரின் பிரச்சினை அவர்களை எந்த வகையிலும் பாதிப்பதில்லை.

110 கோடி பேர் வாழும் இந்திய நாட்டில் வறுமைகள் அதிகம், மக்களின் தேவைகளும் அதிகம். அதே போன்றுதான் தமிழகமும், இங்கே தன் எதிரில் தடுக்கி விழுகின்றவர்களை காப்பாற்றாதவர்கள் என்ன கழட்டிவிடப்போகின்றனர் என்ற மனநிலையிலேயே மக்கள் இருப்பார்கள் என்பதை அங்கு வாழ்பவர்கள் உணர வேண்டும். இங்கு தமிழகம் ஒன்று இருப்பதினால் தான் அகதிகளாகவது வரமுடிகின்றது. எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர் சிறுபான்மையினர் தான். இங்கும் அப்படித்தான். இதை இனியாவது உணர்வார்களா? தமிழினத் துரோகிகள் என்று அவ்வப்பொழுது மாற்றி மாற்றித் தூற்றுவதினால் மேலும் மேலும் மக்களை இந்த பற்றிலிருந்து விலகச் செய்யுமே தவிர வேறெந்த பலனையும்  விளைவிக்காது.. இந்த மோதல் தேவையற்றது. 

ரொம்ப காலத்திற்கு பிறகு தமிழன் தமிழ் நாட்டை ஆள்வது இப்பொழுது தான் அதுவும் பிடிக்கவில்லையா?  தமிழன் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலாவது போய் ஆட்சி நடத்திவிட முடியுமா?  ஆனால் வேறொரு மாநிலத்தவர்  இங்கு ஆட்சி நடத்திட முடியும்.அந்தளவுக்கு தமிழக மக்கள் தன்னை யார் ஆண்டால் என்ன? தனக்கு ஒரு விடிவு காலம் வராதா? என்ற மனநிலையில் இருக்கின்றனர். இதைப் புரியாமல் தமிழினத் துரோகம், துரோகம் என்று கூறி இவர்களுக்கு துரோகம் பண்ணுவது மகா மகா துரோகம்.  இது தமிழினத் துரோகம் என்றால் இங்கு பெரிய எழுச்சி நடைபெற்றிருக்கும் அப்படி எதுவும்  இங்கு நடைபெறவில்லையே. இதை அரசியலாக்குவது தேவையற்றது.

(பதிவுக்கான ஆதாரங்கள் பிபிசி செய்தி செவ்வி‍; இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழகத் தேர்தலை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை.)
http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/04/090423_eelamintnelection.shtml 
நன்றி
நம்பி.

No comments: