பேசும் கலை வளர்ப்போம்- 12
மக்களுக்குத் தெரியவேண்டியதைப் பேசுதல்.
மக்களுக்குத் தெரிந்ததைப் பேசுதல்.
தனக்குத் தெரிந்ததைப் பேசுதல்.
தனக்குத் தெரியாததைப் பேசுதல்.
இப்படிச் சிலவகைகாளாகப் பேச்சுக்களைப் பிரித்துக் கொள்ளலாம். வரலாற்றுச் சொற்பொழிவு, விஞ்ஞானச் சொற்பொழிவு, இலக்கிய சொற்பொழிவு, பொருளாதாரச் சொற்பொழிவு, இவ்வாறு தனித் தனியான சிறப்புச் சொற்பொழிவுகள் பெரும்பாலும் கருத்தரங்குகளிலேயே எடுபடும். அதற்கு ஒவ்வொரு பொருள் குறித்தும் ஆழமான நூலறிவும், அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் அரங்கின்றி வட்டாடுவதுபோல ஆகிவிடுமென வள்ளுவர் கூறியது பொருத்தமாகிவிடும். நிரம்பிய நூலின்றி அவைக்களம் புகுதல் கூடாது என்று திருக்குறள் திட்டவட்டமாகக் கூறுகிறது.
கருத்தரங்குகளில் மட்டுமே கூறவேண்டிய கருத்துக்களை, அந்த அரங்குகளை விட்டுப் பாமர மக்களிடமும் மெல்ல மெல்லக் கொண்டு செல்லவேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு பொதுக்கூட்டத்தில் ஒரு வரலாற்றுக் குறிப்பை நினைவுபடுத்திவிட்டு, அதனைத்தான் பேச எடுத்துக் கொண்ட பொருளுக்குத் துணையாக இணைப்பது, பாலில் தேன் கலப்பதுபோல இருக்கவேண்டும்.
''ஏழை எளியோர், தொழிலாளர் ஆகிய இயலாதோர் வர்க்கத்தைக் கசக்கிப் பிழிந்த ஜார் மன்னனின் கதி என்னவாயிற்று? சோவியத் மண்ணில் பாட்டாளிக் கொடியைப் பறக்கவிட்ட லெனின், அதற்கென எவ்வளவு போராடினான்? உலகப் பெரும் போரில் இட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளின் தாக்குதலில் இருந்து இங்கிலாந்தைக் காத்திட்ட சர்ச்சில், அடுத்து வந்த தேர்தலில் பிரதமராக முடியாமல் அவரது கட்சி தோற்கடிக்கப்பட்டது.-''
இப்படி சொற்பொழிவுக்குத் தக்கவாறு பொருத்தமான இடங்களில் தயிர்சோற்றுக்கு ஊறுகாய்போல வரலாற்றுக் குறிப்புக்களைப் பயன்படுத்தலாம். பொதுக் கூட்டப்பேச்சு முழுதும் வரலாற்றுக் குறிப்புக்களாகவே இருந்தால் மக்களைக் கவர்ந்து பாராட்டுப் பெறமுடியாது.
அதியமான், நூறாண்டு வாழ்வளிக்கக் கூடிய நெல்லிக்கனியை ஒளவைக்குக் கொடுத்தான் என்ற இலக்கியச் செய்தியைக்கூறுவதின் மூலம், அந்த மன்னன் தமிழின்பால் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்தி அந்த தாய்த் தமிழைக் காப்பாற்றுவதும் வளர்ப்பதும் நமது கடமையன்றோ என்பதை நெஞ்சில் பதிய வைக்கலாம்.
சந்திரமண்டலத்தில் மனிதன் காலடிவைத்துத் திரும்பி வருகிற விஞ்ஞான உலகில் வாழுகிற நாம்; இன்னமும் குழந்தை வரம் வேண்டி அரச மரத்தைச்சுற்றுகிறோம். இது அறியாமையல்லவோ? எனக் கேட்பதற்கு விஞ்ஞானப் புதுமைகளைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
பொருளாதாரம் பேசுகிறேன் என்று காரல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் (கேபிடல்) என்ற நூலைப் பக்கம் பக்கமாகப் பொதுமக்கள் முன்னால் விவரித்துக் கொண்டிருந்தால்; இறுதியில் மேடையில் ஒலிபெருக்கியாளர்கள் மட்டுமே மிஞ்சியிருப்பார்கள். மார்க்ஸ் பிரித்துக் காட்டியுள்ள வர்க்க பேதங்களை உணர்த்தி, தொழிலாளர் வர்க்கம் உலகாளவேண்டுமென்ற உணர்ச்சியை உருவாக்க மட்டுமே பொதுக்கூட்டங்களில் பொருளாதாரப் பிரச்சினையை விளக்க வேண்டும்.
'காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான். அவன் காணத்தகுந்தது வறுமையா? பூணத்தகுந்தது பொறுமையா'?-புரட்சிக் கவிஞரின் இந்தப் பாடலில் எவ்வளவு பெரிய கேள்வி எழுகிறது'! 'காலுக்குச் செருப்புமில்லை-கால் வயிற்றுக் கூழுமில்லை; வீணுக்குழைத்தோமடா என் தோழா!' என்ற ஜீவாவின் பாட்டில் எத்துணை உருக்கமும் உணர்ச்சியும் பீறிட்டெழுகிறது!
தொடர்புடைய ஒரு பேச்சில் இடையிடையே இது போன்றவைகளைக் கையாள்வதின் வாயிலாக மக்களைப் பேச்சாளர், தமது பக்கம் இழுத்துத் தனது கொள்கைகளை அவர்கள் இதயத்தில் ஏற்றிட முடியும். மக்களுக்குத் தெரிய வேண்டியவைகளை இந்த முறையில் அளவோடு பேசவேண்டும்.
அடுத்தது, மக்களுக்குத் தெரிந்ததைப் பேசுதல்!
நீண்டகாலமாக ஒரு ஊரில் பள்ளிக் கூடமே இல்லை என்று வைத்துக் கொள்வோம். ஆற்றைக் கடக்க மக்கள் ஒரு பால வசதியின்றிக் கஷ்டப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.,உணவு தானிய உற்பத்தியாளர்களான உழவர் பெருங்குடியினர் உற்பத்திப் பொருளுக்குக் கட்டுபடியான விலையின்றித் துயருறுவதாக வைத்துக் கொள்வோம்.
இவை போன்ற, மக்களுக்குத் தெரிந்திருக்கிற-மக்களைப் பாதித்துக் கொண்டிருக்கிற பிரச்சனைகள் எவையென்பதை அந்த ஊர்க கூட்டத்திற்குச் சென்றவுடன் கூட்ட அமைப்பாளர்களிடம் கேட்டுத் தெரித்து கொண்டு பேச்சினிடையே அவைகளையும் குறிப்பிட்டு விளக்கமாகப் பேசினால் பேச்சாளருடன் கூட்டத்தில் குழுமியுள்ள அந்தப் பகுதி மக்களும் ஒன்றிவிடுவார்கள்.
அதைப் போலவே அந்தப்பகுதியில் நீண்ட காலமாக இருந்த தேவைகள் நிறைவு செய்யப்பட்டிருக்குமானால் அவற்றையும் குறிப்பிடும்போது, பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை நினைவுபடுத்திக் கொண்டு பேச்சாளரின் கருத்துக்களோடு தங்களையும் இணைத்துக் கொண்டு ரசிப்பார்கள்.
சில பேச்சாளர்கள், தமக்குத் தெரிந்ததையெல்லாம் கூட்டத்தில் பேச விரும்புவார்கள். மக்களுக்குத் தெரியாததாக இருந்தால் அப்படித் தமக்குத் தெரிந்ததைப் பேசுவதில் தவறில்லை! தெரியாததற்கும் , என்னதான் பேசினாலும் புரியாததற்கும் மிகப் பெரும் வேறுபாடு உண்டு!
ஒரு குக்கிராமத்துக்குப் பொதுக்கூட்டம், மேடையில் ஒரு பட்டதாரி பேசுகிறார். தலைமை ஏற்றிருப்பவர் ஒரு பட்டதாரி . அடுத்துப் பேச இருப்பவர் ஒரு பட்டதாரி. எதிரே குக்கிராமத்துக்கு மக்கள்.
'பெரியோர்களே! ஜூலியஸ் சீசரை புரூட்டஸ் குத்தியபோது; நீயுமா புரூட்டஸ் என்றான் சீசர்! கிரேக்கத்து நீதிமன்றம் சாக்ரடீசுக்கு விஷக் கோப்பையைப் பரிசாகக் கொடுத்தது! ஷேக்ஸ்பியர் நாடகங்கள் இங்கிலாந்தில் மாதக் கணக்கில்-ஆண்டுக் கணக்கில் நடைபெறுகின்றன. ஆபிரகாம் லிங்கன் ஒரு தியேட்டரில்தான் சுடப்பட்டார்.'
இப்படிப் பேசினால், அது மேடையில் உள்ள மற்ற பட்டதாரி பேச்சாளர்களுக்குத்தான் புரியும்! எதிரேயுள்ள மக்களுக்கு சீசர், புரூட்டஸ், ஷேக்ஸ்பியர் போன்ற பெயர்களே புரியாது.!
- கலைஞர் மு. கருணாநிதி
இன்னும் வரும் -13
No comments:
Post a Comment