Pages

Sunday 24 January, 2010

பேசும் கலை வளர்ப்போம்- 13









 பேசும் கலை வளர்ப்போம்- 13


    தனக்கு என்ன விஷயங்கள் எல்லாம் தெரியும் என்பதை மேடையில் வீற்றிருக்கும் மற்ற பேச்சாளர்களுக்கு அல்லது தலைவர்களுக்கு உணர்த்துகிற பேச்சாக மட்டும் அமையாமல், எதிரே வீற்றிருக்கிற நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான மக்களுக்குப் பயன்படுகிற பேச்சாக அமையவேண்டுமென்பதில் ஒருபேச்சாளருக்கு மிகுந்த கவனம் தேவை. தனக்கும் அல்லது தன்னைப்போல் நிறைய நூல்களைப் படித்தவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கக்கூடிய செய்திகளையோ, குறிப்புகளையோ-மக்களுக்கும் தெரியவைக்க வேண்டுமென்றால் அதற்கேற்றவாறு இடமும்-இடத்திற்கு ஏற்றவாறு எடுத்துக் கொண்ட பொருளும் இருந்திடவேண்டும்.

     மாநில சுயாட்சிக் கோரிக்கையை வலியுறுத்திப் பேச வேண்டிய கூட்டம் என்று வைத்துக் கொள்வோம். அரசியல் சட்டப்படி எத்தனை அதிகாரங்கள் மத்திய அரசுப்பட்டியலில், எத்தனை அதிகாரங்கள் மாநில அரசுப் பட்டியலில், எத்தனை அதிகாரங்கள் பொதுப் பட்டியலில்-என்ற விவரங்களையும்; அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவின்படி மத்திய அரசு, ஒரு மாநில ஆட்சியைக் கலைக்க முடியும் என்பதையும்-அரசியல் சட்டம் தொகுத்த அறிஞர்களில் ஒருவரான அம்பேத்கார் அவர்களே வேண்டுமெனக் கருத்தறிவித்ததையும்-மாநில சுயாட்சி பற்றி இராசமன்னர் குழுவினர் ஆராய்ந்து அளித்த அறிக்கையினையும்-அதைத் தி.மு.க. ஆட்சிக்க காலத்தில் பரிசீலித்து சட்டமன்றத்திலேயே மாநில சுயாட்சித் தீர்மானம் நிறைவேற்றியதையும்-மாநிலங்கள் சுயாட்சித் தனமையுடன் திகழவேண்டுமென்று பண்டித நேரு அவர்கள் வலியுறுத்திக் குறிப்பிட்டதையும்-ஆதாரங்களுடன்-தேதிகளுடன் எடுத்துச் சொல்ல விரும்புகிற ஒரு பேச்சாளர்; அவர் சென்னையில் ஒரு மேடையில் நின்று பேசுகிறார் என்றாலும் கூட-சென்னையில் எந்தப் பகுதி என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பேச வேண்டும்.

     மாநில சுயாட்சி பற்றி மைலாப்பூர் மாங்கொல்லையிலோ-அண்ணாநகர் சாந்தி காலனியிலோ-அடுக்கிக் காட்டுகிற ஆதாரங்களை புரசை வெள்ளாளர் தெருவிலே வாரி வழங்குகிற புள்ளி விவரங்களை-சென்னையில் எல்லாப் பகுதிகளிலும் பயன்படுத்துவது என்பது இயலாது.

     மாநிலங்கள் அதிக அதிகாரங்களைப் பெறவேண்டுமென்பதற்கு அந்தப் பகுதி மக்களுக்கு எதைச் சொன்னால் மனதில் பதியுமோ; 'ஆமாம்-நியாயந்தானே!' என்று சொல்லத் தோன்றுமோ அதைச் சொல்லவேண்டும்.

     தனக்குத் தெரிந்ததைப் பேசவேண்டும்; தனக்குத் தெரிந்ததையெல்லாம் பேசிவிடக் கூடாது.

     சில பேச்சாளர்கள் தங்களுக்குத் தெரியாததைப் பேசத்தொடங்கி இடறி விழுவார்கள். அதாவது பணத்தாலோ-அல்லது பதவியாலோ செருக்குற்றிருப்பவர்கள், தப்பித் தவறிப் பேச்சாளராகவும் இருந்தால் அதனால் விளையக் கூடிய வேதனை இது! 

     ஒருவர், ஒரு முக்கியமான பொறுப்பில் அமர்ந்திருப்பவர், முக்கியமானவர்கள் நிரம்பிய ஒரு அவையில் பேசினார். தமிழகத்தில் வெள்ளம், புயல் ஏற்பட்டு பல பகுதிகள் சேதமுற்றது பற்றி விவாதம் நடந்தது. அந்த முக்கியாமானவர் பேசும்போது சொன்னார், 'என்னுடைய சிறு வயதில் சென்னையில் பெரு வெள்ளத்தை நேரில் பார்த்தேன்' என்று அத்துடன் நிறுத்தவில்லை. 'எனக்கு ஏழெட்டு வயதிருக்கும்.அப்போதுதான் சென்னயில் எம்டன் குண்டு விழுந்த நேரம். பெரிய மழை பெய்து ஏரிகள் எல்லாம் உடைத்துக் கொண்டு சென்னை நகரமே மூழ்கிவிடும் போலிருந்தது' என்று விவரித்தார். ஒரு பெரியவர் குறுக்கிட்டு, 'எம்டன் குண்டு விழுந்தது 1914-ஆம் ஆண்டில் அல்லவா?' என்றார்!'உங்களுக்குத் தெரியாது. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. நான் ஏழு வயதுச் சிறுவன்' என்றார் திட்டவட்டமாக அந்த முக்கியமானவர்!

     பெரும் பதவியில் இருப்பவராயிற்றே; அதனால் குறுக்கிட்ட பெரியவர் அடங்கிவிட்டார்.

    உண்மை என்ன தெரியுமோ? எம்டன் என்பது ஒரு கப்பலின் பெயர்! ஜெர்மானியக் கப்பல்! முதல் உலக யுத்தத்தின்போது 1914-ல் சென்னையில் அந்தக் கப்பலில் இருந்து குண்டு வீசப்பட்டது. அந்த நிகழ்ச்சியைக் கல்வெட்டில் குறித்து இன்னமும் சென்னை உயர்நீதிமன்றச் சுற்றடைப்புக்குள் வைத்திருக்கிறார்கள். அந்தக் கூண்டு விழுந்தபோது தனக்கு ஏழு வயது என்று கூறியவர்; பிறந்த ஆண்டு 1917 ஆகும்.

    பதவியிலிருப்பவர் உளறியதாயிற்றே! என்ன செய்யமுடியும்-எப்படியோ தந்திரமாக அந்தப் பேச்சை சபைக்குறிப்பிலிருந்து நீக்குமாறு செய்துவிட்டார்கள்.

     என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு மருத்துவக் கல்லூரி 'மாணவர் பேரவை'க்கு அழைப்பதாக வைத்துக்கொள்வோம். அங்கு சென்று இலக்கியமோ-நாட்டு நிலையோ-இப்படி ஏதாவது பொதுவான பொருள்கள் பற்றிப் பேசினால்தான் வரவேற்பு இருக்க முடியும். எல்லாம் தெரிந்தவன் என்று என்னைக் காட்டிக் கொள்ள முனைந்து; இருதய நோய்க்கு அறுவை சிகிச்சை எப்படிச் செய்ய வேண்டும்-விபத்தில் தலையில் காயமுற்று மயங்கிய நிலையில் இருப்பவருக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும்- என்றெல்லாம் என்க்குத் தெரியாத விஷயங்களில் அதிமேதாவி போலத் தலையிட்டு உரையாற்றினால்; விளைவு எப்படியிருக்கும்?

     இந்தக் கட்டுரையை நான் எழுதும்போது தமிழ் நாட்டில் அரைகுறையாக மதுவிலக்குக் கொள்கை அமுலாகிக் கொண்டிருக்கிறது. இருபத்தைந்து ரூபாய்க்கு எல்லோருக்கும் 'மது பர்மிட்'தரப்படுகிறது. இச்சமயத்தில்தான், காஞ்சிபுரம் அரசினர் விழா ஒன்றில் ந்மது முதலமைச்சர் எம.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் ஒரு செய்தியை வெளியிடுகிறார்.

     'இரண்டு நாளைக்கு முன்பு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து ஒரு தொலைபேசிச்செய்தி வந்தது. ஒருவன் குடித்துவிட்ட காரணத்தால் கைதாகியிருக்கிறான்.அவனை ஜாமீனில் எடுக்க ஒருவர் வந்திருப்பதாகச்சொன்னார்கள். குடித்தவனை ஜாமீனில் எடுக்க வந்தால் அவனையும் கைது செய்யுமாறு உத்தரவிட்டேன். அதுதான் இந்த ராமச்சந்திரன்.'

     செய்தியே பொய்யாக இருக்கவேண்டும். ஏனெனில், ஒரு முதலமைச்சருக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன் வரமுடியாது. அப்படியே ;போன்' வந்தாலும் ஜாமீன் எடுக்க வந்த காரணத்திற்காக கைது செய்யமுடியாது! சட்டமும் தெரியாமல் மக்களைக் கவர்ந்திட பேசப்பட்ட தவறான பேச்சாகும் அது!

     தெளிவாகத் தனக்குத் தெரியாத எதையும் பேசுவதால் இத்தகைய சங்கடங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.


- கலைஞர் மு. கருணாநிதி


-....இன்னும் வரும்....14

No comments: