Pages

Monday 18 January, 2010

தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -5







(இ) பிற்பகுதி முறை
1. உறுதிமொழி ஏற்றல்;
மூன்றுமூறை திருமணப்பந்தலை வலம் வந்து அமர்ந்ததும் மணமக்கள் மண வாழ்க்கையை வெற்றியுடன் நடத்துவதாக உறுதிமொழி ஏற்பர். இரண்டு தாள்களில் அவ்வுறுதி மொழியை வரைந்து படிக்கச் செய்து, மணமக்கள் கையொப்பமும் மண ஆசிரியர், சில பெரியவர்கள் கையொப்பமும் வாங்கி மணமகனுக்கு ஒன்றும் மணமக்களுக்கு ஒன்றும் வழங்குவர்.
2. அழல் ஓம்பல்-2
(கோள் பிறவற்றால் குறை நேராது, இருக்க) எரிந்து தணிந்துள்ள ஓமத் தீயில், குச்சிகளும், நெய்யும் சொரிந்து முன்போல் அழல் ஓம்பப்பெறும்.

3. காப்பவிழ்த்தல்;
அரசாணிக்கால் காப்பையும், மணமக்கள் காப்பையும் ஆசிரியர் அவிழ்ப்பர். பிறகு மணமகள் காப்பு மணமகனால் அவிழ்க்கப் பெறும் கெட்டி மேளம் கொட்டும்.

4. மாறியமர்தல்;
மணமகன் வலப்பக்கமாக அமர்ந்து தன் நெஞ்சமே பகுதியான இடப்பக்கத்தில், தன் அனபிற்கு உரியவளாகிவிட்ட மணமகளை அமரச் செய்வார்.
5. மணப் பரிசுகள்;
மணமக்களுக்குப் பரிசுப் பொருள்கள் வழங்க விரும்பியவர்கள் அவற்றை வழங்குவர்.
6. அரிசி வாழ்த்து;
மணமக்களின் எதிரே அரிசியைச் சொரிந்து, அவையில் உள்ள பெரியவர்களின் மணமக்களை வாழ்த்துவர். மணமக்களுக்குத் திருநீறு பூசியும் வாழ்த்துவர்.
7. ஆலம் சுற்றல்;
மணமக்களுக்குக் கண்ணேறு கழிக்க, மூத்தவாழ்வரசியரில் ஒருவர் அல்லது இருவர் சேர்ந்து ஆலஞ்சுற்றுவர்.
8. வலம் வரல்;
முன்போல் மூன்று மூறை மணமக்கள் வலம் வருவர். விளக்குத் தட்டில் முன்போலவே காசு இடுவதும் உண்டு. முதல் முறையில் பெண் வீட்டார் இட்டால் இந்த முறையில் மாப்பிள்ளை வீட்டார் இடுவர்.
9. பாலும் பழமும்;
வலம் வந்து வீட்டுக்குள் சென்று அமர்ந்ததும் அலுப்புத்தீர மணமக்களுக்குப் பாலும் பழமும் ஆளிப்பர். முதலில் மாப்பிள்ளைத் தோழர் பருகுவதற்கு முன் அவருக்கு மணப்பரிசு அளித்து மகிழ்விப்பர் மணவீட்டார்.
10. வாழ்த்துரைகள்;
மணமக்கள் அவையில் வந்து, நாற்காலியில் அமர்ந்ததும், பெரியோர்கள் அவர்களுக்கு நல்லுரைகள் கூறி வாழ்த்துவர்.


 திருமணம் எப்படித் தோன்றியது! பெரியார் கூறுபவை....

என்று தனக்கென்று பொருள் சேமித்து வைத்துக் கொள்ள உரிமை ஏற்பட்டதோ அதன் பிறகுதான் திருமண முறையும் ஏற்பட்டிருக்க வேண்டும். பொருள் தேடிச் சேமித்து வைக்கும் உரிமை ஏற்பட்ட பிறகுதான் வெளியே பொருள் தேடச் செல்லும் போது தான் சேமித்து வைத்துள்ள பொருளைப் பாதுகாக்கவிம், தான் வந்த போது தனக்குச் சிரம பரிகாரம் செய்யவும் ஒர் ஆள் தேவையாயிருந்தது. எந்த ஆணும் மற்றொரு ஆணுக்கு இவ்விதமான உதவி செய்ய முன்வந்திருக்க மாட்டான். எனவே, இவ்வேலைக்கு ஒரு பெண்ணைத்தான் நாட வேண்டியிருக்கிறது. முதலில் பெண் ஒருவனது சொத்துக்குப் பாதுகாப்பாக அமைந்து, பிறகு அவளே அவனுக்கு சொத்துமானாள். பிறகு அந்த சொத்துக்கு வாரிசு தேடவேண்டிய அவசியமேற்பட்டது. வாரிசு தேட அரம்பித்த காலத்தில் தான் தன் சொத்துக்கு வரும் வாரிசு தனக்கேப் பிறந்ததாக இருக்க வேண்டும் என்கிற காரணத்தால் அவளைத் தனக்கே உரிமையாக்கி கொள்ளவும், அவளைத் தன்னையன்றி வேறு புருடனை நாடாமல் இருக்கும்படி செய்யவுமான நிர்பந்தம் ஏற்பட்டது. மனித சுபாவம் இப்படித்தான் இருக்கும். அதாவது, தான் தேடியப் பொருளைத் தனது இறப்புக்குப் பிறகு அனுபவிக்கப் போகும் வாரிசு, தனக்கே பிறந்ததாக- தன் இரத்தத்திலிருந்து தோன்றியதாக- இருக்கவேண்டும் என்று நினைப்பது இயற்கையின்பாற் பட்டதேயாகும்.

என்று பெரியார் திருமணம் எப்படித் தோன்றியது என்பது பற்றி குறிப்பிடுகிறார்.


-.....தொடரும்....தமிழர் திருமணங்கள் தமிழர்களால் நடத்தப்படட்டும்! -6

No comments: